Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பிரெஞ்சு நெப்போலியனை எதிர்த்த ‘கருப்பு நெப்போலியன்

பட மூலாதாரம்,PUBLIC DOMAIN

படக்குறிப்பு,19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வரையப்பட்ட ஒரு ஓவியத்தில் டூசைன்ட் லூவெர்ச்சர். கட்டுரை தகவல்
  • எழுதியவர், எடிசன் வீகா
  • பதவி, பிபிசி செய்திகள், பிரேசில்
  • 14 ஏப்ரல் 2024

டூசைன்ட் லூவெர்ச்சர், 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒரு நம்ப முடியாத சாதனையைச் செய்தார். ஒரு முன்னாள் அடிமையாகவும், அடிமைப்படுத்தப்பட்ட ஆப்பிரிக்கர்களின் மகனாகவும், அவர் ஒரு வெற்றிகரமான புரட்சிக்குக் காரணமாக இருந்தார்.

பிராந்தியத்தில் உள்ள அனைத்து அடிமைகளையும் விடுவிக்க அந்தப் புரட்சி வழிவகுத்தது. அமெரிக்காவில் அவ்வாறு நடந்தது அதுவே முதல் முறை.

இந்தச் செயல்முறை அடிமைத்தனத்தில் இருந்து காலனியை மீட்டெடுத்து, அதற்கு சுதந்திரம் வழங்கியது. லத்தீன் அமெரிக்காவின் முதல் சுதந்திர நாடாக அந்த காலனி மாறியது. இந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த புரட்சிக்குக் காரணமாக இருந்தவர்தான், டூசைன்ட் லூவெர்ச்சர் (1743-1803).

அவர் ‘ஹைதியன் புரட்சி’ (Haitian revolution) என்று அழைக்கப்படும் புரட்சியின் முக்கியத் தலைவராக இருந்தார். பின்னர் செயின்ட்-டொமிங்கு என்ற அந்த பிரெஞ்சு காலனியின் ஆளுநரானார். இந்த பிரெஞ்சு காலனிதான் சுதந்திரத்திற்குப் பிறகு ஹைதி என்று அழைக்கப்பட்டது.

 

புரட்சி தொடங்கியது எப்படி?

பிரெஞ்சு நெப்போலியனை எதிர்த்த ‘கருப்பு நெப்போலியன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஹைதிய விடுதலை இயக்கப் புரட்சி மிகப்பெரிய அடிமைக் கிளர்ச்சியாகக் கருதப்படுகிறது.

இந்தப் புரட்சியின்போது, அடிமை ஆட்சி பிரதேசம் முழுவதும் ஒழிக்கப்பட்டது. அடிமைகளின் கிளர்ச்சி ஆகஸ்ட் 22, 1791இல் தொடங்கியது.

அவர்கள் அடிமைத்தனத்தில் இருந்து தங்களை விடுவித்துக் கொண்டனர். மெஸ்டிசோஸ், பிரஞ்சு, ஸ்பானிஷ், பிரிட்டிஷ் மற்றும் தீவின் பிற மக்களிடம் இருந்து சிறிது சிறிதாக ஆதரவுகளைத் திரட்டினர். புரட்சியாளர்கள் ஒரு தந்திரமாக, ஏராளமான கரும்பு வயல்களுக்கு தீ வைத்தனர்.

பண்டைய ரோமில் ஸ்பார்டகஸ் (கி.மு.109- கி.மு.71) நடத்திய புரட்சிக்கு (ஆனால் அது தோல்வியில் முடிந்தது) பிறகு ஹைதிய விடுதலை இயக்கப் புரட்சி மிகப்பெரிய அடிமைக் கிளர்ச்சியாகக் கருதப்படுகிறது. உடனடி விளைவாக, இது மற்ற அமெரிக்க காலனிகளின் அடிமை பிரபுத்துவங்களிலும் மற்றும் ஐரோப்பிய காலனித்துவ பெருநகரங்களிலும் ஓர் அச்சத்தைத் தூண்டியது.

