Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

நினைவுகூர்தலுக்கான ஒரு பொது ஏற்பாட்டுக்குழு எதிர்காலத்தில் சாத்தியமா? நிலாந்தன்!

திசை காட்டுமா திசை காட்டி ? நிலாந்தன்.

அனுரா எளிமையானவர்தான். சாதாரண சனங்கள் தொட்டுக் கதைக்கக்கூடிய ஒரு ஜனாதிபதியும்தான். அவர் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்துக்காக கடந்த வாரம் பாசையூருக்கு வந்த பொழுது பாதுகாப்பு கெடுபிடிகள் இருக்கவில்லை. சீருடை அணிந்த படையினரின் பிரசன்னம் மிகக்குறைவாகவே இருந்தது. பதிலாக மாறுவேடத்தில் உலாவும் புலனாய்வுத் துறையினர் அதிகமாகக் காணப்பட்டார்கள். அனுர ஒரு காரில் வந்து இறங்கினார். அவர் அங்கிருந்த பௌத்த பிக்குகளின் காலில் விழுந்தார். ஏனைய மதகுருமார்களின் காலில் விழவில்லை என்றெல்லாம் குற்றச்சாட்டுகள் உண்டு. ஆனால் அவரை வரவேற்ற முதிய அருட் சகோதரி ஒருவர் அவருடைய இரண்டு கன்னங்களையும் தடவி ஆசீர்வதித்தார். அவ்வாறெல்லாம் தொட்டுப் பழகக்கூடிய அளவுக்கு அனுர எளிமையானவராக, எளிதில் கிடைக்கக் கூடியவராக, அணுகப்படக் கூடியவராகக் காணப்படுகிறார். இவையெல்லாம் மாற்றங்கள்தான். சந்தேகமே இல்லை. மேட்டுக்குடி ஜனாதிபதிகளின் மத்தியில் சாதாரண மக்களால் தொட்டுப் பழகக்கூடிய ஒருவர் ஜனாதிபதியாக வந்திருக்கிறார். நிச்சயமாக மாற்றம் தான். ஆனால் தமிழ் மக்கள் கேட்பது இந்த மாற்றத்தை மட்டுமல்ல.

தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் மாற்றம் அதைவிட ஆழமானது. அது இலங்கைத் தீவின் அரசுக் கட்டமைப்பில் ஏற்பட வேண்டிய மாற்றம். இப்போது இருக்கும் ஒற்றையாட்சிக் கட்டமைப்பை நீக்கி கூட்டாட்சிக் கட்டமைப்பு ஒன்றைக் கொண்டு வர வேண்டும். அந்தக் கட்டமைப்புக்குள் தமிழ் மக்கள் இறமையும் சுய நிர்ணய உரிமையும் கொண்ட ஒரு தேசிய இனமாக,தேசமாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். இந்த மாற்றத்தைச் செய்யத் தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மை இப்பொழுது அவரிடம் உண்டு.எனவே இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கான கட்டமைப்பு ரீதியிலான மாற்றங்களுக்கு அவர் போக வேண்டும். போவாரா?

உயர் பாதுகாப்பு வலையத்தில் உள்ள பாதைகளைத் திறப்பது; பிரதான சாலைகளில் உள்ள சோதனைச் சாவடிகளை அகற்றுவது; குறிப்பாக, மன்னார் தீவின் நுழைவாயிலில் காணப்பட்ட சோதனை சாவடியை அகற்றியது; யாழ்ப்பாணத்தில் மண்டை தீவு, பூங்குடு தீவு ஆகிய இடங்களில் நுழைவாயிலில் காணப்பட்ட சோதனைச் சாவடிகளை அகற்றியமை.. போன்றவை மாற்றங்கள்தான். ஆனால் அதே மாற்றங்கள் முல்லைத்தீவின் உட்புறங்களுக்கு அல்லது கிழக்கின் உட்புறக கிராமங்களுக்குப் போகவில்லை என்பதையும் இங்கே சுட்டிக்காட்ட வேண்டும். அங்கெல்லாம் சோதனைச் சாவடிகள் அகற்றப்படவில்லை.சில இடங்களில் வீதித் தடைகள் அகற்றப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் யாவும் தேர்தலுக்கு முன் செய்யப்பட்டவை.அதாவது தேர்தலை நோக்கமாகக் கொண்டவை.

