Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

சிறிதரன் -சுமந்திரன்: கள்வன், பொலிஸ் விளையாட்டு…..!

— அழகு குணசீலன் —

சிறிதரன் -சுமந்திரன்: கள்வன், பொலிஸ் விளையாட்டு…..!(வெளிச்சம்:038)

தமிழரசுக்கட்சியின் உட்கட்சி நெருக்கடிக்கு குறைந்த பட்சம் வயது 15. இதற்கும் சுமந்திரனின் தமிழ்த்தேசிய பாராளுமன்ற அரசியல் பிரவேசத்திற்குமான தொடர்பு சமாந்தரமானது.  தனிநபர் வழிபாடு, அதிகாரபோட்டி, அரசியல் பொறாமை, குத்துவெட்டு, உள்ளத்தில் ஒன்று உதட்டில் இன்னொன்று, நானா..? நீயா..? போன்ற அரசியல் நோய்களுக்கு சரியான நேரத்தில் சரியான சிகிச்சை அளிக்காததால், காலம் கடந்தும்  தவறான நேரத்தில் தவறான சிகிச்சையே அளிக்கப்படுகிறது. 

உளவியல் மனநோய்க்கு சட்டவைத்தியம் செய்யமுடியாது. கட்சியின் தலைமுதல் பாதம்வரையான நிர்வாக கட்டமைப்பில் சத்திர சிகிச்சை செய்து சில பகுதிகளை வெட்டி வெளியே போட்டாலும் கூட கட்சி தப்பிப்பிழைக்க வழியில்லை. போருக்கு பின்னரான இந்த வைக்கோல் இழுத்த வழி அரசியல் கொழும்பு வரை சென்று குப்பை கொட்டும் நிலைக்கு  கட்சியை கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. சமஸ்டி அரசியல்வாதிகள் ஏக்க இராச்சியத்தில் நீதி கேட்டு நிற்கிறார்கள்.

தமிழரசுக்கட்சி பல சிறிய குழுக்களாக துண்டு துண்டாக உடைந்து சிதறிக்கிடக்கின்ற போதும், சிறிதரன் -சுமந்திரன் என்ற இரு பெரும் சுவர் வெடிப்புக்கள் மட்டுமே வெளியில் தெரிகிறது.  வீட்டிற்குள் ஏற்பட்டுள்ள இந்த வெடிப்பை மேலால் சீமெந்து பூசி-மெழுகி வெள்ளை அடிக்க முடியாது. வீடு அடித்தளத்துடன் முற்றாகத்தகர்க்கப்பட்டு மீண்டும் ஒரு புதிய அத்திவாரத்தில் கட்டியெழுப்பப்படவேண்டும். அதற்கு முன்னோடியாக இந்த பொறுப்பு ஒரு புதிய, அரசியல் நேர்மையுள்ள கட்டுமான குழுவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். இந்த “கிளீன் தமிழரசை” செய்வது யார் என்பதே தமிழ்த்தேசிய அரசியல் முன்னால் உள்ள இன்றைய முக்கிய கேள்வியாகும்.

இன்று தமிழரசுக்கட்சியின் மத்திய குழு என்ற பெயரிலான சுமந்திரன் பக்தர்கள் குழு கட்சியின் முடிவுகளில் கட்சி நலனுக்கும் அப்பால் சுமந்திரன் நலன்சார்ந்து அவரால் நகர்த்தப்படுகிறது. பாராளுமன்ற குழுவான சிறிதரன் பக்தர்கள் குழு அவரின் நலன்களை பாதுகாப்பதில் ஆர்வமாய் உள்ளது. இந்த நிலை கட்சியில் மத்திய குழு அதிகாரமா? பாராளுமன்ற குழு அதிகாரமா? என்ற  அதிகார போட்டியை ஏற்படுத்தியிருக்கிறது. உண்மையில் அரசியலில் இவை இரண்டும் ஒன்றோடு இணைந்த நேர்மையான செயற்பாட்டை கொண்டிருக்க வேண்டியவை. ஒருவகையில் “தோல்வியிலும் அதிகாரம், வெற்றியிலும் தோல்வி” என்ற நிலையையே  சுமந்திரன் -சிறிதரன் போட்டியில் அவதானிக்க முடிகிறது. இதனால்தான் சிறிதரன்- சுமந்திரன் அரசியல் விளையாட்டை சிறுபிள்ளைத்தனமான “கள்வன் -பொலிஸ் விளையாட்டு” என்று சொல்ல வேண்டியுள்ளது. அரசியல் சிறுபிள்ளைத்தனமாக “ஒழித்து பிடித்து” விளையாடுகிறார்கள்.