மோதலின் தொடக்கத்தில் இருந்தே லூவெர்ச்சர் ஒரு தலைவராகச் செயல்பட்டார். அவர் மக்களிடையே தாக்கம் செலுத்தக் கூடியவராகவும், கிளர்ச்சியாளர்களுக்கு கட்டளையிடுவதில் திறமையானவராகவும் இருந்தார்.

நன்கு கற்றறிந்தவர், 1789 புரட்சிக்குப் பிறகு பிரான்ஸ் எதிர்கொண்ட சிக்கலான வரலாற்றுத் தருணத்தை எப்படிப் பயன்படுத்திக்கொள்வது என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. தங்கள் இனம் சுதந்திரத்தை அடைவதற்கான சிறந்த தருணம் அதுதான் என்பதைப் புரிந்துகொண்டார்.

‘கருப்பு நெப்போலியன்’ என்ற புனைப்பெயர் பிரெஞ்சு அரசியல்வாதியும் எழுத்தாளருமான ஃபிராங்கோயிஸ்-ரெனே டி சாட்யூப்ரியாண்ட் என்பவர் தனது ‘மெமோயர்ஸ் ஃப்ரம் பியோண்ட் தி கிரேவ்’ என்ற புத்தகத்தில் (1848இல் வெளியிடப்பட்டது) உருவாக்கப்பட்டது.

தான் 1833இல் எழுதிய ஒரு கடிதத்தில் (அவரது புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது) சாட்யூப்ரியாண்ட், “கறுப்பு நெப்போலியன் டூசைன்ட் லூவெர்ச்சர், வெள்ளை நெப்போலியனால் கொல்லப்பட்டார் " என்று குறிப்பிட்டார்.

லூவெர்ச்சரை பற்றி ஒரு புத்தகத்தை எழுதிய பிரெஞ்சு வரலாற்றாசிரியர் ஜீன் லூயிஸ் டொனாடியூ, ஜீன் ஆஃப்ரிக் ஊடகத்திடம் பேசியபோது, "கருப்பு மற்றும் வெள்ளை நெப்போலியன்கள், இருவருமே லட்சியவாதிகள் மற்றும் சந்தர்ப்பவாதிகள்.

நெப்போலியன் போனபார்ட் தன்னை 'நிரந்தர தலைவராக' அறிவித்துக் கொள்வதற்கு முன்பாகவே டூசைன்ட் லூவெர்ச்சர் தன்னை ‘நிரந்தர ஆளுநராக’ அறிவித்துக் கொண்டார்" என்று கூறினார்.

 

வெற்றிகரமான புரட்சி

பிரெஞ்சு நெப்போலியனை எதிர்த்த ‘கருப்பு நெப்போலியன்

பட மூலாதாரம்,PUBLIC DOMAIN

படக்குறிப்பு,ஹைதிய புரட்சியின் ஓர் அத்தியாயம் ஓவியமாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

“டூசைன்ட் லூவெர்ச்சர் ஒரு சிறிய, சில சலுகைகளை மட்டுமே பெற்ற ஒரு சாதியைச் சேர்ந்தவர்" என்று வரலாற்றாசிரியர் சிஎல்ஆர் ஜேம்ஸ் தனது ‘தி பிளாக் ஜேகோபின்ஸ்' (The Black Jacobins, 1938) புத்தகத்தில் கூறுகிறார்.

"அவரது தந்தை, ஒரு சிறிய ஆப்பிரிக்க குழுவின் தலைவரின் மகனாக இருந்தார். போரில் பிடிபட்டார், ஒரு அடிமையாக விற்கப்பட்டு, அடிமைக் கப்பலில் பயணம் செய்தார். ஒரு குடியேற்றவாசியால் அவர் விலைக்கு வாங்கப்பட்டார்.

