Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
90 மணி நேர வேலை, எல் & டி நிறுவனத்தின் தலைவர் சுப்ரமணியனின் சர்ச்சை பேச்சு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கோப்புப் படம் கட்டுரை தகவல்
  • எழுதியவர், நித்யா பாண்டியன்
  • பதவி, பிபிசி தமிழ், சென்னை

லார்சன் அண்ட் டூப்ரோ (L&T) நிறுவனத்தின் தலைவர் எஸ்.என். சுப்ரமணியன் பேசிய வீடியோ ஒன்று ரெட்டிட் வலைதளத்தில் வைரலாக பரவியது. வாரத்திற்கு 90 மணி நேரம் பணியாளர்கள் வேலை செய்ய வேண்டும் என்றும், ஞாயிறு அன்றும் வேலைக்கு செல்ல வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

அமெரிக்காவைப் போன்று பொருளாதாரத்தில் முன்னேறிச் செல்ல வேண்டும் என்றால் சீனர்கள் பணியாற்றுவது போன்று வாரத்திற்கு 90 மணி நேரம் பணியாற்ற வேண்டும் என்றும் அவர் எல் & டி நிறுவன ஊழியர்களிடம் பேசியுள்ளார். அது விமர்சனங்களுக்கு வழி வகை செய்தது.

குடும்பத்துடன் அதிக நேரத்தை செலவிட விரும்புவதாக தொழிலாளர்கள் கூறியுள்ளனர். தொழிலாளர் உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் செயற்பாட்டாளர்கள் தங்களின் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.

இந்திய பணிச்சூழலில் நிலவி வரும் ஏற்றத்தாழ்வுகளை சரி செய்ய முதலில் முயலவேண்டும் என்றும் பலர் தங்களின் கருத்தை கூறுகின்றனர்.

இந்தியாவில் ஒரு நாளுக்கான வேலை நேர உச்சவரம்பு எவ்வளவு? உலகில் அதிகம் மற்றும் குறைவான வேலை நேரம் கொண்ட நாடுகள் எவை? அங்கெல்லாம் வாரந்தோறும் எவ்வளவு நேரம் வேலை செய்கிறார்கள்?

 

தொழிலாளர்கள் கூறுவது என்ன?

ஒரு ஞாயிறு அன்று நீங்கள் என்ன செய்ய விரும்புவீர்கள் என்ற கேள்வியை முன்வைத்தது பிபிசி தமிழ்.

ஒரு சிறிய சிரிப்புக்கு பிறகு, "இது என்ன கேள்வி. அனைவரையும் போன்று நானும் காலை 11 மணிக்கு எழுவேன். மனைவியோடு சேர்ந்து அசைவ உணவு சமைத்து சாப்பிட்டுவிட்டு, மாலையில் அப்படியே மெரினாவுக்கு குழந்தைகளோடு சென்றுவிட்டு வருவேன்," என்றார் சென்னையில் பெயிண்ட் அடிக்கும் பணியில் 12 வருடங்களாக ஈடுபட்டிருக்கும் சூரியகுமார்.

மதுரையில் செவிலியராக பணியாற்றும் செல்வியிடம் இதே கேள்வியை கேட்ட போது, "வாரத்தின் மற்ற நாட்களில் வேலைக்கு சென்றுவிடுவேன். ஞாயிறு அன்று மட்டுமே நான் என்னுடைய கணவர் மற்றும் குடும்பத்துடன் நேரத்தை செலவிட இயலும். அன்று எப்படி வேலைக்கு செல்ல முடியும்? வாரம் முழுவதும், வேலை பார்க்கும் இடத்தில் நடந்த அனைத்தையும் என்னுடைய கணவரிடம் கூறினால் தான் ஒரு மன நிம்மதியே வரும். அவரிடம் பேசினால், வேலைக்கு செல்வதால் ஏற்படும் அழுத்தம் குறையும்," என்று கூறினார்.

