Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

இனப்பிரச்சினையை அங்கீகரித்தலே ஆரோக்கிய ஆரம்பமாக அமையும்

sachinthaNovember 22, 2024
fea01-3.jpg

எண்ணிக்கையில் குறைவான ஒரு தேசிய இனம், தன்னைப் பாதுகாத்துக் கொள்ள மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியதாயுள்ளது. சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து பல்வேறு வகையான ஏமாற்றங்களைச் சந்தித்த மக்கள், மாயமான்களைக் கண்டு ஏமாந்த மக்கள் மிகமிக விழிப்பாக இருக்க வேண்டியுள்ளது.

தேசிய இனங்களுக்குரிய சுயநிர்ணய உரிமைக்கான உத்தரவாதம் இலங்கை பிரித்தானியரிடம் இருந்து சுதந்திரம் அடைந்த காலத்திலேயே அரசியலமைப்பில் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும்

ன் வாக்களித்த முதலாவது தேர்தல் 1982 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலேயாகும். இத்தேர்தலில், அப்போது நவசமசமாஜ கட்சி சார்பாக போட்டியிட்ட வாசுதேவ நாணயக்காரவுக்கே யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் எனது வாக்கை அளித்தேன். அத்தேர்தலில் குமார் பொன்னம்பலமும் தமிழ் வேட்பாளராக, தமிழர் நிலைப்பாட்டை முன்னிறுத்திப் போட்டியிட்ட போதிலும், எனது வாக்கை அவருக்கு நான் அளித்திருக்கவில்லை. நான், வாசுதேவ நாணயக்காரவுக்கு வாக்களித்தமைக்குக் காரணம் நான் இடதுசாரிச் சிந்தனை நிலைப்பாடு கொண்டதனால் அல்ல. மாறாக, இலங்கைத் தீவில் வாழும் தேசிய இனங்கள் குறித்த அங்கீகாரம் சார்ந்தும், இத்தேசிய இனங்கள் சுயநிர்ணய உரிமை கொண்டவை என அவரும் அவரது கட்சியும் எடுத்த நிலைப்பாடு சார்ந்துமே அவரை ஆதரித்தேன். பின்னர் அவர் நிலைமாறிப் போனது வரலாற்றுத் துயரம்.

என்னைப் பொறுத்தவரை எனது அரசியல் முடிவுகளில் கொள்கை நிலைப்பாடே முன்னிலைப்படும். இதில் இன, மத, சாதி, பால் வேறுபாடுளுக்கு இடமளிப்பதில்லை. அந்த தார்மீக உணர்வுடன்தான் இதனை எழுதுகிறேன்.

நான் போர் காரணமாக புலம்பெயர்க்கப்பட்டு நோர்வே வந்தடைந்தவன். நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என்ற நிலைப்பாட்டில் இருந்து, போர் நெருக்கடி உந்தித்தள்ள தாயக மண்ணை விட்டு வெளியேறியவன். இவ்வெளியேற்றம் தந்த குற்ற உணர்வுடன் இப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பவன். ஒரு தனிமனிதனாக, எனது உணர்வின் நிலை நின்று இப்பதிவை எழுதுகிறேன். என் போன்ற உணர்வைக் கொண்டவர்கள் பல்லாயிரக்கணக்கில் உள்ளனர்.

புலப்பெயர்வு வாழ்க்கை எம்மை புதியதொரு நாட்டின் குடிமக்கள் ஆக்கினும், நான் பிறந்து வளர்ந்த மண்ணை எனது தாயகமாக உணர்கிறேன். இலங்கைத் தீவில் வாழும் ஈழத்தமிழர் தேசத்தின் அங்கமாக என்னை இனங்கண்டு, நாடு கடந்த சமூகவெளியில் தாயகத்துடன் உறவுகளைப் பேணிய வண்ணம் வாழ்ந்து வருகிறேன். இதனால், ஏற்படும் ஈடுபாடு, அக்கறையின் காரணமாகவே இம்மடலை எழுதுகிறேன்.