இந்தக் கறுப்பின மனிதர் ஓர் அசாதாரண நபர் என்பதை அந்த முதலாளி உணர்ந்தார். தோட்டத்தில் அவருக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டது. ஐந்து அடிமைகளைப் பயன்படுத்தி ஒரு நிலத்தைப் பயிரிட்டார். பின்னர் அவர் ஒரு கத்தோலிக்கராக மாறினார். பின்னர் திருமணம் செய்துகொண்டார். டூசைன்ட் அவருக்கு பிறந்த எட்டு குழந்தைகளில் மூத்தவர்," என்று ஜேம்ஸ் கூறுகிறார்.

பிரான்சுவா டொமினிக் டூசைன்ட் என்ற பெயருடன் அவர் பிறந்தார். பல ஆண்டுகளுக்குப் பிறகு லூவெர்ச்சர் என்ற குடும்பப்பெயர் சேர்க்கப்பட்டது.

அமெரிக்காவில் உள்ள ஆப்பிரிக்க அமெரிக்க வரலாறு மற்றும் கலாசாரத்தின் தேசிய அருங்காட்சியகத்தின் தகவல்படி, அவர் 1776இல் அடிமைத்தனத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார். பின்னர் அடிமை உழைப்பு மூலம் தனது காபி தோட்டத்தில் ஓரளவு செல்வத்தைப் பெற்றார்.

கடந்த 1791ஆம் ஆண்டில், செயிண்ட்-டோமிங்குவின் அடிமை மக்களிடையே ஒரு புரட்சி உருவானது. தொடக்கத்தில் லூவெர்ச்சர் அடிமைத்தனத்தை ஒழிப்பதற்கு எதிராகத்தான் இருந்தார். ஆனால் பின்னர் அவர் தனது மனதை மாற்றிக்கொண்டு பிரெஞ்சுக்காரர்களுக்கு எதிரான போராட்டத்தை வழிநடத்தினார்.

"ஹைதியன் புரட்சி வெற்றியடைந்தது என்பதை இங்கு முன்னிலைப்படுத்த வேண்டியது அவசியம். அவர் மிகவும் வெற்றிகரமான தலைவராக இருந்தார், அவர் அமெரிக்காவின் முதல் அடிமைத்தன ஒழிப்பு புரட்சியை முன்னெடுத்தார் மற்றும் ஹைதியின் சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளித்தார்.

எடுத்துக்காட்டாக, பிரேசிலிலோ அல்லது தெற்கு அமெரிக்காவிலோ இதுபோன்ற ஏதாவது நடக்கலாம் என்று அஞ்சும் அமெரிக்காவின் அடிமைகளை வைத்திருக்கும் அனைத்து உயரடுக்குகளுக்கும் ஹைதி ஓர் உண்மையான எச்சரிக்கையாக மாறியது," என்று சாவோ பாவுலோ நகரின் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான அலெக்ஸாண்ட்ரே மார்குசி விளக்கினார்.

அவரைப் பொறுத்தவரை, இந்த அச்சத்தின் காரணமாக "ஹைதி தொடர்ச்சியான சர்வதேச புறக்கணிப்புகளைச் சந்தித்தது. இது போருக்குப் பிந்தைய பொருளாதார மீட்சியைத் தடுத்தது. நாட்டின் பொருளாதார சிக்கல்களை விளக்குவதற்கு இது ஓரளவு உதவுகிறது," என்று வரலாற்றாசிரியர் கூறினார்.

 

மிகப்பெரிய மேற்கத்திய படைகளுக்கு எதிராக

பிரெஞ்சு நெப்போலியனை எதிர்த்த ‘கருப்பு நெப்போலியன்

பட மூலாதாரம்,PUBLIC DOMAIN

படக்குறிப்பு,'கருப்பு நெப்போலியன்' டூசைன்ட் லூவெர்ச்சர்.

"புரட்சிகர செயல்முறை வெற்றி பெற்றது. 1794ஆம் ஆண்டில், பிரெஞ்சு புரட்சிக்குப் பிந்தைய காலகட்டத்தில், பிரான்ஸ் நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் அடிமைத்தனத்தை ஒழித்தது.