சென்னையைச் சேர்ந்த ஐ.டி. ஊழியர் பவ்யா, பிபிசியிடம் பேசும் போது, பெரும்பாலான வார இறுதி நாட்களில் ஓய்வெடுக்க விரும்புவதாக தெரிவித்தார். சில நேரங்களில் புத்தகங்கள் படிக்கவும், ஓவியம் வரையவும் நேரத்தை செலவிட விரும்புவதாகவும் அவர் கூறினார். ஓய்வாக இருக்கிறோம் என்பதற்காக, அலுவலக வேலைகளை அன்றும் பார்க்க வேண்டிய கட்டாயம் இல்லையே? என்று அவர் கேள்வி எழுப்பினார்.

90 மணி நேர வேலை, எல் & டி நிறுவனத்தின் தலைவர் சுப்ரமணியனின் சர்ச்சை பேச்சு

பட மூலாதாரம்,LARSENTOUBRO.COM

படக்குறிப்பு, எல் & டி தலைவர் எஸ்.என். சுப்ரமணியன்

எஸ்.என். சுப்ரமணியன் கருத்தும் விவாதமும்

சுப்ரமணியன் தன்னுடைய ஊழியர்களுடனான சந்திப்பின் போது, "உங்கள் அனைவரையும் ஞாயிறு அன்றும் வேலைக்கு வர வைக்க இயலவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. நான் உங்களை அப்படி பணியாற்ற வைத்துவிட்டால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். ஏன் என்றால் நான் ஞாயிற்றுக் கிழமைகளிலும் பணியாற்றுகிறேன்," என்று கூறியுள்ளார்.

விடுமுறை எடுப்பதால் ஊழியர்களுக்கு என்ன நன்மை கிடைத்து விடுகிறது என்ற கேள்வியை முன்வைத்த அவர், "வீட்டில் அமர்ந்து கொண்டு என்ன செய்வீர்கள்? எவ்வளவு நேரம் உங்களின் மனைவியை பார்த்துக் கொண்டிருப்பீர்கள்? மனைவிகளும் கணவரின் முகத்தை எவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டிருப்பார்கள்? அலுவலகத்திற்கு வந்து வேலையை பாருங்கள்" என்று கூறியுள்ளார்.

தன்னுடைய கருத்தை நியாயப்படுத்தும் வகையில் பேசிய அவர், "சீனர்கள் ஒரு வாரத்திற்கு 90 மணி நேரம் பணியாற்றுகிறார்கள். அமெரிக்கர்கள் 50 மணி நேரம் பணியாற்றுகிறார்கள். நீங்கள் உலகின் தலைமைப் பொறுப்பிற்கு வர வேண்டும் என்றால் நீங்கள் 90 மணி நேரம் பணியாற்ற வேண்டும்" என்று குறிப்பிட்டார்.

இவரின் இந்த கருத்துக்கு எதிராக பல பிரபலங்கள் தங்களின் கருத்துகளை முன்வைத்துள்ளனர். மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, இந்த விவாதம் எதிர் திசையில் செல்கிறது என்று குறிப்பிட்டார். "70, 80, 90 மணி நேரம் பணியாற்றுவதில் ஒன்றும் இல்லை. 10 மணி நேரம் வேலை பார்த்தாலும் அதில் கிடைக்கும் முடிவு தான் முக்கியம். நீங்கள் உங்கள் குடும்பம், நண்பர்களுடன் நேரத்தை செலவிடவில்லை என்றால், நீங்கள் வாசிக்கவில்லை என்றால் உங்களால் எப்படி ஒரு சரியான முடிவை எடுக்க இயலும்?" என்று கேள்வி எழுப்பினார்.

மேலும்,"என்னுடைய மனைவி மிகவும் அற்புதமானவர். அவரை பார்த்துக் கொண்டிருக்கவும், அவருடன் நேரம் செலவிடவும் எனக்கு மிகவும் பிடிக்கும்," என்றும் குறிப்பிட்டார்.