சோதனைச் சாவடிகளையும் வீதித் தடைகளையும் அகற்றினால் மட்டும் போதாது. உயர் பாதுகாப்பு வலையங்களை அகற்ற வேண்டும். உயர் பாதுகாப்பு வலையங்களை அகற்றுவது என்பது ராணுவ மயப்பட்டிருக்கும் வடக்குக் கிழக்கில் இருந்து படையினரை விலக்கிக் கொள்வதைக் குறிக்கும்.அவ்வாறு படையினரை விலக்கிக் கொள்வதென்றால் படையினரின் ஆட் தொகையைக் குறைக்க வேண்டியிருக்கும். படையினரின் ஆட் தொகையைக் குறைப்பது பொருளாதாரத்தை நிமிர்த்துவதற்கு முக்கியமான முன் நிபந்தனைகளில் ஒன்று. ஆனால் அது தனிய பொருளாதாரத்தோடு மட்டும் சம்பந்தப்படவில்லை. அது நாட்டின் பாதுகாப்பு தொடர்பான கரிசனைகளோடு சம்பந்தப்பட்டது. பாதுகாப்பு என்று இங்கு கருதப்படுவது, தமிழ் மக்கள் மத்தியில் இருந்து வரக்கூடிய அச்சுறுத்தல்களுக்கு எதிரான பாதுகாப்பு என்பதுதான் உண்மை. பயங்கரவாதத் தடைச் சட்டமும் அத்தகையதுதான். தமிழ் மக்களின் அரசியலை பயங்கரவாதமாகப் பார்ப்பது. அதாவது இந்த விவகாரங்கள் யாவும் ஒரே மூலகாரணத்தில் வந்து முடிகின்றன.அது என்னவெனில்,இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது. இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது என்ற விடயத்தில் தனக்கு முன் இருந்த எல்லாச் சிங்களத் தலைவர்களையும் விட அணுர மாறுபட்டுச் சிந்திப்பாரா?அல்லது அதே பழைய மகாவம்ச மனோநிலையின் கைதியாக இருந்து சிந்திப்பாரா?

அவர் இப்பொழுது அரசுத் தலைவர்.அதை இன்னும் ஆழமான வார்த்தைகளிற் சொன்னால், சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பின் தலைவர். சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பு என்பது ஒற்றையாட்சிக் கட்டமைப்புத்தான்.அது ஓரினத்தன்மை மிக்கது. பல்லினத் தன்மைக்கு எதிரானது. இலங்கைத் தீவின் பல்லினச் சூழலை ஏற்றுக்கொள்ளாத ஒரு கட்டமைப்பு.அந்தக் கட்டமைப்புக்குள் இருந்து கொண்டு அந்தக் கட்டமைப்பை மாற்ற அனுரவால் முடியுமா? அவரிடம் இப்பொழுது உள்ள மூன்றில் இரண்டு பெரும்பான்மை அந்த மாற்றங்களைச் செய்யப் போதுமானது.ஆனால் இங்கே பிரச்சனை,மூன்றில் இரண்டு பெரும்பான்மை மட்டுமல்ல. இதை இன்னும் ஆழமான அர்த்தத்தில் சொன்னால், மக்கள் ஆணை மட்டும் போதாது. அதைவிட முக்கியமாக,அதற்கு வேண்டிய அரசியல் திட சித்தம்-political will- இருக்க வேண்டும். அது என்பிபியிடம் உண்டா?

அமெரிக்க எழுத்தாளரும் அறிஞரும் ஆகிய மார்க் டுவைன் கூறியிருக்கிறார் “தேர்தல்கள் மூலம் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்றால் அவர்கள்- அதாவது அரசுகள்- நாங்கள் அதைச் செய்ய மாட்டார்கள்”என்று. இதுதான் யதார்தம். தேர்தல்கள் மூலம் தலை கீழ் மாற்றங்களை ஏற்படுத்த முடியாது. மார்க்சிஸ்ட் களின் வார்த்தைகளில் சொன்னால், “புரட்சிகரமான மாற்றங்களை” ஏற்படுத்த முடியாது. இலங்கைத் தீவின் சிங்களபௌத்த அரசுக் கட்டமைப்பும் அவ்வாறு புரட்சிகரமான மாற்றங்களுக்குத் தயாரா? ஜேவிபி அல்லது என்பிபி இதுவரையிலும் அவ்வாறான அடிப்படை மாற்றங்களுக்குத் தேவையான அரசியல் திடசித்தத்தை வெளிக்காட்டியிருக்கவில்லை.

