Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
அம்பானி-அதானி

பட மூலாதாரம்,GETTY IMAGES

9 மே 2024, 10:02 GMT
புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

நீண்ட காலமாகவே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொழிலதிபர்களான முகேஷ் அம்பானி, கெளதம் அதானி ஆகியோரை பிரதமர் நரேந்திர மோதியுடன் இணைத்து விமர்சித்து வருகிறார்.

ஆனால், அதற்கெல்லாம் பதில் பேசாமல் இருந்த மோதி, முதல் முறையாக தேர்தல் பரப்புரையின்போது அதே அம்பானி, அதானியின் பெயரைச் சொல்லி காங்கிரஸ் கட்சியை விமர்சித்துள்ளார்.

புதனன்று தெலங்கானாவின், கரீம்நகர் தொகுதியில் பரப்புரையில் ஈடுபட்டிருந்த மோதி, “தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து ராகுல் காந்தி அம்பானி மற்றும் அதானி என்ற பெயர்களை உச்சரிப்பதையே நிறுத்தி விட்டார்,” என்று கூறினார்.

ராகுல் காந்தியை குறிப்பிட்டுப் பேசிய மோதி, “தெலங்கானா நிலத்தில் நின்று நான் கேட்க விரும்புவது, இந்தத் தேர்தலில் எவ்வளவு பணம் அம்பானி மற்றும் அதானியிடம் இருந்து தனக்குக் கிடைத்துள்ளது என்பதை இளவரசர்(ராகுல்) அறிவிக்க வேண்டும். லாரி நிறைய பணம் காங்கிரசுக்கு வந்து சேர்ந்துவிட்டதா? ஒரே இரவில் இவர்களுக்குள் என்ன ஒப்பந்தம் நடந்தது? திடீரென்று அம்பானி-அதானியை விமர்சிப்பதையே நிறுத்திவிட்டார்,” என்று கூறினார்.

“கடந்த 5 ஆண்டுகளாக அம்பானி - அதானியின் பெயரைப் பயன்படுத்தி விமர்சனம் செய்துவிட்டு, திடீரென்று நிறுத்திவிட்டீர்கள் என்றால் நிச்சயம் ஏதோவொரு ஒப்பந்தம் நடந்திருக்க வேண்டும். இதற்கு கண்டிப்பாக நீங்கள் பதிலளிக்க வேண்டும்,” என்று பேசினார் மோதி.

பிரதமர் மோதியின் இந்த விமர்சனத்திற்கு ராகுல் காந்தியும் பதில் கொடுத்துள்ளார். இந்நிலையில் தற்போது இருவரின் உரைகளும் இந்தியா முழுவதும் வைரலாக பரவி வருகிறது. அப்படி அவர்கள் இருவரும் என்ன பேசினார்கள் என்பதை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.

 

ராகுல் கொடுத்த பதில் என்ன?

அம்பானி-அதானி

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,நீண்ட காலமாகவே பிரதமர் மோதி மற்றும் அம்பானி, அதானி ஆகியோருக்கு இடையிலுள்ள உறவு குறித்து எதிர்க்கட்சிகள் அடிக்கடி விமர்சித்து வருகின்றன.

மோதி பேசிய அதே புதன்கிழமையன்று மாலை ராகுல் காந்தியும் தனது பதிலைப் பகிர்ந்துள்ளார்.

