Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
20 MAY, 2024 | 02:46 PM
image

(டி.பி.எஸ். ஜெயராஜ்) 

லங்கையில் உத்தியோகபூர்வ சனத்தொகை  கணக்கெடுப்பு 2012ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது. அந்த கணக்கெடுப்பின் பிரகாரம், இலங்கையின் பெரும்பான்மை இனத்தவர்களான சிங்களவர்கள் சனத்தொகையில் 74.9 சதவீதத்தினராக இருந்தனர். எண்ணிக்கையில் இரண்டாவது பெரிய இனத்தவர்களான இலங்கைத் தமிழர்கள் 11.1 சதவீதத்தினராக இருந்தனர். மூன்றாவது பெரிய இனத்தவர்களான இலங்கை முஸ்லிம்கள் 9.3 சதவீதத்தினராகவும் நான்காவது பெரிய இனத்தவர்களான 'மலையகத் தமிழர்கள்' என்று அறியப்படும் இந்திய வம்சாவளித் தமிழர்கள் 4.1 சதவீதத்தினராகவும் இருந்தனர்.

எண்ணிக்கையில் சிறுபான்மை இனத்தவர்களான இலங்கைத் தமிழர்களும் முஸ்லிம்களும் இந்திய தமிழர்களும் சனத்தொகையில் 25.5 சதவீதத்தினராக விளங்கினர். இந்த மூன்று இனத்தவர்களும் இலங்கையின் சில மாவட்டங்களில் பெரும்பான்மையானவர்களாக விளங்குகிறார்கள். ஏனைய மாவட்டங்களில் இவர்கள் சனத்தொகையில் கணிசமான பிரிவினராக இருக்கிறார்கள். ஜனாதிபதி தேர்தலில் சகல மாவட்டங்களிலும் உள்ள மக்களும் ஒன்றாக வாக்களிப்பதால் முழு இலங்கையுமே 'ஒரு தனித் தொகுதியாக' மாற்றப்படுகிறது. அதில் பெரும்பான்மை இனத்தவர்களான சிங்களவர்கள் 74.9 சதவீதத்தினராகவும் சிங்களவர்கள் அல்லாத ஏனைய இனத்தவர்கள் 25.5 சதவீதத்தினராகவும் அமைகின்றனர். அதனால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை அறிமுகப்படுத்தப்பட்ட நாட்களில் இருந்து மூன்று சிறுபான்மை இனத்தவர்களும் ஜனாதிபதி தேர்தல்களில் குறிப்பிடத்தக்க பாத்திரத்தை வகித்திருக்கிறார்கள். முன்னைய ஜனாதிபதி தேர்தல்களில் தமிழர்களும் முஸ்லிம்களும் வகித்த பாத்திரத்தை பற்றி விரிவாக எனது முன்னைய கட்டுரையில் எழுதியிருந்தேன்.

நான் அண்மைய வாரங்களாக தொடர்ச்சியாக எழுதிவந்த கட்டுரைகளில் 2024 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தந்திரோபாயங்கள், திட்டங்கள் தொடர்பில் கவனம் செலுத்தினேன். அதனால் இன்றைய கட்டுரையில் தமிழ், முஸ்லிம் வாக்காளர்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணிலுக்கு  இருக்கக்கூடிய சாதக பாதகங்களை ஆராய்கிறேன்.

ஏற்கெனவே குறிப்பிட்டவாறு ரணில் இலங்கை தமிழ் வாக்காளர்கள் மத்தியிலும் முஸ்லிம் வாக்காளர்கள் மத்தியிலும் பொதுவில் செல்வாக்குடையவராக இருந்து வந்திருக்கிறார். அவர் நேரடியாகப் போட்டியிட்ட 1999 ஜனாதிபதி தேர்தலிலும் 2005 ஜனாதிபதி தேர்தலிலும் தமிழ், முஸ்லிம் வாக்காளர்கள் அவருக்கு பெருமளவில் வாக்களித்தார்கள். 2010, 2015, 2019 ஜனாதிபதி தேர்தல்களில் அவர்  ஆதரித்த வேட்பாளர்களான சரத் பொன்சேகா, மைத்திரிபால சிறிசேன, சஜித் பிரேமதாச ஆகியோரை மூன்று சிறுபான்மை இனச்சமூகங்களும் உறுதியாக ஆதரித்தன.

