Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
சாம்சங் இந்தியா நிறுவனத்துக்கு எதிராக தொழிலாளர்கள்
படக்குறிப்பு, தொழிற்சாலையில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள தனியார் இடத்தில் தொழிலாளர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் கட்டுரை தகவல்
  • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 13 செப்டெம்பர் 2024

காஞ்சிபுரத்தில் சாம்சங் இந்தியா நிறுவனத்துக்கு எதிராகக் காலவரையற்ற போராட்டத்தை அங்கு பணிபுரியும் சுமார் 1500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.

தொழிற்சங்கம் தொடங்குவதற்கு நிர்வாகம் அனுமதி மறுப்பதாகவும், சம்பள உயர்வு, பணிநேரம் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தபோது, நிர்வாகத்தின் அச்சுறுத்தலுக்கு ஆளானதாகவும் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

சட்டத்துக்கு உட்பட்டு தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சாம்சங் இந்தியா நிறுவனம் பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளது.

வியாழன் (செப்டம்பர்12) அன்று தலைமைச் செயலகத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சாம்சங் இந்தியா நிறுவனத்தின் பிரதிநிதிகள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதிலும் சுமூக உடன்பாடு எட்டப்படவில்லை.

தமிழ்நாட்டில் 17 ஆண்டுகளாக சாம்சங் இந்தியா நிறுவனம் செயல்பட்டு வரும் நிலையில், தற்போது போராட்டம் வெடித்தது ஏன்?

என்ன பிரச்னை?

தென்கொரியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் சாம்சங் நிறுவனத்துக்கு இந்தியாவில், உத்தரபிரதேசத்தில் நொய்டாவிலும், தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்திலும் தொழிற்சாலைகள் உள்ளன.

காஞ்சிபுரத்தில் சுங்குவார்சத்திரத்தில் அமைந்துள்ள இந்நிறுவனத்தின் தொழிற்சாலையில், வாஷிங்மெஷின், குளிர்சாதனப் பெட்டி, தொலைக்காட்சி, கம்ப்ரஸர் (compressor) ஆகியவை தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இந்தப் பணியில் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில், 1,700 பேர் வரை நிரந்தரப் பணியாளர்களாக உள்ளனர். சாம்சங் இந்தியா நிறுவனம் 2007-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டாலும், இதுநாள் வரையில் அங்கு தொழிற்சங்கங்களின் செயல்பாடுகள் எதுவும் குறிப்பிடும்படியாக இல்லை.

இதனைப் போக்கும் வகையில் கடந்த ஜூன் மாதம் சி.ஐ.டி.யூ சார்பில் சாம்சங் இந்தியா தொழிலாளர் நலச்சங்கம் உருவாக்கப்பட்டது. இதற்கான அங்கீகாரக் கடிதம் கேட்டு தொழிற்சாலை நிர்வாகத்தை அணுகியபோது, ஏராளமான பிரச்னைகளைத் தாங்கள் எதிர்கொண்டதாகத் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

போராட்டம் வெடித்தது ஏன்?

சி.ஐ.டி.யூ காஞ்சிபுரம் மாவட்டச் செயலரும், சாம்சங் இந்தியா தொழிலாளர் நலச்சங்கத்தின் தலைவருமான முத்துக்குமார், "தொழிற்சாலையில் சங்கம் அமைத்த பிறகு, அதை ஏற்க முடியாது என நிர்வாகம் கூறியது. அத்துடன் மட்டும் நிற்காமல் சங்கத்தை அழிப்பது, சங்கத்தின் பின்புலத்தில் உள்ள தொழிலாளர்களை அச்சுறுத்துவது என பலவழிகளில் நிர்வாகம் அத்துமீறி செயல்படுகிறது,” என்கிறார்.

மேலும், " 'சி.ஐ.டி.யூ-வில் சேரக் கூடாது, நிர்வாகம் ஏற்படுத்திய தொழிலாளர் அமைப்பில் மட்டும் இணைய வேண்டும்' என வற்புறுத்தினர். அதற்காக அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் ஆபத்தானவை. அதனால்தான் வெளியே வந்து போராட்டம் நடத்துகிறோம்," என்கிறார்,

 
சாம்சங் இந்தியா நிறுவனத்துக்கு எதிராக தொழிலாளர்கள்
படக்குறிப்பு, தொழிற்சங்கம் தொடங்குவதற்கு நிர்வாகம் அனுமதி மறுப்பதாக தொழிலாளர்கள் புகார் கூறுகின்றனர்

தொழிற்சாலையில் பணிபுரியும் நிரந்தர தொழிலாளர்களில் சுமார் 1,500 பேர் இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்துள்ளதாக குறிப்பிடும் முத்துக்குமார், "சம்பள உயர்வு, தொழிலாளர் நலன் ஆகிய கோரிக்கைகள் தொடர்பாக சாம்சங் நிர்வாகம், தொழிற்சங்கத்திடம் பேச வேண்டும். தொழிலாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என்பதுதான் எங்களின் பிரதான கோரிக்கை. அதற்காகவே போராடுகிறோம்," என பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

தொழிலாளர்களின் கோரிக்கை ஏற்கப்படாததால், கடந்த செப்டம்பர் 3-ஆம் தேதி போராட்டத்தைத் துவங்க உள்ளதாக நிர்வாகத்துக்கு சி.ஐ.டி.யூ தரப்பில் இருந்து நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான பேச்சுவார்த்தைகள் பலன் அளிக்காததால் தொழிற்சாலையில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள தனியார் இடத்தில் தொழிலாளர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

களநிலவரம் என்ன?

நான்காம் நாள் (செப்டம்பர் 12) போராட்டத்தின் போது களநிலவரத்தை அறிவதற்காக பிபிசி தமிழ் போராட்டம் நடக்கும் இடத்துக்குச் சென்றது. சாம்சங் இந்தியா தொழிற்சாலையின் சீருடையில் தொழிலாளர்கள் அனைவரும் அமர்ந்திருந்தனர்.

'எதற்காக இந்தப் போராட்டம்?' என்பது குறித்து ஒவ்வொருவரும் தனித்தனியாக மேடையில் பேசினர்.

போராட்டத்தை நீர்த்துப் போக செய்வதற்காகப் பல வகைகளில் நிர்வாகம் முயற்சி செய்வதாக அங்கிருந்த தொழிலாளர்கள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்.

 
சாம்சங் இந்தியா நிறுவனத்துக்கு எதிராக தொழிலாளர்கள்
படக்குறிப்பு, ஒரே வேலை செய்யும் தொழிலாளர்களிடையே சம்பள வித்தியாசம் இருப்பதாக, தொழிலாளர்கள் கூறுகின்றனர்

பெயர் அடையாளம் வேண்டாம் எனக் கூறிவிட்டு பிபிசி தமிழிடம் பேசிய பணியாளர் ஒருவர், "அனைவரும் பொதுவான வேலையைத்தான் செய்கிறோம். ஆனால், சம்பளத்தில் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. சிலருக்கு 50,000 ரூபாய் சம்பளம் தருகின்றனர். சிலர், 20,000 ரூபாய் சம்பளத்தில் வேலை பார்க்கின்றனர். ஒரே வேலையில் இவ்வளவு வித்தியாசம் இருக்கிறது. இதைச் சரிசெய்யுமாறு கேட்டபோது, நிர்வாகம் மறுத்துவிட்டது. கேள்வி கேட்க முடியாத இடத்தில் இருப்பதை உணர்ந்ததால்தான் சங்கத்தையே துவங்கினோம்," என்கிறார்.

அங்கிருந்து, சாம்சங் இந்தியா நிறுவனத்துக்குச் சென்றபோது, அதன் பிரதான வாயில்களில் சீருடை அணிந்த பாதுகாவலர்கள் அதிகளவில் குவிக்கப்பட்டிருந்தனர். அவர்களிடம் பேசியபோது, "நாங்கள் எதையும் பேசக் கூடாது. நிர்வாகம் தரப்பில் பதில் சொல்வார்கள்," என்று மட்டும் பதில் அளித்தனர்.

பேச்சுவார்த்தையில் தோல்வி ஏன்?

காலவரையற்றப் போராட்டம் தொடங்குவதற்கு முன்னர் தொழிலாளர் நலத்துறையின் காஞ்சிபுரம் மாவட்டத் துணை கமிஷனர் கமலக்கண்ணனுடன் தொழிற்சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

"இந்தப் பேச்சுவார்த்தையில் சாம்சங் இந்தியா நிர்வாகம் தரப்பில் என்ன சொல்லப்பட்டதோ அதை அப்படியே தொழிலாளர் நலத்துறையும் பேசியது. 'இது அரசின் பேச்சுவார்த்தை போல இல்லை' எனக் கூறி வெளியேறிவிட்டோம்," என்கிறார் சாம்சங் இந்தியா தொழிற்சங்க தலைவர் முத்துக்குமார்.

போராட்டம் தொடங்கிய பிறகும் இதேபோன்ற நிலை ஏற்பட்டால் பேச்சுவார்த்தையில் தொடர்வதை மறுபரிசீலனை செய்வோம் என அதிகாரிகளிடம் கூறிய பிறகே தொழிலாளர்களின் புகார்கள் பதிவு செய்யப்பட்டதாக, பிபிசி தமிழிடம் முத்துக்குமார் தெரிவித்தார்.

