Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
சீனா மற்றும் பிலிப்பைன்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், டெஸ்ஸா வோங் மற்றும் ஜோயல் குயின்டோ
  • பதவி, பிபிசி நியூஸ், சிங்கப்பூரில் இருந்து
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

சீனாவுக்கும், பிலிப்பைன்ஸுக்கும் இடையே ஏற்கெனவே கடல் எல்லை தொடர்பான பிரச்னை நிலவி வருகிறது. இந்த நிலையில் இரு நாடுகளும் தென்சீனக் கடலில் மற்றொரு இடம் தொடர்பாக மோதிக் கொண்டுள்ளன.

சீனா, பிலிப்பைன்ஸ் ஆகிய இரு நாடுகளுமே கடலில் உள்ள பல்வேறு தீவுகள் மற்றும் பகுதிகளுக்கு உரிமை கோருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக இந்த மோதல் அதிகரித்து வருகிறது. இரு நாட்டு கப்பல்களும் மோதிக்கொள்ளுதல், கைகலப்புகள் மற்றும் போர் மிரட்டல் குற்றச்சாட்டுகளும் அதிகரித்து வருகின்றன.

ஆனால் கடந்த வாரம் இரு நாட்டு கப்பல்களும், சபீனா மணல் திட்டு அருகே மோதிக்கொண்டபோது இந்தப் பிரச்னை தீவிரமானது. கப்பலை வேண்டுமென்றே மோதியதாக இரு நாடுகளும் பரஸ்பரம் குற்றம் சாட்டுகின்றன.

சீனாவால் ஜியான்பின் ஜியாவோ என்றும், பிலிப்பைன்ஸால் எஸ்கோடா ஷோல் என்றும் அழைக்கப்படும் சபீனா மணல் திட்டு, பிலிப்பைன்ஸின் மேற்கு கடற்கரையில் இருந்து 75 கடல் மைல் தொலைவிலும், சீனாவில் இருந்து 630 கடல் மைல் தொலைவிலும் அமைந்துள்ளது.

 

சபீனா மணல் திட்டில் என்ன நடந்தது?

சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் இடையே மீண்டும் மோதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சபீனா மணல் திட்டு, தென் சீனக் கடலில் எண்ணெய் வளம் மிக்க ஸ்ப்ராட்லி தீவுகளில் அமைந்துள்ளது.

ஆகஸ்ட் 19ஆம் தேதி சர்ச்சைக்குரிய ஸ்ப்ராட்லி தீவுகளின் சபீனா மணல் திட்டு பகுதியில், பல சீன மற்றும் பிலிப்பைன்ஸ் கப்பல்கள் மோதிக் கொண்டன. எண்ணெய் மற்றும் எரிவாயு வளம் நிறைந்த பகுதி இது. இரு நாடுகளும் பல ஆண்டுகளாக இந்தப் பகுதிக்கு உரிமை கோரி வருகின்றன.

பிலிப்பைன்ஸ் கப்பல் "வேண்டுமென்றே" தங்கள் கப்பல்கள் மீது மோதியதாக சீன கடலோர காவல்படை கூறியது. அதே நேரத்தில் சீன கப்பல்கள் "அச்சுறுத்தும் வகையில்" நடந்து கொண்டதாக பிலிப்பைன்ஸ் தெரிவித்தது.

ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது சுற்று மோதல் நடந்தது. அப்போதும் இரு தரப்பும் பரஸ்பரம் குற்றம் சாட்டிக்கொண்டன.

பிரிட்டன், ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் தென் கொரியா உள்ளிட்ட பல நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியமும் சீனாவின் நடவடிக்கைகளை விமர்சித்துள்ளன.

திங்களன்று 40 சீனக் கப்பல்கள் தன் இரண்டு படகுகளை இடைமறித்தன என்றும், சில மாதங்களுக்கு முன்பு மணல் திட்டு பகுதியில் நிலைநிறுத்தப்பட்ட பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல் படையின் கப்பலான தெரேசா மாக்புனாவுக்கு பொருட்களைக் கொண்டு சென்று சேர்க்கும் "மனிதாபிமான பணியை" சீனா தடுத்தாகவும், பிலிபைன்ஸ் கூறியது.

