Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு, கிழக்கு  தமிழ் மக்கள் வாக்களித்த முறையை விளங்கிக்கொள்ளுதல்

வடக்கு, கிழக்கு  தமிழ் மக்கள் வாக்களித்த முறையை விளங்கிக்கொள்ளுதல் 

— வீரகத்தி தனபாலசிங்கம் — 

2024 நவம்பர்  பாராளுமன்ற தேர்தல் கண்டிருக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த  பல ‘முதலாவதுகளில்”  கூடுதலான அளவுக்கு  கவனத்தை ஈர்த்திருப்பவை  தேசிய மக்கள் சக்தி சாதித்த இரு சாதனைகளேயாகும். 

தேசிய மக்கள் சக்தியின்  பிரமாண்டமான வெற்றி இலங்கையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு தனியொரு கட்சி அல்லது கூட்டணி பாாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்ற முதலாவது சந்தர்ப்பத்தை குறித்து நிற்கிறது. 

அடுத்ததாக நாட்டில் உள்ள 22 மாவட்டங்களில் ஒரு மாவட்டத்தை தவிர,  ஏனைய சகலவற்றிலும்  தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றிருக்கிறது.  இந்த வெற்றியில் மிகவும் பிரத்தியேகமாக கவனிக்க வேண்டியது வடக்கு, கிழக்கு மாகாணங்களின் ஐந்து தேர்தல் மாவட்டங்களில் மட்டக்களப்பை தவிர ஏனைய மாவட்டங்களில் தேசிய மக்கள் சக்தி கூடுதல் ஆசனங்களைக் கைப்பற்றியமையேயாகும். மலையக தமிழர்கள் பெருமளவில் வாழ்கின்ற மாவட்டங்களிலும் அதே நிலைதான்.

 சிங்களவர்களை பெரும்பான்மையாகக்   கொண்ட ஒரு அரசியல் கட்சி தமிழ்த் தேசியவாத அரசியலின் ‘கோட்டை யாக’ விளங்கிய யாழ்ப்பாண மாவட்டம் உட்பட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள மாவட்டங்களில் பெரும்பாலான ஆசனங்களை  முதற் தடவையாக கைப்பற்றியிருக்கிறது.

 இலங்கையின் தேர்தல் வரலாற்றில் முதற் தடவையாக  வடக்கில் இருந்து தெற்கு வரையும் கிழக்கில் இருந்து மேற்கு வரையும்  இன,  மத வேறுபாடுகளைக் கடந்து வாக்காளர்களின் அமோக ஆதரவை தேசிய மக்கள் சக்தி பெற்றிருக்கிறது. இந்த வரலாற்று வெற்றி குறித்து  அகவுணர்வுக்கு அப்பாற்பட்ட சரியான வியாக்கியானத்தை அரசியல்வாதிகளோ அல்லது அவதானிகளோ இதுவரையில் வைத்ததாக கூற முடியாது.

தேசிய மக்கள் சக்திக்கு நாடுபூராவும் கிடைத்த மகத்தான ஆதரவு தேசிய ஐக்கியத்தை நோக்கிய வழக்கம் மீறிய குறிப்பிடத்தக்க ஒரு அடியெடுத்து வைப்பு என்றும் வரலாற்று ரீதியாக மத்திய ஆட்சிமுறை மீது வெறுப்புக் கொண்டிருந்த பிராந்தியங்கள் கூட ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்கவின் தலைமைத்துவத்தில் நம்பிக்கையை வெளிப்படுத்தியிருக்கின்றன என்றும் சில அவதானிகள் கூறியிருக்கிறார்கள்.

பாரம்பரியமான பிளவுகளை கடந்து தேசிய நோக்கு ஒன்றை வளர்ப்பதில் தேசிய மக்கள் சக்தி வெற்றி கண்டிருக்கிறது என்றும் பிரதான அரசியல் கட்சிகளின்  தேர்தல் பிரசாரங்களில் சிறுபான்மைச் சமூகங்களை அழுத்தும் முக்கியமான பிரச்சினைகளுக்கு  முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை  என்றபோதிலும், வடக்கு, கிழக்கிலும் நாட்டின் ஏனைய  பாகங்களிலும் தேர்தல் முடிவுகள் ஒரேமாதிரியாக அமைந்திருப்பது தேசிய அரசியல் நீரோட்டத்தில் இணைந்துகொள்வதில் அந்த மக்கள் அக்கறை காட்டத் தொடங்கி விட்டார்கள் என்பதன் வெளிப்பாடு என்றும் அந்த அவதானிகள் கூறுகிறார்கள். 