 
சாம்சங் இந்தியா நிறுவனத்துக்கு எதிராக தொழிலாளர்கள்
படக்குறிப்பு, சாம்சங் நிறுவனத்தின் தயாரிப்பு ஆலை

"அடிப்படைச் சம்பளம் 35,000, இரவுப் பணிக்கான படி உயர்வு, மருத்துவ அலவன்ஸ் உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். வேலை நேரத்தை 8 மணிநேரமாக இல்லாமல் 7 மணிநேரமாக குறைக்கப்பட வேண்டும் ஆகியன முக்கியமானவை. 'இரவு 11 மணி வரையில் ஓவர் டைம் பார்க்க முடியாது' எனக் கூறினோம். இதை மட்டும் நிர்வாகம் ஏற்றுக் கொண்டு, கட்டாயப்படுத்த மாட்டோம் எனக் கூறியது. இதர கோரிக்கைகளை ஏற்க மறுத்துவிட்டது. இந்த விவகாரத்தில் அரசு தொழிலாளர்களின் பக்கம் நிற்கவில்லை," என்கிறார் முத்துக்குமார்.

இந்தக் கருத்தை மறுத்து பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், "தொழிலாளர்களின் நலனுக்காக மட்டுமே அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அவர்களின் பக்கம் நிற்கவில்லை என்பது தவறானது. குடும்ப ஓய்வூதியம், தனி நபர் ஓய்வூதியம், மருத்துவ உதவிகள், பணியின் போது இறந்தால் இழப்பீடு என தொழிலாளர்களின் நலனில் அக்கறை செலுத்தி வருகிறோம்," என்கிறார்.

தென்கொரிய போராட்டத்துடன் தொடர்பா?

"சி.ஐ.டி.யூ சங்கத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு வேறு வேலைகளைக் கொடுக்கின்றனர். உதாரணமாக, போர்க் லிப்ட் (Forklift) ஆபரேட்டர்களை வாஷிங்மெஷின் பிரிவில் வேலை பார்க்க சொல்கின்றனர். தங்களுக்குத் தெரியாத வேலையைப் பார்க்குமாறு அழுத்தம் கொடுப்பதால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதில் ஏதேனும் தவறு ஏற்பட்டால் தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கின்றனர்," என்கிறார் முத்துக்குமார்.

 
சாம்சங் இந்தியா நிறுவனத்துக்கு எதிராக தொழிலாளர்கள்
படக்குறிப்பு, இங்குள்ள சம்பளம் என்பது இதர நிறுவனங்களை ஒப்பிடும் போது குறைவுதான் என்கின்றனர் தொழிலாளர்கள்

தென்கொரியாவில் சாம்சங் நிறுவனத்திற்கு எதிராக போராட்டம் வெடித்ததால்தான் இங்கும் போராட்டம் நடப்பதாக கூறும் தகவலில் உண்மையில்லை எனக் குறிப்பிடும் முத்துக்குமார், "தென்கொரியாவில் அண்மையில் இரண்டு போராட்டங்களை அங்குள்ள தொழிலாளர்கள் நடத்தினர். அதில் ஒன்று, விடுமுறை தொடர்பானது. அடுத்து வர்த்தகத்தில் கிடைத்த லாபத்தில் ஊதியம், போனஸ் ஆகியவற்றைக் கேட்டனர். ஆனால், தமிழ்நாட்டில் சங்கமே கூடாது என நிர்வாகம் கூறுவதால்தான் போராட்டம் நடக்கிறது. தொழிற்சங்கத்தைப் பதிவு செய்வதில் கூட அரசு நிர்வாகத்துக்கு அழுத்தம் கொடுக்கின்றனர்,” என்கிறார்.

"தென்கொரியாவில் ஒரு தொழிலாளிக்கு மாதம் லட்சக்கணக்கணக்கான ரூபாய்களை சாம்சங் நிறுவனம் செலவு செய்கிறது. இங்கு ஒரு தொழிலாளிக்கு 28,000 முதல் 35,000 வரை செலவு செய்கின்றனர். அங்கு வாரத்துக்கு இரண்டு நாள்கள் விடுப்பு என்றால் இங்கு 1 நாள் தான் விடுமுறை. இங்குள்ள சம்பளம் என்பது இதர நிறுவனங்களை ஒப்பிடும் போது குறைவுதான்," என்கிறார்.

உற்பத்தியில் பாதிப்பா?

தொழிலாளர்களின் போராட்டம் நான்காவது நாளை கடந்து நீடிப்பதால் சாம்சங் இந்தியா நிறுவனத்தில் வீட்டு உபயோக பொருள் உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார் முத்துக்குமார்.

"80% அளவுக்கு உற்பத்தி நடைபெறவில்லை எனத் தெரிகிறது. இதை சரிசெய்வதற்கு நொய்டாவில் இருந்தும், இங்குள்ள ஒப்பந்த ஊழியர்களையும் பயன்படுத்தியும் அந்த வேலைகளைச் செய்யுமாறு கூறுகின்றனர். இது நிரந்தரம் அல்ல. அவ்வாறு செய்ய முடியாது.

"அதையும் மீறி பணிகள் தொடர்ந்தால், 'அது சட்டவிரோத உற்பத்தி' என தொழிலாளர் நலத்துறையிடம் தெரிவித்துவிட்டோம். அவர்களும் அதை ஏற்றுக் கொண்டனர். போராட்டத்தையும் மீறி இந்த உற்பத்தி தொடருமானால் அதை நிறுத்தும் வகையில் எங்களின் அடுத்தகட்ட போராட்டம் நடக்கும்," என்கிறார் முத்துக்குமார்.

 
சாம்சங் இந்தியா நிறுவனத்துக்கு எதிராக தொழிலாளர்கள் போராட்டம்
படக்குறிப்பு, சாம்சங் இந்தியா நிறுவனத்தில் வீட்டு உபயோக பொருள் உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார் முத்துக்குமார்.

'பிரச்னைகளை தீர்ப்போம்' - அமைச்சர் சி.வி.கணேசன்

தொழிலாளர்களின் போராட்டம் குறித்து காஞ்சிபுரம் மாவட்ட தொழிலாளர் நலத்துறை துணை கமிஷனர் கமலக்கண்ணனிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசியபோது, "தற்போது இந்த விவகாரம் குறித்துப் பேச முடியாது," என மறுத்துவிட்டார்.

 
அமைச்சர் சி.வி. கணேசன்

பட மூலாதாரம்,CV GANESAN/FACEBOOK

படக்குறிப்பு, அமைச்சர் சி.வி. கணேசன்

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசனிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "சாம்சங் இந்தியா நிறுவனம் குறித்த பிரச்னைகளைத் தீர்த்து வைப்பதாக தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு உறுதியளித்திருக்கிறேன். இதற்கான பேச்சுவார்த்தையில் தொழிலாளர் நலத்துறை செயலர், முதல்வரின் செயலர் ஆகியோர் உள்ளனர். தொழிலாளர்களின் கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றித் தருவோம்," என்கிறார்.

சாம்சங் இந்தியா நிறுவனம் சொல்வது என்ன?

சாம்சங் இந்தியா நிறுவனத்தின் தரப்பில் விளக்கம் கேட்பதற்கு அந்நிறுவனத்தின் பொதுமேலாளர் பார்த்திபனிடம் பிபிசி தமிழ் பேசியது. "ஊடக நிறுவனங்களுக்கு நிறுவனத்தின் தரப்பில் இருந்து செய்தி அறிக்கை வெளியிடப்படும்," என்று மட்டும் பதில் அளித்தார்.

இதன்பின்னர், சாம்சங் இந்தியா நிறுவனத்தின் இ-மெயில் முகவரிக்கு கேள்விகளை அனுப்பினோம். தொழிலாளர்களை அச்சுறுத்துவது, அரசுத்துறையுடன் இணைந்து தொழிற்சங்கத்தைத் தொடங்கவிடாமல் தடுப்பது ஆகியவை குறித்து கேள்விகளைக் கேட்டிருந்தோம். இந்தக் கேள்விகளுக்கு சாம்சங் இந்தியா நிறுவனம் நேரடியாக பதில் அளிக்கவில்லை.

மாறாக, அந்நிறுவனத்தின் ஊடக செய்தி தொடர்பாளர் பிபிசி தமிழுக்கு அனுப்பியுள்ள இமெயிலில், "எங்களுக்கு தொழிலாளர்களின் நலன்கள்தான் முதன்மையானவை. தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கைகளைச் சட்டத்துக்கு உட்பட்டு நிறைவேற்றுவது குறித்துப் பேசி வருகிறோம். எங்கள் நுகர்வோர் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறோம்," எனக் குறிப்பிட்டுள்ளார்.

- இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சாம்சங் ஊழியர் தொழிற்சங்கம் தொடங்க நிர்வாகம் அனுமதி மறுப்பது ஏன்? ஐந்துமுறை நடந்த பேச்சுவார்த்தை தோல்வி

சாம்சங் ஊழியர் போராட்டம்
படக்குறிப்பு, இந்திய அரசின் சட்டங்களை நிறுவனம் மீறுவதாக சாம்சங் இந்தியா தொழிற்சாலையின் தொழிற்சங்க (சி.ஐ.டி.யு) தலைவர் முத்துக்குமார் கூறுகிறார். கட்டுரை தகவல்
  • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 4 அக்டோபர் 2024, 09:27 GMT
    புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

காஞ்சிபுரத்தில் சாம்சங் இந்தியா நிறுவனத்துக்கு எதிராக 25 நாள்களைக் கடந்தும் 900க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

"இந்திய அரசின் சட்டங்களை சாம்சங் இந்தியா நிறுவனம் மதிக்காததுதான் பிரச்னை நீடிக்க காரணம்" எனக் கூறுகின்றனர் தொழிலாளர்கள்.

