Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா எதிர்வரும் மார்ச் மாதம் 14, 15 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

யாழ். மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ப.யோ.ஜெபரட்ணம் அடிகளார் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/314998

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் 8 ஆயிரம் யாத்திரீகர்கள் கலந்துகொள்வார்களென எதிர்பார்ப்பு - யாழ். மாவட்ட பதில் அரசாங்க அதிபர்

07 FEB, 2025 | 03:24 PM
image

எதிர்வரும் மார்ச் மாதம் 14 மற்றும் 15ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவுக்கான ஏற்பாடு குறித்த கலந்துரையாடல் இன்று வெள்ளிக்கிழமை (07)  யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபன் தலைமையில் நடைபெற்றது.

கலந்துரையாடலின் பின்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

கச்சதீவு பிரதேசத்தை பொது மக்களின் வழிபாட்டுக்கு ஏற்ற வகையில் தயார்படுத்தல் குறித்தான நடவடிக்கைகள் கடற்படையால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதில் பிரதேச சபையின் உத்தியோகத்தர்களும் இணைந்துள்ளார்கள்.

இந்த திருவிழாவில் கலந்துகொள்ளவுள்ள யாத்திரிகர்களுக்கான அனைத்து ஏற்பாடுகளும் ஏற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன. குடிநீர் விநியோகம் மற்றும் மலசலகூட வசதிகள் குறித்து ஆராயப்பட்டது. 

இவ்வருடம் இலங்கையை சேர்ந்த 4,000 யாத்திரீகர்களும் இந்தியாவை சேர்ந்த 4,000 யாத்திரீகர்களும் என 8 ஆயிரம் யாத்திரிகர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அத்துடன் மேலதிகமாக உத்தியோகத்தர்கள், ஏனையோர் என ஆயிரம்பேர் உள்ளடங்கலாக 9 ஆயிரம்பேர் இதில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் கலந்து கொள்பவர்களுக்குரிய உணவு வசதிகள் குறித்து ஆராயப்பட்டது. அந்தவகையில் யாத்திரிகர்களுக்கு 14ஆம் திகதி இரவு உணவும், 15ஆம் திகதி காலை உணவும் வழங்குவதற்குரிய ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

போக்குவரத்துக்காக இ.போ.ச இன் பேருந்துகளும் தனியார் போக்குவரத்து துறையினரின் பேருந்துகளும் பயன்படுத்தப்படவுள்ளன.  14ஆம் திகதி காலை 4 மணிமுதல் 11.30 வரை யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திலிருந்து அந்த பேருந்துகள் புறப்படும்.

அவர்களுக்குரிய போக்குவரத்து கட்டணமாக, நெடுந்தீவில் இருந்து கச்சதீவு செல்வதற்குரிய ஒருவழி கட்டணமாக ஆயிரம் ருபாவும், குறிகட்டுவானில் இருந்து கச்சதீவு செல்பவர்களுக்குரிய ஒருவழி கட்டணமாக ஆயிரத்து முந்நூறு ரூபாவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆகவே இவ்வாறு படகு சேவையில் ஈடுபடுகின்ற படகின் உரிமையாளர்கள், பொதுமக்களின் போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் அதற்குரிய சான்றிதழ்களை கடற்படையினரிடம் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் எம்மால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆகவே இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ள யாத்திரிகர்கள் தங்களுடைய சுகாதார செயற்பாடுகளை பரிசீலிப்பதற்காக எங்களுடைய பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரும் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டார். 

கடந்த வருடத்தில் ஏற்பட்ட குறைபாடுகள் அல்லது அதில் அடையாளம் காணப்பட்ட பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. சுங்கத் திணைக்களத்தின் பிரசன்னமும் இன்றைய கூட்டத்தில் இருந்தது.

இந்தியாவில் இருந்து வருகின்ற யாத்திரிகர்களை, சரியான நடைமுறைகளுக்கு அமைவாக  வரவேற்று அவர்களை ஆலய வழிபாட்டு செயற்பாடுகளில் கலந்துகொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து அடுத்தகட்ட கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளப்பட்டு, எடுக்கப்படவுண்டிய இறுதித் தீர்மானங்கள் குறித்து ஆராயப்படவுள்ளது என்றார்.

யாழ். மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் யாழ். மறை மாவட்ட குருமுதல்வர், யாழ். இந்திய துணைத் தூதரக அதிகாரிகள், கடற்படையின் பிரதி தளபதி, பொலிஸ் அதிகாரிகள் ஏனையோர் பலர் கலந்துகொண்டனர்.

https://www.virakesari.lk/article/206066

  • கருத்துக்கள உறவுகள்

கச்சதீவு புனித அந்தோனியார்  திருவிழா தொடர்பில் அறிவிப்பு!

கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா தொடர்பில் அறிவிப்பு!

வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கான முன்னாயர்த்தக் கூட்டம் இன்று இடம்பெற்றதுள்ளது

அதன்படி யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.

இதன் பிரகாரம் எதிர்வரும் கச்சதீவு அந்தோனியார் திருவிழாவில் 4000 இலங்கை பக்தர்களையும், 4000 இந்திய பக்தர்களையும், மதகுருமார்கள், உத்தியோகத்தர்கள் உள்ளடங்களாக 1000 நபர்களும் அனுமதிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா எதிர்வரும் மார்ச் மாதம் 14ஆம், 15ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.

இக் கூட்டத்தில் இந்தியத் தூதரக அதிகாரிகள், கடற்படையினர், இராணுவத்தினர், பொலிசார், ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

https://athavannews.com/2025/1420297

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கச்சதீவு புனித அந்தோணியார் திருவிழாவில் இந்தியாவிலிருந்து கலந்து கொள்ள 3,464 பெயர் பதிவு

04 MAR, 2025 | 04:11 PM

image

ராமேசுவரம்: இந்திய-இலங்கை இரு நாட்டு மக்களும் கலந்து கொள்ளும் கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா மார்ச் 14 மற்றும் 15 ஆகிய இரு தினங்கள் நடைபெறுகிறது. திருவிழாவில் இந்தியாவிலிருந்து கலந்து கொள்ள 3,464 பெயர் பதிவு செய்துள்ளனர்.

கடலில் இயற்கைச் சீற்றம், புயல் மற்றும் பேராபத்து காலங்களில் காப்பாற்றவும், பெருமளவு மீன் கிடைக்கவும் மீனவர்கள் வழிபாடு நடத்திய பின்னரே கடலுக்குள் செல்வது வழக்கம். மீனவர்கள் தங்களின் வழிபாட்டுக்காக கச்சத்தீவில் சிறிய ஓலைக் குடிசையில் புனித அந்தோணியார் ஆலயத்தை 1913-ம் ஆண்டில் நிறுவனர். அதன்பின் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் கச்சத்தீவில் அந்தோணியார் ஆலய விழா நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத்தில் நடைபெற உள்ள திருவிழாவில் இந்திய பக்தர்கள் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணம் மறை மாவட்ட முதன்மை குரு ஜோசப்தாஸ் ஜெபரத்தினம் , ராமேசுவரம் பங்குத்தந்தை அசோக் வினோவுக்கு அனுப்பிய அழைப்பிதழை ஏற்று, ராமேசுவரத்திலிருந்து கச்சத்தீவு திருவிழாவுக்குச் செல்ல 79 விசைப்படகுகள் மற்றும் 23 நாட்டுப் படகுகளில், 2,720 ஆண்கள், 652 பெண்கள், 56 ஆண் குழந்தைகளும், 36 பெண் குழந்தைகளும் என மொத்தம் 3,464 பேர் பெயர் பதிவு செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சாராத வெளி மாவட்ட, வெளி மாநில பக்தர்கள் தங்கள் ஊர்க் காவல் நிலையங்களில் தடையில்லா சான்று பெற்றிருக்க வேண்டும். அதுபோல மத்திய, மாநில அரசு பணியாளர்கள் திருவிழாவில் கலந்து கொள்ள தங்களின் அலுவலகத்தில் தடையில்லாச் சான்று பெற்றிருக்க வேண்டும். மார்ச் 14 அன்று மாலை 4 மணியளவில் கச்சத்தீவில் கொடியேற்றத்துடன் விழா துவங்கும். தொடர்ந்து ஜெபமாலை மன்றாட்டு, இருநாட்டு மக்களும் சேர்ந்து தூக்கி வரும் சிலுவைப் பாதை நிகழ்ச்சி, நற்கருணை ஆராதனையும், இரவு அந்தோணியாரின் சொரூபம் வைக்கப்பட்ட தேர் பவனியும் நடைபெறுகிறது.

மார்ச் 15 அன்று காலை 7.30 மணியளவில் சிறப்பு திருப்பலியும், கூட்டுப் பிரார்த்தனையும் நடைபெறும். இதனை தொடர்ந்து கொடியிறக்கமும் நடைபெற்று விழா முடிவடையும். மேலும் கச்சத்தீவு அந்தோனியார் திருவிழாவில் கலந்து கொள்ளும் இந்திய-இலங்கை இருநாட்டு பக்தர்களும் உணவு, தண்ணீர், மருத்துவம் மற்றும் அடிப்படை வசதிகளை யாழ்ப்பாணம் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

https://www.virakesari.lk/article/208265

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்

07 Mar, 2025 | 11:08 AM

image

வருடாந்த கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவையொட்டி இதுவரை மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட நடவடிக்கைகள் தொடர்பான முன்னேற்பாட்டுக் கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்று  வியாழக்கிழமை (06)  மாவட்ட செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. 

