Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
"கார்த்திகை தீபம்"
 
 
இன்று கார்த்திகை தீபம், 2023. மிளிரன் ஒரு இளம் பொறியியலாளர். தன் பணியை முடித்துவிட்டு, தான் தங்கி இருக்கும் ஊழியர்கள் குடியிருப்புக்கு தனது மோட்டார் சைக்கிளில் திரும்பிக்கொண்டு இருந்தான். அவனது எண்ணம் எல்லாம் தன் அம்மா, அப்பா, மூத்த அக்கா, அண்ணா மட்டுமே!
 
"கார்த்திகை தீபம் எங்கும் ஒளிர்ந்து
காலத்தின் வரலாற்றை இன்று சொல்லட்டும்!
காரிருள் ஆக்கிய எமது வாழ்வு
விழிப்பு பெற்று தீபமாய் ஒளிரட்டும்!!"
 
அன்று கார்த்திகை மாதம் 2008, மிளிரன் பத்து அகவை, தன் பெற்றோர் மற்றும் மூத்த சகோதரர்களுடன், குண்டு வெடிப்புகள் மற்றும் துப்பாக்கி சத்தங்களுக்கு மத்தியில் பதுங்கு குழிக்குள் பாதுகாப்புக்காக இருந்தான். கொஞ்சம் சத்தம் அமைதியாகியதும், ஹெலிஹாப்டர், போர் விமானங்களின் இரைச்சல்கள் ஓய்ந்ததும், முதல் பெற்றோர்கள் வெளியே வந்து வானத்தைப் பார்த்தனர். இன்னும் குண்டுகள் வெடித்த புகைகள் வானத்தில் காற்றுடன் அங்கும் இங்குமாக அலைந்தவண்ணம் இருந்தன. அவர்கள் தமிழர் பாரம்பரிய குடும்பம் என்பதால், ஆயத்தமாக முன்பே தயார் நிலையில் இருந்த சில கார்த்திகை விளக்குகளை தம் வீட்டின் முன் கொளுத்தி வைத்தனர். அவர்களுக்கு அதில் ஒரு திருப்தி.
 
"வானம் ஊர்ந்த வயங்கொளி மண்டிலம்
நெருப்பெனச் சிவந்த உருப்பவிர் அங்காட்டு
இலையில மலர்ந்த முகையில் இலவம்
கலிகொள் ஆயம் மலிபு தொகுபு எடுத்த
அருஞ்சுடர் நெடுங்கொடி பொற்பத் தோன்றி”
 
பதுங்கு குழியில் இருந்து மிளிரனின் இரு மூத்த சகோதரர்களும் மெல்ல வெளியே கார்த்திகை தீபத்தின் வண்ண அழகை எட்டிப்பார்த்தனர். வானத்தில் ஊர்ந்து செல்லும் ஒளிவட்டமான சூரியன், நெருப்பாகச் சிவந்து வெப்பத்தைக் கக்குகிறது. அவ்வெப்பத்தால் காய்ந்தது அழகிய காடு. அதனால் இலையற்றுப் போன இலவமரத்தில் ஒரு மொட்டும் விடாமல் எல்லா மொட்டும் மலர்ந்திருந்தன. அக்காட்சி அவ்வழியே சென்ற ஔவையாருக்கு, மங்கையர் கூட்டம் ஒன்றாகச்சேர்ந்து ஆரவாரத்தோடு ஏற்றிய அழகிய தீபங்களின் சுடர் கொடியாகப் படர்ந்து நீண்டு செல்வது போல் தோன்றியதாம். ஆனால் இவர்களுக்கு, குண்டுகள் ஷெல்களின் தாக்கத்தால், எரிந்து காய்ந்த இலையற்றுப் போன மரத்தில் பூத்த பூக்களாகவே அவை தெரிந்தன. அந்தக்கணம், மீண்டும் ஒரு ஹெலியின் பெரும் இரைச்சல், அவர்கள் பதுங்கு குழிக்குள் பாதுகாப்பாக திரும்பவும் உட்புகு முன் அந்த கொடூர சத்தம், அது தான் மிளிரனுக்கு கேட்டது. அதன் பின் அவன் தனித்துவிட்டான். சொந்த இடத்திலேயே அகதியானான். அது தான் அவன் அவர்களுக்கு, அஞ்சலி செலுத்த, நினைவுகூர சில சிவப்பு மஞ்சள் துணிகளுடன் விடுதிக்கு திரும்பிக்கொண்டு இருக்கிறான்.
 
