Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
IND vs BAN T20: இளம் இந்திய அணி ரோஹித், கோலி இல்லாமலே சாதனைகளை குவித்தது எப்படி? என்ன புதுமை?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

“விராட் கோலி, ரோஹித் சர்மா இருவரும் சர்வதேச டி20 போட்டிகளில் விட்டுச் சென்ற இடம் பெரியது. அவர்களின் வெற்றிடத்தை நிரப்ப இந்திய அணிக்குச் சில காலம் ஆகும். அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளுக்குப் பிறகுதான் இந்திய அணி இருவரின் பங்களிப்பு இல்லாமல் சாதிக்கும். ஏனென்றால் இருவரும் இந்திய அணிக்கு ஏராளமான பங்களிப்புகளைச் செய்துள்ளார்கள்.”

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் ரோஜர் பின்னி இந்த வார்த்தைகளைக் கூறினார்.

ஆனால், வெகு விரைவாகவே ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரின் வெற்றிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன என்பதை இளம் இந்திய அணி இரு டி20 தொடர்களை வென்று நிரூபித்து வருகிறது.

ரோஹித், கோலி இல்லாமல் உருவாக்கப்பட்டு வரும் இந்திய அணியின் வீரர்கள் அதீத உற்சாகத்துடன் சாதிக்க துடிக்கும் இளம் பேட்டர்கள், பந்துவீச்சாளர்கள் நிறைந்த அணியாகவே தங்களை ஒவ்வொரு போட்டியிலும் அடையாளப்படுத்தி வருகிறார்கள்.

ரோஹித் சர்மா, கோலி இல்லாமல் சூர்யகுமார் யாதவ் முழுநேர கேப்டனாக இந்திய டி20 அணிக்கு நியமிக்கப்பட்ட பிறகு இரு டி20 தொடர்களை வென்று கொடுத்துள்ளார்.

இளம் இந்திய அணி, இலங்கையில் ஒரு டி20 தொடரையும், உள்நாட்டில் வங்கதேச அணியை 3-0 என்ற கணக்கிலும் வென்று சாதித்துள்ளது.

ஒரே போட்டியில் 7 சாதனைகள்

அதிலும் வங்கதேச அணிக்கு எதிராக இந்திய அணி நேற்றைய ஆட்டத்தில் 7 சாதனைகளைப் படைத்துள்ளது. அவை,

  • டெஸ்ட் போட்டிகள் ஆடும் ஐசிசி முழு உறுப்பு நாடுகளுக்கு எதிராக டி20 போட்டியில் 6 விக்கெட் இழப்புக்கு 297 ரன்கள் என அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது.
  • இந்திய அணியில் ரோஹித் சர்மாவுக்கு அடுத்தாற்போல் டி20 போட்டியில் அதிவேகமாக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை சஞ்சு சாம்சன் நேற்று பதிவு செய்தார். ரோஹித் சர்மா 2017ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக 35 பந்துகளில் சதம் அடித்த நிலையில் வங்கதேசத்துக்கு எதிராக நேற்று சாம்சன் 40 பந்துகளில் சதம் அடித்தார்.
  • ஆடவர்களுக்கான டி20 போட்டியில், பவர்ப்ளேவில் அதிகபட்சமாக 82 ரன்களை குவித்து இந்திய அணி சாதனைப் பட்டியலில் இணைந்தது.
  • இந்திய அணி 7.1 ஓவர்களில் 100 ரன்களை எட்டி அதிவேகமாக டி20 போட்டியில் 100 ரன்களை எட்டிய அணி என்ற சாதனையைப் படைத்தது.
  • பத்து ஓவர்களில் 152 ரன்கள் குவித்து, 3வது அதிகபட்ச ரன்கள் குவித்த அணி என்ற பெருமையை இந்திய அணி பெற்றது.
  • இந்திய அணி, 13.6 ஓவர்களில் 201 ரன்கள் குவித்து அதிவேகமாக 200 ரன்களை எட்டிய 2வது அணி என்ற வரலாற்றைப் படைத்தது.
  • மேலும், 18 ஓவர்களாக இந்திய அணி ஒரு இன்னிங்ஸில் தன்னுடைய ரன்ரேட்டை 10 ரன்களுக்கும் அதிகமாக வைத்து சாதனை படைத்தது.

இது போன்ற பல சாதனைகளை ரோஹித், கோலி இருக்கும்போது, இந்திய அணி படைத்திருந்தாலும், இருவரும் இல்லாத குறுகிய காலத்திற்குள் இளம் இந்திய அணி இப்படிப் பல சாதனைகளைப் படைத்துள்ளது கவனிக்கத்தக்கது.

