Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
சென்னை குடிநீர் பற்றாக்குறை வருமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சாரதா வி
  • பதவி, பிபிசி தமிழ்
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

சென்னையின் வடக்கு எல்லையில், திருவொற்றியூரில் வசிக்கும் எஸ்.பாக்கியலட்சுமி கடந்த வாரம் தனது இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு பேரன்களுடன் அருகில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்று இரண்டு நாட்கள் தங்கியிருந்தார். கோடைகாலத்தில் மகள் வீட்டில் ஆசுவாசப்படுத்திக் கொள்ள அல்ல, தனது வீட்டில் நான்கு நாட்களாக தண்ணீர் வராததால் அவர் இந்த முடிவுக்கு தள்ளப்பட்டிருந்தார்.

திருவொற்றியூர் ஆறாவது தெருவில் வசிக்கும் அவரது வீட்டில் அவருடன் சேர்த்து ஐந்து பேர் வசிக்கின்றனர். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை மாலை 5 மணி முதல் 7 மணி வரை அரசு வழங்கும் குடிநீர் கிடைக்கும். அதை அடுத்து இரண்டு நாட்களின் பயன்பாட்டுக்காக வீட்டில் உள்ள ட்ரம், பாத்திரங்களில் நிரப்பி வைத்துக் கொள்வார். குடிப்பதற்கு கேன் தண்ணீர் பயன்படுத்தும் பாக்கியலட்சுமியின் குடும்பத்தினர் மற்ற எல்லா தேவைகளுக்கும் இந்த நீரையே நம்பியுள்ளனர்.

“எங்கள் பகுதியில் நிலத்தடி நீர் சேறும் சகதியுமாக இருக்கும். அதை யாரும் பயன்படுத்த மாட்டோம். கடல் நீரை குடிநீராக்கும் ஆலையிலிருந்து எங்களுக்கு கிடைக்கும் நீர், போதிய அழுத்தம் இல்லாததால் எங்கள் பகுதி வரை வந்து சேரவில்லை என்று இந்தப் பகுதி கவுன்சிலர் கூறினார். எனவே இரண்டு நாட்கள் அனைவரும் மகள் வீட்டுக்குச் சென்றுவிட்டோம். அங்கும் மெட்ரோ வாட்டர் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தான் கிடைக்கும், ஆனால் நிலத்தடி நீரின் தரம் பரவாயில்லை,” என்றார்.

இந்த ஆண்டு பெங்களூரூ நகரில், தேர்தல் விவகாரமாக பேசப்படும் அளவுக்கு, கடுமையான நீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஒரு கோடிக்கும் மேலான மக்கள் தொகை கொண்ட பெங்களூரூ நகரம் தனது குடிநீர் தேவையில் 60%-ஐ பூர்த்தி செய்ய காவிரி நீரையேச் சார்ந்துள்ளது.

சென்னை குடிநீர் பற்றாக்குறை வருமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,பெங்களூருவில் குடிநீர் பிரச்னையைச் சரிசெய்யக் கோரி நடத்தப்பட்ட போராட்டம்

பெங்களூருவின் குடிநீர் பிரச்னை

காவிரி ஆற்றுப்படுகையில், மரங்கள் அழிக்கப்பட்டதால் பெங்களூருவின் குடிநீர் தேவையை காவிரி ஆற்றால் பூர்த்தி செய்யமுடியவில்லை, என்றும் அதிகரித்து வரும் கட்டடங்களால் நிலத்தடி நீர் மட்டமும் குறைந்து வருகிறது என்றும் பெங்களூருவின் இந்திய அறிவியல் கழகத்தைச் சேர்ந்த வல்லுநர்கள் கூறுகின்றனர்.

பெங்களூரூ போன்றே சுமார் ஒரு கோடி மக்கள் தொகை கொண்ட மாநகரம் சென்னை. பெங்களூரு இன்று சந்திப்பது போன்ற வறட்சியை ஐந்து ஆண்டுகளுக்கு முன் சென்னை சந்தித்திருந்தது. மீண்டும் அப்படி ஒரு நிலை சென்னையில் வராது என்று கூறுவதற்கு எந்த காரணமும் இல்லை. அதிகரிக்கும் வெப்ப அலை, குறைந்து வரும் ஏரிகளின் நீர் மட்டம் ஆகியவை சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

5 ஏரிகளிலும் வேகமாக குறையும் நீர்மட்டம்

சென்னைக்குக் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஐந்து ஏரிகளில் 50% நீர் இருப்பே உள்ளது. சென்னையில் 1944-ஆம் ஆண்டு கட்டப்பட்ட முதல் நீர்த்தேக்கம் பூண்டி. பெரிய நீர் தேக்கங்களில் ஒன்றான பூண்டியில் அதன் முழு கொள்ளளவான 3,231 மில்லியன் கன அடியில் 27.79% மட்டுமே நீர் உள்ளது.