பெரிய அதிர்ச்சி

2020 பாராளுமன்ற தேர்தலில் பொதுவில் ஐக்கிய தேசிய கட்சிக்கும் குறிப்பாக ரணிலுக்கும்  பெரிய அதிர்ச்சி கிடைத்தது. நாடு பூராவும் அந்த கட்சிக்கு 249, 435 வாக்குகள் (2.15 சதவீதம்) மாத்திரமே கிடைத்தன. 

நாட்டின் மிகவும் பழமை வாய்ந்த கட்சியின் சார்பில் வரலாற்றில் முதல் தடவையாக ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கூட தெரிவு செய்யப்படவில்லை. ஐக்கிய தேசிய கட்சியின் கோட்டையாக பல தசாப்தங்களாக கருதப்பட்ட  கொழும்பு மாவட்டத்தில் அதற்கு 30,875 வாக்குகள் (2.61 சதவீதம்) மாத்திரமே கிடைத்தது. 

அந்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பிரிந்து சென்று சஜித் பிரேமதாசவின் தலைமையில் சமகி ஜன பலவேகயவை அமைத்ததே அந்த தேர்தல் அனர்த்தம் நேர்ந்ததற்கான பிரதான காரணமாகும். ராஜபக்சாக்கள் தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 2020 பாராளுமன்ற தேர்தலில் பெரு வெற்றியைப் பெற்ற அதேவேளை சமகி ஜன பலவேகய இரண்டாவதாக வந்தது. பிரேமதாச எதிர்க்கட்சி தலைவரானார்.

தமிழர்கள், முஸ்லிம்கள் மத்தியில் ரணிலுக்கு பல தசாப்தங்களாக பெருமளவு அரசியல் ஆதரவு இருந்துவந்த போதிலும் 2020 தேர்தல் நிலைவரத்தை மறுதலையாக்கிவிட்டது. சஜித் பிரேமதாச தலைமையில் பிரிந்து சென்ற அணியினர் தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் பெருமளவு வாக்குகளைப் பெற்றனர். உண்மையில், சமகி ஜன பலவேகயவில் இருந்து தெரிவான பாராளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர் தமிழர்களும் முஸ்லிம்களுமாவர்.

சமகி ஜன பலவேகயவிடம் ஐக்கிய தேசிய கட்சி இழந்த தமிழ், முஸ்லிம் வாக்குகளை ரணிலினால் மீண்டும் பெறமுடியுமா என்பதே இந்த தருணத்தில் எழுகின்ற கேள்வி. 2024 ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்கு உதவ தமிழ் கட்சிகளினதும் முஸ்லிம் கட்சிகளினதும் அவற்றின் வாக்காளர்களினதும் ஆதரவை மீண்டும் ரணிலினால் பெறமுடியுமா? இது தொடர்பில் மூன்று பிரதான இனக்  குழுமங்களில் ஒவ்வொன்றினதும் நிலைவரத்தை சுருக்கமாக ஆராய்வோம்.

