Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஐரோப்பாவின் தேடப்படும் கடத்தல்காரரை பிபிசி செய்தியாளர் கண்டுபிடித்தது எப்படி
கட்டுரை தகவல்
  • எழுதியவர், சூ மிட்செல்
  • பதவி, பிபிசி செய்திகள்
  • 11 மே 2024

'பர்ஸான் மஜீத், இங்கிலாந்து உட்பட பல நாடுகளின் காவல்துறையினரால் தேடப்பட்டு வரும் ஒரு குற்றவாளி. ஆங்கிலக் கால்வாய் வழியாக பல புலம்பெயர்ந்தோரை சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் ஊடுருவச் செய்த குற்றத்திற்காக இவர் தேடப்படுகிறார். பிபிசி செய்தியாளர் சூ மிட்செல் பெரும் போராட்டத்திற்கு இவரைச் சந்தித்து பேசினார். தனது அனுபவங்களை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் சூ மிட்செல்.'

இராக்கில் உள்ள ஒரு ஷாப்பிங் மாலில் ஐரோப்பாவின் மிகவும் பிரபலமான ஆள் கடத்தல் குற்றவாளியான மஜீத்துடன் இப்போது நேருக்கு நேராக அமர்ந்திருக்கிறேன்.

அடுத்த நாள் அவரது அலுவலகத்தில் என இரண்டு இடங்களில் அவருடன் உரையாட முடிந்தது. எங்கள் இருவருக்குமான உரையாடலின் போது, ஆங்கிலக் கால்வாய் வழியாக அவரால் கொண்டு செல்லப்பட்ட புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு இருக்கும் என தனக்குத் தெரியாது என்று கூறுகிறார்.

“ஆயிரமாக இருக்கலாம், 10,000 இருக்கலாம். எனக்குத் தெரியாது, நான் எண்ணவில்லை” என்கிறார் மஜீத்.

சில மாதங்களுக்கு முன், மஜீத்துடனான இந்த சந்திப்பு சாத்தியமில்லாத ஒன்றாகத் தோன்றியது.

அகதிகளுடன் பணிபுரியும் முன்னாள் ராணுவ வீரர் ராப் லாரியுடன் சேர்ந்து, ‘ஸ்கார்பியன்’ (Scorpion) என்று அழைக்கப்படும் இந்த மனிதரை (மஜீத்) கண்டுபிடித்து விசாரிக்க நான் புறப்பட்டேன்.

 
ஐரோப்பாவின் தேடப்படும் கடத்தல்காரரை பிபிசி செய்தியாளர் கண்டுபிடித்தது எப்படி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,பிப்ரவரி 2023: துருக்கியில் இருந்து இத்தாலிக்குச் சென்ற படகில் குறைந்தது 95 புலம்பெயர்ந்தோர் இறந்தனர்.

பல ஆண்டுகளாக, ஆங்கிலக் கால்வாய் வழியாக படகுகள் மற்றும் லாரிகள் மூலம் ஆட்களைக் கடத்தும் தொழிலை மஜீத்தும் அவரது கும்பலும் செய்து வந்தனர். ஆங்கிலக் கால்வாய் பகுதியில் நடைபெற்ற பெரும்பாலான ஆள் கடத்தல்களில் இந்த கும்பலுக்கு பங்கு இருந்தது.

2018 முதல் இன்று வரை, ஆங்கிலக் கால்வாயை படகு மூலம் கடக்க முயன்ற 70க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் இறந்துள்ளனர். கடந்த மாதம், பிரான்ஸ் நாட்டின் கடற்பகுதியில் ஏழு வயது சிறுமி உட்பட ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.

இத்தகைய சட்டவிரோத பயணம் மிகவும் ஆபத்தான ஒன்று, ஆனால் கடத்தல்காரர்களுக்கு இவை மிகவும் லாபகரமானதாக இருக்கின்றன.

