Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்+

இணையத்தில் மேய்ந்து ஊரிலுள்ள உறவுகளின் இருப்பை உறுதிப்படுத்துகிறேன். காணும் தளமெங்கும் காயங்கள் சாவுகள் என இணைவலையெங்கும் துயர்முட்டி வழிகிறது…. காக்கவும் ஆழின்றி கையொடுக்கவும் நாதியின்றித் தினம் வன்னிப்பெரு நிலப்பரப்பெங்கும் நிறைந்த சாவும் கண்ணீருமாக யாருக்கும் யாருடனும் பேசவோ உறவாடவோ முடியாத பொழுதுகளால் பின்னப்பட்டிருந்தது நாட்கள். பயங்கரமான கனவுகளும் பாதைதெரியாத நினைவுகளுமாக அந்த நாட்கள் ஒவ்வொரு தமிழனின் ஆன்மாவும் அவலப்பட்டபடி அழுதபடி…..அப்படியான ஒருநாள் மதியம்…..

வணக்கம்….
தொலைபேசியழைப்பில் வந்த குரலொன்று.
யாரெண்டு தெரியுதா?
இல்லை…
என்ற எனக்குத் தன்னை ஞாபகப்படுத்திய குரல். 3 வருடங்கள் மேலாக தொடர்பற்றிருந்த தோழனின் குரல் அது. குழந்தைகள், குடும்பம் என விசாரிப்புகள் நீண்டு இறுதியில் வன்னிக் களமுனையில் போய் விழுந்தது கதை.

செய்தியேதும் அறிஞ்சியளோ ?
என்ன வளமையான செய்திதானே… சாவும் துயரும் இதைவிட என்னத்தை இப்பெல்லாம் அறியிறம்…..?
என்ற எனக்கு…
நேற்று “அருணாண்ணை” வீரச்சாவு என்றான் அந்தத் தோழன்.
உண்மையாவா ?
நம்பிக்கையிழந்து மீளவும் கேட்ட எனக்கு அவன் மீளவும் சொன்னான். ஓம்….

‘அருணாண்ணை’ இழந்தோமா உங்களை ….? அந்தத் தோழன் விடைபெறும் வரையிலும் ஒளிந்திருந்த அழுகையை வெளிப்படுத்தாமல் கண்களும் குரலும் என்னைக் காத்துக் கொள்கின்றன.

அருணாண்ணை அருணாண்ணையின் குடும்பம் , அடுத்து அந்தக் களமுனையில் வாழும் தோழ தோழியர்கள் அவர்கள் குடும்பங்கள் என விசாரிக்கிறேன். மேலும் பலர் வீரச்சாவுகள் , விமானத்தாக்குதலில் இழப்புகள் என அவன் சொல்லிக் கொண்டிருந்தான்.

aruna-anna1-600x450-1.png

அடுத்ததென்ன நடக்கப்போகுது ?
கேட்ட எனக்குச் சொன்னான்.
யாரையும் எதையும் சொல்ல முடியாத நிலமையிருக்கு…..எல்லாம் முடியப்போகிறது…..நம்ப முடியாதவைகள் எல்லாம் நடக்கப்போகிறது…..
எல்லாம் முன்னறிந்த கடவுள் போல அவன் சொன்னான்.

ஏன் அப்பிடி ? அவன் அடுக்கிக் கொண்டு போன காரணங்களில் நியாயம் உண்மையென்று பல்லாயிரம் விடயங்களை ஏற்றுக் கொள்ளும்படியாக அவனது கதையிருந்தது.

அழிபடாமல் வரலாறுகளைச் சேகரிக்க வேணும்….அதற்கான வேலைகளைச் செய்ய வேணும்…..அதற்கான வழிகள் பலவற்றையும் சொன்னான். மீண்டும் தொடர்புகளோடு இருப்போமென விடைபெற்றுக் கொண்டான்.