ஆனால், ஊதியம், பணிச்சூழல், சலுகை என தொழிலாளர் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்குத் தயாராக உள்ளதாகக் கூறுகிறது, சாம்சங் இந்தியா நிறுவனம்.

சாம்சங் இந்தியா நிறுவனத்துடன் ஐந்து முறை அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது ஏன்? தொழிலாளர்களின் போராட்டம் தொடர்வது ஏன்?

 
 

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரத்தில் சாம்சங் இந்தியா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்துக்கு இந்தியாவில் நொய்டாவிலும் காஞ்சிபுரத்திலும் ஆலைகள் உள்ளன.

காஞ்சிபுரத்தில் உள்ள சாம்சங் இந்தியா நிறுவனத்தில் சுமார் 1800க்கும் மேற்பட்ட நிரந்தரத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

வாஷிங் மெஷின், குளிர்பதனப் பெட்டி, தொலைக்காட்சி உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களை சாம்சங் இந்தியா நிறுவனம் தயாரித்து வருகிறது. கடந்த ஜூலை மாதம், இந்நிறுவனத்தில் சி.ஐ.டி.யு (இந்திய தொழிற்சங்க மையம்) சார்பில் சங்கம் ஒன்றைத் தொடங்குவதற்கு தொழிலாளர்கள் முடிவு செய்தனர்.

இதற்கு சாம்சங் இந்தியா நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை. இதை எதிர்த்து தொழிற்சாலையில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள எச்சூர் என்ற இடத்தில் தொழிலாளர்கள் போராடி வருகின்றனர்.

கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி முதல் நடந்து வரும் போராட்டத்தால், சாம்சங் இந்தியா நிறுவனத்தில் சுமார் 60 சதவீதம் அளவுக்கு மட்டுமே உற்பத்தி நடைபெற்று வருவதாகக் கூறப்பட்டது.

 

பேச்சுவார்த்தையில் தொடர் தோல்வி

சாம்சங் ஊழியர் போராட்டம்

ஊழியர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறை, சாம்சங் இந்தியா நிறுவனம் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் உடன்பாடு எட்டப்படவில்லை.

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் மற்றும் துறையின் உயர் அதிகாரிகள் அடுத்தடுத்து ஐந்து முறை பேச்சுவார்த்தை நடத்தியும் பிரச்னை முடிவுக்கு வரவில்லை.

"வேலை நிறுத்தம் நீடிக்கக் காரணம், இந்திய நாட்டின் சட்டங்களை சாம்சங் இந்தியா நிறுவனம் மதிக்காததுதான்," என்கிறார் சாம்சங் இந்தியா தொழிற்சாலையின் தொழிற்சங்க (சி.ஐ.டி.யு) தலைவர் முத்துக்குமார். "அவர்களின் பிடிவாதத்துக்கு தமிழக அரசும் ஆதரவு கொடுப்பதாக" அவர் தெரிவிக்கிறார்.

 

'சங்கம்' என்ற வார்த்தைக்கு எதிர்ப்பு

சாம்சங் ஊழியர் போராட்டம்

"இரு தரப்பும் சுமூக உடன்பாட்டுக்கு வருவதற்கு பேச்சுவார்த்தை முக்கியம். அதற்கு சாம்சங் இந்தியா நிறுவனம் உடன்பட மறுக்கிறது" என்கிறார் முத்துக்குமார்.

சாம்சங் இந்தியா நிறுவனத்துக்கு எதிரான போராட்டம் தொடர்பாக நீதிமன்றத்தில் மூன்று வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதில், இரண்டு வழக்குகளை சாம்சங் இந்தியா நிறுவனம் தொடர்ந்துள்ளது. ஒரு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்திலும் மற்றொரு வழக்கு காஞ்சிபுரம் கூடுதல் நீதிமன்றத்திலும் தொடரப்பட்டுள்ளது.

தொழிற்சங்க பதிவு தொடர்பாக சி.ஐ.டி.யு தரப்பில் இருந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதைப் பற்றி பிபிசி தமிழிடம் பேசிய முத்துக்குமார், "முதல் இரண்டு வழக்குகளில் சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை எதிர்த்தரப்பாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

எங்கள் வழக்கிலும் 'சங்கம்' என்றே கூறியுள்ளது. ஆனால், பேச்சுவார்த்தையில் 'சங்கம்' என்ற வார்த்தையை ஏற்கவே மாட்டோம் என்பதில் உறுதியாக உள்ளனர்" என்கிறார்.

"இந்திய அரசின் தொழிலாளர் நல சட்டங்களை அரசுத்துறை முன்னிலையிலேயே சாம்சங் இந்தியா நிறுவனம் மறுக்கிறது. இதனால் தொழில் அமைதி சீர்குலைவதாக" குற்றம் சாட்டுகிறார் முத்துக்குமார்.

 

'எட்டு நாள் சம்பளம் தர மறுப்பு'

சாம்சங் ஊழியர் போராட்டம்

சாம்சங் இந்தியாவில் தற்போது 60 சதவீதம் அளவு உற்பத்தி நடப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளதாகக் கூறும் முத்துக்குமார், "75 சதவீத தொழிலாளர்கள் வெளியில் உள்ளனர். அதையும் மீறி உற்பத்தி நடப்பது சட்ட விரோதம்" என்றார்.

"கொரியாவில் உள்ள சாம்சங் நிறுவனத்திலும் இதையேதான் செய்தார்கள். அவர்கள் நாட்டில் சட்டத்தை மீறுவது அவர்கள் விருப்பம். இந்தியா போன்ற நாட்டில் சட்டங்களை மீறுவது சரியல்ல" என்கிறார்.

சாம்சங் இந்தியா நிறுவனத்துக்கு எதிராக செப்டம்பர் 9ஆம் தேதி முதல் பணி புறக்கணிப்புப் போராட்டம் தொடங்கியது. அதற்கு முன்னதாக, செப்டம்பர் 1 முதல் 8ஆம் தேதி வரையிலான சம்பளத்தைத் தர நிர்வாகம் மறுத்துவிட்டதாகக் கூறுகிறார், முத்துக்குமார்.

இதற்கிடையில், கடந்த 1ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் பேரணி நடத்தியுள்ளனர். இவர்களில் 900க்கும் மேற்பட்டோரை விஷ்ணுகாஞ்சி போலீசார் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியன்று உண்ணாவிரத போராட்டத்தையும் சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் நடத்தியுள்ளனர்.

 

தொழிற்சங்க சட்டம் சொல்வது என்ன?

காஞ்சிபுரம்: சாம்சங் ஊழியர் போராட்டத்தில் இழுபறி நீடிப்பது ஏன்? பிபிசி தமிழிடம் சாம்சங் நிறுவனம் கூறியது என்ன?

இந்திய அரசின் சட்டங்களை வெளிநாட்டு நிறுவனங்கள் மீற முடியுமா என்று மூத்த வழக்கறிஞர் சத்தியசந்திரனிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "தொழிற்சாலையில் சங்கம் தொடங்குவது என்பது அரசியல் அமைப்புச் சட்டம் 19(1)(c)இன்படி அடிப்படை உரிமைகளில் ஒன்று," எனத் தெரிவித்தார்.

"இந்திய தொழிற்சங்க சட்டம் 1926இன்படி, தொழிற்சாலையில் ஏழு பேர் இருந்தால் சங்கத்தைப் பதிவு செய்யலாம். தலைவர், செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் எனப் பதவிகளை உருவாக்க வேண்டும். சங்கத்துக்கான துணை விதிகளையும் ஏற்படுத்த வேண்டும்," என்று விளக்கினார் சத்தியசந்திரன்.

"ஆலைகளில் சங்கத்தைத் தொடங்குவது பிரச்னை இல்லை. ஆனால், புதுப்பிக்கும்போது மொத்த தொழிலாளர்களில் 10 சதவீதம் இருக்க வேண்டும் என்று விதி சொல்கிறது" என்கிறார் சத்தியசந்திரன்.

"இந்தியாவில் உள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் நாட்டின் சட்டங்கள் பொருந்தும்" எனக் கூறும் சத்தியசந்திரன், "சட்டம் தெளிவாக இருப்பதால்தான் சாம்சங் இந்தியா உடனான பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது" என்கிறார்.

 
சாம்சங் ஊழியர் போராட்டம்

பட மூலாதாரம்,FACEBOOK

படக்குறிப்பு, தொழிற்சாலைகளில் சங்கம் தொடங்குவதற்கான அனுமதி எளிதாகக் கிடைப்பதில்லை என்கிறார் சி.ஐ.டி.யு மாநில துணைப் பொதுச்செயலர் எஸ்.கண்ணன்.

"ஆலையில் சங்கம் தொடங்குவதற்கு அரசின் தொழிற்சங்கப் பதிவாளரிடம் கடிதம் கொடுக்க வேண்டும். அதன்பேரில 45 நாட்களுக்குள் அனுமதி கொடுக்க வேண்டும் என்பது விதி. ஆனால், அவ்வளவு எளிதில் அனுமதி கிடைப்பதில்லை" என்கிறார், சி.ஐ.டி.யு மாநில துணைப் பொதுச்செயலர் எஸ்.கண்ணன்.

சங்கத்தின் பெயரில் 'சாம்சங்' என்ற பெயரை வைத்திருப்பதற்கு அந்நிறுவனம் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் ஆனால் கொரியாவில் 'நேஷனல் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் எம்ப்ளாயீஸ் யூனியன்' என்ற பெயரில்தான் சங்கம் செயல்படுவதாகவும் கூறுகிறார், எஸ்.கண்ணன்.

