Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"இளமொட்டு மனது"

 

யாழ்ப்பாண அரசு காலத்தில் தென்மராட்சியின் நிலப்பரப்பு மிகப் பெரியதாக இருந்தது. அப்பொழுது 'கச்சாய்த் துறைமுகம்' முக்கிய இடத்தை பெற்றிருந்தது. அப்படியான யாழ்ப்பாணத்தின் பசுமையான வயல்களின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் கச்சாய் என்ற பண்டைய கிராமத்தில், கண்ணகை அம்மன் கோவிலுக்கு அருகில் முத்துச்செல்வி என்ற இளம் பெண் வசித்து வந்தாள். அவள் அன்பின்  உருவகமாக இருந்ததுடன் அவளுடைய ஒளிரும் கண்கள் ஒரு குழந்தையின் அப்பாவித்தனத்தை பிரதிபலித்தும், அதை உறுதிப்படுத்துவது போல அவளுடைய புன்னகையும் நடத்தையும் கூட  நிறைந்திருந்தது. ஆயினும்கூட, அவளுடைய கண்கொள்ளா வெளிப்புற அழகுக்குக் கீழே ஒரு துளிர்விட்ட பூவைப் போல, இளமைப் பருவத்தின் சிக்கல்களால் கறைபடாத ஒரு மனமும் அவளுக்குள் இருந்தது.

பொதுவாக கிராமங்களில் உள்ள பெண்களுக்கு வெளியே செல்லவோ, நான்கு பேரிடம் நான்கு விடயங்களைப் பற்றிப் பேசவோ, பகிர்ந்துகொள்ளவோ சூழல் குறைவு. இளமைக்காலத்தில், கூடுதலாக கிராமபாடசாலையில் படிப்பு, கிராமத்துக்கென இன்னும் மிஞ்சி இருக்கும் விளையாட்டில், பொழுதுபோக்கில் ஈடுபடுதல், பின் வளர்ந்ததும் வீட்டு வேலை, குடும்ப தொழிலுக்கு உதவியாக இருத்தல், அதிகபட்சம் பக்கத்து வீட்டுப் பெண்களுடன் பேசுவது மற்றும்  விசேஷங்களுக்குச் வெளியே செல்வது தாண்டி, உரையாடல் வாய்ப்புகள் அவர்களுக்கு, நகர்ப்புற  பெண்களுடன் ஒப்பிடும் பொழுது, மிகக் குறைவு என்றே கூறலாம். அதனால் அவர்களிடம் ஒரு அப்பாவித்தனம் குடிகொண்டு இருப்பதுடன், மக்களை எளிதில் நம்ப வைக்கிறது. 

"இளமொட்டு மனது, இதழ் விரிக்காத கனி,
உலகம் அறியாதது, காற்றின் மென்மையிது;
உறவுகள் எல்லாம், சின்னஞ்சிறு புன்னகை,
அனுபவம் இல்லாமல், நம்பிக்கைதான் சொல்லும்!"

முத்துச்செல்வி, கடின உழைப்பாளியும் பணிவு மற்றும் விடாமுயற்சியின் விழுமியங்களை தன்னகத்தே கொண்ட,  தனது விதவைத் தாயின் பாதுகாப்புச் சிறகுகளின் கீழ் வளர்ந்தாள். அவளின் குடிசை கடல்நீரேரிக்கு அருகே இருந்தது.  

கச்சாய்  இறங்குதுறையும்,  அது  சார்ந்த‌  பிரதேசத்தையும் தான்  “கடல்நீரேரி ” என்கிறார்கள். உள்முகமாக  நீண்டிருந்த கடல் நீரேரியில் வரிசையாக மீன்பிடிப் படகுகள் பொதுவாக  நிறுத்தப்பட்டிருக்கும். அங்கே நள்ளிரவுக்கு அப்பால் மீன் பிடிக்கச் சென்றவர்கள், அதிகாலையில்  கரை வந்து வலைகளில் இருந்து மீன்களை அகற்றுவார்கள். அந்த இறங்குதுறையில் அரைச்சுவர் கொண்ட மீன் ஏலம் விடும் விற்பனைத்தளமும் அமைந்திருக்கும். முத்துச்செல்வி அங்கு பாடசாலைக்கு போகுமுன் ஒன்று ஒன்றரை மணித்தியாலம், பலவேளைகளில் தாயுடன் சேர்ந்து உதவிசெய்வாள்.  

