Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கைது வாரண்ட்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (இடது) மற்றும் அவரது பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட். கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஜெர்மி போவன்
  • பதவி, சர்வதேச ஆசிரியர்
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக தாம் கைது வாரண்டை எதிர்கொள்ளக்கூடும் என்ற செய்திக்கு, ஒரு காணொளி மூலமாக தனது கடும் கோபத்தை வெளிப்படுத்தினார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு.

“இது வரலாறு காணாத தார்மீக மீறல்" என்று கூறிய அவர், “இரண்டாம் உலகப்போர் காலத்து யூத இனஅழிப்பிற்கு பிறகு யூத மக்கள் மீது நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதலை அரங்கேற்றிய, இனப் படுகொலைகளை செய்யும் பயங்கரவாத அமைப்பான ஹமாஸுக்கு எதிராக நியாயமான போரை இஸ்ரேல் நடத்தி வருகிறது," என்றும் குறிப்பிட்டார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) தலைமை வழக்கறிஞரான கரீம் கானை, ‘நவீன காலத்தின் பெரும் யூத எதிர்ப்பாளர்களில் ஒருவர்’ என்று நெதன்யாகு விவரித்தார்.

நாஜி ஜெர்மனியில் யூதர்களின் அடிப்படை உரிமைகளை மறுத்து, படுகொலையை செயல்படுத்திய நீதிபதிகளைப் போன்றவர் கரீம் கான் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

இஸ்ரேலின் பிரதம மந்திரி மற்றும் பாதுகாப்பு அமைச்சருக்கு எதிராக கைது வாரண்டுகளை கோரும் கரீம் கானின் முடிவு ‘உலகம் முழுவதும் எழுந்துவரும் யூத விரோதத்தின் நெருப்பில் பெட்ரோலை ஊற்றுவது போன்றது’ என்றார் அவர்.

பிரதம மந்திரி அலுவலகம் வெளியிட்ட அந்த காணொளியில் நெதன்யாகு ஆங்கிலத்தில் பேசினார். தனது செய்தி, தனக்கு நெருக்கமான நாடான அமெரிக்காவில் உள்ள மக்களை சென்றடைய வேண்டும் என்று அவர் விரும்பும் போது ஆங்கிலத்தில் பேசுகிறார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் மீது எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்?

 
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கைது வாரண்ட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,காஸாவின் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார், பாலத்தீன பகுதியில் எங்கோ பதுங்கி இருப்பதாக நம்பப்படுகிறது.

இஸ்ரேல்- ஹமாஸ் இருதரப்புக்கும் தண்டனை

இஸ்ரேல் பிரதம மந்திரி வெளிப்படுத்திய சீற்றம், இஸ்ரேலின் அரசியல் தலைவர்களிடமும் எதிரொலித்தது. இந்த சீற்றத்திற்கு காரணமான அறிக்கைகள், ஐசிசியின் தலைமை வழக்கறிஞரும், பிரிட்டன் மன்னரின் சட்ட ஆலோசகருமான கரீம் கான் என்பவரால் வெளியிடப்பட்டது.

அந்த அறிக்கைகளில், வார்த்தைக்கு வார்த்தை, வரிக்கு வரி, ஹமாஸின் மூன்று முக்கிய தலைவர்கள், இஸ்ரேலின் பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் மீது தொடர் குற்றச்சாட்டுகளை கரீம் கான் முன்வைக்கிறார்.

சர்வதேச சட்டம் மற்றும் ஆயுத மோதலின் சட்டங்களை, குற்றம் சுமத்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும், இரு தரப்பினர் மீதும் பயன்படுத்துவதற்கான உறுதிப்பாடு, கானின் அறிக்கையில் தெரிகிறது. கைது வாரண்ட் கோருவதற்கான காரணத்தையும் இந்த அறிக்கையில் அவர் விளக்குகிறார்.

"படை வீரர், தளபதி, அரசியல் தலைவர் என்று யாருமே தண்டனையிலிருந்து தப்ப முடியாது. சட்டம் அனைவருக்கும் பொதுவானது. நபர்களைப் பொறுத்து செயல்படுத்த முடியாது. அப்படி நடந்தால் சட்டத்தின் வீழ்ச்சிக்கான சூழ்நிலையை நாமே உருவாக்கிவிடுவோம்”, என்று கான் குறிப்பிட்டார்.