படகு மூலம் ஆங்கிலக் கால்வாயை கடக்க ஒரு நபருக்கு 6,000 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் 6.27 லட்சம்) வசூலிக்கிறார்கள். 2023இல் கிட்டத்தட்ட 30,000 பேர் இவ்வாறு ஆங்கிலக் கால்வாயை கடக்க முயற்சி செய்தார்கள், இதனால் இந்தத் தொழிலில் லாபத்திற்கான சாத்தியம் மிகத் தெளிவாக உள்ளது.

ஸ்கார்பியன் என்னும் இந்த குற்றவாளி குறித்த எங்கள் தேடல், வடக்கு பிரான்சின் கலேஸ் நகருக்கு அருகே உள்ள ஒரு அகதிகள் முகாமில் இருந்து தொடங்கியது.

அங்கு நாங்கள் ஒரு சிறுமியைச் சந்தித்தோம். டிங்கி (Dinghy) எனப்படும் காற்று அடைக்கப்பட்ட ஒரு சிறிய படகு மூலம் ஆங்கிலக் கால்வாயைக் கடக்க முயன்ற அந்தச் சிறுமி, கிட்டத்தட்ட உயிரை இழக்கும் நிலைக்குச் சென்றார்.

அந்த டிங்கி படகு கடல் பயணத்திற்கு ஏற்ற நிலையில் இருக்கவில்லை. மிகவும் மலிவான விலையில், பெல்ஜியத்தில் இருந்து அந்த பழைய டிங்கி படகு வாங்கப்பட்டது. அதில் பயணித்த 19 பேரிடமும் லைஃப் ஜாக்கெட்டுகள் இல்லை.

ஐரோப்பாவின் தேடப்படும் கடத்தல்காரரை பிபிசி செய்தியாளர் கண்டுபிடித்தது எப்படி

பட மூலாதாரம்,EPA

படக்குறிப்பு,ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் ஆங்கிலக் கால்வாயைக் கடக்க முயற்சி செய்கிறார்கள்.

கடலுக்கு மக்களை அனுப்புவது யார்?

சட்டவிரோதமாக புலம்பெயர்பவர்களை கைது செய்து அழைத்துச் செல்லும் இங்கிலாந்து காவல்துறையினர், அவர்கள் மொபைல் போன்களை எடுத்து சோதனை செய்கிறார்கள்.

2016 முதல் செய்த சோதனைகளில், ஒரு மொபைல் எண் மீண்டும் மீண்டும் கிடைத்தது.

பெரும்பாலும் அந்த எண் ‘ஸ்கார்பியன்’ என்ற பெயர் அல்லது தேள் புகைப்படத்துடன் சேமிக்கப்பட்டிருக்கும். பர்ஸான் மஜீத் என்ற குர்திஷ் இராக்கிய மனிதரின் குறியீட்டுப் பெயர் தான் இந்த ‘ஸ்கார்பியன்’ என்பதை அதிகாரிகள் உணரத் தொடங்கினர் என்று இங்கிலாந்தின் தேசிய குற்றவியல் அமைப்பின் (NCA) மூத்த விசாரணை அதிகாரி மார்ட்டின் கிளார்க் எங்களிடம் கூறினார்.

2006ஆம் ஆண்டில் 20 வயது இளைஞனாக, ஒரு லாரி மூலமாக இங்கிலாந்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்தார் மஜீத். ஒரு வருடம் கழித்து, இங்கிலாந்தில் தங்குவதற்கு அவருக்கு அனுமதி மறுக்கப்பட்ட போதிலும், கூடுதலாக பல ஆண்டுகள் இங்கிலாந்தில் தங்கியிருந்தார். அதில் சில ஆண்டுகளை துப்பாக்கி மற்றும் போதைப்பொருள் குற்றங்களுக்காக சிறையில் கழித்தார்.