ஆனால் இது நடந்தபோது, ஹைதியில் உள்ள கறுப்பின ஆப்பிரிக்க தொழிலாளர்கள் ஏற்கெனவே சுதந்திரமாக இருந்தனர். மேலும் அவர்கள் லூவர்ச்சரின் தலைமையின் கீழ் துல்லியமாக விடுவிக்கப்பட்டனர்,” என்று பிரேசிலில் உள்ள மெக்கென்சி பிரஸ்பைடிரியன் பல்கலைக் கழகத்தின் பேராசிரியரான வரலாற்றாசிரியரும் சமூகவியலாளருமான வெஸ்லி சந்தனா கூறினார்.

“1793 மற்றும் 1794க்கு இடையில் அனைவரும் சுதந்திரமாக இருந்தனர். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அடிமைத்தனம் முடிந்துவிட்டது என்று பிரெஞ்சு பெருநகரம் அறிவிக்கத் தேவை இருக்கவில்லை. அதற்கு முன்பே அடிமைத்தனத்தை முடிவுக்குக் கொண்டு வர லூவர்ச்சர்ரால் முடிந்தது,” என்று அவர் கூறினார்.

அதாவது லூவெர்ச்சரின் மரணத்திற்குப் பிறகு, ஹைதியின் சுதந்திரம் 1804இல் மட்டுமே அடையப்பட்டது. முழு செயல்முறையும் அவர் தலைமையில் ஒரு புரட்சிகர தருணம் என்று சந்தனா நினைவு கூர்ந்தார்.

பிரெஞ்சு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்து தங்களைத் துண்டித்துக் கொள்ள விரும்பும் உள்ளூர் பணக்கார வெள்ளையர்களின் உதவியையும் அவர் நாடினார்.

வரலாற்றாசிரியர் லூயிஸ் ஜெரால்டோ சில்வா, ஃபெடரல் யுனிவர்சிட்டி ஆஃப் பரானாவின் பேராசிரியர், "வரலாற்றில் பின்னோக்கிப் பார்ப்பது மூலம், அந்த நிகழ்வுகளால் அக்காலத்தில் வாழ்ந்த மக்களுக்கு என்ன பாதிப்பு என்பதைப் புரிந்துகொள்ள எங்களுக்கு உதவாது," என்று சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், "புரட்சி வெற்றி பெற்றது. லூவெர்ச்சர் அந்தக் காலத்தின் மிகப்பெரிய மேற்கத்திய படைகளான பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேயர்களை எதிர்கொண்டார்.

முடிந்தவரை ஹிஸ்பானியோலாவின் பண்டைய தீவின் மேற்குப் பகுதியில் பெருநகரத்தின் அதிகாரத்தை மீட்டெடுக்க பிரான்ஸ் முயன்றது. அடிமை வர்த்தகம் மற்றும் அடிமைத்தனத்தை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கான ஒரு தோல்வியுற்ற முயற்சியும் அதில் இருந்தது" என்று கூறுகிறார்.

மேலும், "மலேரியா, காலரா, கரீபியனின் மோசமான வெப்பம் ஆகியவற்றின் காரணமாக, சக்திவாய்ந்த பிரெஞ்சு ராணுவம் கறுப்பர் இன மக்களிடம் போரில் தோற்றது" என்று அவர் விவரித்தார்.

இன்றைய ஹைதி

பிரெஞ்சு நெப்போலியனை எதிர்த்த ‘கருப்பு நெப்போலியன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

"இன்று ஹைதி ஏழ்மையான மற்றும் வளர்ச்சியடையாத நாடு என்பதற்குக் காரணம் அங்கிருக்கும் மோசமான அரசாங்கம், திடீர் அதிகார மாற்றங்களுடன் போராளிகளின் கட்டுப்பாடற்ற வளர்ச்சி, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள்தான். மேற்கத்திய தப்பெண்ணங்கள் மற்றும் இனவெறி காரணமல்ல,” என்று வரலாற்றாசிரியர் சில்வா விளக்குகிறார்.

