Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இடதுபக்கம் திரும்பிய இலங்கையை இந்தியா பொறுமையுடன் கையாள வேண்டும் : இலங்கையில் ஆட்சி மாற்றம் குறித்து இந்தியாவின் பிரதான ஆங்கிலப் பத்திரிகைகளின் பார்வை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
25 SEP, 2024 | 11:00 AM
image

"மாலைதீவு விவகாரத்தில் கடைப்பிடித்ததை போன்று இலங்கை விவகாரத்திலும் இந்தியா பொறுத்திருந்து பார்க்கும் அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும்." 

"நெருக்கடியான நேரங்களில் முதலில் உதவிக்கு ஓடிவருகின்ற நட்பிணக்கமும் அன்பாதரவும் கொண்ட ஒரு பிராந்திய வல்லரசு இந்தியா என்பதை இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுராகுமார திசாநாயக்க புரிந்துகொள்வதற்கு புதுடில்லி கால அவகாசத்தை வழங்கவேண்டும்."

"தற்போது ஆட்சியதிகாரத்துக்கு வந்துவிட்ட ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி. ) அதன் பிரத்தியேகமான  சிங்கள தேசியவாதத்தைக் கைவிட்டு சிறுபான்மைச் சமூகங்களின் குறிப்பாக தமிழர்களின் அக்கறைகளை கையாளுவதற்கு சகல சமூகங்களையும் அரவணைக்கும் அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும்."

"இலங்கையில் புதிய அரசியலமைப்பை வரைவது என்பது பிரச்சினைகளை கிளறிவிடக்கூடிய சாத்தியம் இருக்கிறது. அரசியலமைப்புக்கான 13வது திருத்தத்தில் ஏதாவது மாற்றங்களைச் செய்வதற்கு மேற்கொள்ளப்படக்கூடிய எந்த முயற்சியும்  இந்தியாவுடனான இலங்கையின் உறவுகளில் தமிழர் பிரச்சினையை மீண்டும் முன்னரங்கத்துக்கு கொண்டுவரும்." 

இவ்வாறான கருத்துக்களை இந்தியாவின் முக்கியமான ஆங்கில தேசியப் பத்திரிகைகள்  இலங்கையில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரா குமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்றிருப்பது குறித்து எழுதிய ஆசிரிய தலையங்கங்களில் தெரிவித்திருக்கின்றன. 

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், இந்துஸ்தான் ரைம்ஸ், டெக்கான் ஹெரால்ட் ஆகிய பத்திரிகைகள் செவ்வாய்க்கிழமை (24) தீட்டிய ஆசிரிய தலையங்கங்களை முழுமையாக தருகிறோம்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

"இடதுபக்கம் திரும்பிய இலங்கையை பொறுமையுடன் கையாளவேண்டும்" என்ற தலைப்பில் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் ஆசிரிய தலையங்கத்தில் கூறப்பட்டிருப்பதாவது: 

18484f04-9371-421c-93e2-a61259e2cc15.jfi

இலங்கையில் 2019 ஜனாதிபதி தேர்தலில் மூன்று சதவீத வாக்குகளை மாத்திரம் பெற்ற ஒரு மார்க்சியக் கட்சி 2024ஆம் ஆண்டில் மக்களின் ஆணையைப் பெறுகிறது என்றால் அது அந்த நாட்டு மக்களின் தெரிவில் ஒரு அடித்தள நகர்வு ஏற்பட்டிருப்பதை காட்டுகிறது. தேசிய மக்கள் சக்தி கூட்டணியின்  தலைவரான 56 வயதான  அநுராகுமார திசாநாயக்க இந்த சாதனையை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்.

முதலாவது சுற்று வாக்கு எண்ணிக்கையில் திசாநாயக்க 50 சதவீத வாக்குகளைப் பெறாத நிலையில், இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் முதல் தடவையாக இரண்டாவது விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டு அவர் கணிசமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருக்கிறார்.

1970களிலும் 1980களிலும் இரு ஆயுதக் கிளர்ச்சிகளை முன்னெடுத்த ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) இது காலவரையில்  அரசியலில் விளிம்பு நிலையில் இருந்தது. நாளடைவில் திசாநாயக்க தனது கட்சியின் தீவிரவாதப் போக்கைத் தணித்து அதை மக்கள் பெருமளவுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றாக மாற்றினார். ஒரு குறுகிய காலத்துக்கு ஜே.வி.பி. ஜனாதிபதிகள் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டரசாங்கங்களில் பங்கேற்றது.