இக் கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர், எதிர்வரும் மார்ச் மாதம் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழாவுக்கு கடற்படையினரின் ஒத்துழைப்பு அவசியமானது என குறிப்பிட்டதுடன், பங்களிப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.

இக் கலந்துரையாடலில் கடந்த கூட்ட விடயங்கள் மீளாய்வு செய்யப்பட்டதுடன், இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து வருகை தரும் பக்தர்கள் 9,000 பேர்வரை கலந்து கொள்வார்கள் என எதிர்பாா்க்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்திலிருந்து செல்லுகின்ற பயணிகளுடைய பதிவுகள் குறிகாட்டுவானில் மேற்கொள்ளபடுமெனவும் ஏனைய பிரதேசங்களிலிருந்து செல்லுகின்றவர்கள் கடற்பாதுகாப்பு கருதி தங்களுடைய பிரதேசங்களில் உள்ள கடற்படை முகாம்களில் தங்களுக்குரிய பங்குகளிலும் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

குறிகட்டுவானிலிருந்து கச்சதீவிற்கு படகுச் சேவைக்கான ஒருவழிக்கட்டணமாக ரூபா 1,300 ரூபாய் அறவிடுவது எனவும், நெடுந்தீவிலிருந்து கச்சதீவிற்கான ஒரு வழிக்கட்டணமாக 1,000 ரூபாய் அறவிடுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

மேலும் இம்முறை சாரணர்கள் 25 பேர்வரை இத்திருவிழாவில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதுதுடன், கடற் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படவுள்ள படகுகள் சேவை மற்றும் அவை புறப்படும் நேரங்கள் தொடர்பாக கடற்படை அதிகாரிகளுடன் விரிவாக கலந்துரையாடப்பட்டன. 

யாத்திரிகர்களுக்கு 14 ஆம் திகதி இரவு உணவும், 15 ஆம் திகதி காலை உணவும் வழங்குவதற்குரிய ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

மேலும் அவர்களுக்கான தங்குமிட வசதிகள், உணவு வசதிகள், பாதுகாப்பு, சுகாதாரத் தேவைகள், மலசல கூட வசதிகள், குடிநீர் தேவைகள், பாதுகாப்பு, ஒலி, ஒளி வசதிகள், கடல் மற்றும் தரைப் போக்குவரத்து ஒழுங்குகள், ஆலயச்சூழல் துப்பரவு செய்தல் மற்றும் கழிவு முகாமைத்துவம், தொலைத்தொடர்பு வலையமைப்பு வசதிகள் (Dialog,mobital) ஊடகங்களுக்கான அனுமதி தொடர்பான விடயங்கள் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மறை மாவட்ட குரு முதல்வர் ஆயர் வணக்கத்துக்குரிய அருட்தந்தை P.J. ஜெபரட்ணம், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), வட மாகாணப் பிரதி கடற்படை கட்டளை தளபதி, மாவட்ட பிரதம கணக்காளர், அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப்பணிப்பாளர்,உதவி மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள் (நெடுந்தீவு, வேலணை, ஊர்காவற்றுறை), கடற்படை அதிகாரிகள், பிரதேச சபை பிரதிநிதி , யாழ்ப்பாண சாரணர் பிரதிநிதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

01__6___1_.jpg

01__1___1_.jpg

01__3___1_.jpg

01__2_.jpg

https://www.virakesari.lk/article/208508

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கச்சதீவு அந்தோனியார் ஆலயத் திருவிழாவுக்கு வருகை தருவோருக்கு யாழ். மாவட்ட செயலரின் முக்கிய அறிவிப்பு 

10 MAR, 2025 | 05:08 PM

image

(எம்.நியூட்டன்)

கச்சதீவு அந்தோனியார் ஆலயத் திருவிழாவுக்கு வருகை தருவோர் தமது முழுமையான விபரங்கள் தொடர்பான பிரதிகளை கொண்டுவருமாறு மாவட்ட செயலரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 