அதேவேளை, தேசிய மக்கள் சக்தியின் தலைமைத்துவ கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி.) தலைவர்கள் குறிப்பாக அதன் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா போன்றவர்கள் சிறுபான்மைச் சமூகங்கள் இனவாத அரசியலை நிராகரித்திருக்கின்றன என்று கூறுகிறார்கள். 

வழமைக்கு மாறான முறையில், இந்தத் தடவை ஜனாதிபதி தேர்தலிலும் பாாளுமன்ற தேர்தலிலும் தென்னிலங்கையில்   தேசியவாத பிரசாரங்களுக்கு இடமிருக்கவில்லை. ராஜபக்சாக்களின் தலைமையில்  சிங்கள பௌத்த  தேசியவாத அரசியலை  முன்னெடுத்த சக்திகள் படுமோசமாக பலவீனமடைந்திருந்திருப்பதும் பிரதான அரசியல் கட்சிகள் சிறுபான்மைச் சமூகங்களின் வாக்குகளைப் பெறுவதற்காக நேசக்கரம் நீட்டியதும் அதற்கு பிரதான காரணங்களாகும். 

 இதுகாலவரை வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்திவந்த தமிழ்த் தேசியவாத அரசியல் கட்சிகள் பாராளுமன்ற தேர்தலில் மோசமான பின்னடைவைச் சந்தித்திருக்கின்றன. கடந்த பாராளுமன்றத்தில் கொண்டிருந்ததையும் விட இந்த தடவை இரு ஆசனங்களை கூடுதலாகப் பெற்றிருப்பது குறித்து இலங்கை தமிழரசு கட்சி பெருமைப்படுவதற்கு எதுவுமில்லை. ஐந்து மாவட்டங்களில் தேசிய மக்கள் சக்தி அதிகமான ஆசனங்களைக் கைப்பற்றியதன் பின்னணியிலேயே அந்த  கட்சி தமிழ் மக்கள் மத்தியில் அதன் தற்போதைய அந்தஸ்தை நோக்கவேண்டும்.

தமிழ்க் கட்சிகளின் இத்தகைய பின்னடைவுக்கு மத்தியில்,  தென்னிலங்கையில்  சிங்கள பௌத்த கடும்போக்கு தேசியவாதிகள் என்று அடையாளம் காணப்பட்ட பல அரசியல்வாதிகள்  இந்த தடவை  பாராளுமன்றத்துக்கு தெரிவாகவில்லை. இந்த நிகழ்வுப் போக்குகளை அடிப்படையாக வைத்து தெற்கில் சிங்கள பௌத்த தேசியவாதமும் வடக்கில் தமிழ்த் தேசியவாதமும் தோற்கடிக்கப்பட்டு விட்டதாக சில விமர்சகர்கள்  கூறமுற்படுகிறார்கள்.

குறிப்பிட்ட சில சிங்கள கடும்போக்கு தேசியவாதிகளின் தேர்தல் தோல்வியை சிங்கள பௌத்த தேசியவாதத்தின் தோல்வி என்று எவ்வாறு வியாக்கியானம் செய்யமுடியாதோ, அதேபோன்றே தமிழ்த் தேசியவாதக் கட்சிகளுக்கு வடக்கு, கிழக்கில் ஏற்பட்ட  கடுமையான பின்னடைவை தமிழ் மக்கள் தமிழ்த் தேசிய வாதத்தை நிராகரித்திருப்பதாக வியாக்கியானம் செய்யமுடியாது. 

தமிழ் மக்கள் தேசியவாத சிந்தனைகளின் அடிப்படையிலான தங்களின் நியாயபூர்வ அரசியல் அபிலாசைகளில் அக்கறை காட்டாமல் தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டு தேர்தலில் ஆதரவை வழங்கினார்கள் என்று கூறமுடியாது.

உள்நாட்டுப் போரின் முடிவுக்கு பின்னரான கடந்த பதினைந்து வருடங்களாக தங்களை பிதிநிதித்துவம் செய்துவந்த தமிழ் கட்சிகள் மற்றும் அவற்றின் தலைவர்கள் மீதான  வெறுப்பையே வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பின் மூலம் வெளிக் காட்டியிருக்கிறார்கள்.

