Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இமானே கெலிஃப்: பாரிஸ் ஒலிம்பிக்கின் பாலின தகுதிச் சோதனை - சர்ச்சை ஏன்? அறிவியல் சொல்வது என்ன?

இமானே கெலிஃப்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, இமானே வெற்றி பெற்றபோது ஆயிரக்கணக்கான அல்ஜீரிய ரசிகர்கள் அவரைச் சூழ்ந்திருந்தனர். கட்டுரை தகவல்
  • எழுதியவர், சோஃபியா பெட்டிஸா
  • பதவி, பிபிசி செய்திகள்
  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் பாலின தகுதிச் சோதனையில் தோல்வியடைந்ததாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட இமானே கெலிஃப், ஓராண்டு கழித்து தற்போது பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றுள்ளார்.

பாரிஸ் ஒலிம்பிக்கில் குத்துச்சண்டை போட்டிகளில் அதிகம் பேசப்பட்ட இந்த சர்ச்சையை கடந்து, அல்ஜீரிய வீராங்கனையான இமானே கெலிஃப், சீனாவின் உலக சாம்பியனான யாங் லியூ-வை வெல்டர்வெயிட் பிரிவில் வீழ்த்தினார்.

இது என் கனவு, நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இது அற்புதமாக இருக்கிறது” என இமானே பிபிசியிடம் தெரிவித்தார்.

எட்டு ஆண்டுகளாக உறக்கமின்றி இதற்காக உழைத்தேன். அல்ஜீரியாவின் அனைத்து மக்களுக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன்."

"நான் விளையாடியது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். நான் வலுவான பெண்" என்று அவர் தெரிவித்தார்.

வெற்றி முடிவான பிறகு அவருடைய போட்டியாளரான யாங், இமானேவின் கைகளை மேலே உயர்த்தினார். இது தொடக்கப் போட்டியில் இத்தாலியின் ஏஞ்சலா காரினியின் நடவடிக்கைக்கு நேர் எதிராக இருந்தது. ஏஞ்சலா காரினி இமானேவுடனான போட்டியில் பாதியிலேயே வெளியேறினார்.

வெற்றி பெற்ற பிறகு அல்ஜீரியாவின் தேசிய கீதம் பாடப்பட்டபோது இமானே கண்ணீர் சிந்தினார்.

 

ஒலிம்பிக்கில் பாலின உறுதி சர்ச்சை

பாரிஸ் ஒலிம்பிக் 2024 பாலின சர்ச்சையை எதிர்கொண்ட பெண் வீராங்கனைகள்
படக்குறிப்பு, தைவானின் லின் யூ டிங் (இடது); அல்ஜீரியாவின் இமானே கெலிஃப் (வலது)

அல்ஜீரியாவின் இமானே கெலிஃப் மற்றும் தைவானின் லின் யூ டிங் இருவரும் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் நிகழ்வு பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளில் மறக்க முடியாத நிகழ்வாக அமையும்.

கடந்த ஆண்டு பெண்களுக்கான சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டியில் இவர்கள் இருவரும் போட்டியிடுவதற்கான தகுதிகளைப் பெறவில்லை என்று தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தனர். இருப்பினும், சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் பாரிஸ் ஒலிம்பிக்கில் இவர்களை அனுமதித்தது பல்வேறு விவாதங்களுக்குக் காரணமாக அமைந்திருக்கிறது.

இந்த சூடான விவாதங்களுக்கு மத்தியில், நம்முடைய குரோம்சோம்களின் அமைப்பு மற்றும் அது வழங்கும் கூடுதல் நன்மைகள் குறித்த தகவல்கள் அதிக அளவில் பேசப்பட்டு வருகிறது.

தற்போது ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருந்தாலும், தங்களின் வாழ்நாள் முழுவதும் இந்தத் துறையில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் நிபுணர்களும்கூட வெவ்வேறு விதமான கருத்துகளை நம் முன் வைக்கின்றனர்.

கருவில் குழந்தை உருவாகும்போதே, பாலினத்தை உறுதி செய்யும் செயல்முறைகள் ஆரம்பிக்கின்றன என்பதை நாம் அறிவோம். பெரும்பாலான பெண்கள் இரண்டு எக்ஸ் குரோமோசோம்களை கொண்டிருப்பார்கள். ஆண்களுக்கு எக்ஸ் & ஒய் குரோமோசோம்களை கொண்டிருப்பார்கள்.