"ஹைதியின் தற்போதைய சூழ்நிலையும் முதலாளித்துவ வளர்ச்சியின் மோசமான சமத்துவமின்மையுடன் தொடர்புடையது," என்று அவர் கூறினார்.

எவ்வாறாயினும், "ஹைதியின் இன்றைய பொருளாதாரம் மற்றும் சமூகத்தின் சரிவு அப்போதைய ஹைதியின் வலிமையையும் முக்கியத்துவத்தையும் பிரதிபலிக்கவில்லை. இதே ஹைதிதான் ஜனவரி 1804இல், அமெரிக்காவிற்குப் பிறகு புதிய உலகின் இரண்டாவது அரசமைப்பு குடியரசாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டது என்பது மிகவும் முக்கியமானது,” என்று சில்வா கூறுகிறார்.

அப்போது அனைத்து குடிமக்களும் கறுப்பர்களாக இருக்கும் உலகின் முதல் மற்றும் ஒரே குடியரசாக இருந்தது ஹைதி.

"கருப்பின இயக்கத்தின் பார்வையில், புரட்சி மற்றும் லூவெர்ச்சர் இரண்டும் மிக முக்கியமான வரலாற்று குறியீடுகள். எனவே அது பிரெஞ்சு, ஸ்பானிஷ் மற்றும் ஆங்கிலேயர்களின் அனைத்து வகையான படையெடுப்புகளையும் அல்லது அதிகாரத்தைப் பராமரிக்கும் அளவையும் அகற்றும் அளவிற்கு வெற்றி பெற்றது,” என்று கூறுகிறார் சமூகவியலாளர் பாலோ நிக்கோலி ராமிரெஸ்.

"எதிர்ப்பின் அடிப்படையில், இதுவொரு வெற்றிதான். இருப்பினும், முன்னாள் கறுப்பின அடிமைகளின் புரட்சியாக இருந்ததால், தப்பெண்ணங்கள் ஆதிக்கம் செலுத்தியது. இன்றும் ஹைதியில் அது நிலவுகிறது என்பது தெளிவாகிறது.

இதனால் ஹைதி புவியியல் ரீதியாக மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் தனிமைப்படுத்தப்பட்டது. இது எண்ணற்ற சமூக பிரச்னைகளை ஏற்படுத்துகிறது," என்று அவர் குறிப்பிட்டார்.

புரட்சி ஏற்பட்டபோது, "ஹைதி மற்ற நாடுகளுக்கு ஓர் எச்சரிக்கை சமிக்ஞையாக மாறியது," என்று சமூகவியலாளர் பாலோ கூறுகிறார்.

"இந்த விதி முழு கண்டத்திற்கும் பொருந்தும். இது அடிமட்டத்தில் இருந்து வந்த ஒரு புரட்சி. இன்றுவரை ஒரு குறிப்பிட்ட வழியில், ஹைதியில் முதலீடு செய்வதில் பல நாடுகள் அதிகம் ஆர்வம் காட்டுவதில்லை.

ஏனெனில் அந்த நாட்டில் அதிகாரம் செலுத்துபவர்கள் ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். ஒருவகையில், அவர்கள் லூவர்ச்சரின் வாரிசுகள்,” என்று அவர் கூறுகிறார்.

 

கருப்பு நெப்போலியனின் மறைவு

பிரெஞ்சு நெப்போலியனை எதிர்த்த ‘கருப்பு நெப்போலியன்

பட மூலாதாரம்,PUBLIC DOMAIN

படக்குறிப்பு,லூவெர்ச்சர் சிறையில் இறந்ததை சித்தரிக்கும் ஓவியம்.

“லூவெர்ச்சர் ஹைதியில் மட்டுமல்ல, அமெரிக்கா முழுவதிலும், ஆப்பிரிக்காவிலும் சுதந்திரம் மற்றும் அடிமைத்தனத்தை ஒழிப்பதற்கான சின்னமாக மாறினார் என்று மார்குசி கூறுகிறார்.