இளமைப் பருவத்தில் முத்துச்செல்வி, மலராத, அனுபவம் அற்ற இளமொட்டு மனதைக் கொண்டு இருந்தபோதிலும், தனது படிப்பை தனித்துவத்துடன், யாழ் கச்சாய் தமிழ் கலவன் பாடசாலையில் முடித்து, அண்மையில் யாழ்ப்பாண நகர அலுவலகத்தில் உதவி அலுவலகக் காப்பாளராக முதல் வேலையைப் பெற்றாள். இது, அவளது தாய்க்கும் அவளுக்கும் பெருமை மற்றும் சிறந்த எதிர்காலத்திற்கான நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக இருந்தது. வீட்டின் வாசல் படியில் இருந்தபடி, அவள் அந்த வேலை நியமனக் கடிதத்தை திருப்ப திருப்ப வாசித்தாள். 

அதேநேரத்தில், அவளுக்குச் சென்ற படகுப் பொங்கல் தினம் ஞாபகம் வந்தது. அன்று தென்மராட்சி-கச்சாய் துறையூர் பகுதியில் கச்சாய் கடற்தொழில் சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழர் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. அதில் கச்சாய் கலைமகள் சனசமூக நிலையத்திற்காக அவள் பங்களிப்பு செய்து வெற்றிக்கொடி நாட்டியதை அவள் இன்னும் மறக்கவில்லை. அதுதான் அதை விட்டுப் போவதை எண்ணி மீண்டும் மீண்டும் அந்தக் கடிதத்தை வாசித்தாள். 

"இதழ்களில் வழிந்தோடும் கனி ரசம்
அதில் முத்துக்குளிக்கும் பல் வரிசை
கண்டாங்கி சேலை தங்கும் இடை 
அதில் கரம்பட வாலிபர் வரிசை!" 


"மேகம் வரைந்த இரு விழிகள் 
அதில் கவர்ச்சி தரும் மின்னல்கள்
தலையில் தொடுத்த மலர் மணம்வீசும் 
அதில் தேன்குடிக்க வண்டு வலம்வரும்!"

அவள் மனதுக்குள் ஒரு போராட்டம், இனி இப்படியான அவளின் கிராம வாழ்க்கை முற்றுப்புள்ளி ஆகிவிடுமோ என்று! மரங்களும், காற்றும் மனதுக்கு இதமாக இருக்கும் கிராமத்தை விட்டுப் போவது சங்கடம் என்றாலும், வீட்டில் இருந்தே கோவிலின் கோபுரம் பார்க்கலாம் என்பதால், அந்த திசை நோக்கி விழுந்து கும்பிட்டுவிட்டு, தாயை கட்டி அணைத்து விடைபெற்று, பேரூந்து நிலையத்துக்கு, முதல் நாள் வேலைக்கு நடை கட்டினாள். 

பேருந்தின் சாளரமூடாக வெளியே பார்த்தபடி அவள் யாழ்ப்பாண நகரை நோக்கி சென்றாள். அவளின் கிராமத்திலே இருக்கிற கவர்ச்சியை அவளால் இங்கே, நகரத்திலே பார்க்கமுடியவில்லை. செடி கொடியிலே இருந்து, மாடு கன்றும் சரி, மக்களும் சரி, கிராமத்தில்  ஒரு விதமான இயற்கை எழிலுடனும் வளத்துடனும் கண்டவளுக்கு, இங்கே ‘டவுனில்’ எல்லாம் பூச்சுத்தான் போல் இருந்தது. எதிலும் இயற்கை எழில் தங்கி இருப்பது போல் அவளுக்குத் தெரியவில்லை. அங்கே   வீட்டின் கூடத்தில், கண்ணாடிப் பாத்திரத்தில், காகிதப் பூங்கொத்தைச் செருகி வைத்து அழகுபார்க்கிற காட்சிகளைப் பார்த்தாள். தனக்குள் சிரித்தபடி, அவள் பேருந்தால் இறங்கி யாழ்ப்பாண நகர அலுவலகத்துக்கு நடந்து போனாள்.