அதே போன்று 1,081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் நீர் தேக்கத்தில் 9.99% நீர் இருப்பு உள்ளது. புழல் ஏரியில் அதன் 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவில் 89.7% நீர் இருப்பும் செம்பரம்பாக்கத்தில் 64.64% நீர் இருப்பும், தேர்வாய் கண்டிகையில் 76% நீர் இருப்பும் உள்ளது.

 
சென்னை குடிநீர் பற்றாக்குறை வருமா?

பட மூலாதாரம்,VINAY IAS

படக்குறிப்பு,சென்னை குடிநீர் வாரிய நிர்வாக இயக்குநர் வினய் ஐ.ஏ.எஸ்

காவிரி நீர் பற்றாக்குறையும் சென்னையை பாதிக்கிறது

இதைத் தவிர சென்னையின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யக் கூடிய, கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரி கடந்த இரண்டு மாதங்களாக வறண்டு கிடக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன் சோழ அரசர்களால் அமைக்கப்பட்டு, 1,465 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட வீராணம் சென்னையிலிருந்து 250 கி.மீ தொலைவில் உள்ளது. காவிரி நீரை கொண்டு வந்து சேர்க்கும் மேட்டூர் அணையின் நீர் மட்டம் குறைவாக இருப்பதால், கடந்த 21 ஆண்டுகளாக சென்னைக்குக் குடிநீர் ஆதாரங்களில் ஒன்றாக இருந்து வரும் வீராணம் ஏரி தற்போது வறண்டு கிடக்கிறது.

சென்னையின் குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் நீர் தேக்கங்களின் மொத்த கொள்ளளவான 13,222 மில்லியன் கன அடியில் 6,702 மில்லியன் கன அடி அதாவது 50.69% மட்டுமே நீர் இருப்பு உள்ளது.

இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய நிர்வாக இயக்குநர் வினய் ஐ.ஏ.எஸ் பிபிசி தமிழிடம் பேசும் போது, “வீராணம் ஏரி வறண்டு போவதற்கு முன்பாக, அதிலிருந்து ஒரு நாளுக்கு 165 மில்லியன் லிட்டர் நீர் எடுப்போம். தற்போது வீராணத்துக்கு அருகில் உள்ள நெய்வேலி சுரங்கம், பரவனாறு ஆற்று நீர், மற்றும் பரவனாற்றுக்கு அருகில் போடப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகள் மூலம் 65 மில்லியன் லிட்டர் நீர் கிடைக்கிறது,” என்றார்.

 
சென்னை குடிநீர் பற்றாக்குறை வருமா?

பட மூலாதாரம்,DR L ELANGO

சென்னைக்கு வரும் கிருஷ்ணா நதி நீர்

இந்தியாவின் ஆறாவது பெரிய நகரமான சென்னை மாநகரம், தமிழ்நாட்டிலேயே அதிக மக்கள் அடர்த்தி கொண்டதாகும். சென்னையில் ஒரு சதுர கிலோமீட்டருக்கு 26,000 முதல் 27,000 பேர் வரை வசிக்கின்றனர். இது லண்டன் மாநகரத்தின் சராசரி மக்கள் அடர்த்தியை விட ஐந்து மடங்கு அதிகம்.

இந்நிலையில் சென்னையின் குடிநீர் தேவை தற்போது ஒரு நாளுக்கு 1,070 மில்லியன் லிட்டராக உள்ளது. இதில் 1,040 மில்லியன் லிட்டர் நீரை சென்னை குடிநீர் வாரியம் வழங்குவதாகக் கூறுகிறது. சென்னையின் குடிநீர் தேவைக்கும், குடிநீர் வழங்கலுக்கும் இடையிலான வித்தியாசம் வரும் நாட்களில் அதிகரிக்கப் போகிறது என்று அண்ணா பல்கலை கழகம் மற்றும் ஐ.ஐ.டி மெட்ராஸ் இணைந்து நடத்திய ஆய்வு கூறுகிறது.

இந்த ஆய்வை நடத்திய சென்னை ஐ.ஐ.டி-யின் பகுதி நேர பேராசிரியர் முனைவர் எல்.இளங்கோ பிபிசி தமிழிடம் பேசுகையில், “சென்னையில் 2030-ஆம் ஆண்டில் ஒரு நாளுக்கு 2,365 மில்லியன் லிட்டர் நீர் தேவைப்படும். அப்போது ஒரு நாளுக்கு 466 மில்லியன் லிட்டர் நீர் குறைபாடு இருக்கும்.

அதேபோன்று சென்னையில் 2040-ஆம் ஆண்டு ஒரு நாளுக்கு 717.5 மில்லியன் லிட்டர் குறைவாக இருக்கும், மேலும் 2050-ஆம் ஆண்டு 962 மில்லியன் லிட்டர் நீர் ஒரு நாளுக்கு தட்டுப்பாடாக இருக்கும். சென்னையின் சராசரி மழை அளவு, நிலத்தடி நீர் என பல்வேறு அளவுகோல்களை கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது,” என்றார்.

