Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
செந்தில் பாலாஜி, மு.க.ஸ்டாலின், தி.மு.க

பட மூலாதாரம்,DMK/WWW.DMK.IN

படக்குறிப்பு, மு.க. ஸ்டாலின் மற்றும் செந்தில் பாலாஜி கட்டுரை தகவல்
  • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 2 அக்டோபர் 2024

அமலாக்கத் துறை வழக்கு ஒன்றில் கைதாகி பிணையில் வெளிவந்த செந்தில் பாலாஜி 'தியாகம் செய்ததாக' முதல்வரே குறிப்பிட்டதும் அவருக்கு உடனடியாக அமைச்சர் பதவி வழங்கப்பட்டதும் கடும் விமர்சனத்தைக் கிளப்பியிருக்கிறது.

மோசடி வழக்கு ஒன்றில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு, ஓராண்டிற்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டு, சமீபத்தில் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

அவர் பிணையில் வெளிவந்தவுடன் அதற்கு முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வாழ்த்துத் தெரிவித்தார். "உன் தியாகம் பெரிது! உறுதி அதனினும் பெரிது!" என முதலமைச்சர் ஸ்டாலின் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து சமூக வலைதளங்களிலும் எதிர்க்கட்சிகளிடமும் இது தொடர்பாக விமர்சனங்கள் எழுந்தன.

 

சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி, "ஊழல் குற்றச்சாட்டில் கைதான செந்தில் பாலாஜியை தியாகி என முதலமைச்சரே சொல்வது வெட்கக்கேடானது. தி.மு.க-வை வளர்க்க போராடியவர்களுக்கு தியாகி பட்டம் இல்லை. பல கட்சிகளுக்கு சென்று வந்தவருக்குதான் தியாகி பட்டம்," என்று குறிப்பிட்டார்.

பா.ஜ.க., மாநில ஒருங்கிணைப்புக் குழு தலைவரான எச்.ராஜாவும் இதனைக் கடுமையாக விமர்சித்தார்.

"குளித்தலையில் தேர்தலுக்கு முன்பாக செந்தில் பாலாஜி மிகப் பெரிய ஊழல்வாதி என்றார் ஸ்டாலின். தி.மு.க., ஆட்சிக்கு வரும்போது செந்தில் பாலாஜி சிறையில் இருப்பார் என்று சொன்னார். அவரை ஸ்டாலின் இன்று தியாகி என்கிறார்," என்றார்.

 

‘ஏற்றுக்கொள்ள முடியாது’

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாசும், முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்ததைக் கடுமையாக விமர்சித்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் 15 மாத சிறை தண்டனை அனுபவித்ததுதான் செந்தில் பாலாஜி செய்த தியாகம் என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் முதலமைச்சர் விளக்கமளித்திருக்கிறார்,” என்றார்.

ராமதாசு, மேலும் அந்த அறிக்கையில், "பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழித்த ஒருவரை ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் இந்த அளவுக்கு இறங்கிச் சென்று பாதுகாக்க முயல்வதும், போற்றுவதும் ஏற்றுக் கொள்ளவே முடியாதது," என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

 
செந்தில் பாலாஜி, மு.க.ஸ்டாலின், தி.மு.க
படக்குறிப்பு, மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம்

‘இது விபரீதமான போக்கு’

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம், இந்தப் போக்கு நல்லதல்ல என்கிறார். “நீதிமன்ற நடவடிக்கைகள் நிலுவையில் உள்ளபோது, அரசியல் அவசரம் காட்டுவது விபரீதமாகத்தான் முடியும்,” என்கிறார்.

இப்படிச் அவருக்கு அவசரமாக அமைச்சர் பதவி வழங்குவதால், செந்தில் பாலாஜிக்கு அளிக்கப்பட்டுள்ள ஜாமீன் ரத்தாகலாம் என்கிறார் ஷ்யாம்.

“அவர் அமைச்சராகிவிட்டதால், சென்னையில் இந்த வழக்கை நடத்தக்கூடாது, வேறு மாநிலத்தில் நடத்த வேண்டும் என யாராவது உச்சநீதிமன்றத்தை நாடி, நீதிமன்றம் அதற்கு ஒப்புக்கொண்டால், அது இன்னும் விபரீதமாக முடியும்,” என்க்கிறார்.

இதற்கு ஒரு எடுத்துக்காட்டு தந்த அவர், ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இதுபோன்ற காரணங்களைச் சொல்லித்தான் தி.மு.க-வின் பொதுச் செயலாளர் அன்பழகன், வழக்கை கர்நாடக மாநிலத்தில் விசாரிக்கும் தீர்ப்பைப் பெற்றார், என்கிறார்.

