Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
சேலம் தலைவெட்டி முனியப்பன் சிலையா? புத்தர் சிலையா?

பட மூலாதாரம்,RAMJI

படக்குறிப்பு, தலைவெட்டி முனியப்பனாக மாற்றப்பட்ட புத்தர் சிலை கட்டுரை தகவல்
  • எழுதியவர், நித்யா பாண்டியன்
  • பதவி, பிபிசி தமிழ், சென்னை
  • 59 நிமிடங்களுக்கு முன்னர்

2022-ஆம் ஆண்டு ஜூலை 19-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பை வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பாக தமிழ் பௌத்தர்கள் கருதுகின்றனர்.

சேலம் மாவட்டம் அரசு மருத்துவமனைக்கு எதிரே பெரியேரி கிராமம், கோட்டை சாலையில் அமைந்திருக்கும் தலைவெட்டி முனியப்பன் கோவிலில் வழிபடப்படும் முனியப்பன் சிலை, உண்மையில் புத்தர் சிலை என்பது தான் அந்த தீர்ப்பு.

ஆனாலும், தீர்ப்பு வந்த 2 வருடங்கள் கழித்து, தற்போது தான் தலைவெட்டி முனியப்பன் கோவிலில் பௌர்ணமி நாளன்று மட்டும் பௌத்த முறைபடி வழிபாடு தமிழ் பௌத்தர்கள் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பௌத்த வழிபாடு தொடங்கினாலும், மற்றொரு தரப்பினர் அந்தச் சிலை தலைவெட்டி முனியப்பன்தான் என்று தொடர்ந்து வாதிடுகின்றனர்.

புத்தர் சிலை என்று வழங்கப்பட்ட உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து அறநிலையத்துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

மாதம் ஒரு முறை மட்டுமே பௌத்த வழிபாடு

உயர் நீதிமன்றம் தீர்ப்புக்குப் பிறகு, மாதம் ஒருமுறையாவது வழிபாடு நடத்த உரிமை வழங்க வேண்டும் என்று மாவட்ட சிறுபான்மை நல அலுவலகத்தில் சேலம் புத்தர் அறக்கட்டளை அறங்காவலர் எம்.ராம்ஜி வேண்டுகோள் விடுத்தார். அதன் அடிப்படையில், ஜூலை மாதம் அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தலைவெட்டி முனியப்பனாக அலங்கரிக்கப்பட்டிருந்த சிலையின் அலங்காரம் அனைத்தும் நீக்கப்பட்டு புத்த மத வழிபாடு முதன்முறையாக ஜூலை 21ம் தேதி நடத்தப்பட்டுள்ளது. மீண்டும் ஆகஸ்ட் 19ம் தேதி அன்று புத்த பிக்குகளுடன் இந்த வழிபாடு நடத்தப்பட்டது.

“பல்வேறு அலுவலகங்களுக்கு கடிதம் எழுதிவிட்டோம். மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு எங்களுக்கான நியாயத்தைப் பெற்று தரவேண்டும் என்று எவ்வளவோ போராடிவிட்டோம். 2011ம் ஆண்டு ஆரம்பித்த சட்டப் போராட்டத்தில் ஓரடி எடுத்து வைக்கவே எங்களுக்கு 13 ஆண்டுகள் ஆகிவிட்டன,” என்கிறார் ராம்ஜி.

முதலில் நீதிமன்ற உத்தரவின்படி அங்குள்ள இந்து அறநிலையத்துறையின் பலகை நீக்கப்பட வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பௌத்தர்களின் உரிமைகளை நிலைநாட்ட இந்து அறநிலையத்துறை உதவவில்லை என்ற குற்றச்சாட்டையும் அவர் முன்வைக்கிறார்.

வருகின்ற நாட்களில் இந்தக் கோவிலில் திருவிழாக்கள் நடத்தக் கூடாது என்றும், பொதுமக்கள் மத்தியில் நன்கொடை பெறக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

 
சேலம் தலைவெட்டி முனியப்பன் சிலையா? புத்தர் சிலையா?

பட மூலாதாரம்,RAMJI

படக்குறிப்பு, ஜூலை மாதம் பௌர்ணமி நாளன்று முனியப்பன் அலங்காரம் கலைக்கப்பட்டு புத்தராக வழிபடப்பட்ட சிலை

இந்து சமயத்தவர் கூறுவது என்ன?