ஆனால், கிளர்ச்சி செய்யும் ஒரு அமைப்பு என்ற நிலையில் இருந்து அரசாங்கத்துக்கு தலைமைதாங்குகின்ற கட்சியாக மாறுவதென்பது சுலபமானதல்ல. அதை புதிய ஜனாதிபதி விரைவில் கண்டுகொள்வார். சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைளுக்கு இணங்கச் செயற்படுகின்ற அதேவேளை, வரிகளைக் குறைப்பதாகவும் மககளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதாகவும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் திசாநாயக்கவின் ஆற்றல் இனிமேல் தான் பரீட்சித்துப் பார்க்கப்பட வேண்டியதாக இருக்கிறது.

ஊழலை ஒழித்து ஆட்சி முறைமையை துப்புரவாக்குவதாகவும் பொதுவாழ்வில் நேர்மையை உறுதி செய்வதாகவும் திசாநாயக்க அளித்த வாக்குறுதியினால் உந்தப்பட்டு இலங்கை தீர்க்கமான முறையில் இடது பக்கம் திரும்பியிருக்கிறது. படுமோசமான பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து 2022ஆம் ஆண்டில் மூண்ட அறகலய என்று அறியப்பட்ட மக்கள் கிளர்ச்சியின் பிரதான பயனாளியாக திசாநாயக்க மாறினார்.

அந்த கிளர்ச்சி ஊழலும் அகங்காரமும் நிறைந்த ராஜபக்சாக்களை அதிகாரத்தில் இருந்து தூக்கியெறிந்தது. ஆனால் சூழ்ச்சித் திறமுடைய ராஜபக்சாக்கள் ஜனாதிபதி மாளிகையில் தங்களது பதிலாளாக ரணில் விக்கிரமசிங்கவை அமர்த்தினார்கள். அறகலயவுக்கு பிறகு நடைபெற்ற முதல் தேர்தலில் ஜனநாயகச் சுழல் காறாறினால் அவர்கள் எல்லோரும் தூக்கிவீசப்பட்டனர்.

பிரதமர் நரேந்திர மோடி மிகவும் விரைவாகவே திசாநாயக்கவை வாழ்த்தி இந்தியாவுக்கும் இலங்கைக்கும்  இடையிலான பன்முகத்தன்மை கொண்ட இரு தரப்பு உறவுகளை பலப்படுத்துவதற்கு அவருடன் சேர்ந்து பணியாற்றுவதற்கு ஆர்வத்துடன் இருப்பதாக கூறியிருக்கிறார். வங்குரோத்து அடைந்த அந்த நாட்டை 2022ஆம் ஆண்டில் இந்தியாவின் 4 பில்லியன் கடனுதவியே காப்பாற்றியது. ஆனால், தேர்தலுக்கு முன்னதாக இந்திய விரோதப் உரைகளை திசாநாயக்க  நிகழ்த்தியதை காணக்கூடியதாக இருந்தது. சீனா நோக்கிய சாய்வே அதற்கு காரணமாகும். ஒரு மார்க்சிய கட்சியிடமிருந்து எதிர்ப்பார்க்கக் கூடியதே.

மாலைதீவு விவகாரத்தில் கடைப்பிடித்ததை போன்று இலங்கை விவகாரத்திலும் பொறுத்திருந்து பார்க்கும் அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

இந்தியா கடும் வட்டிக்கு கடன் கொடுக்கின்ற மற்றறைய நாடுகளைப் போலன்றி நெருக்கடி நேரங்களில் முதலில் உதவிக்கு ஓடிவருகின்ற நட்பிணக்கமும் அன்பாதரவும் கொண்ட ஒரு பிராந்திய வல்லரசு என்பதை புரிந்து கொள்வதற்கு திசாநாயக்கவுக்கு கால அவகாசத்தை வழங்கவேண்டும்.

இந்துஸ்தான் ரைம்ஸ் 

"இலங்கையில் இடதுபக்கத் திருப்பம் " என்ற தலைப்பில் இந்துஸ்தான் ரைம்ஸ் பத்திரிகையின் ஆசிரிய தலையங்கம் வருமாறு : 

4ccc0009-eefd-4e6d-b508-874b7c55d01f.jfi

இடதுசாரிப் போக்குடைய  கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனவின்  (ஜே.வி. பி.) தலைவரான அநுராகுமார திசாநாயக்க இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருப்பது அந்த நாட்டின் அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தை குறித்து நிற்கிறது.

