Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாகாணசபைத் தேர்தல் தனிநபர் பிரேரணையும் தனிநபர்களின் நிகழ்ச்சித் திட்டங்களும்

Digital News Team

2017 ஆம் ஆண்டில் மாகாணசபைத் தேர்தல்களை ஒத்திவைக்கும் நோக்கில்  ரணில் – சுமந்திரன் கூட்டு முயற்சியில் கொண்டுவரப்பட்ட ‘ மாகாணசபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டம்’ ஆகும். இதை இருவரின் கூட்டுமுயற்சி எனக் கூறுவதன் காரணம், இருவருக்கும் அத்தேர்தலை ஒத்திவைக்கவேண்டிய தேவை இருந்ததுடன், நல்லாட்சிக் காலத்தில் சம்பந்தன் தலைமையிலான எதிர்க்கட்சியும் ஆளுங்கட்சியின் ஒரு அங்கமாகச் செயற்பட்டமையுமாகும். தென்னிலங்கையில் நல்லாட்சியாளர்கள் மீது அதிகரித்து வந்த அதிருப்தியினால் மாகாணசபைத் தேர்தல்கள் தனக்குப் பாதகமாக அமைந்துவிடலாம் என ரணில் தரப்புக்கு ஏற்பட்ட பயம் ஒருபுறமும், மறுபுறத்தில் அந்நேரத்தில் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு அதிகரித்துவந்த ஆதரவினாலும் தமிழரசுக்கட்சி மீதான மக்களின் அதிருப்தியினாலும் வடக்கு மாகாணசபையை இழந்துவிடுவோமென்று சுமந்திரன் தரப்புக்கு ஏற்பட்ட பயத்தினாலும் ஏற்படுத்தப்பட்ட விளைவே மேற்குறித்த சட்டமாகும்.

                                                                                                         கந்தையா அருந்தவபாலன் 

மாகாண சபைகளுக்கான தேர்தலை பழைய முறையில் நடத்துவதற்குத் தேவையான சட்டமூலமொன்றுக்காக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனால் 2019 ஆம் ஆண்டில் முன்வைக்கப்பட்ட தனிநபர் பிரேரணை மீண்டும் தூசிதட்டி எடுக்கப்பட்டு சென்றவாரம் இரண்டாம் வாசிப்புக்காக சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. அப்பிரேரணை தொடர்பாக ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலரின் கருத்துரைகளைத் தொடர்ந்து சபாநாயகரினால் அது சட்டவாக்கக் குழுவின் பரிந்துரைகளுக்காக அனுப்பிவைக்கப்படவுள்ளது.

அதன்பின்னர் அது மூன்றாம் வாசிப்புக்காக சபையில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டதன் பின்னரே சட்ட வலுவைப் பெறும். அது எப்போது சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என்பதற்கும், நிறைவேற்றப்பட்டாலும் அதற்கமைய உடனடியாகத் தேர்தல் நடக்குமென்பதற்கும் எத்தகைய உத்தரவாதமும் இலங்கை அரசியலமைப்பில் இல்லை. அப்படியிருக்கும்போது வேட்பு மனுக்கள் கோரப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலையே கிடப்பில் போட்டுவிட்டு ஜனாதிபதித் தேர்தல் ஒன்று நடைபெறவிருக்கும் இந்நேரத்தில் மிக அவசர அவசரமாக இந்த தனிநபர் பிரேரணை இரண்டாம் வாசிப்புக்காக சபையில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், அது சட்டமாக நிறைவேற்றப்பட்டுவிட்டதான ஒருதொனியில் அதிகளவு முக்கியப்படுத்தப்படுவதன் நோக்கம் என்ன? உண்மையில் இது  நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகள் மீதான பற்றா அல்லது ஜனாதிபதித் தேர்தலில் தங்கள் தங்கள் தனிப்பட்ட நோக்கங்களை அடைந்து கொள்வதற்கான ஒருசிலரின் முன்னகர்வா?

