Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
"உறவு சொல்ல ஒருத்தி"
 
 
இலங்கை உள்நாட்டுப் போர் 27 வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்களுக்கு கடும் துன்பத்தையும், சூழல், பொருளாதார ரீதியாக நாட்டிற்கு இழப்பையும் ஏற்படுத்தி 80,000–100,000 க்கு மேற்பட்ட மக்கள் இறப்புக்கும் காரணமாகியது. இரு தசாப்தங்களாக போர் மற்றும் தோல்வியுற்ற நான்கு சமாதானப் பேச்சு வார்த்தைகள், மற்றும் 1987 - 1990 காலப்பகுதியில் இலங்கையில் நிலை கொண்ட இந்தியப் படைகளின் தோல்வியில் முடிந்த நிகழ்வு என்பவற்றின் பின் 2005 பிற்பகுதியில் முரண்பாடு ஆரம்பமாகி, யூலை 2006 இல் மீண்டும் வெடித்தது. புளியங்குளத்திலும் முகமாலையிலும் மணலாறிலும் அதன் நாலாபுறமும் அனல்பறக்கும் சண்டைகள் அடிக்கடி நடந்தன. வன்னி முழுவதிலும் இப்படியான நிகழ்வுகள் நாளாந்தம் நடக்கத் தொடங்கின. கிளிநொச்சியிலும், முல்லைத்தீவின் முள்ளியவளையிலும் விசுவமடுவின் தேராவிலிலும் நாளாந்தம் சோக இசைகள் இறப்பினை தெரிவித்துக்கொண்டு இருந்தன.
 
இந்த சூழலில் தான், அங்கு ஒரு மருத்துவமனையில் சத்திரசிகிச்சை மருத்துவராக பணிபுரிந்து வந்த டாக்டர் அகத்தியன் குடும்பத்துக்கு கவலை மேல் கவலை வரத் தொடங்கியது. தங்கள் ஒரே மகன், தங்கள் உறவின் சின்னம், உயர் வகுப்பில் படித்துக்கொண்டு இருக்கும் தூயவனை எப்படியாவது, வெளியே அனுப்ப வேண்டும். என்றாலும் தம்மால் முடிந்த அளவு இன்னும் சில மாதங்களோ, ஆண்டுகளோ இருந்து மனித அவலங்களுக்கு துன்பங்களுக்கு செய்யக்கூடிய ஆறுதலான மருத்துவ உதவிகளை வழங்கவேண்டும் என்று முடிவு எடுத்தார்கள்.
 
டாக்டர் அகத்தியனின் மருத்துவ மனை அமைந்த கிராமத்தின் பெரிய வயல்க்காரர் தான் சின்னத்தம்பி முதலியார். அவரின் அப்பா, அம்மா தான் அகத்தியன் முதல் முதல் இந்த கிராமத்துக்கு டாக்டராக சித்தியடைந்து வந்ததில் இருந்து, அவரின் திருமணம் மற்றும் தூயவனின் பிறப்பு மற்றும் எல்லா குடும்ப நிகழ்வுகளிலும் நேரடியாக பங்குபற்றியவர்கள். அதுமட்டும் அல்ல, சின்னத்தம்பி முதலியார் ஓரளவு ஒத்த வயது என்பதால், இருவரும் நெருங்கிய நண்பர்களாகியதுடன், இருவரின் மனைவிகளும் தோழிகளும் ஆவார்கள்.
 
சின்னத்தம்பி முதலியாரின் கடைசி மகள் இப்பொழுது ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டு இருக்கிறாள். அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. அவளின் பெயர் சிற்பிகா. அவள் படிப்பிலும் நல்ல சூரி. அதனால் தானோ என்னவோ டாக்டர் அகத்தியனுக்கும் அவரின் மனைவிக்கும் அவளில் எந்தநேரமும் ஒரு கண். சிலவேளை சின்னத்தம்பி முதலியாரிடமோ அல்லது அவரின் மனைவியிடமோ, சிற்பிகா தான் எமக்கு 'உறவு சொல்ல ஒருத்தி' யாக வரவேண்டும் என்று கூறுவதும் உண்டு. ஏன், ஒரு முறை சிற்பிகா, எதோ பாடத்தில் விளக்கம் கேட்க தூயவனிடம் 'அண்ணா, இதை ஒருக்கா விளங்கப் படுத்துகிறீர்களா?' என்று கேட்க, அவளை கட்டி அணைத்த அகத்தியனின் மனைவி, ' நீ எங்கள் மருமகள், என் மகனுக்கு 'உறவு சொல்ல ஒருத்தி' , அண்ணா இல்லை என்று கன்னத்தில் தட்டி செல்லமாக கூறினாள்.
 