90 மணி நேர வேலை, எல் & டி நிறுவனத்தின் தலைவர் சுப்ரமணியனின் சர்ச்சை பேச்சு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா

இது ஒன்றும் முதல் முறையல்ல

இந்திய பெரும் நிறுவனங்களின் தலைவர்கள் இப்படி அதிக நேரம் உழைப்பதை ஆதரிக்கும் போக்கு முதல்முறையல்ல. ஏற்கனவே இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைவர் நாராயண மூர்த்தி வாரத்திற்கு 70 மணி நேரம் பணியாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.

தமிழக அரசு கடந்த 2023ம் ஆண்டு தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோர் தினமும் 12 மணி நேரம் வேலை செய்ய அனுமதிக்கும் சட்ட திருத்த மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றியிருந்தது. அதற்கு தமிழகத்தில் செயல்பட்டு வந்த தொழிற்சங்கங்கள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தன.

எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி ஆளும் திமுகவின் கூட்டணிக் கட்சிகளே இந்த மசோதாவுக்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தன. அதனைத் தொடர்ந்து தமிழக அரசு அந்த மசோதாவை நிறுத்தி வைத்தது.

சுப்ரமணியன் கூறுவதைப் போன்று பணியாற்றினால், வாரம் முழுவதும் ஒரு நபர் நாள் ஒன்றுக்கு 12 மணி நேரத்திற்கும் மேல் பணியாற்றும் நிலைமை ஏற்படும். அதே நேரத்தில் ஒரு நாள் விடுப்புடன் ஒருவர் பணியாற்றும் சூழல் ஏற்பட்டால், நாள் ஒன்றுக்கு 15 மணி நேரம் பணியாற்ற வேண்டும்.

90 மணி நேர வேலை, எல் & டி நிறுவனத்தின் தலைவர் சுப்ரமணியனின் சர்ச்சை பேச்சு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இன்ஃபோசிஸ் தலைவர் நாராயண மூர்த்தி 70 மணி நேரம் இந்திய இளைஞர்கள் பணியாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டார்

"ஆதிக்கப் போக்கையே காட்டுகிறது"

அமைப்புசாரா தொழிலாளர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் சமூக செயற்பாட்டாளர், கீதா ராமகிருஷ்ணன் பேசும் போது,

"வளர்ந்த நாடுகளோடு ஒப்பிட்டு பேசும் போக்கை நம்மால் காண முடிகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை பொருளாதாரத்தில் இந்தியா பின்னுக்கு தள்ள வேண்டும் என்று கூறுகின்றனர். ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள பல நாடுகளில் பணி நேரம் 6 மணி நேரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை ஏன் இந்த நிறுவனத்தினர் பின்பற்றக் கூடாது?" என்ற கேள்வியை எழுப்பினார்.

"வேலை நேரத்தை வெகுவாக குறைப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அறிவியல் ஆய்வுகளின் படி, அதிக நேர உழைப்பு அதிக உற்பத்தியை தராது என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இரண்டாவது அந்த நாடுகளில் அனைவருக்கும் சமமான வேலை வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு, 6 மணி நேரம் வேலை வழங்கப்படுகிறது. அந்த 6 மணி நேரத்தையும் குறைக்க, முன்னேறிய நாடுகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்ற இந்த காலகட்டத்தில் 15 மணி நேரம் ஒருவரை பணியில் இருக்க சொல்வது மனித சாத்தியங்களுக்கு அப்பாற்பட்டது," என்று குறிப்பிட்டார்.

பணி நேரத்தை நீட்டிப்பதற்கு பதிலாக, பணியில் இருப்பவர்களுக்கு தேவையான சமூக பாதுகாப்பு திட்டங்களை இத்தகைய நிறுவனங்கள் நிறைவேற்றுகின்றனவா என்ற கேள்வியை நாம் எழுப்ப வேண்டும் என்று கூறுகிறார் கீதா.