சென்னை குடிநீர் பற்றாக்குறை வருமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சென்னையிலுள்ள ஒரு கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலை

கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்

குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க, சென்னைக்குக் கை கொடுக்கும் 'ஆபத்பாந்தவன்' கடல் நீரை குடிநீராக்கும் திட்டமாகும்.

சென்னையில் கடல்நீரை குடிநீராக்கும் ஆலை முதன் முதலாக 2010-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. சென்னையின் வடக்கில் மீஞ்சூரில் அமைக்கப்பட்ட அந்த ஆலை ஒரு நாளுக்கு 100 மில்லியன் லிட்டர் நீரை அப்பகுதியில் உள்ள 10 லட்சம் மக்களுக்கு வழங்கி வருகிறது.

சென்னையின் தென் திசையில் நெம்மேலியில் அமைக்கப்பட்டுள்ள ஆலை 110 மில்லியன் லிட்டர் ஒரு நாளுக்கு வழங்கக் கூடியது.

நெம்மேலியில் ரூ.1,516 கோடி மதிப்பீட்டில், 150 மில்லியன் லிட்டர் தரக்கூடிய மற்றொரு ஆலை கடந்த மார்ச் மாதம் திறக்கப்பட்டது.

நான்காவது ஆலை, சென்னையிலிருந்து புதுச்சேரி வரை வங்கக் கடலை ஒட்டிய கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பேரூரில் ரூ.4,276 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது.

எதிர்வரும் 2026-ஆம் ஆண்டின் இறுதிக்குள் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படும் இந்த ஆலை ஒரு நாளுக்கு 450 மில்லியன் லிட்டர் தண்ணீர் வழங்கும் திறன் கொண்டது. தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிலேயே பெரிய ஆலையான இதிலிருந்து சென்னையின் தென் பகுதியில் உள்ள 22 லட்சம் மக்களுக்கு குடிநீர் வழங்க முடியும் என்று அரசு கூறுகிறது.

இதன் மூலம் இந்தியாவிலேயே 750 மில்லியன் லிட்டர் குடிநீரை கடல் நீரிலிருந்து பெறக் கூடிய நகரமாக சென்னை இருக்கும் என தமிழக அரசு கூறுகிறது.

இந்த ஆண்டும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாது என்று அதிகாரிகள் நம்பிக்கையுடன் கூறுவதற்கு இந்த ஆலைகளே முக்கிய காரணம்.

 
சென்னை, குடிநீர் தட்டுப்பாடு, கோடை, வறட்சி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இந்தியாவின் ஆறாவது பெரிய நகரமான சென்னையில் சுமார் ஒரு கோடி பேர் வசிக்கின்றனர்

அதிகாரிகள் சொல்வது என்ன?

சென்னை குடிநீர் வாரிய நிர்வாக இயக்குநர் டி.ஜி.வினய் ஐ.ஏ.எஸ், “சென்னையின் ஏரிகளில் 50%-க்கும் குறைவான நீர் இருப்பு இருந்தாலும், மார்ச் மாதத்துக்கு முன் எவ்வளவு தண்ணீர் வழங்கப்பட்டதோ, அதே அளவு நீர் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. சென்னையின் ஏரிகளிலிருந்து ஒரு நாளுக்கு 42 மில்லியன் கனஅடி நீர் சென்னையின் தேவைக்காக எடுக்கப்படுகிறது. இப்போது உள்ள நீர் இருப்பைக் கொண்டு, கிட்டத்தட்ட 150 நாட்களுக்கு நீர் வழங்க முடியும். கடல்நீரை குடிநீராக்கும் ஆலைகளிலிருந்து 360 மில்லியன் லிட்டர் ஒரு நாளுக்கு பெறமுடியும். தற்போது 250 மில்லியன் லிட்டர் பெறப்படுகிறது. அடுத்த சில நாட்களில் இந்த அளவு அதிகரிக்கப்படும். எனவே செப்டம்பர் முதல் வாரம் வரை சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்பில்லை,” என்றார்.

இந்த ஆண்டு குடிநீர் பற்றாக்குறை ஏற்படாது என்று வைத்துக்கொண்டாலும், இது இந்த ஆண்டுக்கு மட்டுமான பிரச்னை அல்ல. வறட்சி, நீர் பற்றாக்குறை, மண்வளம் குறைதல், கடல் நீர் உட்புகுதல், காட்டுத் தீ, உயிரினங்கள் அழிவது, வெப்ப அசௌகரியம் ஆகியவை காலநிலை மாற்றத்தின் அறிகுறிகளாகும்.