அதில், “வணக்கம் மோதிஜி, கொஞ்சம் பயப்படுகிறீர்களா? வழக்கமாக அம்பானி, அதானியிடம் நீங்கள் தனி அறைகளில் தானே பேசுவீர்கள். முதல் முறையாக பொதுவெளியில் அம்பானி, அதானியின் பெயரை உச்சரித்துள்ளீர்கள். டெம்போவில் பணம் வரும் என்பதையும்கூட நீங்கள் அறிந்து வைத்துள்ளீர்கள். ஒருவேளை உங்களுக்கு சொந்த அனுபவம் உள்ளதோ?" என்று ராகுல் கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும், “நீங்கள் ஒன்று செய்யுங்கள். சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையை அவர்களிடம் அனுப்புங்கள். முடிந்தவரை வேகமாக விசாரணையை நடத்தி முடியுங்கள். பயப்படாதீர்கள் மோதிஜி. நான் மீண்டும் மீண்டும் அவர்களுக்கு நரேந்திர மோதி எவ்வளவு பணம் கொடுத்தார் என்பதைத் தானே சொல்லிக் கொண்டிருக்கிறேன். அதே பணத்தை இந்தியாவின் ஏழைகளுக்கு நாங்கள் கொடுக்கப் போகிறோம். கோடிக்கணக்கான மக்களை லட்சாதிபதிகளாக மாற்றப் போகிறோம்,” என்றார் அவர்.

நீண்ட காலமாகவே பிரதமர் மோதி மற்றும் அம்பானி, அதானி ஆகியோருக்கு இடையிலுள்ள உறவு குறித்து எதிர்க்கட்சிகள் அடிக்கடி விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் அதே பெயர்களைப் பயன்படுத்தி ராகுல் காந்தியை மோதி விமர்சிக்கையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் அவருக்குப் பதிலடி கொடுக்க ஆரம்பித்துவிட்டன.

 

எதிர்க்கட்சிகளின் எதிர்வினை

அம்பானி-அதானி

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,'மோதி தனது நண்பர்களுக்காக 16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளார். ஆனால், விவசாயிகளுக்கு ஒரு ரூபாய்கூட வழங்கவில்லை,” என்றார் பிரியங்கா காந்தி.

பிரியங்கா காந்தி மக்களவைத் தேர்தலுக்கான தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், ரேபரேலியில் நடந்த பரப்புரையின்போது மோதியின் கருத்துக்குப் பதில் கருத்து தெரிவித்துள்ளார்.

பிரியங்கா பேசுகையில், “ராகுல் காந்தி அதானியின் பெயர்களை உச்சரிப்பதில்லை என்று நரேந்திர மோதி இன்று பேசியுள்ளார். உண்மை என்னவெனில் அவர், தினசரி அதானி குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறார். அதானி குறித்து அனைத்து உண்மைகளையும் அவர் உங்கள் முன் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.”

மேலும், “பெரும் தொழிலதிபர்களுக்கும் நரேந்திர மோதிக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை தினசரி ராகுல் உங்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். மோதி தனது நண்பர்களுக்காக 16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளார். ஆனால், விவசாயிகளுக்கு ஒரு ரூபாய்கூட வழங்கவில்லை. அவர் கண்டிப்பாக இதற்குப் பதில் சொல்லியாக வேண்டும்,” என்றார் அவர்.

“இந்த நாட்டின் ஒட்டுமொத்த வளங்களும் மோதியின் கோடீஸ்வர நண்பர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் துறைமுகங்கள், விமான நிலையங்கள், நிலக்கரி, மின்சார உற்பத்தி என அனைத்துமே அவர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது,” என்றும் சுட்டிக்காட்டினார் பிரியங்கா காந்தி.

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பேசுகையில், “நாட்டின் பெரும் வணிக நிறுவனங்கள் குறித்து இத்தகைய கருத்துகளைத் தெரிவிப்பதன் மூலம், மோதி உலக அளவிலான இந்திய தொழில்துறையின் வணிக வாய்ப்புகளை கேள்விக்கு உள்ளாக்குகிறார்,” என்று கூறியுள்ளார்.