சபீனா மணல் திட்டில் நிலத்தை ஆக்ரமிக்க சீனா முயல்வதாக பிலிப்பைன்ஸ் சந்தேகிக்கிறது. சபீனா மணல் திட்டின் நீருக்கடியில் நொறுக்கப்பட்ட பவளப்பாறை குவியல்களை அது சுட்டிக்காட்டியது.

பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல்படை இதைப் படமெடுத்துள்ளது. மணல் திட்டை விரிவுபடுத்த அந்தப் பொருளை சீனா பயன்படுத்துவதாக அந்த நாடு குற்றம் சாட்டியது. இவை "அடிப்படையற்ற குற்றச்சாடுகள்” என்று கூறி சீன அரசு ஊடகம் அவற்றை நிராகரித்தது.

சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் இடையே மீண்டும் மோதல்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, ஆகஸ்ட் 19ம் தேதி சீனக் கப்பலும், பிலிப்பைன்ஸ் கப்பலும் மோதிக் கொண்டன. (கோப்புப் படம்)  

இந்த மணல் திட்டில் நீண்ட காலத்திற்கு தங்கள் இருப்பை நிலைநாட்டும் திட்டத்தின் ஒரு பகுதியாக பிலிபைன்ஸ் அதிகாரிகள் தெரசா மக்புவானா கப்பலை ஏப்ரலில் சபீனாவுக்கு அனுப்பினார்கள். எண்ணெய் மற்றும் எரிவாயுக்காக ஸ்ப்ராட்லி தீவுகளை ஆராய்வதற்கான தனது முயற்சிகளுக்கு இது முக்கியமானது என்று பிலிப்பைன்ஸ் கருதுகிறது.

இதற்கிடையில் தெரசா மக்புவானாவின் இருப்பை, மணல் திட்டை ஆக்கிரமிப்பதற்கான பிலிப்பைன்ஸின் முயற்சியாக சீனா பார்க்கிறது.

இரண்டாம் உலகப் போர் காலத்தின் ஒரு துருப்பிடித்த சிதைந்த கப்பலை, பிலிப்பைன்ஸ் 1999 ஆம் ஆண்டு இரண்டாவது தாமஸ் மணல் திட்டில் (சீனா இதை ரென்ஹாய் ஜியோ கோஸ் என்று அழைக்கிறது) நிறுத்தி வைத்ததாக, சீன அரசு செய்தி நிறுவனமான சின்ஹுவாவின் சமீபத்திய வர்ணனை தெரிவிக்கிறது.

ஒரு சில வீரர்கள் இப்போதும் அங்கு நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அவ்வப்போது உணவு தேவைப்படுகிறது. பல ஆண்டுகளாக இந்த கப்பல் இரு நாடுகளுக்கும் இடையே நிலையான மோதலுக்கு ஆதாரமாக இருந்து வருகிறது. கப்பலுக்கு பொருட்களை சொண்டு சேர்க்கும் பணிகளைத் தடுக்க சீனா தொடர்ந்து முயற்சிக்கிறது.

"25 ஆண்டுகளுக்குப் பிறகும் அது இப்போதும் அங்கேயே உள்ளது. பிலிப்பைன்ஸ் ஜியான்பின் ஜியாவோவிலும் (சபீனா மணல் திட்டு) இதையே மீண்டும் அரங்கேற்ற முயற்சிக்கிறது," என்று அந்த வர்ணனை மேலும் கூறுகிறது.

”பிலிப்பைன்ஸிடம் சீனா இனி ஒருபோதும் ஏமாறாது.”என்றும் கூறப்பட்டுள்ளது.

 

சீனாவுக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையிலான சண்டை தீவிரமடைகிறதா?