ஒரு நபரின் பாலினத்தை இந்த குரோமோசோம்களே உறுதி செய்கின்றன. ஆனால் குழந்தை பிறப்புக்கு முன்பும், பருவமடையும் போதிலும், ஹார்மோன்களும் இதில் முக்கியப் பங்காற்றுகின்றன. கருவில் குழந்தை வளர்ந்து கொண்டிருக்கும்போதே ஹார்மோன்கள் இனப்பெருக்க உறுப்புகளின் வளர்ச்சிக்கு உதவுகின்றன.

ஆனால் ஒரு சில நேரங்களில், குழந்தைகளின் பாலுறுப்புகள் வளர்ச்சி அடைவதில்லை. இது வேறுபட்ட பால் வளர்ச்சி (DSD - differences of sex development) என அறியப்படுகிறது.

குழந்தைகள் கருவில் இருக்கும் போதே ஜீன்கள், ஹார்மோன்கள், பாலுறுப்புகள் தொடர்பான 40க்கும் மேற்பட்ட மருத்துவ நிலையைக் கொண்டிருப்பவர்களை வேறுபட்ட பால் வளர்ச்சி உடையவர்கள் என்று கூறுகிறோம். பெரும்பாலான மக்களிடம் இருந்து இவர்களின் பால் வளர்ச்சி வேறுபட்டதாக இருக்கும் என்பதே இதன் பொருள்.

குரோமோசோம்களில் ஏற்படும் அசாதாரண நிலை மிகவும் அரிதானது. ஆனால் பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக் குத்துச் சண்டை போட்டியில் ஏற்பட்ட சர்ச்சை இதன் மீது தனி கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாலின சர்ச்சையில் சிக்கியுள்ள இரண்டு வீராங்கனைகள் பற்றி நமக்குத் தெரிந்தது என்ன?

சர்வதேச குத்துச்சண்டை கூட்டமைப்பின் தலைமை அதிகாரி க்றிஸ் ரோபர்ட்ஸ் பிபிசி ஸ்போர்ட்டிடம் பேசியபோது, இரண்டு வீராங்கனைகளும் மருத்துவப் பரிசோதனைக்கு ஒப்புக் கொண்ட பிறகு, அவர்கள் இருவரிடமும் எக்ஸ் மற்றும் ஒய் குரோமோசோம்கள் இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் இந்த விவகாரம் அவ்வளவு எளிமையானது அல்ல.

ஏனென்றால் மரபணு வேறுபாடுகள் அதிக அளவில் உள்ளன. சில நிபுணர்கள், "ஒய் குரோமோசோம்களை கொண்டிருக்கும் அனைத்து நபர்களும் ஆண்கள்தான் என்றும் ஒய் குரோமோசோம்கள் இல்லாத அனைவரும் பெண்கள்தான் என்று கூற முடியாது" என்கிறார்கள்.

ஒருவர் ஆணா அல்லது பெண்ணா என்பதற்கான பதிலை ஒருவரிடம் காணப்படும் ஒய் குரோமோசோமை வைத்து மட்டுமே தீர்மானிக்க இயலாது, என்கிறார் பேராசிரியர் அலுன் வில்லியம்ஸ். மான்செஸ்டர் மெட்ரோபொலிட்டன் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் அவர் விளையாட்டு செயல்திறனுடன் தொடர்புடைய மரபணு காரணிகளை ஆய்வு செய்து வருகிறார்.

"ஒய் குரோமோசோம்களை கொண்டிருக்கும் நபர்களில் பெரும்பாலானோர் ஆண்கள் எனக் கருதுவது வெளிப்படையாக ஒரு நல்ல குறியீடு. ஆனால் அது சிறப்பான குறியீடு என்று கூற முடியாது," என்றார் அலூன்.

வேறுபட்ட பால் வளர்ச்சி (DSD) நிலையைக் கொண்டிருக்கும் சில நபர்களுக்கு ஒய் குரோமோசோம், ஆண்களிடம் காணப்படும் ஒய் குரோமோசோம் போன்று முழுமையாக வளர்ச்சி அடைவதில்லை. சில மரபணு அம்சங்கள் குறைந்திருக்கலாம். சேதம் அடைந்திருக்கலாம் அல்லது எக்ஸ் குரோமோசோம்களின் மரபணு அம்சங்களை அந்த ஒய் குரோமோசோம் பெற்றிருக்கலாம். இது அவர்களிடம் உள்ள மரபணு நிலையைப் பொறுத்து மாறுபடும்.