ஒரு வகையில் நோக்குகையில், 1971ஆம் ஆண்டிலும் 1987 - 89 காலப்பகுதியிலும் இரு ஆயுதக் கிளர்ச்சிகளை முன்னெடுத்த ஜே.வி. பி.யின் உயர்ச்சியும் கொழும்பில் அதிகாரத்தில் ஏகபோக உரிமை செலுத்திய மூன்று பிரதான அரசியல் கட்சிகளையும் அது கிரகணம் செய்திருப்பதும்  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவியைத் துறந்து நாட்டை விட்டு ஓடவைத்த 2022 மக்கள் கிளர்ச்சியுடன் தொடங்கிய ஒரு அரசியல் நிகழ்வுச் சுழற்சியை பூர்த்தி செய்கின்றன.

அறகலய என்று அழைக்கப்பட்ட  கிளர்ச்சி மக்களின் அணிதிரட்சியின் அளவில் முன்னென்றும் இல்லாததாக அமைந்ததுடன் விடுதலை புலிகளை போரில் தோற்கடித்தமைக்காக "வீரபுருஷர்கள்" என்று ஒரு காலத்தில் கொண்டாடப்பட்ட ராஜபக்சாக்களின் ஆட்சியில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியின் பாதிப்புகளையும் அரசியல் அதிகார வர்க்கத்தின் மீதான மக்களின்  வெறுப்புணர்வையும்  துலாம்பரமாக  வெளிக்கொண்டுவந்த விதத்தில் குறிப்பிடத்தக்க ஒன்றாகவும் விளங்கியது.

அறகலயவுக்கு ஆதரவான முக்கியமான ஒரு குரலாக திசாநாயக்க விளங்கினார்.  மாற்று ஆட்சியை வழங்கக்கூடிய ஒரு அரசியல் கட்சியாக ஜே.வி.பி. தன்னை முன்னிறுத்துவதற்கு அறகலய உதவியது.

சில வருடங்களுக்கு முன்னர் சந்திரிக்கா குமாரதுங்கவின் அரசாங்கத்தில் திசாநாயக்க ஒரு அமைச்சராக இருந்த போதிலும், ஜே.வி.பி. ஒருபோதும் கொழும்பில்  அதிகாரத்தில் இருந்ததில்லை என்ற உண்மை அரசியல் அதிகார வர்க்கத்தின் மீதான வாக்காளர்களின் வெறுப்புணர்வை வெளிக்காட்டிய தேர்தல் ஒன்றில் மக்களின் ஆணையை அந்த கட்சி தலைமையிலான கூட்டணி வென்றெடுப்பதற்கு உதவியது.

இலங்கை இன்னமும் 2022ஆம் ஆண்டின் பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபடவில்லை. அத்துடன் சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனுதவியிலேயே தங்கியிருக்கிறது. அதேவேளை வரிக்குறைப்பையும் கூடுதலான நலன்புரி உதவிகளையும் மக்கள் எதிர்பார்த்து நிற்கிறார்கள். அதனால் நாட்டை நிருவகிப்பதில் உள்ள நெருக்குதல்களை கையாள்வதில் திசாநாயக்க தனது கொள்கைகளில் நடைமுறைச் சாத்தியமான அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகும்.

பதவியில் இருந்து இறங்கிச் சென்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தின் மீதான மக்களின் கடுமையான வெறுப்புணர்வுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனையின் பேரில் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த சிக்கனத் திட்டங்கள் ஒரு முக்கியமான காரணமாகும். சர்வதேச நாணய நிதியத்தின் உதவித்திட்டம் குறித்து மீள்பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக திசாநாயக்க உறுதியளித்திருக்கிறார். 

கோட்டாபய ராஜபக்சவுக்கு பிறகு பதவிக்கு வந்த விக்கிரமசிங்க நாணய நெருக்கடியைச் சமாளிப்பதற்கும் நாட்டையும் பொருளாதாரத்தையும் நிலையுறுதிப்படுத்துவதற்கும் சர்வதேச சமூகத்திடமிருந்து உதவியை நாடவேண்டியிருந்தது.

மீண்டும் பொருளாதாரம் குழப்பநிலைக்குள் செல்லாதிருப்பதை உறுதிசெய்வதற்கு திசாநாயக்க தனது கட்சியின் ஜனரஞ்சகவாதத்தை தணித்து ஒரு மத்தியபாதையை கண்டறிய வேண்டியிருக்கலாம்.