காலநிலை மாற்றத்தின் நீண்ட கால விளைவுகளை தமிழ்நாடு அரசு வகுத்துள்ள காலநிலை செயல்திட்டம் கணித்துள்ளது. அதன்படி 2100-ஆம் ஆண்டுக்குள் சென்னையின் ஆண்டுக்கான சராசரி வெப்பம் 3.1 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும், மழை பொழிவு 9% குறையும்.

சென்னையில் மழை பற்றாக்குறையா?

காலநிலை மாற்றத்தின் ஒரு விளைவு தான் மாறி வரும் மழைப்பொழிவு என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். சென்னையில் சராசரியாக ஆண்டுக்கு 1,200மி.மீ. மழை பெய்கிறது. இது சென்னை நகரத்தின் நீர் தேவையைப் பூர்த்தி செய்யப் போதுமான அளவு மழை ஆகும். எனினும், சில நேரங்களில் ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டித் தீர்த்து விடுகிறது. ஒரு ஆண்டில் வடகிழக்குப் பருவ மழை முடிந்து தென்மேற்குப் பருவ மழை தொடங்குவதற்கு இடைப்பட்ட காலத்தில் உள்ள நாட்கள் ‘வறண்ட நாட்கள்’ என்று அழைக்கப்படும்.

கடந்த 2010-ஆம் ஆண்டு சென்னையில் 150 வறண்ட நாட்கள் இருந்தன, அது 2019-ஆம் ஆண்டு 193 நாட்களாக அதிகரித்தது. இடையில் சென்னையில் வெள்ளம் ஏற்பட்ட 2015-ஆம் ஆண்டும் 193 வறண்ட நாட்கள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

 
சென்னை, குடிநீர் தட்டுப்பாடு, கோடை, வறட்சி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சென்னையில் 2023-ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருமழை காரணமாக நகரத்தில் வெள்ளம் ஏற்பட்டது

பெருவெள்ளமும், கடும் வறட்சியும்

சென்னையில் 2005, 2015, 2018, 2021, 2023 ஆகிய ஆண்டுகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதில் 2015-ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் சென்னை நகரையே ஸ்தம்பிக்க வைத்தது. ஆனால் நான்கு ஆண்டுகள் கழித்து தண்ணீரே இல்லாத நிலையை குறிக்கும் ‘பூஜ்ஜிய நாள்’ அறிவிக்கப்பட்டது. அப்போது தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக விடுதிகள் மூடப்பட்டன. உணவக நேரம் குறைக்கப்பட்டது. குடியிருப்புப் பகுதிகளில் தாண்ணீருக்காக அடிக்கடி கைகலப்புகள் நேர்ந்தன. அப்போது பிற மாவட்டங்களில் இருந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. அருகில் உள்ள விவசாய கிணறுகளிலிருந்தும் கல் குவாரிகளிலிருந்தும் தண்ணீர் எடுத்து வரப்பட்டது.

அதேபோல 2003-ஆம் ஆண்டும் மிகக் கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டை சென்னை சந்தித்தது. வெள்ளத்துக்கும் வறட்சிக்கும் முக்கிய காரணமாக இருப்பது நகரமயமாக்கல், நீர் வழித்தடங்களை ஆக்கிரமித்து கட்டப்படும் கட்டடங்கள், என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

 
சென்னை, குடிநீர் தட்டுப்பாடு, கோடை, வறட்சி
படக்குறிப்பு,சென்னையில் நீர்நிலைகளின் பரப்பளவு சுருங்கி வருகிறது. பூண்டி நீர்த்தேக்கத்தின் கோப்புப் படம்

'சென்னையின் நீர் நிலைகள் சுருங்கிவிட்டன'

1893-ஆம் ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் சென்னையில் 12.6 சதுர கி.மீ.-ஆக இருந்த சென்னை நீர் நிலைகளின் பரப்பளவு 3.2 சதுர கி.மீ.-ஆகச் சுருங்கியுள்ளது.

சென்னையில் உள்ள கட்டங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது 1,488 சதுர கி.மீ. பரப்பளவில் கட்டடங்கள் உள்ளன. இது 100 ஆண்டுகளில் மூன்று மடங்காக அதிகரிக்கும் என்று அண்ணா பல்கலை கழகம் மற்றும் சென்னை ஐ.ஐ .டி நடத்திய ஆய்வின் தரவுகள் தெரிவிக்கின்றன.

ஆனால் நமது எல்லா பிரச்னைகளுக்கும் காலநிலை மாற்றத்தின் மீது பழி போடக் கூடாது என்கிறார் லண்டன் பல்கலைகழகத்தின் நீர் மற்றும் வளர்ச்சிக்கான மையத்தின் முன்னாள் ஆய்வாளராகவும், பல்துறை நீர்வள ஆய்வுகளுக்கான தெற்காசிய கூட்டமைப்பின் தலைவராகவும் இருக்கும் எஸ்.ஜனகராஜன்.