சுயாதீனமான வேட்பாளர்

ஜனாதிபதி தேர்தலில் கட்சி சார்பிலலாத சுயாதீனமான ஒரு வேட்பாளராக ரணில்  போட்டியிடுவார் என்பது தெளிவானது. அரசியல் கட்சிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுக்கள், தனிப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைப்புக்களைக் கொண்ட ஒரு கூட்டணி அவரை ஆதரிக்கும். ஆனால், ரணில் இந்த கூட்டணியின் வேட்பாளராக இருக்கப்போவதில்லை. பதிலாக, எந்த கட்சியையும் சாராத வேட்பாளராக   களமிறங்கப்போகும் அவரை இந்த கூட்டணி ஆதரிக்கும். அதனால் மூன்று சிறுபான்மைச் சமூகங்களினதும் ஆதரவை எந்தளவுக்கு ரணிலினால் பெறமுடியும் என்பதை அவரை ஆதரிக்கும் தமிழ், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களினதும் கட்சிகளினதும் எண்ணிக்கையை வைத்து மாத்திரமே கணிப்பிடக்கூடியதாக இருக்கும்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்

முதலில் நாம் இந்திய வம்சாவளியினரான மலையகத் தமிழர்களை பார்ப்போம். இலங்கை தொழிலாளர் காங்கிரஸே மலையகத் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெரிய தொழிற்சங்கமும் பிரதான அரசியல் கட்சியுமாகும். ஜனாதிபதி ரணிலின்  அரசாங்கத்தில் அந்த கட்சி இப்போது அங்கம் வகிக்கிறது. அதற்கு நுவரெலியா மாவட்டத்தில் இருந்து தெரிவான இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அதன் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் அமைச்சரவை உறுப்பினராக இருக்கின்ற அதேவேளை தலைவர் செந்தில் தொண்டமான் கிழக்கு மாகாண ஆளுநராக பதவி வகிக்கிறார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தேர்தலில் ரணிலை உறுதியாக ஆதரிக்கும்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸுடனான ரணிலின் பிணைப்பு இந்த வருட மே தினத்தன்று மேலும் பலப்படுத்தப்பட்டது. காங்கிரஸின் மே தினப் பேரணி கொட்டகலையில் நடைபெற்றது. 

பிரமாண்டமான அந்த பேரணியில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட ரணில் அங்கு அணிதிரண்டு நின்ற தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை கொண்டுவந்தார். தோட்டத் தொழிலாளர்களின் தினச் சம்பளம் 1000 ரூபாவில் இருந்து 1700 ரூபாவாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது என்று தொழிலாளர்களின் பெரும் ஆரவாரத்துக்கு மத்தியில் ஜனாதிபதி அறிவித்தார்.

700 ரூபாய் சம்பள அதிகரிப்பு 70 சதவீத அதிகரிப்புக்கு சமனானதாகும். அதை அறிவிக்கும் வர்த்தமானியின் பிரதியை மக்களுக்கு அவர் காட்டினார். மிகுந்த கஷ்டப்பட்டு அந்த வர்த்தமானி அறிவித்தலை ஏப்ரல் 30ஆம் திகதி ஜனாதிபதி வெளியிடச் செய்தார். 700 ரூபாய் சம்பள அதிகரிப்பு தோட்ட லயன் அறைகளையும் தாண்டி முழுச் சமூகத்தின் மீதும் நேர்மறையான தாக்கத்தைச் செலுத்தும். தோட்டத் தொழிலாளர் சமூகத்தின் மீது ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் இருக்கும் அக்கறையை அது வெளிக்காட்டும்.

தமிழ் முற்போக்கு கூட்டணி 

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மலையக தமிழர்களின் முதன்மையான அரசியல் கட்சியாக இருந்தபோதிலும் பாராளுமன்ற ஆசனங்களைப் பொறுத்தவரை அதற்கு ஒரு ஏகபோகம் கிடையாது. மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி, பழனி திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் வீ. இராதாகிருஷ்ணன் தலைமையிலான மலையக மக்கள் முன்னணி ஆகிய மூன்று கட்சிகளை உள்ளடக்கிய தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு பாராளுமன்றத்தில் பெரிய எண்ணிக்கையில் மலையக உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.