 

அடையாளம் காட்டிய ஐபிஎல்

IND vs BAN T20: இளம் இந்திய அணி ரோஹித், கோலி இல்லாமலே சாதனைகளை குவித்தது எப்படி? என்ன புதுமை?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஐபிஎல் தொடர் தொடங்கிய பிறகு, இளம் வீரர்களுக்கான வாய்ப்புகள் அதிகமாகியுள்ளதாக கிரிக்கெட் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவில் கிரிக்கெட் திறமையுள்ள ஏராளமான இளைஞர்கள் வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார்கள். இந்த இளைஞர்களுக்கு வாய்ப்புக் கதவுகளைத் திறந்துவிட்டது ஐபிஎல் டி20 தொடர்தான். இந்திய அணியிலும் கடந்த 2008ஆம் ஆண்டுக்குப் பிறகு, அதாவது ஐபிஎல் டி20 தொடர் தொடங்கப்பட்ட பின், வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு, பேட்டிங் என அனைத்திலும் பல வகையாக வீரர்கள் உருவாகியுள்ளார்கள் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் பல்வேறு தருணங்களில் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த 1990கள் முதல் 2010 வரை சச்சின், கங்குலி, திராவிட், விவிஎஸ் லட்சுமண், அதன் பிறகு தோனி, யுவராஜ் சிங், முகமது கைஃப், இர்ஃபான் பதான் ஆகிய வீரர்களை நம்பித்தான் இந்திய அணி இருந்தது. இவர்கள் துணையுடன் மட்டுமே வெளிநாடுகளிலும், உள்நாட்டிலும் பல டெஸ்ட், ஒருநாள் தொடர்களை வென்றுள்ளது.

ஆனால், இவர்கள் காலத்துக்குப் பின் இந்திய அணியில் இவர்களின் இடத்தை யார் நிரப்பப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அந்த வெற்றிடங்களை நிரப்ப, ஐபிஎல் என்னும் பட்டறை ஏராளமான இளம் வீரர்களை உருவாக்கி இந்திய அணிக்கு வழங்கியது.

இந்திய அணியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லவும், புதிய கோணத்தில் கட்டமைக்கவும், பெஞ்ச் வலிமையை மேம்படுத்தவும் ஐபிஎல் பெருமளவு பங்களிப்பு செய்து வருகிறது.

பெஞ்ச் வலிமை அதிகரிப்பு

ஒரு காலத்தில் இந்திய அணியில் ஜவஹல் ஸ்ரீநாத், வெங்கடேஷ் பிரசாத் ஆகியோருக்குப் பின் திறமையான வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லாமல், உருவாகாமல் இந்திய அணி சர்வதேச அரங்கில் திணறியது. இவர்களின் சராசரி வேகம் 130 கி.மீட்டரைகூடத் தாண்டியதில்லை.

ஆனால், இன்று இந்திய அணியில் வாய்ப்புக்காக ஏராளமான திறமையான இளம் வேகப்பந்துவீச்சாளர்கள் காத்திருக்கிறார்கள்.

மயங்க் யாதவ் போன்ற, மணிக்கு 150கி.மீ வேகத்தில் பந்துவீசக்கூடிய அதிவேகப் பந்துவீச்சாளர்களும் உருவாகியுள்ளனர். இதற்கு அடித்தளமாக இருந்து, இவர்களை அடையாளப்படுத்திய ஐபிஎல் டி20 தொடர்தான்.

 
IND vs BAN T20: இளம் இந்திய அணி ரோஹித், கோலி இல்லாமலே சாதனைகளை குவித்தது எப்படி? என்ன புதுமை?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்திய அணியிலிருந்து மூத்த வீரர்கள் ஓய்வு பெற்றுவிட்டால் அந்த இடத்தை நிரப்புவதற்குச் சில ஆண்டுகளாகும் காலம் முன்பு இருந்தது. ஆனால், இப்போது அப்படியில்லை, வாய்ப்புக்காக வரிசையில் காத்திருக்கும் இளைஞர்கள் அந்த இடத்திற்கு ஏற்ப வேகமாகத் தங்களை உருமாற்றிக் கொண்டு வருகிறார்கள்.

