Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
அகலேகா தீவு, இந்தியா - மொரீஷியஸ்

பட மூலாதாரம்,BILLY HENRI

படக்குறிப்பு, அகலேகா தீவு
  • எழுதியவர், ஜேக்கப் எவன்ஸ்
  • பதவி, பிபிசி உலக சேவை

இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள அகலேகா எனும் சிறிய தீவிலிருந்து வெளியேற வேண்டுமென அர்னௌ பூலே ஒருபோதும் நினைத்ததில்லை. ஆனால், தன்னுடைய சொந்த ஊரை ராணுவமயப்படுத்துவதாகக் கூறி, இந்தாண்டு தன்னுடைய உடைமைகளுடன் நொறுங்கிய இதயத்துடன், இங்கிருந்து புறப்பட்டார்.

சமீப காலம் வரை அகலேகா தீவில் வெறும் 350 பேர் மட்டும்தான் மீன்பிடித்தல் மற்றும் தென்னைகளை வளர்ப்புப் பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.

மற்ற உணவுப்பொருட்கள், தெற்கில் 1,100 கி.மீ. தொலைவில் உள்ள மொரீஷியஸின் தலைநகரிலிருந்து கப்பல் மூலம் ஆண்டுக்கு நான்கு முறை இங்கு வந்திறங்கும். அவசரகால மருத்துவ சேவைகளுக்காக, விதிவிலக்காக சிறிய நிலப்பகுதி விமானத்தின் ஓடுபாதையாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால், அகலேகாவை உள்ளடக்கிய தீவு நாடான மொரீஷியஸ், இந்தியாவின் 3,000 மீட்டர் நீளத்தில் விமான ஓடுதளம் மற்றும் புதிய, பெரியளவிலான படகுத்துறை அமைக்க வழிவகுக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. கடல்வழி பாதுகாப்பில் இருநாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பை ஆழப்படுத்தும் ஒருபகுதியாக இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

ஆனால், இது முழு அளவிலான ராணுவ தளமாக மாறக்கூடும் என அகலேகா தீவை சேர்ந்த சிலர் அச்சத்தில் உள்ளனர்.

'தீவில் இருந்து வெளியேற்றப்படலாம்'

கைவினை கலைஞரும் ரெக்கே இசைக் கலைஞருமான (மேற்கத்திய இசை வகை) 44 வயதான அர்னௌ பூலே, இத்திட்டத்திற்கு எதிரான இயக்கத்தை வழிநடத்தி வருகிறார்.

"நான் என் தீவை நேசிக்கிறேன். இந்த தீவு என்னை நேசிக்கிறது," என்கிறார் அவர். "ஆனால், அந்த தளம் அமைக்கப்பட்டால் நான் வெளியேற வேண்டும் என்பது எனக்கு தெரியும்." என்று அவர் கூறுகிறார்.

 
அகலேகா தீவு, இந்தியா - மொரீஷியஸ்

பட மூலாதாரம்,ARNAUD POULAY

படக்குறிப்பு, கட்டுமான பணிகளை வெளிப்படையாக விமர்சித்து வருகிறார் அர்னௌ பூலே

இந்தியப் பெருங்கடலில் தென்மேற்கு பகுதியில் சுமார் 25 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்திருக்கும் இரு சிறிய தீவுகள்தான் அகலேகா. இந்தியா கடல்வழி போக்குவரத்தைக் கண்காணிக்க இது சிறந்த இடமாக இருக்கக்கூடும். கடந்த 2019-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்களை இந்தாண்டு ஜூலை மாதம் எடுக்கப்பட்ட படங்களுடன் ஒப்பிடுகையில், அப்பகுதி எந்தளவுக்கு மாறியுள்ளது என்பது புலப்படுகிறது.

வடக்குத் தீவின் மையத்தில், வடக்கில் லா ஃபோர்ச்சே மற்றும் தெற்கில் விங்-சிங்க் ஆகிய இரு கிராமங்களை உள்ளடக்கி, பனை மர வரிசைகளுக்கு நடுவே ஓடுதளம் அமைக்கப்பட்டுள்ளது.

விமான நிறுத்துமிடத்தில் 60 மீட்டர் அகலமுள்ள இரு கட்டடங்கள் இருப்பதாகவும், அதில் ஒரு கட்டடம் இந்திய கடற்படையின் பி-81(P-8I) விமானத்தை நிறுத்திவைப்பதற்கான கட்டடமாக இருக்கலாம் என்றும், ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் பிஹெச்டி ஆய்வாளரான சாமுவேல் பேஷ்ஃபீல்ட் தெரிவித்தார்.

என்னென்ன வசதிகள் உள்ளன?