அண்மையில் பேசுபொருளாகவுள்ள பாராளுமன்றம் வரை கொண்டு வந்து கொட்டப்பட்ட “குப்பை அரசியல்” , மேலெழுந்த ரீதியாக விமானநிலைய தடுத்து வைப்பு, கனவான்களின்(?) கனிமொழியுடனான சந்திப்பு, தடைசெய்யப்பட்டுள்ள கனடா அமைப்பு, சுமந்திரன்  காட்டிய மேற்கோள், சிறிதரனின் பாராளுமன்ற உரை…. போன்றவை வெறும் செய்திகளுக்கும்  அப்பால்  பாராளுமன்ற சிறப்புரிமை மற்றும் தமிழரசுக்கட்சியின் அடிப்படைக் கொள்கை சார்ந்தவை. இரு தரப்பினரும் சமூக ஊடகங்களில் பதிவிடும் கருத்துக்கள் தனிநபர் வழிபாட்டு “பக்தியை” வெளிப்படுத்துகிறதே அன்றி தமிழரசுக்கட்சியின் கொள்கை “பற்றை” வெளிப்படுத்துவதாக இல்லை. விரல் விட்டு எண்ணக்கூடிய சில பதிவுகள் விலக்காக உள்ளன. இது கடந்த ஐந்து ஆண்டுகளில் சில அதிதீவிர பக்தர்களின் கண்களை திறந்திருக்கிறது என்பது ஒரு முக்கிய மாற்றம்.

இந்த அடிப்படையில், சிறிதரன் – சுமந்திரன் விவகாரங்களில் தனிநபர் வழிபாட்டு திரைக்கு  பின்னால்  சாமிகளின் / கட்சியின் கொள்கை பிறழ்வுகள் மறைந்துள்ளன. தமிழரசு மூலஸ்தானத்திற்கு முன்னால் போடப்பட்டுள்ள திரைச்சீலையை நீக்கினால் திரைக்கு பின்னால் என்ன நடக்கிறது என்பது சந்திக்கு வரும். கீழே குறிப்பிடப்படும் கொள்கைகளில் தமிழரசுக்கட்சி பிறழ்ந்து முன்னுக்கு பின் முரணாக செயற்படுகிறது. இந்த பிறழ்வு தனிதபர் வழிபாட்டையும், கொள்கை முரண்பாட்டையும் வெளிச்சம் போடுகிறது. 

1. வடக்கு, கிழக்கில் குடியேற்ற கொள்கை.

2 .தமிழ் மொழிப் பயன்பாட்டு கொள்கை.

3. பயங்கரவாதத் தடைச்சட்டம் குறித்த கொள்கை.

4. அயலுறவுக்கொள்கை 

5. பாராளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தல்.