சென்னை, குடிநீர் தட்டுப்பாடு, கோடை, வறட்சி

பட மூலாதாரம்,S JANAKARAJAN

படக்குறிப்பு,எஸ்.ஜனகராஜன்

இதுகுறித்து பிபிசி தமிழிடம் அவர் பேசும்போது, “தமிழகத்தின் அனைத்து நீர் நிலைகளும் எக்காரணம் கொண்டும் அழிக்கப்படாமல் பாதுகாக்க வேண்டும் என்று 2007-ஆம் ஆண்டு தமிழக அரசு சட்டம் ஒன்றை இயற்றியது. ஆனால், அந்தச் சட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் 'Tank Memoirs' என்ற ஆவணத்தின்படி சென்னையை சுற்றியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில், 3,600 நீர் நிலைகள் இருந்தன. இன்று இவற்றில் பல காணாமல் போய்விட்டன,” என்றார்.

மேலும், “ஏரிகள் ஒவ்வொன்றும் இணைக்கப்பட்டவை. ஒன்று நிரம்பும் போது, அங்கிருந்து நீர் அடுத்த ஏரிக்குச் செல்லும். அந்த முறை இன்று முற்றிலும் அழிந்துவிட்டது. வளர்ச்சிக்கு யாரும் தடை சொல்லவில்லை. அந்த வளர்ச்சி நிலையானதாக இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்,” என்கிறார்.

மாறி வரும் மழைப்பொழிவுக்கு ஏற்றாற் போல மழைநீர் சேகரிப்பு முறைகள் வடிவமைக்க வேண்டும் என்கிறார் அவர். “ஒரே நாளில் பெய்யும் கனமழை கடலில் கலப்பதற்கு முன்பாக அதைச் சேமிக்க நவீன வழிகள் இருக்கின்றன. பூமிக்கு அடியில் பல கிலோ மீட்டருக்கு கால்வாய்கள் அமைத்து நீரைச் சேமிக்கும் பல நாடுகள் இருக்கின்றன. போதிய மழை பெய்யும் சென்னையில் தெற்கு ஆசியாவிலேயே பெரிய கடல்நீரை குடிநீராக்கும் ஆலை தேவை இல்லை. ஏரிகளை முறையாகத் தூர்வாரி, நவீன மழை நீர் சேமிப்புக் கட்டமைப்புகளை ஏற்படுத்தினாலே போதும்,” என்கிறார்.

 
சென்னை, குடிநீர் தட்டுப்பாடு, கோடை, வறட்சி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சென்னையில் மெட்ரோ வாட்டர் வினியோகம் செய்யப்பட்டாலும், பெரும்பாலான மக்கள் அதைக் குடிக்க விரும்புவதில்லை

சென்னையில் கிடைக்கும் குடிநீர் தரமானதா?

மத்திய அரசு நடத்திய 'பே ஜல் சர்வேக்ஷன்' (Peyjal Survekshan) ஆய்வில் இந்தியாவில் உள்ள 485 நகரங்களில் 46 நகரங்கள் மட்டுமே மக்களுக்குத் தரமான குடிநீர் வழங்குகின்றன என்று கண்டறியப்பட்டது. சென்னையின் குடிநீர் தேவையை 90%-க்கும் மேல் பூர்த்தி செய்து விட்டதாக அரசு கூறினாலும், சென்னை குடிநீர் வாரியம் வழங்கும் நீரை பலரும் குடிப்பதில்லை. சமீபத்திய ஆய்வு ஒன்றின்படி சென்னையில் 70% குடியிருப்புகள் குடி தண்ணீர் கேன்களை பயன்படுத்துகின்றன. 25 கி.மீ. நீள கடற்கரை கொண்ட சென்னையில் கடலோரப் பகுதிகளில் கடல் நீர் உட்புகுவதால், நிலத்தடி நீரில் உப்புத்தன்மை அதிகரிப்பது சென்னையின் மற்றொரு சவாலாகும்.

சென்னை கோடம்பாக்கத்தில் வசிக்கும் எஸ் குமாரி, “எங்களுக்கு 24 மணி நேரமும் மெட்ரோ வாட்டர் கிடைக்கிறது. ஆனால் அந்த தண்ணீரில் கழிவுநீர் கலக்கலாம், தூசு கலக்கலாம் என்பதால் அதைக் குடிப்பதில்லை. தண்ணீர் கேன்கள் வாங்கிக் கொள்கிறோம்,” என்றார்.