வெறுமனே கடந்த கால போராட்டங்களை மாத்திரம்  நினைவுபடுத்திக் கொண்டு உணர்ச்சிவசமான தமிழ்த் தேசியவாத சுலோகங்களை பயன்படுத்தி எந்தப் பயனையும் தராத அரசியல் அணுகுமுறைகளை கடைப்பிடித்துவந்த தமிழ் அரசியல் தலைவர்கள் இனிமேலும் தங்களுக்கு சரியான பாதையை காட்டுவார்கள் என்று தமிழ் மக்கள் நம்பவில்லை. அத்துடன்  முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு தமிழ் அரசியல் சக்திகள் ஐக்கியப்பட்டு செயற்படவேண்டிய ஒரு காலகட்டத்தில் தமிழ் அரசியல் சமுதாயம்  சிதறுப்பட்டு நிற்பதனால் தமிழ் மக்கள் சீற்றமடைந்திருக்கிறார்கள். 

தங்கள் மத்தியில் தமிழ்க் கட்சிகளுக்கு மாற்றாக நடைமுறைச்சாத்தியானதும் விவேகமானதுமான  அரசியல் பாதையில் தங்களை வழிநடத்தக்கூடிய ஒரு அரசியல் சக்தி இல்லை என்பதனாலேயே தமிழ் மக்கள் வேறு வழியின்றி தேசிய மக்கள் சக்தியின் பக்கம் திரும்பினார்கள். ஜனாதிபதி தேர்தலில் அநுரா குமார திசாநாயக்கவை பெருமளவில் ஆதரிக்காத அந்த மக்களுக்கு அவரின் வெற்றிக்கு பிறகு தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிப்பதில் நாட்டம் காட்டக்கூடிய ஒரு சூழ்நிலை உருவானது.

பாராளுமன்ற தேர்தல் பிரசாரங்களுக்கு தங்களிடம் வந்த தமிழ்த் தலைவர்களிடம் பல பகுதிகளில் தமிழ் மக்கள் தாங்கள் இந்த தடவை தேசிய மக்கள் சக்திக்கே வாக்களிக்கப்போவதாக நேரடியாகவே கூறினார்கள். தங்களது மக்களின் உணர்வுகளை சரியான முறையில் மதிப்பிடுவதற்கு தவறிய அந்த தலைவர்கள் வழமை போன்றே தமிழ்க் கட்சிகளுக்கு மாத்திரமே தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கையில் மெத்தனமாக இருந்து விட்டார்கள். 

தவறான ஆட்சிமுறைக்கும் ஊழல்தனமான அரசியல் கலாசாரத்துக்கும் பொறுப்பான பாரம்பரியமான பிரதான  அரசியல் கட்சிகளை தென்னிலங்கை மக்கள் நிராகரிப்பதற்கு சிறந்த மாற்றுச் சக்தியாக தேசிய மக்கள் சக்தி விளங்கியது. அறகலய மக்கள் கிளர்ச்சிக்கு பின்னரான காலப்பகுதியில் மாற்றங்கண்ட அரசியல் சூழ்நிலையை அனுகூலமாக பயன்படுத்தி தேசிய மக்கள் சக்தி தன்னை ஒரு பாரிய அரசியல் இயக்கமாக வளர்த்துக் கொண்டது. 

அதேபோன்றே வடக்கு, கிழக்கிலும்  தமிழ் அரசியல் கட்சிகளை நிராகரிப்பதற்கு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த தமிழ் மக்களுக்கு தேசிய மக்கள் சக்தியை தவிர வேறு மாற்று இருக்கவில்லை. கடந்தகால அனுபவங்களில் இருந்து படிப்பினைகைளைப் பெற்று நிலைவரங்கள் வேண்டிநிற்பதற்கு ஏற்றமுறையில் அணுகுகுறைகளை வகுக்கும் பழக்கமோ அல்லது பக்குவமோ இல்லாத  தமிழ்க் கட்சிகள் தற்போது மக்கள் புகட்டியிருக்கும் பாடத்தில் இருந்தாவது எதையாவது படித்துக் கொள்வார்களோ தெரியவில்லை. 