"இடைவனப்பும், தோள்வனப்பும், ஈடில் வனப்பும்
நடைவனப்பும் நாணின் வனப்பும் – புடைசால்
கழுத்தின் வனப்பும் வனப்பல்ல அவளின்
ஒழுக்கமான பேச்சும் செய்யலுமே வனப்பு"
 
இடையின் அழகோ, தோளின் அழகோ அல்லது ஈடு இல்லாத வேறு அழகுகளோ, நடை அழகோ,நாணத்தினால் ஏற்படும் அழகோ, கழுத்தின் அழகோ உண்மையான அழகு ஆகா , சிற்பிகாவின் இனிய கொஞ்சல் பேச்சும், உண்மையான பாசமிகு நடத்தையுமே அழகு என்பது அகத்தியனின் மனைவிக்கு தெரியாதது அல்ல. அது தான் அவளை தங்கள் உறவுக்குள் எடுக்க இப்பவே திட்டம் போட்டு விட்டாள். என்றாலும் அவளின் அழகும் அவளை மெய்மறக்க வைத்துதான் உள்ளது. அப்படி என்றால் தூயவனுக்கு எப்படி இருந்து இருக்கும்? பொதுவாக தன் பெருமைக்கு களங்கம் ஏற்பட்டால், பிறரைக் காண நாணுவார். ஆனால் பெண்களுக்கோ அப்படி அல்ல?
 
"நிலத்திற் கணியென்ப நெல்லும் கரும்பும்
குளத்திற் கணியென்ப தாமரை - பெண்மை
நலத்திற் கணியென்ப நாணம்''
 
நிலத்துக்கு அழகு தருவது நெல்லும் கரும்பும். குளத்துக்கு அழகு தருவது தாமரை. பெண்மையின் பெருமைக்கு அழகு தருவது நாணம். இதை சிற்பிகா அறிந்தாலோ என்னவோ, அவளில் ஒரு மாற்றம் தெரிந்தது. கட்டாயம் அவளுக்கு வயலும் அதனுடன் சேர்ந்த நெல்லு, கரும்பு, குளம், தாமரையும் தெரிந்து இருக்கும். ஆனால் வெட்கம், இன்றுதான் அவளை சூழ்ந்தது போல காணப்பட்டாள். அகத்தியனின் மனைவியை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டு, மெல்ல மெல்ல நடந்து தூயவனின் அறைக்கு போனாள்.
 
காதல் என்ற ஒற்றை வார்த்தையில்தான் இன்றைய இளைய சமூகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. அதில் தூயவனும் ஒருவன் தான். தாய் சிற்பிகாவுடன் கதைத்தது அவனின் காதிலும் விழுந்தது. எனவே அவன் கதவையே பார்த்துக்கொண்டு இருந்தான். எத்தனையோ தடவை அவள் வந்து போய் இருக்கிறாள். இது ஒன்றும் புதிது அல்ல. ஆனால் அவனுக்கு எனோ இது, அவள் தன்னவளாக வருவது, புதிதாகவே இருந்தது. காதல் என்பது மனிதனின் உடலில் தூண்டப்படும் ஒரு உணர்வு. அவன் அதில் தோய்ந்தே இருந்தான். உண்மையாக காதலிக்கும் போது ஆண்களுக்கு தன் காதலி தேவதைப் போல் தான் காட்சி அளிக்கிறாள். அவளின் ஒவ்வொரு அசைவும் ஓராயிரம் கவிதைகளை அவனுக்கு சொல்கிறது, அவளின் நெருக்கம் சுகமாக இருக்கிறது, சிறிய பிரிவும் பெரிதாக வலிக்கிறது. கோபமும் சின்ன ஊடலும் கூட சுவையாகத் தான் இருக்கிறது. அப்படித்தான் அவன் இருந்தான்.
 
