Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஸ்வஸ்திகா, ஹிட்லர், இந்துமதம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், பிபிசி குஜராத்தி சேவை
  • பதவி, புது டெல்லி
  • 2 செப்டெம்பர் 2024

பல நூற்றாண்டுகளாக, ‘ஸ்வஸ்திகா’ சின்னம் இந்து மதம், ஜைன மதம், மற்றும் பௌத்தத்தில் புனிதமான ஒரு குறியீடாக இருந்து வருகிறது. இது அதிர்ஷ்டம், மங்களம் மற்றும் செழிப்பு ஆகியவற்றைக் குறிக்கிறது. கிரகப் பிரவேசம், திருவிழாக்கள், மாங்கல்யம், சமய நிகழ்வுகள் ஆகியவற்றில் இந்தக் குறியீடு பயன்படுத்தப்படுகிறது.

ஆனால், ஆஸ்திரேலியா, கனடா, மற்றும் அமெரிக்காவில் இது ஒரு ஆத்திரமூட்டும் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. 1940-கள் வரை, மேற்கத்திய நாடுகளிலும் இந்தக் குறியீடு பரவலாகவும் பிரபலமாகவும் இருந்தது. செழிப்பு மற்றும் செல்வத்தின் அடையாளமாகப் பார்க்கப்பட்டது.

ஹிட்லர் நாஜி ஜெர்மனியின் கொடியில் 'ஹக்கன்க்ரூஸ்' (Hakenkreuz) அல்லது கொக்கி வடிவிலான சிலுவையைப் பயன்படுத்தினார். இது ஸ்வஸ்திகாவைப் போன்ற ஒரு உருவம்.

அதனால், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, மேற்கத்தியர்கள், குறிப்பாக யூதர்களிடையே யூத இன அழித்தொழிப்பு (ஹோலோகாஸ்ட்) பற்றிய வலிமிகுந்த நினைவுகளின் அடையாளமாக இந்த குறியீடு மாறியது.

இந்தியாவில் மட்டுமல்ல, ஸ்வஸ்திகா என்பது உலகெங்கிலும் உள்ள பிரபலமான ஒரு சின்னமாகும். இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனித குலத்தால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஸ்வஸ்திகா, ஹிட்லர், இந்துமதம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இந்தியாவில் புதுமனைப் புகுவிழாக்கள், குழந்தைக்குப் பெயர் சூட்டும் விழாக்கள், திருமணச் சடங்குகள், ஆகியவற்றில் இந்தக் குறியீடு பயன்படுத்தப்படுகிறது

ஸ்வஸ்திகாவின் பொருள் என்ன?

இந்து, சமணம் மற்றும் பௌத்த மதங்களில் பிரபலமான ‘ஸ்வஸ்திகா’ என்ற சொல், 'சு' மற்றும் ‘அஸ்தி’ ஆகிய வேர்ச்சொற்களால் ஆனது.

‘சு’ என்றால் ‘நலம்’ என்று பொருள், 'அஸ்தி' என்றால் 'நடக்கட்டும்’ என்று பொருள். இவை சேர்ந்து உருவானது தான் ‘ஸ்வஸ்திகா’ என்ற சொல்.

இச்சொல்லின் குறியீட்டு அடையாளம், செங்குத்தான கோடு ஒன்றை நடுவில் ஒரு கிடைமட்டக் கோட்டால் வெட்டி, அவற்றின் நான்கு முனைகளிலிருந்தும் கோடுகளை நீட்டி, எட்டு செங்கோணங்களைக் கொண்ட ஒரு வடிவம். ஒரு ஸ்வஸ்திகாவை உருவாக்கும் போது, அதில் நான்கு இடைவெளிகள் விடப்படுகின்றன, அவற்றில் புள்ளிகளும் வைக்கப்படுகின்றன.

கணக்குப் புத்தகங்கள், புனித நூல்கள், கடைகள், வாகனங்கள், புதுமனைப் புகுவிழாக்கள், குழந்தைக்குப் பெயர் சூட்டும் விழாக்கள், திருமணச் சடங்குகள், ஆகியவற்றில் இந்தக் குறியீடு பயன்படுத்தப்படுகிறது. மதச் சடங்குகள், திருமணங்களின் போது இந்த சின்னத்தை வரைகையில், 'ஸ்வஸ்திக் மந்திரம்' உச்சரிக்கப்படுகிறது.

இதில், இந்து மத நம்பிக்கையின்படி நலன் ஏற்பட வேண்டி, வருணன், இந்திரன், சூரியன், குரு மற்றும் கருடன் ஆகியோரிடம் பிரார்த்தனை செய்யப்படுகிறது.