"தீபாவளி, கிறிஸ்துமஸ் என அடுத்தடுத்து பண்டிகைகள் வரவுள்ளன. வீட்டு உபயோகப் பொருள்களின் விற்பனையும் அதிகரிக்கும். இந்தச் சூழலில் தொழிலாளர்களின் கோரிக்கையை சாம்சங் ஏற்க மறுப்பது சரியல்ல" என்கிறார் எஸ்.கண்ணன்.

காஞ்சிபுரத்தில் 'சாம்சங்' மட்டும் தான் பிரச்னையா?

சாம்சங் இந்தியா நிறுவனத்தைப் போலவே, காஞ்சிபுரத்தில் சில நிறுவனங்களில் யூனியன் தொடங்குவதில் பிரச்னை ஏற்பட்டதாகக் கூறுகிறார், எஸ்.கண்ணன்.

"யமஹா, ஜே.கே.டயர்ஸ், அப்போலோ டயர்ஸ் உள்பட 30க்கும் மேற்பட்ட பெருநிறுவனங்கள் சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தை அங்கீகரித்துள்ளன" என்கிறார் எஸ்.கண்ணன்.

யமஹா நிறுவனத்தில் 55 நாள்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடந்த பிறகே சங்கம் தொடங்க அனுமதி கிடைத்ததாகக் கூறும் எஸ்.கண்ணன், "இப்போது வரை யமஹா நிறுவனத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை. சங்கம் சுமூகமாகச் செயல்படுகிறது" என்கிறார்.

 

தொழிலாளர் நலத்துறை அமைச்சரின் பதில்

சாம்சங் ஊழியர் போராட்டம்

பட மூலாதாரம்,FACEBOOK

படக்குறிப்பு, இரு தரப்புக்கும் இடையே சுமூகமான தீர்வவை எட்ட முயன்று வருவதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் கூறுகிறார்.

சாம்சங் இந்தியா தொழிலாளர் போராட்டம் குறித்து, தொழிலாளர் நலத்துறையின் காஞ்சிபுரம் மாவட்ட துணை ஆணையர் கமலக்கண்ணனிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம்.

"கடந்த 27ஆம் தேதி இரு தரப்புக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடந்தது. வரும் 7ஆம் தேதி அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடக்கவுள்ளது. அதன் பின்னரே நிலவரம் தெரிய வரும்" என்றார்.

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசனிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசியபோது, "சட்டத்தை மதிக்காமல் எந்த நிறுவனமும் இருக்க முடியாது. அனைவரும் சட்டத்தை மதிக்க வேண்டும். தொழிலாளர்களுக்கும் நிறுவனத்துக்கும் இடையில் சுமூகமான தீர்வைக் கொடுப்பதற்கான முயற்சிகளில் இறங்கியிருக்கிறோம்" என்கிறார்.

சாம்சங் நிறுவனத்துக்கு சாதகமாக அரசு செயல்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை மறுக்கும் சி.வி.கணேசன், "துறையின் பெயரே தொழிலாளர் நலத்துறையாக உள்ளபோது, நிர்வாகத்துக்கு சாதகமாக எப்படிச் செயல்பட முடியும்?" எனக் கேள்வி எழுப்பினார்.

வெளிநாட்டு நிறுவனங்களைக் கொண்டு வரும் முயற்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் தீவிர கவனம் செலுத்தி வருவதாகக் கூறும் அமைச்சர் சி.வி.கணேசன், "நிறுவனங்களையும் வளர்க்க வேண்டும். அதேநேரம், தொழிலாளர்களையும் காப்பாற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். இரு தரப்புக்கும் எந்த பாதகமும் இல்லாமல் விரைவில் சுமூக தீர்வை ஏற்படுத்துவோம்" என்றார்.

"போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டியது தொழிலாளர்களின் கைகளில்தான் உள்ளது" என்கிறார், காஞ்சிபுரத்தில் உள்ள சாம்சங் இந்தியா நிறுவனத்தின் பொதுமேலாளர் பார்த்திபன்.

"இதுதொடர்பாக, சாம்சங் இந்தியா தலைமையகத்துக்கு உங்கள் கேள்விகளை அனுப்பி பதில் பெறலாம்" எனவும் பார்த்திபன் கூறினார்.

இதையடுத்து, தொழிலாளர்கள் முன்வைக்கும் குற்றற்சாட்டுகள் தொடர்பாக சாம்சங் இந்தியா நிறுவனத்தின் இ-மெயில் முகவரிக்கு பிபிசி தமிழ் சார்பில் கேள்விகளை அனுப்பினோம்.

 

சாம்சங் இந்தியா சொல்வது என்ன?

சாம்சங் ஊழியர் போராட்டம்

இதற்கு சாம்சங் இந்தியா நிறுவனத்தின் 'செய்தித் தொடர்பாளர்' விரிவான விளக்கத்தை அனுப்பியுள்ளார்.

இந்திய சட்டங்களை மீறுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்துள்ள சாம்சங் இந்தியா நிறுவனம், "ஊழியர்களின் நலனே எங்களுக்குப் பிரதானமாக உள்ளது. இந்தியாவின் அனைத்து சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு இணங்கிச் செயல்படுகிறோம் என்பதை மீண்டும் வலியுறுத்திச் சொல்கிறோம்" எனத் தெரிவித்துள்ளது.

"சென்னையில் உள்ள சாம்சங் இந்தியா நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் மாத சம்பளம் என்பது மற்ற நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளத்தைவிட 1.8 மடங்கு அதிகம்" எனக் குறிப்பிடுகிறார், சாம்சங் இந்தியா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர்.

கூடுதல் நேரம் பணிபுரிவதற்கான ஊதியம், இரவுநேர பேருந்து வசதி, உணவு, சுகாதாரம், பணியிடப் பாதுகாப்பு, ஊழியர் நலன் ஆகியவற்றில் உயர்ந்த தரத்தைக் கொடுத்து வருவதாகவும் பிபிசி தமிழுக்கு அனுப்பிய விளக்கத்தில் சாம்சங் இந்தியா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

"இது அந்த மண்டலத்தில் உள்ள மற்ற உற்பத்தியாளர்களுடன் ஒப்பிடும்போது மிக உயர்ந்த தரத்தில் உள்ளது எனத் தாங்கள் நம்புவதாக" சாம்சங் இந்தியா கூறுகிறது.

"சாம்சங் இந்தியாவில் ஊழியர்களின் சராசரி பதவிக்காலம் என்பது 10 ஆண்டுகளாக உள்ளது எனவும் அவர்களின் பணி திருப்திக்கு இதுவே சான்று" எனவும் சாம்சங் இந்தியா ஊடக தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

 

'தீர்வு காண்பதில் உறுதியாக இருக்கிறோம்' - சாம்சங் இந்தியா

காஞ்சிபுரம்: சாம்சங் ஊழியர் போராட்டத்தில் இழுபறி நீடிப்பது ஏன்? பிபிசி தமிழிடம் சாம்சங் நிறுவனம் கூறியது என்ன?

செப்டம்பர் மாதம் 8 நாள்களுக்கான பணி ஊதியத்தைத் தர மறுப்பது குறித்த கேள்விக்கு, "வேலை இல்லை, ஊதியம் இல்லை என்ற கொள்கையின்படி, சட்டவிரோத வேலைநிறுத்த காலத்திற்கு ஊதியம் வழங்கப்பட மாட்டாது என்பதை தொழிலாளர்களிடம் தெரிவித்து விட்டோம்" என சாம்சங் இந்தியா செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

உற்பத்தி பாதிப்பு குறித்த கேள்விக்கு, "சென்னை தொழிற்சாலையில் உற்பத்தி சீராக நடந்து வருகிறது. பண்டிகை காலத்தை முன்னிட்டு நுகர்வோருக்கு எந்தவித இடையூறும் ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறோம்" எனக் கூறியுள்ளர்.

ஊதியம், சலுகைகள், பணிச்சூழல் உள்ளிட்ட அனைத்துப் பிரச்னைகளையும் நேரடியாக தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பதில் உறுதியாக உள்ளதாகக் கூறும் சாம்சங் இந்தியா செய்தித் தொடர்பாளர், "சட்டவிரோத வேலைநிறுத்தத்தில் இருந்து வேலைக்குத் திரும்புமாறு தொழிலாளர்களிடம் நாங்கள் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்" எனவும் சாம்சங் இந்தியா செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ஆனால், எந்த இடத்திலும் சங்கம் தொடங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கான காரணத்தை சாம்சங் இந்தியா நிறுவனம் கூறவில்லை.

சாம்சங் இந்தியாவின் விளக்கத்தில் மாறுபட்ட கருத்துகள் இருப்பதாகக் கூறுகிறார், சாம்சங் இந்தியா தொழிற்சங்க தலைவர் (சி.ஐ.டி.யு) முத்துக்குமார்.

"வேறொரு நிறுவனத்தைவிட அதிக சம்பளம் கொடுப்பதாகக் கூறுவது உண்மையல்ல. காஞ்சிபுரத்தில் 1800 ஊழியர்களுக்கான சராசரி சம்பளம் என்பது 32 ஆயிரமாக உள்ளது. இது இங்குள்ள மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவு" என்கிறார் முத்துக்குமார்.

