Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"ஆட்டக்கலை / பரத நாட்டியம்"


கி மு 200-100 ஆண்டளவில் பரத முனிவர் வட மொழியில் நாட்டிய சாஸ்திரத்தை தொகுத்தார். நாட்டியம் இவர் காலத்திற்கு முன்னரே இருந்தாலும்,முதலில் பரத முனிவர் தொகுத்ததால் பரத நாட்டியம் என்ற பெயர் இக்கலைக்கு வந்தது என்பர். அதேவேளை பரதம் என்ற சொல், ப - பாவம், ர - ராகம், த - தாளம் என்ற மூன்றையும் குறித்து நிற்பதாகவும் சொல்லப்படுகிறது. பண்டைய காலத்தில், தேவதாசி என அழைக்கப்படும் இளம் மகளிர், ஆலய நர்த்தகி, தமிழகமெங்கும் ஆங்காங்கிருந்த கோயில்களில் ஆடல் தொண்டு செய்தனர். பெரும் பாலும் இவர்களாலே தான் இந்த பரத நாட்டியம் அப்போது செழித்தோங்கியது. என்றாலும் இந்த தேவ தாசிகளின் நாட்டியத்தின் ஆரம்பத்தை அறிய நாம் ஆரியர்களுக்கு முற்பட்ட  கி மு 3000 ஆண்டை சேர்ந்த ஹரப்பான் பண்பாட்டிற்கு போகவேண்டி இருக்கிறது. அங்கு கண்டு எடுக்கப்பட்ட கலைத் தொழில் வேலைப் பாடமைந்த பொருள்கள் வெவ்வேறு நாட்டியத்தின் முத்திரைகளை காட்டுகின்றன. இவைகளில் மிகவும்  பிரபலமானது நிர்வாணமான ஒரு நடன மாது. அவளின் இடுப்பு கவர்ச்சியூட்டக் கூடியதாக முன்தள்ளி [முன் பிதுங்கி] இருப்பது குறிப்பிடத்தக்கது. இது இந்தியாவில் நடனம் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்பதற்கான ஒரு சான்றாகும். இந்த புகழ் பெற்ற சிந்து சம வெளி கைவினை பொருள், கிட்டத் தட்ட 4 அங்குல உயரத்தை கொண்ட செம்பு உருவம் ஆகும். இந்த ஒய்யார வார்ப்பு ஒரு கருத்த பழங்குடி பெண் ஒன்றை சித்தரிக்கிறது, அவள் உடையில்லாது தனது நீண்ட  தலை முடியை கொண்டை போட்டு உள்ளாள். இடது கையை வளையல்கள் முற்றாக அலங்கரிக்க, வலது கையின் மேற் பகுதியை ஒரு காப்பும் ஒரு தாயத்தும் அலங்கரிக்கிறது. அவளது கழுத்தை சுற்றி ஒரு வகை சிப்பி அட்டிகை இருக்கிறது. எம் நாட்டில் இன்று உள்ள பல நாட்டிய கலைகளில் இந்த சிலையின் கம்பீரமான நிலையை காணலாம். வலது கையை இடுப்பிலும் இடது கையை இறுக்கமாக பிடித்திருப்பதும் இந்தியாவின் சம்பிரதாயமான நாட்டிய அபிநயத்தில் ஒன்றாகும். இந்த பண்டைய உலோக சிற்பம் சிறிதாக இருந்தாலும் பல தகவல்களை எமக்கு தெரிவிக்கிறது. பல சிறந்த கற்றறி வாளர்கள் இந்த உலோக வார்ப்பு ஒரு தேவதாசியை அல்லது ஒரு புனித பரத்தையை பிரதிநிதி படுத்துவதாக கருதுகிறார்கள். அந்த பெண் சிலை அம்மணமாக இருப்பதாலும் மருட்டுகின்ற ஒரு நாட்டிய தோரணையில் இடுப்பில் கையையும் தளராத் தன்னம்பிக்கையை முகபாவத்தில் காட்டுவதாலும் ஒருவேளை அவர்கள் அப்படி கருதியிருக்கலாம் என கருதுகிறேன். பரத நாட்டியத்தில் கைமுத்திரைகள், முகபாவங்கள் முதன்மையாகக் கொள்ளப்படும். பரத நாட்டியத்தில் பாடலின் பொருளைக் கை முத்திரைகள் காட்டும், கை முத்திரைகள் வழி கண் செல்லும், கண்கள் செல்லும் வழி மனம் செல்லும், மனம் செல்லும் வழி உள்ளத்தின் உணர்வு செல்லும். இதனைக் கம்பர், மிக அழகாக, மிதிலைக் காட்சிப் படலம், எண்:572 இல், 