ஐ.ஐ.டி-யின் ஆய்வை நடத்திய முனைவர் எல்.இளங்கோ, “குடிநீர் வாரியம் குடிநீரை எவ்வளவு தான் சுத்தப்படுத்தி வழங்கினாலும், குழாய்களில் இருக்கும் தூசு, வழியில் யாராவது கொண்டுள்ள கழிவுநீர் இணைப்புகள் நீரின் தரத்தை பாதிக்கின்றன. அதேநேரம் கேன்களில் நீரில் அதன் எல்லா தாது சத்துகளும் நீக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. குடிநீரில் 500 TDS இருக்க வேண்டிய சத்துகள் 50-க்கும் குறைவாகவே இருக்கின்றன. கேன்களில், பாட்டில்களில் விற்கப்படும் குடிநீரில் குறைந்தபட்ச தாதுக்களின் அளவை நிர்ணயிக்க வேண்டும்,” என்றார்.

https://www.bbc.com/tamil/articles/c0x0v85l72po

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோவை: அணைகளின் நீர் இருப்பு குறைந்ததால், குடிநீருக்கு பற்றாக்குறை - கள நிலவரம்

கோவை குடிநீர் தட்டுப்பாடு

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ச.பிரசாந்த்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 6 மே 2024, 05:08 GMT

கோவை மாநகராட்சியின் முக்கிய குடிநீர் ஆதாரங்களான, சிறுவாணி, பில்லூர் மற்றும் ஆழியாறு அணைகளின் நீர்மட்டம் குறைந்துள்ளது. இது கோவை மாவட்டத்தின் குடிநீர் விநியோகத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் அதிக மக்கள்தொகை கொண்ட மாநகராட்சிகளில் கோவையும் ஒன்று. மாநகராட்சியுடன் சேர்த்து கோவை மாவட்டத்தில் மொத்தம் 35 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.

கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை, ஆனைகட்டி அருகே கேரள மாநிலத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சிறுவாணி அணை, மேட்டுப்பாளையத்தை அடுத்த்துள்ள பில்லூர் அணை மற்றும் பொள்ளாச்சியில் உள்ள ஆழியாறு அணை ஆகியவை தான் கோவை மாநகராட்சியின் முக்கிய குடிநீர் ஆதாரங்கள்.

மாநகராட்சிப் பகுதிகள் தவிர்த்து, கோவை மாவட்டத்தின் மற்ற பகுதிகளான பொள்ளாச்சி, கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிகளுக்கு ஆழியாறு அணை முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது.

 

கோவையின் குடிநீர் விநியோகம் எப்படி நடக்கிறது?

கோவை மாநகராட்சிப் பகுதிகளுக்கு சிறுவாணி, பில்லூர் 1, 2, 3 ஆகிய திட்டங்கள், வடவள்ளி – கவுண்டம்பாளையம் மற்றும் ஆழியாறு கூட்டுக் குடிநீர் திட்டங்கள் ஆகியவற்றில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

இப்படியான நிலையில், கடந்த ஆண்டு போதிய பருவமழை பெய்யாதது, மற்றும் இந்த ஆண்டு கோடை மழை பெய்யாதது போன்ற காரணங்களால், கோவையின் நீராதாரமாக உள்ள சிறுவாணி, பில்லூர் மற்றும் ஆழியாறு அணைகளின் நீர் மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனால், அணைகளில் இருந்து பெறப்படும் நீரின் அளவு குறைந்து, மக்களுக்கு வாரம் ஒருமுறை அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

சிறுவாணி அணையைப் பொறுத்தவரை, மொத்தம் உள்ள 45 அடியில், ஏப்ரல் 30-ஆம் தேதி நிலவரப்படி, 12 அடி வரை மட்டுமே நீர் மட்டம் உள்ளது. பில்லூர் அணையின் மொத்த நீர்மட்டம் 100 அடி. இதில் 55.25 அடிக்கு மட்டுமே நீர்மட்டம் உள்ளது. அதேபோல், ஆழியாறு அணையின் மொத்த கொள்ளளவான 120 அடியில், 58.70 அடி உயரத்திற்கு மட்டுமே நீர் உள்ளது.

 
கோவை குடிநீர் தட்டுப்பாடு
கோவை குடிநீர் தட்டுப்பாடு

பட மூலாதாரம்,GETTY IMAGES

'இந்த ஆண்டு மழை பெய்யாததால் சிக்கல்'

இந்த நிலையில், கோவை மாவட்டத்தின் குடிநீர் பற்றாக்குறை குறித்து, மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கைப்படி, சிறுவாணி அணைப் பகுதியில் 2023 ஏப்ரல் மாதம் 95 மில்லிமீட்டர் மழை பதிவானது, பில்லூர் அணைப்பகுதியில் 2189.64 மி.மீ. மழையும், ஆழியாறு அணைப் பகுதியில் 41.80 மி.மீ. மழையும் பதிவானது. ஆனால், இந்த ஆண்டு சிறுவாணி, பில்லூர் மற்றும் ஆழியாறு அணைப் பகுதியில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் மழை பெய்யாததால், அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

