Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"புரிதலின் போது"


"புரியாத கர்வம் பலரைத் தள்ளிவைக்கும்
அறியாத உண்மை உன்னைச் சிதைத்துவிடும்
நெறியான வாழ்வு இல்லாமல் போய்விடும்      
'புரிதலின் போது' எல்லாமே தேடிவரும்!" 


கதிரழகி ஒரு அழகின் தரிசனம். அவளுடைய இருப்பு எவரையும் சலிப்படைய முடியாதவாறு, அது எந்த இடமாக இருந்தாலும் அதை  ஒளிரச் செய்வது, அவளுடைய அற்புதமான உடல் அம்சங்கள் அவளைப் பார்த்த அனைவரையும் கவர்ந்திழுக்கும். தினமும் காலையில், அவள் தன் உருவத்தை கண்ணாடியில் பார்க்கிறாள், அது அவளுக்கு ஒரு மகிழ்ச்சி, ஒரு தற்பெருமை!

அவளது தோள்களின் மேல் படர்ந்திருக்கும் அவளது நீளமான, கருமையான கூந்தலையும், அவளது பெரிய, மான் போன்ற மயக்கம் தரும் கண்களையும், அவளது குறைபாடற்ற உடலின் முழுத் தோற்றத்தையும் மீண்டும் மீண்டும் பார்க்கிறாள். அதில் அவளுக்கு சொல்லென்ன இன்பம். அவள் தன் வளைந்த புருவங்களைப் பார்க்கிறாள். அது அம்பை எய்வதற்க்காக வளைக்கப்பட்ட வில்லைப்  போல நினைக்கிறாள், தன் விழி அம்பில் எத்தனை பேர் சுருண்டு விழுந்தார்கள் என எண்ணும்பொழுது, அவள் தற்பெருமை கொண்டாள். தன்னை இளவரசியாக எண்ணி எண்ணி, தன் அழகைக் கிரீடமாக தன் தலையில், தானே சூட்டினாள். 

அவள் கொஞ்சம் தன் கண்களில் இருந்து மெல்ல மெல்ல தனது விம்பத்தை கீழ் நோக்கி மேயத் தொடங்கினாள். தன் மார்பங்களை மறைத்திருக்கும் ஆடையைப் பார்க்கிறாள். அது மதயானைக்கு அணியப்படிருக்கும் முகத்திரையைப் போல் அவளுக்குத் தோன்றியது. எத்தனை ஆண்களின் பீறிட்டுக் கிளம்பும் தீவிர காம உணர்வுகளை அது தடுத்திருக்கும். அப்பொழுது அவளுக்கு திருஞான சம்பந்தர் ஒருமுறை தான் வணக்கும் தேவலோக உமாதேவியாரைப் பற்றி கூறியது ஞாபகம் வந்தது.

"மைம்மரு பூங்குழல் கற்றைதுற்ற 
வாணுதல் மான்விழி மங்கையோடும்"  

கற்றையாகச் செறிந்து கருமை மருவி வளர்ந்த அழகிய கூந்தலையும், ஒளி சேர்ந்த நுதலையும் [நெற்றியையும் ], மான்விழி போன்ற விழியையும் உடைய மங்கையென வர்ணித்தது தான் அது. ஆனால் அவளுக்கு அவளின் அழகு முன் உமாதேவி எங்கே என்ற எண்ணம் தான் வந்தது. அவள் தனக்குத் தானே சிரித்துக் கொண்டாள். அது தான் அவளின் புரிதல் அப்பொழுது! 

அழகான தோற்றம் அனைவருக்கும் விருப்பமான ஒன்று. அது ஓர் இயற்கையான உணர்வு. இள வயது பெண்களுக்குச் சிக்கென்ற உடல், பளபளப்பான முகம், பட்டுக் கூந்தல், வெள்ளை நிறம் தான் அழகு என்கிற எண்ணம் மிகச் சிறிய வயதிலேயே பெண் குழந்தைகள் மனதில் விதைக்கப்படுகிறது. அதில் அவள் விதிவிலக்கல்ல. 