இலங்கையில் நீடித்து வந்த இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் பொருட்டு 1987 இல் கைச்சாத்திடப்பட்ட இலங்கை – இந்திய ஒப்பந்தத்திற்கமைய இலங்கையின் அரசியலமைப்பிற்கு கொண்டுவரப்பட்ட 13 ஆம் திருத்தத்தின் பிரகாரம் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டதுடன், மாகாணசபைத் தேர்தல் சட்டமும் உருவாக்கப்பட்டது . இம்மாகாண சபைகள் வடக்கு, கிழக்குக்கு மட்டுமல்லாமல் நாட்டின் ஏனைய ஏழு மாகாணங்களுக்கும் உருவாக்கப்பட்டதுடன், வடக்கும் கிழக்கும் தற்காலிக இணைப்பினடிப்படையில் ஒரே மாகாணமாக  கருதப்பட்டு 1988 இல் முதலாவது தேர்தல் நடத்தப்பட்டது. 1990 இல் இந்தியப் படையின் வெளியேற்றத்துடன் வடக்கு, கிழக்கு மாகாண சபையின்  முதலமைச்சர் வரதராஜப்பெருமாளும் வெளியேற அப்போதைய ஜனாதிபதி பிரேமதாச அச்சபையைக் கலைத்தார். பின்னர் 2006 இல் ஜே.வி. பி உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் தீர்ப்பின் பிரகாரம் இணைக்கப்பட்டிருந்த வடக்கு, கிழக்கு பிரிக்கப்பட்டு தனித்தனி மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன. பிரிக்கப்பட்ட கிழக்கு மாகாணசபைக்கு முதலாவது தேர்தல் 2008 இலும் இரண்டாவது தேர்தல் 2012 இலும் நடத்தப்பட்டபோதும் வடக்கு மாகாண சபைக்கு 2013இல் மட்டும் ஒரேயொரு தேர்தல் நடத்தப்பட்டது. 2017 ஆம் ஆண்டில் அப்போதைய நல்லாட்சி அரசாங்கம் நடைமுறையிலிருந்த மாகாண சபைத் தேர்தல் சட்டத்தை திருத்துவதற்கான பிரேரணையை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியதைத் தொடர்ந்து மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த முடியாத நிலைமை உருவாக்கப்பட்டது. தற்போது மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்துவதற்கான வழிகளைத் திறப்பதற்கு  இரண்டு தெரிவுகள் உள்ளன. ஒன்று நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்ட சட்டத்தினடிப்படையில் புதிய தேர்தல் சட்டமொன்றைக் கொண்டு வந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதன் மூலம் அப்புதிய சட்டத்திற்கமைய தேர்தலை நடத்துவது. இது உடனடிச் சாத்தியமான ஒன்றன்று.

ranil-1.jpg

இரண்டாவது பழைய முறையில் தேர்தலை நடத்துவதற்கான சட்ட அங்கீகாரத்தை  நாடாளுமன்றம் வழங்குவதன் மூலம் தேர்தலை நடத்துவது. இது சாதாரண பெரும்பானமையுடன் நிறைவேற்றக்கூடிய ஒன்றாகும். இதற்காகவே சுமந்திரனால் தனிநபர் பிரேரணை ஒன்று 2019 இல் முன்வைக்கப்பட்டது. அதுவே சென்றவாரத்தில் நாடாளுமன்றத்தில் எடுக்கப்பட்டது.