"கைவழி நயனஞ் செல்லக்,கண்வழி மனமும் செல்ல,மனம் வழி பாவமும்,பாவ வழி ரசமும் சேர".


எனக் குறிப்பிட்டுள்ளார். அதாவது, நாட்டியத்தில் கை, கால், உடலசைவுகளுக்கு மட்டுமின்றி மன உணர்ச்சிக்கும் வேலை கொடுக்க வேண்டியிருக்கிறது. ஆகவே ஒரு நர்த்தகிக்கு அசைவு உடலில் மட்டும் முக்கியமன்று மன உணர்ச்சியிலும்தான் என்பது தெரிகிறது. இது இந்த குறிப்பிட்ட சிந்து வெளி நடன மாதில் வெளிப்படுவதை நீங்கள் இலகுவாக காணலாம். 


மேலும் இளங்கோ அடிகள் சிலப்பதிகாரம், புகார்க் காண்டம் / அரங் கேற்று காதையில், சிலப்பதிகார வரிகள்:157-159 இல் 


 "பொன்னியல் பூங்கொடி புரிந்துடன் வகுத்தென,நாட்டிய நன்னூல் நன்கு கடைப்பிடித்துக் காட்டினள் "


என்கிறார். அதாவது, பொன்னால் செய்த பூங்கொடி ஒன்று வந்திருந்து நடனமாடியது போலவே அபிநய பாவங்கள் அழகுறக் கடைப்பிடித்து நாட்டிய நூல்கள் சொல்லி வைத்த முறையது தவறிடாது அனைவரும் கண்டு இன் புற்றிட நாட்டிய அரங்கினில் ஆடினள் மாதவி என்கிறார்.
பண்டைய இந்தியாவின் நாட்டியம் அந்த முன்னைய காலத்தில் பொதுவாக தேவதாசிகளால் வளர்க்கப் பட்டது. இந்த தேவதாசி அல்லது கோயில் நர்த்தகி, ஆலயத்தில் ஆண்டவனுக்கு நன்றியை செலுத்து முகமாக நாட்டியம் ஆடினார்கள். ஆலயத்தின் புனித இடத்தில் நடை பெற்ற, இந்த நன்றி தெரிவிக்கும் ஆடல், நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சி அடைந்தது. மேலும்,இந்த கோயில் நர்த்தகி, ஆண்டவனுக்கு முன்னால் ஆடும் புனித நாட்டியம் தொடர்ந்து எந்த வித இடைஞ்சலும் இல்லாமல் தொடரும் பொருட்டு அவர்கள் ஒரு வித துறவி வாழ்க்கையையும் கடைபிடித்தனர். மேலும் கோயில் நர்த்தகியுடன் மற்றும் பல நாட்டிய தாரகைகள் அரச சபையில் நாட்டியம் ஆடினார்கள். பொதுவாக நாட்டிய தாரகைகள் அரசனால் பல்வேறு மகிழ்ச்சிகரமான நிகழ்வுகளுக்கு அழைக்கப்பட்டு அவர்களின் நாட்டியம் அங்கு நடத்தப்பட்டது. இது நாட்டியம் ஒரு மக்களை மகிழ்விக்கும் பொழுது போக்காக அந்த காலத்திலேயே ஏற்றுக் கொள்ளப் பட்டத்தை காட்டுகிறது.