"ஒடுங்கு ஈர் ஓதி ஒள் நுதற் குறுமகள்
நறுந் தண் நீரள்; ஆர் அணங்கினளே;
இனையள் என்று அவட் புனை அளவு அறியேன்;
சில மெல்லியவே கிளவி;
அனை மெல்லியல் யான் முயங்குங்காலே."
 
அழகாக ஒடுங்கிய அடர்த்தியான கூந்தலை உடையவள், பிறை போல் வளைந்த வாசனை நெற்றியை உடைய சின்னப் பெண், சுவையான குளிர்ந்த நீரைப் போன்றவள் என் சிற்பிகா, அவளைப் பிரிந்தால் வருத்தம் தருகிறாள், அவள் இப்படி பட்டவள் தான் என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை , அவளைப் பற்றி சொல்ல வார்தையில்லை. கொஞ்சம் தான் பேசுகிறாள், ஆனால் திரும்ப திரும்ப அவள் பேச்சை கேட்க வேண்டும் என்று தோணுகிறது, அணைக்கும் போது மென்மையான இலவம் பஞ்சால் செய்யப்பட்ட தலையணை போல் மென்மையாக இருக்கிறாள்.
 
காதல் பித்தம் எறியவன் போலத்தான் இருக்கிறான். முன்பு எத்தனை தடவை அவள் இவனுடன் பேசியிருப்பாள். எத்தனை தடவை இருவரும் விளையாட்டாக கட்டிப்பிடித்து அணைத்து இருப்பார்கள். அது என்ன புதுமை இன்று? ஏன் அவளும் விதிவிலக்கல்ல. காதல் ஒரு காற்றைப் போல, அதை உணரத்தான் முடியும், பார்க்க முடியாது என்பார்கள். அது முகிழ்வதென்னவோ குறுகிய காலத்தில்தான். ஆனால் பல படிகளைத் தாண்டித்தான் காதல் ஆழம் அடைகிறது. முழுமை பெறுகிறது. ஆரம்பத்தில் வரும் உணர்வு மட்டுமே காதலாகாது. என்றாலும் இது அவனின் தாயே முன்மொழிந்தது. அவள் முகம் மலர்ந்தது. அவள் அவனின் கதவைக்கூட இன்று தட்டவில்லை. நேரடியாக உள்ளே போனாள். எதோ தனது அறைக்கு போவது போல.
பல நேரங்களில் பெற்றோர் கண்டித்தாலும் காதல் வயப்படாத வரையில் பெண் குழந்தைகள் ஆண்களுடன் இணைந்து விளையாடுவதை நிறுத்துவது இல்லை. ஆனால் இன்று அவளின் நிலை வேறு. அது தான் என்னவோ, அவள் தயங்கி தயங்கி அவன் அருகில் சென்றாள். அவனுடைய ஒரேயொரு சொல்லுக்கு ஏங்குகிறவளாக, எதை கேட்க வந்தாள் என்பதை மறந்து அவனின் முன், அவனின் கண்களை பார்த்தபடியே நின்றாள். அவனும் அவள் கண்களை பார்த்தான். இருவரும் பேசவே இல்லை. கொஞ்ச நேரத்தால், 'நீ தான் எனக்கு உறவு சொல்ல ஒருத்தி, ஒருத்திமட்டுமே' என்று கூறியபடி அவளை அணைத்தான். இது அவர்களின் பிஞ்சு காதலின் ஆரம்பமே!
 
அதன் பின் இருவரும் கொஞ்சம் தயக்கங்களுடன் சந்தித்து பாடங்களுடன், தம் புது உணர்வுகளையும் பகிர்ந்து கொண்டாலும், தூயவன் வெளிநாடு செல்வது உறுதியாகிவிட்டது. இருவரும் தம்மிடையில் உறுதியை பகிர்ந்து கொண்டு, தூயவன் தன் உயர்வகுப்பையும் பல்கலைக்கழகத்தையும் அங்கு தொடர, எல்லோரிடமும் விடை பெற்று புறப்பட்டான்.
 