2020 பாராளுமன்ற தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி சமகி ஜன பலவேகயவின் பட்டியலில் போட்டியிட்டு ஆறு ஆசனங்களை வென்றெடுத்தது. நுவரெலியாவில் மூன்று உறுப்பினர்களும் பதுளையிலும் கண்டியிலும் கொழும்பிலும் தலா ஒரு உறுப்பினரும் வெற்றி பெற்றனர். 

பதுளை மாவட்டத்தில் இருந்து தெரிவான அரவிந்தகுமார் 2020 ஆண்டில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்துடன் இணைந்ததையடுத்து கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இப்போது ரணில்  தலைமையிலான அரசாங்கத்தில் அவர் கல்வி இராஜாங்க அமைச்சராக பதவி வகிக்கிறார்.  தமிழ் முற்போக்கு கூட்டணி இதுவரையில் சஜித் பிரேமதாசவின் சமகி ஜன பலவேகயவுடன் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியிலேயே இருக்கிறது. ஆனால், சமகி ஜன பலவேகயவின் அரவணைப்பில் அதிருப்தியின் குமுறல்களும் மனக்குறையின் முணுமுணுப்புககளும் இருக்கவே செய்கின்றன.

சரியான நேரத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி சமகி ஜன பலவேகயவில் இருந்து பிரிந்து ஜனாதிபதி தேர்தலில் ரணிலை ஆதரிக்கும் என்று பரவலாக ஊகிக்கப்படுகிறது. சஜித்துடன்  புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி தெரிவித்த மறுப்பு இதற்கு சாத்தியமான அறிகுறியாகும். அவசரப்பட்டு சஜித்தின்  கட்சியுடன் இணைந்துகொள்வதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி விரும்பவில்லை என்று தெரிகிறது. 

கூட்டணி அதற்கு இருக்கக்கூடிய தெரிவுகளைப் பரிசீலித்து பொருத்தமான நேரத்தில் முடிவொன்றை எடுக்க விரும்புகிறது. சுருக்கமாக சொல்வதானால் விரும்புகின்ற நேரத்தில் ரணிலுடன் சேருவதற்கான சுதந்திரம் தனக்கு இருக்கவேண்டும் என்று கூட்டணி விரும்புகிறது. இந்த விடயத்தில் கூட்டணி பிளவுபட்டு சில பாராளுமன்ற உறுப்பினர்கள் சஜித்துடன்  தொடர்ந்து இருக்க வேறு சிலர் ரணிலுக்கு  ஆதரவளிக்கலாம் என்றும் சிலர் கருதுகிறார்கள்.

 ரணில் - சஜித் மோதல் 

ஐக்கிய தேசிய கட்சிக்கும் சமகி ஜன பலவேகயவுக்கும் இடையிலான தற்போதைய பிளவு அடிப்படையில் ரணிலுக்கும் சஜித்துக்கும் இடையிலான தன்னகம்பாவ மோதலேயாகும். பெரிய கொள்கை வேறுபாடு எதுவும் இல்லை. கோட்பாட்டு ரீதியில் இருவரும் ஒன்றே. சமகி ஜன பலவேகய புதிய போத்தலில் உள்ள பழைய ஐக்கிய தேசிய கட்சியே. இரு கட்சிகளும் ஒன்றிணைந்து பொதுஜன பெரமுனவையும்  ஜனதா விமுக்தி பெரமுனவைுயம் (ஜே.வி.பி.) எதிர்க்க வேண்டும் என்பதே கட்சித் தொண்டர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அடிமட்ட உணர்வு சமகி ஜன பலவேகயவின் தமிழ், முஸ்லிம் கட்சி அணிகள் மத்தியிலும் பிரதிபலிக்கிறது.