"இந்தியாவில் பல்வேறு அமைப்புசாரா தொழில்துறைகளில் பணியாற்றும் மக்களுக்கு ஓய்வூதியம், தொழிலாளர் வைப்பு நிதியெல்லாம் கிடைப்பதில்லை. வயதானவர்களுக்கு இங்கே வழங்கப்படும் ஓய்வூதியம் என்பது சில ஆயிரம் ரூபாய் மட்டும் தான். இந்த 70 மணி நேரம், 80 மணி நேரம் உழைப்பு என்பது எல்லாம், தனக்கென தனிப்பட்ட வாழ்க்கையை வாழாமல் மக்கள் இயந்திரம் போல் உழைத்துக் கொண்டிருக்க வேண்டும் என எதிர்பார்க்கும் ஆதிக்கப்போக்கு" என்கிறார் கீதா.

90 மணி நேர வேலை, எல் & டி நிறுவனத்தின் தலைவர் சுப்ரமணியனின் சர்ச்சை பேச்சு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இந்தியாவில் பல்வேறு அமைப்புசாரா தொழில்துறைகளில் பணியாற்றும் மக்களுக்கு ஓய்வூதியம், தொழிலாளர் வைப்பு நிதியெல்லாம் கிடைப்பதில்லை

90 மணி நேர வேலை சாத்தியமா?

"இங்கு பணியாளர்களுக்கு சமமான வாய்ப்புகளே கிடைப்பதில்லை. அதனை நிவர்த்தி செய்தாலே பல பிரச்னைகளுக்கு தீர்வு காண இயலும்" என்று கூறுகிறார் சென்னை பல்கலைக் கழகத்தில் படிக்கும் ஆராய்ச்சி மாணவர் திருநாவுக்கரசு.

"இன்றும் பெண்களுக்கும் ஆண்களுக்கும் சமமான ஊதியம் வழங்கப்படுவதில்லை. மாற்றுத்திறனாளிகளுக்கும், பாலியல் சிறுபான்மையினர், திருநங்கைகளுக்கும் வேலைகள் கிடைப்பதே சிக்கலாக உள்ளது. இன்று பணிக்கு வரும் பெண்களுக்கு இரட்டை வேலைப்பளு இருக்கிறது. அவர்கள் அலுவலகத்திலும் பணியாற்ற வேண்டும், வீட்டிலும் பணியாற்ற வேண்டும் என்று வரும் போது எப்படி ஒருவர் 90 மணி நேரம் பணியாற்ற இயலும்?" என்ற கேள்வியை முன்வைக்கிறார் திருநாவுக்கரசு.

இயந்திரம் போல் பணியாற்றுவதால் நாட்டின் பொருளாதாரம் உயர்ந்துவிடும் என்று கூறுவது ஒரு தவறான கருத்தாக்கம் என்றும் அவர் தெரிவித்தார். ஒவ்வோர் ஆண்டும் நம்முடைய நாட்டில் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வெளியேறும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு இத்தகைய நிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை ஏன் உருவாக்கக் கூடாது என்று கேள்வி எழுப்புகிறார் திருநாவுக்கரசு.

அதிகம், குறைவான வேலை நேரம் உள்ள நாடுகள்

பூட்டான் நாட்டு மக்கள் வாரத்திற்கு சராசரியாக 54.4 மணி நேரம் பணியாற்றுகின்றனர் என்று கூறுகிறது சர்வதேச உழைப்பாளர் அமைப்பு (International Labour Organisation). அதனைத் தொடர்ந்து அமீரகத்தில் 50.9 மணி நேரமும், காங்கோவில் 48.6 மணி நேரமும், கத்தாரில் 48.0 மணி நேரமும் மக்கள் சராசரியாக பணியாற்றுகின்றனர்.

இந்திய ஊழியர்கள் வாரத்திற்கு 46.7 மணி நேரம் பணியாற்றுகின்றனர். மேலும் இந்தியாவில் உழைக்கும் மக்கள் தொகையில் 51% பேர் வாரத்திற்கு 49 மணி நேரத்திற்கும் அதிகமாக பணியாற்றுகிறார்கள்.