சிறீதரன் சென்னை பயணத்திற்கு சில தினங்களுக்கு முன்னர் அரசாங்கத்தை விமர்சித்து ஒரு காத்திரமான உரையை பாராளுமன்றத்தில் ஆற்றியாருந்தார். வடக்கில் 1983 கலவரத்திற்கு முன்னர் வசித்த சிங்கள மக்கள் தொடர்பான புள்ளி விபரங்கள் சேகரிக்கப்படுவது தொடர்பான உரை அது. இது தொடர்பாக கேள்வி எழுப்பிய சிறீதரன் தென்னிலங்கையிலும், மலையகத்தில் இருந்தும் விரட்டப்பட்ட தமிழர்களையும் இச்சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டு பேசினார். அது மட்டுமின்றி கொழும்பு, புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு பகுதிகளிலும் தமிழர்கள் பாரம்பரியமாக வாழ்ந்தார்கள் என்று கூறி கொலைசெய்யப்பட்ட அரசியல்வாதி பெர்ணான்டோ பிள்ளையின் பரம்பரையையும் நினைவுகூர்ந்தார்.

தமிழரசுக்கட்சியின் குடியேற்றக்கொள்கை தொடர்பாக இந்த உரையில் குறைகாண முடியாது. அப்படி காண்பதெனில் தொனியில் மட்டுமே காணமுடியும். அரசாங்க தரப்பில் இருந்து விமல் ரத்நாயக்க உட்பட எவரும் வாய்திறக்கவில்லை. ஏற்கவும் இல்லை. மறுக்கவும் இல்லை. விமானநிலைய விவகாரம் தெரியவந்தபோது இந்த உரைக்கு பழிவாங்கவே அரசாங்கம் இந்த அழுத்தத்தை சிறிதரனுக்கு கொடுக்கிறது என்றே அரசியல் அவதானிகளால்  எடுத்த எடுப்பில் கருதப்பட்டது. ஏனெனில் அநுர அரசாங்கம் பேசுகின்ற “இலங்கையர்” கோட்பாடு இதுதான். அதற்கான சிறந்த உதாரணமே இலங்கையின் மேற்கு, வடமேற்கு கரைகளில் சிறிதரன் குறிப்பிட்ட தமிழர்கள் கரைந்த கதை.

தமிழரசுக்கட்சியின் மொழிக் கொள்கை என்று நோக்கினால் விமானநிலைய அதிகாரிகள் – சிறிதரன் உரையாடலில் புலப்படுவது என்ன?  சிறிதரனுக்கு தமிழைத் தவிர வேறு மொழிகள் – சிங்களம், ஆங்கிலம் தெரியாது என்று சிலர் அவரை சிறுமைப்படுத்த முனைகின்றனர். இந்த காலனித்துவ  நாட்டாமை மனோநிலை காற்சட்டை காரர்களுக்கு தமிழரசுக்கட்சியின் மொழிக் கொள்கை தெரியாதா? அல்லது மேலாண்மைக்கு சேவகம் செய்கிறார்களா? இலங்கையின் அரசியல் அமைப்பின் படியும், தேசிய மொழி கொள்கையின் படியும் இலங்கைத்தீவு முழுக்க அதைப் பயன்படுத்துகின்ற உரிமை சிறிதரனுக்கு உண்டு.

இருக்கின்ற உரிமையை பயன்படுத்த தெரியாதது அல்லது அதற்கான வாய்ப்புகள் கிடைத்தாலும் அதை தாங்களாகவே புறம்தள்ளுவது, தமிழில் பேசுவது இளக்காரமானது என்று எண்ணுகின்றவர்கள்தான் இன்று தமிழரசுகட்சியை கட்டுப்படுத்துகின்றனர். ஒரு சிங்கள அதிகாரிக்கு சிங்களத்தில் பேசுவதற்கு இருக்கின்ற உரிமையை விடவும் பாராளுமன்ற சிறப்புரிமையுடன் கூடிய அதிகபட்ச உரிமை ஒரு பாராளுமன்ற உறுப்பினராக  தமிழைப்பேசுவதற்கு சிறிதரனுக்கு உண்டு. மொழிக்கொள்கையை சரியாக நடைமுறைப்படுத்துவதற்கு மொழிபெயர்ப்பாளரை ஒழுங்கு படுத்தவேண்டியது அரசாங்கமும், அதிகாரிகளுமேயன்றி சிறிதரன் அல்ல. இதில் சிரிப்புக்கிடமானது என்னவெனில்  தமிழரசுக்கட்சியின் ஒரு பகுதியினர் தமிழ்த்தேசியத்தின் பேரில் தமிழில் பேசிய சிறிதரனை இழிவு படுத்துவதுதான்.