இந்த விடயம் தொடர்பாக கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழாவானது யாழ்.  மாவட்டச் செயலாளர் ஒருங்கிணைப்பின் கீழ் ஆயர் இல்லம் - யாழ்ப்பாணம், இலங்கை கடற்படை, இந்திய துணைத் தூதரகம் - யாழ்ப்பாணம், பிரதேச செயலகம் - நெடுந்தீவு, பிரதேச சபை - நெடுந்தீவு மற்றும் சம்பந்தப்பட்ட சகல திணைக்களங்களினது முழுமையான ஒத்துழைப்புடன் 2025.03.14 மற்றும் 2025.03.15 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில் திருவிழா தொடர்பாக கீழ் குறிப்பிடப்படும் தகவல்களை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் நோக்கில் தங்களது பத்திரிகையில் செய்தியாக பிரசுரித்து உதவுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

14ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 4.00 மணி தொடக்கம் மு.ப 11.30 மணி வரை அரச பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திலிருந்து குறிக்கட்டுவான் வரை சேவையில் ஈடுபடுத்தப்படும்.

கச்சதீவுக்கான படகு சேவையானது குறிக்கட்டுவான் இறங்குதுறையில் இருந்து 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 5.00 மணி முதல் மு.ப 12.00 மணி வரை சேவையில் ஈடுபடுத்தப்படும்.

குறிகட்டுவானில் இருந்து பயணிக்கும் ஒரு நபருக்கான படகிற்குரிய ஒரு வழிப் பயணக் கட்டணம் ரூ.1300 ஆகும்.

கச்சதீவுக்கு குழுவாக / தனியாக வருகை தரும் மக்கள் அவர்களது முழுப் பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம், தொலைபேசி இலக்கம், வயது, பால்நிலை மற்றும் அவர்கள் பயணிக்கும் படகு இலக்கம், படகின் வகை, படகோட்டியின் பெயர் மற்றும் தொலைபேசி இலக்கம் ஆகிய விபரங்களை இரு பிரதிகளில் கொண்டுவருமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

வெளிமாவட்டங்களிலிருந்து தமது சொந்த படகுகளில் திருவிழாவுக்கு செல்வோர் தமது வசிப்பிடங்களுக்கு அருகிலுள்ள கடற்படை முகாம்களில் தொடர்புகொண்டு உரிய கடற்பயணப் பாதுகாப்பு அனுமதியினை பெற்றுக்கொள்வதுடன் 2025.03.14ஆம் திகதி பி.ப 4.00 மணிக்கு முன்னதாக கச்சதீவை வந்தடைவதற்கேற்றவாறு தங்களது பயணங்களை ஆரம்பிக்கவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கச்சதீவு அந்தோனியார் ஆலயத் திருவிழாவில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு 14.03.2025ஆம் திகதி இரவு உணவு மற்றும் 15.03.2025 காலை  உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயமானது யாத்திரிகர்களின் புனித தலமாக உள்ளதால் மதுபானம் கொண்டு செல்லுதல் மற்றும் பாவித்தல் என்பன முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது என்றுள்ளது.

https://www.virakesari.lk/article/208825

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன அரசாங்கம் தெரிவித்துள்ளது

Published By: VISHNU

12 MAR, 2025 | 03:24 AM

image

2025 மார்ச் 14 மற்றும் 15ஆம் திகதிகளில் வரலாற்று சிறப்புமிக்க அந்தோணியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவை நடாத்துவதற்கு தேவையான அனைத்து பொருட்களையும் கடல் வழியாக கச்சத்தீவுக்கு கொண்டு வர கடற்படை கப்பல்கள் தொடர்ந்து ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், திருவிழாவை வெற்றிகரமா நடத்த தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை நிறுவும் பணியானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

WhatsApp_Image_2025-03-11_at_2.56.01_PM.

அதன்படி, இவ்விழாவுக்கு வரும் கப்பல்களுக்கு தற்காலிக இறங்கு துறைகளை அமைத்தல், குடிநீர் வசதிகள் அமைத்தல், சுகாதார வசதிகள் அமைத்தல், சாலைகள் அமைத்தல், மின்சார வசதிகள் அமைத்தல், மருத்துவ வசதி உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் இன்று (2025 மார்ச் 10) இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதுடன், இன்று (2025 மார்ச் 10) பெருவிழாவிற்கு வரும் மக்களுக்கு தகவல் தொடர்பு வசதிகளை வழங்குவதற்காக கச்சத்தீவில் தகவல் தொடர்பு கோபுரம் நிறுவும் பணியானது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

WhatsApp_Image_2025-03-11_at_2.56.00_PM.

மேலும், தீவு மற்றும் கரையோர பகுதிகளில் சட்டவிரோத செயல்களை தடுக்கவும், பக்தர்களின் பாதுகாப்பிற்காகவும் பாதுகாப்பு கமரா அமைப்பை பொருத்தும் பணி நிறைவடைந்துள்ளதுடன், அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளை நிறுவ கடற்படையின் முழு உழைப்பு, தொழில்நுட்ப மற்றும் வள பங்களிப்பை வழங்குவதற்கு  ஏனைய அரச நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து  செயற்பட்டுவருகின்றனர்.