இரண்டாவது தாமஸ் மணல் திட்டு மற்றும் ஸ்கார்பரோ மணல் திட்டு உள்ளிட்ட சர்ச்சைக்குரிய பவளப்பாறைகள் மற்றும் திட்டுகள் மீதான தங்கள் உரிமைகோரல்களை இரு தரப்பினரும் செயல்படுத்த முயற்சிப்பதால், சமீபத்திய மாதங்களில் பல ஆபத்தான மோதல்கள் நடந்துள்ளன.

எதிர்தரப்பை விரட்டியடிக்க படகுகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் விளைவாக இந்த மோதல்கள் ஏற்படுகின்றன.

பிலிப்பைன்ஸ் கப்பல்களின் மீது சீனா சக்திவாய்ந்த நீர் பீரங்கி மற்றும் லேசர்களைப் பயன்படுத்துகிறது.

சீனர்கள் தங்கள் படகுகளில் ஏறி கைக்கலப்புகளில் ஈடுபடுவதாகவும், பொருட்களை பறிமுதல் செய்வதாகவும் மற்றும் காற்று நிரப்பக்கூடிய சிறு படகுகளில் துளைகள் இடுவதாகவும் பிலிப்பைன்ஸ் குற்றம் சாட்டுகிறது.

சீன கடலோர காவல்படை வீரர்கள் கத்திகள், ஈட்டிகள் மற்றும் வாள்களுடன் தனது ராணுவக் கப்பல் ஒன்றில் ஏறி தன் துருப்புக்களை மிரட்டியதாக பிலிப்பைன்ஸ் சமீபத்தில் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தது.

"நாங்கள் மிகவும் சக்திவாய்ந்த எதிரிக்கு எதிராக போராடுகிறோம்" என்று பிலிப்பைன்ஸ் பாதுகாப்புப்படையின் தலைவர் கில்பர்டோ தியோடோரோ செவ்வாயன்று கூறினார்.

அதே நேரத்தில் "சீனாவிற்கு எதிராக ஒரு வலுவான எச்சரிக்கையை" வெளியிடுமாறு சர்வதேச சமூகத்திடம் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

தனது படைவீரர்கள் பலர் காயமடைந்ததாக பிலிப்பைன்ஸ் கூறுகிறது. இதுவரை உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. சீனாவின் நடவடிக்கைகள் காரணமாக பிலிப்பைன்ஸ் நாட்டவருக்கு மரணம் ஏற்பட்டால் அது "போர் நடவடிக்கையாக" கருதப்படும் என்று அதிபர் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் எச்சரித்துள்ளார்.

சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் இடையே மீண்டும் மோதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அவர்களின் தகராறு இறுதியில் தென் சீனக் கடலில் பெரும் மோதலுக்கு வழிவகுக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் கவலைப்படுகிறார்கள்.

பிலிப்பைன்ஸ், ஐக்கிய நாடுகள் சபையின் மத்தியஸ்தத்தை நாடும் முயற்சியை முன்பு மேற்கொண்டது.

அதை தொடர்ந்து, தென் சீனக் கடலின் பெரும்பகுதிக்கு உரிமை கோர சீனா பயன்படுத்தும் ’நைன் டாஷ் லைன்’ எல்லை கோட்டுக்குள் அதன் சட்டபூர்வ உரிமைகோரல்கள் எதுவும் இல்லை என்ற தீர்ப்பு வெளியானது. ஆனால் இந்த முடிவை அங்கீகரிக்க சீனா மறுத்துவிட்டது.

ஆனால் சமீப வாரங்களில் இரு நாடுகளும் கடலில் மோதலை தணிக்கும் முயற்சிகளை மேற்கொண்டன.

இரண்டாவது தாமஸ் மணல் திட்டில் உள்ள ராணுவ நிலைக்கு உணவு, பொருட்கள் மற்றும் வீரர்களை கொண்டுசேர்க்கும் அனுமதியை பிலிப்பைன்ஸுக்கு வழங்குவதற்கு கடந்த மாதம் சீனா ஒப்புக்கொண்டது.