"ஆப்பிரிக்காவில் காலனித்துவத்திற்கு எதிரான போராட்டத்தின் போது, 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், அவரது உருவம் மற்ற இடங்களில் விடுதலை இயக்கங்களுக்கு உத்வேகம் அளிக்கக்கூடிய ஒரு கறுப்பினத் தலைவரின் உதாரணமாக நினைவுகூரப்பட்டது," என்று வரலாற்றாசிரியர் கூறினார்.

"இவை அனைத்தும் அவரது உருவத்தைச் சுற்றி ஒரு கட்டுக்கதையை உருவாக்குவதன் ஒரு பகுதி. ஆனால் அதை முழுமையாக நம்பாமல் இருப்பதும் முக்கியம். அடிமைத்தனம் இல்லாத ஹைதியை அவர் கற்பனை செய்தார். ஆனால் அவரது அரசியல் திட்டம் நாட்டின் நில உடைமையாளர்களின் நலன்களுடன் இணக்கமாக இருந்தது.

இது உண்மையில் புரட்சிகர செயல்பாட்டின்போது இந்த உயரடுக்கினருடன் கூட்டணியைத் தக்கவைக்க அவரை அனுமதித்த ஒரு காரணியாகும்," என்று மார்குசி விளக்கினார்.

ஓர் உதாரணம் என்னவென்றால், வரலாற்றாசிரியர் நினைவு கூர்ந்தபடி, ஹைதியில் அவர் உருவாக்க உதவிய ஒரு விவசாய சீர்திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை.

"நிலம் தொடர்ந்து பெரிய நில உரிமையாளர்களுக்குச் சொந்தமானதாக இருக்கும், மேலும் பெரும்பான்மையான மக்கள் கூலித் தொழிலாளர்களாக இருப்பார்கள்," என்று அவர் விவரித்தார்.

"ஹைதியின் செல்வமும் பொருளாதார வளர்ச்சியும் பெரிய விவசாய ஏற்றுமதி இருப்புகளைப் பராமரிப்பதைச் சார்ந்துள்ளது என்று அவர் நம்பினார், இது சுதந்திர ஹைதியில் பல சமூக ஏற்றத்தாழ்வுகள் தொடர உதவியது," என்று அவர் கூறினார்.

கடந்த 1802ஆம் ஆண்டில், அப்போதைய பிரெஞ்சு தூதர் நெப்போலியன் போனபார்டே (1769-1821) தனது மைத்துனரான ஜெனரல் சார்லஸ் லெக்லெர்க்கை (1772-1802) ஹிஸ்பானியோலா தீவுக்கு அனுப்பினார்.

காலனியின் கட்டுப்பாட்டை மீட்டெடுத்து அடிமைத்தனத்தை மீண்டும் நிலைநாட்டுவதே அவரது இலக்காக இருந்தது. பின்னர் செயின்ட்-டோமிங்குவின் ஆளுநராக இருந்த லூவெர்ச்சரை பதவி நீக்கம் செய்ய ஜெனரல் திட்டமிட்டார். அவர் அதைவிட அதிகமாகச் சாதித்தார்.

தலைவர் லூவெர்ச்சரையும் அவரது குடும்பத்தினரையும் கைது செய்து பிரான்சுக்கு அனுப்பினார். ஏப்ரல் 7, 1803இல் நிமோனியாவால் பாதிக்கப்பட்ட லூவெர்ச்சர் சிறையில் இறந்தார்.

 

ஹைதியின் பிற தலைவர்கள்

பிரெஞ்சு நெப்போலியனை எதிர்த்த ‘கருப்பு நெப்போலியன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஹைதியில் உள்ள லூவெர்ச்சரின் சிலை.

கரீபியன் தீவுகளில், அவரது ஆதரவாளர்கள் பிரெஞ்சுக்காரர்களுக்கு எதிராகத் தொடர்ந்து போர் தொடுத்தனர். பல தோல்விகள் மற்றும் உயிரிழப்புகளுக்குப் பிறகு, அதே ஆண்டின் இறுதியில் ஐரோப்பிய துருப்புகள் வெளியேறின.