ரோஹித் சர்மா கேப்டனாவும், ராகுல் திராவிட் பயிற்சியாளராகவும் இருந்தபோது இந்திய அணி பேட்டிங்கில் ஒருவிதமான பாதுகாப்பு முன்நடவடிக்கையுடன் டி20 போட்டிகளில் ஆடியது. அதற்கான பலனாக 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் 2வது இடத்தையும், 2024 டி20 சாம்பியன் பட்டத்தையும் வென்றது.

ஆனால், கௌதம் கம்பீர் பயிற்சியின் கீழ் இந்திய அணி புதிய பரிணாமத்தை அடைந்து வருவதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

கம்பீர் பயிற்சியில் புரிய பரிணாமம்

சூர்யகுமார் கேப்டனாகவும், கௌதம் கம்பீர் பயிற்சியாளராகவும் வந்த பிறகு செதுக்கப்பட்டுள்ள இந்திய அணி அச்சமற்றதாக, எந்த நேரத்திலும் ஆட்டத்தைத் திருப்பும் வல்லமை படைத்ததாக, அணியில் குழுவாக வீரர்கள் பங்களிப்பு செய்யும் போக்கு அதிகரித்து, சுயநலத்துடன் வீரர்கள் விளையாடும் போக்கு குறைந்துள்ளது.

குறிப்பாக வங்கதேசத்துக்கு எதிராக குவாலியரில் நடந்த ஆட்டத்தில் 128 ரன்களை 12 ஓவர்களுக்குள் இந்திய அணி சேஸ் செய்தது. டெல்லியில் நடந்த 2வது டி20 போட்டியில் 3 விக்கெட் இழப்புக்கு 41 ரன்கள் என்ற இக்கட்டான நிலையில் இருந்தது. ஆனால், நிதிஷ் குமர் ரெட்டி, ரிங்கு சிங் இணைந்து இந்திய அணியை 222 ரன்களுக்கு உயர்த்தினர்.

இதுபோன்று இளம் வீரர்கள் தங்களின் பங்கை உணர்ந்து விளையாடும் போக்கும், பொறுப்பெடுத்து அணியை வழிநடத்துவதும் சமீபகாலமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக விக்கெட்டை பற்றி கவலைப்படாமல் அச்சமற்ற கிரிக்கெட்டை இந்திய அணி விளையாடி வருகிறது.

 

அச்சமற்ற கிரிக்கெட்

IND vs BAN T20: இளம் இந்திய அணி ரோஹித், கோலி இல்லாமலே சாதனைகளை குவித்தது எப்படி? என்ன புதுமை?

பட மூலாதாரம்,GETTY IMAGES

பேட்டிங்கில் “டிபென்ஸ் பாணி” என்பதை விக்கெட்டை உணர்வதற்காக மட்டுமே கையில் எடுத்துச் செயல்படும் இளம் இந்திய அணி, அதன் பிறகு ரன்வேட்டையில் அச்சமற்ற போக்கையே கடைபிடிக்கிறது.

இந்த பாணி ரோஹித் சர்மா கேப்டனாக இருந்தபோது ஏதாவது ஒரு சில ஆட்டங்களில் அரிதாக நடந்திருக்கும். ஆனால், இந்த பாணியை இப்போது முழுநேரமாக இந்திய அணி கைக்கொண்டுள்ளது.

உதாரணமாக கான்பூர் டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா, ஜடேஜா, அஸ்வின், கோலியை தவிர இந்திய அணியில் இருந்த வீரர்கள் பெரும்பாலும் இளம் வீரர்கள். ஆனால், கான்பூர் டெஸ்ட் டிராவில்தான் முடியும் என்று நினைத்திருந்தபோது, 3 செஷன்களில் ஆட்டத்தை முடித்து இந்திய அணி தொடரை வென்றபோதே இந்திய அணியின் அச்சமற்ற போக்கும், பாணியும் மாறியுள்ளது தெரிய வருகிறது.

சுயநலமின்மை

அது மட்டுமல்லாமல் ஒரு பேட்டர் சதத்தை நெருங்கும்போது, பதற்றம் காரணமாக இயல்பாகவே அவரின் ரன்குவிப்பு மட்டுப்படும், மிகுந்த கவனத்துடன் ஆடி சதம் அடிக்கும் வரை பந்துகளை வீணடிக்கும் போக்கைப் பார்த்துள்ளோம். குறிப்பாக விராட் கோலி பலமுறை இதே பாணியில் ஆடி விமர்சனங்களைப் பெற்றுள்ளார்.