தற்போது ஆட்சியதிகாரத்துக்கு வந்துவிட்ட ஜே.வி.பி. அதன் பிரத்தியேகமான சிங்கள தேசியவாதத்தை கைவிட்டு சிறுபான்மைச் சமூகங்களின் குறிப்பாக தமிழர்களின் அக்கறைகளை கையாள்வதற்கு சகல சமூகங்களையும் அரவணைக்கும் அணுகுமுறையை தழுவவேண்டும். ஜே.வி.பி.யின் இந்திய விரோதப் போக்கு  கூடுதலான அளவுக்கு அதன் தேசியவாத சிந்தனையுடன் சம்பந்தப்பட்டதே தவிர சீனாவுடனான கோட்பாட்டு ரீதியான எந்த நெருக்கத்துடனும் தொடர்புபட்டதல்ல.  

இலங்கை நெருக்கடிகளை எதிர்நோக்கிய நேரங்களில் இந்தியா ஆதரவாக இருந்து வந்திருக்கிறது. 2022 அமைதியின்மைக்கு பிறகு இரு நாடுகளும் மேலும் நெருக்கமாக வந்திருக்கின்றன. கடந்த பெப்ரவரியில் டில்லியில் இந்திய உயர்மட்ட அதிகாரிகளைச் சந்தித்த திசாநாயக்க இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவதைப் பற்றி பேசினார். அவ்வாறு செய்வதே இரு நாடுகளின் நலன்களுக்கும் உகந்தது.

டெக்கான் ஹெரால்ட்

"மீளமைத்துக்கொள்வதற்கான இலங்கையின் வாய்ப்பு" என்ற தலைப்பில் டெக்கான் ஹெரால்டின் ஆசிரிய தலையங்கத்தில் கூறப்பட்டிருப்பதாவது: 

32b20ab3-dd95-4651-98dc-80e15fdad1d5.jfi

இலங்கையின் ஜனாதிபதியாக ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி) தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரா குமார திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டமை ஒன்றும் எதிர்பார்க்கப்படாதது அல்ல. "முறைமை மாற்றத்துக்கான" ஒரு வேட்பாளராகவே அவரது பிரசாரங்கள் அமைந்திருந்தன. நாட்டின் பொருளாதாரத்தை தவறாக முகாமைத்துவம் செய்த ராஜபக்ச சகோதரர்களுக்கு எதிரான 2022 மக்கள் கிளர்ச்சியின் பிரதான முழக்கமாக "முறைமை மாற்றமே" விளங்கியது.

அவர்கள் அதிகாரத்தில் இருந்து விரட்டப்பட்ட பிறகு தலைமைத்துவத்தில் மெய்யான ஒரு மாற்றத்தை மக்கள் எதிர்பார்த்தார்கள். பதவியில் இருந்து இறங்கிச் சென்றிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அந்த மாற்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. 

இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுப்பதற்காக 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனுதவியை வழங்கிய சர்வதேச நாணய நிதியம்  விதித்த நிபந்தனைகளின் விளைவாக மக்கள் அனுபவிக்கும் துன்பத்தில் இருந்து அவர்களை விடுவிப்பதாக வாக்குறுதியளித்த திசாநாயக்க இப்போது தனது ஆணையை நிறைவேற்ற வேண்டியவராக இருக்கிறார்.

ஜே.வி.பி.க்கு மூன்று உறுப்பினர்களே இருக்கும் தற்போதைய பாராளுமன்றத்தை கலைத்து புதிய தேர்தலுக்கு உத்தரவிடுவதே திசாநாயக்கவின் அடுத்த நடவடிக்கையாக இருந்தது. தேர்தலில் போட்டியிட்டபோது பொருளாதாரத்தை எவ்வாறு சீர்செய்து உறுதிப்பாட்டை ஏற்படுத்துவதற்கான திட்டம் பற்றி அவருக்கு தெளிவிருக்கவில்லை. ஆனால் அவர் நடைமுறைச்சாத்தியமான அணுகுமுறைகளைப் பற்றி சிந்திக்கும் ஒரு அரசியல்வாதியாக தெரிகிறார். ஜே.வி.பி.யின் தீவிர இடதுசாரிப் போக்கையும் சிங்கள தேசியவாதத்தையும்  தணிப்பதில் அக்கறை கொண்டவராக அவர் இருக்கிறார்.