என்னைப் பொறுத்தவரை, இலங்கைத்தீவு ஒன்றுக்கு மேற்பட்ட தேசங்களை/ தேசிய இனங்களைக் கொண்ட நாடு என்பதும், அதற்கான அங்கீகாரமும், தேசிய இனங்களுக்குரிய சுயநிர்ணய உரிமைக்கான உத்தரவாதமும் இலங்கை பிரித்தானியரிடம் இருந்து சுதந்திரம் அடைந்த காலத்திலேயே அரசியலமைப்பில் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

இனங்களுக்கிடையேயான சமத்துவம் பேணப்பட்டு, இலங்கைத்தீவில் வாழும் தேசிய இனங்கள் ஐக்கியமாகவும் நட்புணர்வுடனும் வாழும் சூழல் இலங்கை சுதந்திரம் அடைந்த நாளில் இருந்து உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். இத்தகையதொரு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பின் தமிழ் மக்கள் தனிநாடு கேட்டுப் போராடியிருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்காது.

இப்போது ஏதோவெல்லாம் நடந்து முடிந்து விட்டது. நீண்ட போர் நடந்து முடிந்து விட்டது. தமிழர் தாயகத்தில் பெருங்குருதி சிந்தப்பட்டு விட்டது. இழப்பின் வலியும், குருதியின் கனதியும் இதுவரை ஆட்சிபீடம் ஏறிவர்களுக்குப் புரிந்திருக்காது. தேசிய மக்கள் சக்தி தோழர்களே! உங்களுக்கு இவை நன்கு புரியும் என நம்புகிறேன். எனினும் சிந்தப்பட்ட குருதியில் உங்களின் பங்கும் உண்டு என்பது ஒரு வரலாற்று முரண்நகை அல்லவா!

தேசிய மக்கள் சக்தியின் அமோக வெற்றியின் பின்னும்கூட தேசிய இனப்பிரச்சினை குறித்த உங்களின் நிலைப்பாடு என்ன என்பது எனக்குத் தெளிவாகப் புரியவில்லை. சமத்துவமாக அனைத்து மக்களும் நடத்தப்படுவார்கள் என்பதுவும், இதில் இன, மத பேதம் இருக்காது என்பதுவும், இனித் தமிழ் மக்கள் இன அடிப்படையில் போராட வேண்டிய தேவை இல்லை என்பதுவும் தேசிய மக்கள் சக்தியின் கருத்து எனப் புரிந்து கொள்கிறேன்.

மன்னிக்க வேண்டும், தோழர்களே! இவ்விடயத்தில் எனது பார்வை வேறுபட்டது. இலங்கைத் தீவின் தற்போைதய சூழலில், மக்களுக்கிடையேயான சமத்துவம் வருவதற்கு தேசிய இனங்களின் இருப்பு அங்கீகரிக்கப்படல் அவசியமானதாக இருக்கும் என்பது எனது கருத்து.