யாழ்ப்பாண நகர அலுவலகத்தில் முத்துச்செல்வியின் வருகை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவளது அழகும், மென்மையான இயல்பும் அலுவலகத்தின் அன்றைய பேச்சாக இருந்தது. இளம் மணமாகாத ஆடவர்கள் தங்களுக்குள் ஏக்கத்துடன் கூடிய ஒருவித புன்னகையை பரிமாறிக் கொண்டனர், அதே நேரத்தில் திருமணமான ஆண்களின் கண்களும் அவளைக் களவாக மேய்ந்து அதில் ஒரு புத்துணர்ச்சியை தங்களுக்குள் ஏற்படுத்திக்கொண்டனர். அவளின் வாழ்க்கை மற்றும் குணாதிசயத்தைப் பற்றி தாங்கள் தாங்களாகவே கற்பனைசெய்து அலுவலக காற்றை அந்த வதந்திகள் மூலம் நிரப்பினர். 

"மண்ம டந்தையர் தம்முளும் வாசவன் உறையும்
விண்ம டந்தையர் தம்முளு நிகரிலா விறல்வேற்
கண்ம டந்தைதன் கருங்குழல் அருத்ததிக் கறபிற்
கெண்ம டங்குகற் புடையள்இந் திரையினும் எழிலாள்."

பூவுலகப் பெண்களினும் வானுலகப் பெண்களினும், தனக்கு ஒப்பில்லாத வெற்றி பொருந்திய வேல் போன்ற கண்களையுடைய முத்துச்செல்வியானவள், குளிர்ந்த கருநிறக் கூந்தலையுடைய அருந்ததியின் கற்பினைக்காட்டிலும் எட்டுமடங்கு கற்பு உடையவள் திருமகளினும் அழகு வாய்ந்தவள் என்று, இப்படி எல்லாம் ஆளுக்கு ஒரு விதமாக கிசுகிசுத்தனர். ஆனால் முத்துச்செல்வி, தன்னைச் சுற்றியிருந்த கிசுகிசுக்களைக் கண்டுகொள்ளாமல், பொருட்படுத்தாமல் இருந்தாள்.

ஆனால், தன்னை, தன் திறமையை நிரூபிக்கும் ஆர்வத்தில் மட்டுமே ஒரு மாணவனைப் போல அக்கறையுடன் தன் கடமைகளை அங்கு நிறைவேற்ற அணுகினாள். கோப்புகளை ஒழுங்குபடுத்துவது, தேநீர் தயாரிப்பது அல்லது செய்திகளை வழங்குவது என எதுவாக இருந்தாலும், அவள் தனது ஆண் சக ஊழியர்களின் கடைக்கண் பார்வைகளை அலட்சியம் செய்தவாறு, தன் மனம் கலங்காமல் விடாமுயற்சியுடன் வேலை செய்தாள்.

ஆனால் அவளுடைய அமைதியான, அப்பாவித்தனமான நடத்தையால் தைரியமடைந்த சில இளைஞர்கள், முகத்துதி மற்றும் பரிசுகளால் அவளை வெல்ல முயன்றனர். அதேபோல திருமணமானவர்கள் மிகவும் விவேகமானவர்களாக, "நட்புடன் கூடிய ஆலோசனை" மற்றும் அவளுக்கு தேவையற்ற உதவிகளை, வழிய வழியச் சென்று  வழங்குகினர். மூத்த குமாஸ்தாக்களில் ஒருவரான, மிஸ்டர் ராகவன் என்ற நடுத்தர வயது மனிதர், தன்னை "நம்பினால்" பதவி உயர்வுகள் மற்றும் சலுகைகள் கிடைக்கும் என்று முத்துச்செல்விக்கு சூசகமாகச் சொல்லி தந்திரமாக அவளின் நட்பை பெற முயன்றான்.