சிறிதரன் – சுமந்திரன் பிந்திய கருத்து மோதலில் குறிப்பிடப்படுகின்ற மற்றொரு விடயம் பயங்கரவாத தடுப்புச் சட்டம். பயங்கரவாத தடுப்புச்சட்டத்தை அது நிறைவேற்றப்பட்ட முதல்நாளில் இருந்து தமிழரசுக்கட்சி எதிர்க்கிறது. அதை நீக்கக்கோரி சுமந்திரன் கையெழுத்து வேட்டை யிலும் ஈடுபட்டார். தென்னிலங்கையில் கையெழுத்து சேகரிக்க எதிர்க்கட்சியில் இருந்தபோது ஜே.வி.பி.யும், அநுரகுமார திசாநாயக்கவும் ஆதரவளித்தனர். இப்போது கனடாவில் உள்ள தமிழ் டயஸ்போரா அமைப்பு ஒன்றை சந்திக்கவே சிறிதரன் சென்னை செல்கிறார் என்று புலனாய்வு பிரிவுக்கு தெரியவந்ததால் அவர் விமான நிலையத்தில் தடுக்கப்பட்டார் என்று கூறப்படுகிறது.  குறிப்பிட்ட கனேடிய தமிழர் அமைப்பு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளதாம்.  

இங்கு தமிழரசுக்கட்சியின் கொள்கை என்ன?  பயங்கரவாத தடைச்சட்டத்தை ஏற்றுக்கொள்கிறதா ? இல்லையா ?அதனடிப்படையில் தமிழ் டயஸ்போரா அமைப்புக்களை தடை செய்திருப்பதை ஏற்றுக்கொள்கிறதா?  அச்சட்டத்தின் கீழ் சிறிதரன் விமானநிலையத்தில் அசௌகரியங்களை சந்தித்ததை ஏற்றுக்கொள்கிறதா?  தடைசெய்யப்பட்ட அமைப்பு ஒன்றை சிறிதரன் சந்திப்பது தவறு என்று கூறுகிறதா? 

எப்போதும் சுமந்திரனுக்கு சால்வை போடும் யாழ்.பத்திரிகை ஒன்று தான் கனடாவில் விசாரிதததில்  சிறிதரனின் விமான நிலைய விவகாரத்திற்கு தடைசெய்யப்பட்ட அமைப்பை சந்திப்பது தான் காரணம் என்று எழுதியிருந்தது. இந்த செய்தியை சுமந்திரன் பத்திரிகையாளர் மாநாட்டில் மேற்கோள் காட்டியிருக்கமுடியும். ஒரு தமிழரசுக்கட்சியின் ஊடகப்பேச்சாளராக, வெளியுறவுக்கொள்கை செயற்பாட்டாளராக சுமந்திரன், சிறிதரன் தடுக்கப்பட்டதற்கு அரசாங்க தரப்பு போன்று காரணம் கூறி பதிலளிக்க முடியுமா?. அவர் அந்த ஊடக சந்திப்பில் பயங்கரவாத சட்டத்திற்கு எதிராகவும், அதன்கீழ் டயஸ்போரா அமைப்புக்கள் தடைசெய்யப்பட்டு இருப்பது தொடர்பாகவும், சிறிதரன் விமான நிலையத்தில் எதிர்நோக்கிய அசௌகரியங்களுக்கு எதிராகவும் கருத்து சொல்லியிருக்க வேண்டும் அல்லவா?