இலங்கையில் அரசியலமைக்குப்புக்கான சில திருத்தங்கள் உட்பட பல சட்டங்கள் நாட்டின், மக்களின் நலனைவிட ஆட்சியாளரின் நலனுக்காகவே கொண்டுவரப்பட்டமை நாடறிந்த உண்மை. இந்த வகையில் 2017ஆம் ஆண்டு மாகாண சபைகளைக் கலைத்தல், அதன் காலத்தை நீடித்தல், அதனது அதிகாரங்களைக் கையகப்படுத்தல்  உட்பட பல விடயங்களை உள்ளடக்கி அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்தமாக ஒன்றைக் கொண்டுவருவதற்கான முன்னெடுப்பொன்றை அப்போதைய நல்லாட்சி அரசாங்கம் கொண்டுவர முயற்சித்தது. இதற்கான முதன்மை நோக்கம் மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்தாதிருப்பது அல்லது விரும்பியவாறு காலந்தாழ்த்துவதாகும். காரணம் நல்லாட்சி அரசாங்கத்தின் மீதான மக்களின் அதிருப்தி அதிகரித்து வந்ததனால் தேர்தல் ஒன்றின் மூலம் மாகாண சபைகள் எதிர்க்கட்சியான பொதுஜன பெரமுனவுக்கு சென்றுவிடும் என்ற பயம். ஆனால் அதனை சட்டமாக்குவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியமென உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதால் அவர்கள் விரும்பியதுபோல அதனை இலகுவில்  செய்ய முடியவில்லை. எனவே மாகாணசபைத் தேர்தல்களைத் தவிர்க்கும் ஒரு உபாயமாகவே ‘ மாகாண சபைத்தேர்தல்கள் திருத்தச் சட்டம்’ அப்போது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதனால் ஏற்படக்கூடிய பாதக விளைவுகளைச் சுட்டிக்காட்டி அந்நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ, பிரதம நீதியரசர் சரத் என். சில்வா உட்பட மனித உரிமை அமைப்புக்கள் பலவும் தமது ஆட்சேபனைகள் தெரிவித்திருந்த போதும் நல்லாட்சி அரசாங்கம் குறிப்பாக தற்போதைய ஜனாதிபதி, அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க அதனை எள்ளளவேனும் கவனத்தில் கொள்ளவில்லை. காரணம் அந்நேரத்தில் ரணிலுக்கு மட்டுமல்ல நல்லாட்சி அரசாங்கத்தின் உத்தியோகப்பற்றற்ற பிரதமர் தானே என தனது தொண்டர்களுக்கு கூறிந்திரிந்த சுமந்திரனுக்கும் அது தேவைப்பட்டிருந்தது.

ஒரு நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் பண்புகளில் பிரதானமாக இருப்பது உரியகாலங்களில் நேர்மையான முறையில் தேர்தல்களை நடத்தி மக்களின் கருத்துகளுக்கு செவிசாய்ப்பது. ஆனால் இலங்கையில் பல சட்டங்கள் மட்டுமன்றி பல தேர்தல்களும்கூட ஆட்சியாளர்களின் நலன்களைப் பேணும்வகையில் கையாளப்பட்டு வருகின்றன. தேர்தலைப் பிற்போடுதல், உரியகாலத்துக்கு முன்னரே நடத்துதல், வேறுமுறைகளைக் கையாளுதல் மூலம் இவை இடம்பெற்று வருகின்றன. தங்களின் இத்தகைய செயற்பாடுகளை நியாயப்படுத்துவதற்கு ஆட்சியாளர்கள் ஆயிரம் காரணங்களை கைவசம் வைத்திருப்பார்கள். இதற்கான அண்மிய உதாரணமாக இருப்பது உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டிருப்பது ஆகும். வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டு சுமார் 70% ஆன தேர்தல் பணிகள் நிறைவடைந்துவிட்ட ஒரு நிலையில் போதிய நிதியில்லை என்று கூறி நிதியமைச்சையும் தன்வசம் வைத்துள்ள ஜனாதிபதி அத்தேர்தலுக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளார். அது மட்டுமன்றி ஜனாதிபதித் தேர்தலையும் தள்ளிவைப்பதற்கான சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அரசியலமைப்பும், அதற்கான உச்ச நீதிமன்றத்தின் சரியான பொருட்கோடலும் அதற்கு இடமளிக்கவில்லை. ஆட்சியைக் கொண்டு செல்வதில் சிக்கல்நிலை தோன்றும்போது அல்லது தேர்தலை நடத்த முடியாத இக்கட்டான ஒரு நிலை காணப்படும்போது நாட்டு நலன்கருதி எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் முற்கூட்டித் தேர்தலை நடத்துவது அல்லது குறிப்பிட்ட காலத்துக்கு அதை ஒத்திவைப்பது என்பது ஜனநாயக வழிமுறைகளாக ஏற்கப்படுகின்றன. ஆனால் ஆட்சியாளர்கள் நியாயமான காரணமின்றி தமது நலன்களுக்காக தன்னிச்சையாக அதனை செய்துவருவது இலங்கையின் வரலாறாகி வருகிறது. இந்த வரலாற்றைத் தொடக்கி வைத்த பெருமை? இலங்கையின் முதலாவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியும், தற்போதைய ஜனாதிபதியின் மாமனாருமான ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவையே பெருமளவுக்குச் சேரும்.