மிளிரன் தன் விடுதிக்கு கடைசியாக திரும்பும் மூலையில், அந்த மூலை வீட்டில், கார்த்திகா என்ற இளம் பெண் சிவத்த மேல் சட்டையுடனும், மஞ்சள் கீழ் சட்டையுடனும் "உண்பது நாழி உடுப்பவை இரண்டே" என்று, தன் வீட்டின் முன்றலில் கார்த்திகை தீபம் ஏற்றிக்கொண்டு இருந்தாள்.
 
"விளக்கொளி யாகிய மின்கொடி யாளை
விளக்கொளி யாக விளங்கிடு நீயே."
 
அனைத்தையும் விளக்கு கின்ற ஒளியாக விளங்கும் மின்கொடி போன்ற இறைவியை, அந்த பேரொளியாகவே நான் தெரிந்து கொண்டேன் என்று திருமூலர் அன்று கூறினார். ஆனால் இன்றோ, மிளிரன் உள்ளத்தில் சுடர்விட்டு எரியும், அனைத்தையும் அவனுக்கு மகிழ்வாக அள்ளித்தரும் விளக்கொளியாக அவளை ஒருகணம் அப்படியே அசையாமல் நின்று பார்த்தான்.
 
“நிலவைப் பிடித்துச்
சிறுகறைகள் துடைத்துக் - குறு
முறுவல் பதித்த முகம் ,
நினைவைப் பதித்து - மன
அலைகள் நிறைத்துச் - சிறு
நளினம் தெளித்த விழி .
தரளம் மிடைந்து - ஒளி
தவழக் குடைந்து - இரு
பவழம் பதித்த இதழ்
முகிலைப் பிடித்துச் சிறு
நெளியைக் கடைந்து - இரு
செவியில் திரிந்த குழல்
அமுதம் கடைந்து - சுவை
அளவிற் கலந்து - மதன்
நுகரப் படைத்த எழில்”
 
நிலவைப் பிடித்து அதன் கறைகளைத் துடைத்து சிறிய புன்னகையை பதித்த முகம். அவள் நினைவுகளை அவனில் பதித்து, அவன் மனதில் அவள் அலைகளை நிறைத்து, நளினத்தைத் தெளிக்கின்ற விழிகள். முத்துகளைக் கோத்து அவற்றின் ஒளி தெரியாதவாறு குடைந்து உள்வைத்து வெளியே சிவந்த இரண்டு பவழத்தைப் பதித்த இதழ்கள். மேகத்தைப் பிடித்து அதைக் கடைந்து காதுகளின் இரு மருங்கிலும் அது உலவுமாறு விடப்பட்ட கூந்தல். மொத்தத்தில் பாற்கடல் கடைந்து கிடைத்த அமுதினையே மீண்டும் கடைந்து வந்தத் தெளிவுடன், இன்னும் இன்சுவையைக் கலந்து, மிளிரன் நுகரப் படைத்த அழகு அவள்! அவள் தான் கார்த்திகா, கார்த்திகை தீபத்தில் ஒளிர்ந்துகொண்டு இருந்தாள்! அவன் அதில் அழகாய் மிளிருபவனோ, அது தான் அவன் பெயரும் மிளிரனோ!!, இப்படித்தான் அவன் மனம் அவனைக் அந்தக்கணம் கேட்டது.
 