இதனால், "சிறுவாணி அணையில் இருக்கின்ற நீரை ஜூன் வரை வழங்குவதற்காக, அணையில் இருந்து நாள் ஒன்றுக்கு 104.4 எம்.எல்.டி பெறப்படுவதற்குப் பதிலாக 35 எம்.எல்.டி நீர் பெறப்பட்டு விநியோகம் செய்யப்படும். இதேபோல், பில்லூர் அணையில் இருக்கும் நீரும் ஜூன் வரையில் வழங்க ஏற்பாடு செய்யப்படும். ஆழியாறு அணையில் தற்போது இருக்கும் நீர் கோடையைச் சமாளிக்கப் போதுமானதாக உள்ளது," என்று மாவட்ட ஆட்சியர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

‘வீட்டின் மாதச் செலவு அதிகரித்துள்ளது’

இந்நிலையில், குடிநீரை விலைக்கு வாங்கிப் பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாகக் கோவை நகரில் வசிக்கும் பொதுமக்களில் சிலர் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்.

பிபிசி தமிழிடம் பேசிய கோவை கணபதி பகுதியில் வசிக்கும் இல்லத்தரசியான ரம்ய பிரியா, ஆண்டுதோறும் கோடைக் காலத்தில், குறிப்பாக மே மாதம் வாரம் ஒருமுறை, தங்கள் பகுதிக்கு குடிநீர் வழங்குவார்கள் என்றும், இந்த ஆண்டு 12 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாகவும் கூறுகிறார்.

"தினமும் குடிநீர் அல்லாத பயன்பாட்டுக்கு போர்வெல் நீர் வழங்கி வந்தனர். இப்போது அதுவும் சரிவரக் கிடைக்காமல் உள்ளது," என்கிறார் ரம்ய பிரியா.

கோடையில் குடிநீர் தேவை அதிகரித்துள்ளதால், சேமிக்கும் நீர் விரைவில் தீர்ந்துவிடுவதாகக் கூறும் அவர், "650 ரூபாய் செலுத்தி டிராக்டரில் 1,000 லிட்டர் நீர் விலைக்கு வாங்கிப் பயன்படுத்துவதுடன், குடிநீரை விலைக்கு வாங்கிப் பயன்படுத்துகிறோம். இதனால், வீட்டின் மாதச் செலவு அதிகரித்துள்ளது," என்றார்.

‘பயன்பாட்டைக் குறைத்துள்ளோம்’

தங்கள் பகுதிக்கு வாரம் ஒருமுறைதான் குடிநீர் வழங்கப்படுவதாகவும் கிடைக்கும் நீரை குடிக்க, சமைக்க மட்டுமே சிக்கனமாகப் பயன்படுத்துவதாகவும் கூறுகின்றனர் கோவை ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த ராஜேஷ் கோவிந்தராஜலு, சுஜாதா தம்பதி.

பிபிசி தமிழிடம் பேசிய அவர்கள், "குடிநீர் தட்டுப்பாட்டால் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. குடிநீர் அல்லாத பயன்பாட்டுக்கான நீருக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், பாத்திரங்களின் பயன்பாட்டையும் வெகுவாகக் குறைத்துள்ளோம்," என்றனர்.

இந்த நிலையில், அரசு போதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளாமல் விட்டதால் தான் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர் விவசாயிகள் சங்கத்தினர்.

பிபிசி தமிழிடம் பேசிய கெளசிகா நீர்க்கரங்கள் என்ற சுற்றுச்சூழல் அமைப்பின் நிறுவனர் செல்வராஜ், "சிறுவாணி, பில்லூர் அணைகளில் கடந்த சில ஆண்டுகளாக வண்டல் மண் அதிகரித்து அணையின் நீர் சேமிப்புத் திறன் குறைந்துள்ளது. வண்டல் மண் எடுத்து அணைகளின் நீர்மட்டத்தை உயர்த்த அரசு தவறிவிட்டதால், இன்று நாம் நீரின்றி சிரமத்தைச் சந்திக்கிறோம்," என்றார்.

 
கோவை குடிநீர் தட்டுப்பாடு
படக்குறிப்பு,குடிநீர் பற்றாக்குறையுடன் விவசாயமும் பாதிக்கப்படுவதாகக் கூறுகிறார் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்ட துணைத் தலைவர் பெரியசாமி

அணைகளைத் தூர்வார கோரிக்கை

நீர்நிலைகளைத் தூர்வாரி ஆழப்படுத்தினால் மட்டுமே இனி வரும் காலங்களை எதிர்கொள்ள முடியும் என்கிறார் செல்வராஜ்.