அவர் இறுதியாக 2015இல் இராக்கிற்கு நாடு கடத்தப்பட்டார். இதற்குப் பிறகு, பெல்ஜியத்தில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் தனது மூத்த சகோதரரிடமிருந்து சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தவர்களை இங்கிலாந்திற்குள் கடத்தும் தொழிலை கற்றுக்கொண்டதாக நம்பப்படுகிறது.

பின்னர் மஜீத், ஸ்கார்பியன் என்ற பெயரால் அறியப்பட்டார்.

2016 மற்றும் 2021க்கு இடையில், ஐரோப்பாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான மக்கள் கடத்தல் வர்த்தகத்தின் பெரும்பகுதியை ஸ்கார்பியன் கும்பல் கட்டுப்படுத்தியதாக நம்பப்படுகிறது.

இரண்டு வருட சர்வதேச காவல்துறையின் கடுமையான நடவடிக்கையின் விளைவாக, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்தில் உள்ள நீதிமன்றங்களில் இந்த கும்பலைச் சேர்ந்த 26 உறுப்பினர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டது.

ஆனால் கைது செய்யப்படுவதிலிருந்து தொடர்ந்து தப்பித்து ஓடிக்கொண்டிருந்தார் ஸ்கார்பியன்.

பெல்ஜிய நீதிமன்றத்தில் அவர் மீது நடத்தப்பட்ட விசாரணையில், 121 நபர்களைக் கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. அக்டோபர் 2022இல், அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 834,000 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் 8.72 கோடி) அபராதமும் விதிக்கப்பட்டது.

அப்போதிருந்து, ஸ்கார்பியன் இருக்கும் இடம் யாருக்கும் தெரியவில்லை. இதுவே நாங்கள் உடைக்க விரும்பிய மர்மம்.

 
ஐரோப்பாவின் தேடப்படும் கடத்தல்காரரை பிபிசி செய்தியாளர் கண்டுபிடித்தது எப்படி

பட மூலாதாரம்,FACEBOOK

படக்குறிப்பு,மஜீத், 2012இல், நாட்டிங்ஹாமில் கார் மெக்கானிக்காக பணிபுரிந்தார்.

ஸ்கார்பியனை சந்திப்பதற்கான முயற்சி

ராபின் தொடர்பு மூலம் ஒரு இரானிய நபரிடம் பேசினோம். அவர் ஆங்கிலக் கால்வாயை கடக்க முயன்றபோது ஸ்கார்பியனை தொடர்பு கொண்டதாக கூறினார். ஸ்கார்பியன் அந்த இரானியரிடம் தான் துருக்கியில் இருப்பதாகவும், அங்கிருந்து தனது வணிகத்தை ஒருங்கிணைத்து வருவதாகவும் கூறியிருந்தார்.

பெல்ஜியத்தில், மஜீத்தின் மூத்த சகோதரரை நாங்கள் கண்டுபிடித்தோம், இப்போது அவர் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். ஸ்கார்பியன் துருக்கியில் இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறினார்.

இங்கிலாந்திற்குச் செல்லும் பெரும்பாலான புலம்பெயர்ந்தோருக்கு, துருக்கி ஒரு முக்கியமான இடமாகும். அதன் குடியேற்றச் சட்டங்கள் காரணமாக, ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து நாட்டிற்குள் நுழைய விசா பெறுவது ஒப்பீட்டளவில் எளிதானது.

இஸ்தான்புல்லில் கடத்தல்காரர்கள் அடிக்கடி வரும் ஒரு ஓட்டலுக்கு நாங்கள் சென்றோம். பர்ஸான் மஜீத் சமீபத்தில் அங்கு காணப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

கடத்தல் வணிகத்தைப் பற்றி எங்களிடம் கூற முடியுமா என்று மேலாளரிடம் கேட்ட போது, மொத்த கஃபேயும் அமைதியாக இருந்தது.

