Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
சிறுநீரக பாதிப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 9 மணி நேரங்களுக்கு முன்னர்

சருமத்தை வெளுப்பாக்கும் சில க்ரீம்களில் அதீதமான அளவில் பாதரசம் இருப்பதால், அவை சிறுநீகர பாதிப்புகளை ஏற்படுத்துவதாக தற்போது வெளிவந்துள்ள ஆய்வுக் கட்டுரை ஒன்று தெரிவிக்கிறது. எதனால் இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது?

சருமத்தின் நிறத்தை வெளுப்பாக்குவதற்காகப் பயன்படுத்தப்படும் சில க்ரீம்களில் பாதரசம் போன்ற நச்சு உலோகங்கள் இடம்பெற்றிருப்பது சிறுநீரகத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதாக சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

சிறுநீரகம் தொடர்பான ஆய்விதழான Kidney Internationalல் "NELL-1–associated membranous nephropathy linked to skin fairness cream use: insights from an Indian case series" என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று வெளியாகியிருக்கிறது.

இந்த ஆய்வுக் கட்டுரையை கேரளாவின் கோட்டக்கல்லில் உள்ள Aster MIMS மருத்துவமனையைச் சேர்ந்த ரஞ்சித் நாராயணன், சஜீஷ் சிவதாஸ் மற்றும் அனிலா ஆபிரகாம் குரியன் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர்.

 
சிறுநீரக பாதிப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சருமத்தின் நிறத்தை வெளுப்பாக்குவதற்காக பயன்படுத்தப்பட்ட சில க்ரீம்களில் இருந்த நச்சு உலோகமான பாதரசம், சிறுநீரகத்தில் Membranous Nephropathy என்ற பாதிப்பை ஏற்படுத்தியிருப்பது இந்த ஆய்வில் கண்டறியப்பட்டிருக்கிறது.

அமெரிக்காவை தளமாகக் கொண்ட கிளீவ்லேண்ட் கிளினிக்கின் கூற்றுப்படி, சிறுநீரகங்களில் உள்ள வடிகட்டிகள், உங்கள் ரத்தத்தில் இருந்து கழிவுப்பொருட்களை சுத்தப்படுத்துகின்றன. Membranous Nephropathy, உங்கள் நோயெதிர்ப்பு அமைப்பு இந்த சிறிய வடிகட்டிகளைத் தாக்குகிறது. இது சிறுநீரக பாதிப்புக்கு வழிவகுக்கும்.

சருமத்தின் நிறத்தை வெளுப்பாக்குவதற்காக பயன்படுத்தப்பட்ட சில க்ரீம்களில் இருந்த நச்சு உலோகமான பாதரசம், சிறுநீரகத்தில் Membranous Nephropathy என்ற பாதிப்பை ஏற்படுத்தியிருப்பது இந்த ஆய்வில் கண்டறியப்பட்டிருக்கிறது. இந்த பாதிப்பு ஏற்படும்போது உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு, glomeruli எனப்படும் சிறுநீகரங்களில் உள்ள வடிகட்டிகளைச் சேதப்படுத்துகிறது.

இதனால் அந்த வடிகட்டிகள் வீங்கத் துவங்கும். இதற்குப் பிறகு உடலின் ரத்தத்தை, இந்த வடிகட்டிகள் எந்த அளவுக்கு சுத்தம் செய்ய வேண்டுமோ அந்த அளவுக்கு சுத்தம் செய்யாது. இதனால், சிறுநீரில் புரதம் கசிய ஆரம்பிக்கும். இந்தப் பிரச்சனை தொடரும் பட்சத்தில், சிறுநீரகங்கள் முழுமையாக செயலிழக்கும் நிலையும் ஏற்படும்.

Membranous nephropathy என்பது பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. அதில், Neural Epidermal Growth factor - like Protein (NELL - 1) என்பது ஒரு காரணி.

நாட்டு மருந்துகளை(Traditional Medicine) உட்கொள்வது, ஹெபடிடிஸ் - பி, சி பாதிப்பு ஆகியவற்றின் காரணமாக இந்த NELL - 1 ஏற்பட்டு சிறுநீரகங்களை பாதிக்கிறது. Membranous nephropathy பாதிப்பு ஏற்பட்டவர்களில் 1 முதல் 8 சதவீதம் பேருக்கு இந்த NELL - 1 காரணமாக பாதிப்பு ஏற்படுகிறது.

