Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

(புருஜோத்தமன் தங்கமயில்)

tamil%20pa.jpg


வடக்குக் கிழக்கு தமிழ் மக்களின் வாக்குகள், தென் இலங்கைக் கட்சிகள் மற்றும் அவற்றின் உதிரிக் கட்சிகளிடம் சென்றுவிடுமோ என்கிற அச்சம், தமிழ்த் தேசிய அரசியலைப் பற்றிக் கொண்டிருப்பவர்களிடம் ஏற்பட்டிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தென் இலங்கையின் பாரம்பரியக் கட்சிகளின் வேட்பாளர்களைத் தோற்கடித்து, தேசிய மக்கள் சக்தியின் அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்றிருக்கின்றார். அதனை ‘புதிய புரட்சி மாற்றம்’ என்று அடையாளப்படுத்துகிறார்கள். நடைபெறவுள்ள பொதுத் தேர்தலிலும், அந்த வெற்றியின் நீட்சியை நிகழ்த்திக் காட்ட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பிலேயே ஜனாதிபதியாகப் பதவியேற்ற ஒருசில நாட்களிலேயே பாராளுமன்றத்தைக் கலைத்து தேர்தலுக்கான அறிவிப்பை அநுர வெளியிட்டார். இந்தப் புரட்சி மாற்ற அலைக்குள் தமிழ் மக்களும் அள்ளுண்டுவிடுவார்கள் என்கிற பயம், தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு மாத்திரமல்ல, கடந்த காலங்களில் ஆட்சியாளர்களின் பங்காளியாக இயங்கிய ஈபிடிபி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் போன்ற கட்சிகளுக்கும் ஏற்பட்டிருக்கின்றன என்பது கவனத்தில் கொள்ளப்படக் கூடியது. 