இது இவ்வாறிருக்க, இனவாத அரசியலும் மதத் தீவிரவாதமும் மீண்டும் தலையெடுப்பதற்கு ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று கடந்த வியாழக்கிழமை புதிய பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தில் தனது அரசாங்கத்தின் கொள்கை விளக்கவுரையை நிகழ்த்திய ஜனாதிபதி திசாநாயக்க கூறினார். இனவாதமும் மதவாதமும் மீண்டும் தலையெடுக்காமல் இருப்பதை உறுதிசெய்வது என்பது அவரது அரசாங்கத்தின் அணுகுமுறைகளிலும் செயற்பாடுகளிலுமே முற்றுமுழுதாக தங்கியிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. 

இன, மத வேறுபாடுகளை கடந்து மக்கள் தனது அரசாங்கத்துக்கு வழங்கியிருக்கும் மகத்தான ஆதரவு இனவாதம் மீண்டும் தலையெடுக்காமல் இருக்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்க உதவும் என்று ஜனாதிபதி நம்புகிறார் என்றால் அதே இனவாதம் தோற்றுவித்த பிரச்சினைகளுக்கு  காலம் தாழ்த்தாமல்  தீர்வுகளை காண்பது அவசியமானதாகும்.  சிறுபான்மைச் சமூகங்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளையும்  மனக்குறைகளையும்  மதிக்காத  தென்னிலங்கை அரசியல் கலாசாரத்தை மாற்றியமைக்க வேண்டியது  ஜனாதிபதி தனது குறிக்கோளை அடைவதற்கான முதற் தேவையாகும். 

தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கு இதுகாலவரையில் முன்னெடுக்கப்பட்ட சகல முயற்சிகளையும் எதிர்த்த  கசப்பான கடந்த காலத்தில் இருந்து விடுபடுவதற்கான தெளிவான அறிகுறிகளை இதுவரையில் தேசிய மக்கள் சக்தி குறிப்பாக ஜே.வி.பி. காண்பிக்கவில்லை. அண்மைக்காலத்தில் அரசியலமைப்புக்கான 13 வது திருத்தம் தொடர்பில் தோன்றிய சர்ச்சைகளின்போது தேசிய மக்கள் சக்தி வெளிப்படுத்திய  நிலைப்பாடுகள் இதற்கு பிந்திய  சான்றுகளாகும். 

முன்னைய ஜனாதிபதிகளில் எந்த ஒருவருக்குமே வழங்கியிராத பிரமாண்டமான ஆணையை திசாநாயக்கவுக்கு மக்கள் வழங்கியிருக்கிறார்கள். சட்டத்தில் திருத்தங்களைச் செய்தோ அல்லது புதிய அரசியலமைப்பை அறிமுகம் செய்தோ இனப்பிரச்சினை விவகாரத்தில் தீர்வுகளை காண்பதற்கு எந்த தடையும் அவருக்கும் அரசாங்கத்துக்கும் கிடையாது.  அரசியல் துணிவாற்றல் மாத்திரமே அவசியமாகிறது.

பெரும்பாலான தமிழ்க்கட்சிகளை நிராகரித்து தேசிய மக்கள் சக்தியை ஆதரித்திருக்கும் தமிழ் மக்களுக்கு ஜனாதிபதி ஒரு தெளிவான செய்தியைச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறார். அதேவேளை வரலாற்றில் முதற்தடவையாக தேசிய கட்சியொன்றின் பல உறுப்பினர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்பியிருக்கும் வடக்கு , கிழக்கு மக்களின் பிரச்சினைகளை கையாளுவதில் எத்தகைய அணுகுமுறைகளை கடைப்பிடிப்பதற்கு  தாங்கள் கடமைப்பட்டிருக்கிறார்கள் என்பதை சிங்கள மக்களுக்கு கூற வேண்டிய பொறுப்பும் ஜனாதிபதிக்கு இருக்கிறது. 

அதிகாரப்பரவலாக்கல் மற்றும் சிறுபான்மைச் சமூகங்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகள் தொடர்பில் ஆழக்காலூன்றிய எதிர்மறையான நிலைப்பாடுகளைக் கொண்ட பெரும்பான்மைச்  சமூக நம்பிக்கையை வென்றெடுத்து இனப்பிரச்சினைக்கு அரசியல் இணக்கத் தீர்வொன்றை காண்பதற்கான சாதகமான சூழ்நிலையை தென்னிலங்கையில் உருவாக்குவதற்கு ஜனாதிபதி தன்னை அர்ப்பணிக்கவேண்டும். அதற்கான அரசியல் தகுதி  அவருக்கு முழுமையாக இருக்கிறது. 