இதை விளக்கிய செல்வராஜ், "பருவநிலை மாற்றத்தால் கடந்த சில ஆண்டுகள் முன்பு பெய்ததைப் போல பருவமழை கிடைப்பதில்லை. திடீரென சில நாட்களில் அதீத கனமழை தான் பொழிகிறது. இத்தகைய சூழலைச் சமாளிக்க தமிழ்நாடு அரசு சிறுவாணி, பில்லூர், ஆழியாறு அணைகளை முறையாகத் தூர்வாரி கரைகளைப் பலப்படுத்த வேண்டும். அணைகளைப் போல குளங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்," எனக் கூறுகிறார்.

வறட்சியால் குடிநீர் பற்றாக்குறை பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளதாகவும், அதேபோல் விவசாயமும் பாதிப்புகளைச் சந்திப்பதாக தெரிவிக்கிறார், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்ட துணைத்தலைவர் பெரியசாமி.

பிபிசி தமிழிடம் பேசிய பெரியசாமி, "அணைகளில் தொடர்ந்து நீர்மட்டம் குறைந்து வருவதால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, திரும்பிய பக்கமெல்லாம் மக்கள் பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றனர். குடிநீர் தட்டுப்பாடு ஒரு பக்கம் இருக்க, நிலத்தடி நீர்மட்டம் குறைந்து போதிய நீர் கிடைக்காமல் விவசாயமும் கடுமையாகப் பாதித்துள்ளது," என்றார்.

 
கோவை குடிநீர் தட்டுப்பாடு
படக்குறிப்பு,கோவைக்கு முக்கிய குடிநீர் ஆதாரங்களாக பில்லூர் அணை, சிறுவாணி அணை, ஆழியாறு அணை இருக்கிறது.

அதிகாரிகள் சொல்வது என்ன?

விவசாயிகளின் குற்றச்சாட்டுகள் குறித்து, கோவை மண்டல பொதுப் பணித்துறை முதன்மைப் பொறியாளர் சிவலிங்கத்திடம் பிபிசி தமிழ் விளக்கம் கேட்டது.

"அணைகள், குளங்களைப் பாதுகாப்பதற்காகச் சிறப்புத் திட்டங்கள் மூலம், வண்டல் மண் எடுத்து, கரைகளைப் பலப்படுத்தி தூர்வாரும் பணிகளைச் செய்து வருகிறோம். இந்த ஆண்டு மழைக்காலம் துவங்குவதற்கு முன்பு ஆழியாறு அணையில் வண்டல் மண் எடுத்து தூர்வாரத் திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல், குளங்களிலும் வண்டல் மண் எடுக்கப்படும்," என்று சிவலிங்கம் கூறினார்.

மேலும், சிறுவாணி அணை கேரள மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால், கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி அணையைத் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசுக்கு தெரிவித்துள்ளதாகவும், பில்லூர் அணையையும் தூர்வார அரசுக்கு கோரிக்கை அனுப்பியுள்ளதாகவும் அவர் கூறினார்.

"கடந்த காலங்களில் இல்லாததைவிட தற்போது வெப்ப அலை அதிகமாக இருப்பதால், அணைகளில் நாள் ஒன்றுக்கு 10-15 கன அடி நீர் ஆவியாகி வருகிறது. பருவமழை குறைவால் நீர் வரத்தும் இல்லை. ஆழியாறு அணையில் போதிய நீர் இருப்பதால் குடிநீருக்கு பிரச்னை இல்லை. ஆனால், பில்லூர், சிறுவாணியில் நீர் குறைந்து வருவதால் குடிநீருக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது," என்றார் சிவலிங்கம்.

கோவை மாவட்ட குடிநீர் வடிகால் வாரிய முதன்மைப் பொறியாளர் செல்லமுத்து பேசுகையில், "அணைகளில் நீர்மட்டம் பெருமளவு குறைந்துள்ளதால், வழக்கமாகப் பெறும் நீரின் அளவு குறைந்துள்ளது. கிடைக்கின்ற நீரை மக்களுக்குப் பகிர்ந்தளித்து வருகிறோம். குடிநீர் அல்லாத பயன்பாட்டிற்கு நிலத்தடி நீர் விநியோகம் செய்யப்படுகிறது. மக்கள் சிக்கனமாகப் பயன்படுத்தினால் மட்டுமே கோடையைச் சமாளிக்க முடியும்," என்றார்.

பிபிசி தமிழிடம் பேசிய கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், "சிறுவாணி, பில்லூர் அணைகளைத் தூர்வாரி ஆழப்படுத்த வேண்டுமென தமிழ்நாடு அரசிடம் மாநகராட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோவைக்கு வந்த முதன்மைச் செயலாளர்களிடமும் அணைகளில் வண்டல் மண் தேங்கியுள்ளதால் நீர் பெறுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடும் வறட்சி நிலவும் நிலையிலும், அணைகளில் இருக்கின்ற நீரை மாநகராட்சியின் மண்டலம் வாரியாக மக்களுக்கு விநியோகம் செய்து வருகிறோம்," என்றார்.

https://www.bbc.com/tamil/articles/c3g843vg0nyo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.