இரு தரப்பினரின் நடத்தையையும் சர்வதேச சட்டத்தின் கீழ் கொண்டு வர வைக்கும் இந்த முடிவு, இஸ்ரேலில் மட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகளில் கோபத்தை கிளப்பியுள்ளது.

கைது வாரண்ட் கேட்பது ‘ஒப்புக் கொள்ள முடியாத செயல்’ என்றும், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே எந்த ஒற்றுமையும் இல்லை என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.

“பாதிக்கப்பட்டவரையும் குற்றவாளியையும் சமமானவர்கள் என்கிறார் ஐசிசி வழக்கறிஞர் கரீம்” எனக் கூறி, தன் தலைவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை திரும்பப் பெறுமாறு ஹமாஸ் கோரியது.

"ஏழு மாதங்கள் தாமதமாக, இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் கீழ் ஆயிரக்கணக்கான குற்றங்கள் இழைக்கப்பட்ட பின்னர், இஸ்ரேலிய தலைமைக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிப்பதற்கான கோரிக்கை வந்துள்ளது” என ஹமாஸ் விமர்சித்தது.

தனது அறிக்கையில் இரு தரப்புக்கும் இடையே நேரடி ஒப்பீடுகளை கான் செய்யவில்லை. ஆனால் அவர்கள் இருவருமே தொடர்ச்சியான போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்ததாக கான் குறிப்பிடுகிறார்.

இந்த சமீபத்திய போர் இஸ்ரேலுக்கும் பாலத்தீனத்திற்கும் இடையிலான சர்வதேச ஆயுத மோதல் மற்றும் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான இருதரப்பு ஆயுத மோதல் ஆகியவற்றின் பின்னணியில் வருகிறது என்றும் அவர் வலியுறுத்துகிறார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பாலத்தீனத்தை ஒரு நாடாக கருதுகிறது. ஏனெனில் ஐக்கிய நாடுகள் சபையில் பார்வையாளர் அந்தஸ்தைக் கொண்டிருப்பதால் ஐசிசியை உருவாக்கிய ரோம் சட்டத்தில் பாலத்தீனத்தால் கையெழுத்திட முடிந்தது. ஆனால், தான் அதிகாரத்தில் இருக்கும் வரை பாலத்தீனர்கள் ஒருபோதும் சுதந்திரம் பெற மாட்டார்கள் என்று நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

 

மனித உரிமை அமைப்புகளின் பாராட்டுகள்

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கைது வாரண்ட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,தெற்கு காஸாவின் ரஃபா பகுதி

கொடூரமான பயங்கரவாதிகளுக்கும், இஸ்ரேலின் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் இடையேயான அவமானகரமான மற்றும் தவறான ஒப்பீடுகள் என இஸ்ரேலிய அதிபர் ஐசக் ஹெர்சாக் கூறுகிறார். ஆனால் இதை அப்படி பார்ப்பதற்கு பதிலாக, இரு தரப்புகள் மீதும் சட்டத்தை நடைமுறைப்படுத்த விரும்பும் ஐசிசி வழக்குரைஞரின் நடவடிக்கையாக மனித உரிமை குழுக்கள் பாராட்டுகின்றன.

இந்த வாரண்ட் கோரல் ‘இஸ்ரேல் ஒரு தார்மீக படுகுழியில் விரைவாக இறங்குவதை’ குறிக்கிறது என்று இஸ்ரேலின் முன்னணி மனித உரிமை அமைப்பான பெட்செலம் கூறியது.

“பொறுப்புக் கூறல் இல்லாமல், வன்முறை, கொலை மற்றும் அழிவு போன்ற அதன் கொள்கையை இனியும் தொடர முடியாது என்று சர்வதேச சமூகம் இஸ்ரேலுக்கு செய்யும் சமிக்ஞை இது,” என்று அது மேலும் தெரிவித்தது.

அமெரிக்கா தலைமையிலான சக்தி வாய்ந்த மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலின் சர்வதேச சட்ட மீறல்களை கண்டும் காணாது இருப்பதாகவும், தங்களுக்கு ஆதரவாக இல்லாத பிற நாடுகளை கண்டித்து, தடைகளை விதிப்பதாகவும், மனித உரிமை ஆர்வலர்கள் பல காலமாக புகார் கூறி வருகின்றனர்.