முன்னைய சிங்கள தலைவர்களைப் போன்று சிங்கள கடும்போக்கு தேசியவாத சக்திகளினதும் மகாசங்கத்தின் பிரிவுகளினதும்  நிர்பந்தங்களுக்கு அடிபணிந்தால் ஜனாதிபதி திசாநாயக்கவும் வரலாறு வழங்கிய அரிய வாய்ப்புக்களை தவறவிட்ட தலைவர்களின் பட்டியலில் சேர்ந்து கொள்வார் என்பது நிச்சயம். 

புதிய அரசியலமைப்பு வரைவுச் செயன்முறைகளை முன்னெடுப்பதற்கு முன்னதாக 13 வது திருத்தத்தை அவர் எவ்வாறு கையாளப் போகிறார் என்பது அவரது அரசியல் துணிச்சலுக்கு ஒரு அமிலப்பரீட்சையாக அமையும்.

இறுதியாக, கடந்தவாரம் ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா சென்னை ‘இந்து’ ஆங்கிலப் பத்திரிகையின் கொழும்பு செய்தியாளர் மீரா ஸ்ரீனிவாசனுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்த ஒரு கருத்து முக்கிய கவனத்துக்குரியதாகும்.

“எம்மைத் தோற்கடித்தவர்களினால் எழுதப்பட்ட எமது வரலாறு காரணமாக தவறான ஒரு எண்ணம் நிலவுகிறது. நாம் எமது பாதையை விரும்பித் தெரிவு செய்யவில்லை. எம் மீது அந்தப் பாதை திணிக்கப்பட்டது.  எமது வன்முறைப் போராட்டம் அரச அடக்குமுறைக்கான எமது எதிர்வினையேயாகும்.  இலங்கையின் தற்போதைய அரசியல் தருணம் எந்தவிதமான காரணமும் இல்லாமல் ஆயுதமேந்திய பயங்கரவாதிகளாக சிலரை வருணிக்காமல் எமது கட்சியின் வரலாற்றை மாத்திரமல்ல நாட்டின் வரலாற்றையும் திருப்பி எழுதுவதற்கு வெளியைத் திறந்து விட்டிருக்கிறது” என்று சில்வா கூறியிருக்கிறார்.  

இது தமிழர்களின் போராட்டத்துக்கும் முறுமுழுதாகப் பொருந்தும். தங்களது ஆயுதப் போராட்டத்துக்கான மூலவேர்க் காரணிகள் குறித்து நிலவுகின்ற தப்பபிப்பிராயங்களை குறித்து தமிழர்களும் கூறுவதற்கு நீண்ட கதை இருக்கிறது என்பதையும் திரிபுபடுத்தப்பட்ட வரலாற்றை திருப்பி எழுதவேண்டிய தேவை இருக்கிறது என்பதையும் ஜே.வி.பி./ தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் விளங்கிக்கொள்ள வேண்டிய தருணம் வந்துவிட்டது. அதனால் தங்களுக்கு வரலாறு வழங்கியிருக்கும் அரிய வாய்ப்பை தவறவிடாமல் பெரும்பான்மையின மக்களின் நம்பிக்கையை வென்றெடுத்து தேசிய இனப்பிரச்சினைக்கு காலந்தாழ்த்தாமல் அரசியல் இணக்கத் தீர்வு ஒன்றைக் காண அந்த தலைவர்கள் முன்வரவேண்டும்.

 

https://arangamnews.com/?p=11467

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, கிருபன் said:

உள்நாட்டுப் போரின் முடிவுக்கு பின்னரான கடந்த பதினைந்து வருடங்களாக தங்களை பிதிநிதித்துவம் செய்துவந்த தமிழ் கட்சிகள் மற்றும் அவற்றின் தலைவர்கள் மீதான  வெறுப்பையே வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பின் மூலம் வெளிக் காட்டியிருக்கிறார்கள்.