நரேந்திர மோதி - ராகுல் காந்தி - அம்பானி - அதானி

பட மூலாதாரம்,ANI

உத்தவ் தாக்ரே பிரிவைச் சேர்ந்த சிவசேனா தலைவர் பிரியங்கா சதுர்வேதி தனது எக்ஸ் பக்கத்தில், மோதியின் உரையைப் பகிர்ந்து, "ஹா ஹா இதுதான் இந்திய தேர்தலின் ஓ மை காட்(OMG) மொமண்ட்” என்று எழுதியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “காலம் மாறிக் கொண்டிருக்கிறது. பழைய நண்பர்கள் இனிமேல் நண்பர்கள் கிடையாது. மூன்று கட்ட தேர்தல்களே முடிந்துள்ளது. அதற்குள் மோதி தனது சொந்த நண்பர்களையே தாக்கத் தொடங்கிவிட்டார். மோதிஜியின் பதவி ஊசலாடிக் கொண்டிருப்பதை இது உணர்த்துகிறது. இதுதான் தேர்தல் முடிவுகளின் உண்மையான ட்ரெண்ட்,” என்று ட்வீட் செய்துள்ளார்.

திரிணாமூல் காங்கிரசின் குணால் கோஷ் பேசுகையில், "இப்போது பாருங்கள் அவர்கள் அம்பானி மற்றும் அதானியன் குடும்பங்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். கருப்புப் பணம் கொடுக்கப்பட்டுள்ளதா, இல்லையா என்று கேட்கிறார்கள். அப்படி உங்களிடம் ஏதேனும் தகவல் இருந்தால் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறைக்குத் தகவல் கொடுங்கள். உணவு, உடை, வீடு குறித்த பிரச்னைகளைப் பேசுவதற்குப் பதிலாக நீங்கள் நாடகம் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள்,” என்று விமர்சித்துள்ளார்.

நடிகர் பிரகாஷ்ராஜ், “இதோ வருங்கால எதிர்க்கட்சித் தலைவர் பேசுகிறார்,” என்று மோதியை சாடியுள்ளார்.

பாஜக தலைவர் ராஜ்யவர்தன் சிங்க் ரத்தோர், "2014 தேர்தலுக்குப் பிறகு தேர்தல் பத்திரம் வந்தது. கருப்புப் பணம் முடிவுக்கு வந்தது. இப்போது யாரெல்லாம் எந்தக் கட்சிக்கு எவ்வளவு பணம் கொடுத்தார்கள் என்பது வெளிப்படையாகவே தெரியும். தற்போது அவர்கள் விமர்சிப்பதை விட்டுவிட்டார்கள். காரணம் அவர்கள் தொழிலதிபர்களிடம் இருந்து பணம் வாங்கியிருக்கலாம்,” என்று பேசியுள்ளார்.

 

அம்பானி - அதானி பிரச்னையில் ராகுல் காந்தி செய்தது என்ன?

அம்பானி-அதானி

பட மூலாதாரம்,INC

படக்குறிப்பு,பிப்ரவரி 2023இல், நாடாளுமன்ற கூட்டத்திலேயே மோதி மற்றும் கெளதம் அதானி விமானம் ஒன்றில் ஒன்றாக இருப்பது போன்ற படம் ஒன்றை எடுத்துக் காட்டியிருந்தார் ராகுல் காந்தி.

கடந்த 5 ஆண்டு மோதி அரசில், பல முறை அம்பானி - அதானி குடும்பப் பெயர்களை வைத்து ராகுல் காந்தி நரேந்திர மோதியை விமர்சித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி 2023இல், நாடாளுமன்ற கூட்டத்திலேயே மோதி மற்றும் கெளதம் அதானி விமானம் ஒன்றில் ஒன்றாக இருப்பது போன்ற படம் ஒன்றையும் ராகுல் காந்தி எடுத்துக் காட்டியிருந்தார்.

ஆனால், அந்தச் சம்பவத்தை நாடாளுமன்ற நிகழ்வுகளைக் காட்சிப்படுத்தும் கேமராக்கள் சரியாகக் காட்டவில்லை. இதுகுறித்து நாடாளுமன்ற நிகழ்வுகளை ஒளிபரப்பும் சன்சத் டிவி மீது காங்கிரஸ் குற்றச்சாட்டை முன்வைத்தது.