கான் மற்றும் அவரது குழுவினரால் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை நீண்ட காலத்திற்கு முன்பே எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர்கள் கருதுகின்றனர்.

ஹமாஸ் மீதான குற்றச்சாட்டுகள்

ஹமாஸ்

பட மூலாதாரம்,AFP

ஹமாஸின் மூன்று முக்கிய தலைவர்களும் அழித்தல், கொலை, பிணைக்கைதிகளை பிடித்தல், பாலியல் வன்புணர்வு மற்றும் சித்ரவதை உள்ளிட்ட போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக கான் கூறுகிறார்.

ஹமாஸ் தலைவரான யாஹ்யா சின்வார், அதன் ராணுவப் பிரிவான கஸ்ஸாம் படைப்பிரிவின் தளபதி முகமது டெய்ஃப் மற்றும் ஹமாஸ் அரசியல் பணியகத்தின் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஆகியோர் இதில் பெயரிடப்பட்டுள்ளனர்.

விசாரணையின் ஒரு பகுதியாக கரீம் கான் மற்றும் அவரது குழுவினர், அக்டோபர் 7 தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்களை நேர்காணல் செய்தனர்.

ஹமாஸ், அடிப்படை மனித விழுமியங்களைத் மீறியதாக அவர் கூறினார். "ஒரு குடும்பத்தில் உள்ள அன்பு, பெற்றோருக்கும் குழந்தைக்கும் இடையிலான ஆழமான பிணைப்பு ஆகியவை சிதைக்கப்பட்டுள்ளன. வன்கொடுமை மற்றும் தீவிர துன்புறுத்தல்கள் மூலம் அளவிட முடியாத வலியை உண்டாக்குவதற்காக இது நடத்தப்பட்டுள்ளது," என்று கான் குறிப்பிட்டார்.

 

இஸ்ரேல் மீதான குற்றச்சாட்டுகள்

இஸ்ரேல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இஸ்ரேல் ராணுவ வீரர்கள்

”இஸ்ரேலுக்கு தன்னைத் தானே தற்காத்துக் கொள்ள உரிமை உண்டு. ஆனால் மனசாட்சியற்ற குற்றங்கள், சர்வதேச மனிதாபிமான சட்டத்திற்கு இணங்க வேண்டிய கடமையிலிருந்து இஸ்ரேல் தப்ப முடியாது," என்றார் கான்.

“அவ்வாறு செய்தால், பொதுமக்கள் மீது போர் ஆயுதமாக பட்டினியை பயன்படுத்தியது, கொலை, அழித்தல் மற்றும் பொதுமக்கள் மீது வேண்டுமென்றே நடத்திய தாக்குதல்கள் உள்ளிட்ட குற்றங்களுக்காக, நெதன்யாகு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் ஆகியோரை கைது செய்வதற்கான வாரண்ட்களை பிறப்பிப்பதை நியாயப்படுத்துகிறது,” என்று அவர் குறிப்பிட்டார்.

அக்டோபர் 7 ஹமாஸ் தாக்குதல்களுக்கு இஸ்ரேலின் பதிலடியின் தொடக்கத்தில் இருந்து, அமெரிக்க அதிபர் பைடன் இஸ்ரேலுக்கு தொடர்ச்சியான கண்டனங்களை வெளியிட்டார். இஸ்ரேல் பல பாலத்தீன குடிமக்களை கொன்று வருவதாகவும், காஸாவில் உள்ள குடிமக்களின் உள்கட்டமைப்பை அதிகமாக நாசம் செய்து வருவதாகவும் அவர் கவலை தெரிவித்தார்.

ஆனால் அதே நேரம் தாங்கள் எப்போதுமே ஆதரித்து வரும் நெருங்கிய கூட்டாளியிடம் கவனமாக சமநிலையை கடைப்பிடித்த பைடனும் அவரது நிர்வாகமும், தங்கள் கண்டனங்களின் முழு அர்த்தம் என்ன என்பதை பகிரங்கமாக தெரிவிக்கவில்லை.