அவளும் சட்டென அவனைப் பார்த்தாள். காதல் என்ற ஒன்று உள்ளத்தில் புகுந்து விட்டாலே அது பொத்தி வைக்கும் வகையறியாது என்பதை அவள் கண்கள் வெட்கம் அற்று அவனுக்கு சொல்லிக் கொண்டு இருந்தன. இன்பத்தின் உச்சம் என்பது வெறுமைதானோ? சும்மாயிருப்பதே சுகம் என்கிறார்கள் சித்தர்கள். இதுவும், அவளின் பார்வையால் அவன் மனம் இன்பம் அடைந்தாலும், அவன் அதைக் வெளிப்படையாக காட்டாமல் சும்மா கொஞ்ச நேரம் அங்கே நின்றான். இந்த ‘சும்மா’வும், சித்தர்கள் சொன்ன அந்த சும்மாவும் ஒன்றுதானோ? தன்னை மறந்த நிலை என்கிறார்களே அதுவாக இருக்குமோ இது? அவன் கொஞ்சம் குழம்பித்தான் இருந்தான்.
 
கார்த்திகை தீபத்தின் மென்மையான பிரகாசத்தைப் போல அவள் அவனுக்கு தோன்றினாள். அன்பின் சுடர் மினுமினுப்பு கொண்டு இருவரின் உள்ளங்களிலும் நடனமாடியது. கண்டதும் காதல் ……. கூடியதும் பிரிவு … என்ற இந்த காலகட்டத்தில், அவையைத் தாண்டி, மிளிரன், கார்த்திகாவின் உள்ளங்களில் தீபம் ஒன்று இந்த நன்னாளில் பற்ற வைக்கப்பட்டு விட்டது!
 
அந்த நேரத்தில் காற்றில் தூபத்தின் வாசனை மற்றும் எண்ணற்ற எண்ணெய் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வானம் அவர்களின் காதல் ஆரம்பத்துக்கு மெருகேற்றின. சிவப்பு, மஞ்சள் துணிகள் காற்றில் அசைந்து வாழ்த்துக்கூறின. இருவரும் தம்மை இழந்து ஒருவரை ஒருவர் நோக்கி கொஞ்சம் அசைந்தனர். அது காதலின் சம்மதத்தை சொல்லாமல் சொன்னது. அவர்களின் எண்ணங்களைப் பின்னிப் பிணைந்து, தீபத்தின் வான ஒளியின் கீழ் அவர்களை ஒன்றாக இழுத்தது.
 
மினுமினுக்கும் தீப்பிழம்புகள் மற்றும் காற்றில் எதிரொலிக்கும் மெல்லிசைக் கோஷங்களின் பின்னணியில் அவர்களின் காதல் அங்கு மலர்ந்தது. அவர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் எண்ணங்களில் ஆறுதல் கண்டனர், அவர்கள் இருவரின் இதயங்கள் கொண்டாட்டங்களின் தாளத்துடன் ஒன்றிணைந்து, இணக்கமாக அதற்கு ஏற்றவாறு துடித்தன. பகல் இரவுகளாக மாறியதும், கார்த்திகை தீபத்தின் இரவு முழுவதும் எரியும் சுடர் போல, அவர்களின் பிணைப்பு மௌனத்தில் வலுவடைந்தது.
 
கார்த்திகா, தனது பிரகாசமான புன்னகையுடனும், விளக்குகளின் தீப்பிழம்புகளைப் போல பிரகாசிக்கும் கண்களுடனும், வீட்டுக்கு வெளியே, படலைக்கு அருகில் வந்து, 'உங்களுக்கும் என் குடும்பத்தின் சார்பில் கார்த்திகை தீப வாழ்த்துக்கள்!' என்று கூறியபடி, மிளிரனுக்கு ஒரு தீப விளக்கை கொடுத்தாள். அவனது கண்கள், அதை வாங்கும் பொழுது கண்ணீரால் நனைவதைக் கண்டு திடுக்கிட்டாள். அவன் தன் சோக கதையை அவளுக்கு சுருக்கமாக சொல்லிவிட்டு, உடனடியாக அங்கிருந்து புறப்பட்டான். 'நான் கார்த்திகா, நீங்க ?' நட்சத்திரங்கள் பிரகாசித்த வானத்தின் கீழ், அவள் மெல்லிய குரலில் கேட்டாள். அவன் திரும்பி பார்த்து, 'நான் அகதி, நான் மிளிரன், புதிதாக இங்கு பதவிபெற்ற பொறியியலாளன்' என்று கூறிக்கொண்டு புறப்பட்டான். 'இல்லை இல்லை, இனி நீங்க அகதி இல்லை' என அவள் தனக்குள் கிசுகிசுத்துக் கொண்டாள்.
 