"பூக்காத விதைகளுக்கு அழுத்தம் தெரியாது
அவை பூக்கும் முன் மழையைத் தேடும் 
தன் இனிமையை மறைக்க முடியாமல் 
இளம் மொட்டின் இதழ்கள் கூச்சப்படும்  
சிதறிய கனவுகளுடன் அது காற்றை நம்பும் 
அதில் அழிவதும் உண்டு வளர்வதும் உண்டு!"  
["Unbloomed seeds, unaware of pressure,
Seek the rain before they flower;
The young bud’s petals,
Too shy to hide their sweetness,
Trust the wind with scattered dreams;
Some may fall, some may thrive!"]

ஒருவர்மேல் எடுத்தவுடன் கொள்ளும் முத்துச்செல்வியின் நம்பிக்கையான குணம் அவளை அடிக்கடி சங்கடமான சூழ்நிலைகளில் தள்ளியது. ஒரு மதியம், ஒரு இளைய அதிகாரி, கிஷோர், அவளை மதிய உணவுக்கு வருமாறு அழைத்தான். இது ஒரு நட்பான சைகை என்று அவள் நினைத்து, சந்தேகம் ஒன்றும் இல்லாமல்  ஒப்புக்கொண்டாள். ஆனால் அவர்கள் இருவரும் ஒன்றாக சாப்பிடும் பொழுது, அவன் உரையாடலை தனிப்பட்ட விடயங்களுக்கு  மாற்ற எத்தனித்தான். அவளுடைய குடும்பம் மற்றும் எதிர்காலத் திட்டங்களைப் பற்றிய அவனது கேள்விகள் அவளைக் கவலையடையச் செய்தன, அவள் விரைவாக அவனிடம் இருந்து விடைபெற்று விலகிச் சென்றுவிட்டாள்.

நாட்கள் வாரங்களாக மாற, முத்துச்செல்வி அலுவலகத்தில் ஒருவித பதற்றம் நிலவுவதை கவனிக்க ஆரம்பித்தாள். பெண்கள் அவளைப் பற்றி கிசுகிசுத்தார்கள், அங்கு ஆண் அதிகாரிகள் அவள் மேல் கொண்ட தனிப்பட்ட கவனத்தைப் பார்த்து பொறாமை கொண்டனர், அதே நேரத்தில், ஆண்கள் அவளின் உலகம் அறியாத இளமொட்டு மனதைத் தாங்கள் எண்ணங்களுக்கு சாதகமாக்கும் முயற்சியில் தைரியமாக பலவழிகளில் ஈடுபட்டனர். அவளின் அழகு அவர்களின் கண்களிலும் இதயத்திலும் ஏதேதோ அவர்களுடன் பேசிக்கொண்டு இருந்தது. 

"வஞ்சிக்கொடி போல இடை
அஞ்சத்தகு மாறுளது
நஞ்சுக்கிணையோ, அலது
அம்புக்கிணையோ, உலவு
கெண்டைக்கிணையோ கரிய
வண்டுக்கிணையோ, விழிகள்
மங்கைக்கிணை ஏதுலகில்
அங்கைக்கிணையோ மலரும்?"

'இத்தனை மெல்லிய இடையா’ என்று அவர்களுக்குள் ஒரு அச்சம் வாட்டுவதை அவர்கள், அவளைப் பார்க்கும் விதத்தில் தெரிந்தது. அது மட்டுமா, கண்களுக்கு உவமையாக என்னவெல்லாம் கற்பனையில் வருமோ அத்தனையையும் ஒவ்வொருவரும் மாற்றி மாற்றி ஒப்பிட்டுப் பார்த்தார்கள். பின்னர்,  உனக்கு இணையாக எதையும் சொல்ல முடியாது’ என்று களைத்துப்போய் அவளைப் பார்த்து முழித்தார்கள். அதனால் அவள், தனது அப்பாவித்தனத்திற்கும் உலகின் சிக்கல்கள் பற்றிய அவளது இன்றைய வளர்ந்து வரும் விழிப்புணர்விற்கும் இடையில் தடுமாறி, அலுவலகத்திற்கு புறம்பான விடயங்களில், மற்றவர்கள் மீது தனது ஆர்வத்தைக் குறைத்துக் கொண்டாள்.