சிறிது நேரத்திற்குப் பிறகு, ஒரு நபர் எங்கள் மேஜையைக் கடந்து செல்லும் போது, துப்பாக்கியை எடுத்துச் செல்வதைக் காட்ட தனது மேல் சட்டையை விலக்கி காண்பித்தார். நாங்கள் ஆபத்தானவர்களைக் குறித்து விசாரிக்கிறோம் என்பதை நினைவூட்டுவதாக அது இருந்தது.

எங்கள் அடுத்த விசாரணை மிகவும் நம்பிக்கைக்குரிய முடிவுகளை அளித்தது. சில தெருக்களுக்கு அப்பால் உள்ள பணப் பரிமாற்ற நிலையத்தில் மஜீத் சமீபத்தில் 172,000 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் 1.8 கோடி) டெபாசிட் செய்ததாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. நாங்கள் எங்கள் கைப்பேசி எண்ணை அங்கே கொடுத்துவிட்டு வந்தோம், அடுத்த நாள் இரவில், ராபின் தொலைபேசி ஒலித்தது.

தொலைபேசியின் மறுமுனையில் யாரோ ஒருவர் பர்ஸான் மஜீத் என்று கூறிக்கொண்டிருந்தார்.

இந்த அழைப்பை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எனவே அழைப்பின் தொடக்கத்தை பதிவு செய்ய நேரம் இல்லை.

ராப் பேசிய போது, எதிர்முனையில் பேசியவர், “நீங்கள் என்னைத் தேடுகிறீர்கள் என்று கேள்விப்பட்டேன்.” என்று கூறினார்.

நான் அவரிடம், 'நீங்கள் யார்? ஸ்கார்பியனா?' எனக் கேட்டபோது, 'நீங்கள் என்னை அப்படி அழைக்க விரும்புகிறீர்களா? பரவாயில்லை’ என்றார்.

இவர்தான் உண்மையான பர்ஸான் மஜீத் என்பதைச் சொல்ல வழியில்லை, ஆனால் அவர் கொடுத்த விவரங்கள் நமக்குத் தெரிந்தவற்றுடன் ஒத்துப்போகின்றன. 2015ஆம் ஆண்டு நாடு கடத்தப்படும் வரை நாட்டிங்ஹாமில் தான் வசித்து வந்ததாக அவர் கூறினார். ஆனால் தான் கடத்தல் தொழிலில் ஈடுபடவில்லை என்று அவர் மறுத்தார்.

"இது உண்மையல்ல. இது வெறும் ஊடகங்களின் கூற்று" என்று அவர் தெரிவித்தார். தொடர்பு அடிக்கடி துண்டிக்கப்பட்டது, ஆனால் அவர் தனது இருப்பிடம் குறித்து எந்த துப்பும் கொடுக்கவில்லை.

 
ஐரோப்பாவின் தேடப்படும் கடத்தல்காரரை பிபிசி செய்தியாளர் கண்டுபிடித்தது எப்படி
படக்குறிப்பு,தனது சகோதரர்களுடன் ஸ்கார்பியன். புகைப்படம் எடுக்கப்பட்ட தேதி மற்றும் இடம் தெரியவில்லை.

12 பேருக்கான படகில் 100 பேர்

அவர் எப்போது மீண்டும் அழைப்பார் என்று எங்களுக்குத் தெரியாது. இதற்கிடையில், துருக்கியிலிருந்து கிரீஸ் மற்றும் இத்தாலிக்கு குடிபெயர்ந்தவர்களை கடத்துவதில் ஸ்கார்பியன் இப்போது ஈடுபட்டுள்ளதாக ராபின் உள்ளூர் தொடர்பு எங்களிடம் கூறினார்.

நாங்கள் கேட்டது கவலையளிக்கக் கூடிய விஷயமாக இருந்தது. ஏறக்குறைய 12 பேரை ஏற்றிச் செல்ல உரிமம் பெற்ற படகுகளில் 100 ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கூட்டம்கூட்டமாக ஏறத் தயாராக இருந்தனர்.