1977 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அமோக வெற்றிபெற்று 80% இற்கும் மேற்பட்ட நாடாளுமன்ற ஆசனங்களைக் கைப்பற்றிக்கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்  ஜே. ஆர். ஜெயவர்த்தனா இலங்கையின் இரண்டாவது குடியரசு அரசியலமைப்பைக் கொண்டுவந்து நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக தன்னை மாற்றிக்கொண்டது மட்டுமன்றி 1983 இல் நடக்க வேண்டிய நாடாளுமன்றப் பொதுத்தேர்தலை நடத்தாது தவிர்ப்பதற்காக 1982 டிசம்பரில் மக்களின் கருத்தறியும் சர்வஜன வாக்கெடுப்பு முறையை முன்முதலாகக் கையாண்டார். அதாவது அப்போதைய நாடாளுமன்றத்தின் ஆயுட்காலத்தை 1989 வரை தொடர்வதற்கான மக்களின் சம்மதத்தைப் பெறுவதற்கு புதிய சட்டமொன்றை நிறைவேற்றி, சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி, அதில் அவர் வெற்றியும் பெற்றார். இதற்கான கருவை ஜே.ஆர். ஜெயவர்த்தன அதற்கு முன்னர் ஆட்சியிலிருந்த சிறிமா அம்மையாரிடமிருந்து பெற்றிருக்கக்கூடும். 1970 இல் ஆட்சியைக் கைப்பற்றிய சிறிமாவோ பண்டாரநாயக்க 1972 இல் முதலாவது குடியரசு அரசியலமைப்பை அறிமுகப்படுத்தி அதன்மூலம் 1975 இல் நடக்கவேண்டிய நாடாளுமன்றப் பொதுத் தேர்தலை 1977 இற்கு தள்ளிவைத்திருந்தார். இவ்வாறு புதிய சட்டங்களை இயற்றியோ அல்லது இருக்கும் சட்டங்களிலுள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தியோ ஆட்சியாளர்கள் தமக்கேற்ற வகையில் தேர்தல்களைத் தீர்மானித்தனர். இது சந்திரிகா, மஹிந்த, ரணில் என இன்றுவரை தொடர்கிறது.

 