எம்பிபி நாடாளுமன்றத்தில் பெற்றிருக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையானது தமிழ் நோக்குநிலையில் இருந்து பார்த்தால், உலகத்துக்கு சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பின் வரையறைகளை அல்லது விரிவுகளை வெளிப்படுத்த கிடைத்திருக்கும் ஒரு வாய்ப்பு என்று சொல்லலாம். விகிதரசாரப் பிரதிநிதித்துவத்தின் கீழ் ஒரு தனிக்கட்சி அவ்வாறு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்றிருப்பது அரிதானது.ஆனால் அதற்காக ஜேவிபியின் தமிழ் நண்பர்களான சில படிப்பாளிகள் கூறுவதுபோல, தமிழ் முஸ்லிம் மக்களுடைய ஆணையோடு வந்திருக்கும் முதலாவது அரசாங்கம் இதுவல்ல. 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் போது நல்லாட்சி அரசாங்கம் என்று அழைக்கப்பட்ட மைத்திரி+ரணில் அரசாங்கமும் அவ்வாறு தமிழ்,சிங்கள,முஸ்லிம் ஆகிய மூன்று இனங்களின் ஆணைகளோடும் ஆட்சிக்கு வந்த ஒரு அரசாங்கம்தான்.அதைவிட முக்கியமாக அந்த அரசாங்கத்திற்கு பிராந்திய மற்றும் அனைத்துலக ஆசீர்வாதங்களும் இருந்தன.அப்படிப்பட்ட அரசாங்கத்தாலேயே இனப்பிரச்சினைக்குத் தீர்வை கண்டுபிடிக்க முடியவில்லை. 2018ஆம் ஆண்டு ஒரு யாப்புச் சதி மூலம் மஹிந்த அதை மைத்திரியின் துணையோடு குழப்பினார். இது நடந்து சரியாக 6 ஆண்டுகளின் பின் இலங்கைத் தீவில் அதேபோல மற்றொரு வாய்ப்பு கிடைத்திருக்கின்றது.

என்பிபி அரசாங்கமானது பின்வரும் முக்கியத்துவங்களைக் கொண்டிருக்கின்றது. முதலாவது முக்கியத்துவம்,மூன்று இனங்களின் ஆணை பெற்ற அரசாங்கம்.இரண்டாவது முக்கியத்துவம்,மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்ட ஓர் அரசாங்கம். மூன்றாவது முக்கியத்துவம், ஒரே கட்சி அரசாங்கம். தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கும் திருப்பகரமான முடிவுகளை எடுப்பதற்கும் எந்த ஒரு பங்காளிக் கட்சியிலும் தங்கியிருக்கத் தேவையில்லை. ஆனால் இங்கு பிரச்சனை என்னவென்றால், அதாவது தமிழ் நோக்கு நிலையில் இருந்து பிரச்சனை எதுவென்றால்,கட்டமைப்பு சார்ந்த மாற்றங்களைச் செய்வதற்கு தேவையான அரசியல் திடசித்தம் இந்த அரசாங்கத்திடம் உண்டா என்பது தான்.

சுமந்திரன் தேர்தல் பிரச்சாரங்களின்போது ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்டினார்.முன்பு தாங்கள் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் ஒன்றாக உழைத்து உருவாக்கிய எக்கிய ராஜ்ய என்ற அந்தத் தீர்வின் இடைக்கால வரைபுவரை ஜேவிபி தங்களுக்கு முழுமையாக ஆதரவைக் காட்டியது என்று. அந்த தீர்வைதான் அவர்கள் மீண்டும் தூசுதட்டி எடுத்து மேசையில் வைக்கப் போகின்றார்களா?

அதை எதிர்ப்பதற்கு கஜேந்திரக்குமார் மக்கள் ஆணை கேட்டிருந்தார். அவருக்கு அந்த ஆணை கிடைக்கவில்லை. ஏற்கனவே இருந்த இரண்டு ஆசனங்களில் ஒன்றை அவர் இழந்து விட்டார்.

அதேசமயம், எக்கிய ராஜ்ஜியவுக்கு மீண்டும் ஒரு மக்களாணையை மறைமுகமாகக் கோரிய சுமந்திரன் தோற்கடிக்கப்பட்டு விட்டார். ஆயின், தமிழ் மக்கள் எப்படிப்பட்ட ஒரு தீர்வைக் கேட்கின்றார்கள்?