ஈழத் தமிழர் அரசியல் வரலாற்றில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக 2004ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் 22 பாராளுமன்ற ஆசனங்களை வெற்றி கொண்டமைதான், அதியுச்ச தேர்தல் வெற்றியாகும். அது, தமிழீழ விடுதலைப் புலிகளினால் நிகழ்த்திக் காட்டப்பட்டது. அங்கு, கூட்டமைப்பின் தலைவர்களோ, பங்காளிக் கட்சிகளோ வெற்றிக்கான உரித்தாளர்கள் அல்ல. அவர்கள், புலிகளினால் மக்களிடம் முன்மொழியப்பட்டு, வெற்றியைச் சுவைத்தவர்கள். அத்தோடு, அப்படியான தமிழர் வாக்கு ஒருங்கிணைவு, தற்போதுள்ள தேர்தல் நடைமுறைக்குள் சாத்தியம் இல்லாதது. அன்றைய திகதியில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் 9 பாராளுமன்ற ஆசனங்கள். இன்று அது, 6 ஆக சுருங்கிவிட்டது. ஆக, 22 என்கிற பாராளுமன்ற ஆசனத்தை 19 எண்ணிக்கை அடிப்படையில் வைத்துக் கொண்டுதான், தமிழ்த் தேசிய வாக்குகளின் ஒருங்கிணைவின் அடைவு தொடர்பில் பேச வேண்டி ஏற்படுகின்றது. கடந்த பொதுத் தேர்தலில் கூட்டமைப்பினர் 10 ஆசனங்களையும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 2 ஆசனங்களையும், தமிழ் மக்கள் கூட்டணி ஒரு ஆசனத்தையும் பெற்றன. அப்படிப் பார்த்தாலும் 6 ஆசனங்களின் இழப்பு, தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு ஏற்பட்டிருப்பதாக வாதம் முன்வைக்கப்படுகின்றது. கடந்த தேர்தலில் மட்டக்களப்பில் 2 ஆசனங்களை தமிழ்த் தேசியக் கட்சிகள் இழந்தன. அவற்றை பிள்ளையானும், வியாழேந்திரனும் வென்றனர். அம்பாறையில் வெற்றி கொள்ளப்பட வேண்டிய ஒற்றை ஆசனமும் கருணா அம்மானின் வாக்குப் பிரிப்பினால், இல்லாமற்போனது. யாழ்ப்பாணத்தில், அங்கஜன் ஒரு ஆசனத்தை வென்றார். வன்னியில் ஈபிடிபிக்கு உதிரி வாக்குகளினால் ஒரு ஆசனம் கிடைத்தது. நேரடியாக தமிழ் வாக்குகளின் மூலம், 4 ஆசனங்களை தமிழ்த் தேசியம் பேசாத ராஜபக்ஷக்களின் ஆதரவுக் கட்சிகள் வென்றன. ஒரு ஆசனம் அம்பாறையில் நேரடியாக இழக்கப்பட்டது. இந்த ஆசனங்களுக்கான வாக்குகளை தமிழ்த் தேசியக் கட்சிகளை நோக்கித் திருப்பினாலே, நேரடியாக 5 ஆசனங்கள் மற்றும் இன்னொரு தேசியப் பட்டியல் உறுப்புரிமைக்கான வாக்கின் திரட்சி அளவு என்பவற்றைக் கணக்கில் எடுத்தால், தமிழ்த் தேசியக் கட்சிகள் 19 ஆசனங்களை வெற்றி கொள்ள முடியும். இதில், யாழ்ப்பாணத்தில் டக்ளஸ் தேவானந்தாவின் ஆசனம் உள்ளடக்கப்படவில்லை. ஏனெனில், அவர் புலிகளின் அலைக்குள்ளாலும் தப்பி, 2004 தேர்தலில் வென்றவர். ஆக, 22 என்கிற அதியுச்ச வெற்றிக் கணக்கினை தற்போது ஒப்பிட்டால், அது 19 என்று கொள்ளப்பட வேண்டும். அவற்றை மீளவும் வெற்றிகொள்வது என்பது மிகப்பெரிய சாதனை. கிட்டத்தட்ட அந்த இலக்கை தமிழ்த் தேசியக் கட்சிகள் அடைந்தால், அது 2004 பொதுத் தேர்தல் வெற்றியைவிட பெரிய வெற்றியென்று கொள்ளப்பட வேண்டியது. அதற்கான காரணங்களை, வெளிப்படையாக பேச வேண்டியதில்லை.