இனிய புன்னகை, கருணை கொண்ட மனம், உதவ நீளும் கரங்கள், சோர்ந்திருக்கும் மனதிற்குத் தரும் இதமான அன்பு, ஆரோக்கியமான மனம், உடல் எல்லாமே அழகு. இதற்கெந்த ஒப்பனையும் தேவை இல்லை. அந்த நிமிடத்தை அழகாக்கும் அனைத்துமே அழகுதான். நான் என்பது கண்ணாடியில் தெரியும் உருவம் அல்ல. நான் என்பது எனது நம்பிக்கை, எனது திறமை, எனது தோற்றம், எனது எண்ணங்கள், எனது செயல்பாடு அனைத்துமே தான். ஆனால் இந்த "புரிதலின் போது" தான் உண்மையில் மனிதன் விழித்தெழுகிறான் என்பதை அவள் உணரும் பக்குவத்தில் இன்று இல்லை. 

சிறுவயதிலிருந்தே கதிரழகி தன் அழகே தனக்குப் பெரிய சொத்து என்று நம்பினாள். தன்னழகைப் பார்த்து, அதிசயித்து,ஆராதித்த தன் இளமை பூரிப்பு, பின் ஒரு காலம் குறைந்து போகும் என்ற உண்மையை இன்றைய "புரிதலின் போது"  அவள் அறியவில்லை. அறியும் பக்குவத்தில் அவள் இருக்கவில்லை, அவளின் கர்வம், ஆணவம், செருக்கு அதற்கு இடமளிக்கவில்லை.

"அலையாடும் அழகு குமரியின் வனப்பே
விலையற்ற அவளின் கவர்ச்சிச் சிரிப்பே!
உலை வைக்கும் மங்கையின் கண்ணே
அலை எடுத்து எவரையும் மயக்குமே!"

இப்படித் தான் கதிரழகி தன்னை நினைத்துக் கொண்டாள். என்றாலும் பெண்ணின் பருவம் பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் எனும் ஏழு பருவமாகும் என்ற "புரிதலின் போது" தான் அவள் உண்மை உணருவாள் என்பதை அலட்சியமாகப் பார்த்தாள். அவளின் எல்லையில்லா அழகால், ஆண்கள் பலர் அவளை நேசித்தார்கள், நண்பர்கள் அவளைப் பாராட்டினர், அந்நியர்களால் கூட அவளை உற்றுப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. ஆயினும் கூட, அவள் தன்னை அணுக முயற்சிக்கும் ஒவ்வொரு இளம் ஆண்களையும் தகுதியற்றவர்களாகக் கருதினாள், அவர்களை வெறும் அபிமானிகள் என்று ஒதுக்கித் தள்ளினாள் - அவளுடைய சொந்த மனதில். "ஆண்கள் என்னைப் போற்ற வேண்டும். என்னுடன் பேசுவதற்கு கூட அவர்கள் ஒரு அதிர்ஷ்டசாலிகளாக இருக்க வேண்டும் " என்று செருக்காக நினைத்தாள். 

ஒரு நாள் மாலை, அவளுடைய நெருங்கிய தோழி மீரா அவளுடன் தேநீர் அருந்தும் போது,“ ஹாய் கதிரழகி, நீ மிக அழகாக இருக்கிறாய். ஆனால் அழகு தான் முக்கியம் என்று நினைக்கிறீயா?. எனக்குத் தெரியும் நீ:

'மிடித்தவர் களைப்பொருள் மிகுத்தவர் வினைத்தொழில்
   விளைப்ப தெனவே
கொடிப்படர் பொருப்பென இடைக்கிடர் விளைத்தன
   கும்ப வழகும்
தடித்தின டிநிற்கும்இ ரதத்தைநி கர்பொற்கடி
   தடத்தி னழகும்
பொடித்தெழு வெயர்த்திரு முகத்தழ குமுற்றொளி
   பொழிந்தொ ழுகவே.'

