Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

'கொடிபிடித்த காம்ரேட்டுக்கள்..

கொதித்த சாம்சங் நிறுவனம்!'

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில், 'சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட்' என்ற தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற மின்னணு சாதனங்கள் தயாரிக்கப்படுகின்றன. இங்கு பணியாற்றும் ஊழியர்கள் 'சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம்' என்கிற பெயரில் தொழிற்சங்கத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். கூடவே 'தொழிற்சங்க அங்கீகாரம், ஊதிய உயர்வு, 8 மணி நேரம் வேலை' என்பது உள்ளிட்ட கோரிக்கைகளைத் தொழிற்சாலை நிர்வாகத்திடம் முன்வைத்துள்ளனர்.

இதற்கு நிர்வாகம் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, கடந்த 9-ம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் தொழிலாளர்கள் இறங்கினார்கள். இந்த போராட்டமானது தொழிற்சாலையிலிருந்து 2 கி.மீ., தொலைவில் உள்ள எச்சூர் என்ற இடத்தில் தொடங்கியது. இதனால் நிறுவனத்தின் உற்பத்தியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. ஒப்பந்த பணியாளர்களை வைத்து சுமார் 60% அளவுக்கு மட்டுமே சாம்சங் நிறுவனத்தால் உற்பத்தி செய்ய முடிந்தது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

 
Samsung Employees Strike | சாம்சங் போராட்டம்
 
Samsung Employees Strike | சாம்சங் போராட்டம்
 

இதையடுத்து 'போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள் உடனடியாகப் பணிக்கு வர வேண்டும். தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட தொழிலாளர்களின் அடையாள அட்டை முடக்கப்படும். வேலைக்குச் செல்லும் தொழிலாளர்களைத் தடுத்து நிறுத்தி வருவதாகத் தெரிந்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என நிர்வாகம் எச்சரித்தது. மறுபக்கம், "தொழிற்சங்கம் தொடங்கியது சட்டப்படியான நடவடிக்கைதான். தினம்தோறும் 12 மணி நேரம் வேலை கொடுத்து சக்கையாகப் பிழிகிறார்கள். எனவேதான், 8 மணி நேர வேலை, சராசரி ஊதியம் ரூ.36,000 வழங்க வேண்டும்" எனத் தொழிலாளர்கள் கொதித்தார்கள். இதற்கிடையில் தொழிலாளர் நலத்துறை, சாம்சங் இந்தியா நிறுவனம், தொழிற்சங்க நிர்வாகிகள் ஆகியோருக்குள் பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. அப்போதெல்லாம், 'தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க முடியாது' என நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 
 

தி.மு.க., செய்திருப்பது துரோகம்.. கருங்காலித்தனம்..!

இதனால் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதையடுத்து இரண்டு வாரங்களுக்கு முன்பு கோரிக்கைகளுடன் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணியாகத் தொழிலாளர்கள் சென்றனர். அவர்களை காவல்துறை கைது செய்ததுடன் மிரட்டல் விடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. பிறகு குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். ஆனால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இச்சூழலில், கடந்த 7-ம் தேதி அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, தா.மோ.அன்பரசன், வி.சி.கணேசன் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. பிறகு போராட்டம் முடிவுக்கு வந்ததாகச் செய்திகள் வெளியாகின. அதற்குத் தொழிற்சங்கத்தினர் தரப்பிலிருந்து, "தொழிலாளர் வர்க்க வர்க்க போராட்டத்தில் தி.மு.க., அரசு செய்திருக்கிற மாபெரும் துரோகம் கருங்காலித்தனம்" எனக் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 
முதல்வர் ஸ்டாலின்
 
முதல்வர் ஸ்டாலின்
 

சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் சங்கம் தலைவர் முத்துக்குமார், "பேச்சுவார்த்தையின்போது ஊதிய உயர்வு உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளையும் எங்கள் சங்கத்தோடு பேசுவதற்கு நிர்வாகம் சம்மதிக்க வேண்டும். அரசின் முன்னால் பேச்சுவார்த்தை நடத்த அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். தொழிற்சங்க உரிமைகளை ஒருபோதும் நாங்கள் சமரசம் செய்ய முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தோம். அப்போது 'உங்களது கோரிக்கைகள் குறித்து சாம்சங் நிர்வாகத்திடமும், முதலமைச்சரிடம் தெரிவித்துவிட்டு எங்கள் முடிவைச் சொல்லுகிறோம்' என அமைச்சர் த.மோ.அன்பரசன் தெளிவுபடச் சொன்னார். பிறகு வெளியே வந்து பேச்சுவார்த்தையில் நடந்த அனைத்து விஷயங்களையும் ஊடகங்களில் தெரிவித்தோம். இதற்கிடையில் ஏற்கனவே அமைச்சர்களும், சாம்சங் நிறுவனமும் ஏற்படுத்தி வைத்திருக்கக் கூடிய ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் என்ற ஆவணத்தை வெளியிட்டார்கள். அதை சாம்சங் தொழிற்சாலையிலிருந்து முன்கூட்டியே அழைத்து வரப்பட்ட ஒரு சில அப்பாவி தொழிலாளிகளை வைத்துச் செய்திருந்தார்கள்.