பண்டைய சங்கத் தமிழ்ச் சமூகத்தில் பண்ணிசையுடன் பாடுதல், நடனம் ஆகிய கலைகளை முறையே தொழிலாக கொண்ட பாணர். விறலியர். போன்றோர் நாடோடிகள் போன்று பல ஊர்களுக்கு சென்று தம் கலைகளால் மக்களை மகிழ்வித்ததுடன் முன்னைய காலத்தில் இந்த நாட்டுப்புற பாடல், ஆடல்களை பேணி வளர்த்தார்கள். அவர்களின் நடனத்தில் பொதுவாக சில கை சைகைகளும் இருந்தன. கி பி முதலாம் ஆண்டை சேர்ந்த சிலப்பதிகாரத்தில் ஆடல், பாடல், அழகு ஆகிய இம் மூன்றிலும் குறைவு படாத புகழ் பெற்ற மாதவி ஒரு முக்கிய கதைமாந்தர் ஆவார். மாதவியின் மகள், அள்ள அள்ளக் குறையாத அமுத சுரபி.என்ற மந்திர கிண்ணத்தை கொண்ட நாட்டிய தாரகை, மணிமேகலை ஆவார், அழகும்,இளமையும், அறிவும், பண்பும் நிரம்பிய மணிமேகலை பிறப்பால்,ஆடலும் பாடலும் கூடிய பரத்தமை வாழ்க்கையை கொண்டவள். இதை 


'நாடவர் காண நல்லரங்கேறி, ஆடலும் பாடலும் அழகுங் காட்டிச், சுருப்பு நாண் கருப்புவில் அருப்புக் கணைதூவச், செருக் கயல் நெடுங்கட் கருக்குவலைப் படுத்துக்,கண்டோர் நெஞ்சங் கொண்டகம் புக்குப், பண்டேர் மொழியிற் பயன்பல வாங்கி,வண்டிற்றுறக்கும் கொண்டி மகளிர்' 


என மணிமேகலை / 18:103–109, என்ற பகுதிகள் அந்த காலத்தில் இருந்த கணிகையர் (கூத்தியர்) குலப் பெண்களின் பொது இயல்பான அரங்குகளில் ஏறி ஆடலையும், பாடலையும் எழிலையும் புலப்படுத்தும் தன்மையையும் கண்களால் ஆடவரை அகப்படுத்தும் தன்மையையும் வெளிப்படுத்துகின்றது. என்றாலும் கணிகையர்கள் உடல் சார்ந்தவர்கள் என்பதைத் தாண்டி இக்குலத்திலும் உள்ளம் சார்ந்தவர்கள் கற்பு சார்ந்தவர்கள் இருந்தார்கள் என்பதன் அடையாளங்களே மாதவியும் மணிமேகலையும் ஆகும். தனது தாய் மாதவி போல இவள் குலமரபிற்கேற்ப அரச சபைக்கு ஏற்ற ஆடலையும் அதே நேரம் பொது மக்களுக்கு ஏற்ற ஆடலையும் நன்கு கற்று தேர்ச்சி அடைந்தவள். அவள் தன் ஆடலுக்கு பாடும் பாட்டை மனப்பாடம் செய்து வைத்திருந்ததுடன் சைகை முத்திரையிலும் நன்றாக தேர்ச்சி பெற்றவளாக தனது நாட்டியத்தின் போது, அகம், நல்லொழுக்கம், புறம் போன்ற உணர்வுகளை - செய்திகளை பார்வையாளர்களுக்கு அதன் மூலம் வெளிப்படுத்தினாள்.


கூத்த நூல் கூத்துக்கலை பற்றிய மிகப் பழைய தமிழ் இலக்கண நூல் ஆகும். இதை சாத்தனார் என்பவர் ஆக்கினார். இது தொல்காப்பியர் காலத்தில் எழுதியிருக்கலாம் என நம்பப்படுகிறது. சில அறிஞர்கள் இது பரத நாட்டிய சாஸ்திரத்திற்கான அடித்தளமாக இருந்து இருக்கலாம் என கருதுகிறார்கள். கூத்திற்கு தரும் விளக்கமாக, 