அதே பிப்ரவரி 2023இல், நாடாளுமன்றத்தில் பிரதமர் மோதியிடம் ராகுல் காந்தி சில கேள்விகளை முன்வைத்தார். “எத்தனை முறை அதானியுடன் நீங்கள் வெளிநாட்டு சுற்றுப் பயணங்களுக்கு சென்றுள்ளீர்கள்? எத்தனை நாடுகளுக்கு உங்கள் பயணத்திற்குப் பிறகு அதானியும் அங்கு சென்றுள்ளார்? தேர்தல் பத்திரம் மூலம் எவ்வளவு பணம் பாஜகவுக்கு கிடைத்தது?"

சில நாட்கள் கழித்து மார்ச் 2023இல், சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கில் தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கில் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து ராகுல் காந்தி மக்களவை உறுப்பினர் என்ற அந்தஸ்தையும் இழந்தார்.

பிறகு மார்ச் 2023இல் இதுகுறித்துப் பேசிய ராகுல் காந்தி, "எனது உரையைக் கண்டு பிரதமர் பயந்ததால்தான் நான் தகுதி நீக்கம் செய்யப்பட்டேன். அதானி குறித்து நான் பேசவிருந்த அடுத்த உரை பிரதமருக்கு பயத்தைத் தந்துள்ளது," என்று கூறியிருந்தார்.

இதற்குப் பதிலளித்த பாஜக, "ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை. விதிகளை மதிக்காமல், எந்த ஆவணமும் இல்லாமல் அநாகரீகமான கருத்துகளைத் தெரிவித்தது மிகவும் துரதிர்ஷ்டவசமானது," என்று கூறியது.

இந்நிலையில் தற்போது அம்பானி - அதானியின் பெயர்களைக் குறிப்பிட்டு மோதி காங்கிரசை விமர்சித்திருக்கும் சூழலில், ராகுலின் பழைய படத்தைப் பகிர்ந்துள்ள காங்கிரஸ், மோதிக்கும் - அதானிக்கும் என்ன உறவு என்ற கேள்வி இன்னமும் அப்படியேதான் உள்ளது என்று தனது பதிவில் எழுதியுள்ளது.

சமீபத்தில் நடந்த ராமர் கோவில் திறப்பு விழாவில் முகேஷ் அம்பானியும் கலந்து கொண்டிருந்தார். இதுகுறித்து அப்போது கருத்து தெரிவித்த ராகுல் காந்தி, "ராம் மந்திர் நிகழ்ச்சியில் அம்பானி, அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், அதானி ஆகியோர் காணப்பட்டனர். ஆனால் எந்த ஏழையும் காணப்படவில்லை," என்று கூறினார்.

ஆனால், இந்த நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராய் மற்றும் கௌதம் அதானி கலந்து கொள்ளவில்லை. தனது தேர்தல் பரப்புரைகளில் தொடர்ந்து அம்பானி மற்றும் அதானியின் பெயர்களைப் பயன்படுத்தி வரும் ராகுல் காந்தி, பிரதமர் மோதி இந்தியாவின் ஏழை மக்களுடைய பணத்தை, நாட்டின் இரண்டு பெரும் தொழிலதிபர்களுக்கு வழங்கிவிட்டதாகக் குற்றம்சாட்டி வருகிறார்.

 

ராகுலின் குற்றச்சாட்டுக்கு அம்பானி-அதானியின் பதில் என்ன?

அம்பானி-அதானி

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,கடந்த 2019ஆம் ஆண்டு அனில் திருபாய் அம்பானி குழு, "ராகுல் காந்தி தொடர்ந்து தவறான தகவல், பிரசாரம் மற்றும் பொய்களை” பரப்பி வருகிறார் என்று கூறியது.

ஜனவரி 2023இல், ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் குறித்தும், மோதியுடனான நட்பு குறித்தும் நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார் கெளதம் அதானி.