 
 

இரவோடு இரவாகக் கைது!

இதன் மூலமாகவே தொழிற்சங்கத்துக்கும் சாம்சங் நிறுவனத்துக்கும் உடன்பாடு ஏற்பட்டதாகத் தகவல் வெளியிட்டார்கள். மேலும் தொழிற்சங்க போராட்டம் குறித்தும் தலைவர்கள் குறித்தும் அவதூறு செய்திகளை சாம்சங் நிர்வாகம் திட்டமிட்டு உருவாக்கி வைரல் செய்து வருகிறது. இதற்கு அமைச்சர்களும் உடந்தையாக இருக்கிறார்கள். இது தொழிலாளர் வர்க்க போராட்டத்தில் தி.மு.க., அரசு செய்திருக்கிற மாபெரும் துரோகம், கருங்காலித்தனம். பெரும்பான்மை தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் இருக்கிறார்கள். முதலில் கோரிக்கைகள் குறித்து முதலமைச்சரிடம் பேசிவிட்டுச் சொல்கிறோம் என்றார்கள். பிறகு அமைச்சர்கள் புறவழியான சதித் திட்டத்தின் மூலம் நிர்வாகத்துக்கு ஆதரவான ஒரு குழுவோடு பேச்சுவார்த்தை நடத்திவிட்டு உடன்பாடு ஏற்பட்டதாகச் செய்தி வெளியிடுகிறார்கள். இது குழப்பம் ஏற்படுத்தும் செயல். சாம்சங் நிறுவனம் மற்றும் அமைச்சர் பெருமக்களின் இந்த இழிவான செயலை சி.ஐ.டி.யூ., வன்மையாகக் கண்டிக்கிறது" எனத் தெரிவித்திருந்தார்.

 
டி.ஆர்.பி.ராஜா
 
டி.ஆர்.பி.ராஜா
 

இதற்குத் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, "சாம்சங் ஊழியர்களின் கோரிக்கை சார்ந்து 7 முறை பேச்சுவார்த்தை நடந்தது. முதலமைச்சரின் உத்தரவுப்படி 3 அமைச்சர்களும் 10 மணி நேரத்திற்கு மேலாகப் பேசியிருக்கிறோம். எதற்காகப் போராட்டத்தை நீட்டிக்கிறார்கள் என்று தெரியவில்லை. போராட்டம் நடத்தும் ஒவ்வொரு நாளும் அவர்களுக்கான ஊதியம் மறுக்கப்படும்" என்றார்.

ஆனாலும், பின்வாங்காமல் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதில் கடுப்பான ஆளும் தரப்பு தொழிலாளர்களின் போராட்டத்தை முடக்கத் திட்டமிட்டது. அதன்படி போராட்டத்தில் ஈடுபடுவதற்காகச் சென்ற தொழிலாளர்கள் காவல்துறையால் மிரட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. மேலும், எச்சூர் பகுதியில் போராட்டம் நடத்துவதற்காக அமைக்கப்பட்டிருந்த பெரிய பந்தலை காவல்துறையினர பிய்த்து எறிந்திருக்கிறார்கள்.

இரவோடு இரவாகத் தொழிற்சங்க நிர்வாகிகளின் பலரது வீடுகளுக்குச் சென்று அவர்களில் பலரைக் கைது செய்திருக்கிறார்கள். முன்னதாக தொழிலாளர்கள் சென்ற லோட் வண்டி விபத்தில் சிக்கியது. இதில் பாதிக்கப்பட்டவர்களைப் பார்க்கச் சென்ற நிர்வாகிகளையும் காவல்துறை கைது செய்தது கொடுமையிலும் கொடுமை. போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, "பேருந்துகளில் ஏறி, காவல்துறையினர் சாம்சங் தொழிலாளர்கள் இருக்கிறார்களா என்று சோதனையிட்டதாகவும், நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்திருப்பதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

 
எடப்பாடி பழனிசாமி
 
எடப்பாடி பழனிசாமி
 

குற்றங்களைச் செய்தவர்களைப் பிடிப்பதில் விடியா தி.மு.க அரசு காட்டாத முனைப்பை, நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடும் தொழிலாளர்களை ஒடுக்குவதில் காட்டுவது ஏன்? போராட்டங்களைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து வைக்கத் திராணியின்றி, அடக்குமுறையால் ஒடுக்க முயலும் விடியா தி.மு.க அரசுக்கு எனது கடும் கண்டனம். உழைப்பாளர் தினத்தன்று மட்டும் சிகப்பு சட்டை போட்டுக்கொண்டு, "நானும் தொழிலாளி" என்று மேடையில் மட்டும் முழங்கும் முதல்வர் ஸ்டாலின், அவர்களுக்குச் சிகப்பு சட்டை மீது உண்மையிலேயே மதிப்பிருக்குமாயின், இதுபோன்ற ஜனநாயக விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை விடுத்து, கைது செய்யப்பட்ட தொழிலாளர்களை உடனடியாக விடுவிப்பதுடன், தமிழக அரசு மீண்டும் தலையிட்டு, தொழிலாளர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, உரியப் பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்னையைச் சுமுகமாகத் தீர்க்குமாறு வலியுறுத்துகிறேன்" என வெடித்திருந்தார்.