 
சிறுநீரக பாதிப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஆங்கில நாளிதழ்  ஒன்றில் தோலை வெளுப்பாக்கும் க்ரீமை பயன்படுத்தியதால், 20 வயது மாணவி ஒருவரும் அவரது குடும்பத்தில் சிலரும் இதே போன்ற பிரச்னையால் பாதிக்கப்பட்ட செய்தி வெளியானது.

இந்த ஆய்வு கோட்டக்கல்லில் இருந்த ஒரு தனியார் மருத்துவமனைக்கு ஜூலை 2021லிருந்து செப்டம்பர் 2023வரை Membranous nephropathy பிரச்சனையுடன் வரும் நோயாளிகளை வைத்து மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வை மேற்கொள்ள ஒரு காரணம் இருந்தது. இந்த மருத்துவமனைக்கு Membranous nephropathy பாதிப்புடன் வந்தவர்களுக்கு சோதனை செய்தபோது, பெரும் எண்ணிக்கையிலானவர்களுக்கு NELL - 1ன் காரணமாக பாதிப்பு ஏற்பட்டிருந்தது தெரியவந்ததாகச் சொல்லப்படுகிறது.

"அந்த மருத்துவமனையில் இருந்து ஒரு 14 வயதுப் பெண் Membranous nephropathy பாதிப்புடன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருடைய ரத்தம், சிறுநீரைச் சோதித்ததில் பாதரசம் இருப்பது தெரிய வந்தது. பாதரசம் இடம்பெற்றிருக்கக்கூடிய மருந்துகள் எதையாவது அவர் சாப்பிட்டிருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில் அது குறித்து விசாரித்தோம். ஆனால், அவர் அப்படி எந்த மருந்தையும் சாப்பிட்டதாகத் தெரியவில்லை. இந்த சிறுநீரகப் பிரச்னை வரக்கூடிய வேறு எந்தக் காரணிகளும் அவரிடம் இல்லை. இந்தப் பிரச்னைக்கான காரணம் தெரியாமல் சிகிச்சையைப் பெரிய அளவில் துவங்க வேண்டாம் எனக் கருதினோம்," என்கிறார் பிபிசியிடம் பேசிய இந்த ஆய்வில் ஈடுபட்ட மருத்துவர்களில் ஒருவரான டாக்டர் அனிலா ஆபிரகாம் குரியன்.

இந்தத் தருணத்தில்தான், மும்பையில் இருந்து வெளிவந்த ஆங்கில நாளிதழ் ஒன்றில் தோலை வெளுப்பாக்கும் க்ரீமை பயன்படுத்தியதால், 20 வயது மாணவி ஒருவரும் அவரது குடும்பத்தில் சிலரும் இதே போன்ற பிரச்னையால் பாதிக்கப்பட்ட செய்தி வெளியானது. இதையடுத்து அந்த நோயாளியிடம், தோலை வெளுப்பாக்கும் க்ரீமைப் பயன்படுத்தியது குறித்துக் கேட்கப்பட்டது. அவர் அதை ஒப்புக்கொண்டார்.

 
சிறுநீரக பாதிப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இந்த ஆய்வில் இடம்பெற்ற முகப்பூச்சு க்ரீம்கள் அனைத்துமே உள்ளூர் பிராண்டுகளாக இருந்தன என்பதோடு, அந்த க்ரீம்களில் என்னென்ன வேதிப் பொருட்கள் இடம்பெற்றிருக்கின்றன என்ற தகவல்களும் இல்லை.

இதற்குப் பிறகு கோட்டக்கல் மருத்துவமனையில் இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்ட பிற நோயாளிகளிடம் தோலை வெளுப்பாக்கும் க்ரீமைப் பயன்படுத்தினீர்களா எனக் கேட்கப்பட்டது. இந்த NELL 1 - MN நோயாளிகளில் 15 பேரில் 13 பேர் ஆண் - பெண் பேதமின்றி தோலை வெளுப்பாக்கும் க்ரீம்களை பயன்படுத்தியதை ஒப்புக்கொண்டனர். மீதமிருந்த இரண்டு பேரில் ஒருவருக்கு நாட்டு மருந்து (Traditional Medicine) சாப்பிடும் பழக்கம் இருந்தது.