படகுகள் பெரும்பாலும் படகோட்டும் அனுபவம் இல்லாத கடத்தல்காரர்களால் இயக்கப்படும். கடலோர காவல்படை ரோந்துகளைத் தவிர்ப்பதற்காக சிறிய தீவுக் கூட்டங்களுக்கு இடையே ஆபத்தான பாதையில் செல்லும்.

இதில் பெரிய அளவிலான பணம் விளையாடுகிறது. இந்த படகுகளில் ஒரு இடத்திற்கு பயணிகள் தலா 10,000 யூரோக்கள் (9 லட்சம் ரூபாய்) செலுத்துவதாக கூறப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் 720,000க்கும் அதிகமான மக்கள் கிழக்கு மத்திய தரைக் கடல் பகுதியைக் கடந்து ஐரோப்பாவிற்குச் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது. அவர்களில் கிட்டத்தட்ட 2,500 பேர் நீரில் மூழ்கி இறந்தனர்.

எஸ்ஓஎஸ் மெடிட்டரேனியன் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ஜூலியா ஷாஃபர்மேயர் கூறுகையில், “கடத்தல்காரர்கள் இந்த மக்களின் வாழ்க்கையை பெரும் ஆபத்தில் ஆழ்த்தியுள்ளனர். இந்த மக்கள் வாழ்ந்தாலும் இறந்தாலும் அவர்களுக்கு எந்த கவலையும் இல்லை என்று நான் நினைக்கிறேன்."

இந்த நேரத்தில், இந்த கேள்வியை ஸ்கார்பியனிடம் நேரடியாக கேட்க எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. அவர் மீண்டும் எங்களை அழைத்தார்.

மீண்டும் ஒருமுறை, தான் ஒரு கடத்தல்காரர் என்பதை அவர் மறுத்தார். இருப்பினும், தான் பார்த்த வேலைக்கான அவரது வரையறை என்பது “நான் பணியை மட்டுமே செய்தேன், ஆனால் கட்டளையிட்டவர் வேறு யாரோ” என்று தோன்றியது.

“நான் வெறுமனே அங்கு இருந்தேன், இப்போது அப்படி கூட இல்லை. நான் பணத்தைக் கையாள்பவன் மட்டுமே” என்று அவர் கூறினார்.

 
ஐரோப்பாவின் தேடப்படும் கடத்தல்காரரை பிபிசி செய்தியாளர் கண்டுபிடித்தது எப்படி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இஸ்தான்புல், ஐரோப்பாவுக்குச் செல்லும் புலம்பெயர்ந்தோருக்கு துருக்கி ஒரு முக்கியமான பகுதியாக உள்ளது.

ஸ்கார்பியனுக்கு சொந்தமான வில்லா

மஜீத் நீரில் மூழ்கி இறந்த புலம்பெயர்ந்தோர் மீது சிறிதும் அனுதாபம் காட்டவில்லை.

"நீங்கள் இறந்து போவது கடவுள் கையில் உள்ளது, ஆனால் சில நேரங்களில் உங்கள் தவறும் உள்ளது. கடவுள் ஒருபோதும் 'அந்த படகில் ஏறு’ என்று கூறுவதில்லை." என்கிறார் மஜீத்.

எங்களின் அடுத்த விசாரணைக்கான இடம் மர்மரிஸ் ரிசார்ட் ஆகும், அங்கு ஸ்கார்பியனுக்கு சொந்தமாக ஒரு வில்லா இருப்பதாக துருக்கி போலீசார் கூறினர். நாங்கள் அங்கு விசாரித்தபோது, அவருடன் எல்லோருடனும் நட்பாக இருந்ததாக ஒரு பெண் கூறினார்.