"சம்பளம் அதிகம் எனக் கூறும் சாம்சங் இந்தியா நிர்வாகம், பொருள் உற்பத்தியில் சம்பளத்தின் சதவீதம் எவ்வளவு என்பதை வெளிப்படையாக வெளியிடுமா?" எனவும் முத்துக்குமார் கேள்வி எழுப்பினார்.

"காஞ்சிபுரம் சாம்சங் இந்தியாவில் ஆண்டு சம்பள உயர்வு என்பது 10% அளவுகூட இல்லை. கொரியாவில் தொழிலாளியின் சம்பளம் என்பது லட்சக்கணக்கில் உள்ளது. இந்தியாவில் மலிவு சம்பளத்தில் தொழிலாளர்களை சாம்சங் பயன்படுத்திக் கொள்வதாக" கூறுகிறார் முத்துக்குமார்.

இந்த விவகாரத்தில் இரு தரப்பிலும் சுமூக உடன்பாடு எட்டப்படாததால், வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்கிறது. "அடுத்தகட்டமாக, இதர தொழிற்சாலை பணியாளர்களையும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்திருக்கிறோம்" எனக் கூறும் முத்துக்குமார்.

"எந்த உரிமைக்காக தொழிலாளர்கள் போராடுகிறார்களோ அது அனைவருக்கும் பொதுவானது. இப்போது குரல் கொடுக்காவிட்டால் நாளை அவர்களுக்கும் பிரச்னை வரலாம்" என்கிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • கருத்துக்கள உறவுகள்
Posted

காஞ்சிபுரம்: சாம்சங் தொழிற்சங்க பிரச்னையில் என்ன நடக்கிறது? ஒரு மாத போராட்டத்தின் முழு பின்னணி

சாம்சங் இந்தியா போராட்டம்

பட மூலாதாரம்,CPIM TAMILNADU

படக்குறிப்பு, சி.ஐ.டி.யு மாநில தலைவர் அ.சவுந்தரராஜன் உட்பட பல சாம்சங் ஊழியர்கள் இன்று காலை கைது செய்யப்பட்டனர் கட்டுரை தகவல்
  • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 9 அக்டோபர் 2024, 08:37 GMT
    புதுப்பிக்கப்பட்டது 2 நிமிடங்களுக்கு முன்னர்

சாம்சங் இந்தியா நிறுவனத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட ஐநூறுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று (அக்டோபர் 9) கைது செய்யப்பட்டுள்ளனர்.

விடியவிடிய தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக சி.ஐ.டி.யு தொழிற்சங்கம் கூறுகிறது.

"தொழிலாளர்களின் பக்கமே அரசு நிற்கிறது. அவர்களை அச்சுறுத்தவில்லை" என்கிறார் அமைச்சர் சி.வி.கணேசன்.

இரு தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுவிட்டதாக தமிழக அமைச்சர்கள் கூறிய நிலையில், ஊழியர்கள் கைது செய்யப்பட்டது ஏன்? போராட்டம் நடைபெற்ற இடத்தில் என்ன நடந்தது?

‘தொழிற்சங்கம் தொடங்க அனுமதி மறுப்பு’

சாம்சங் இந்தியா போராட்டம்

பட மூலாதாரம்,HANDOUT

படக்குறிப்பு, கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி தொடங்கிய வேலைநிறுத்தப் போராட்டம், 30 நாட்களைக் கடந்துவிட்டது

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரத்தில் சாம்சங் இந்தியா நிறுவனத்தின் தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு 1800-க்கும் மேற்பட்ட நிரந்தர பணியாளர்கள் வேலை பார்க்கின்றனர்.

வீட்டு உபயோக பொருட்களைத் தயாரிக்கும் இந்த ஆலையில் கடந்த ஜூலை மாதம் சி.ஐ.டி.யு சார்பில் தொழிற்சங்கம் தொடங்குவதற்கு தொழிலாளர்கள் அனுமதி கேட்டனர். ஆனால், சாம்சங் நிர்வாகம் மறுத்துவிட்டது.

இதையடுத்து, தொழிற்சங்கத்துக்கு அனுமதி, சம்பள உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாம்சங் இந்தியா நிறுவனத்தில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள எச்சூர் என்ற இடத்தில் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.

கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி தொடங்கிய வேலைநிறுத்தப் போராட்டம், 30 நாட்களைக் கடந்துவிட்டது. இதனை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அரசின் தொழிலாளர் நலத்துறை சார்பில் பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

'சங்கம் அமைப்பதைத் தவிர மற்ற கோரிக்கைகளை பேசி தீர்த்துக் கொள்ளலாம்' என சாம்சங் இந்தியா நிறுவனம் தெரிவித்தது. இதனை தொழிலாளர்கள் தரப்பு ஏற்கவில்லை.

ஊழியர்களின் போராட்டத்துக்கு எதிராக காஞ்சிபுரம் கூடுதல் நீதிமன்றத்திலும் சென்னை உயர் நீதிமன்றத்திலும் சாம்சங் இந்தியா நிறுவனம் சார்பில் வழக்குகள் தொடரப்பட்டன. அதேநேரத்தில், சாம்சங் இந்தியா நிறுவனத்தில் தொழிற்சங்கம் தொடங்குவதற்கு அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சி.ஐ.டி.யு சார்பிலும் வழக்கு தொடரப்பட்டது.

தொழிலாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் நான்கு முறை பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. இதில் சுமூக உடன்பாடு எட்டப்படவில்லை.

தொழிலாளர்களின் போராட்டம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய சாம்சங் இந்தியா நிறுவன செய்தி தொடர்பாளர், "ஊழியர்களின் நலனே எங்களுக்குப் பிரதானமாக உள்ளது. இந்தியாவின் அனைத்து சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு இணங்கிச் செயல்படுகிறோம்" என்று கூறினார்.

ஊதியம், சலுகைகள், பணிச்சூழல் உள்ளிட்ட அனைத்துப் பிரச்னைகளையும் நேரடியாக தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பதில் உறுதியாக உள்ளதாகவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

சாம்சங் இந்தியா போராட்டம்

பட மூலாதாரம்,HANDOUT

படக்குறிப்பு, சி.ஐ.டி.யு மாநில தலைவரும் சாம்சங் இந்தியா தொழிற்சங்கத்தின் கௌரவ தலைவருமான அ.சவுந்தரராஜன்

ஆனால், சி.ஐ.டி.யு சார்பில் சங்கம் அமைக்கப்படுவதை அந்நிறுவனம் அனுமதிக்கவில்லை. இதையடுத்து, கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊழியர்கள் பேரணி நடத்தினர். இதில், 900க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதன் பிறகு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக கடந்த திங்கள்கிழமையன்று தலைமைச் செயலகத்தில் சாம்சங் நிறுவன பிரதிநிதிகள் மற்றும் தொழிலாளர்களுடன் அமைச்சர்கள் சி.வி.கணேசன், டி.ஆர்.பி.ராஜா, தா.மோ.அன்பரசன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் இரு தரப்பிலும் சுமூக உடன்பாடு எட்டப்பட்டுவிட்டதாக அமைச்சர்கள் அறிவித்தனர். ஆனால், சி.ஐ.டி.யு அமைப்பு அதனை மறுத்தது.

போலீஸ் மூலம் அச்சுறுத்தல் என தொழிலாளர்கள் குற்றச்சாட்டு

சாம்சங் இந்தியா போராட்டம்

பட மூலாதாரம்,CPIM TAMILNADU

படக்குறிப்பு, தொழிலாளர்களின் போராட்டத்தை போலீஸ் மூலம் முடிவுக்கு கொண்டு வர அரசு தீவிரம் காட்டி வருவதாக கூறுகிறார் சாம்சங் இந்தியா தொழிற்சங்கத் தலைவர் முத்துக்குமார்

அமைச்சர்களின் அறிவிப்பைத் தொடர்ந்து, தொழிலாளர்களின் போராட்டத்தை போலீஸ் மூலம் முடிவுக்கு கொண்டு வரும் வேலையில் அரசு தீவிரம் காட்டி வருவதாக கூறுகிறார், சாம்சங் இந்தியா நிறுவனத்தின் தொழிற்சங்க (சி.ஐ.டி.யு) தலைவர் முத்துக்குமார். (சுங்குவார்சத்திரம் ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் தொடங்கியுள்ள இந்த தொழிற்சங்கத்தை சாம்சங் இந்தியா நிர்வாகம் ஏற்று அங்கீகரிக்க மறுப்பதே தற்போதைய போராட்டம் முற்றுப் பெறாமல் நீடிக்க காரணம்)

நேற்று (செவ்வாய்) நள்ளிரவு முதல் தொழிலாளர்களின் வீடுகளுக்கு சென்று அவர்களைக் கைது செய்யும் வேலையில் சுங்குவார்சத்திரம் போலீசார் ஈடுபட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

நேற்று (08.10.2024) காலை போராட்ட பந்தலுக்கு சரக்கு ஆட்டோவில் வந்து கொண்டிருந்த தொழிலாளர்களின் வாகனம், சாம்சங் ஆலை அருகே கவிழ்ந்தது. அதில் காயம் அடைந்த 12 பேரை ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

"அப்போது சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் என்பரை தாக்கியதாக தொழிலாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், என்னுடைய பெயர் முதல் நபராக உள்ளது. நான் அந்த இடத்திலேயே இல்லை" என்கிறார் முத்துக்குமார்.