என்றாலும் அவளது ஒரே ஆறுதலாக, நம்பிக்கை கொண்டவராக, அண்மையில் அலுவலகத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட இளம் கம்பீரமான அதிகாரி திரு. அரவிந்த் இருந்தான். மற்றவர்களைப் போலல்லாமல் அரவிந்தன் அவளை மரியாதையுடனும், அவளின் தொழிலுக்கு ஏற்ற கண்ணியமான நடத்தையுடனும் நடத்தினான். அவனது கூர்மையான புத்திசாலித்தனம் மற்றும் கனிவான நடத்தை, அவனை மற்றவர்களிடம் இருந்து அவளுக்கு வேறுபடுத்தியது.

ஒரு நாள், வழக்கமான அலுவலக விடயங்கள் பற்றிய ஒரு சந்திப்பின் போது, முத்துச்செல்வி தன் சக ஊழியர்களுக்கு நடுவே நின்று கொண்டிருந்தபோது அவளின் அசௌகரியத்தை [அமைதியின்மையை ] அரவிந்தன் கவனித்தான். பின்னர், அவன் அவளைத் தனது அலுவலகத்திற்கு அழைத்து, எல்லாம் சரியாக இருக்கிறதா என்று மெதுவாக கேட்டான். அப்பொழுது, 

"பொன்னின் சோதி, போதின் நாற்றம், பொலிவேபோல்
தென் உண் தேனின் தீம் சுவை, செம் சொல் கவி இன்பம்,
கன்னி மாடத்து உம்பரின் மாடே களி பேடோடு
அன்னம் ஆடு முன் துறை கண்டு ஆங்கு அயல் நின்றார்"

தங்கத்தின் பிரகாசம், பூவின் நறுமணம், வண்டுகள் அருந்துகின்ற தேனின் இனிமையான ருசி, சிறந்த சொற்களைத் தேர்ந்தெடுத்து எழுதிய நல்ல கவிதை தரும் இன்பம்… இவை எல்லாவற்றையும் ஒன்றாகத் திரட்டியது போன்று, அன்னங்கள் சேர்ந்து விளையாட, அவற்றின் நடுவே ஓர் உருவமாக, அவள் தனக்கு முன் தோன்றினாள் போல அவனுக்கு இருந்தது. அவனுடைய உண்மையான அக்கறை அவளைத் தொட்டது, முதல் முறையாக, அவள் தான் எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றி அவனிடம் சொன்னாள்.

அரவிந்தன் அவள் சொல்லுவதை எல்லாம் கவனமாகக் கேட்டான். “உன் தகுதியினால் தான் நீ இங்கு வந்திருக்கிறாய், முத்துச்செல்வி,” என்றான். "உங்களை வேறுவிதமாக உணர எவரையும் அனுமதிக்காதீர்கள். யாராவது எல்லை மீறினால், உங்களுக்காக எழுந்து நிற்க உங்களுக்கு என்றும் முழு உரிமை உண்டு. நினைவில் கொள்ளுங்கள், மற்றும் நான் உங்களுக்கு ஆதரவாக என்றும் இருப்பேன்." என்றான். 

"மையோ, மரகதமோ, மறி
     கடலோ, மழை முகிலோ,
ஐயோ, இவன் வடிவு!’ என்பது ஓர்
     அழியா அழகு உடையான்."

கண்ணுக்கு இடக்கூட்டிய மையோ; பச்சைநிற ஒளிக்கல்லாகிய மரகதமோ; கரையின்கண் அலைகளால் மறிக்கின்றகடலோ; பெய்யும் கார் மேகமோ; ஐயோ தன்உருவம் என்று சொல்லப்படுவதாகிய ஒப்பற்ற அழியாத அழகினை உடையன் இவன் என்றாள் தன் மனதுக்குள் முத்துச்செல்வி. அவனது ஆதரவால் உற்சாகமடைந்த முத்துச்செல்வி தன்னை உறுதிப்படுத்திக் கொள்ளத் தொடங்கினாள். தேவையற்ற அழைப்புகளை பணிவுடன் ஆனால் உறுதியாக நிராகரிக்கக் கற்றுக்கொண்டாள், தகாத கருத்துக்களைப் புறக்கணித்தாள், மேலும் புது உறுதியுடன் தனது பணியில் கவனம் செலுத்தினாள்.