மஜீத் ஆள் கடத்தலில் ஈடுபட்டிருப்பதை அந்தப் பெண் அறிந்திருந்தார். இது மஜீத்துக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தினாலும் கூட, அவரது கவலை பணத்தைப் பற்றி மட்டுமே, புலம்பெயர்ந்தோரின் தலைவிதி பற்றி அல்ல என்றும் அந்தப் பெண் கூறினார்.

"மஜீத் அவர்களைப் பற்றி கவலைப்படவில்லை. அது மிகவும் வருத்தமாக இருக்கிறது, இல்லையா? நான் கேள்விப்பட்ட விஷயங்களை நினைத்துப் பார்த்தால், மிகவும் அவமானமாக உள்ளது. ஏனென்றால் அவை நல்லதல்ல என்று எனக்குத் தெரியும்." என்கிறார் அந்தப் பெண்.

அவர் இராக்கில் இருக்கலாம் என்று யாரோ தன்னிடம் கூறியிருந்தாலும், சமீபத்தில் மர்மரிஸில் உள்ள அவரது வில்லாவில் அவரைப் பார்க்கவில்லை என்றும் அவர் கூறினார்.

இராக்கின் குர்திஸ்தான் பகுதியில் உள்ள ஒரு நகரமான சுலைமானியாவில் உள்ள ஒரு பணப் பரிமாற்றத்தில் ஸ்கார்பியனை அண்மையில் பார்த்ததாக மற்றொரு நபர் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.

நாங்கள் அந்த இடத்திற்கு புறப்பட்டோம். அங்கு ஸ்கார்பியன் கிடைக்கவில்லை என்றால், நாங்கள் இந்த முயற்சியை கைவிட வேண்டும் என்று முடிவு செய்தோம்.

ஆனால் ராபின் நண்பரால் அவரைத் தொடர்பு கொள்ள முடிந்தது. முதலில், மஜீத் மிகவும் சந்தேகமடைந்தார், எப்படியாவது அவரைப் பிடித்து ஐரோப்பாவிற்கு அழைத்துச் செல்ல திட்டமிடுகிறோம் என்று கவலைப்பட்டார்.

முதலில் ராபின் நண்பர் மூலமாகவும், பின்னர் நேரடியாக ராப் மூலமாகவும் குறுஞ்செய்திகள் குவிந்தன. ஸ்கார்பியன் எங்களை சந்திப்பார், ஆனால் சந்திக்கும் இடத்தை அவரே முடிவு செய்வார் என்றால் மட்டுமே சந்திப்பு நடக்கும். அவர் சொல்லும் இடம் என்றால் பாதுகாப்பாக இருக்குமா அச்சம் இருந்ததால் நாங்கள் அதை ஒத்துக்கொள்ளவில்லை.

பின்னர் ஒரு குறுஞ்செய்தி வந்தது, "நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்?"

நாங்கள் அருகில் உள்ள வணிக வளாகத்திற்குச் சென்று கொண்டிருப்பதாகச் சொன்னோம். ஸ்கார்பியன் எங்களிடம் அவரை தரை தளத்தில் உள்ள ஒரு காபி ஷாப்பில் சந்திக்கச் சொன்னார்.

ஐரோப்பாவின் தேடப்படும் கடத்தல்காரரை பிபிசி செய்தியாளர் கண்டுபிடித்தது எப்படி
படக்குறிப்பு,சூ மிட்செல் மற்றும் ராப், ஸ்கார்பியனைச் சந்தித்தபோது, அவர்களின் ஓட்டுனர் ரகசியமாக அதை படம்பிடித்தார்.

ஸ்கார்பியனை சந்தித்த தருணம்

இறுதியாக, நாங்கள் அவரைப் பார்த்தோம்.

பர்ஸான் மஜீத் ஒரு பணக்கார கோல்ப் வீரர் போல் தோற்றமளித்தார். புதிய ஜீன்ஸ், வெளிர்-நீல சட்டை மற்றும் கறுப்பு நிற மேல் கோட் அணிந்திருந்தார்.