‘அகம் உயிர் ஆகச் சுவை உளம் ஆக இழை உடல் ஆக இயல்வது கூத்து’,


என கூத்த நூலில் வரும் பகுதி மிக அழகாக அமைந்துள்ளது. 
இது ஒரு மிக ஆழ்ந்த கருத்துக்கள் அமைந்த மறைபுதிரான அடிகளாகும். ஆனால் 2500 ஆண்டுகளுக்கு முன் எழுதிய இந்த அடிகள் இன்றும் ஏற்றுக் கொள்ளக் கூடிய நல்ல அடிகலாகவே இருக்கின்றன. என்றாலும் சிலப்பதிகாரத்தையே மரபு நாட்டிய கலையின் பூரண நூலாக கருதப்படுகிறது. ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான இதில்  நடனக்கலை பற்றிய பல பதிவுகள் நிறைந்திருக்கின்றன. மேலும் இன்றைய பரத நாட்டியம் தமிழ்நாட்டுக் கோவில்களில் தேவ தாசிப் பெண்கள் ஆடிய சதிராட்டத்தின் நெறிமுறைப் படுத்தப்பட்ட வடிவமே ஆகும் என்பதும் குறிப்பிடத் தக்கது. 


சங்க இலக்­கி­ய­மான, பத்­துப்­பாட்டு, எட்­டுத் ­தொ­கையில், நாட்­டிய குறிப்­புகள் இருப்­பதை காணலாம். சங்க இலக் கியத்தில் வரும் உறையூர் முதுகூத்தனார் (குறு.133); சாந்தன் கூத்தனார் (அகம்.350); மதுரைக் காருவலியங் கூத்தனார் (நற்.325); மதுரைக் கூத்தனார் (புறம்.334); போன்ற புலவர்களின் பெயர்கள் நெடுங்கூத்து மரபொன்று தமிழகத்தில் - அதிலும் மதுரையில் இருந்ததை உறுதிபடுத்துகின்றன. சேனாட்டில் ஆதிமந்தியும், சேர நாட்டின் ஆட்டனத்தியும், ஆடுகோட்பாட்டுச் சேரலாதனும், ஆடற்கலை வல்லவர்கள் என சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. பதிற்றுப்பத்தில் ஆறாம் பத்து - காக்கை பாடினியார் நச்செள்ளையார் பாடியது.அதில் ஆட்டக்கலை குறித்த விளக்கம் வெகுச்சிறப்பாக அமைந்திருப்பதை பதி ப.51; 17-27, பதி.ப.47, 5-8 போன்ற அடிகளால் அறிய முடிகிறது.


நெய்தல் நிலமான கடற்கரையினூடே பனஞ் சோலைதனில் மணல் திட்டுகள் சூழ்ந்த - பள்ளத் தாக்குகள் நிறைந்த - ஒரு மணல் பரப்பில் - ஞாழல் மரப்பூக்களின் வாசத்தோடு ஆடுமகள் விறலி பீடுநடை போட்டு - வட்ட வடிவ வலை யாட்டத் தினை நிகழ்த்திய விதம் இப்பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. மலர்ந்த நெய்தல் மலர் போன்ற கண்களை உடைய விறலி - புன்முறுவலுடன் அமர்ந்தும், குதித்தும், வீழ்ந்தும், எழுந்தும், உருண்டும், சுழன்றும் ஆடிய ஆடல் பாம்பிற்கு இணையாகவும் கூறப்பட்டுள்ளது.


“வண் பிணி அவிழ்ந்த கண் போல் நெய்தல்
நனை உறு நறவின் நாகுடன் கமழச்
சுடர் நுதல் மட நோக்கின்
வாள் நகை இலங்கு எயிற்று
அமிழ்து பொதி துவர் வாய் அசை நடை விறலியர்
பாடல் சான்று நீடினை உறைதலின்
வெள் வேல் அண்ணல் ” 
[பதிற்றுப்பத்து 51; 17-23]    


சொரி சுரை கவரும் நெய் வழிபு உராலின்
பாண்டில் விளக்குப் பரூஅச்சுடர் அழல
*நன் நுதல் விறலியர்* ஆடும்
தொல் நகர் வரைப்பின் அவன் உரை ஆனாவே.
[பதிற்றுப்பத்து 47, 5-8]


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.