இந்த சம்பவத்தில் எஸ்.ஐ மணிகண்டனை தாக்கியதாக ராஜாபூபதி, மணிகண்டன், பிரகாஷ் உள்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டு ஸ்ரீபெரும்புதூர் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதன்பிறகு நேற்று இரவு (8ஆம் தேதி) 10 தொழிலாளர்களை வீடுகளுக்கே சென்று போலீஸ் கைது செய்ததாக கூறும் முத்துக்குமார், "போராட்ட பந்தலை வருவாய்த்துறை அதிகாரிகள் பிரித்துவிட்டனர். தற்போது போராட்டத்துக்கு வரும் ஊழியர்களை வழிமறித்து போலீஸ் கைது செய்கிறது" என்கிறார்.

போராட்டம் நடைபெறும் இடம் அரசுக்கு சொந்தமான நிலம் என்றும் அங்கு அனுமதி பெறாமல் போராட்டம் நடத்தியதாகவும் ஸ்ரீபெரும்புதூர் வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதன்கிழமையன்று போலீஸாரின் கைது நடவடிக்கையால் இரண்டு ஊழியர்கள் மயக்கமடைந்ததாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு காவல்துறை அனுப்பி வைத்துள்ளனர்.

தற்போது போராட்டம் நடைபெற்று வந்த எச்சூர் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.

காவல்துறை மீதான குற்றச்சாட்டு குறித்து, காஞ்சிபுரம் எஸ்.பி சண்முகத்திடம் பேசினோம். "சாம்சங் நிறுவன பிரச்னை தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் ஏ.எஸ்.பி-யிடம் பேசுங்கள்" என்றார்.

ஸ்ரீபெரும்புதூர் ஏ.எஸ்.பி உதயகுமாரை பலமுறை தொடர்பு கொண்டும் பேச முடியவில்லை. இதையடுத்து, சுங்குவார்சத்திரம் காவல்நிலைய ஆய்வாளர் பிரேம் ஆனந்திடம் பேசினோம். "கூட்டத்தில் இருப்பதால் இப்போது பேச இயலாது" என்று மட்டும் பதில் அளித்தார்.

சாம்சங் நிறுவனத்திற்கு ஆதரவா? தமிழ்நாடு அரசு பதில்

சாம்சங் நிறுவனத்துக்கு ஆதரவான தமிழக அரசின் செயல்பாடு என்பது, ஒட்டுமொத்த தொழிற்சங்க சட்டங்களுக்கு சவால் விடுவதாக அமைந்துள்ளதாகவும் சாம்சங் இந்தியா தொழிற்சங்க (சி.ஐ.டி.யு) தலைவர் முத்துக்குமார் குற்றம்சாட்டினார்.

ஆனால், பிபிசி தமிழிடம் பேசிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் இதனை மறுத்தார். "தொழிலாளர்களுக்கு எந்த வடிவிலும் அச்சுறுத்தல் வரக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். அவர்களின் சுயமரியாதைக்கு இழுக்கு வரக் கூடாது என்பதையே முதலமைச்சரும் விரும்புகிறார். தொழிலாளர்களின் பக்கம் மட்டுமே நாங்கள் நிற்கிறோம்" என்று அவர் கூறினார்.

தலைமை செயலகத்தில் என்ன நடந்தது?

சாம்சங் இந்தியா போராட்டம்

பட மூலாதாரம்,X.COM/TRBRAJAA

படக்குறிப்பு,சாம்சங் இந்தியா போராட்டம் தீர்வு எட்டப்பட்டதாக தமிழ்நாடு அரசு கூறுகிறது

சாம்சங் இந்தியா நிறுவன தொழிலாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஆகியோர் தலைமையில் குழு ஒன்றை முதலமைச்சர் ஸ்டாலின் நியமித்தார்.

கடந்த திங்கள்கிழமை (அக்டோபர் 7) தலைமைச் செயலகத்தில் இரு தரப்பையும் அழைத்து அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், தொழிலாளர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட 14 கோரிக்கைகளை சாம்சங் நிறுவனம் ஏற்பதாக கூறியதால், சுமூக உடன்பாடு எட்டப்பட்டதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.

கோரிக்கைகள் என்ன?

  • தொழிலாளர்களுக்கு இடைக்கால சிறப்பு ஊக்கத்தொகையாக மாதம் ரூ.5000 உயர்த்தி வழங்க வேண்டும்
  • 5 வழித்தடங்களில் மட்டுமே உள்ள குளிரூட்டப்பட்ட பேருந்து வசதி, 108 வழித்தடங்களுக்கு விரிவுபடுத்த வேண்டும்
  • பணியின் போது இறந்தால் உடனடியாக ரூ.1 லட்சம்
  • தரமான உணவு மற்றும் உணவுப்படி உயர்வு
  • திருமணத்திற்கு மூன்று நாள் விடுப்பு; குழந்தை பிறந்தால் 5 நாள் விடுப்பு

இந்த மாதத்தில் இருந்தே ஊழியர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் சம்பளத்தை உயர்த்தி தருவதாக சாம்சங் இந்தியா உறுதியளித்துள்ளதாக கூறிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், "ஒரு தரப்பினர் தான் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களும் வேலைக்குச் செல்ல வேண்டும். இந்தப் போராட்டத்தால் யாரும் பாதிக்கப்படக் கூடாது. ஒப்பந்தத்தை ஏற்பதாக தொழிற்சாலையில் உள்ள சங்கத்தினர் கூறியுள்ளனர்" என்றார்.

"சாம்சங் நிர்வாகம் மற்றும் தொழிலாளர்கள் என இரு தரப்பிலும் சில குறைபாடுகளை தெரிவித்தனர். சில கோரிக்கைகளை ஏற்பதற்கு சாம்சங் இந்தியா நிர்வாகம் மறுத்தது" என்றும் அவர் கூறினார்.

சி.ஐ.டி.யு தரப்போ, அமைச்சரின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

‘ஒப்பந்தமே ஒரு நாடகம்’

சாம்சங் இந்தியா போராட்டம்

பட மூலாதாரம்,X.COM/TRBRAJAA

படக்குறிப்பு,அமைச்சர்களுடன் சாம்சங் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்

"தொழிற்சாலையில் உள்ள சங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டதாக அமைச்சர் கூறுகிறார். இவர்கள் கூறுவது நிறுவனத்தின் ஆதரவில் இயங்கும் பணியாளர் குழுவைத் தான். இந்த ஒப்பந்தமே ஒரு நாடகம்" என்கிறார் சி.ஐ.டி.யு மாநில தலைவரும் சாம்சங் இந்தியா தொழிற்சங்கத்தின் கௌரவ தலைவருமான அ.சவுந்தரராஜன்.

"நிறுவனத்துக்குள் 'சங்கமே வரக் கூடாது' என சாம்சங் கூறுகிறது. பணியாளர் கமிட்டியை மட்டும் சங்கம் என அமைச்சரே கூறுவது சரியா?" என்று கேள்வி எழுப்பிய அவர், "இரு தரப்பிலும் உடன்பாடு ஏற்பட்டுவிட்டதாக அமைச்சர்கள் கூறுகின்றனர். போராட்டம் நடத்துகிறவர்களுக்கும் இந்த ஒப்பந்தத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்கிறார்.

தலைமைச் செயலகத்தில் 7ஆம் தேதி நடந்த பேச்சுவார்த்தையில், சி.ஐ.டி.யு தரப்பிடம் பேசிய பின்னர், மீண்டும் அழைப்பதாக கூறிய அமைச்சர்கள், போலியான ஓர் ஒப்பந்தத்தைக் காட்டி தொழிலாளர்களை ஏமாற்றுவதாக கூறுகிறார் அ.சவுந்தரராஜன்.

சாம்சங் இந்தியா நிறுவனத்துக்கு ஆதரவாக தமிழக அரசு வெளிப்படையாக செயல்படுவதாக குற்றம் சாட்டும் அ.சவுந்தரராஜன், "சாம்சங் இந்தியா நிறுவனத்தில் சி.ஐ.டி.யு சங்கத்தை அரசு பதிவு செய்ய வேண்டும் என்பது தான் எங்களின் கோரிக்கை. அதை ஏற்பதற்கு சாம்சங் மறுக்கிறது. அதையே அமைச்சர்களும் ஏற்றுக் கொண்டு செயல்படுகின்றனர்" என்கிறார்.

‘நாடகம் நடத்தப்பட்டதா?’- அமைச்சர் சி.வி.கணேசன் பதில்

சாம்சங் இந்தியா போராட்டம்

பட மூலாதாரம்,CVGANESAN

"அமைச்சர்கள் நாடகம் நடத்தியதாக சி.ஐ.டி.யு கூறுகிறதே?" என தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசனிடம் பிபிசி தமிழ் சார்பில் கேள்வி எழுப்பினோம்.

"அவ்வாறு கூறுவதை ஏற்க முடியாது. சி.ஐ.டி.யு-வின் நோக்கத்தை நாங்கள் குறை கூறவில்லை. சங்கம் அமைப்பது தொடர்பான அவர்களின் விருப்பத்தைக் கூறியுள்ளனர். சாம்சங் இந்தியா பிரச்னை தொடர்பாக, இதுவரை தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஏழு முறையும் என் தலைமையில் நான்கு முறையும் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், முடிவு எட்டப்படவில்லை" என்கிறார்.