“அந்த வழக்கு எப்படி முடிவுக்கு வந்தது என எல்லோருக்குமே தெரியும்," என்கிறார் ஷ்யாம்.

செந்தில் பாலாஜி, மு.க.ஸ்டாலின், தி.மு.க

பட மூலாதாரம்,X/V_SENTHILBALAJI

படக்குறிப்பு, 2018-ஆம் ஆண்டு தி.மு.க-வில் இணைந்தார் செந்தில் பாலாஜி

‘தி.மு.க இதனை எளிதாக எடுத்துக்கொள்கிறது'

இதுபோன்ற சட்ட விவகாரங்களை எளிதாக எடுத்துக் கொள்வது நல்லதில்லை என்கிறார் ஷ்யாம்.

"இந்த விஷயத்தை தி.மு.க., மிகவும் எளிதாக எடுத்துக் கொள்கிறார்கள் என நினைக்கிறேன். சூழல் வேகமாக மாறிவருகிறது. செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கொடுத்தபோது இருந்த நிலை வேறு. இப்போது இருக்கும் நிலை வேறு என உச்ச நீதிமன்றத்தில் ஒருவர் முறையிட்டவுடன், அதனைத் தனி மனுவாகத் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. இதில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்,” என்கிறார் அவர்.

“அமைச்சர் பதவி அளிப்பதையெல்லாம் அவசரப்படாமல் பொறுமையாகச் செய்திருக்கலாம். எந்தக் காரணத்திற்காக இதைச் செய்திருந்தாலும் அரசியல் ரீதியாக இது நிச்சயம் பின்னடைவை ஏற்படுத்தும்," என்கிறார் ஷ்யாம்.

மக்களிடம் அதிருப்தி ஏற்பட்டால், அதனை அந்தத் தருணத்திற்கு ஏற்றபடி எதிர்கொள்ளலாம் என்ற எண்ணம் தி.மு.க-விடம் இருக்கிறது என்கிறார் பத்திரிகையாளர் ஆர்.கே. ராதாகிருஷ்ணன்.

"இப்போது தேர்தல் வந்தால்கூட தி.மு.க-தான் வெல்லும் நிலை இருக்கிறது என நினைக்கிறார்கள். இந்த நிலைமை மாறினால், அப்போது அதற்கேற்றபடி அதைச் சமாளிப்பார்கள்," என்கிறார் அவர்.

செந்தில் பாலாஜி, மு.க.ஸ்டாலின், தி.மு.க
படக்குறிப்பு, பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன்

‘தி.மு.க. முழுமையாக மாறிவிட்டது’

மேலும் பேசிய பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன், இந்தப் போக்கு, தி.மு.க. முழுமையாக மாறிவிட்டதன் அடையாளம் என்கிறார்.

இப்போது இருப்பது முன்பிருந்த தி.மு.க., அல்ல என்னும் அவர், தி.மு.க., அடிப்படையாகவே மாறிவருகிறது என்கிறார். “எந்த விஷயம், கட்சி நிர்வாகிகளை ஈர்த்து வைத்திருக்கும் எனப் பார்க்கிறார்கள்,” என்கிறார்.

முன்பு தி.மு.க உறுப்பினர்களை கொள்கை கட்டிப்போட்டிருந்தது என்று கூறும் ராதாகிருஷ்ணன், இப்போது ஒருவர் கட்சிக்குத் தீவிரமாக வேலை பார்த்தால் அவரைக் கைவிடமாட்டோம் எனக் கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் காட்ட நினைப்பதாகக் கூறுகிறார்.

இதுகுறித்து மேலும் பேசிய ராதாகிருஷ்ணன், “செந்தில் பாலாஜி தி.மு.க-வுக்குக் கடுமையாக வேலை செய்திருக்கிறார். ஆகவே, அதற்காக அவரை நான் கைவிடாமல் இருக்கிறேன் எனச் சொல்ல நினைக்கிறார் ஸ்டாலின். ஆகவே, ஒருவர் நல்லவரா, கெட்டவரா என்பது கேள்வியல்ல. கட்சிக்கு என்ன வேலை பார்த்தாய் என்பதுதான் முக்கியம் என கட்சித் தலைமை முடிவுசெய்துவிட்டதைத்தான் இது காட்டுகிறது," என்கிறார் ராதாகிருஷ்ணன்.