பி-81 விமானம் நீர்மூழ்கி கப்பல்களை தாக்குவதற்கும் கடல்வழி தகவல் தொடர்புகளை கண்காணிப்பதற்கும் ஏற்ப மாற்றியமைக்கப்பட்ட போயிங் 737 ரக விமானம் ஆகும். விமான ஓடுதளத்தில் அந்த விமானம் இருப்பதை தீவுவாசிகள் ஏற்கனவே படம் எடுத்துள்ளனர்.

வடமேற்கில் புதிய கப்பல் துறை அமைந்துள்ளது. இந்திய கடலோர பாதுகாப்பு கப்பல்களுக்காகவும் அகலேகாவுக்கு சரக்குகளை கொண்டு வரும் கப்பல்களுக்காகவும் அது பயன்படுத்தப்படலாம் என்று பேஷ்ஃபீல்ட் கூறுகிறார்.

"புதிய செயற்கைக்கோள் படங்கள் கிடைத்திருப்பதால், இந்தியப் பெருங்கடல் தகவல் தொடர்பில் அகலேகா தீவின் பங்கை நாம் இன்னும் சிறப்பாக புரிந்துகொள்ளலாம்," என்கிறார் அவர்.

இந்த தளத்தை "கண்காணிப்பு நிலையம்" என்கிறது, இன்டர்நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஃபார் ஸ்டிராட்டஜிக் ஸ்டடீஸ் எனும் நிறுவனம். மொரீஷியஸின் மற்ற இடங்களில் உள்ள, இந்தியாவால் உருவாக்கப்பட்ட சாதனத்தை ஒத்த கடலோர ரேடார் கண்காணிப்பு அமைப்பும் அதில் இருக்கலாம் என்றும் அந்நிறுவனம் தெரிவிக்கிறது.

 
அகலேகா தீவு, இந்தியா - மொரீஷியஸ்

பட மூலாதாரம்,L'ASSOCIATION LES AMIS D'AGALEGA

படக்குறிப்பு, அகலேகாவின் புதிய ஓடுதளத்தில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய கடற்படையின் பி-81 விமானம்

இந்தியா கூறுவது என்ன?

அகலேகா குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்துள்ள இந்திய அரசாங்கம், தங்களின் இணையதளத்தில் உள்ள முந்தைய கூற்றுகளை பிபிசியிடம் குறிப்பிட்டது. அதில் ஒன்றில், இந்திய பிரதமர் நரேந்திர மோதி, இந்தியாவும் மொரீஷியஸும் வழக்கமான மற்றும் வழக்கத்திற்கு மாறான சவால்களை எதிர்கொண்டு வரும் இந்திய பெருங்கடல் பிரதேசத்தில் கடல் பாதுகாப்பு தொடர்பான "கூட்டாளிகள்" என தெரிவித்திருந்தார்.

இரு நாடுகளும் 1970கள் முதல் பாதுகாப்பு தொடர்பாக நெருங்கிய உறவை கொண்டுள்ளன. மொரீஷியஸின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், கடலோர காவல்படையின் தலைவர் மற்றும் காவல்துறையின் ஹெலிகாப்டர் படைப்பிரிவின் தலைவர் ஆகியோர் இந்தியர்கள் ஆவர். அவர்கள் முறையே இந்தியாவின் உளவு முகமை, விமானப்படை, மற்றும் கடற்படை ஆகியவற்றில் அதிகாரிகளாக உள்ளனர்.

"இந்த தளத்தை ராணுவ பயன்பாட்டு தளமாக அல்லாமல், திறனை மேம்படுத்தும் ஒன்றாக" இரு தரப்பும் பார்க்க விரும்புவதாக, லண்டன் கிங்ஸ் காலேஜின் பேராசிரியர் ஹர்ஷ் பந்த் கூறுகிறார்.

இந்திய பெருங்கடலில் சீனாவின் இருப்பு அதிகரித்து வருவது குறித்து இந்தியாவும் அதன் நட்பு நாடுகளும் கவலை கொண்டுள்ளன என்பதில் எந்த ரகசியமும் இல்லை.

 
அகலேகா தீவு, இந்தியா - மொரீஷியஸ்
படக்குறிப்பு, இந்தியப் பெருங்கடலில் அகலேகா தீவு அமைந்திருப்பதை விளக்கும் வரைபடம்

'சாகோஸ் தீவு போன்று ஆகிவிடுமோ?"

ஒரு பெரிய நாடு சிறிய நாடு ஒன்றின் பிரதேசத்தில் ராணுவ தளம் அமைப்பது வழக்கத்திற்கு மாறானது அல்ல என்றாலும், அகலேகாவில் நடைபெறும் கட்டுமான பணிகள், தீவுவாசிகள் சிலரை தொந்தரவு செய்துள்ளன.