இதற்குப் பிறகு இவர்களிடம் ரத்தத்தில் உலோகம் இருக்கிறதா என்ற சோதனை நடத்தப்பட்டது. 9 பேரின் ரத்தத்திலும் சிறுநீரிலும் பாதரசத்தின் அளவு மிக அதிகமாக இருந்தது. அந்த நோயாளிகள் எவ்வளவு நாள், எந்த க்ரீமை பயன்படுத்தியிருந்தார்கள் என்பதை வைத்து பாதரசத்தின் அளவு வேறுபட்டிருந்தது.

இதற்குப் பிறகு இவர்கள் பயன்படுத்திய தோலை வெளுப்பாக்கும் க்ரீம்கள் சென்னையில் உள்ள ஓர் ஆய்வகத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இவை அனைத்திலுமே பாதரசம் அனுமதிக்கப்பட்ட அளவைவிட மிகவும் அதிகமாக இருந்தது. 1 பிபிஎம் (Parts per million) மட்டுமே இருக்கலாம் என்ற நிலையில், 10,800 பிபிஎம் முதல் 21,900 பிபிஎம்வரை அந்த க்ரீம்களில் பாதரசம் இருந்தது.

இந்த முகப்பூச்சு க்ரீம்கள் அனைத்துமே உள்ளூர் பிராண்டுகளாக இருந்தன என்பதோடு, அந்த க்ரீம்களில் என்னென்ன வேதிப் பொருட்கள் இடம்பெற்றிருக்கின்றன என்ற தகவல்களும் இல்லை.

இதற்குப் பிறகு, இந்த நோயாளிகளுக்கான சிகிச்சைகள் துவங்கப்பட்டன. சிறுநீரக நோயாளிகளுக்கு அளிக்கப்படும் முக்கிய சிகிச்சையான RAAS (renin-angiotensin-aldosterone system) சிகிச்சை துவங்கப்பட்டது. தோலை வெளுப்பாக்கும் க்ரீமை பயன்படுத்துவதை நிறுத்தவும் அறிவுறுத்தப்பட்டது. இவர்கள் இந்த க்ரீம்களை பயன்படுத்துவதை நிறுத்திய பிறகு, 6 மாதங்களில் இருந்து 12 மாதங்களில் இவர்களின் சிறுநீரகத்தின் நிலை முழுமையாக மேம்பட்டது.

 
சிறுநீரக பாதிப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,உலகம் முழுவதுமே சருமத்தை வெளுப்பாக்கும் க்ரீம்கள் மீது ஆர்வம் இருப்பதால் இது இந்தியாவில் மட்டுமல்ல, உலகளாவிய அளவில் சுகாதாரப் பிரச்னையாக உருவெடுக்கலாம் என எச்சரிக்கிறது இந்த ஆய்வு.

எதற்காக தோலை வெளுப்பாக்கும் க்ரீம்களில் பாதரசம் பயன்படுத்தப்படுகிறது?

"பாதரசத்திற்கு தோலிற்கு நிறத்தை அளிக்கும் நிறமியான மெலனினை நீக்கும் தன்மை உண்டு. அதனால், பாதரசத்தை பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்த க்ரீம்களைத் தொடர்ந்து பயன்படுத்தியிருந்தால், சிறுநீரகம் முழுமையாக சேதமடையக்கூடிய நிலை ஏற்பட்டிருக்கும்" என்கிறார் டாக்டர் அனிலா.

உலகம் முழுவதுமே சருமத்தை வெளுப்பாக்கும் க்ரீம்கள் மீது ஆர்வம் இருப்பதால் இது இந்தியாவில் மட்டுமல்ல, உலகளாவிய அளவில் சுகாதாரப் பிரச்னையாக உருவெடுக்கலாம் என எச்சரிக்கிறது இந்த ஆய்வு. தவிர, “இதுபோன்ற சிறுநீரக பிரச்னையுடன் வருபவர்கள் சருமத்தை வெளுப்பாக்கும் க்ரீமை பயன்படுத்தியிருக்கிறார்களா என்பது குறித்தும் கேட்டறிய வேண்டும் என்பதை இப்போதுதான் மருத்துவர்கள் உணர ஆரம்பித்திருப்பதால், பாதரசத்தைக் கொண்ட சருமத்தை வெளுப்பாக்கும் க்ரீம்களால் ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்து பெரிய அளவில் செய்திகள் வெளியாவதில்லை” என்பதையும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