அதில், “ராகுல் காந்தியால்தான் மக்களுக்கு அதானி என்ற பெயரே தெரிய வந்துள்ளது” என்று கூறினார் அவர். மோதி குறித்துப் பேசுகையில், “பிரதமர் மோதியிடம் இருந்து உங்களால் எந்தவிதமான தனிப்பட்ட உதவியையும் பெற முடியாது. ஆனால், அவருடனான அனுபவங்கள் சிறந்தது,” என்றார்.

மேலும் ராகுல் காந்தியை மதிப்பதாகவும், அதேநேரம் அவரது அறிக்கைகளை அரசியல் கருத்துகளாகவே பார்ப்பதாகவும் அதானி குறிப்பிட்டார்.

இந்தியா டிவி-யிடம் பேசிய கெளதம் அதானி, “2014 தேர்தலுக்குப் பிறகு ராகுல் ஜி எங்கள் மீது தொடுத்து வரும் தொடர் தாக்குதல்கள், அதானி யார் என்பதை அறிய உங்கள் அனைவருக்கும் வாய்ப்பளித்துள்ளது. அதனால்தான் இன்று ஒரு நேர்காணல் கொடுக்க உங்களது ஸ்டுடியோவில் நான் இருக்கிறேன்," என்று கூறினார்.

ராகுல் வேண்டுமானால் கௌதம் அதானியை விமர்சிக்கலாம், ஆனால், அதானியோ “ராகுல் காந்தியை ஒரு மரியாதைக்குரிய தலைவராகப் பார்ப்பதாகவும், அவருடைய நாட்டின் முன்னேற்றத்தை விரும்பும் நோக்கத்தைத்தான் பார்ப்பதாகவும்” கூறினார்.

"அவர் அரசியலின் மீதுள்ள ஆர்வத்தால் தனது கருத்துகளைத் தெரிவிக்கிறார். ஆனால், அவற்றை எனது தலைக்கு ஏற்றிக் கொள்வதில்லை,” என்றார்.

ராகுல் காந்தி அதானி மட்டுமின்றி அம்பானி குறித்தும் தனது உரைகளில் பேசி வந்தாலும், அதற்கு அம்பானி இதுவரை எந்தப் பதில் கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால், 2019ஆம் ஆண்டு அனில் திருபாய் அம்பானி குழு மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து தெரிவித்த அக்குழு, "ராகுல் காந்தி தொடர்ந்து தவறான தகவல், பிரசாரம் மற்றும் பொய்களை” பரப்பி வருவதாகக் கூறியது.

கடந்த 2019ஆம் ஆண்டில், ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக அம்பானி குழுமம் மற்றும் மோதி அரசின்மீது ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

ஏப்ரல் 2019 இல், பிரபல பிரெஞ்சு செய்தித்தாளான ‘La Monde’, 2015 பிப்ரவரி மற்றும் அக்டோபருக்கு இடைப்பட்ட காலத்தில், அனில் அம்பானிக்கு பிரெஞ்சு அரசு சுமார் 1100 கோடி ரூபாய் மதிப்பிலான வரிவிலக்கு அளித்ததாக செய்தி வெளியிட்டது.

இந்த அறிக்கை குறித்து அந்த செய்தித்தாளின் தெற்காசிய செய்தியாளர் ஜூலியன் போசு, "ஏப்ரல் 2015இல், பிரதமர் மோதி டசால்ட் நிறுவனத்திடம் 36 போர் விமானங்களை வாங்கும் திட்டத்தை அறிவித்தார். அப்போது, ரிலையன்ஸ் பிரான்சில் குறைந்தது 151 போர் விமானங்களை வைத்திருந்தது. ஆறு மாதங்களுக்குப் பிறகு. ரஃபேல் விமானங்களை வாங்குவதாக மோதி அறிவித்தார். பிரான்ஸ் வரித்துறை 151 மில்லியன் யூரோவுக்கு பதிலாக 7.3 மில்லியன் யூரோக்கள் செட்டில்மென்ட் செய்ய ஒப்புக்கொண்டது,” என்று ட்வீட் செய்திருந்தார்.