இந்த காரணத்தினாலேயே ஐக்கிய தேசிய கட்சியையும் சமகி ஜன பலவேகயவையும் மீண்டும் ஐக்கியப்படுத்துவதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமும் கடுமையாக முயற்சித்துக்கொண்டிருக்கிறார்கள். ரணிலுக்கும் சஜித்துக்கும் இடையில் நல்லிணக்க நிலை ஏற்படுமானால் இருவரில் எவருக்கு ஆதரவளிப்பது என்பதை தீர்மானிப்பதில் மனோவுக்கும் ஹக்கீமுக்கும் இருக்கும் சிக்கலுக்கும் தீர்வு கிடைத்துவிடும். ஆனால், இது சாத்தியமில்லை என்றே தெரிகிறது. அதனால் ரணிலை ஆதரிப்பதா, இல்லையா என்பதை தமிழ் முற்போக்கு கூட்டணி அண்மைய எதிர்காலத்தில் தீர்மானிக்க வேண்டியிருக்கும். இது கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தக்கூடும்.

வடிவேல் சுரேஷ்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் புறம்பாக இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் செல்வாக்கு மிக்க செயலாளரான பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷிடமிருந்து ரணிலுக்கு உற்சாகம் கிடைத்திருக்கிறது. ரணிலை கைவிட்டு சஜித்துடன் இணைந்த சுரேஷ் அவருடன் முரண்பட்டுக்கொண்டார். இப்போது சுரேஷ் மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இருக்கிறார். அதன் மே தினப் பேரணி மேடையிலும் அவரைக் காணக்கூடியதாக இருந்தது. எனவே, மலையகத் தமிழர்களின் வாக்குகளைப் பொறுத்தவரையில், ரணில் ஓர் உறுதியான நிலையில் இருக்கிறார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் சில சக்திகளின் ஆதரவு அவருக்கு இருக்கிறது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 

இலங்கை முஸ்லிம்களை பற்றி பார்ப்போம். பிரதான முஸ்லிம் கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களில் சிலர் முன்னர் கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்துக்கு ஆதரவளித்திருந்தாலும், அந்த கட்சி எதிரணியில் சமகி ஜன பலவேகயவுடனேயே தொடர்ந்து இருந்து வருகிறது. 

அண்மையில் சஜித் கேட்டுக்கொண்டபோதிலும், முஸ்லிம் காங்கிரஸும் சமகி பல ஜனவேகயவுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடவில்லை. தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனைப் போன்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் ரணிலுக்கும் சஜித்துக்கும் இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்தி ஐக்கிய தேசிய கட்சியை மீண்டும் ஐக்கியப்படுத்துவதற்கு கடுமையாக முயற்சித்து வருகிறார்.

ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் ரணிலை ஆதரிக்கும் என்று முஸ்லிம் அரசியலை அவதானிப்பவர்கள் உணர்கிறார்கள். தான் என்ன செய்யப்போகிறார் என்பதை ஹக்கீம் மிகவும் இரகசியமாக வைத்திருக்கிறார் என்றபோதிலும் முஸ்லிம் காங்கிரஸின் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் ரணிலை ஆதரிக்கவே விரும்புகிறார்கள். 

ஹக்கீம் தொடர்ந்தும் சஜித்துடனேயே இருப்பாரேயானால், இந்த உறுப்பினர்கள் அவருக்கு எதிராகக் கிளம்பக்கூடிய சாத்தியப்பாடு இருக்கிறது. வடமேல் மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் நசீர் அஹமட் தனது முன்னைய கட்சியான முஸ்லிம் காங்கிரஸுக்குள் ரணிலுக்கு ஆதரவான கிளர்ச்சியொன்றை  தூண்டிவிடக்கூடிய ஆற்றலைக் கொண்டிருக்கிறார். 

மக்கள் காங்கிரஸ் - தேசிய காங்கிரஸ்

தேர்தல் அறிவிக்கப்படும்போது ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் ரணிலை ஆதரிக்கும். சமகி ஜன பலவேகயவுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு ரிஷாத்தும் மறுத்துவிட்டார். 'வியத்மகா' பாராளுமன்ற உறுப்பினர்களுடன் அணிசேருவது உட்பட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் சஜித்துடன் ரிஷாத்துக்கு ஏற்கெனவே அதிருப்தி இருக்கிறது. மக்கள் காங்கிரஸின் அதிருப்தி பாராளுமன்ற உறுப்பினர்களான ரஹ்மானும் முஷாரப்பும் ரணில ஆதரிக்கிறார்கள்.