ஆண் அல்லது பெண் என்பதைத் தீர்மானிக்கும் முக்கியமான மரபணு, ஒய் குரோமோசோமின் பாலினத்தைத் தீர்மானிக்கும் பகுதி (SRY, sex-determining region of the Y chromosome).

இதைத்தான் ஆண்களை உருவாக்கும் மரபணு என்கிறோம். பாலின மேம்பாட்டுக்கு இது முக்கியமான ஒன்றாகும் எனக் கூறுகிறார் டாக்டர் எம்மா ஹில்டன். மரபணு கோளாறுகள் தொடர்பாக ஆய்வு செய்து வரும் 'டெவலப்மென்ட் பயாலஜிஸ்ட்' இவர். `செக்ஸ் மேட்டர்ஸ்’ என்ற தொண்டு நிறுவனத்தின் அறங்காவலராக இருக்கும் இவர், இமானேவும், லின் யூ டிங்கும் மேற்கொண்டு சோதனைகளைச் செய்யும் வரை போட்டிகளில் பங்கேற்கக் கூடாது என்று தெரிவித்தார்.

 

ஆணா பெண்ணா என்பதை நிர்ணயிக்கிறதா SRY ஜீன்?

இமானே கெலிஃபும் ஏஞ்சலா கரினியும்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,46 நொடிகளில் போட்டியில் இருந்து இத்தாலியின் ஏஞ்சலா கரினி வெளியேறியது இந்த பாலின சர்ச்சையின் முதல் புள்ளியாக அமைந்தது

ஆண்களை உருவாக்கும் ஜீன் என்று டாக்டர் ஹில்டன் கூறும் ஜீன் இல்லாமல் எக்ஸ் மற்றும் ஒய் குரோமோசோம்களுடன் பிறந்த மக்களும் உள்ளனர். இவர்களிடம் டெஸ்டோஸ்டிரோன் வளர்ச்சி இருக்காது. பெண்களின் உடல் அமைப்பை அவர்கள் கொண்டிருப்பார்கள் என்கிறார் ஹில்டன்.

எனவே XY குரோமோசோம்களை கண்டறியும் சோதனை ஒரு முழுமையான முடிவைத் தருவதில்லை. மேலும் இந்த இரண்டு வீராங்கனைகளுக்கும் எத்தகைய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது என்பது தொடர்பான தகவல்களை சர்வதேச குத்துச்சண்டை கூட்டமைப்பு அறிவிக்கவில்லை.

ஆனால், XY குரோமோசோம்களை கொண்டிருக்கும் பெரும்பாலான மக்களிடம் SRY என்ற ஆண்களை உருவாக்கும் மரபணுக்கள் இடம் பெற்றுள்ளன என்றார் ஹில்டன். அவர்களுக்கு விதைப்பைகள் (Testicles) உடலுக்கு உள்ளே இருக்கும்.

"பருவம் எய்தியவுடன் அவர்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் சுரக்க ஆரம்பித்துவிடும். இதுதான் விளையாட்டில் ஆண்களுக்கான அதிக நன்மைகளைத் தரும் என்ற கூற்றை உறுதி செய்கிறது" என்றார் ஹில்டன்.

இதற்கு ஒரு சிறப்பான உதாரணம் காஸ்டர் செமென்யா. இரண்டு முறை ஒலிம்பிக்கில் தங்கமும் மூன்று முறை உலக சாம்பியன் பட்டத்தையும் பெற்ற தடகள வீரர். ஆனால் அலுன் வில்லியம்ஸ் இதுகுறித்துப் பேசும்போது, DSD மரபணு நிலையைப் பெற்றுள்ளவர்கள் ஆண்கள் பெற்றிருக்கும் அனைத்து அனுகூலத்தையும் பெற்றிருப்பார்கள் என்பதை உறுதி செய்ய நேரடி ஆதாரம் ஏதும் இல்லை என்று கூறுகிறார்.