ஆனால், இப்போதுள்ள இந்திய அணியில் இளம் வீரர்கள் சுய சாதனைகளையும், சுய அடையாளத்தையும் ஒதுக்கி வைத்து அணியின் நலன், அணியின் வெற்றிக்காக விளையாடுவதைக் காண முடிகிறது.

குறிப்பாக சஞ்சு சாம்சன் நேற்றைய ஆட்டத்தில் தொடர்ந்து 5 சிக்ஸர்களை அடித்த பின்பும், சதம் அடிக்க நெருங்கியபோதும் தனது அதிரடி ஆட்டத்திற்கு பிரேக் போடவில்லை.

தொடர்ந்து தனது பாணியிலேயே ஆடி சதம் அடித்தார். சஞ்சு சாம்சன் நினைத்திருந்தால் சதத்தை நெருங்கியபோது சிறிது மந்தமாக ஆடியிருக்க முடியும். ஆனால், தனது தனிப்பட்ட நலன் மற்றும் சாதனையைவிட அணியின் நலன் பிரதானம் என்ற குழு அணுகுமுறையை இளம் வீரர்களிடம் காண முடிகிறது.

 

ஏழு பந்துவீச்சாளர்கள்

IND vs BAN T20: இளம் இந்திய அணி ரோஹித், கோலி இல்லாமலே சாதனைகளை குவித்தது எப்படி? என்ன புதுமை?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்திய அணி அடுத்த 18 மாதங்களில் வரவுள்ள பல்வேறு பெரிய தொடர்களுக்காகவும் தயார் செய்யப்பட்டு வருகிறது. சாம்பியன்ஸ் கோப்பை, டி20 உலகக்கோப்பை எனப் பல தொடர்கள் இவர்களுக்குக் காத்திருக்கின்றன. அதற்கான பயிற்சியில்தான் இந்த அணி இப்போது இருக்கிறது.

குறிப்பாக கௌதம் கம்பீர் பயிற்சியாளராக வந்தபின் இந்திய அணியில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றம் ஏராளமான வீரர்கள் பந்து வீசுவது. வங்கதேசத்திற்கு எதிரான 2வது டி20 போட்டியில் ஹர்திக் பாண்டியா பந்துவீசவில்லை, ஆனால், இந்திய அணியில் 7 பந்துவீச்சாளர்கள் பந்து வீசினர்.

குறிப்பாக ரியான் பராக், அபிஷேக் சர்மா என பந்துவீசும் திறமையுள்ள அனைத்து வீரர்களுக்கும் சமமான வாய்ப்பு வழங்கப்பட்டு அவர்களின் பந்துவீச்சுத் திறமைக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.

அது மட்டுமின்றி பந்துவீச்சில் பல்வேறு கலவையும், பந்துவீச்சாளர்கள் அதிகமாக இருந்தால் கேப்டனின் பணி எளிதாகவும், எதிரணிக்கு நெருக்கடி கொடுக்கும் அளவை அதிகரிக்கவும் முடியும்.

ஐந்து பந்துவீச்சாளர்களுடனும், பகுதிநேரப் பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கி குறிப்பிட்ட பந்துவீச்சாளரை நம்பி இருப்பதைவிட இதுபோன்ற கலவையில் வீரர்களைப் பந்துவீசச் செய்வது எதிரணியைக் குழப்பி, வெற்றியை எளிதாக்கும்.

 

வாய்ப்புகள் சரிசமம்

IND vs BAN T20: இளம் இந்திய அணி ரோஹித், கோலி இல்லாமலே சாதனைகளை குவித்தது எப்படி? என்ன புதுமை?

பட மூலாதாரம்,GETTY IMAGES

திட்டங்கள், வாய்ப்புகளை சமமாகப் பிரிப்பது, இளம் வீரர்களுக்கு களம் அமைத்துக் கொடுப்பது இப்போதுள்ள இந்திய அணியில் அதிகரித்துள்ளது. இதனால், இளம் வீரர்கள் தங்களுக்கான இடம், வாய்ப்பு கிடைத்தவுடன் அதைத் தக்கவைக்க உச்சபட்ச உழைப்பை பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் வெளிப்படுத்துகிறார்கள்.

வங்கதேசத்திற்கு எதிரான டி20 தொடரில் ஹர்சித் ராணா, திலக் வர்மா, ஜிதேஷ் ஷர்மா போன்ற வீரர்கள் அணியில் தேர்வு செய்யப்பட்டும் அவர்களுக்கு வாய்ப்பு வழங்க முடியாத சூழல்தான் நிலவியது. பெஞ்ச் வலிமையை இவர்கள் 3 பேரின் பேட்டிங் மூலம் அறியலாம்.