திங்கள்கிழமையன்று நடந்த பேச்சுவார்த்தை குறித்துப் பேசிய சி.வி.கணேசன், "தலைமைச் செயலகத்தில் 11 மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தினோம். சி.ஐ.டி.யு உடன் பேசுவதற்கு சாம்சங் இந்தியா நிர்வாகம் மறுக்கிறது. சங்கத்தைப் பதிவு செய்யக் கோருவது நியாயமானது. அதற்கு மறுப்பு சொல்ல முடியாது. ஆனால், வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி செயல்படுவோம்" என பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சாம்சங் இந்தியா போராட்டத்தில் சுமுக உடன்பாடு ஏற்பட்டது எப்படி? 5 முக்கியக் கேள்விகள்

சாம்சங் இந்தியா, சிஐடியு, தொழிலாளர்கள், போராட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 16 அக்டோபர் 2024

சாம்சங் இந்தியா நிறுவனத்துக்கு எதிராக, கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி முதல் நடந்து வந்த தொழிலார்களின் போராட்டம் முடிவை எட்டியுள்ளது.

'38 நாட்களாக நீடித்து வந்த தொழிலாளர்களின் போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டதாக' அமைச்சர் எ.வ.வேலு, செவ்வாய் (அக்டோபர் 15) அன்று அறிவித்திருந்தார்.

இரு தரப்பு உடன்பாட்டை தொழிலாளர்களும் ஏற்றுக் கொண்டனர். நாளை (அக்டோபர் 17) முதல் அவர்கள் வேலைக்குச் செல்ல உள்ளனர்,” என்று கூறியிருந்தார் சி.ஐ.டி.யு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராஜன்.

தங்களின் பிடிவாதத்தை சாம்சங் இந்தியா நிறுவனம் தளர்த்தியதால் தான் உடன்பாடு எட்டப்பட்டதாக கூறுகிறார், தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன்.

ஒன்பது முறைகளுக்கு மேல் நீடித்த பேச்சுவார்த்தைகள், நள்ளிரவுக் கைதுகள், தொடர் வழக்குகள், கூட்டணிக் கட்சிகளின் அழுத்தம், அமைச்சர்களின் தலையீடு ஆகியவற்றைக் கடந்து ஒப்பந்தம் கையெழுத்தானது எப்படி?

சாம்சங் இந்தியா, சிஐடியு, தொழிலாளர்கள், போராட்டம்

பட மூலாதாரம்,HANDOUT

படக்குறிப்பு, புதன்கிழமையன்று சாம்சங் இந்தியா தொழிலாளர்களுடன் பொதுக்குழு கூட்டம் நடத்திய சி.ஐ.டி.யு நிர்வாகிகள், இரு தரப்பு உடன்பாட்டுக்கு ஒப்புதல் பெற்றனர்

பிரச்னையின் துவக்கம்

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரத்தில் சாம்சங் இந்தியா தொழிற்சாலை அமைந்துள்ளது. சுமார் 1800-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரியும் இந்நிறுவனத்தில் வீட்டு உபயோக பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

கடந்த ஜூலை மாதம் சாம்சங் இந்தியா நிறுவனத்தில் சி.ஐ.டி.யு சார்பில் சங்கம் தொடங்குவது உள்பட பல்வேறு கோரிக்கைகளை தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதற்கு சாம்சங் இந்தியா நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்தது.

இதையடுத்து, ஆலையில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள எச்சூர் என்ற இடத்தில் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி தொடங்கிய இந்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் உடன்பாடு எட்டப்படவில்லை.

சாம்சங் இந்தியா, சிஐடியு, தொழிலாளர்கள், போராட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, காஞ்சிபுரம் சுங்குவார் சத்திரத்தில் 2007-ஆம் ஆண்டு சாம்சங் இந்தியா ஆலை நிறுவப்பட்டது

'சாம்சங்' என்ற பெயருக்கு எதிர்ப்பு

அடுத்து, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது, 'ஊதிய உயர்வு உள்பட தொழிலாளர்களின் கோரிக்கை குறித்து சி.ஐ.டி.யு உடன் சாம்சங் இந்தியா நிர்வாகம் பேச வேண்டும்' என தொழிலாளர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த சாம்சங் இந்தியா நிர்வாகம், சங்கத்தின் பெயரில் 'சாம்சங்' எனப் பெயர் வைப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்தது.

இதன் பின்னர், அமைச்சர்கள் சி.வி.கணேசன், தா.மோ.அன்பரசன், டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த இந்தப் பேச்சுவார்த்தையில் 14 கோரிக்கைகளை சாம்சங் இந்தியா நிறுவனம் ஏற்றுக் கொண்டதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவித்தார்.

தொழிலாளர்களும் ஏற்றுக் கொண்டதால் சுமுக உடன்பாடு ஏற்பட்டதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவித்தார். இதனை ஏற்க மறுத்து போராட்டம் தொடர்வதாக அறிவித்த சாம்சங் இந்தியா தொழிற்சங்கத் தலைவர் (சி.ஐ.டி.யு) தலைவர் முத்துக்குமார், “நிறுவனத்துக்கு வேண்டிய தொழிலாளர்களுடன் ஒப்பந்தம் போட்டுவிட்டு அமைச்சர்கள் நாடகம் ஆடுகின்றனர்,” என்றார்.

இதன்பிறகு போராட்டம் நீடித்ததால் போராட்டப் பந்தல் அகற்றம், தொழிலாளர்கள் மீது வழக்குப் பதிவு, நள்ளிரவுக் கைது எனப் பதற்றம் நீடித்தது.

 
சாம்சங் இந்தியா, சிஐடியு, தொழிலாளர்கள், போராட்டம்

பட மூலாதாரம்,HANDOUT

படக்குறிப்பு, சாம்சங் இந்தியா தொழிலாளர்களுடன் சி.ஐ.டி.யு நிர்வாகிகள் நடத்திய பொதுக்குழு கூட்டம்

பிபிசி தமிழுக்கு சாம்சங் சொன்ன விளக்கம்

தொழிலாளர்களின் போராட்டம் தொடர்பாக பிபிசி தமிழ் அனுப்பிய கேள்விகளுக்கு சாம்சங் இந்தியா ஊடகத் தொடர்பாளர் விளக்கம் அனுப்பியிருந்தார். அதில், ஊதியம், சலுகைகள், பணிச்சூழல் உள்ளிட்ட அனைத்துப் பிரச்னைகளுக்கும் நேரடியாகத் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வு காண்பதில் உறுதியாக உள்ளதாகக் கூறியிருந்தார்.

மேலும், "ஊழியர்களின் நலனே எங்களுக்குப் பிரதானமாக உள்ளது. இந்தியாவின் அனைத்துச் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு இணங்கிச் செயல்படுகிறோம் என்பதை மீண்டும் வலியுறுத்திச் சொல்கிறோம்," என சாம்சங் இந்தியா நிறுவனம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பணியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு உள்பட நான்கு அமைச்சர்கள் ஈடுபட்டனர். அக்டோபர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், நான்கு கோரிக்கைகளை சாம்சங் இந்தியா நிறுவனம் ஏற்றுக் கொண்டதால் இரு தரப்பிலும் சுமுக உடன்பாடு எட்டப்பட்டதாக அமைச்சர் எ.வ.வேலு அறிவித்தார்.

தொழிற்சங்கத்தைப் பதிவு செய்வது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அதன் தீர்ப்பை தமிழ்நாடு அரசு செயல்படுத்தும்,” என்றார் அமைச்சர் எ.வ.வேலு.

"இரு தரப்பிலும் உடன்பாடு எட்டப்பட்டாலும் தொழிலாளர்களிடம் இதனை எடுத்துக் கூறி அவர்களது ஒப்புதலைப் பெற்ற பின்னரே போராட்டம் குறித்து முடிவெடுக்கப்படும்," என சி.ஐ.டி.யு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராஜன் தெரிவித்திருந்தார்.

புதன்கிழமையன்று (அக்டோபர் 16) சாம்சங் இந்தியா தொழிலாளர்களுடன் பொதுக்குழு கூட்டம் நடத்திய சி.ஐ.டி.யு நிர்வாகிகள், இரு தரப்பு உடன்பாட்டுக்கு ஒப்புதல் பெற்றனர். இதன்பின்னர், போராட்டம் முடிவுக்கு வருவதாக அ.சவுந்தரராஜன் அறிவித்தார்.

"தொழிலாளர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறுவதாக அமைச்சர் எ.வ.வேலு வாய்மொழியாக கூறியுள்ளார். என் மீதும் வழக்கு போட்டு ஒருநாள் சிறை வைத்தனர். நாளை (அக்டோபர் 17) முதல் தொழிலாளர்கள் வேலைக்குச் செல்ல உள்ளனர். ஒப்பந்த விதிகளை நிறுவனம் மீறாது என நம்புகிறோம்" என பிபிசி தமிழிடம் தெரிவித்தார், சி.ஐ.டி.யு மாநில தலைவர் அ.சவுந்தரராஜன்.

அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

சாம்சங் இந்தியா, சிஐடியு, தொழிலாளர்கள், போராட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஆலையில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள எச்சூர் என்ற இடத்தில் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்

ஐந்து கேள்விகளும் பதில்களும்

கேள்வி: பல நாட்களாக, பல மணிநேரமாக பேச்சுவார்த்தை நீடித்தது. இழுபறிக்கு என்ன காரணம்?

பதில்: சாம்சங் இந்தியா நிறுவனத்தில், ‘சி.ஐ.டி.யு தொடர்பான எந்த நடவடிக்கைகளும் இருக்கக் கூடாது’ என்பது நிறுவனத்தின் வாதமாக இருந்தது. அவர்கள் தொடர்ந்து அடம் பிடித்து வந்ததால், அமைச்சர்களிடம் ஒரே ஒரு கேள்வியை முன்வைத்தோம்.