ஏ.எல்.எம். அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் ரணிலை உறுதியாக ஆதரிக்கிறது. அதாவுல்லா அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்றின் முடிசூடா மன்னன். மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடியில் கணிசமான ஆதரவைக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாவும் ரணிலை ஆதரிப்பார்.

மூன்று முஸ்லிம் கட்சிகளினதும் அதிருப்தி பாராளுமன்ற உறுப்பினர்களும் ஹிஸ்புல்லா போன்ற செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகளும் ரணிலை ஆதரிப்பார்கள். 

மேலும், சமகி ஜன பலவேகய சார்பில் நேரடியாக தெரிவான கபீர் காசிம், முஜிபுர் ரஹ்மான், இம்ரான் மஹ்ரூப் போன்ற முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் சமகி ஜன பலவேகயவில் இருந்து பிரியும் பட்சத்தில் ரணிலை ஆதரிக்கக்கூடும். அதனால் ஜனாதிபதி தேர்தலில் ரணில் பெருமளவு முஸ்லிம் ஆதரவைப் பெறக்கூடிய சாத்தியம் இருக்கிறது.

 டக்ளஸ் - பிள்ளையான் 

இறுதியாக நாம் இலங்கைத் தமிழர்களைப் பற்றி பார்ப்போம். தனது சொந்த ஐக்கிய தேசிய கட்சிக்கு மேலதிகமாக தற்போது இரு தமிழ்க் கட்சிகளின் ஆதரவு ரணிலுக்கு கிடைப்பது நிச்சயம். டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயக கட்சியும் (ஈ.பி.டி.பி.) பிள்ளையான் என்ற சிவனேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியும் ரணிலின் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றன. 

ஈ.பி.டி.பி.க்கு இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருககிறார்கள். கடந்த பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகள் பிள்ளையானுக்கே கிடைத்தன. தேவானந்தாவுக்கு வடக்கில் மட்டுப்படுத்தப்பட்ட ஆனால் உறுதியான வாக்குவங்கி இருக்கிறது.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்து 2018ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்த மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தற்போது ஒரு இராஜாங்க அமைச்சர். அவரும் ரணிலை ஆதரிக்கக்கூடியது சாத்தியம். 

2020 பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் தெரிவான ஒரேயொரு உறுப்பினர் அங்கஜன் இராமநாதன். யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகள் அவருக்கே கிடைத்தன. நிலைவரங்களைச் சீர்தூக்கிப் பார்த்து செயற்படுவதில் கெட்டிக்கார அரசியல்வாதியான அங்கஜன் சரியான நேரத்தில் ரணிலுடன் இணைந்துவிடக்கூடிய சாத்தியமும் இருக்கிறது.

உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசரும்  யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரன் 2022 ஜூலை 20 பாராளுமன்றத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கே வாக்களித்தார். அதனால் அவர் ரணிலை ஆதரிக்கக்கூடிய சாத்தியம் இருக்கிறது. ஆனால், உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிராத அவர் மீண்டும் மனதை மாற்றிக்கொள்ளக்கூடும். எது எப்படியிருந்தாலும் விக்னேஸ்வரனை பெரிதாக கருத்தில் எடுக்கவேண்டியதில்லை. ஏனென்றால், மக்கள் மத்தியில் அவருக்கு குறிப்பிடத்தக்க ஆதரவு இப்போது கிடையாது.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸுக்கு இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஆனால், அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஜனாதிபதி தேர்தலில் பங்கேற்கமாட்டார். தேர்தலை பகிஷ்கரிக்குமாறு தமிழர்களை அவர் கேட்டிருக்கிறார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு

இலங்கை தமிழர்களின் பிரதான அரசியல் அணியான தமிழ் தேசிய கூட்டமைப்பு 2020 பாராளுமன்ற தேர்தலில் பத்து ஆசனங்களைப் பெற்றது. கூட்டமைப்பு இப்போது பிளவுபட்டு அதன் மூன்று அங்கத்துவ கட்சிகளில் இரு கட்சிகள் (ரெலோவும் புளொட்டும்) ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்.) உட்பட வேறு மூன்று கட்சிகளுடன் சேர்ந்து ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியை அமைத்திருக்கின்றன. 

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதான கட்சியான இலங்கை தமிழ் அரசு கட்சி இப்போது தனித்து நிற்கிறது. கூட்டமைப்பின் பத்து பாராளுமன்ற உறுப்பினர்களில் ஆறு பேர் தமிழ் அரசு கட்சியையும் மூவர் ரெலோவையும் ஒருவர் புளொட்டையும் சேர்ந்தவர்கள்.

முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எவ்வாறு நடந்துகொள்ளும் என்பதை இப்போதே கூறுவது கஷ்டம். ஏனென்றால், அவற்றில் எந்த கட்சியும் தங்களது எண்ணத்தை இதுவரையில் வெளிப்படுத்தவில்லை. தேர்தல் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னர் மாத்திரமே அவர்கள் தீர்மானத்தை எடுக்கக்கூடும்.

ஆனால், பாராளுமன்றத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்கவுக்கு அல்ல, டலஸ் அழகப்பெருமவுக்கே அதன் ஆதரவை அறிவித்தது. என்றாலும் கூட்டமைப்பின் பத்து பாராளுமன்ற உறுப்பினர்களில் நான்கு பேர் மாத்திரமே அழகப்பெருமவுக்கு வாக்களித்ததாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் கூறின. ஏனையவர்கள் ஒன்றில் ரணிலுக்கு வாக்களித்தார்கள் அல்லது தங்கள் வாக்குச் சீடடுக்களை பழுதாக்கினார்கள். கூட்டமைப்பில் உள்ள சிலர் தனக்கு வாக்களித்ததாக ரணில் நகைச்சுவையாக கூறினார். ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி இன்னமும் அதன் நிலைப்பாட்டை வெளிப்டையாக கூறவில்லை என்றபோதிலும் ரணிலை அவர்கள் ஆதரிக்கக்கூடும் என்று சில செய்திகள் கூறுகின்றன.

 தமிழ் அரசு கட்சியின் இரு முகாம்கள்

அதேவேளை தமிழ் அரசு கட்சி இப்போது இரு முகாம்களாக பிளவுபட்டு நிற்கிறது. ஒரு முகாம் சிவஞானம் சிறீதரனையும் மற்றைய முகாம் மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரனையும் ஆதரிக்கின்றன. 

மேலும், கட்சி இப்போது சட்டப் பிரச்சினையில் சிக்கியிருக்கிறது. நீதிமன்றங்களில் ஒரு  பொதுவான நிலைப்பாட்டை முன்வைக்க தயாரில்லாமல் அல்லது இயலாமல் அது இருக்கின்றது போன்று தெரிகிறது.

மீண்டும் இத்தகைய பின்புலத்தில் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் அரசு கட்சி என்ன செய்யக்கூடும் என்பதை எதிர்வுகூறுவது உண்மையில் சாத்தியமில்லை. ஆனால், அந்த கட்சியின் இரு முகாம்களில் உள்ளவர்களில் சிலர் ரணிலை ஆதிரிக்கக்கூடியது சாத்தியம் என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன.