அத்தீவில் பனை மரங்கள் நெடுக உள்ள வெள்ளை-மணல் கடற்கரைகள் உட்பட பல பகுதிகள் ஏற்கனவே இப்பணிக்காக சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். வளர்ந்து வரும் இந்திய கட்டுமானங்களுக்காக லா ஃபோர்ச்சே கிராமமே காலி செய்யப்படலாம் என்றும், அங்கு வசிக்கும் 10 குடும்பங்கள் வெளியேற்றப்படலாம் என்றும் அங்கே தொடர்ந்து வதந்தி நிலவுகிறது.

"இந்தியர்களுக்கு மட்டுமேயான முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அது மாறும்," என 'ஃபிரெண்ட்ஸ் ஆஃப் அகலேகா' எனும் சங்கத்தின் தலைவர் லாவல் சூப்ரமணியென் (Laval Soopramanien) கூறுகிறார்.

"சாகோஸ் தீவுகளின் கதை போன்று அகலேகாவும் மாறிவிடும்" என அவர் அஞ்சுகிறார். சாகோஸ் தீவுகளிலிருந்து வெளியேற்றப்பட்ட பெண் மற்றும் அகலேகாவை சேர்ந்த ஒருவரின் 26 வயது மகனான கைவினைஞர் பில்லி ஹென்றியும் இதே கவலையை எதிரொலிக்கிறார்.

"என் தாய் அவருடைய தீவை இழந்தார்," என்கிறார் ஹென்றி. "அடுத்து என் தந்தை இழக்கப் போகிறார்." என்று அவர் கூறினார்.

 
அகலேகா தீவு, இந்தியா - மொரீஷியஸ்

பட மூலாதாரம்,YOHAN HENRI

படக்குறிப்பு, அகலேகாவின் தலைநகர் விங்-சிங்க் (25 என்பதை குறிக்கும் பிரெஞ்சு வார்த்தை) தோட்ட அடிமைகளுக்கு ஒருகாலத்தில் வழங்கப்பட்ட கசையடிகளின் எண்ணிக்கை காரணமாக இப்பெயரால் அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது

கிழக்கில் 2,000 கி.மீ. தொலைவில் உள்ள சாகோஸ் தீவுகளிலிருந்து வெளியேற்றப்பட்ட குடும்பங்களை சேர்ந்த பலர் தான் அகலேகா தீவில் வசித்துவருகின்றனர்.

1965-ம் ஆண்டில் சாகோஸ் தீவை பிரிட்டிஷ் பிரதேசமாக அறிவித்து, அதன் பெரிய தீவான டியகோ கார்சியா (Diego Garcia) தீவில் தகவல் தொடர்பு நிலையம் அமைக்க அமெரிக்காவுக்கு பிரிட்டன் அரசாங்கம் அனுமதி வழங்கியதையடுத்து வெளியேற்றப்பட்டவர்கள் அவர்கள். டியகோ கார்சியா தீவு பின்னர், படிப்படியாக முழு அளவிலான ராணுவ தளமாக மாறியது.

அகலேகாவின் முழு பகுதியையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள அரசாங்கம், அனைவரும் வெளியேறும் அளவுக்கு நிலைமையை மோசமானதாக ஆக்க முயற்சிப்பதாக பில்லி ஹென்றி அச்சத்தில் உள்ளார்.

சுகாதாரம் மற்றும் கல்வி, உள்ளூர் பொருளாதாரத்தில் குறைவான முதலீடு, வேலைவாய்ப்புகளுக்கான பற்றாக்குறை மற்றும் உள்ளூர் மக்கள் தங்கள் சொந்த தொழில்களை தொடங்குவதற்கு நிலவும் தடை ஆகியவற்றில் உள்ள பிரச்னைகளை அவர் சுட்டிக்காட்டுகிறார்.

யாரையும் வெளியேறுமாறு கூற மாட்டோம் என, மொரீஷியஸ் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார். உள்ளூர் மக்கள் விமான நிலையம் மற்றும் துறைமுக பகுதிக்குள் நுழைவது மட்டும் தடுக்கப்படும் என்றும் கடற்கொள்ளை, போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத மீன்பிடித்தல் ஆகியவற்றை கட்டுப்படுத்த இந்நடவடிக்கை நாட்டுக்கு உதவும் என்றும் அவர் கூறினார்.