வர்க்க மேலாதிக்கமும், ஒடுக்குமுறையும் உள்ள ஒரு நாட்டில், நாம் எல்லாரும் சமத்துவமானவர்கள் எனக் கூறி, தொழிலாளர் இயக்கங்கள் தேவை இல்லை எனக் கூறுவது எவ்வளவு அபத்தமோ, ஆண் மேலாதிக்கமும், பெண் ஒடுக்குமுறையும் நிலவும் ஒரு சமூகத்தில் ஆண், பெண் எல்லோரும் சமம் என்று கூறி பெண்ணிய இயக்கங்கள் தேவை இல்லை எனக் கூறுவது எவ்வளவு அபத்தமோ, சாதிப் பாகுபாடும், ஒடுக்குமுறையும் நிலவும் ஒரு சமூகத்தில் மனிதர்கள் எல்லாரும் சமம்; எல்லோருக்கும் ஒரு வாக்கு என்ற ரீதியில் வாக்களிக்கும் உரிமை உண்டு என்று கூறி, சமூக நீதிக்கான இயக்கங்கள் தேவை இல்லை எனக் கூறுவது எவ்வளவு அபத்தமோ, அதேபோல் எண்ணிக்கையில் பெரும்பான்மையாக உள்ள தேசிய இனத்தின் மேலாதிக்கத்தின் கீழ் நாடாளுமன்றம், அரச இயந்திரம், நீதிமன்றங்கள், ஊடகம் ஆகியன உள்ளதொரு நாட்டில், அந்த மேலாதிக்கத்தின் ஊடாக ஏனைய தேசிய இனங்களை ஒடுக்கிய வரலாற்றைக் கொண்டதொரு நாட்டில், இந்த ஒடுக்குமுறைகளின் விளைவாகத் தோற்றம் பெற்ற போரில் இலட்சக்கணக்கான மக்களும், போராளிகளும் உயிரிழந்த வரலாற்றைக் கொண்டதொரு நாட்டில், தேசிய இனப்பிரச்சினை தோற்றம் பெற்று, வளர்ச்சி அடைந்தமைக்கான காரணங்களுக்குத் தீர்வு காணப்படாத ஒரு நாட்டில், நாம் அனைவரும் சமம்: அனைத்து மக்களும் சமமாக நடத்தப் படுவார்கள்; ஒடுக்கப்பட்ட தேசிய இன மக்கள் தமது உரிமைகளுக்காகக் போராடுவது அவசியம் இல்லை எனக் கூறுவதும் அந்தளவுக்கு அபத்தமானதாக எனக்குத் தெரிகிறது.

மக்கள் எல்லோரும் சமமாக உணர்வதற்கு அவர்களது அரசியல் தலைவிதியை அவரவர்கள் தீர்மானிக்கும் உரிமை இருக்க வேண்டும். இன்றைய சூழலில், அரச கட்டமைப்பை பெரும்பான்மை இன மக்கள் மட்டுமே தீர்மானித்தல் தொடரும் நிலையில், அர்த்தபூர்வமான சமத்துவம் எவ்வாறு உருவாக முடியும்? இது பற்றிச் சிந்திக்கும் போது ஒரு உவமானம் நினைவுக்கு வருகிறது.

ஒரு குடியிருப்பில் வாழும் வெவ்வேறு உணவுப் பண்பாடு கொண்ட மக்கள் மத்தியில், எண்ணிக்கையில் பெரும்பான்மை கொண்டவர்கள் தீர்மானிக்கும் அதிகாரத்தை தமது கைகளில் வைத்துக் கொண்டு, தமக்கு விருப்பமான உணவுகளையே சமைத்து அதனை எல்லோருக்கும் பரிமாறி, நாமும் இதனைத்தான் உண்கிறோம், நீங்களும் இதனையே உண்கிறீர்கள். நாம் எல்லோரையும் சமத்துவமாகத்தான் நடத்துகிறோம் எனக் கூறினால் அது எவ்வளவு அபத்தமாக இருக்குமோ, அவ்வளவு அபத்தமாகவே தற்போதய சூழலில் இலங்கைத்தீவில் நாம் அனைவரும் சமத்துவமானவர்கள் என்ற கூற்றும் எனக்குத் தெரிகிறது.

நீங்கள் எல்லோரும் சமத்துவமானவர்கள் எனக் கூறும் போது தமிழ் மக்களுக்கு அச்சம் தரும் இன்னொரு விடயமும் உண்டு. நாம் எல்லோரும் இலங்கையர்கள்; எல்லோரும் எங்கும் குடியேறி வாழலாம். இதில் பாகுபாடு எதுவும் காட்ட மாட்டோம் எனக் கூறி அதனை நீங்கள் ஊக்குவித்தால், தமிழ் மக்கள் தமது பாரம்பரியப் பிரதேசங்களை இழந்து விடும் அபாயம் உண்டு. தமிழ் மக்களின் தனிநாட்டுக் கோரிக்கைக்கு மிக அடிப்படையாக இருந்தது திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களே.