இமை விட்டிறங்காமல் முட்டிய கண்ணீரைக் கட்டுப்படுத்திக் கொள்கிறேன். அருணாண்ணை நினைவுகளை விட்டிறங்காமல் எங்களுக்குள் நிரந்தரமாகிப் போனாரா? நம்பவே முடியவில்லை.

கதைப்பதை விட அதிகம் கடிதங்களில் தான் அருணாண்ணை பேசுவது நிறைய….2006 வரை அவ்வப்போது கடிதங்களோடு களம் நிலம் காவியம் மாவீரம் என அருணாண்ணை எழுதிய கடிதங்கள் ஒவ்வொன்றும் கனமான பொழுதுகளில் மீளவுமான உயிர்ப்பையும் எழுச்சியையும் தரும் வல்லமை மிக்கவை. „மீழும் நினைவுகள்“ என அரசபயங்கரவாதம் செய்த இன அழிவுகளையெல்லாம் தன் எழுத்துக்களுக்குள் சேமித்து அவர் அனுப்பிய தொலைமடல்கள் கையெழுத்துப் பிரதிகள் ஏராளம். ஐரோப்பிய வானொலிகள் பலவற்றில் அருணாண்ணையின் எழுத்துக்கள் ஒலிவடிவாக உயிர்த்து அவலங்களையெல்லாம் ஆவணமாக்கியது.

தமிழ்வெப்றேடியோ என்ற இணைய வானொலியின் பெரும்பான்மையான நிகழ்ச்சிகளில் அருணாண்ணையின் ஆக்கம் இருக்காது போகாது. தமிழினம் மீதான சிங்களப்பயங்கரவாதப் புடுகொலைகள் 1956 முதல் 2001 கட்டுநாயக்கா விமான நிலையத் தாக்குதல் வரை எழுதிய ‘மீழும் நினைவுகள்‘ இன்றுவரையும் மீட்கப்படக் காரணமாய் தனது எழுத்துக்களால் பதிந்த ஒரு போராளி.

போர்க்குணம் மிக்க அந்த மனிதனுக்குள் அரசியல்ஞானம் உலகியல் விஞ்ஞானம் என எதைக்கேட்டாலும் இலகுவாய் புரிவிக்கும் திறன்மிக்க ஆழுமையென அருணாண்ணையின் அமைதியான தோற்றத்திற்கும் பின்னாலும் பேச்சுக்குப் பின்னாலும் ஆல்போல் விழுதேற்றிப் பரவியிருக்கிறது.

சட்டென்று மூக்குநுனியில் நிற்கும் அவரது கோபம்….சொன்ன வேலையை சொன்ன நேரத்துக்குள் செய்து கொடுக்கப்படாவிட்டால் தனது அமைதியால் அதையுணர்த்தி அடுத்த வேலையை அவர் கேட்கும் அவகாசத்துக்கு முன்னால் செய்வித்துவிடுகின்ற சாதுரியம் எல்லாம் அருணாண்ணையின் ஆழுமை தான்.

2001 அக்கினி கீல நடவடிக்கையில் இலங்கையரச படைகள் ஆயிரமாயிரமாய் செத்துடிந்து வல்லமை பொருந்தியதாய் நம்பப்பட்ட அரச இராணுவபலம் புலிகளின் காலடியில் விழுந்தபடியிருக்க ஒரு கடிதம் எழுதியிருந்தார்….. அந்தக் களமுனையின் நுனியிலிருந்து களமாடிக் காவியமான தனது தோழர்கள் பற்றியும் உலகு அந்தக்கள முனையை எப்படிப் பார்க்கப்போகிறது என்பதையெல்லாம் தனது எழுத்துக்குள் நிரப்பியனுப்பிய நீலக்கடித உறைக்குள் நான் கண்டது ஒரு சாமானியக் குணத்தையல்ல…..ஒரு போராளியின் இதயத்தை…..அக்கடிதத்திலிருந்து சில வரிகள் இவை……

brief-von-Aruna-anna-600x413-1.jpg

உலகே வன்னிக்கு உலாப்போய்வரக் கிடைத்த சமாதான காலம் ஊர் போன போது அருணாண்ணையைச் சந்தித்தது கதைத்தது சேர்ந்து உணவருந்தியது மாவீரர் துயிலிடங்கள் சென்றது என நினைவுகள் யாவும் அருணாண்ணையுடனான அந்து நாட்களைத்தான் மீளமீளக் கொண்டு வந்தது.