நிச்சயமாகத் தமிழ்மக்கள் இந்த முறை தீர்வுக்காக என்பிபிக்கு வாக்களிக்கவில்லை. என்பிபியும் தமிழ் மக்களுக்கு என்ன தீர்வு தருவேன் என்று கூறித் தேர்தலில் நிற்கவில்லை. 2015ஆம் ஆண்டும் தமிழ் மக்கள் ராஜபக்சவை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக வாக்களித்தார்களே தவிர தீர்வுக்காக வாக்களிக்கவில்லை.இங்குள்ள பிரச்சினை என்னவென்றால்,தமிழ் மக்களுக்குத் தீர்வை வழங்கப் போகின்றோம் என்று கூறி ஒரு தீர்வை முன்வைத்து எந்த ஒரு சிங்களக் கட்சியும் சிங்கள மக்களின் ஆணையைப் பெற முடியாது என்பதுதான்.

ஜேவிபியின் தமிழ் நண்பர்கள் அடிக்கடி கூறுவார்கள், தென்னிலங்கையில் ஏற்பட்ட தன்னெழுச்சிப் போராட்டங்களின் பின் பேரினவாதம் தணிந்து விட்டது அல்லது பலவீனமடைந்து விட்டது என்று.மேலும் ஜனாதிபதித் தேர்தலின் போதும் நாடாளுமன்றத் தேர்தலின்போதும் இனவாதம் பேசப்படவில்லை என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.உண்மை.ஆனால் இனவாதம் பேசப்படவில்லை என்பதனால் இனவாதம் தணிந்து விட்டது என்று பொருளாகாது.பேசாமல் இருப்பதன்மூலம் இனவாதம் தன்னைத் தக்கவைத்துக் கொள்ள முடியும் என்பதற்கு இலங்கையில் உதாரணங்கள் உண்டு. இனவாதம் தன்னை புதிய நிலைமைகளுக்கு ஏற்ப சுதாகரித்துக் கொள்ளும். சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பானது ஆட்சிகளை மாற்றுவதன்மூலம் தன்னைத் தக்கவைத்துக் கொள்ளும்.எனவே இனவாதம் பேசப்படாத தேர்தல் களம் என்பதை வைத்து நாட்டில் இனவாதம் இல்லை என்ற முடிவுக்கு வருவது அப்பாவித்தனமானது.

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் இனவாதத்தை தூக்கி எறிந்து விட்டு தமக்கு வாக்களித்ததாக ஜேவிபியின் மூத்த தலைவர் ரில்வின் சில்வா கூறியிருக்கிறார்.அது தவறு.தமிழ் மக்கள் இனவாதத்தைத் தூக்கி எறிந்து விட்டு வாக்களிக்கவில்லை.இனப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் என்றும் வாக்களிக்கவில்லை.தமிழ் கட்சிகளின் மீது ஏற்பட்ட சலிப்பினால் வாக்களித்தார்கள்.வெறுப்பினால் வாக்களித்தார்கள்.தமிழ் மக்களைத் தமிழ்க் கட்சிகள் ஒரு தேசமாகத் திரட்டத் தவறியதனால் வாக்களித்தார்கள் என்பதே சரி.

மேலும் ரில்வின் சில்வா தமிழ் அரசியலை இனவாதமாக மதிப்பிறக்கம் செய்திருக்கிறார்.அது இனவாதம் அல்ல. சிங்கள மக்களின் சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதமும் தமிழ் மக்களின் தமிழ்த் தேசிய வாதமும் ஒன்று அல்ல. சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதமானது ஒடுக்கும் சித்தாந்தமாகும். தமிழ்த் தேசியவாதமானது-அதில் ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும்-ஒடுக்கு முறைக்கு எதிரான ஒரு சித்தாந்தமாகும். தமிழ் மக்கள் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காகத்தான் போராடுகிறார்கள். தங்களுடைய இன அடையாளத்தை அழிக்கும் ஒரு பெரிய இனத்தின் ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுகிறார்கள்.தங்களை ஒரு தேசமாகவும் தேசிய இனமாகவும் நிலை நிறுத்துவதற்காக,தங்களுடைய தேசிய இருப்பை இலங்கைத்தீவில் பாதுகாப்பதற்காகவும் பலப்படுத்துவதற்காகவுந்தான் அரசியல் செய்கிறார்கள். அது இனவாதமாகாது. ஜேவிபி அதை இனவாதமாகக் கருதுமாக இருந்தால் இக்கட்டுரையில் ஏற்கனவே கூறப்பட்டதுபோல,இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அரசியல் திடசித்தம் அவர்களிடம் இல்லை என்று பொருள். அதை விளங்குமளவுக்கு அவர்களுடைய தமிழ் நண்பர்களுக்குத் தெளிவு இல்லை என்று பொருள்.

https://athavannews.com/2024/1408855



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.