இந்த நிலையில் சபீனா மணல்திட்டில் நடந்த நிகழ்வுகளை பார்க்கும்போது மோதலின் தீவிரத்தைக் குறைக்கும் முயற்சிகள் பயனளிக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பிபிசி மானிட்டரிங்கின் கூடுதல் உள்ளீட்டுடன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீனா - பிலிப்பைன்ஸ் கடலோர காவல்படை கப்பல்கள் மோதல் - நடுக்கடலில் என்ன நடந்தது?

சீனா - பிலிப்பைன்ஸ்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, ஆகஸ்ட் 19ம் தேதி சீனக் கப்பலும், பிலிப்பைன்ஸ் கப்பலும் மோதிக் கொண்டன. (கோப்புப் படம்) கட்டுரை தகவல்
  • எழுதியவர், டெர்பெயில் ஜோர்டான்
  • பதவி, பிபிசி நியூஸ்
  • 1 செப்டெம்பர் 2024, 12:07 GMT
    புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

தென் சீனக் கடலின் சர்ச்சைக்குரிய பகுதியில் கடலோரக் காவல்படை கப்பல்களைக் கொண்டு மோதியதாக சீனாவும் பிலிப்பைன்ஸும் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் குற்றம்சாட்டியுள்ளன.

தங்கள் நாட்டு கப்பல் மீது சீன கப்பல் நேரடியாக, வேண்டுமென்றே மோதியதாக பிலிப்பைன்ஸ் கூறியுள்ளது. அதேசமயம், சீனக் கப்பல் மீது பிலிப்பைன்ஸ் கப்பல் "வேண்டுமென்றே" மோதியதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது.

சபீனா மணல் திட்டு அருகே சனிக்கிழமை நடந்த மோதல், தென் சீனக் கடலில் உள்ள பல்வேறு தீவுகள் மற்றும் பொருளாதார மண்டலங்களில் இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக நீடித்து வரும் சர்ச்சைகளின் சமீபத்திய நிகழ்வாகும்.

கடந்த இரண்டு வாரங்களுக்குள், அதே பகுதியில் இரு நாடுகளைச் சேர்ந்த கப்பல்கள் தொடர்பாக குறைந்தது மூன்று சம்பவங்கள் நடந்துள்ளன.

 

இரு நாடுகளும் கூறுவது என்ன?

சபீனா மணல் திட்டு சீனாவால் ஜியான்பின் ஜியாவோ என்றும், பிலிப்பைன்ஸால் எஸ்கோடா ஷோல் என்றும் அழைக்கப்படுகிறது. பிலிப்பைன்ஸின் மேற்கு கடற்கரையில் இருந்து 75 கடல் மைல் தொலைவிலும், சீனாவில் இருந்து 630 கடல் மைல் தொலைவிலும் இந்த மணல் திட்டு அமைந்துள்ளது.

ஆண்டுக்கு 3 டிரில்லியன் டால மதிப்புள்ள வர்த்தகம் நடைபெறும் மிகப்பெரிய கப்பல் போக்குவரத்து பாதையாக தென் சீனக் கடல் உள்ளது. தென் சீனக் கடலில் பிலிப்பைன்ஸ், புரூனே, மலேசியா, தைவான் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் தங்களுடையவை என்று கூறும் பகுதிகள் அனைத்தையும் சீனா உரிமை கோருகிறது.

சபீனா மணல் திட்டில் இருந்து திரும்பிச் செல்லுமாறு பிலிப்பைன்ஸை சீனாவின் கடலோரக் காவல்படை எச்சரித்துள்ளது. அதேநேரத்தில், "அனைத்து ஆத்திரமூட்டல், தொல்லை மற்றும் அத்துமீறல் செயல்களையும் முறியடிப்போம்" என்று சீனா கூறியுள்ளது.