தமிழ்த் தேசியக் கட்சிகள் இழந்திருக்கின்ற ஐந்து ஆறு ஆசனங்களை மீண்டும் கைப்பற்றுவதன் மூலம், தமிழ் மக்களை தமிழ்த் தேசிய வாக்குத் திரட்சிக்குள் வைத்துக் கொள்ள முடியும் என்பது ஒரு வகையிலான தேர்தல் கணக்கு ஒப்பீடு. ஆனால், அது சாத்தியமாக என்றால், நிச்சயமாக இல்லை. ஏனெனில், கட்சிகளை ஓரணியில் திரட்டுவதற்கும், அவர்களை தங்களின் கருவிகளாக கையாள்வதற்கும் விடுதலைப் புலிகள் போன்ற ஆளுமையுள்ள தரப்பொன்று தமிழ்ச் சூழலில் இல்லை. அத்தோடு, தமிழ்த் தேசியக் கட்சிகளை அழுத்தங்களை வழங்கி வழிப்படுத்துவதற்கான சிவில் சமூக அமைப்புக்களும் இயங்கு நிலையில் இல்லை. அப்படியான வாய்ப்புக்களை தமிழ் சிவில் சமூக அமையம், தமிழ் மக்கள் பேரவை, தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு என்ற பெயர்களில் எழுந்து அடங்கியவர்கள் அழித்துவிட்டார்கள். இதனால், தேர்தல் மைய அரசியல் கட்சிகளை ஓரணிக்குள் கொண்டு வருவதும், அதன் மூலம் தமிழ்த் தேசிய வாக்குகளை திரட்டி பெரிய வெற்றியைப் பெறுவதும் சாத்தியமில்லாதது. தற்போது ஒவ்வொரு கட்சியும் தங்களின் தனித்த வெற்றி தொடர்பில்தான் அக்கறையோடு இருக்கின்றன. யார் அதிக ஆசனங்களை வெற்றி கொள்கிறார்களோ, அவர்கள்தான், தமிழ்த் தேசிய அரசியலின் தலைமைக் கட்சி என்கிற நிலையில் இருப்பார்கள். அப்படியான நிலையில், அந்த இடத்தைத் தக்க வைப்பது தொடர்பில் தமிழரசுக் கட்சியும், அந்த இடத்தை அடைவது தொடர்பில் ஏனைய கட்சிகளும் இயங்கும். கடந்த பொதுத் தேர்தலில் கூட்டமைப்பு வென்ற 10 ஆசனங்களில், 4 ஆசனங்களை ரெலோவும், புளொட்டும் வென்றிருந்தன. அதனைக் கொண்டே தங்களை அதிகளவில் அலைக்கழித்துவிட்டார்கள் என்று தமிழரசுக் கட்சியினர் எரிச்சலோடு இருந்தார்கள். தங்களின் வீட்டுச் சின்னத்தில் நின்று வெற்றியைப் பெற்றுவிட்டு, தங்களுக்கே பிரச்சினைகளைக் கொடுக்கிறார்கள் என்ற கோபத்தில்தான், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் தீர்மானத்தை எடுத்தார்கள். அது, இந்தப் பொதுத் தேர்தல் வரையில் வந்து நிற்கின்றது. அப்படியான நிலையில், தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசிய ஒருங்கிணைவு என்பது பற்றிப் பேசினாலும், அது தன்னடைய தலைமையின் கீழ் நடைபெற வேண்டும் என்று எதிர்பார்க்கின்றது. அங்கு, தங்களைக் கேள்விக்குட்படுத்தாதவர்களாக பங்காளிக் கட்சிகள் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பிரதானமாக தொக்கி நிற்கின்றது. 