நான்கு திசைகள், நான்கு பருவங்கள், நான்கு யுகங்கள், நான்கு வேதங்கள், வாழ்க்கையின் நான்கு இலக்குகள் (அறம், பொருள், இன்பம், வீடு), வாழ்க்கையின் நான்கு நிலைகள் (குழந்தைப் பருவம், குடும்பப் பருவம், துறவறம், சன்னியாசம்) போன்ற பல கருத்துகள் இந்தக் குறியீட்டுடன் தொடர்புபடுத்தப்படுகின்றன.

'தி லாஸ்ட் விஸ்டம் ஆஃப் ஸ்வஸ்திக்' என்ற நூலின் ஆசிரியர் அஜய் சதுர்வேதியின் கூற்றுப்படி, ‘வேதக் கணிதத்தில் சத்யோ என்பது நான்கு கோணக் கனசதுரத்தைக் குறிக்கிறது. இது இந்துத் தத்துவத்தின் படி விழிப்பு, தூக்கம், கனவு ஆகியவற்றுக்கு அப்பாற்பட்ட நான்காவது நிலையைக் குறிக்கிறது.

ஜப்பானில் உள்ள பௌத்தர்களிடையே இந்தக் குறியீடு கௌதம புத்தரின் கால் தடங்களைக் குறிக்கும் 'மான்சி' என்று அழைக்கப்படுகிறது.

சதுர்வேதியின் கூற்றுப்படி, ஹிட்லர் இந்து தத்துவத்தில் இந்த ஸ்வஸ்திகா சின்னத்தின் முக்கியத்துவத்தையோ அர்த்தத்தையோ புரிந்து கொள்ளாமல் அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்தினார்.

 
ஸ்வஸ்திகா, ஹிட்லர், இந்துமதம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, நாஜிக் கட்சியின் கொடி 1920-ஆம் ஆண்டு கோடைகாலத்தின் மத்தியில் வெளியிடப்பட்டது.

‘ஹேக்கன்கிராஸ் அல்லது ஹூக் கிராஸ்’

1871-ஆம் ஆண்டில், ஜெர்மன் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஹென்ரிச் சிஸ்லெமன், பண்டைய டிராய் நகரத்தை (இன்றைய துருக்கியில் இருக்கிறது) அகழாய்வு செய்த போது, மண் பாண்டங்களில் சுமார் 1,800 வகையான ‘கொக்கி சிலுவைக்’ குறியீடுகளைக் கண்டுபிடித்தார். இது ஸ்வஸ்திகா போன்ற ஒரு வடிவம். அவர் இதை ஜெர்மானிய வரலாற்றில் இருக்கும் கலைப்பொருட்களுடன் பொருத்தினார்.

டிராய் நகரத்தில் வசித்தவர்கள் ஆரியர்கள் என்றும், இந்த மண் பாண்டங்களில் காணப்பட்ட ஒற்றுமைகளை, நாஜிக்கள் ஆரியர்களுக்கும் தங்களுக்குமான இனத் தொடர்ச்சிக்கான சான்றுகள் என்று நம்புவதற்கு வழிவகுத்தது என்றும் மானுடவியலாளர் க்வென்டோலின் லேக் குறிப்பிடுகிறார்.

ஹிட்லர் தனது கட்சி சின்னமாக ஸ்வஸ்திகாவை ஏற்றுக்கொண்டதற்கு முக்கிய காரணம், ஜெர்மானியர்கள் மொழியிலும் சமஸ்கிருதத்திலும் காணப்படும் ஒற்றுமையே என நம்பப்படுகிறது.

இந்த ஒற்றுமையின் மூலம்தான் இந்தியர்களும் ஜெர்மானியர்களும் ஒரே 'தூய்மையான' ஆரிய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்று ஜெர்மானியர்களை நாஜிக்கள் நம்ப வைத்தனர்.

1920-ஆம் ஆண்டில், அடால்ஃப் ஹிட்லர் புதிதாக உருவாக்கப்பட்ட தனது கட்சிக்கு ஒரு சின்னத்தைத் தேடும் போது, அவர் 'ஹேக்கன்க்ரூஸ்' அல்லது வலதுசாரி ஸ்வஸ்திகாவைப் பயன்படுத்தினார். 1933-ஆம் ஆண்டில், ஹிட்லரின் பிரசார அமைச்சர் ஜோசப் கோயபல்ஸ் ஸ்வஸ்திகா அல்லது கொக்கிச் சிலுவையின் வணிகப் பயன்பாட்டை தடை செய்யும் சட்டத்தை இயற்றினார்.