செந்தில் பாலாஜி, மு.க.ஸ்டாலின், தி.மு.க

பட மூலாதாரம்,X/V_SENTHILBALAJI

படக்குறிப்பு, செந்தில் பாலாஜிக்கு மீண்டும் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை ஒதுக்கப்பட்டுள்ளது

‘அர்த்தமில்லாத விமர்சனங்கள்’

ஆனால், இதுபோன்ற விமர்சனங்களில் அர்த்தமில்லை என்கிறார் தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளரான ரவீந்திரன் கான்ஸ்டைன்டீன்.

தன் கட்சியைச் சேர்ந்த நிர்வாகி சிறையிலிருந்து வந்த பிறகு கட்சித் தலைவர் என்ற முறையில் வாழ்த்துத் தெரிவிப்பதில் என்ன தவறு இருக்கிறது என்று கேட்கிறார் அவர்.

"செந்தில் பாலாஜி வழக்கு முடிந்துபோன ஒன்று. செந்தில் பாலாஜி கரூரில் அண்ணாமலையைத் தோற்கடித்தார் என்பதற்காகவும், தி.மு.க-வின் பெயரைக் கெடுப்பதற்காகவும் இதைச் செய்கிறார்கள்,” என்கிறார் கான்ஸ்டைன்டீன்.

செந்தில் பாலாஜியிடம் கொடுத்த மூன்று லட்ச ரூபாய் கிடைக்காவிட்டால் வாழ்க்கையே கிடையாது என்று சொல்பவர்கள் எப்படி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்கிறார்கள்? என்று கேள்வியெழுப்புகிறார் கான்ஸ்டைன்டீன்.

“உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் வழக்கறிஞரை ஆஜராகச் செய்ய எவ்வளவு பணம் கொடுக்கவேண்டும்? அந்த அளவு பணத்தை, பாதிக்கப்பட்டதாகச் சொல்பவர்கள் கொடுக்க முடியுமா? ஆகவே இதற்குப் பின்னால் ஒரு அரசியல் இருக்கிறது. அது பா.ஜ.க. செய்யும் அரசியல்,” என்கிறார்.

மேலும் பேசிய கான்ஸ்டைன்டீன், செந்தில் பாலாஜி பல நாட்கள் சிறையில் இருந்தார். ஆனால், இன்றுவரை குற்றச்சாட்டு பதிவுசெய்யப்படவில்லை, என்கிறார்.

“இந்தியா முழுவதும் மத்திய ஏஜென்சிகளால் வழக்குத் தொடரப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் பா.ஜ.க-வுக்கு மாறியிருக்கிறார்கள். ஆனால், செந்தில் பாலாஜி அப்படிச் செய்யவில்லை. அந்த விசுவாசத்திற்காக அவரை கட்சித் தலைவராக பாராட்டுகிறார் முதலமைச்சர்,” என்கிறார் கான்ஸ்டைன்டீன்.

‘தியாகம்’ என்ற முதல்வர் ஸ்டாலினின் கருத்தைப் பற்றிப் பேசிய கான்ஸ்டைன்டீன், ''செந்தில் பாலாஜி மக்களுக்குத் தியாகம் செய்தார் என யாரும் சொல்லவில்லை, பா.ஜ.க-வின் தாக்குதலைத் தாங்கிக் கொண்டு விசுவாசமாக இருந்தது ஒரு தியாகம். அதைக் கட்சித் தலைவர் பாராட்டுவதில் என்ன தவறு?" என்கிறார் கான்ஸ்டைன்டீன்.

‘தி.மு.க-வின் செயலில் முரண்பாடில்லை’

இந்த விவகாரம் தொடர்பாக புகார் தெரிவித்து, வழக்குத் தொடர்ந்த தி.மு.கவே இப்போது அவரைப் பாராட்டுவது சரியா என்ற விமர்சனம் சரியானதில்லை என்கிறார் கான்ஸ்டைன்டீன்.

"நாங்கள் தொடர்ந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் முடித்து வைக்கப்பட்டுவிட்டது. பாதிக்கப்பட்ட சிலர் உச்ச நீதிமன்றத்திற்கு சென்றார்கள். அந்த வழக்கில்தான் அவர் கைதுசெய்யப்பட்டார். ஆகவே இதில் முரண்பாடில்லை," என்கிறார் கான்ஸ்டைன்டீன்.

இதற்கிடையில், எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்கை விசாரிக்கும் நீதிபதி சுமார் 20 வழக்குகளை விசாரித்து வருவதால், செந்தில் பாலாஜி மீதான வழக்கை விசாரிக்கத் தனியாக ஒரு நீதிபதியை நியமிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றத்தை உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டிருக்கிறது.

செந்தில் பாலாஜி வழக்கின் பின்னணி

அ.தி.மு.க-வின் சார்பில் கரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற செந்தில் பாலாஜியை, 2011-ஆம் ஆண்டு போக்குவரத்துத் துறை அமைச்சராக நியமித்தார் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா.