தூயவன் சென்று சில மாதங்களில், வன்னியில் போர் கடுமையாக, டாக்டர் அகத்தியன் குடும்பமும் கொழும்புக்கு மாற்றம் கிடைத்து சென்றுவிட்டது. ஆனால் சின்னத்தம்பி முதலியார், தனது வயல் மற்றும் அதை சார்ந்த நிறுவனங்களை நிர்மாணிப்பதால், உடனடியாக அங்கிருந்து வெளியே போக அவருக்கு மனம் வரவில்லை. ஆனால் அது எந்தப் பெரிய பிழை என்பதை அவர் உணர சில மாதங்களே தேவைப்பட்டது. ஆமாம், அதன் பின் வெளியே போகக் கூடிய வாய்ப்பு முடங்கிவிட்டது. இறுதியில் உள்நாட்டு அகதிகளாக வன்னியிலேயே இடம் பெயர்ந்தார்கள். அவர்களின் வீடு, நிறுவனங்கள், வயல்கள் எல்லாம் ஆர்மி முகமாகவும் மாறி விட்டது.
 
குறிப்பிட்ட இடத்தில் மக்கள் இடப்பெயர்வு அடைந்தால் அந்த இடங்களில் எந்த விதமான தாக்குதல்களும் நடத்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, மக்கள் ஒவ்வொருவரும் தன்னுடைய பூர்வீக இடங்களை விட்டுவிட்டு அந்தப் பாதுகாப்பு வளையத்திற்குள் இடம் பெயர்வு செய்தனர். அப்படித்தான் சின்னத்தம்பி முதலியார் குடும்பமும் அங்கு போய் இருந்தது. என்றாலும் நாளடைவில் அதுவும் பாதுகாப்பு அற்றதாகவே மாறியது. ஒரு நாள் குண்டு தாக்குதலில் சிற்பிகாவைத் தவிர அவரின் குடும்பம் அங்கு பலியானது. சிற்பிகாவுக்கு காயங்கள் என்றாலும் உயிருக்கு ஆபத்து வரவில்லை. வன்னி மருத்துவமனையில் சில மருத்துவர்கள், நல்லகாலம் இன்னும் குண்டு மழை மற்றும் ஆயுதத் தாக்குதல் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அங்கே பாதிக்கப்பட்ட, காயம்பட்ட மக்களுக்கு பேருதவியைச் செய்தனர். எனவே சிற்பிகாவும் அங்கு சேர்க்கப்பட்டார்.
 
அவள் இன்னும் தூயவனை மறக்கவில்லை. அவன் இப்ப பாதுகாப்பாக வெளியே இருக்கிறான் என்ற எண்ணம் மகிழ்வையும் கொடுத்தது. இதற்கிடையில் சின்னத்தம்பி முதலியார் குடும்பத்தின் இறப்பை கேள்விப்பட்ட டாக்டர் அகத்தியன், ஒருவாறு, ஆர்மியின் அனுமதியுடன் அங்கு வந்தார். அவர் தனது செல்வாக்கால், ஒருவாறு சிற்பிகாவை கொழும்புக்கு பல இடையூர்களைத் தாண்டி கூட்டி சென்றார்.
 
இப்ப முதலியார் சின்னத்தம்பியினதும் டாக்டர் அகத்தியனினதும் ஒரே "உறவு சொல்ல ஒருத்தி" யாக சிற்பிகா, சாதாரண வகுப்பில் கொழும்பில் படித்துக்கொண்டு இருக்கிறாள்.
 
 
நன்றி
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
408753877_10224396509403091_6091318389233724169_n.jpg?_nc_cat=102&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=4uhr_clRs7oQ7kNvgHW_orr&_nc_zt=23&_nc_ht=scontent-lhr6-1.xx&_nc_gid=A8r5GzaaaV5yf0wjlpPU2tJ&oh=00_AYBhouW7d6PrUQHcoiQsn4D9fnKyt63aN5u5E0R8qhiKDA&oe=677EA4D9  409646370_10224396511283138_7379975072529257196_n.jpg?stp=dst-jpg_p526x395_tt6&_nc_cat=108&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=298Rj-7v7tQQ7kNvgE2Dor3&_nc_zt=23&_nc_ht=scontent-lhr8-1.xx&_nc_gid=A8r5GzaaaV5yf0wjlpPU2tJ&oh=00_AYD3PB4HHtf4yNkJ6KtNZgQ40nS54kmdBVP7H2bZ3RMuTA&oe=677E980E
 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.