ஜெர்மனியின் உச்ச ஆட்சியாளரான அடால்ஃப் ஹிட்லர், தனது சுயசரிதையான 'மெய்ன் காம்ப்' நூலின் ஏழாவது அத்தியாயத்தில் நாஜி கொடியின் தேர்வு, அதன் நிறங்கள் மற்றும் சின்னங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

ஹிட்லரின் கூற்றுப்படி, புதிய கொடி 'மூன்றாம் (ஜெர்மன்) ரைக்'-ஐக் குறிக்கிறது.

நாஜிக் கட்சியின் கொடி 1920-ஆம் ஆண்டு கோடை காலத்தின் மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதில், சிவப்புப் பின்னணியில் ஒரு வெள்ளை வட்டத்திற்குள் கருப்பு ‘ஹேக்கன்கிராஸ்’ இருந்தது. இந்த உருவம் இடது பக்கம் 45 டிகிரி கோணத்தில் சாய்ந்த ஸ்வஸ்திகா.

சிவப்பு நிறம் சமூக இயக்கத்தின் அடையாளமாக இருந்தது. வெள்ளை என்பது தேசியவாதத்தின் கருத்தை பிரதிபலிக்கிறது. ஸ்வஸ்திகா ஆரியர்களின் போராட்டத்தையும் வெற்றியையும் குறிக்கிறது.

'தி சைன் ஆஃப் தி கிராஸ்; ஃப்ரம் கிளட்டனி டூ ஜீனோசைடு' (‘The Sign of the Cross: From Gluttony to Genocide’) என்ற புத்தகத்தில், டாக்டர் டேனியல் ரான்கூர் லாஃபேர்ரார், ஹிட்லர் தனது குழந்தைப் பருவத்தை ஆஸ்திரியாவில் உள்ள பெனடிக்டைன் மாண்டிசோரியில் கழித்தார் என்று குறிப்பிடுகிறார். அங்கு பல இடங்களில் ‘கொக்கிச் சிலுவை’ பொறிக்கப்பட்டுள்ளது. அதனால், அவர் தனது குழந்தைப் பருவ நினைவுகளுக்காக அந்தச் சின்னத்தைத் தேர்ந்தெடுத்திருக்கலாம், என்கிறார் அவர்.

இரண்டாம் உலகப் போரின் போது, யூதர்கள், மாற்றுத்திறனாளிகள், ரோமானி மற்றும் சின்டி இன மக்கள், கறுப்பின மக்கள், ஸ்லாவ் இன மக்கள், ஓரினச் சேர்க்கையாளர்கள், சோவியத் மற்றும் போலந்து மக்கள் என, சுமார் 60 லட்சம் மக்களை இந்தக் கொடியின் கீழ் நாஜிக்கள் கொன்றனர்.

ஜெர்மனி மற்றும் நாஜிக்களால் ஆக்கிரமிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் உள்ள யூதர்கள் ஹிட்லரின் படைகளால் துன்புறுத்தப்பட்டனர். ஹோலோகாஸ்டில் இறந்த பல லட்சம் யூதர்களுக்கு, ‘ஹேக்கன்க்ரூஸ்’ அல்லது ‘கொக்கிச் சிலுவை’ பயங்கரமான நினைவுகளைத் தூண்டும் ஒரு சின்னமாகும்.

சமீபத்திய ஆண்டுகளில் இந்தச் சின்னம் ‘நவ நாஜிக்கள்’ (Neo-Nazis) மற்றும் பல வெள்ளையின மேலாதிக்கவாதிகளால் பயன்படுத்தப்படுகிறது.

 
ஸ்வஸ்திகா, ஹிட்லர், இந்துமதம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, மதச் சடங்குகள், திருமணங்களின் போது இந்த சின்னத்தை வரைகையில், 'ஸ்வஸ்திக் மந்திரம்' உச்சரிக்கப்படுகிறது

வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்து ஸ்வஸ்திகாவின் பயன்பாடு

1908-ஆம் ஆண்டு, யுக்ரேனில் யானைத் தந்தத்தில் செதுக்கப்பட்ட ஒரு பறவையின் வடிவம் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் ஸ்வஸ்திகா வடிவம் செதுக்கப்பட்டிருந்தது. ஸ்வஸ்திகாவின் மிகப் பழமையான உருவம் இதுவாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. கார்பன் டேட்டிங் மூலம் அந்த கலைப்பொருள் குறைந்தது 1,500 ஆண்டுகள் பழமையானது என தெரியவந்துள்ளது.