கரீம் கான் தனது விளக்கத்தை மிகத் தெளிவாகக் கூறுகிறார். காஸாவில் தனது போர் இலக்குகளை அடைய இஸ்ரேல் குற்றவியல் முறைகளைத் தேர்ந்தெடுத்ததாக அவர் கூறுகிறார். வேண்டுமென்றே மரணத்தை விளைவித்தது, பட்டினி, பெரும் துன்பம் மற்றும் பொதுமக்களுக்கு கடுமையான காயம் ஏற்படுத்தியது போன்றவை இதில் அடங்கும்.

ஐசிசியின் கைது வாரண்ட்

ஐசிசியின் கைது வாரண்ட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC)

கைது வாரண்டுகளை பிறப்பிக்கலாமா என்பதை ஐசிசியில் உள்ள நீதிபதிகள் குழு இப்போது பரிசீலிக்கும். ஐசிசியின் ரோம் சட்டத்தில் கையெழுத்திட்ட நாடுகள், வாய்ப்பு கிடைத்தால் அவர்களை கைது செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

கையொப்பமிட்ட 124 நாடுகளில் ரஷ்யா, சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இல்லை. இஸ்ரேலும் இதில் கையெழுத்திடவில்லை.

ஆனால் பாலத்தீனம் கையொப்பமிட்டிருப்பதால் போர்க்குற்றச் செயல்களை விசாரிக்க சட்டப்பூர்வ அதிகாரம் தனக்கு உண்டு என ஐசிசி கூறுகிறது.

கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டால் இஸ்ரேலின் நீண்ட கால பிரதமர் நெதன்யாகு, கைது செய்யப்படும் ஆபத்தை சந்திக்காமல், இஸ்ரேலுக்கு அருகில் உள்ள மேற்கத்திய நட்பு நாடுகளுக்கு செல்ல முடியாது.

”ஐசிசியின் நடவடிக்கைகள், சண்டையை நிறுத்துவதற்கோ, பிணைக்கைதிகளை விடுவிப்பதற்கோ அல்லது மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கோ உதவவில்லை,” என்று பிரிட்டிஷ் பிரதம மந்திரி ரிஷி சுனக் குறிப்பிட்டார்.

ஆனால் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டால், பிரிட்டன் நெதன்யாகுவை கைது செய்தாக வேண்டும் அல்லது அவருக்கு தூதாண்மை விலக்கு உண்டு என்று பிரிட்டன் வெற்றிகரமாக வாதிட வேண்டும்.

நெதன்யாகு மற்றும் கேலன்ட் ஆகியோருக்கு மிக முக்கியமான நாடு அமெரிக்கா. இந்த மோதலில் ஐசிசிக்கு அதிகார வரம்பு இல்லை என்று அமெரிக்க அதிபர் மாளிகை நம்புகிறது. ஜோ பைடனின் ஜனநாயகக் கட்சிக்குள் போர் தொடர்பாக பிளவுகளை இது அதிகப்படுத்தலாம்.

ஐசிசியின் இந்த நடவடிக்கையை அமெரிக்காவின் முற்போக்காளர்கள் ஏற்கனவே வரவேற்றுள்ளனர். ஜனநாயகக் கட்சிக்குள் இருக்கும் இஸ்ரேலின் உறுதியான ஆதரவாளர்கள், ஐசிசி அதிகாரிகள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கும் குடியரசுக் கட்சியின் நகர்வுகளை ஆதரிக்கலாம் அல்லது அவர்களை அமெரிக்காவில் இருந்து தடை செய்யலாம்.

வரவிருக்கும் இத்தகைய நடவடிக்கைகள் பற்றிய வதந்திகள் பல வாரங்களுக்கு முன்பே ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் பரவியதால் குடியரசுக் கட்சியின் செனட்டர்கள் குழு, கான் மற்றும் அவரது ஊழியர்களுக்கு எதிராக அச்சுறுத்தலை விடுத்தது.

"இஸ்ரேலை குறிவைத்தால், நாங்கள் உங்களை குறிவைப்போம்.. உங்களுக்கு இது எச்சரிக்கை…."

 

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் என்ன செய்யும்?