அவர் கைகளை மேசையில் வைத்தபோது, அவரது விரல் நகங்கள் மெனிக்யூர் செய்யப்பட்டிருப்பதைக் கண்டேன்.

இதற்கிடையில், மூன்று பேர் அருகில் இருந்த மேஜையில் அமர்ந்தனர். அவரது பாதுகாப்பு குழு என்பதை நாங்கள் யூகித்தோம்.

மீண்டும், அவர் ஒரு குற்ற அமைப்பின் தலைவராக இருப்பதை மறுத்தார். மற்ற கும்பல்கள் தன்னை சிக்க வைக்க முயன்றதாக அவர் கூறினார்.

"சிலர் தாங்கள் கைது செய்யப்படும்போது, 'நாங்கள் அவருக்காக வேலை செய்கிறோம்' என்று கூறுகிறார்கள். அவர்கள் குறைவான தண்டனையைப் பெற விரும்புகிறார்கள். அதனால் இப்படிச் சொல்கிறார்கள்” என்றார்.

மற்ற கடத்தல்காரர்களுக்கு பிரிட்டிஷ் கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டு அவர்களின் வர்த்தகத்தை மேற்கொள்வது குறித்தும் அவருக்கு கோபம் உள்ளது.

"பிரிட்டிஷ் பாஸ்போர்ட்டை வைத்திருந்த பையன் ஒருவன், மூன்று நாட்களில் 170 அல்லது 180 பேரை துருக்கியிலிருந்து இத்தாலிக்கு அனுப்பினான். நான் தொழில் செய்ய வேறு நாட்டிற்கு செல்ல விரும்புகிறேன். என்னால் இங்கு இருக்க முடியாது” என்றார் மஜீத்.

புலம்பெயர்ந்தோர் இறப்புக்கான அவரது பொறுப்பு குறித்து நாங்கள் கேட்டபோது, அவர் தொலைபேசியில் சொன்னதையே மீண்டும் கூறினார், அவர் பணத்தை எடுத்துக்கொண்டு படகில் இடங்களை மட்டுமே முன்பதிவு செய்தேன் என்று.

அவரைப் பொருத்தவரை, ஒரு கடத்தல்காரன் என்பவன் மக்களை படகுகள் மற்றும் லாரிகளில் ஏற்றி அவர்களை சட்டவிரோதமாக கடத்துபவன்.

"நான் யாரையும் படகில் ஏற்றியதில்லை, யாரையும் கொன்றதில்லை." என்றார் அவர். உரையாடல் முடிந்தது, ஆனால் சுலைமானியாவில் தான் பணிபுரிந்த பணப் பரிமாற்ற அலுவலகத்தைப் பார்க்க ராப்பை அழைத்தார் ஸ்கார்பியன்.

அது ஒரு சிறிய அலுவலகம், ஜன்னலில் அரபு மொழியில் சில எழுத்துகளும் ஒன்றிரண்டு மொபைல் போன் எண்களும் இருந்தன. மக்கள் பணம் செலுத்த அங்கு வந்தனர். அங்கு இருந்தபோது ஒரு நபர் ஒரு பெட்டி நிறைய பணம் எடுத்துச் செல்வதைக் கண்டதாகக் கூறினார் ராப்.

இந்த சந்தர்ப்பத்தில், 2016ஆம் ஆண்டில் பல ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பாவிற்குச் சென்ற போது, தான் எவ்வாறு இந்த வணிகத்தில் இறங்கினேன் என்பதைப் பற்றி பேசினார் ஸ்கார்பியன்.

“யாரும் அந்த மக்களை வற்புறுத்தவில்லை. அவர்கள் விரும்பியே சென்றனர்” என்று அவர் கூறினார். "அவர்கள் கடத்தல்காரர்களிடம், 'தயவுசெய்து, எங்களுக்கு இதைச் செய்யுங்கள்' என்று கெஞ்சிக் கொண்டிருந்தனர். சில சமயங்களில் கடத்தல்காரர்கள், 'கடவுளுக்காக நான் அந்த மக்களுக்கு உதவுவேன்' என்று கூறுகிறார்கள். பின்னர் இது உண்மையல்ல, அது உண்மையல்ல என்று அவர்கள் புகார் கூறுகிறார்கள்” என்கிறார் ஸ்கார்பியன்.