தனது தோழர்கள் தனது தொடர்பில் உள்ளவர்களென அருணாண்ணையை நேசிக்கும் அனேகருக்கு எங்களை அறிமுகம் செய்து அவர்களுடனான உறவுகளை ஏற்படுத்தித் தந்து விட்டதெல்லாம் ஒருநாள் இப்படி இழந்து போவதற்கா…..?

மறுமுறை சந்திப்பதாய் பயணம் சொல்லிய அந்தக் கடைசிச் சந்திப்பு……வன்னிப் பெருநிலப்பகுதியிலிருந்து வவுனியா வர வெளிக்கிட்ட நேரம்….பிள்ளைகள் ஒவ்வொருவராய் மாமா அக்கா அன்ரி அண்ணாவென விடைபெற்று கடைசியில் அருணாண்ணையிடம் விடைபெறப் போனார்கள்.

பிள்ளையள் நல்லாப்படிச்சு கெட்டிக்காறரா எங்கடை நாட்டுக்குத் திரும்பி வரவேணுமென்ன…..
எனச்சொல்லி என் மகன் பார்த்திபனை கட்டிப்பிடித்துக் கொஞ்சினார். எனது மகள் வவுனீத்தா மட்டும் ஏதோ கோபித்துக் கொண்டு நின்றாள்.
மாமாக்குச் சொல்லீட்டு வாங்கோம்மா….
என்ற எனக்குப் பின்னால் வந்து நின்றாள்.
என்னம்மா என்ன சொல்லீட்டு வாங்கோவன்…..
இல்லையென்பதைத் தலையசைப்பால் உணர்த்தினாள்.
ஏன் ? என்னம்மா ?

மாமா மருதன்மாமாவைப் பேசினவர். அதான் நான் அவரோடை கோவம். ஆக்களைப் பேசக்குடாது…அவருக்ககொண்டும் தெரியாது……என்றாள். காலையில் ஏதோ அருணாண்ணை சொன்னவிடயமொன்றை மருதன் மறந்து போனதற்காக விழுந்த பேச்சு அது.
அது மாமா சும்மா பேசினவரென்னை….என மருதன் சொன்ன சமாதானத்தையும் அடம்பிடித்தாள்.
பிள்ளையைக் கொண்டு போய் யாழ்ப்பாணத்தில விட வேணும் கனபேருக்குப் பாடம் நடத்தப்பிள்ளைதான் சரி….என்றான் இன்னொரு போராளி…..
இறுதியில் எல்லாரும் சேர்ந்து அவளைச் சமாதானம் செய்து வாகனத்தில் ஏற்றிவிட்டு கையசைத்து விடைதந்து அனுப்பி வைத்தனர்.

மாலையில் அருணாண்ணையின் இருப்பிடம் வந்து சேரும் போது பிள்ளைகளை ஒருதரம் மோட்டார் சயிக்கிளில் ஏற்றிச் சுற்றி அவர்கள் மீதான தனது அன்பை வெளிப்படுத்தும் ஒரு மாமாவாய் அருணாண்ணை எத்தனையோ அவதாரங்களாய்……பணம்மட்டுமே குறியாய் கடிதங்களால் குதறியும் காசைமட்டுமே கறந்த உறவுகளின் சபித்தலால் சோர்ந்து போய்விடும் வேளைகளில் அருணாண்ணைக்கு அதையெல்லாம் கடிதங்களாய் எழுதுவேன். எனது கடிதங்களுகெல்லாம் தனது பதில்களால் துணிவையும் மீண்டும் எழுகைக்கான எழுத்துக்களாக எழுதிய கடிதங்கள் யாவும் ஒரு நல்ல தோழமையின் அண்ணணின் ஆதரவைத் தரும் வல்லமை மிக்கவை…..எதை மறந்து எதை நினைத்து……இனி எங்கள் அருணாண்ணையை எங்கே தேட……