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் என்ன செய்யும்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

யோவ் கேலன்டும் சுதந்திரமாக பயணம் செய்ய முடியாது. இஸ்ரேல் காஸாவை முற்றுகையிடப் போவதாக அறிவிக்கும் போது அவர் பயன்படுத்திய வார்த்தைகள், இஸ்ரேலின் நடத்தையை விமர்சிப்பவர்களால் அடிக்கடி மேற்கோள் காட்டப்படுகிறது.

"காஸா பகுதியில் முழு முற்றுகைக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். மின்சாரம் இருக்காது, உணவு இல்லை, எரிபொருள் கிடையாது. எல்லாமே மூடப்படும். நாங்கள் மிருகங்களை எதிர்த்து போரிடுகிறோம். அதற்கேற்ப செயல்படுகிறோம்,” என்று ஹமாஸ் தாக்குதல்களுக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு அக்டோபர் 7ஆம் தேதி கேலன்ட் கூறினார்.

"மனிதர்கள் உயிர்வாழ இன்றியமையாத பொருட்களை, காஸாவின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள குடிமக்களிடமிருந்து, இஸ்ரேல் வேண்டுமென்றே பறித்துள்ளது" என்று கான் தனது அறிக்கையில் எழுதியுள்ளார்.

காஸாவின் சில பகுதிகளில் பஞ்சம் நிலவுவதாகவும், மற்ற பகுதிகளுக்கும் அது நிச்சயம் பரவும் என்றும் அவர் கூறுகிறார். பஞ்சம் ஏற்பட்டுள்ளது என்ற கூற்றை இஸ்ரேல் மறுத்துள்ளது. உணவுப் பற்றாக்குறை தங்கள் முற்றுகையால் ஏற்பட்டது அல்ல என்றும் மாறாக ஹமாஸின் திருட்டு மற்றும் ஐ.நாவின் திறமையின்மையால் ஏற்பட்டது என்றும் இஸ்ரேல் கூறுகிறது.

ஹமாஸின் அரசியல் பிரிவின் தலைவரான இஸ்மாயில் ஹனியேவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டால், மூத்த அரபுத் தலைவர்களை சந்திக்க தான் மேற்கொள்ளும் வழக்கமான பயணங்களைப் பற்றி அவர் யோசிக்க வேண்டியிருக்கும்.

அவர் கத்தாரில் உள்ள தனது தளத்தில் இனி அதிக நேரத்தை செலவிடுவார் என்று கூறப்படுகிறது. இஸ்ரேலைப் போலவே கத்தாரும், ஐசிசியை நிறுவிய ரோம் சட்டத்தில் கையெழுத்திடவில்லை.

மற்ற இரண்டு குற்றம் சாட்டப்பட்ட ஹமாஸ் தலைவர்கள், யாஹ்யா சின்வார் மற்றும் முகமது டெய்ஃப் ஆகியோர் காஸாவிற்குள் எங்கோ மறைந்திருப்பதாக நம்பப்படுகிறது. கைது வாரண்ட் அவர்கள் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்தாது. இவர்களை கொல்ல கடந்த ஏழு மாதங்களாக இஸ்ரேல் முயற்சி செய்து வருகிறது.

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் மற்றும் மறைந்த லிபிய கர்னல் முயம்மர் கதாஃபி ஆகியோரையும் உள்ளடக்கிய குற்றஞ்சாட்டப்பட்ட தலைவர்களின் பட்டியலில் நெதன்யாகுவையும் சேர்க்க இந்த வாரண்ட் வழிவகுக்கும்.

யுக்ரேனில் இருந்து ரஷ்யாவிற்கு குழந்தைகளை சட்டவிரோதமாக நாடு கடத்தியதற்காக புதின் வாரண்டை எதிர்கொள்கிறார். நிராயுதபாணியான பொதுமக்களைக் கொன்றதற்காகவும், சித்திரவதை செய்ததற்காகவும், தனது மக்களாலேயே கொல்லப்பட்ட கர்னல் கதாஃபிக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்தப் பட்டியலில் சேர்க்கப்படுவது, தனது ஜனநாயகத்தின் மீது கர்வம் கொள்ளும் ஒரு நாட்டின் தலைவரான பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு பெருமை சேர்ப்பதாக இருக்காது.

https://www.bbc.com/tamil/articles/crggdrvnmx3o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.