வறுமையுற்றவர்களைப் பெருஞ்செல்வர்கள் கண்டு மிகவுந் தொழில் புரிவித்து வருத்துவதுபோல், ஒரு கொடிமேல் தங்குகின்ற இரண்டு மலைகள் போன்று இடைக்குத் துன்பம் விளைக்கின்ற தனக் குடத்தின் அழகையும், ஒரு மின்னலின் அடியிலே நிற்கிற தேரைப்போன்ற அழகிய அல்குலின் அழகையும், பொடிப்பொடியாக எழுகின்ற வியர்வைத் துளிகள் பொருந்திய திருமுகத்தின் அழகையும், ஒன்றாக நிறைவு பெற்று ஒளி ததும்பும் வடிவத்தையும் கொண்டுள்ளாய் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. என்றாலும் உன்னை நாடி வரும் எத்தனையோ இளம் ஆண்களை நீ திரும்பியே பார்க்காமல் தள்ளி வைக்கிறாய்?  - அவர்களில் பலர் நல்லவர்கள், கனிவானவர்கள். என்றாவது ஒரு நாள், உன்னை உண்மையாக நேசிக்கும் ஒருவனை நீ சந்திக்கலாம், ஆனால் அவன் உன் அழகை விட, உன்னை அதிகமாக பார்ப்பாரா என்பதை யோசி ?" என்றாள். 

ஆனால், கதிரழகி, கையைக் காட்டி, அதை நிராகரித்து சிரித்தாள். “ஐயோ, மீரா, அப்பாவியாக இருக்காதே. நான் எவ்வளவு அழகு என்பதில் தன்னை இழந்து, என்னைப் போற்றும் ஒருவனை நான் கண்டுபிடிப்பேன். நீங்கள் அழகாக இருக்கும்போது ஆண்களை கட்டுப்படுத்துவது எளிது. நான் ஏன் அதைவிட குறைவான ஒன்றில் திருப்தி அடைய வேண்டும்?" என்று கேட்டாள்.

ஆண்டுகள் கடந்தன, அவளை ரசித்த ஆண்கள் ஒவ்வொருவராக அவளை விட்டு நகர்ந்தனர். அதில், எப்பொழுதும் ஆழ்ந்த அனுதாபத்தைக் காட்டும் இரக்கமுள்ள இளம் மருத்துவர் அறிவழகன் இருந்தான். கதிரழகி அவனின் கம்பீரத்தையும் அறிவையும் போற்றினாலும், அவனிலும் தன் காதலில் ஒரு சலிப்பாகக் கண்டாள், அவளுடைய கவர்ச்சியான அழகுக்கு அவன் சாதாரணமே என்று கருதினாள். அவன் அவளிடம் தன் காதலை முன்மொழிந்த போது, அவள் வெறுமனே புன்னகைத்து, "நான் உன்னைவிட தகுதியானவனை பெறக்கூடியவள்" என்று பதிலளித்து நிராகரித்தாள். 

பின்னர் கவின், ஒரு நிலையான வேலையுடன், ஒரு கனிவான இதயத்துடன் மற்றும் மற்றவர்களுக்கு உதவுவதில் ஆர்வம் கொண்ட ஒரு பொறியியலாளர் ஆவான். அவன் கனவுகள் எல்லாம் அவளை திருமணம் செய்து அவர்கள் ஒன்றாக, எல்லோராலும் மதிக்கக் கூடிய ஒரு குடும்ப வாழ்வை கட்டியெழுப்புவது ஆகும். ஆனாலும், கதிரழகி முன்போலவே, அவனை  "மிகவும் கனிவானவனாகப் " பார்த்து,  "எனக்கு உலகிற்கு கட்டளையிடக்கூடிய ஒருவன் தான் வேண்டும்," என்று அவனைத் திருப்பிவிட்டாள்.

கூரிய மனமும், வாழ்க்கையின் உண்மையான ஆர்வமும் கொண்ட, மதிப்பிற்குரிய பேராசிரியரான நற்சீலனாலும் கூட அவளது கவனத்தை ஈர்க்க முடியவில்லை. "அவன் ஒரு சிந்தனையாளர், ஆனால் அவனுக்கு பெரியளவு வசீகரம் இல்லை," என்று அவள் நினைத்தாள். அவளின் ஒவ்வொரு மறுப்பிலும், ஒவ்வொரு கோரிக்கை நீக்கத்திலும், அவள் உண்மையான அன்பு மற்றும் தோழமைக்கான மற்றொரு கதவை மூடிக்கொண்டே  இருந்தாள்.