ஓர் உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். ஒரு கடலில் வாழும் எல்லா மீன்களும் ஒன்றை ஒன்று விழுங்கி உயிர் வாழலாம்; அதுதான் சமத்துவம் என்றால், நடைமுறையில் பெரிய மீன்தான் சிறிய மீனை விழுங்கும். சிறிய மீனால் பெரிய மீனை விழுங்க முடியாது. அதேபோல், எல்லோரும் எங்கும் குடியேறலாம் என்பது அரச கொள்கையாக வந்து, அது ஊக்குவிக்கப்பட்டால் எண்ணிக்கையில் பல மடங்கு அதிகமான சிங்கள மக்கள் தமிழர் தாயகப் பிரதேசம் எங்கும் குடியேறி தமிழர் பகுதிகளை விழுங்கி விடல் சாத்தியமானது.

ஆனால், எண்ணிக்கையில் குறைவான தமிழ் மக்கள் எவ்வளவுதான் பரவிப் பரந்தாலும் சிங்கள மக்களின் தாயகப் பிரதேசங்களை விழுங்கி விட முடியாது. இதனால் இத்தகைய சமத்துவத்தால் தமது பாரம்பரியத் தாயகப் பிரதேசம் பறி போய் விடும் என்ற அச்சம் தமிழ் மக்களுக்கு உண்டு.

தேசிய மக்கள் சக்தி தோழர்களே! இவற்றயெல்லாம் சுட்டிக் காட்டும் அதேவேளை உங்களுடனான உரையாடலுக்கும் நாம் தயாராக இருக்கிறோம்.

இன, மதரீதியில் சிந்திக்காது நாம் இலங்கையராக/ ஸ்ரீலங்கராக சிந்திப்போம் என்கிறீர்கள். உங்கள் சிந்தனை எமக்குப் புரிகிறது.

அப்படி இலங்கையர் எனச் சிந்திப்பதற்கு இன, மத வேறுபாடுகளைக் கடந்த ஒரு தேச நிர்மாணம் நிகழ்திருக்க வேண்டும். அத்தகையதொரு தேச நிர்மாணம் இலங்கைத் தீவில் நிகழவில்லை. சிங்களத் தேசிய இனத்தின் மேலாதிக்கம் ஏனைய தேசிய மக்கள் மக்கள் மீது அரச கட்டமைப்பின் ஊடாகத் திணிக்கப்பட்டது. இதனால், பேரினவாத ஒடுக்குமுறையை எதிர்கொண்ட ஈழத்தமிழ் மக்கள் தம்மைத் தேசமாக சிந்திக்கும் எண்ணம் வலுப்பட்டது.

மதரீதியாகவும் அரசு, பௌத்த மதத்துக்கு முன்னுரிமை கொடுக்கும் அரசாகத்தான் இப்போதும் உள்ளது. இன, மத சமத்துவம் பேசும் உங்களாலும் அரசை மதசார்பற்ற அரசாக மாற்றுவோம் என்ற அறிவிப்பை இன்றுவரை செய்ய முடியாமல் இருக்கிறது. இந்நிலை இருக்கும் போது எங்கிருந்து சமத்துவம் வரும்?

நாங்கள் இனவாதிகள் இல்லை என்கிறீர்கள். அதுவும் எமக்குப் புரிகிறது. தனிப்பட்ட மனிதர்களாக, இனவாதிகளாக இல்லை என்று நீங்கள் கூறுவதை நாம் மறுக்கவில்லை. நீங்கள் தனிப்பட்ட முறையில் இனவாதிகளாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், கடந்த காலத்தில் உங்கள் அமைப்பின் செயற்பாடுகள் இனவாதம் கொண்டவையாக அமையவில்லை என உங்களால் உரத்துக் கூற முடியுமா?