இந்நிலையில், பேருந்துகளில் ஓட்டுநர், நடத்துனர் பணிகளுக்கான நியமனங்களுக்கு பணம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

2015-ஆம் ஆண்டு வாக்கில், பணத்தைப் பெற்றுக்கொண்டு வேலை தரவில்லையெனக் கூறி தேவசகாயம் என்பவர் புகார் அளித்தார். உயர்நீதிமன்றத் தலையீட்டிற்குப் பிறகு செந்தில் பாலாஜி மீதும் அவரது சகோதரர் அசோக் உள்பட வேறு நாற்பது பேர் மீது சென்னை மத்தியக் குற்றப்புலனாய்வு துறை வழக்குப் பதிவு செய்தது.

இதையடுத்து, முதலமைச்சர் ஜெயலலிதா 2015-ஆம் ஆண்டு ஜூலை 27-ஆம் தேதி போக்குவரத்துத் துறை அமைச்சர் பொறுப்பிலிருந்தும் கரூர் மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் பொறுப்பிலிருந்தும் நீக்கினார்.

இருந்தபோதும் 2016-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை செந்தில் பாலாஜிக்கு ஜெயலலிதா அளித்தார்.

ஜெயலலிதா மறைந்த பிறகு, டி.டி.வி. தினகரனின் ஆதரவாளராக இருந்துவந்தார் செந்தில் பாலாஜி.

தினகரன், 'அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைத்' தொடங்கியபோது, அதிலும் இருந்துவந்தார்.

ஆனால், விரைவிலேயே அக்கட்சியிலிருந்து வெளியேறி, 2018-ஆம் ஆண்டு டிசம்பர் 14-ஆம் தேதி தி.மு.க-வில் இணைந்தார் செந்தில் பாலாஜி.

இந்நிலையில் செந்தில் பாலாஜி மீதான வழக்கு வேகம் எடுத்தது. போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி நடந்ததில், ரூ.1.62 கோடி அளவுக்குச் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடந்திருப்பதாகக் கூறி அமலாக்கத்துறை விசாரணையில் இறங்கியது.

செந்தில் பாலாஜி, மு.க.ஸ்டாலின், தி.மு.க
படக்குறிப்பு, சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி

கைது முதல் ஜாமீன் வரை

இதற்கிடையில், தி.மு.க சார்பில் கரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற செந்தில் பாலாஜி, மின்சாரம் மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சராக்கப்பட்டார்.

இதற்குச் சில மாதங்களுக்குப் பிறகு, தன் மீது புகார் கூறியவர்களுடன் சமரசத்தை எட்டிவிட்டதால் தன் மீதான விசாரணைக்குத் தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார் செந்தில் பாலாஜி. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவர் மீதான பண மோசடி வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.

ஆனால், இந்தத் தீர்ப்பை எதிர்த்து தர்மராஜ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மோசடி வழக்கை முதலில் இருந்து விசாரிக்க உத்தரவிட்டது.

இதற்குப் பிறகு அமலாக்கத்துறை சுறுசுறுப்படைந்தது. செந்தில் பாலாஜி, அவருடன் தொடர்புடையவர்களது இடங்களில் அமலாக்கத் துறை சோதனையில் ஈடுபட்டது. தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அலுவலக அறையில்கூட சோதனை நடத்தப்பட்டது.

இதற்குப் பிறகு, 2023-ஆம் ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி செந்தில் பாலாஜி கைதுசெய்யப்பட்டார். இருந்தபோதும் அவர் இலாகா இல்லாத அமைச்சராகத் தொடர்வார் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

ஆனால், அவருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவந்த நிலையில், தனது அமைச்சர் பதவியை இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ராஜினாமா செய்தார் செந்தில் பாலாஜி.

இந்நிலையில், ஒரு வருடத்துக்கும் மேலாக சிறையிலிருந்த செந்தில் பாலாஜிக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி இந்த ஆண்டு செப்டம்பர் 26-ஆம் தேதி உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். அன்றைய தினமே சிறையிலிருந்து வெளியில் வந்தார் செந்தில் பாலாஜி. இதற்குப் பிறகு காரியங்கள் வேகமாக நடந்தன.

செப்டம்பர் 29-ஆம் தேதி தமிழக அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டது. செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். சிறையிலிருந்து வெளிவந்த மூன்றே நாட்களில் செந்தல் பாலாஜி மீண்டும் அமைச்சரானது பலரது புருவங்களை உயர்த்தியிருப்பதோடு, விமர்சனங்களுக்கும் உள்ளானது.

- இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.