கோவிலில் பௌத்த மதத்தினர் வழிபாடு நடத்தியது குறித்துப் பேசிய அந்தக் கோவில் அர்ச்சகர் முனுசாமியின் மனைவி சாந்தி, தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

"என்னுடைய மாமனார், அவரின் அப்பா என்று கிட்டத்தட்ட மூன்று தலைமுறையாக நாங்கள் தான் இந்தக் கோவிலில் பூஜைகள் நடத்தி வருகிறோம். தற்போது அந்தச் சிலையின் தலையில் இருக்கும் சில வடிவங்களை பார்த்துவிட்டு அவர்கள் புத்தர் சிலை என்று கூறுகின்றனர். ஆனால் இங்குள்ள பொதுமக்கள் அனைவருக்கும் இது முனியப்பன் கோவில் தான். இது இந்துக் கோவில் தான் என்று மேல்முறையீடு செய்திருப்பதாக இந்து அறநிலையத் துறையினர் குறிப்பிடுகின்றனர். என்ன நடக்கிறது என்று பொறுமையாக தான் பார்க்க வேண்டும்," என்று சாந்தி கூறினார்.

இந்து சமய அறநிலையத்துறை பதில்

இது குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை ஆணைய அலுவலகம் அனுப்பிய எழுத்துப்பூர்வமான பதிலில், "தலைவெட்டி முனியப்பன் திருக்கோயில் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆணையர் மற்றும் திருக்கோயில் தக்கார் சார்பில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு, எண்ணிடப்படாமல் நிலுவையில் உள்ளது. மேற்படி வழக்கு நிலுவையில் உள்ளதால் அதன் முடிவுக்கு பின்னரே மேல் நடவடிக்கைகள் தொடரக்கூடிய நிலை உள்ளது," என்று தெரிவித்துள்ளது.

பிபிசியிடம் பேசிய சேலம் மாவட்ட இந்து அறநிலையத் துறை அதிகாரிகள், "பல ஆண்டுகளாக இந்த சிலை முனியப்பனாகவே மக்கள் மத்தியில் வழிபட்டு வருகிறது என்பதாலும் இந்து அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வருகின்ற காரணத்தினாலும் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு அளித்துள்ளோம்" என்று தெரிவித்தனர்.

 
சேலம் தலைவெட்டி முனியப்பன் சிலையா? புத்தர் சிலையா?

பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT

படக்குறிப்பு, தொல்லியல் துறையின் அறிவிப்பு பலகை

தொல்லியல் துறையின் ஆய்வு முடிவுகள் தெரிவித்தது என்ன?

2011-ஆம் ஆண்டு, அந்தப் பகுதியில் பணியாற்றி வந்த பி.ரங்கநாதன் என்பவரும், சேலத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் புத்தர் அறக்கட்டளையும், தலைவெட்டி முனியப்பனாக வணங்கப்பட்டு வரும் சிலை புத்தர் சிலை என்று கூறி வழக்கு தொடுத்தனர்.

நீண்ட நாட்கள் நடைபெற்று வந்த வழக்கில் திருப்பமாக அமைந்தது 2017-ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு. 2017-ஆம் ஆண்டு நவம்பர் 20-ஆம் தேதி, உயர் நீதிமன்றம், மாநிலத் தொல்லியல் துறையினர் இந்தச் சிலையை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.

நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில், 2021-ஆம் ஆண்டு ஜூலை 28-ஆம் தேதி அன்று ஆய்வுகளை நடத்தி முடிவுகளை உயர் நீதிமன்றத்திடம் சமர்ப்பித்தது மாநிலத் தொல்லியல் துறை.

"அந்த புத்தர் சிலை தாமரை மலர் மீது புத்தர் இருப்பது போன்று செதுக்கப்பட்டுள்ளது. பின்பக்கம் எந்தவித அலங்காரமும் இல்லை. கால் மீது கால் போட்டு, அர்த்த பத்மாசன நிலையில் உள்ளது.

108 செ.மீ உயரம் உள்ள சிலையின் அகலம் 58 செ.மீ. ஆக உள்ளது. கைகள் தியான முத்திரையில் உள்ளன. சுருள்முடியுடன் கூடிய லக்‌ஷண முத்திரையும், தலையில் உஷ்னிஷா எனப்படும் முப்பரிமாண கலசமும் இடம் பெற்றுள்ளது." என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

தொல்லியல்துறை அறிக்கையை ஆய்வு செய்த உயர்நீதிமன்றம், தலைவெட்டி முனியப்பனாக இந்தச் சிலையை வழிபடுவது தவறானது என்று தீர்ப்பு வழங்கியது. இந்து அறநிலையத்துறை அந்தக் கோயிலில் இந்து சமய வழிபாடு நடத்துவது தவறு என்றும் அந்த தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.

 
சேலம் தலைவெட்டி முனியப்பன் சிலையா? புத்தர் சிலையா?
படக்குறிப்பு, சேலம் பெரியேரியில் தலைவெட்டி முனியப்பனாக வழிபடப்படும் சிலை

பௌத்த மத வழிபாட்டு தலங்களை மீட்ட பின்பு என்ன செய்வது?