எங்களிடம் 19 கோரிக்கைகள் உள்ளன. அதற்கு எழுத்துப்பூர்வமான பதிலை தொழிலாளர் நலத்துறையில் அவர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்றோம். இந்த 19 கோரிக்கைகளில் சம்பள உயர்வு, 7 மணிநேர வேலை உள்பட எதை வேண்டுமானாலும் அவர்கள் மறுக்கட்டும். அது அவர்களின் உரிமை எனக் கூறினோம்.

இதை ஏற்காவிட்டால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாக தொழிலாளர் தீர்ப்பாயத்துக்கு அரசு சார்பில் அறிக்கை அனுப்ப வேண்டும் என்றோம். தீர்ப்பாயத்துக்கு இந்த வழக்கு செல்லும்போது இரு தரப்பும் வாதங்களையும் முன்வைப்பதற்கு வாய்ப்புகள் ஏற்படும். இதற்கு சாம்சங் இந்தியா தரப்பு உடன்படவில்லை.

அதேநேரம், தொழிற்சங்கத்தைப் பதிவு செய்வது தொடர்பான கோரிக்கையைப் போராட்டத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை நாங்கள் முன்வைக்கவில்லை. அது சட்டரீதியாக எங்களிடம் வந்து சேரும் என எதிர்பார்க்கிறோம். நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு நாளை வர உள்ளது. அப்போது எங்கள் தரப்பு வாதத்தை முன்வைப்போம்.

 
சாம்சங் இந்தியா, சிஐடியு, தொழிலாளர்கள், போராட்டம்

பட மூலாதாரம்,@TRBRAJAA

படக்குறிப்பு, சாம்சங் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் தமிழ்நாடு அமைச்சர்கள்

ஒப்பந்தம் சட்டரீதியாக ஏற்புடையதா?

கேள்வி: சுமுக உடன்பாடு ஏற்பட்டுவிட்டதாக அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார். இந்த ஒப்பந்தம் சட்டரீதியாக ஏற்புடையதா?

பதில்: ஆமாம். 'தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்குச் செல்லும்போது பழிவாங்கும் நடவடிக்கைகளை நிர்வாகம் மேற்கொள்ளக் கூடாது' என்பதை நிர்வாகம் ஏற்றுக் கொண்டது. இந்த ஒப்பந்தத்தில் தொழிலாளர் நலத்துறையின் இணை ஆணையர், துணை ஆணையர் என இருவர் கையொப்பமிட்டுள்ளனர். இதன் மூலம் இது அரசு ஆவணமாக மாறிவிட்டது. இந்த விவகாரத்தில் யார் பிரச்னை செய்தாலும் சட்டரீதியாக நடவடிக்கையை எடுக்க முடியும்.

கேள்வி: தொழிற் சங்க அங்கீகாரம் – தொழிற்சங்கப் பதிவு, இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

பதில்: சி.ஐ.டி.யு ஏற்படுத்தியுள்ள சங்கத்தை சாம்சங் இந்தியா நிறுவனம் ஏற்றுக் கொள்வதை அங்கீகாரம் என்கின்றனர். அப்படியொரு அங்கீகாரம் இருந்தால் நிர்வாகத்துடன் சுமுகமான முறையில் பேச்சுவார்த்தைகள் நடக்கும். அதைத் தாண்டி அதற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை.

நிறுவனத்தின் அங்கீகாரம் என்பது பெரிய விஷயம் அல்ல. அதில் சில நிபந்தனைகள் இடம் பெற்றிருக்கும். எங்களுக்கென நிறுவனத்துக்குள் ஓர் அறையை ஒதுக்குவார்கள். இதனால் தொழிலாளர்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை. தொழிற்சங்கத்தை அரசு பதிவு செய்வது தான் முக்கியம். அதற்கு சாம்சங் இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சாம்சங் இந்தியா, சிஐடியு, தொழிலாளர்கள், போராட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இந்திய தொழிற்சங்க சட்டம் 1926இன்படி, தொழிற்சாலையில் ஏழு பேர் இருந்தாலே சங்கத்தைப் பதிவு செய்யலாம்

சங்கத்தின் பெயரில் காப்புரிமைச் சிக்கலா?

கேள்வி: சாம்சங் இந்தியா போராட்டத்தைத் தொடர்ந்து, காஞ்சிபுரத்தில் இனி வேறு நிறுவனங்களில் தொழிற்சங்க பதிவுகள் எளிதாக நடக்க வாய்ப்புள்ளதா?

பதில்: கடந்த இரு மாதங்களில் மட்டும் சி.ஐ.டி.யு சார்பில் கொடுத்த ஏழுக்கும் மேற்பட்ட தொழிற்சங்கம் பதிவு தொடர்பான விண்ணப்பங்களை ஏற்றுப் பதிவு செய்துள்ளனர். இதுதவிர, 23 நிறுவனங்களில் வெவ்வேறு தொழிற்சங்கங்கள் பதிவு செய்துள்ளன.

இவை எல்லாம் அந்தந்தக் கம்பெனிகளின் பெயர்களில் தான் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்கள் மட்டும் தான் ‘சாம்சங்’ எனப் பெயர் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

கேள்வி: 'சாம்சங் இந்தியா' என்ற பெயர் காப்புரிமைக்குள் வருவதாகக் கூறியதால் தான் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்ததாக கூறப்படுகிறதே?

பதில்: இதை அவர்கள் பேச்சுவார்த்தையில் முன்வைத்தனர். ஆனால் இது சரியான வாதம் அல்ல. சாம்சங் என்ற பெயரைப் பயன்படுத்துகிறவர்கள், அதே பெயரிலான பொருள்களை உற்பத்தி செய்யும்போது தான் காப்புரிமை பிரச்னை ஏற்படும்.

அந்த பிராண்டை பயன்படுத்திப் பணம் சம்பாதிப்பது தான் தவறு. நாங்கள் அவர்களுக்குப் போட்டியாக தொழில் நடத்தப் போவதில்லை. 'இதை ஒரு பிரச்னை என நீங்களும் பேசலாமா?' என அமைச்சர்களிடம் எடுத்துக் கூறினோம். அவர்களும் ஏற்றுக் கொண்டனர்.

 
சாம்சங் இந்தியா, சிஐடியு, தொழிலாளர்கள், போராட்டம்

பட மூலாதாரம்,@TRBRAJAA

படக்குறிப்பு, சாம்சங் நிறுவன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர்கள் குழு

‘பிடிவாதத்தை தளர்த்திய சாம்சங்’ - அமைச்சர் சி.வி.கணேசன்

இதையடுத்து தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசனிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம்.

“தமிழ்நாட்டில் சொற்பமான எண்ணிக்கையில் முதலாளிகள் உள்ளனர். வெளிநாட்டில் இருந்து பெரிய நிறுவனங்களை எல்லாம் தொழில் தொடங்குவதற்காக முதலமைச்சர் அழைத்து வருகிறார். போராட்டம் நீடித்தால் பிற தொழில் நிறுவனங்கள் மத்தியில் தவறான புரிதல் ஏற்படும். அதனால் தான் ஒன்பது முறை பேச்சுவார்த்தை நடத்தினோம். தனிப்பட்ட முறையிலும் சி.ஐ.டி.யு நிர்வாகிகளிடம் வேண்டுகோள் வைத்தேன்," என்கிறார் சி.வி.கணேசன்.

தொடர்ந்து, சுமுக உடன்பாடு எட்டப்பட்டது குறித்துப் பேசிய அமைச்சர் சி.வி.கணேசன், “இரு தரப்பிலும் சமசர உடன்பாட்டைத் தொடர்ந்து ஏற்படுத்தியதால் தான் மனக்கசப்பில்லாமல் முடிவுக்கு வந்தது. ‘கூட்டணிக் கட்சிகளின் மனம் நோகாமல் நடந்து கொள்ள வேண்டும்’ என முதலமைச்சர் அறிவுறுத்தியிருந்தார். நேற்று முன்தினம் மட்டும் 11 மணிநேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. நேற்று (அக்டோபர் 15) எட்டு மணி நேரத்துக்கு மேல் பேசினோம். நேற்று தான் சாம்சங் இந்தியா நிறுவனம் தங்களின் பிடிவாதத்தை தளர்த்தியது,” என்றார்.

“நான் அந்த நிறுவனத்தின் பிரதிநிதிகளிடம், ‘தமிழ்நாட்டுக்கு மிக நல்ல முதலமைச்சர் கிடைத்திருக்கிறார். அவர் மனதை வலிக்கச் செய்ய வேண்டாம். உங்கள் நிறுவனம் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என நினைக்கிறார். விட்டுக் கொடுங்கள்’ என்றேன். ஒருகட்டத்தில் அவர்களும் அதை ஏற்றுக் கொண்டனர்,” என்றார்.

சாம்சங் இந்தியா நிறுவனத்தின் பொதுமேலாளர் பார்த்திபனிடம் பேச்சுவார்த்தை தொடர்பாகக் கேட்டபோது, “ஊடகத் தொடர்பாளர் மட்டுமே பதில் அளிப்பார். நான் பேச விரும்பவில்லை” என்று மட்டும் பதில் அளித்தார்.

சாம்சங் இந்தியா ஊடகத் தொடர்பாளரின் இமெயில் முகவரிக்கு பிபிசி தமிழ் சார்பில் கேள்விகளை அனுப்பினோம். அதற்கு பதில்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்தக் கட்டுரையில் சேர்க்கப்படும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.