ஆட்சியாளரின் இத்தகைய பாரம்பரியத்தின் ஒரு தொடர்ச்சியாகவே 2017 ஆம் ஆண்டில் மாகாணசபைத் தேர்தல்களை ஒத்திவைக்கும் நோக்கில்  ரணில் – சுமந்திரன் கூட்டு முயற்சியில் கொண்டுவரப்பட்ட ‘ மாகாணசபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டம்’ ஆகும். இதை இருவரின் கூட்டுமுயற்சி எனக் கூறுவதன் காரணம், இருவருக்கும் அத்தேர்தலை ஒத்திவைக்கவேண்டிய தேவை இருந்ததுடன், நல்லாட்சிக் காலத்தில் சம்பந்தன் தலைமையிலான எதிர்க்கட்சியும் ஆளுங்கட்சியின் ஒரு அங்கமாகச் செயற்பட்டமையுமாகும். தென்னிலங்கையில் நல்லாட்சியாளர்கள் மீது அதிகரித்து வந்த அதிருப்தியினால் மாகாணசபைத் தேர்தல்கள் தனக்குப் பாதகமாக அமைந்துவிடலாம் என ரணில் தரப்புக்கு ஏற்பட்ட பயம் ஒருபுறமும், மறுபுறத்தில் அந்நேரத்தில் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு அதிகரித்துவந்த ஆதரவினாலும் தமிழரசுக்கட்சி மீதான மக்களின் அதிருப்தியினாலும் வடக்கு மாகாணசபையை இழந்துவிடுவோமென்று சுமந்திரன் தரப்புக்கு ஏற்பட்ட பயத்தினாலும் ஏற்படுத்தப்பட்ட விளைவே மேற்குறித்த சட்டமாகும். சுமந்திரனின் இந்தச் செயற்பாட்டினால் தமிழ் மக்கள் மத்தியில் மட்டுமன்றி தமிழ்த் தேசியக் கூட்மைப்பின் பங்காளிகளிடையேயும் சுமந்திரன் மீதான விமர்சனங்கள் அதிகரிக்கத் தொடங்க, அதனைத் தணித்து தன்னை உத்தமனாகக் காட்டுவதற்காக அவரால் 2019இல் முன்வைக்கப்பட்டதே தற்போது பேசுபொருளாகியுள்ள தனிநபர் பிரேரணையாகும்.

2017 இல் தத்தமது தேவைகளுக்காக ரணிலும் சுமந்திரனும் போட்ட மாகாணசபைத் தேர்தல் தொடர்பான முடிச்சை இப்போதும் தத்தமது தேவைகளுக்காகவே அவிழ்க்கும் நாடகமொன்றை அரங்கேற்ற முயற்சிக்கிறார்கள் என்று கருதலாம். இதனை ஏன் பெரும்பாலான மக்கள் நாடகமாகக் கருதுகிறார்கள்? இந்நேரத்தில் இதை அவ்விருவரைத்தவிர வேறெவரும் அவசரமான ஒன்றாகக் கருதவில்லை.  அத்துடன் புதிய ஜனாதிபதி பதவியேற்பதற்கிடையில் இது சட்டமாக நிறைவேற்றப்படுவதற்கான சாத்தியம் மிகக் குறைவு. அவ்வாறு நிறைவேற்றப்பட்டாலும்கூட அதற்கமைய மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடத்துவது  புதிய ஜனாதிபதியையும் புதிய அரசியல் களநிலைமைகளையும் பொறுத்த விடயம்.  இப்படியிருக்கையில் இந்த நாடகத்தை இருவரும் அரங்கேற்ற விழைவதன் நோக்கம்தான் என்ன? இதற்கான விடை இலகுவானது. தேர்தலில் வெல்வதற்கு ரணிலுக்கு தமிழ், முஸ்லிம் மக்களது வாக்குகள் தேவை. அடுத்த ஜனாதிபதியும் நான்தான் என்ற தோரணையில் சிங்கள வாக்காளர்களைக் கவர்வதற்காக அள்ளி வழங்கும் பல வாக்குறுதிகள் போல தமிழ், முஸ்லிம் வாக்காளர்களுக்கு அள்ளி வழங்கும் வாக்குறுதிகளில் இதுவும் ஒன்று. தமிழ் வாக்குகளைக் குறிப்பாக வடக்கின் வாக்குகளை ரணிலுக்குப் பெற்றுக் கொடுப்பதன் மூலம் தனது இரண்டாவது ஆட்டத்துக்கான களத்தைத் திறக்கலாம் என்பது சுமந்திரனின் எண்ணம். மாகாண சபை தொடர்பாக மக்கள் அதிகம் அலட்டிக் கொள்ளாவிட்டாலும் தமிழரசுக் கட்சித் தேர்தலில் இழந்துவிட்ட தனது விம்பத்தை மீளவரைவதற்கும், தனது ஆதரவாளர்களைத் தக்க வைத்து ரணிலுக்கு ஆதரவாகத் தேர்தல் வேலைகளைச் செய்வதற்கும், ரணிலுக்குத் தான் நல்ல விசுவாசியாக இருப்பதை வெளிப்படுத்தவும் சுமந்திரனுக்கு இந்த நாடகத்தை அரங்கேற்றவேண்டிய தேவை உள்ளது.