ஆணுறுப்பு வளரத் தேவைப்படும் மரபணுவில் ஏற்படும் பிறழ்வுதான் இங்கு சவாலைக் கொண்டுள்ளது. காஸ்டர் செமென்யாவை போன்றே மரபணு நிலையைக் கொண்டுள்ள எவருக்கும் அவர்களின் மரபணுவில் ஒரு பிறழ்வு ஏற்பட்டு, அது சாதாரணமாகச் செயல்படுவதை நிறுத்துகிறது.

கருவறையில் இருக்கும்போது ஆண்களாகவே அவர்களின் உடல் தோற்றம் வளர்ச்சி அடையும். அந்த வளர்ச்சியின் இறுதிக் கட்டமாக ஆணுறுப்பு வளர்ச்சி அடையும். அந்த வளர்ச்சி அவர்களிடம் ஏற்படாத பட்சத்தில் அவர்கள் பெண்ணுறுப்பு மற்றும் க்ளிட்டோரியஸை பெறுவார்கள். ஆனால் அவர்களிடம் பெண்களுக்கான இனப்பெருக்க உறுப்புகளான கருப்பை, கருப்பை வாய் போன்றவை இருக்காது.

அவர்களுக்கு மாதாந்திர உதிரப்போக்கும் இருக்காது. அவர்களால் கர்ப்பம் தரிக்கவும் முடியாது. ஆண்களுடன் உடலுறவு கொள்வது கடினமாக இருக்கும். உங்கள் மரபணுவில் பிறழ்வு ஏற்பட்டுள்ளதை அறியும்போது அது உங்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும்.

 
பாலின சர்ச்சையை எதிர்கொண்ட பெண் வீராங்கனை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இதர போட்டியாளர்களுடன் தென்னாப்பிரிக்க தடகள வீராங்கனை காஸ்டர் செமென்செமென்யா

கடந்த 30 ஆண்டுகளாக DSD மக்கள் குறித்து ஆய்வு செய்து வரும் நாளமில்லா சுரப்பு சிறப்புப் பிரிவு பேராசிரியரான க்ளாஸ் ஹோஜ்ப்ஜெர்க் கிராவ்ஹோல்ட், சமீபத்தில் 33 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவருக்கு XY குரோமோசோம்கள் இருப்பதைக் கண்டறிந்ததாகக் கூறுகிறார்.

ஆர்ஹுஸ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் அவரிடம் சிகிச்சைக்கு வந்த அந்தப் பெண், தான் ஏன் நீண்ட நாட்களாக கர்ப்பம் தரிக்கவில்லை என்ற கேள்வியோடு வந்தார். ஆய்வு முடிவுகளில் அவருக்கு கருப்பை இல்லை என்பது தெரிய வந்தது. அவரால் குழந்தை பெற்றுக்கொள்ள இயலாது என்று கூறியவுடன் அவர் மிகவும் மனம் உடைந்து போனார்.

ஒருவரின் பாலின அடையாளத்தை கேள்விக்குள்ளாக்குவதால் ஏற்படும் தாக்கங்கள் அவர்களைச் சீர்குலைக்கும். எனவேதான் அடிக்கடி தனது நோயாளிகளை உளவியலாளர்களிடம் ஆலோசனை பெறும்படி ஆலோசிப்பதாகக் கூறுகிறார் கிராவ்ஹோல்ட்.

அவருடைய புகைப்படத்தை உங்களிடம் காட்டினால், அவரை ஒரு பெண் என்றுதான் கூறுவீர்கள். அவருக்கு ஒரு பெண்ணுக்கான உடல் உள்ளது. ஆணை திருமணம் செய்துகொண்டார். பெண்ணாக உணர்கிறார். எனது பெரும்பாலான நோயாளிகளின் நிலை இதுதான்," என்கிறார் கிராவ்ஹோல்ட்.

மாதவிடாய் வராதபோது ஏன் மருத்துவரை அணுகவில்லை என்று கிராவ்ஹோல்ட் அவரிடம் கேட்டபோது, ஏற்கெனவே அவருடைய குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்படவில்லை. எனவே இது சாதாரண நிகழ்வுதான் என்று அவர் நினைத்ததாகத் தெரிவிக்கிறார் கிராவ்ஹோல்ட்.