"இங்கு பௌத்த மத வழிபாட்டுத் தலங்களை மீட்க வேண்டும் என்று பல பௌத்தர்கள் குழுக்களாக செயல்பட்டு வருகின்றனர். ஆனால் மீட்கப்பட்ட பிறகு அந்த தலங்களை என்ன செய்ய வேண்டும் என்பதில் ஒரு தெளிவான முடிவு இல்லை. அது தான் தற்போது தலைவெட்டி முனியப்பன் கோவிலிலும் ஏற்பட்டுள்ளது," என்கிறார் துணைப் பேராசிரியரும், தமிழ் ஆராய்ச்சியாளருமான ஸ்டாலின் ராஜாங்கம்.

வேறொரு மத வழிபாட்டு முறையில் இருந்து சிலையை மீட்டு, அதனை என்ன செய்வது என்று தெரியாமல் விடும் பட்சத்தில் அந்தச் சிலை மீண்டும் கைவிடப்படும் சூழல் தான் ஏற்படும் என்கிறார் அவர்.

மதுரை அமெரிக்கன் கல்லூரியின் தமிழ்ப் பிரிவில் பணியாற்றும் அவர், "இந்தச் சிலைக்குப் பின்னால் இருக்கும் வரலாறோ, பௌத்த மதம் இந்த மண்ணில் இருந்து எவ்வாறு நீங்கியது என்பது தொடர்பான வரலாறோ, பொதுமக்களுக்குத் தெரியாது. அவர்களைப் பொருத்தவரை இது அவர்களது குறைகளைப் போக்கும் ஒரு நம்பிக்கை சார்ந்த வழிபாட்டு தலம்," என்கிறார்.

"எடுத்தவுடன் அவர்களிடம் 'இது புத்தர் சிலை, எனவே நீங்கள் இங்கு இனி வரக்கூடாது' என்று கூறுவது சிக்கலை தான் உருவாக்கும். இரு பிரிவினரின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, எந்த வகையில் வழிபாடு நடத்தினாலும் அது நம்முடைய கடவுள் தான் என்ற நம்பிக்கை ஏற்படும் வகையில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை அரசு ஏற்படுத்தியிருக்க வேண்டும்," என்கிறார் ஸ்டாலின் ராஜாங்கம்.

"தொல்லியல் துறை, இந்து அறநிலையத்துறை, மாவட்ட நிர்வாகம் போன்றவை புத்த பிக்குகளை அழைத்து வந்து இந்த விவகாரத்தில் மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று ஆலோசித்திருக்க வேண்டும்,” என்கிறார் ஸ்டாலின் ராஜாங்கம்.

 
சேலம் தலைவெட்டி முனியப்பன் சிலையா? புத்தர் சிலையா?

பட மூலாதாரம்,MAHATHMA SELVAPANDIAN / FACEBOOK

படக்குறிப்பு, சமண பௌத்தவியல் ஆய்வாளர் செல்வபாண்டியன்

புத்தர் சிலைகள் என்ன ஆயின?

சேலம் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் புத்தர் மற்றும் ஜைன தீர்த்தங்கரர்களின் சிலைகள் சிறு தெய்வங்களின் சிலைகளாகவும், எல்லைக் காவல் தெய்வச் சிலைகளாகவும் உருமாற்றம் செய்யப்பட்டுள்ளன என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். பல சிலைகள் கவனிப்பாரின்றி ஆங்காங்கே கைவிடப்பட்ட நிலையில் உள்ளன என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலை பல்லவர்களின் காலமான கி.பி. 6 முதல் 9 வரை நடந்திருக்கலாம் என்று சமண-பௌத்தவியல் ஆராய்ச்சியாளர் செல்வபாண்டியன் கூறுகிறார். பக்தி இயக்கத்தின் காலமான இந்த காலத்தில் தான் பௌத்தம் தமிழ் மண்ணில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாகக் காணாமல் போனது என்று அவர் தெரிவிக்கிறார்.

"மதங்களுக்குள் இருக்கும் பகைமை ஒரு காரணமாக இருந்தாலும், ஆட்சியாளார்கள் பின்பற்றும் சமயங்களும், அந்த சமயப் பணிகளுக்காக வழங்கப்பட்ட நன்கொடைகளும் இதர சமயத்தை பின்பற்றும் நபர்கள் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல்களும் இதற்கு காரணமாக அமைந்திருக்கிறது," என்கிறார் செல்வபாண்டியன்.

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய புத்தர் சிலை ஆராய்ச்சியாளர் முனைவர் பா. ஜம்புலிங்கம், "மக்களிடம் வரலாறு குறித்த விழிப்புணர்வும், வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணமும் குறைந்து வருவது ஒரு காரணம். சமய காழ்ப்புணர்வு இருப்பது மற்றொரு காரணம்" என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.