அதுவும் தமிழ் மக்கள் மத்தியில் பொதுவேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட்டிருக்கும் சூழ்நிலையில் சுமந்திரனுக்கு இது இன்னும் அவசியமான ஒன்றாக மாறியுள்ளது. இதுவரை காலமும் சஜித் தரப்புடன் ஒட்டிக்கொண்டிருந்தது மட்டுமல்லாமல் ரணிலுக்கெதிராக மிகமோசமான விமர்சனங்களை முன்வைத்து வந்தவர் சுமந்திரன். சென்ற ஆண்டு வவுனியாவில் நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் இளைஞர்களுக்கான ஒன்றுகூடலில் நாட்டின் கௌரவத்துக்குரிய ஜனாதிபதியான ரணிலை ஒருமையில் திட்டிய சுமந்திரன் இனிவருங்காலத்தில் எப்படி அவரை அழைக்கப்போகிறார் என்பதை மக்கள் ஆவலுடன் பார்த்திருக்கின்றனர். முன்னர் ரணிலுக்கு எதிரானவராகத் சுமந்திரன் தன்னைக் காட்டிக் கொண்டது நாடகமா? அல்லது இப்போது மீண்டும் சேர்ந்து செய்வது நாடகமா? என்பதில் ஐயமிருந்தாலும் சுமந்திரன் பெரும்பாலும் ஆடுவது நாடகம்தான் என்பதில் பெரும்பாலான மக்களுக்கு ஐயமில்லை. இதில் கவலைக்குரிய விடயம் என்னவெனில் சுமந்திரன் சஜித்துடன் ஒட்டுறவாடியதை நம்பி  இதுவரை சஜித்தைப் புகழ்ந்து தள்ளிய அவரது நெருங்கிய ஆதரவாளர்கள் இனி என்ன செய்வது என்று திகைத்து நிற்பதுதான்.

பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களான ரணில், சஜித், அனுரகுமார மூவரதும் தேர்தல் விஞ்ஞாபனம் இன்னும் வெளிவராவிடினும் இந்த மூவரும் தாம் ஜனாதிபதியானால் அரசியலமைப்பிலுள்ளபடி மாகாண சபைகளுக்கான அதிகாரங்களைத் தருவதாகப் பொதுவெளியில் வாக்குறுதியளித்துள்ளார்கள். அவ்வாக்குறுதி உள்ளத்திலிருந்தானதா அல்லது உதட்டிலிருந்தானதா என்பதை எதிர்காலத்தில்தான் அறியமுடியும்.

இவர்களில் ஒருவர் ஜனாதிபதியாக வருமிடத்து அவர்கள் வாக்குறுதி அளித்தபடி மாகாணசபைச் சட்டங்களில் பல திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். அதன்பின் மாகாணசபைகளுக்கான தேர்தல் இடம்பெற்றால் அது பெறுமதி உடையதாயிருக்கும். அதுவே தமிழ் மக்களின் தற்போதைய எதிர்பார்ப்புமாகும். அவ்வாறிருக்கையில் ரணிலும் சுமந்திரனும் அவசரப்பட்டு ஆடும் இந்த ஆட்டம் தமிழ் மக்களுக்கானது என்பதைவிட தனிநபர்களின் நிகழ்ச்சி நிரலாகவே கொள்ளப்படவேண்டும்.

Thinakkural.lk

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.