திசாநாயக்கவைப் பற்றிய டில்லியின் ஐயுறவுகள் ஜே.வி.பி.யின் இந்திய விரோத வரலாற்றையும் அதன் சீனச்சார்பையும் அடிப்படையாகக் கொண்டவையாக இருக்கின்றன. அந்த இரண்டு அம்சங்களையும் ஜே.வி.பி. மறைக்கவில்லை. கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்ட திசாநாயக்க கொழும்பின் நெருங்கிய அயல்நாடு என்ற வகையிலும் தெற்காசியாவின் மிகப் பெரிய பொருளாதாரம் என்ற வகையிலும் இந்தியா எந்தளவுக்கு இலங்கைக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை ஏற்றுக்கொள்வதாக பல நேர்காணல்களில் கூறியிருக்கிறார்.

இந்தியாவுடன் இலங்கைக்கு புவிசார் பகைமை எதுவும் கிடையாது என்றும் அவர் கூறியிருக்கிறார். தனது இந்த நிலைப்பாட்டை பொருளாதார ரீதியில் ஆழக் காலூன்றியிருக்கும் சீனாவுடனான ஜே.வி.பி.யின் உறவுகளுடன் எவ்வாறு சமநிலைப்படுத்துவார் என்பதிலேயே அவரைப் பற்றிய இந்தியாவின் புரிதலும்  அதன் சொந்த பாதுகாப்பு கணிப்பீடுகளும் தங்கியிருக்கின்றன.

திசாநாயக்கவுக்கு முன்கூட்டியே இந்தியா நீட்டிய நேசக்கரமும் இவ்வருடம் மார்ச் மாதத்தில் அவர் இந்தியாவுக்கு மேற்கொண்ட விஜயமும் இரு தரப்பினரும் பழக்கமற்றவர்கள் அல்ல என்பதை உறுதிசெய்திருக்கிறது.

இலங்கையில் சீனாவின் செல்வாக்குப் பற்றிய இந்தியாவின் அக்கறைகள் காரணமாக  டில்லி முன்னுரிமை கொடுத்துக் கவனிக்கின்ற ஒரு விவகாரமாக தமிழர் பிரச்சினை இப்போது இல்லை என்ற போதிலும், புதிய அரசியலமைப்பு ஒனறைக் கொண்டுவரும் உத்தேசம் குறித்து திசாநாயக்க கூறியிருப்பதை இந்தியா கவனத்தில் எடுக்காமல் இருந்திருக்காது.

1987ஆம் ஆண்டில் இந்தியாவின் அனுசரணையுடன் இலங்கை அரசியலமைப்புக்கு கொண்டுவரப்பட்ட 13வது திருத்தத்தை நீக்கிவிடவேண்டும் என்ற ஆர்வம் ஜே.வி.பி. உட்பட பல வட்டாரங்களில் இருந்து வருவதால் அரசியலமைப்பை மீளவரைவது என்பது பல பிரச்சினைகளைக் கிளறிவிடக்கூடிய சாத்தியம் இருக்கிறது. 

தமிழர்களுக்கு அதிகாரங்களைப் பரவலாக்குவதற்கு இலங்கையின் அரசியலமைப்பில் இருக்கும் ஒரேயொரு ஏற்பாடு 13வது திருத்தம் மாத்திரமேயாகும். அவ்வாறு இருந்தபோதிலும் அந்த திருத்தம் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படவோ அல்லது நடைமுறைப்படுத்தப்படவோ இல்லை. அதில் ஏதாவது மாற்றங்களைச் செய்வதற்கு மேற்கொள்ளப்படக்கூடிய எந்தவொரு முயற்சியும் இந்தியாவுடனான இலங்கையின் உறவுகளில் தமிழர் பிரச்சினையை முன்னரங்கத்துக்கு கொண்டுவரும்.

திசாநாயக்க பெரும்பான்மையான சிங்கள வாக்காளர்களினாலேயே தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.  அவர்களது தெரிவையும் அதிகார மாற்றம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முறையில் மிகவும்  அமைதியாக இடம்பெற்றிருப்பதையும் இந்தியா மதிக்கிறது. உறவுமுறையில் சிக்கல்கள் தொடரலாம் என்கிற அதேவேளை  அவை மோசமடையாமல் இருப்பதை இராஜதந்திரம் உறுதிசெய்யவேண்டும்.

https://www.virakesari.lk/article/194748

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.