சஞ்சு சாம்சனுக்கு இந்திய டி20 அணியில் ஏராளமான வாய்ப்புகள் இதற்கு முன் தரப்பட்டுள்ளன. அவர் அதில் பல வாய்ப்புகளை வீணடித்துள்ளார், பலமுறை ஜொலித்துள்ளார். இந்த முறையும் 2 போட்டிகளிலும் பெரிதாக ரன்கள் ஏதும் சேர்க்கவில்லை. இதனால் 3வது டி20 போட்டியில் சாம்சனுக்கு பதிலாக வேறு வீரரை இந்திய அணியில் சேர்த்திருக்க முடியும்.

ஆனால், சாம்சன் மீது நம்பிக்கை வைக்கப்பட்டு, திறமையை நிரூபிக்கப் போதுமான வாய்ப்பு வழங்கப்பட்டதை அவர் சரியாகப் பயன்படுத்தி, டி20 போட்டியில் அதிவேக சதத்தைப் பதிவு செய்துள்ளார். அது மட்டுமின்றி வழக்கத்திற்கு மாறாக சாம்சனின் பேட்டிங்கில் எந்தவிதமான கட்டுப்பாடுகளும், விக்கெட்டை இழந்தவிடக்கூடாது என்ற கூடுதல் கவனமும் இல்லை. மாறாக, அவரின் பேட்டிங்கில் கூடுதல் சுதந்திரமும், ஷாட் தேர்வில் அதிகமான சுதந்திரமும் வழங்கப்பட்டதால் அவரின் நேற்றைய பேட்டிங் முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய மாற்றத்துடன் இருந்தது.

 

சுயநலமில்லாத அணிதான் தேவை

IND vs BAN T20: இளம் இந்திய அணி ரோஹித், கோலி இல்லாமலே சாதனைகளை குவித்தது எப்படி? என்ன புதுமை?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கேப்டன் சூர்யகுமார் யாதவ் இதுகுறித்துப் பேசுகையில் “என்னுடைய அணியில் சுயநலமில்லாத வீரர்கள் இருப்பதையே விரும்புகிறேன். ஒரு அணியாக நாங்கள் அதிகம் சாதித்துள்ளோம் என நினைக்கிறேன்.

அணியைவிட எந்த வீரரும் உயர்ந்தவர் அல்ல என்று பயிற்சியாளர் கம்பீர் அடிக்கடி வீரர்களிடம் கூறியுள்ளார். நீங்கள் 99 ரன்களில் இருந்தாலும் 49 ரன்களில் இருந்தாலும் சரி, ஒரு பந்து சிக்சர் அடிக்கக் கூடியது என்றால் துணிச்சலாக அடிக்க வேண்டும், சதத்துக்காக வீணடிக்கக் கூடாது என்று கம்பீர் அறிவுறுத்தியுள்ளார். சஞ்சு சாம்சன் அப்படித்தான் பேட் செய்தார் அவரின் பேட்டிங்கை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது” என்று தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் கோலி, ரோஹித்துக்கான முக்கியத்துவம் குறைந்துவிடும், ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த், சுப்மான் கில் போன்ற இளம் வீரர்கள் எழுச்சி ஆரம்பமாகும் என முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கரும் தெரிவித்துள்ளார்.

ஆதலால், ரோஹித் சர்மா, விராட் கோலி இல்லாத வெற்றிடம் நிரப்பப்பட்டுவிட்டது. இரு ஜாம்பவான்கள் இல்லாத இந்திய அணி இன்னும் வலிமையாகவே எதிர்காலத் திட்டங்களுக்காகத் தயார் செய்யப்பட்டு வருகிறது என்பதற்கு இரு டி20 தொடர்களின் வெற்றியே சாட்சி.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தென் ஆபிரிக்கா ம‌ற்றும் அவுஸ்ரேலியா போன்ற‌ அணிக‌ளுட‌ன் அவ‌ர்க‌ளின் சொந்த‌ நாட்டில் விளையாடும் போது தெரியும் இந்தியாவின் தோல்வி

 

சொந்த‌ ம‌ண்ணில் அதுவும் கிரிக்கேட்டில் ப‌லம் இல்லாத‌ வ‌ங்கிளாதேஸ் அணிய‌ வீழ்த்தினா போல‌ ஓவ‌ர் வில்டாப் விட‌க் கூடாது...................



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.