 
 

அடக்குமுறை.. கொதித்த தலைவர்கள்!

இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "மண்ணின் மைந்தர்களான தமிழ்நாட்டுத் தொழிலாளர்களின் பக்கம் நிற்காமல், சாம்சங் பெரு நிறுவனத்திற்கு ஆதரவாக நின்று, காவல்துறை மூலம் தொழிலாளர்களின் வீடுகளுக்குள் நள்ளிரவில் புகுந்து தேடித் தேடி அடித்து, சிறைப்படுத்தி, அவர்களின் குடும்பத்தினரை மிரட்டும் தி.மு.க., அரசின் கொடுங்கோன்மைச்செயல் வன்மையான கண்டனத்துக்குரியது" எனத் தெரிவித்துள்ளார்.

பா.ம.க., தலைவர் அன்புமணி ராமதாஸ், "கடந்த சில வாரங்களாக வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர்களின் போராட்ட பந்தலைக் காஞ்சிபுரம் மாவட்ட வருவாய்த்துறையினர் நேற்று இரவோடு, இரவாக அகற்றியுள்ளனர். அதுமட்டுமின்றி, போராட்டத்தை முன்னெடுத்த தொழிற்சங்க நிர்வாகிகள் 10 பேரைக் கைது செய்து சட்டவிரோதக் காவலில் அடைத்து வைத்துள்ளனர். தமிழக அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

 
சீமான்
 
சீமான்
 

தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதுதான் தங்களின் முதன்மை நோக்கம் என்று கூறி வந்த தமிழக அரசு, இப்போது அப்பட்டமாக சாம்சங் நிறுவனத்தின் கையாளாக மாறி தொழிலாளர்கள் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டு வருகிறது" எனக் கொதித்துள்ளார்.

இச்சூழலில் தி.மு.க., கூட்டணியில் அங்கம் வகிக்கும் திருமாவளவன், கே. பாலகிருஷ்ணன், தங்கபாலு உள்ளிட்ட தலைவர்கள் நேரடியாகவே களத்துக்குச் சென்று தொழிலாளர்களுக்கு ஆதரவு கொடுத்தனர். முன்னதாக சாம்சங் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து சி.ஐ.டி.யூ., தொழிற்சங்கம் சார்பில் வழக்கறிஞர் திருமூர்த்தி ஆட்கொணர்வு மனுவைச் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். அப்போது தொடர் போராட்டத்தில் கைதான தொழிலாளர்கள் சிறையில் அடைக்கப்படவில்லை எனக் காவல்துறை பதில் அளித்தது. இதையடுத்து சாம்சங் தொழிலாளர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தத் தடையில்லை என நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, "சி.ஐ.டி.யூ., தொழிற்சங்கத்தை அரசு அங்கீகரிக்காது என எப்போதும் சொல்லவில்லை. சாம்சங் நிறுவனம், தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் அரசு தற்போது எந்த முடிவும் எடுக்க முடியவில்லை.

 
 

இந்த விவகாரத்தில் நீதிமன்றம் என்ன முடிவு கூறினாலும் அதனை அரசு செயல்படுத்தும். தொழிலாளர்களின் பல கோரிக்கைகளை நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது. எனவே, சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும். அரசியல் கட்சிகள் அனுமதியின்றி போராடினால் எப்போதும் போல் காவல்துறை கைது செய்து பின்னர் விடுவிப்பது வாடிக்கையானது. அதேபோலத்தான் போராடிய தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு உடனடியாகப் பிணையில் விடுவிக்கப்பட்டனர்" எனத் தெரிவித்துள்ளார்.

 
Samsung Employees Strike | சாம்சங் போராட்டம்
 
Samsung Employees Strike | சாம்சங் போராட்டம்
 

முன்னதாக தொழிலாளர்கள் சென்ற வாகனம் விபத்தில் சிக்கியது. அப்போது மீட்புப் பணிக்கு வந்த காவல்துறையுடன் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் சி.ஐ.டி.யூ., நிர்வாகிகள் சூர்யா பிரகாஷ், எலன் ஆகியோர் காவல்துறையைத் தள்ளிவிட்டதாக சுங்கவார் சத்திரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து நீதிமன்றத்தில் முன்னிறுத்திய காவல்துறை அவர்களைச் சிறையில் அடைத்தனர். கூட்டணிக் கட்சிகள் ஒவ்வொன்றும் ஏற்கெனவே தி.மு.க., மீது கடும் அதிருப்தியில் இருக்கின்றன. தற்போது சாம்சங் விவகாரம் அவர்களை மேலும் சூடாகியிருக்கிறது. இது தேர்தலில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Samsung Employees Strike: கார்பரேட்டுக்கு ஆதரவாகச் செயல்படுகிறதா திமுக? - கொதிக்கும் காம்ரேட்டுகள் | dmk alliance communist parties condemns dmk in Samsung Employees Strike issue - Vikatan

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.