காலப்போக்கில் முத்துச்செல்வியும் அரவிந்தனும் அன்பான நட்புறவை வளர்த்துக் கொண்டனர். அலுவலக சவால்கள் முதல் யாழ்ப்பாணத்தின் கலாச்சாரம் மற்றும் மரபுகள் வரையிலான அவர்களது பகிரப்பட்ட உரையாடல்கள் அவர்களை மேலும் மேலும் நெருக்கமாக்கியது. அரவிந்தன் அவளது எளிமை மற்றும் நெகிழ்ச்சித்தன்மையைப் போற்றினான், அதே நேரத்தில் அவனுடைய நேர்மை மற்றும் அறிவால்  அவள் ஈர்க்கப்பட்டாள்.

அவர்களின் வளர்ந்து வரும் இருவருக்கும் இடையிலான பிணைப்பு அலுவலக மற்ற ஊழியர்களால் கவனிக்கப்படாமல் போகவில்லை. வதந்திகள் பரவின, சிலர் அதை ஒரு காதல் உறவாக ஊகித்தார்கள். ஆனால் முத்துச்செல்வி அவை ஒன்றையும் பொருட்படுத்தவில்லை. அவள் இப்ப முன்புபோல இன்னும் இளமொட்டு மனத்தைக் கொண்டவள் அல்ல. அவள் பணியிடத்தின் சிக்கல்களை மட்டும் அல்ல, தன்னையும் வழிநடத்தும் வலிமையைக் கொண்ட மலர்ந்த மனதைக் கொண்டவளாக நிமிர்ந்து நின்றாள். 

"புயல்கள் வீசலாம் கடும்மழை பெய்யலாம்
காற்றின் வஞ்சகம் வலிமையைக் கொடுக்கும்! 
மொட்டு எதிரித்து பூவாக மலரும் 
இதழ்கள் விரிந்து வாசனை வீசும்!"  


"வழிகாட்டும் கையில் வலிமையைக் கண்டு 
அனுபவம் முதிர்ந்து உலகை அறியும்! 
வெள்ளந்தியில் இருந்து முதிர்ச்சி அடையும்
இளமொட்டு மனது முழுதாக மலரும்!"  

மாதங்கள் கடந்து செல்ல, முத்துச்செல்வி தன்னம்பிக்கையான இளம் பெண்ணாக மலர்ந்தாள், தன்னைச் சுற்றியிருந்த சவால்களுக்கு பயப்படாமல் துணிந்து நின்றாள். என்றாலும் அவளுடைய வாழ்க்கைப் பயணம் போராட்டங்கள் இல்லாமல் இல்லை, ஆனால் அவளுடைய "இளம் மொட்டு மனம்" வளர்ந்தது, வாழ்க்கை அவளுக்கு கற்பித்த பாடங்களால் அனுபவம் பெற்றது. 

அரவிந்தனுடனான அவளது உறவு ஒரு மரியாதையான அலுவலக தொழில் ரீதியான நட்பாகவே முதலில் இருந்தாலும்  அது பரஸ்பர மரியாதை மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் கட்டப்பட்டு இருந்தாலும், அது நாளடைவில் காதல் பிணைப்பாக மாறி, அது ஒரு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக முத்துசெல்வியை வழிகாட்டி, அவளின் வாழ்வையும் மலரவைத்தது. 

"யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ் வழி அறிதும்?
செம் புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே" 

நன்றி 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்] 

473244433_10227768975472635_1192927543712800133_n.jpg?_nc_cat=111&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=s3_yS_ZDOn8Q7kNvgGIALJk&_nc_zt=23&_nc_ht=scontent-lhr8-1.xx&_nc_gid=A6nhq6sI_PBHEwHjXaEsujp&oh=00_AYCbygMG1ItfQoPiaU5JA3TFBng1sOytA-O1VsNComg_3A&oe=678C1D1B  473221670_10227768975392633_6591447353771408912_n.jpg?_nc_cat=106&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=ccUjSJTM3pMQ7kNvgEt0pUn&_nc_zt=23&_nc_ht=scontent-lhr8-2.xx&_nc_gid=A6nhq6sI_PBHEwHjXaEsujp&oh=00_AYDH2fr_uQzzfZRsuZCK_xXCQprD1PAzGlt37Nwe78oIWQ&oe=678C019C

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.