"சருமத்தை வெளுப்பாக்கும் க்ரீம்கள் அவசியமா என்பதை யோசிக்க வேண்டும். தவிர, கண்காணிப்பு அமைப்புகளும் இதுபோன்ற க்ரீம்களின் உள்ளடக்கம் குறித்து ஆய்வுசெய்து கட்டுப்பாடுகளை வலுப்படுத்த வேண்டும்" என்கிறார் சென்னை மருத்துவக் கல்லூரியின் சிறுநீரகவியல் துறையின் இயக்குநர் டாக்டர் என். கோபாலகிருஷ்ணன்.

இதில் இன்னொரு கேள்வியும் இருக்கிறது. இதுபோன்ற க்ரீம்களை பலரும் பயன்படுத்துகிறார்கள். இருந்தபோதும் எல்லோருக்கும் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படுவதில்லை ஏன்?

"ஆயிரக்கணக்கானவர்கள் பயன்படுத்தினாலும், நோய் ஏற்படுவதில் மரபணு, சூழல் போன்றவையும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பலருக்கு ஏற்படுவதில்லை என்பதால், இதனால் பாதிப்பு இல்லை என விட்டுவிட முடியாது. புகைப் பிடிக்கும் எல்லோருக்கும் புற்றுநோய் வருவதில்லை. ஆனால், புகைப் பிடிப்பவர்களுக்கு புற்றுநோய் வரும் அபாயம் அதிகம். அப்படித்தான் இதையும் பார்க்க வேண்டும்" என்கிறார் டாக்டர் என். கோபாலகிருஷ்ணன்.

 
சிறுநீரக பாதிப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,தோலை வெண்மையாக்கும் அல்லது வெளுப்பாக்கும் கிரீம் உள்ளிட்ட அழகுசாதனப் பொருட்களில் பாதரசத்தைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்திய உலகெங்கிலும் உள்ள சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.

NELL - 1 எப்படி சிறுநீரகத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது?

NELL - 1 என்பது ஒரு antigen. அதாவது நோயெதிர்ப்புத் தன்மையைத் தூண்டக்கூடிய ஒரு மூலக்கூறு. இந்த மூலக்கூறு, anti-bodyஐ ஏற்படுத்தும். அவை, சிறுநீரகத்தின் வடிகட்டிகளில் சேர ஆரம்பிக்கும்போது, அந்த வடிகட்டிகள் பாதிப்படைய ஆரம்பிக்கும். பொதுவாக புற்றுநோய் இருப்பவர்களுக்கு இந்த antigen ஏற்படும். ஆனால், புற்றுநோய் இல்லாமல் இந்த antigen உருவாகி சிறுநீரகத்தைப் பாதிக்கிறதென்றால், அது ஏன் ஏற்படுகிறது என்பதை ஆராய வேண்டும். அப்போதுதான் அதைக் குணப்படுத்த முடியும் என்கிறார் கோபாலகிருஷ்ணன்.

இந்தியாவில், தோலை வெளுப்பாக்கும் க்ரீம்களின் தயாரிப்பு மதிப்பு சுமார் 0.45–0.53 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

தோல் வெண்மையாக்கும் அல்லது வெளுப்பாக்கும் கிரீம் உள்ளிட்ட அழகுசாதனப் பொருட்களில் பாதரசத்தைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்திய உலகெங்கிலும் உள்ள சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம், 1940 மற்றும் 1945ஆம் ஆண்டின் மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் விதிகளின் அடிப்படையில், இது தடை செய்யப்பட்டுள்ளது.

2017இல் இதில் ஒரு திருத்தம் கொண்டு வரப்பட்டு, அழகு சாதன பொருட்களின் பயன்படுத்தப்படும் பாதரச வரம்பு 1 ppm ஆக மாற்றப்பட்டது.

மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம், 1940 இன் கீழ் உள்ள ஒப்பனை விதிகள், 2020 இன் படி, பரிந்துரைக்கப்பட்ட பாதரச வரம்பு 1 பிபிஎம் ஆக இருக்க வேண்டும் என்றும், இது இறக்குமதி செய்யப்படும் அழகுசாதன பொருட்களுக்கும் பொருந்தும்.

https://www.bbc.com/tamil/articles/c4n1n9z9ypmo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.