மேலும், நீங்கள் தற்போது தலைமை தாங்கும் அரசு பேரினவாத மேலாதிக்கம் கொண்ட கட்டமைப்பாக உள்ளது. இக்கட்டமைப்புத்தான் தமிழ் மக்கள் மீது ஒடுக்குமுறைகளைப் புரிந்தது. இந்த ஒடுக்குமுறைகள் இனவழிப்புப் பரிமாணம் கொண்டவை என்ற அச்சம் தமிழ் மக்களுக்கு எழுந்தது.

நாம் அரசியலில் பேசும் பேரினவாத மேலாதிக்கம் என்பது தனிமனிதர் சார்ந்ததல்ல. அது அரசியலமைப்பைச் சார்ந்தது. அரச கட்டமைப்பைச் சார்ந்தது. ஆனால், நீங்கள் குறிப்பிடும் சமத்துவமும், சமஉரிமையும் தனிமனிதர் சார்ந்ததாகவே இருக்கிறது. இந்தத் தனிமனித சமத்துவமும், சுதந்திரமும் பேரினவாத அரச கட்டமைப்பால் தீர்மானிக்கப்படுகிறது. இதனால், இது பெரும்பான்மை மக்களின் விருப்பத்தை ஏனைய மக்கள் மீது திணிக்கும் ஒரு பொறிமுறையாக அமைந்து விடுகிறது. மாறாக, நாம் எதிர்பார்ப்பது மக்களாக எமது கூட்டுரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதையே. தமிழ் மக்களாக நமது தலைவிதியை நாமே நிர்ணயித்து வாழ உரித்துடைய ஓரு தேசிய வாழ்வையே. அதற்கான ஓர் அரசியல் ஏற்பாட்டையேயாகும்.

எண்ணிக்கையில் குறைவான ஒரு தேசிய இனம் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியதாயுள்ளது. சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து பல்வேறு வகையான ஏமாற்றங்களைச் சந்தித்த மக்கள், மாயமான்களைக் கண்டு ஏமாந்த மக்கள் மிக மிக விழிப்பாக இருக்க வேண்டியுள்ளது. வரலாறு கற்றுத் தந்த பாடங்களில் இருந்தும், உருவாக்கிய அச்சங்களில் இருந்தும் ஒடுக்கப்பட்ட மக்கள் விடுபடுவது இலகுவானதல்ல தோழர்களே!

இலங்கைத்தீவில் வாழும் மக்களின் தேசிய இனத் தகைமையினை அங்கீகரித்து, ஸ்ரீலங்கா அரச கட்டமைப்பு பேரினவாத மேலாதிக்கத்தை வலுப்படுத்துகிறது என்பதை ஏற்றுக் கொண்டு, எத்தகைய ஏற்பாடுகளின் மூலம் தேசிய இனங்களுக்குடையில் சமத்துவத்தை ஏற்படுத்த முடியும் என ஆராய நீங்கள் விரும்பும் பட்சத்தில் உரையாடலுக்கான அரங்கு இலகுவில் உருவாகி விடும். குறைந்த பட்சம், இலங்கைத்தீவில் தேசிய இனப்பிரச்சினை என்று ஒன்று உண்டு; அதனை எவ்வாறு தீர்க்க முடியும் என நீங்கள் திறந்த மனதுடன் ஆராய விரும்பபின் உரையாடல் வெளி விரியும்.

இலங்கைத்தீவின் தேசியப் இனப்பிரச்சினயை அங்கீகரித்து, இதற்குப் பேரினவாத மேலாதிக்க அரச கட்டமைப்பைத்தான் காரணம் என்பதையும், இந்த ஒடுக்குமுறையில் கடந்த காலத்தில் நாங்களும் பங்குபற்றியிருக்கிறோம்; அது தவறு என்பதையும் ஏற்றுக் கொண்டு அடுத்த காலடியை முன்வையுங்கள். அது ஓர் ஆரோக்கியமான ஆரம்பமாக இருக்கும். செய்வீர்களா?

கலாநிதி சர்வேந்திரா நோர்வே

https://www.thinakaran.lk/2024/11/22/featured/97603/இனப்பிரச்சினையை-அங்கீகர/



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.