இந்தக் குறியீடு, பண்டைய கிறிஸ்தவக் கல்லறைகள், ரோம் நகரின் நிலத்தடிக் கல்லறைகள், எத்தியோப்பியாவின் லாலிபெலாவில் உள்ள கல் தேவாலயம் மற்றும் ஸ்பெயினின் கோர்டோபா கதீட்ரல் தேவாலயம் ஆகியவற்றில் காணப்படுகிறது.

யூத இன அழித்தொழிப்பான ‘ஹோலோகாஸ்ட்’ குறித்த என்சைக்ளோபீடியா குறிப்பின் படி, "7,000 ஆண்டுகளுக்கு முன்பு யூரேசியாவில் ஸ்வஸ்திகா பயன்படுத்தப்பட்டது. இது வானத்தில் சூரியனின் இயக்கம் மற்றும் இயக்கத்தைக் குறிக்கும்."

இந்தக் குறியீடு, வெண்கல யுகத்தின் போது ஐரோப்பா முழுவதும் பிரபலமடைந்திருக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

இன்றைய பாகிஸ்தானில் உள்ள ஹரப்பா நாகரிக காலத் தளங்களில் காணப்படும் சில எச்சங்களில் ஸ்வஸ்திகா சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

19-ஆம் நூற்றாண்டில், தாமஸ் வில்சன் தனது 'தி ஸ்வஸ்திக்: தி ஏர்லியஸ்ட் நோன் சிம்பல் அண்ட் இட்ஸ் மைக்ரேஷன்ஸ்' ('The Swastik: The Earliest Known Symbol and its Migrations') என்ற புத்தகத்தில், ஸ்வஸ்திகா சின்னம் பண்டைய காலத்தில் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டது என்று குறிப்பிடுகிறார். தாள்கள், கேடயங்கள், ஆபரணங்கள் ஆகியவற்றிலும் ஸ்வஸ்திகா சின்னம் காணப்படுகிறது. இது ஒரு வால் நட்சத்திரத்தைக் குறிக்கும் உருவம் என்று சிலர் நம்பினர்.

 
ஸ்வஸ்திகா, ஹிட்லர், இந்துமதம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஹோலோகாஸ்டில் இறந்த பல லட்சம் யூதர்களுக்கு, ‘ஹேக்கன்க்ரூஸ்’ அல்லது ‘கொக்கிச் சிலுவை’ பயங்கரமான நினைவுகளைத் தூண்டும் ஒரு சின்னமாகும்

பீர் முதல் கோகோ கோலா வரை

பண்டைய கிரேக்கர்கள் தங்கள் குடங்கள் மற்றும் குவளைகளில் ஸ்வஸ்திகா சின்னத்தை வரைந்தனர். நார்வேயின் நம்பிக்கையின்படி, ஸ்வஸ்திகா என்பது 'தோர்’ என்ற கடவுளின் சுத்தியல்.

மேற்கத்திய நாடுகளில் விளம்பரம் மற்றும் ஆடைகளில் ஸ்வஸ்திகா சுதந்திரமாக பயன்படுத்தப்பட்டது. இது ஒரு கட்டத்தில் கோகோ கோலா விளம்பரங்களிலும் பயன்படுத்தப்பட்டது.

நாஜிக்களால் ஸ்வஸ்திகா பயன்படுத்தப்படுவதற்கு முன்பு, பிரபல டேனிஷ் பீர் நிறுவனமான 'கார்ல்ஸ்பெர்க்' தனது லோகோவில் ஸ்வஸ்திகா சின்னத்தை வைத்திருந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, ஃபின்லாந்து விமானப்படையின் அதிகாரப்பூர்வ முத்திரையில் ஸ்வஸ்திகா சின்னம் இடம்பெற்றிருந்தது. பிரிட்டனில், ஸ்வஸ்திகா சாரணர் இயக்கத்தினரால் பயன்படுத்தப்பட்டது மற்றும் ஒரு பேட்ஜாகவும் வழங்கப்பட்டது.

நாஜி முத்திரைக்கும் மங்களச் சின்னத்திற்கும் உள்ள வேறுபாடுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வெளிநாடுவாழ் இந்தியர்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

'ஹேக்கன்க்ரூஸ்' ('Hackenkreuz') இடதுபுறமாக 45 டிகிரி கோணத்தில் சாய்ந்திருக்கும். ஆனால், ஸ்வஸ்திகாவோ நேராக வலதுபுறமாக உள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.