வெறுமனே கடந்த கால போராட்டங்களை மாத்திரம்  நினைவுபடுத்திக் கொண்டு உணர்ச்சிவசமான தமிழ்த் தேசியவாத சுலோகங்களை பயன்படுத்தி எந்தப் பயனையும் தராத அரசியல் அணுகுமுறைகளை கடைப்பிடித்துவந்த தமிழ் அரசியல் தலைவர்கள் இனிமேலும் தங்களுக்கு சரியான பாதையை காட்டுவார்கள் என்று தமிழ் மக்கள் நம்பவில்லை. அத்துடன்  முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு தமிழ் அரசியல் சக்திகள் ஐக்கியப்பட்டு செயற்படவேண்டிய ஒரு காலகட்டத்தில் தமிழ் அரசியல் சமுதாயம்  சிதறுப்பட்டு நிற்பதனால் தமிழ் மக்கள் சீற்றமடைந்திருக்கிறார்கள். 

தங்கள் மத்தியில் தமிழ்க் கட்சிகளுக்கு மாற்றாக நடைமுறைச்சாத்தியானதும் விவேகமானதுமான  அரசியல் பாதையில் தங்களை வழிநடத்தக்கூடிய ஒரு அரசியல் சக்தி இல்லை என்பதனாலேயே தமிழ் மக்கள் வேறு வழியின்றி தேசிய மக்கள் சக்தியின் பக்கம் திரும்பினார்கள். ஜனாதிபதி தேர்தலில் அநுரா குமார திசாநாயக்கவை பெருமளவில் ஆதரிக்காத அந்த மக்களுக்கு அவரின் வெற்றிக்கு பிறகு தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிப்பதில் நாட்டம் காட்டக்கூடிய ஒரு சூழ்நிலை உருவானது.

பாராளுமன்ற தேர்தல் பிரசாரங்களுக்கு தங்களிடம் வந்த தமிழ்த் தலைவர்களிடம் பல பகுதிகளில் தமிழ் மக்கள் தாங்கள் இந்த தடவை தேசிய மக்கள் சக்திக்கே வாக்களிக்கப்போவதாக நேரடியாகவே கூறினார்கள். தங்களது மக்களின் உணர்வுகளை சரியான முறையில் மதிப்பிடுவதற்கு தவறிய அந்த தலைவர்கள் வழமை போன்றே தமிழ்க் கட்சிகளுக்கு மாத்திரமே தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கையில் மெத்தனமாக இருந்து விட்டார்கள். ----

அதேபோன்றே வடக்கு, கிழக்கிலும்  தமிழ் அரசியல் கட்சிகளை நிராகரிப்பதற்கு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த தமிழ் மக்களுக்கு தேசிய மக்கள் சக்தியை தவிர வேறு மாற்று இருக்கவில்லை. கடந்தகால அனுபவங்களில் இருந்து படிப்பினைகைளைப் பெற்று நிலைவரங்கள் வேண்டிநிற்பதற்கு ஏற்றமுறையில் அணுகுகுறைகளை வகுக்கும் பழக்கமோ அல்லது பக்குவமோ இல்லாத  தமிழ்க் கட்சிகள் தற்போது மக்கள் புகட்டியிருக்கும் பாடத்தில் இருந்தாவது எதையாவது படித்துக் கொள்வார்களோ தெரியவில்லை. 

சம்பந்தன்... ஒரு முறை, தமிழரசு கட்சி சார்பில்... "ஒரு தும்புக் கட்டையை" நிறுத்தினாலும் மக்கள் வாக்களிப்பார்கள் என்று கூறினார்.
தமிழ்மக்களின் வாக்குகாளால்  தெரிவு செய்யப் பட்டு, பதவி சுகத்தை அனுபவித்துக் கொண்டு... 
அந்த வார்த்தைகளை எவ்வளவு "திமிரில்" சொல்லி இருக்க வேண்டும்.
அதுக்குத்தான்... இப்போ மக்கள் இந்தத் தண்டனையை தந்து இருக்கின்றார்கள்.

அரசியல்வாதிகளின் ஒவ்வொரு வார்த்தைப் பிரயோகமும், அறிக்கைகளும், செயல்களும்... 
மக்களை உங்களிடம் இருந்து ஆயிரக் கணக்கில் விலகிச் சென்று விடும்.  
மக்கள் உங்களுக்கு தண்டனை தர வருடக் கணக்கில் காத்துக் கொண்டு இருப்பார்கள்.
அவர்களுக்கு... ஞாபக மறதி என்று நீங்கள் நினைக்காதீர்கள்.

வருகின்ற தேர்தலில்... இன்னும், மரண  அடி  வாங்க முதல்... 
உங்களை சுயபரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.