அவள் கொடுத்த கார்த்திகை தீபத்தின் புனிதச் சுடரைப் அணையாமல் விடுதிக்கு எடுத்துச் சென்ற அவன், அதை மற்ற சுடர்களுடன் ஒன்றாக தனது பெற்றோர் சகோதரர்களின் படத்தின் முன், சிவப்பு மஞ்சள் துணிகள் தோரணம் போல அசைய, ஈகைச் சுடரின் முன் தன் அகவணக்கத்தை செலுத்தினான். அன்றில் இருந்து இருவரும் சந்திப்பது, கதைப்பது, ஒன்றாக பொழுதுபோக்குவது என அவர்களின் உறவு மலர்ந்தது. இருப்பினும், காதல் பற்றிய கதையைப் போலவே, சவால்கள் வெளிப்பட்டன. மரபுகளில் வேரூன்றிய அவளது குடும்பம், அவர்களது உறவின் ஆழத்தை கேள்விக்குள்ளாக்கினர், அவர்களது இணைப்பை ஏற்கத் தயங்கினர். ஆனாலும், இருவரும் உறுதியுடன் இருந்தனர், அவர்களின் உறுதியும் அசையாத அர்ப்பணிப்பும் தீபத்தின் சகிப்புத்தன்மையை பிரதிபலித்தது, அவளின் பெற்றோரின் எதிர்ப்பினால் ஏற்பட்ட துன்பத்தின் காற்றையும் மீறி பிரகாசமாக அந்த தீபம் ஒளிரத் தொடங்கியது. என்றாலும் நாளடைவில், மிளிரனின் குடும்ப விபரங்களை அறிய அறிய அவளின் பெற்றோர்களின் எதிர்ப்பு முற்றாக நின்றுவிட்டது.
 
இறுதியாக, மற்றொரு மங்களகரமான கார்த்திகை தீபத்தில், கார்த்திகை 2024 இல், எண்ணற்ற தீபங்களின் பிரகாசம் மற்றும் புனித நெருப்பின் நடுவில், கார்த்திகாவின் குடும்பத்தினரின் ஆசீர்வாதங்களைப் பெற்றபடி, இருவரும் கைகளை பின்னிப்பிணைத்து ஒன்றாக நின்றனர். அவர்களின் காதல், அவர்களை ஒன்றிணைத்த சுடர் போன்று, பிரகாசமாக எரிந்து, அவர்களின் முன்னோக்கி செல்லும் பாதையை ஒளிரச் செய்தது. கார்த்திகை தீபத்தின் எல்லையற்ற பிரகாசத்தின் மத்தியில், சிவப்பு மஞ்சள் உடையில் இருவரும் இணைந்தனர்!
 
நன்றி
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
425552417_10224640096892626_5224777396942054538_n.jpg?stp=dst-jpg_p370x247&_nc_cat=106&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=FU3GnYi3j48Q7kNvgElenH6&_nc_zt=23&_nc_ht=scontent-lhr8-2.xx&_nc_gid=ARlxeWGahWiahqoZBMCSdZq&oh=00_AYAV8v6P9CUeuaWZpsm2BQ8CnQJVSh4hBgzbZj1AqSozrQ&oe=67478786  425572104_10224640097692646_5063540998781379370_n.jpg?_nc_cat=107&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=H6OtoFPjvUcQ7kNvgGqKJDT&_nc_zt=23&_nc_ht=scontent-lhr8-1.xx&_nc_gid=ARlxeWGahWiahqoZBMCSdZq&oh=00_AYDZ31f7ZlApDLQK1rjGTV1bOx9ZjXZ9YsDmLLdMdHMP9A&oe=67477E47  
 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.