ஒரு பேச்சுக்கு தமிழரசின் தலைமையின் கீழ், ஏனைய கட்சிகள் இணைந்தாலும் முன்னணி அடையாளத்துக்குள் இருக்கும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் இணைவதற்கான எந்த வாய்ப்புக்களும் இல்லை. அந்தக் கட்சி, அவ்வாறான பேச்சுவார்த்தைகளுக்கான கதவுகளை இறுகச் சாத்திக் கொண்டுதான், அரசியலே செய்கின்றது. அத்தோடு, அதற்கு வடக்குக் கிழக்குப் பூராவும் கட்சியை வளர்க்க வேண்டும் என்பதோ, வெற்றிபெற வேண்டும் என்பதோ நோக்கமும் இல்லை. அதிகபட்சம் யாழ்ப்பாணத்தில் இரண்டு ஆசனங்களை வென்று, பெரிதாக பொறுப்புக் கூறாத நிலையில், எதிர்க்கட்சி வரிசையில் இருந்தால் போதும் என்பதுதான் அந்தக் கட்சியின் நிலைப்பாடு. அதற்கு, அந்தக் கட்சி தொடர்ச்சியாக ஒரு குடும்பத்தின் கீழ் இருப்பதும் காரணமாகும். கட்சியை வடக்குக் கிழக்குப் பூராவும் கட்டமைப்புக்களை பலப்படுத்தி வளர்த்து, அதிக வெற்றியைப் பெற்றால், அதுவே எதிர்காலத்தில் கட்சி மீதான கட்டுப்பாட்டினை பொன்னம்பலம் குடும்பத்திடம் இருந்து பறித்துக் கொண்டுவிடும் என்கிற எச்சரிக்கை உணர்வு அவர்களோடு தொடர்ந்து வருகின்றது. அதனால், அவர்கள் யாழ்ப்பாணத்துக்குள் சுருங்கிக் கொண்டுவிட்டார்கள். கட்சியை உண்மையிலேயே வளர்க்கும் நோக்கம் இருக்குமானால், கடந்த பொதுத் தேர்தல் காலத்தில் கிழக்கில் பிரச்சாரங்களை முன்னெடுத்த காங்கிரஸ், தங்களுக்கு தேசியப் பட்டியல் ஆசனம் கிடைத்தால் அதனை கிழக்கிற்கு வழங்குவோம் என்று அறிவித்தது. ஆனால், அந்த வாக்குறுதியை அவர்கள் நிறைவேற்றவில்லை. மாறாக, யாழ்ப்பாணத்துக்குள் அதனை வைத்துக் கொண்டார்கள். இன்றைக்கு அவர்கள் வடக்கு கிழக்குப் பூராவும் போட்டியிட்டாலும், அதன் நோக்கம் நேரடியாக வெற்றிபெறுவது அல்ல. மாறாக, தேசியப் பட்டியலுக்கான வாக்குத் திரட்டுதலாகும். கடந்த பொதுத் தேர்தலில் கூட்டமைப்புக்குள் வேட்பாளர்களுக்கு இடையில் சொல்லிக் கொள்ள முடியாதளவுக்கு குழிபறிக்கும் வேலைகள் இடம்பெற்றன. அது, கூட்டமைப்பின் தோல்விகளுக்கான பிரதான காரணமாக மாறியது. அதுபோலவே, ஓரிரு ஆசனங்களை வெற்றிபெறும் களம் தங்களுக்கு வாய்த்திருக்கின்றது என்பதை உணர்ந்த காங்கிரஸ்காரர்களுக்குள்ளும் விருப்பு வாக்குப் போட்டியும் குழிபறிப்புக்களும் அரங்கேறின. மணிவண்ணன் அதிக வாக்குகளைப் பெற்றுவிடக்கூடாது என்பதில் கஜன்களும், கஜன்களைத் தாண்டி அதிக வாக்குகளைப் பெற்றுவிட வேண்டும் என்பதில் மணிவண்ணனும் குறியாக இருந்தார்கள். இரு தரப்பும், மற்றத்தரப்புக்கு வாக்குப்போட வேண்டாம் என்ற பிரச்சாரத்தை வெளிப்படையாகவே செய்தார்கள். அதன் தொடர்ச்சியாகத்தான் மணிவண்ணனை முன்னணியில் இருந்து விரட்டினார்கள். 