பேராசிரியர் கிராவ்ஹோல்டின் XX குரோமோசோம்கள் கொண்ட ஆண்களையும் அவர் கண்டறிந்துள்ளார். இது இவை பொதுவாக பெண்களில் காணப்படும் குரோமோசோம்கள் ஆகும். "இந்த ஆண்களுக்கு மலட்டுத் தன்மை இருக்கும். தோற்றத்தில் அவர்கள் ஆண்களைப் போலவே இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் விதைப்பைகளின் அளவு சராசரியைவிட சிறியதாக இருக்கும். அது விந்தணுக்களை உற்பத்தி செய்யாது. அவர்கள் வயதாகும்போது, பெரும்பாலான ஆண்களுக்கு நிகழ்வது போலவே டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தி ஆவது நின்றுவிடுகிறது.

உலகின் சில பகுதிகளில், மாதவிடாய் மற்றும் பெண் உடற்கூறியல் பற்றி வெளிப்படையாகப் பேசுவது கலாசாரரீதியாக ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. உலகின் சில பகுதிகளில், பெண்கள் தங்கள் உடலில் வித்தியாசமான ஏதோ ஒன்று நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்வதற்கான கல்வி அறிவைப் பெற முடியாத நிலையில் உள்ளனர்.

இந்தக் காரணங்களால்தான் பல வேறுபட்ட பால் வளர்ச்சிக் குறைபாடுகள் இன்னும் கண்டறியப்படவில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அதாவது இது தொடர்பான விரிவான தரவுகள் நம்மிடம் இல்லை என்கிறார். ஆனால் கிராவோல்ட் டென்மார்க்கின் புள்ளிவிவரங்கள் ஒரு நல்ல வழிகாட்டியாக இருக்கும் என்று கூறுகிறார்.

"இந்தத் தரவுகளைச் சேகரிப்பதில் உலகின் மிகச் சிறந்த நாடாக டென்மார்க் திகழ்கிறது. எங்களிடம் குரோமோசோம் பரிசோதனை செய்த அனைத்து நபர்கள் குறித்த தரவுகளைக் கொண்ட ஒரு தேசிய பதிவேடு உள்ளது" என்றார் அவர்.

பெண்களில் XY குரோமோசோம்களை கொண்டவர்கள் மிக அரிதாகவே உள்ளனர் என்று அவர் கூறுகிறார். டென்மார்க்கில் 15,000இல் ஒரு பெண்ணுக்கு XY குரோமோசோம்கள் உள்ளன.

ஆனால் பல மரபணு நிலைகளை ஒன்றாகச் சேர்க்கும்போது, 300 பேரில் ஒருவர் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கலாம் என்று அவர் நம்புகிறார்.

"இந்த மாறுபாடுகள் நாம் நினைத்ததைவிட மிகவும் பொதுவானவை என்பதைத்தான் ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன. பல நோயாளிகள் தங்கள் வாழ்நாளின் பிற்காலத்தில்தான் இதுபோன்ற மரபணு நிலைகளைக் கண்டறிந்துள்ளனர். என்னிடம் வந்த மிகவும் வயதான நோயாளி 60 வயதானவர்" என்று பேராசிரியர் கிராவ்ஹோல்ட் கூறுகிறார்.

பாலின சர்ச்சை ஒலிம்பிக்கின் போக்கை மாற்றுமா?

பாலின பரிசோதனை விவகாரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,மனித டி.என்.ஏ-வின் மாதிரி

'வேறுபட்ட பாலின வளர்ச்சி உள்ளவர்களுக்கு விளையாட்டில் கூடுதல் நன்மை உண்டா?' என்ற கேள்விக்கான குறுகிய பதில், ஓர் உறுதியான முடிவை அடையப் போதுமான தரவு இல்லை என்பதுதான்.

"குறிப்பிட்ட DSD நிலையைக் கொண்ட நபர்கள் பெண்களைவிட சில நலன்களைக் கூடுதலாகப் பெற்றிருந்தால் அது எனக்கு ஆச்சரியமாக இருக்காது" என்கிறார் பேராசிரியர் அலூன். பெரிய தசைகள், பெரிய மற்றும் நீண்ட எலும்புகள், நுரையீரல், இதயம் போன்ற பெரிய உறுப்புகள் போன்றவை அந்த நன்மைகளில் சில.