சீனாவுக்கு அமெரிக்கா கண்டனம்

"சீன கடலோரக் காவல்படையின் துன்புறுத்தல், கடும் நடவடிக்கைகள் இருந்த போதிலும்", தெரேசா மக்பனுவா எனும் தங்களது கப்பலை அங்கிருந்து நகர்த்தப் போவதில்லை என்று பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது.

இந்த மோதலில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. ஆனால் சீனக் கப்பலால் "பல முறை" தாக்கப்பட்ட பின்னர், 97 மீட்டர் (318 அடி) நீளமுள்ள தெரேசா மக்பனுவா கப்பலில் சேதம் ஏற்பட்டதாக, பிலிப்பைன்ஸ் கடலோர காவல்படை உயரதிகாரி ஜே டாரியேலா கூறியுள்ளார்.

 
சீனா vs பிலிப்பைன்ஸ்

பட மூலாதாரம்,PHILLIPINES COAST GUARD

படக்குறிப்பு, தங்கள் நாட்டு கப்பலை மோதியதாக சீனா - பிலிப்பைன்ஸ் ஆகிய இரு நாடுகளும் பரஸ்பரம் குற்றம்சாட்டியுள்ளன

பிலிப்பைன்ஸுக்கான அமெரிக்க தூதர் மேரிகே எல் கார்ல்சன், சீனாவின் ஆபத்தான நடவடிக்கைகள் என்று இதனை விமர்சித்தார்.

"[பிலிப்பைன்ஸ்] பொருளாதார தனியுரிமை பகுதிக்குள் (EEZ) சட்டப்பூர்வமான செயல்பாடுகளை நடத்தும் போது, தெரேசா மக்பனுவா கப்பலை வேண்டுமென்றே தாக்கியது உட்பட சர்வதேச சட்டங்களை மீறும் சீனாவின் செயல்களை அமெரிக்கா கண்டிக்கிறது" என அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“சர்வதேச சட்டத்தை நிலைநிறுத்துவதில் நாங்கள் பிலிப்பைன்ஸுடன் துணை நிற்கிறோம்.” என்று அவர் கூறியுள்ளார்.

மோதல்களை தணிக்க முயற்சி

அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு பிலிப்பைன்ஸ் மற்றும் அதன் நட்பு நாடான அமெரிக்கா மீது சீனா பலமுறை குற்றம்சாட்டி வருகிறது. கடந்த வாரம், சீன பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், பிலிப்பைன்ஸ் “பொறுப்பற்ற தாக்குதல்களை தூண்ட” அமெரிக்கா தைரியமளிப்பதாக கூறினார்.

இந்த சர்ச்சை தென் சீனக் கடலில் ஒரு பெரிய மோதலை ஏற்படுத்தக் கூடும் என்று இவ்விவகாரத்தை உற்றுநோக்குபவர்கள் கவலைப்படுகிறார்கள்.

 
சீனா vs பிலிப்பைன்ஸ்

பட மூலாதாரம்,PHILLIPINES COAST GUARD

படக்குறிப்பு,சீனாவுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது

இவ்விவகாரத்தில் ஐ.நா சபை மத்தியஸ்தம் செய்வதற்கான பிலிப்பைன்ஸின் முந்தைய முயற்சியின் போது, ஒன்பது வரிக் கோடு (தென்சீனக் கடலின் பெரும் பகுதியை உரிமை கோர சீனா பயன்படுத்தும் எல்லைக் கோடு) பகுதியில் சீனாவுக்கு எவ்வித சட்டபூர்வமான உரிமையும் இல்லை என ஐ.நா உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவை சீனா ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டது.

ஆனாலும், சமீப வாரங்களில் இரு நாடுகளும் கடலில் உடனடி மோதல்களைத் தணிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தன.

கடந்த மாதம் அவ்விரு நாடுகளும் பிலிப்பைன்ஸ் இரண்டாவது தாமஸ் மணல் திட்டில் உணவு, பொருட்கள் மற்றும் பணியாளர்களுடன் மறுசீரமைப்புப் பணிகளை அனுமதிக்க ஒப்புக்கொண்டன.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.