ஆண்டுகள்  உருண்டோடின, கதிரழகி பாராட்டுதலும் அழகும் நிறைந்த தன் சொந்த உலகில் தொடர்ந்து வாழ்ந்தாள். ஆனால் படிப்படியாக, அவள் மாற்றங்களை கவனிக்க ஆரம்பித்தாள். ஒரு காலத்தில் அவளைச் சூழ்ந்திருந்த நண்பர்கள் இப்போது தங்கள் தங்கள் "புரிதலின் போது" உண்மை அறிந்து, உலகம் அறிந்து,  திருமணமாகி, குடும்பங்களை உருவாக்கி, தங்கள் வாழ்வை இன்பமாக மகிழ்வாக புரிதலுடன் அமைத்து வாழ்வதைக் கண்டாள். ஒருமுறை அவள் தன் அழகின் பெருமையால் தற்பெருமை கொண்டு, அதனைத் தன் கையில் எடுத்து, தன்னை நாடி வந்த இளம் ஆண்களை புறக்கணித்து, அவர்களை எதோ ஒரு வகையில் ஏளனம் செய்த அவளின் திவீரம்  மங்கத் தொடங்கியது. அவளது இதயம், ஒரு காலத்தில் பெருமிதமாகவும், நிறைந்ததாகவும் இருந்தது, ஆனால் இப்போது வெற்று மற்றும் நிச்சயமற்றதாக உணர்ந்தது. இந்த நிலையில்‌ அவள் இதயத்தில் அழகு தானேயென்று குடியிருந்த அவளது மாயைத் தோழி, காதலி, சிநேகிதி வெளியே வந்தாள். கதிரழகியின் தோற்றத்திலே புலப்பட்ட சோர்வு அவள்‌ கண்ணை உறுத்துகிறது; "ஏன்  இப்படி இருக்கிறாய்‌?" என்று அந்தரங்கமாகக்‌ கேட்டாள். 

அதற்கு கதிரழகி பதில் சொல்ல எண்ணுகிறாள்‌. வார்த்தை அவளுக்கு வரவில்லை; அவளுக்குத்‌ துக்கம்‌: பொங்குகின்றது. முதல்‌ நாள்‌ வாங்கி வைத்த வெற்றிலை இன்று வாடிப் போயிற்று; அரைத்து வைத்த சந்தனம்‌ உலர்ந்து போயிற்று; இறை வானத்திலே செருகி வைத்த பூ. குருவி கொத்தியதால்‌: அழகு குலைந்து விட்டது. இப்படித்தான் தானும் நாள்ப்பட ஆகிவிட்டேன். "புரிதலின் போது" தான் தன்னை, இளமை அழகின் உண்மையை, அறிந்துவிடேன். இந்தக்‌ குறைகளைத்தான்‌ .. வெளிப்படையாகச்‌ சொல்லலாம்‌ என்று நினைக்கிறாள்‌. எல்லாவற்றையும், அவள்‌ தன்னை அறியாமலே கவிதையில், சேர்த்து தன் இதயத்துக்குப் பாடி விடுகிறாள்‌:

"வாட வெத்தலை வதங்க வெத்தலை
வாய்க்கு நல்லால்லே

நேத்து வச்ச சந்தனப்‌ பொட்டு
நெத்திக்கு. நல்லால்லே

குருவி கொத்தின அரளிப்‌ பூவு
கொண்டைக்கு நல்லால்லே
.
மாமன்‌ வந்து தோப்பிலே நிக்குது
மனசுக்கு நல்லால்லே"

என்றாலும் கடைசி வரியில் "மாமன்‌ வந்து தோப்பிலே நிக்குது மனசுக்கு நல்லால்லே" என்று தன்னைத் தேடி, ஒருவன் காத்து நிற்கிறான், ஆனால் தன் மனசுக்குத் தான் நல்லா இல்லை என்று ஒரு போடு போட்டும் பாடினாள். ஒரு நாள் மாலை, தன் அறையில் தனியாக அமர்ந்திருந்த போது, கடிதங்கள் மற்றும் நினைவுப் பரிசுகள் அடங்கிய பழைய பெட்டியை திறந்து பார்த்தாள் கதிரழகி. அவற்றில், அவள் பகலவனிடமிருந்து ஒரு குறிப்பைக் கண்டாள், அது நேர்த்தியான கையெழுத்தில் எழுதப்பட்டது:

"என் அன்பான கதிரழகிக்கு,

என் இதயத்தில் உள்ள அன்பை, கருணையை நீங்கள் காண்பீர்கள் என்று நம்புகிறேன், ஏனென்றால் நான் உன்னை, மற்றவர்களைப் போல இல்லாமல், மதிப்பாக கருதுகிறேன். ஆனால் உன்னுடன் இருந்தாலும் இல்லாவிட்டாலும், நான் என் வாழ்வை, என் மதிப்புகளுக்கு ஏற்றவாறு என்றும் வாழ்வேன், நீ என்னை ஏற்காவிட்டாலும் நான் அதை புரிந்துகொள்வேன். நீயும் உன் விருப்பப்படி மகிழ்வாக வாழலாம்

அன்புடன்
பகலவன்"

அந்த வார்த்தைகளைப் படித்ததும் அவளுக்குப் பரிச்சயமில்லாத வருத்தம் ஏற்பட்டது. இந்த ஆண்கள், அன்று அவளுக்கு பொருத்தமானவர்கள் இல்லை என்று தன்னாலேயே புரிதலின்றி தள்ளிவிடப் பட்டவர்கள் என்பதை அவள் உணர்ந்தாள். ஆனால் இன்று அவள் அடையாளம் காணத் தவறிய ஒன்றை அவள் கண்டாள்: அது 'புரிதல், இரக்கம் மற்றும் சொந்தமான உணர்வு' ஆகும். 

ஒரு அமைதியான மதியம், அவள் தன் நண்பி மீராவுடன் அமர்ந்து தேநீர் பருகினாள். “மீரா,” கதிரழகி தயக்கத்துடன் தொடங்கினாள், “நான் தவறு செய்துவிட்டேன் என்று நினைக்கிறீர்களா? ஒரு வேளை நான் ... என் பெருமையையும் அழகையும் முன்னிலைப்படுத்தி, அன்பின் வழியின் கதவை மூடிவிட்டனா?”என்று கேட்டாள். 

மீரா பெருமூச்சு விட்டு கதிரழகியின் கையை தன் கையால் வருடினாள். “ஆம், நண்பரே, நீங்கள் செய்தீர்கள். அழகு என்பது ஒரு பரிசு, ஆனால் அது ஒரு நபரை அன்பாக ஆக்குவது அல்ல. நீங்கள் நிராகரித்த பல மனிதர்கள், உங்களை கட்டாயம் நேசித்திருப்பார்கள், அதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை." என்றாள்.  

கதிரழகியின் கண்களில் கண்ணீர் பெருகியது, அவளுடைய பெருமை கரைந்தது. “ஆனால் இப்போது  ... நான் தனியாக இருக்கிறேன் மீரா. முப்பது வயதாகியும், என்னை அன்புடன் பார்க்கும் ஒரு ஆண் கூட இன்னும் இல்லை. நான் யாரையாவது கண்டுபிடிக்க மிகவும் தாமதமாகிவிட்டதா?" என்று கேட்டாள்.  

மீரா ஆறுதலான புன்னகையை வழங்கி அவள் கையை அழுத்தினாள். “கதிரழகி, புரிதல்தான் மாற்றத்தின் முதல் படி. ஆம், ஒருவேளை உங்கள் இளமைப் பருவத்தில் சில புரிதலில்லா காரணங்களால் அது நிறைவேறாமல் போயிருக்கலாம். ஆனால் உங்களுக்கு இன்னும் ஒரு வாய்ப்பு உள்ளது. நீங்கள் உங்கள் இந்த "புரிதலின் போது" ,பெருமையை விட்டுவிட்டு,  உங்கள் அன்பான உண்மையான இயல்பை மக்களுக்கு காட்டினால், உங்கள் தோற்றத்திற்கு மேலாக உங்களை நேசிக்கும் ஒருவரை நீங்கள் இன்னும் காணலாம். அது கட்டாயம் நடக்கும்" என்றாள். 

"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது."

நன்றி 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்] 

471771161_10227691106965971_3081784879130870248_n.jpg?_nc_cat=111&ccb=1-7&_nc_sid=127cfc&_nc_ohc=7jDDDS7hKkoQ7kNvgHN_mM9&_nc_zt=23&_nc_ht=scontent-man2-1.xx&_nc_gid=AqPQTXDFb70d_t9ISwp1A8u&oh=00_AYAoL5rHPWdUB2_GGDIqESR-oPjoj4nlq-uu1oFlmthZLw&oe=6779BD67

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.