இன்றைக்கு வடக்குக் கிழக்கு பூராவும் தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதான கட்சியாக களம் காண்கிறது. யாழ்ப்பாணத்தில் ஓரிரு ஆசனங்களுக்காக காங்கிரஸும் போட்டியில் இருக்கின்றது. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியினரான சங்குக் கூட்டணி யாழ்ப்பாணத்தில் ஒன்று, வன்னியில் ஒன்று என்ற ஆசன இலக்குகளோடு களம் கண்டிருக்கின்றது. அவர்களினால் ஏனைய மாவட்டங்களில் பெரிய வெற்றியைப் பெற முடியாது. வேணுமென்றால், ஒரு தேசியப் பட்டியல் ஆசனத்துக்கான வாக்குத் திரட்சியை அவர்கள் குறி வைக்கலாம். அதன்மூலம், அதிக பட்சம் சங்குக் கூட்டணி, மூன்று ஆசனக் கணக்கோடு இருக்கின்றது. ஒப்பிடுகையில், கடந்த தேர்தலில் நான்கு ஆசனங்களைக் கொண்டிருந்தார்கள். இப்போது, அவற்றில் ஒன்று தமிழரசுக் கட்சியிடம் இழக்கப்படும் வாய்ப்புண்டு. தமிழரசுக் கட்சியினர் அலங்கரித்து அழகுபார்த்து விக்னேஸ்வரனை வடக்கு முதலமைச்சர் பதவியில் இருந்தினார்கள். அவரோ, தன்னுடைய தனிப்பட்ட ஓட்டத்துக்காக பேரவையைக் கொண்டு தனிக் கட்சி ஆரம்பித்து, கடந்த தேர்தலில் வென்று பதவியை அனுபவித்தும் விட்டார். இறுதியில் அவர், சாராயக்கடை அனுமதிப்பத்திரத்தை வாங்கிக் கொடுத்து, தமிழ்த் தேசிய அரசியலின் சீரழிவு முகங்களின் ஒன்றாக மாறினார். இப்போது, அவரின் கட்சியில் மணிவண்ணன் அணியினர் போட்டியிடுகிறார்கள். அவர்களோடு, தமிழரசுக் கட்சியில் ஆசனம் கோரி, மறுக்கப்பட்ட இருவர் இணைந்திருக்கிறார்கள். இந்தக் குழுவினரால், தேர்தல் வெற்றியை நோக்கி பெரிதாக ஓட முடியாது. ஏனெனில், அவர்கள் தேர்தல் பிரச்சாரக் களத்தில், விக்னேஸ்வரன் சாராயக்கடை முகவராக செயற்பட்ட அவதூறுக்கு பதில் சொல்வதிலேயே காலத்தைக் கடத்த வேண்டியிருக்கின்றது. இன்னொரு பக்கம், தமிழரசுக் கட்சியில் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள் சிலர் ஒன்றாக இணைந்து சுயேட்சையாக மாங்காய் சின்னத்தில் போட்டியிடுகிறார்கள். அவர்களினால் சில ஆயிரம் வாக்குகளை பெறுவதே பெரிய காரியமாக இருக்கும். அப்படியான நிலையில், ஆசனங்களை வெற்றிகொள்வதெல்லாம் நினைத்துப் பார்க்க முடியாது. அதனால்தான், அவர்கள் ஊடகங்களில் செவ்விகளின் வழியாக மாத்திரம் அரசியல் செய்கிறார்கள். அதிலும், சுமந்திரனை தாக்குவது மாத்திரம்தான் தமிழ்த் தேசிய அரசியல் என்றும் நினைத்துக் கொண்டு இயங்குகிறார்கள். 

தமிழ்த் தேசியக் கட்சிகளின் இந்தக் குழறுபடி நிலைக்குள் நின்றுகொண்டு, சில ஆசனங்களை வென்றுவிட வேண்டும் என்பதில் தேசிய மக்கள் சக்தி குறியாக இருக்கின்றது. அத்தோடு, கிழக்கில் அந்தக் கட்சி திருகோணமலை, அம்பாறையில் பெரிய வெற்றியையும் பெறும். அங்கு, அதற்கான வாய்ப்புக்களை சிங்கள, முஸ்லிம் மக்கள் வழங்கும் சாத்தியம் காணப்படுகின்றது. அப்படியான நிலையில், அந்த மாவட்டத்து தமிழ் மக்கள் புரட்சி மாற்றத்துக்கு வாக்களிக்கப் போகிறோம் என்று தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிப்பது, அந்த மாவட்டங்களின் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை இழக்கப்பண்ணுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்யும். குறித்த இரு மாவட்டங்களிலும் தேசிய மக்கள் சக்தியில் நின்று, விருப்பு வாக்கு அடிப்படையில் தமிழ் வேட்பாளர் ஒருவர் வெற்றிபெறுவது என்பது குதிரைக் கொம்பு போன்றது. அப்படியான சூழலில், களத்தினையும் தேவையையும் உணர்ந்து வாக்களிக்க வேண்டும். 