அதே நேரத்தில் வனுவாட்டுவில் ஒரு வாரத்திற்கு சராசரியாக மக்கள் 24.7 மணி நேரமே உழைக்கின்றனர். கிரிபாடி நாட்டில் 27.3 மணி நேரமும், மைரோனேசியா, ருவாண்டா நாட்டினர் 30.4 மணி நேரமும், சோமாலியாவில் 31.4 மணி நேரமும் மக்கள் உழைக்கின்றனர்.

நெதர்லாந்தில் 31.6 மணி நேரமும், கனடாவில் 32.1 மணி நேரமும் மக்கள் பணியாற்றுகின்றனர். இதில் கிரிபாதி, மைக்ரோனேசியா மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகள் மேம்பட்ட வேலை-வாழ்க்கை (work-life) சமநிலை கொள்கைகளுக்காக அறியப்பட்டவை.

90 மணி நேர வேலை, எல் & டி நிறுவனத்தின் தலைவர் சுப்ரமணியனின் சர்ச்சை பேச்சு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,பூடான் மக்கள் வாரத்திற்கு சராசரியாக 54.4% மணி நேரம் பணியாற்றுகின்றனர் என்று கூறுகிறது சர்வதேச உழைப்பாளர் அமைப்பு

பாதிப்புகள் என்ன?

"ஞாயிறு அன்று மனைவியின் முகத்தைக் கூட பார்க்காமல் பணிக்கு வருமாறு கூறும் போக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது," என்று தெரிவிக்கிறார் மன நல ஆலோசகர் அக்‌ஷயா. சென்னையில் மன நல ஆலோசனை மையத்தை நடத்தி வரும் அவர், ஒரு வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என்று கூறுவது மக்களின் மன நலத்தை பெரிதும் பாதிக்கும் ஒன்று. இது ஆரோக்கியமான கருத்து இல்லை," என குறிப்பிடுகிறார்.

மோசமான வேலைச்சூழல் காரணமாக இளம் ஊழியர்கள் தற்கொலை செய்து கொள்ளும் அவலமும், உடல் நலக்குறைவால் பாதிக்கப்படுவதும் அவ்வபோது நடைபெற்று வருகிறது.

அதிக வேலைப்பளு காரணமாக உடல் நலக் கோளாறு ஏற்பட்டு மக்கள் உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனமும் சர்வதேச உழைப்பாளர் அமைப்பும் அறிவித்துள்ளது. 2016-ஆம் ஆண்டில், வாரத்திற்கு 55 மணி நேரத்திற்கு மேலாக பணியாற்றிய நபர்களில் 3,98,000 பேர் பக்கவாதத்தாலும், 3,47,000 பேர் இதய நோயாலும் உயிரிழந்ததாக அறிவித்துள்ளது.

அதிக நேரம் பணி செய்வதன் காரணமாக 2000 முதல் 2016-ஆம் ஆண்டு வரை இதய நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42% ஆகவும், பக்கவாதத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19% ஆகவும் அதிகரித்துள்ளது என்றும் இந்த அமைப்புகள் கூறியுள்ளன.

35 மணி நேரம் முதல் 40 மணி நேரம் வரை பணியாற்றுபவர்களோடு ஒப்பிடுகையில், 55 மணி நேரம் அல்லது அதற்கு அதிகமாக பணியாற்றுபவர்களுக்கு பக்கவாதம் ஏற்பட 35% அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும், இஸ்கிமிக் இதய நோய் ஏற்பட 17% வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

90 மணி நேர வேலை, எல் & டி நிறுவனத்தின் தலைவர் சுப்ரமணியனின் சர்ச்சை பேச்சு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,அதிக வேலைப்பளு காரணமாக உடல் நலக் கோளாறு ஏற்பட்டு மக்கள் உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனமும் சர்வதேச உழைப்பாளர் அமைப்பும் அறிவித்துள்ளது

இந்தியாவில் ஒரு நாளுக்கான வேலை நேர உச்சவரம்பு எவ்வளவு?