அப்போது ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் பொய் என்று ரிலையன்ஸ் கூறியது. யுபிஏ அரசு ஆட்சியில் இருந்தபோது அந்நிறுவனம் பெற்ற ஒப்பந்தங்களைக் குறிப்பிட்டு, "உங்கள் அரசு 10 ஆண்டுகளாக நேர்மையற்ற அரசுக்கு உதவி செய்ததா?" என்ற கேள்வியையும் ராகுல் காந்தியிடம் அந்நிறுவனம் முன்வைத்தது.

 

கௌதம் அதானியும் , நரேந்திர மோதியும்

அம்பானி-அதானி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,அரசாங்கத்தில் தனக்கிருந்த தொடர்புகளைத் தனது தொழிலை மேம்படுத்த பயன்படுத்திக் கொண்டதாக கௌதம் அதானி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கௌதம் அதானியின் திடீர் அசாதாரண வளர்ச்சிக்கு நரேந்திர மோதியுடனான நெருக்கம்தான் காரணம் என்றும், அவர் மிகக் குறுகிய காலத்தில் உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக உயர்ந்துவிட்டார் என்றும் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

அரசாங்கத்தில் தனக்கிருந்த தொடர்புகளைத் தனது தொழிலை மேம்படுத்த பயன்படுத்திக் கொண்டதாக கௌதம் அதானி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சட்டத்தில் உள்ள பலவீனங்களை சாதகமாகப் பயன்படுத்தி தொழிற்சாலைகளை அமைக்க குறைந்த விலையில் நிலங்களைக் கையகப்படுத்தியுள்ளார் என்று அவர் மீது விமர்சனம் உள்ளது.

ஆமதாபாத்தின் மூத்த பத்திரிகையாளர் திலீப் படேல் இதுகுறித்து பிபிசியிடம் பேசுகையில், "அதானி மிகவும் புத்திசாலி என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவருக்கு அரசாங்கத்தின் உதவி தேவைப்படும் போதெல்லாம், நரேந்திர மோதி அவருக்கு நிறைய உதவியுள்ளார். சிமன் பாய் (குஜராத் முன்னாள் முதல்வர்) அவருக்கு கட்ச் பகுதியில் நிலம் கொடுத்தார்.”

“ஆனால், அதானிக்கு இவ்வளவு நிலங்களை, அதுவும் மலிவு விலையில் கொடுக்காமல் இருந்திருந்தால் அவரால் துறைமுகத்தையும், விமான நிலையத்தையும் கையகப்படுத்தியிருக்க முடியாது. அதிக வருமானம் ஈட்டி வந்த ஆமதாபாத் விமான நிலையமும் அவருக்கு வழங்கப்பட்டது,” என்றார்.

கௌதம் அதானியின் நண்பர் கிரிஷ்பாய் டானி பிபிசியிடம் கூறுகையில், "எல்லோரும் மோதியை பற்றித்தான் பேசுகிறார்கள். ஆனால் எனக்குத் தெரிந்தவரை மோதிஜி யாருக்கும் பரிவு காட்டுபவர் அல்ல. நான் அரசியலில் இல்லை. ஒருவேளை மோதிஜி அதானிக்கு உதவலாம்,” என்றார்.

கடந்த சில ஆண்டுகளில் அம்பானி மற்றும் அதானியின் குடும்ப விழாக்களில்கூட வெளிப்படையாக நரேந்திர மோதி பங்கேற்றதில்லை. சொல்லப்போனால் அவர்களது பெயரைக்கூட அவர் உச்சரித்தது இல்லை. ஆனால், மே 8ஆம் தேதி இதற்கு முரணான சம்பவம்தான் நடந்துள்ளது.

https://www.bbc.com/tamil/articles/cxe864kp08ko

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.