வடக்கில், தேசிய மக்கள் சக்தியினால் ஆசனங்களை வெற்றிகொள்வதற்கான வாய்ப்புக்கள் இல்லை. அந்தக் கட்சியிடம் அது தொடர்பிலான எதிர்பார்ப்பு அவசரமாக இருப்பது மாதிரியும் தெரியவில்லை. ஏனெனில், அந்தக் கட்சியின் வேட்பாளர் தெரிவுகளே அதனை வெளிப்படுத்துகின்றன. தேசிய மக்கள் சக்தியில் வேட்பாளராக வேண்டும் என்பது தொடர்பில் யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் பிரபலமான கல்வியாளர்கள் தொடங்கி பலரும் முண்டியடித்தார்கள். ஆனால் அவர்களையெல்லாம் தவிர்த்துவிட்ட ஒப்பீட்டளவில் வெற்றிக்கான முகமாக அடையாளம்பெற முடியாதவர்களை அந்தக் கட்சி தெரிவு செய்திருக்கின்றது. அது, தனித்த ஆளுமைகளினால் அல்லாமல், கட்சி அடையாளத்தோடு வெற்றிபெற வேண்டும் என்பதும், அதுதான் எதிர்கால கட்சி வளர்ச்சிக்கு அவசியம் என்றும் அந்தக் கட்சியின் நிறைவேற்றுக்குழு நினைக்கின்றது. அதனை நோக்கிய தெரிவுதான் வடக்கில் அந்தக் கட்சி செய்திருப்பது. கிட்டத்தட்ட அதனைத்தான் மட்டக்களப்பிலும் அந்தக் கட்சியின் வேட்பாளர் தெரிவு வெளிப்படுத்தியிருக்கின்றது. எங்கெல்லாம் தமிழ் வாக்குகள் வெற்றியைத் தீர்மானிக்கும் என்று தோன்றிய இடங்களில், அதனை ஒரு நிலைப்பாடாகவே அந்தக் கட்சி கடைப்பிடித்திருக்கின்றது. இந்தப் பிரதேசங்களில் தேசிய மக்கள் சக்திக்கு விழும் வாக்குகள், இன்றைய வெற்றிகளுக்கானது அல்ல. எதிர்கால நிலைத்த வெற்றிகளுக்கான அடித்தளம். அதனை, புரட்சி மாற்ற அலைக்குள் அல்லாட நினைக்கும் தரப்பினர் உணர்ந்து கொள்ள வேண்டும். ஏனெனில், தேசிய மக்கள் சக்தி என்பது, மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தேர்தலுக்கான புதிய முகம். அந்த முகத்துக்குப் பின்னால், இருப்பது கடும்தேசியவாதமும், தமிழர் விரோதமும் கட்டவிழ்த்துவிட்ட கடந்த காலங்களும். அதனைத் தாண்டிய புதிய புரட்சிகளை, வரலாற்றை, அதிகாரப் பகிர்வினை அந்தக் கட்சி செய்துவிடும் என்ற நம்பிக்கை கொள்வது தேவையில்லாதது. ஆக, தமிழ் மக்கள், தங்களின் அரசியலைத் தக்க வைத்துக் கொள்வதற்காக தமிழ்த் தேசியக் கட்சிகளை நோக்கி திரள்வதுதான் இருப்பதில் புத்திசாலித்தனமான தெரிவு. தமிழ்த் தேசியக் கட்சிகள் பொறுப்பற்றுச் செயற்பட்டாலும், தமிழ்த் தேசிய அரசியலை விடுதலைக்கான மூச்சாக கொண்டு சுமப்பதற்கான பொறுப்புணர்வின் அடிப்படையைக் கருதி, தமிழ் மக்கள் அந்த முடிவின் பக்கம் நிற்க வேண்டும். 

-காலைமுரசு பத்திரிகையில் ஒக்டோபர் 27, 2024 வெளியான பத்தி.

http://maruthamuraan.blogspot.com/2024/10/blog-post_27.html



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.