முழு கட்டுப்பாடும் தேசிய காவல் துறையிடமே உள்ளதாக கூறியுள்ள மொரீஷியஸ், அகலேகாவில் ராணுவ தளம் அமைக்கப்படும் என்ற கூற்றுகளை மறுத்துள்ளது. எனினும், இந்திய செலவில் மேற்கொள்ளப்படும் அப்புதிய கட்டுமானங்களின் "நிர்வாகம் மற்றும் செயல்பாடு" ஆகியவற்றில் இந்தியா உதவி செய்யும் என்று அது உறுதிப்படுத்தியுள்ளது.

 
அகலேகா தீவு, இந்தியா - மொரீஷியஸ்

பட மூலாதாரம்,MAXAR

படக்குறிப்பு, அகலேகா தீவின் வடக்கு முனையில் விரிவான கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன - செயற்கைக்கோள் படங்கள் கப்பல் துறை மற்றும் நிறுத்தப்பட்டுள்ள கப்பல்களை காட்டுகின்றன

அடிப்படை வசதிகளை கோரும் மக்கள்

கடல்வழி மற்றும் வான்வழி போக்குவரத்தில் செய்யப்படும் முன்னேற்றங்கள் தீவில் வசிக்கும் மக்களுக்கு பயனளிக்கும் வகையிலேயே செய்யப்படுவதாகவும் வறுமையிலிருந்து அவர்களை வெளியேற்ற அவை உதவும் என்றும் இருநாட்டு அரசாங்கங்களும் தெரிவித்துள்ளன.

ஆனால், அவ்வாறு நடக்கவில்லை என உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். மொரீஷியஸின் தலைநகருக்கு செல்ல ஆண்டுதோறும் நான்கு படகு சேவைகள் மட்டுமே இன்னும் இயக்கப்படுவதாகவும் பயணிகள் விமானம் இல்லையென்றும் அவர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவால் கட்டப்பட்ட மருத்துவமனைக்கு செல்ல தங்களுக்கு தடையிருப்பதாகவும் அகலேகா தீவு மக்கள் கூறுகின்றனர். மொரீஷியஸ் அரசாங்கத்தின் செய்தி அறிக்கை ஒன்று, அதன் அறுவை சிகிச்சை அரங்கம், எக்ஸ்-ரே இயந்திரங்கள் மற்றும் பல் மருத்துவ உபகரணங்கள் குறித்து பெருமையாக குறிப்பிட்டாலும் இத்தடை இருப்பதாக கூறுகின்றனர்.

கடந்த அக்டோபர் மாதம் கொதிக்கும் சமையல் எண்ணெய் ஏற்படுத்திய தீக்காயத்தால் பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவருக்கு மேல் சிகிச்சை தேவைப்பட்ட நிலையில், அம்மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது அனுமதி மறுக்கப்பட்டதாக பில்லி ஹென்றி கூறுகிறார்.

"அது இந்தியர்களுக்கு மட்டுமேயானதாக இருக்கிறது" என்கிறார் அவர்.

பாதிக்கப்பட்ட சிறுவனும் அவருடைய பெற்றோரும் மொரீஷியஸ் தலைநகருக்கு சென்றனர். இன்னும் அச்சிறுவன் மருத்துவமனையில் தான் இருப்பதாகக் கூறும் லாவல் சூப்ரமணியென், அகலேகாவுக்கு அடுத்த கப்பல் புறப்படும் வரை அச்சிறுவனின் குடும்பம் அதே தீவில் தான் இருக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.

தீக்காயத்தால் பாதிக்கப்பட்ட அச்சிறுவனின் நிலை குறித்து கேட்ட போது, அதுகுறித்து மொரீஷியஸ் அரசாங்கம் பதிலளிக்கவில்லை. இதுதொடர்பாக பதிலளிக்க இந்திய அரசாங்கம் மறுத்துவிட்டது.

சமீபத்தில் மொரீஷியஸ் நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் பிரவீந்த் ஜூகனௌத், அகலேகா தீவின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு தங்கள் அரசு முன்னுரிமை அளிப்பதாக தெரிவித்தார்.

சுகாதாரம், கல்வி, போக்குவரத்து தொடர்புகள், மக்களுக்கான பொழுதுபோக்கு வசதிகள், மீன்பிடி துறையில் வளர்ச்சி மற்றும் தேங்காய் மதிப்புகூட்டு பொருட்கள் ஆகியவற்றை மேம்படுத்த "பெரும் திட்டம்" (master plan) உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஆனால், கடந்த 2015-ம் ஆண்டில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து இந்தியாவோ அல்லது மொரீஷியஸோ எவ்வித தகவல்களையும் வெளியிடாததால் மக்களிடையே நம்பிக்கையின்மை அதிகரித்துள்ளது, எனவே, எதிர்காலத்திற்கான அவர்களின் திட்டங்கள் குறித்து தெரியவில்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.