அவர்கள் அதிக ஹீமோகுளோபின் அளவைக் கொண்டிருக்கலாம். இது வேலை செய்யும் தசைகளுக்குத் தேவையான ஆக்ஸிஜனை சிறப்பாக விநியோகிக்க வழிவகுக்கும் என்று மேற்கோள்காட்டுகிறார் அவர்.

"சில வகையான DSD நிலையைக் கொண்டவர்கள் துல்லியமான மரபணு காரணத்தைப் பொறுத்து, 0-100% வரையிலான சில அல்லது அனைத்து வகையிலும் மற்றவர்களைக் காட்டிலும் கூடுதல் நன்மைகளைக் கொண்டிருக்கலாம்" என்கிறார் அலூன்.

அவரது கருத்து அவரது துறையிலுள்ள நிபுணர்களின் கருத்தை ஒத்தது என்று அவர் நம்புகிறார், ஆனால் அதற்கு மேலும் சான்றுகள் தேவை.

இமானே கெலிஃப் மற்றும் லின் யூ-டிங்கை பொறுத்தவரை, அவர்களுக்கு DSD உள்ளதா, அதை ஒழுங்குப்படுத்த வேண்டுமா என்பதை அறிய நம்மிடம் போதுமான தகவல்கள் இல்லை.

பாலினத்தின் உயிரியலே சிக்கலானது என்பதால், ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் மட்டுமே நடைபெறும் இந்தப் போட்டிகளை ஒழுங்குப்படுத்துவதும் சிக்கலானது தான்.

டாக்டர் ஷேன் ஹெஃபர்னன் 'எலைட்' விளையாட்டுகளில் மூலக்கூறு மரபியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். மேலும் DSD உடைய போட்டியாளர்களைப் பற்றி தடகள வீரர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்த ஆய்வில் தற்போது பணியாற்றி வருகிறார். இவை அனைத்தும் தனிநபரின் மரபணு நிலையின் நுணுக்கத்தைப் பற்றியது என்று அவர் கூறுகிறார்.

எடுத்துக்காட்டாக, ஆண்ட்ரோஜன் இன்சென்ஸிடிவிடி சின்ட்ரோம் எனப்படும் DSD நிலையை உடைய பெண்களுக்கு XY குரோமோசோம்கள் உள்ளன. அவர்களின் உடல்கள் டெஸ்டோஸ்டிரோனை உற்பத்தி செய்கின்றன. ஆனால் அவர்களின் உடல்கள் அது செயல்படுவதை அனுமதிப்பதில்லை. எனவே அவர்கள் ஆண்களைப் போல டெஸ்டோஸ்டிரோன் மூலம் எந்த நன்மையையும் பெறுவதில்லை என்கிறார் ஷேன்.

DSD நிலை கொண்டவர்கள் கூடுதல் அனுகூலங்களைக் கொண்டுள்ளார்களா இல்லையா அல்லது அவர்கள் பெண்களுடன் சேர்ந்து போட்டியிடத் தகுதியுள்ளவர்களா இல்லையா என்பதை உறுதியாகச் சொல்ல அறிவியல் ரீதியில் ஆதாரங்கள் இல்லை என்கிறார் ஷேன்.

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அதன் தகுதி அளவுகோல்களை அறிவியலின் அடிப்படையில் கொண்டிருக்கவில்லை என்கிறார் அவர்.

ஒலிம்பிக் கமிட்டி, இவர்களுக்குக் கூடுதல் நன்மைகள் ஏதும் இல்லை என்ற அனுமானத்தைக் கொண்டிருப்பது கவலை அளிக்கிறது. இதற்கும் ஆதாரம் இல்லை. அதேபோன்று அவர்கள் இந்த மரபணு மாறுபாடுகளால் மட்டுமே கூடுதல் அனுகூலங்களைக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறவும் போதுமான ஆதாரங்கள் இல்லை, என்றார் ஷேன்.

“நம்மிடம் போதுமான தரவு இல்லை. பெண் பிரிவில் சேர்க்கப்படும் போது பலர் உணர்ச்சிவசப்பட்ட நிலைப்பாட்டை வைத்திருக்கிறார்கள். ஆனால் ஒலிம்பிக் கமிட்டி எந்தத் தரவுகளும் இல்லாமல் இந்த நிலையை எவ்வாறு நியாயப்படுத்த முடியும்?" என்ற கேள்வியை எழுப்பினார்.