சிறீதரன், தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற குழுத்தலைவர், பொதுச்சபையினால் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டு பதவியேற்கமுடியாமல் உள்ளவர், கடந்த தேர்தலில் யாழ்தேர்தல் மாவட்டத்தில் வெற்றி பெற்ற  கட்சியின் ஒரு சிரேஷ்ட  பாராளுமன்ற உறுப்பினர். விமான நிலைய சம்பவத்தை கட்சியின் பேச்சாளராக சுமந்திரன் கண்டித்து இருக்கவேண்டுமே அன்றி அரசு தரப்பு சட்டத்தரணியாக பக்கம் மாறி சாட்சியம் அளிக்க முடியாது. சுமந்திரனின் கடந்த கால அரசியலில் கட்சிகொள்கைக்கு முரணாக இவ்வாறான பல சந்தர்ப்பங்களை உதாரணம் காட்டமுடியும்.

தமிழரசுக்கட்சியின் அயலுறவுக்கொள்கையில் தமிழ்நாடு மாநில, இந்திய மத்திய அரசுடனான உறவுகள் முக்கியமானவை. இதனால்தான் தமிழரசுக்கட்சி அரசியல் வாதிகள் சென்னை மாநாட்டில் கலந்து கொண்டனர். டெல்லி பாராளுமன்றத்தில் ஒரு உறுப்பினரான கனிமொழியூடாக மோடி அரசுக்கு இனப்பிரச்சினைக்கு அழுத்தம் கொடுக்க சுமந்திரனும், சாணக்கியனும் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி உள்ளனர். எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினராக கனிமொழியினால் இது எந்தளவு சாத்தியம் என்பது வேறு கேள்வி. 

அதுபோன்றே சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிறிதரன் சிறப்புரிமைக்கூடாக ஒரு விசாரணையை கோரியிருக்கிறார். விளைவுகள் எப்படி இருந்தபோதும் அதற்கான உரிமை சிறிதரனுக்கு உண்டு.

தமிழரசுக்கட்சியின்  இரு முரண்பாட்டு அணிகளும் கட்சியையும், அதன் கொள்கையையும் முதன்மைப்படுத்தி தனிநபர் பக்தி அரசியலை தவிர்த்து செயற்பாட்டு அரசியலை செய்யவேண்டுமேயன்றி ஏற்பட்டுள்ள வெடிப்பை மேலும் ஆழமாக்கும் குறுக்கு ஒழுங்கைகளில் பயணிக்க கூடாது. வெளிப்படைத்தன்மையும், திறந்த விவாதமும், கருத்து சுதந்திர உட்கட்சி ஜனநாயகமும் பேணப்பட கட்சி உறுப்பினர்கள் போராடவேண்டும். இப்போது அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இல்லையேல் தமிழரசுக்கட்சியில் மற்றொரு உடைவை யாராலும் தவிர்க்க முடியாது. 

இல்லையேல் மாற்று அரசியல் சக்தி ஒன்றின் தேவையே காலத்தின் கட்டாயமாக அமையும். வடக்கு கிழக்கில் என்.பி.பி. க்கு வழி திறந்து விட்டதில் தமிழ்த்தேசிய அரசியலுக்கு பெரும் பங்குண்டு. இதிலிருந்து பாடம் கற்க மறுத்தால், தமிழ்த்தேசிய அரசியலை மறக்க வேண்டியதுதான்.

https://arangamnews.com/?p=11723

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கிருபன் said:

தமிழரசுக்கட்சியில் மற்றொரு உடைவை யாராலும் தவிர்க்க முடியாது. 

அதுதான் சுமந்திரனுக்கு கொடுக்கப்பட்ட முக்கிய பணி. அதை நிறைவேற்றால் அவர் அயர மாட்டார். போலி அரசியல் வாதிகள், போலி சாமியார்கள், போலிப்பத்திரிகையாளர் சமுதாயத்தை அழிக்கின்றனர்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.