ஆட்கள் வந்து சந்தித்துச் செல்லவென அமைக்கப்பட்ட ஒற்றையறை மர நிழலில் பேசியவை……பகிர்ந்தவை…….அவர் அனுப்பிய வைத்த ஈழநாதம் வெள்ளிமலர்…..முதல் முதலாகப் பதிப்பித்த “சாள்ஸ் அன்ரனி“ படையணியின் சிறப்ப நூல் என்னையும் வந்தடைய வழிசெய்த அருணாண்ணையிடமிருந்து விடைபெற்று அவரை அவரது தோழர்களை நினைக்க நேசிக்கவென நிறையவே அறிமுகங்கள் தந்த அந்தத் தோழனின் ஆழுமையைச் சொல்ல பல்லாயிரம் பக்கங்கள் நீட்ட வேண்டும்.

Lep.Kenal-Arunan-600x337-1.jpg

தொடர்ந்த தொலைபேசி உரையாடல்….கடிதங்கள்…..என தொடர்ந்தது உறவு. என் குழந்தைகளின் நினைவுகளுக்குள் நிற்கும் பலருக்குள் அருணாண்ணைக்குத் தனியிடம் உண்டு. எங்கே நின்றாலும் மறக்காமல் பிள்ளைகளின் பிறந்தநாளுக்கு வாழ்த்துமடல் அனுப்ப மறப்பதில்லை. யார் அனுப்புகிறார்களோ இல்லையோ அருணாண்ணையின் வாழ்த்துமடல் வந்தால் போதும் என்ற நிலைக்கு என் குழந்தைககளின் மனசுக்குள் குடியிருந்த இராஜகுமாரன் அருணாண்ணை.

பிள்ளைகளுக்குத் தனித்தனியே கடிதம் எழுதி அவர்களின் கடிதம் மாமாவாகி…….எங்களுக்கும் கடிதம்மாமாவென்றே நினைவுகொள்ள வைத்த அருணன் என்ற ஆழுமை……27.02.09 அன்று நிரந்தரமாய் பிரிந்துவிட்டதாய் வந்த செய்தி…..செய்தி கேட்டதும் என் மகன் பார்த்திபன் உடைந்து கலங்கியதும்…மகள் வவுனீத்தா மெளனமாகி அருணாண்ணை எழுதிய கடிதங்களை ஒவ்வொன்றாய் எழுத்துக்கூட்டி வாசித்ததும்…..மாவீரர் துயிலிடத்தில் மாமாவை சந்திப்போமென்று சமாதானம் கூறியதும்……பொய்த்து எல்லாம் எங்கள் கைகளைவிட்டுத் தொலைவாகிக்கிடக்கிறது……

காலம் அருணாண்ணையையும் குடும்பமாக்கி ஒரு குழந்தைச் செல்வத்துக்குத் தந்தையுமாக்கியது……அந்தச் செல்வத்தைச் சிரித்தபடி தூக்கி வைத்திருந்த படம் மட்டும்தான் இன்று அருணாண்ணையின் ஆழுமையைச் சொல்லியபடி நினைவுகள் நீண்டு விரிந்து நிழல்பரப்பிக் கிடக்கின்றன……

 

நினைவுப்பகிர்வு :- சாந்தி ரமேஷ் வவுனியன் (03.07.2009).

 

Edited by நன்னிச் சோழன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.