இலங்கைத் தமிழர்கள் ரணிலுக்கு மிகவும் ஆதரவாக இருப்பார்கள் என்று ஐக்கிய தேசிய கட்சிக்குள் நம்பிக்கை இருக்கிறது. தமிழ்க் கட்சிகளின் நிலைப்பாடுகள் எவ்வாறிருந்தாலும் ரணில் தமிழ் மக்களை நேரடியாக அணுகி, அவர்களின் வாக்குகளைப் பெறமுடியும் என்பது இவர்களின் அபிப்பிராயமாக இருக்கிறது. வடக்கு -- கிழக்கு தமிழர்கள் ரணிலைப் பற்றி கொண்டிருக்கும்  நேர்மறையான படிமத்தை அடிப்படையாகக் கொண்டு நோககும்போது இந்த முயற்சி வெற்றிகரமானதாக அமையக்கூடும்.

தமிழ் ஜனாதிபதி வேட்பாளர்

ஆனால், தற்போதைய இரண்டு போக்குகள் ரணிலுக்கு பாதகமாக அமையக்கூடும். முதலாவது, ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கு குறிப்பிட்ட சில வட்டாரங்கள் முன்னெடுக்கும் முயற்சி. அவ்வாறு நடைபெறுமானால் 'தமிழ்ப்  பொதுவேட்பாளர்' ரணிலுக்கு ஆதரவான கிடைக்கக்கூடிய வாக்குகளை திசைதிருப்பிவிடக்கூடும்.

முள்ளிவாய்க்கால் கஞ்சி 

இரண்டாவது, 2009 மே மாதத்தில் தமிழர்களைச் சூழ்ந்த மனித அவலத்தை அமைதியான முறையில் நினைவுகூருவதற்கு ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வுகளை கையாள்வதில் பொலிஸாரின் நடத்தை முள்ளிவாய்க்கால் அவலத்தின் நினைவாக அதன் பதினைந்தாவது வருட நிறைவில் தேங்காய் சிரட்டைகளில் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகிக்கப்படுகிறது. முல்லைத்தீவு மாவட்டத்தில் அந்த இருண்ட நாட்களில் சிக்கிக்கொண்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் வெறும் கஞ்சியை மாத்திரமே குடித்து உயிரைக் காப்பாற்றியதை குறிக்கும் முகமாகவே இந்த கஞ்சி விநியோகம் இடம்பெற்றது.

கிழக்கு மாகாணத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சியை விநியோகித்ததாகக் கூறப்படும் நபர்கள் மீது பொலிஸார் முரட்டுத்தனமாக நடவடிக்கை எடுத்தார்கள். பெண்களை வீடுகளில் இருந்து பொலிஸார் அவர்கள் அழுது கதறக்கதற இழுத்துச் சென்றதாக செய்திகள் வந்தன. மக்களுக்கு கஞ்சி வழங்கியதற்காக  மூன்று பெண்களும் ஒரு பல்கலைக்கழக மாணவனும் இன்னொரு ஆணும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்கள். சுகாதார காரணங்களைக் காட்டி சில இடங்களில் கஞ்சி  விநியோகத்தை தடைசெய்ய பொலிஸார் நீதிமன்ற உத்தரவுகளைப் பெற்றனர். பொலிஸாரின் நடவடிக்கைகள்  தமிழ் மக்களை கவலையடையவும் ஆத்திரமடையவும் வைத்தன.

இந்த நியாயமற்ற அடாவடித்தனமான நடவடிக்கைகள் ஜனாதிபதி ரணிலுக்கே கெட்ட பெயரை ஏற்படுத்தும். பொலிஸாரின் செயல்களுக்காக அவர் மீதே குற்றஞ்சாட்டப்படுகிறது. செய்தியாளர்கள் மகாநாடொன்றில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரான சுமந்திரன், "இந்த அடாவடித்தனங்கள் தொடருமானால் ரணில் இந்த பகுதிகளுக்கு வாக்கு கேட்டு வரத் தேவையில்லை" என்று கூறினார். 

https://www.virakesari.lk/article/184017

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.