 
ஐரோப்பாவின் தேடப்படும் கடத்தல்காரரை பிபிசி செய்தியாளர் கண்டுபிடித்தது எப்படி
படக்குறிப்பு,பெல்ஜியத்தில் உள்ள வழக்கறிஞர்களிடமிருந்து பெற்ற தகவல் தாள்.

2016 மற்றும் 2019க்கு இடையில், பெல்ஜியம் மற்றும் பிரான்சில் நடவடிக்கைகளுக்குத் தலைமை தாங்கிய இரண்டு முக்கிய நபர்களில் ஒருவராக தான் இருந்ததாக ஸ்கார்பியன் கூறினார், மேலும் அந்த சமயத்தில் அவர் லட்சக்கணக்கான டாலர்களைக் கையாண்டதாக ஒப்புக்கொண்டார்.

"நான் அவர்களுக்கு வேலை செய்தேன். பணம், இருப்பிடம், பயணிகள், கடத்தல்காரர்கள், இவை அனைத்திற்கும் இடையில் நான் செயல்பட்டேன்” என்று சொல்லும் அவர், தான் ஆட்கள் கடத்தலில் ஈடுபடவில்லை என்று தொடர்ந்து மறுத்தார்.

ஆனால் அவரது நடவடிக்கைகள் இதற்கு முற்றிலும் முரணானது.

ஸ்கார்பியன் அதை உணரவில்லை, ஆனால் அவர் தனது மொபைல் ஃபோனை ஸ்க்ரோல் செய்தபோது, ராப் பின்னால் உள்ள கண்ணாடியில் மொபைல் திரையின் பிரதிபலிப்பைப் பிடித்தார்.

சில பாஸ்போர்ட் எண்களின் பட்டியலை ராப்பால் பார்க்க முடிந்தது. கடத்தல்காரர்கள் இவற்றை இராக் அதிகாரிகளுக்கு அனுப்புவார்கள் என்று பின்னர் அறிந்தோம். புலம்பெயர்ந்தோர் துருக்கிக்கு செல்ல, போலி விசாக்களை வழங்க இராக் அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கப்படும்.

அதுதான் நாங்கள் ஸ்கார்பியனைக் கடைசியாகப் பார்த்தது. ஒவ்வொரு கட்டத்திலும், நாங்கள் எங்கள் விசாரணையின் முடிவுகளை இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவில் உள்ள அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்டோம்.

பெல்ஜியத்தில் உள்ள அரசு வழக்கறிஞர் ஆன் லுகோவியாக், ஸ்கார்பியனுக்கு எதிரான வழக்கில் முக்கிய பங்கு ஆற்றியவர். ஸ்கார்பியன் ஒரு நாள் ஈராக்கில் இருந்து நாடு கடத்தப்படுவார் என்று அவர் நம்புகிறார்.

"நீங்கள் விரும்பியதை எல்லாம் செய்ய முடியாது என்ற சமிக்ஞையை குற்றவாளிக்கு அனுப்புவது மிகவும் முக்கியம். நாங்கள் கண்டிப்பாக அவரை வீழ்த்துவோம்" என்று வழக்கறிஞர் ஆன் லுகோவியாக் கூறுகிறார்.

https://www.bbc.com/tamil/articles/cp9gw9e8dnjo

  • கருத்துக்கள உறவுகள்

ஈராக் என்ன ஐரோப்பாவிலா இருக்கிறது? 

தொலைத்த இடத்தில் அல்லவா தேட வேண்டும்? 

Edited by Kapithan

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.