19-ஆம் நூற்றாண்டின் முற்பாதியில் மக்கள் 12 முதல் 16 மணி நேரம் வேலை பார்த்து வந்தனர். 1817-ஆம் ஆண்டு "8 மணி நேரம் வேலை, 8 மணி நேரம் பொழுதுபோக்கு, 8 மணி நேரம் ஓய்வு" என்ற புகழ்பெற்ற கருத்தாக்கத்தை முன்வைத்தார், ராபர்ட் அவன். ஆனால் பல பத்தாண்டுகளுக்குப் பிறகே அது பிரிட்டனில் சாத்தியமானது.

தொழிற்சங்கங்கள் தொடர்ச்சியாக 8 மணி நேர வேலையை வலியுறுத்த, சட்டங்கள் இயற்றப்பட்டன. அமெரிக்கா 1868-ஆம் ஆண்டு, எட்டு மணி நேரம் தான் பணியாற்ற வேண்டும் என்ற சட்டத்தை இயற்றியது.

பிரிட்டனில், பெக்டன் ஈஸ்ட் லண்டன் எரிவாயுத் தொழிற்சாலை ஊழியர்கள் தங்களின் வேலை நேரத்தை 18 மணி நேரத்தில் இருந்து 8 மணி நேரமாக குறைக்க வேண்டும் என்ற நீண்ட போராட்டத்தில் ஈடுபட்டனர். 1869-ஆம் ஆண்டு இந்த பாரிய போராட்டத்திற்கு பிறகு பிரிட்டனில் 8 மணி நேர பணிக்கான சட்டம் இயற்றப்பட்டது.

சோவியத் ஒன்றியத்தில், 1917-ஆம் ஆண்டு அக்டோபர் புரட்சிக்குப் பிறகு இந்த சட்டம் இயற்றப்பட்டது.

20-ஆம் நூற்றாண்டின் துவக்க காலத்தில் சர்வதேச தொழிலாளர் அமைப்பு உருவாக்கப்பட்டு, எட்டு மணி நேர வேலை குறித்தான விவாதங்கள் முன்வைக்கப்பட்டன. 1919 நவம்பர் 28ஆம் தேதி "ஒரு நாளைக்கு 8 மணி நேரம் அல்லது வாரத்திற்கு 48 மணி நேரம்" என்பதை தீர்மானமாக நிறைவேற்றியது சர்வதேச தொழிலாளர் அமைப்பு.

பிரிட்டிஷ் இந்திய அரசாங்கமும் இந்த தீர்மானத்தை ஏற்றுக் கொண்டது. இருப்பினும் உடனடியாக இது அமலுக்கு வரவில்லை. பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்தில் தொழிலாளர் துறை 1937-இல் தான் உருவாக்கப்பட்டது.

1942-இல் பி.ஆர். அம்பேத்கர் இந்திய வைஸ்ராயின் எக்ஸிக்யூட்டிவ் கவுன்சிலில் தொழிலாளர் துறைக்குப் பொறுப்பேற்றார். 1942 நவம்பர் 27ஆம் தேதி இந்திய தொழிலாளர் மாநாட்டின் ஏழாவது அமர்வு டெல்லியில் கூடிய போது, ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் என்பதை அவர் அங்கே முன்மொழிந்தார்.

இந்த சட்டம் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே முன்மொழியப்பட்டாலும் கூட, 1948-ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் மூலமே 9 மணி நேரம் பணி என்பது சட்டமாக்கப்பட்டது.

சட்டத்தின் பிரிவு 54, 9 மணி நேரம் வேலை, அரை மணி நேரம் உணவு இடைவேளை என்பதையும், பிரிவு 51 வாரத்திற்கு 48 மணி நேரம் பணியாற்றுவதை உச்ச வரம்பாக்கியும் அறிவித்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.