ஜனவரி 1, 1804இல் ஹைதி ஒரு சுதந்திர நாடானது, இருப்பினும் பிரான்சின் அங்கீகாரம் 21 ஆண்டுகளுக்குப் பிறகுதான் வந்தது. வரலாற்றாசிரியர் சந்தனா, “வரலாற்றில் ஹைதி என்பது அமெரிக்காவில் நடந்த அரசியல் புரட்சியின் ஒரு ஆகச் சிறந்த குறிப்பு," என்று கூறுகிறார்.

"லூவெர்ச்சர் ஒரு மிக முக்கியமான அரசியல் தலைவராக இருந்தார், பல இயக்கங்களை ஊக்குவிப்பதற்கும், செல்வாக்கு செலுத்துவதற்கும் பொறுப்பானவர். அவரது தலைமை, போராடுவதற்கான அவரது திறன் மற்றும் அவரது துணிச்சலுக்காக அவர் நினைவுகூரப்படுகிறார்," என்று அவர் கூறினார்.

"அவரது உருவம் இன்றும் ஹைதியில் எதிர்ப்பின் அடையாளமாக, ஒரு தேசிய அடையாளமாக எதிரொலிக்கிறது" என்று ராமிரெஸ் கூறுகிறார். இருப்பினும், லூவெர்ச்சர் ஒரு தனிப் போராளி அல்ல என்பதையும், புரட்சியில் பல ஹீரோக்கள் இருந்தனர் என்பதையும் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

"அவர் மட்டுமல்ல, ஓகேய், ரேமண்ட், கிறிஸ்டோபே, டெஸ்ஸாலின்ஸ் போன்ற தலைவர்களும்கூட சமகால ஹைதியில் மதிக்கப்படுகிறார்கள். இந்த நபர்களுக்கு சிலைகள், ஓவியங்கள் மற்றும் பல்வேறு நினைவுச் சின்னங்கள் உள்ளன. ஹைதிய புரட்சியின் வலிமையையும் அர்த்தத்தையும் மேற்குலகம் புரிந்து கொள்ளவில்லை, பார்க்கவும் இல்லை. ஆனால் இந்த நினைவுச் சின்னங்கள் ஹைதியர்களுக்கு பெருமை சேர்க்கிறது,” என்று சில்வா கூறுகிறார்.

“லூவெர்ச்சரை அமெரிக்காவின் மிகப் பெரிய கறுப்பினப் புரட்சியாளராகக் குறிப்பிடுவது தனிமனிதனையும் அவர் வாழ்ந்த சமூகத்தையும் புரிந்துகொள்ள உதவுவதைவிட அதிகமான பிரச்னைகளை, கட்டுக்கதைகளை உருவாக்குகிறது," என்று வரலாற்றாசிரியர் சில்வா கருத்து தெரிவித்தார்.

அவரைப் பொறுத்தவரை புரட்சியாளர் லூவெர்ச்சர், மற்ற மனிதர்களைப் போலவே, சாதாரணமான ஒரு நபர். நமக்கு இருக்கும் கவலைகள், மகிழ்ச்சிகள், உணர்ச்சிகள் என அனைத்தும் அவருக்கும் இருந்தன.

ஹைதிய புரட்சியின் வெற்றியில் லூவெர்ச்சரின் செல்வாக்கையும் மார்குசி ஒப்பிட்டுப் பார்க்கிறார், “ஒரு ராணுவ மற்றும் ராஜதந்திரத் தலைவராக அவரது தனிப்பட்ட பங்கை மீறிய தொடர்ச்சியான காரணிகளால் இது வெற்றிகரமாக இருந்தது.

வெற்றிக்குக் காரணமாக முக்கியமான பல முன்னாள் அடிமைப் போராளித் தலைவர்களும் இருந்தனர், ஆனால் வரலாற்றில் அவர்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டனர்" என்று வரலாற்றாசிரியர் நினைவு கூர்ந்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c2jd8zye9jvo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.