ஒலிம்பிக் கமிட்டி, சர்வதேச கூட்டமைப்புகள் மற்றும் நிதியுதவி கவுன்சில்களை DSD நிலைகளைக் கொண்ட விளையாட்டு வீரர்கள் பற்றிய ஆராய்ச்சியில் முதலீடு செய்ய வலியுறுத்தும் பலரில் ஷேனும் ஒருவர். ஆனால் இது கடினமானது என்கிறார். ஏனென்றால் இந்த நிலைகளைக் கொண்ட விளையாட்டு வீரர்கள் பற்றிய பார்வை இதனால் மாறும்.

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்பான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் ரீம் அல்சலேம் உட்படப் பலரும் அடுத்த ஒலிம்பிக்கின் போது கட்டாய பாலின பரிசோதனை பெண்களுக்கு நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.

விளையாட்டு வீரர்கள் தங்களின் முதல் போட்டியின் போதே இத்தகைய பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். அவர்கள் பதக்கங்களை வெல்வதற்கு முன் மற்றும் கவனத்தை ஈர்க்கும் முன் இது நடத்தப்பட வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே, இமானே கெலிஃபுக்கு நடந்தது போன்ற நிகழ்வுகள் தவிர்க்கப்படும் என்றார் ஹில்டன்.

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 2024

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,செய்தியாளர்கள் சந்திப்பில் அழுத இத்தாலி குத்துசண்டை வீரர் ஏஞ்சலா கரினி

ஆனால் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் இது குறித்து மாறுபட்ட கருத்துகள் உள்ளன. "ஒருவரின் பாலினம் மற்றும் விளையாட்டில் சாத்தியமான நன்மைகள் குறித்து உறுதியான முடிவை அடைய ஒரு சோதனை மட்டுமே போதுமானதாக இருக்காது" என்கிறார் பேராசிரியர் வில்லியம்ஸ்.

ஒரு விரிவான பாலின சோதனை மூன்று வகைகளை உள்ளடக்கியிருக்க வேண்டும் என்று அவர் வாதிடுகிறார்:

  • மரபியல் (Y குரோமோசோம் மற்றும் ஆண் பாலினத்தைத் தீர்மானிக்கும் மரபணுவை கண்டறிவது).
  • ஹார்மோன்கள் (டெஸ்டோஸ்டிரோன் உட்பட பல ஹார்மோன்களின் அளவை பரிசோதனை செய்வது)
  • டெஸ்டோஸ்டிரோன் போன்ற ஹார்மோன்களுக்கு உடல் ஆற்றும் எதிர்வினை. சிலருக்கு Y குரோமோசோம் இருக்கலாம், ஆனால் டெஸ்டோஸ்டிரோனால் அவர்களுக்கு எந்தப் பலனும் இல்லை.

இந்தப் பரிசோதனைகள் தற்போது செய்யப்படவில்லை என்று அவர் நம்புகிறார். ஏனெனில் இது விலை உயர்ந்தது. இதற்கு அதிக நிபுணத்துவம் கொண்டவர்கள் தேவை மற்றும் சோதனை நடைமுறை பற்றி நெறிமுறை தொடர்பான கவலைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

"இந்த மதிப்பீடு அவமானகரமானதாக இருக்கலாம். உங்கள் மார்பகத்தின் அளவு மற்றும் க்ளிடோரியஸ், குரலின் ஆழம், உங்கள் உடல் முடியின் நீளம் போன்றவை சோதிக்கப்படும்," என்றார்.

ஒன்று மட்டும் நிச்சயம் : இந்த சர்ச்சை தற்போது ஓயாது.

தற்போதைக்கு, வேறுபட்ட குரோமோசோம் அமைப்புகளைக் கொண்டவர்களை விளையாட்டுத் துறையில் எவ்வாறு வகைப்படுத்த வேண்டும் என்பதை உறுதியாகக் கூற அறிவியலால் இயலவில்லை.

அறிவியலைப் புரிந்துகொள்வதற்காகத் தங்கள் வாழ்க்கையைச் செலவிடுபவர்களுக்கு, இந்த சமீபத்திய சர்ச்சை மிகவும் தேவையான ஆராய்ச்சியைத் தூண்டும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.