WhatsApp_Image_2025-03-11_at_2.56.00_PM_

WhatsApp_Image_2025-03-11_at_2.55.59_PM.

WhatsApp_Image_2025-03-11_at_2.55.58_PM.

WhatsApp_Image_2025-03-11_at_2.55.59_PM_

https://www.virakesari.lk/article/208954

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய மீனவர்களுக்கு எதிராக கச்சத்தீவு உற்சவத்தை புறக்கணிக்க இலங்கையில் தீர்மானம்

இலங்கை, மீனவர்கள்

கட்டுரை தகவல்

  • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்

  • பதவி, பிபிசி தமிழுக்காக, இலங்கை

  • 48 நிமிடங்களுக்கு முன்னர்

இந்திய மற்றும் இலங்கை மீனவர்கள் பிரச்னை வலுப் பெற்றுள்ள பின்னணியில், கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய உற்சவத்தை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இலங்கை தரப்பு முன்னெடுத்துள்ளது.

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த உற்சவம் நாளை(மார்ச் 14) மற்றும் நாளை மறுநாள் (மார்ச் 15) நடைபெற உள்ளது.

இந்த நிலைமையில், இந்த முறை நடைபெறுகின்ற கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய உற்சவத்தில் தாம் பங்கேற்க போவதில்லை என யாழ் மாவட்ட மீனவ சங்கங்கள் தெரிவிக்கின்றன.

இந்திய மீனவர்களின் அத்துமீறிய பிரவேசத்தை கண்டித்து இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாக யாழ் மாவட்ட கிராமிய அமைப்புக்களின் சம்மேளனத்தின் தலைவர் செல்லத்துரை நட்குணம் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

இலங்கை, மீனவர்கள்

இலங்கை கடற்படையின் பூரண ஒத்துழைப்புடன் இந்த உற்சவம் நடத்தப்படவுள்ளது.

இந்த விழாவுக்கு வரும் படகுகளுக்கு தற்காலிக இறங்கு துறைகளை அமைத்தல், குடிநீர் வசதிகளை ஏற்படுத்துதல், சுகாதார வசதிகள் அமைத்தல், சாலைகள் அமைத்தல், மின்சார வசதிகள் அமைத்தல், மருத்துவ வசதி உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை கூறுகின்றது.

மேலும், தீவு பகுதி மற்றும் கரையோர பகுதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும், பக்தர்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டும் பாதுகாப்பு கேமராக்களை பொருத்தும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று இலங்கை கடற்படை கூறுகின்றது.

அத்துடன், பக்தர்களுக்கான தொலைத்தொடர்பு வசதிகளை ஏற்படுத்தும் நோக்கில் தொலைத்தொடர்பு கோபுரமொன்று பொருத்தப்பட்டுள்ளதாகவும் இலங்கை கடற்படை தெரிவித்தது.

இந்த ஆண்டு உற்சவத்திற்கு 9000 பக்தர்கள் கலந்துக்கொள்ளவுள்ளதாக யாழ்ப்பாணம் அரசாங்க அதிபர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை சார்பில் 4000 பக்தர்களும், இந்தியா சார்பில் 4000 பக்தர்களும் கலந்துக்கொள்ளவுள்ளதுடன், 1000 அதிகாரிகளும் கலந்துக்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியாவிலிருந்து இதுவரை 3464 பக்தர்கள் பதிவு செய்துள்ளனர். இராமேஸ்வரத்திலிருந்து வருகைத் தர இவர்கள் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக யாழ் அரசாங்க அதிபர் அலுவலக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

கச்சத்தீவு கொடியேற்றம் மார்ச் 14-ஆம் தேதி மாலை 4 மணிக்கு இடம்பெறும் அதேவேளை, 15-ஆம் தேதி காலை 7.30க்கு சிறப்பு திருப்பலி கூட்டு பிரார்த்தனை நடத்தப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து கொடியிறக்கமும் இடம்பெறவுள்ளது.

இலங்கை, மீனவர்கள்

இந்திய மீனவர்களின் வருகை

இலங்கை கடற்பரப்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக தொடர்ச்சியாக இந்திய மீனவர்கள் வருகைத் தருவதாக இலங்கை மீனவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

மேலும், இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்ததாக இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ச்சியாக கைது செய்து வருகின்றனர்.

2025ம் ஆண்டின் இதுவரையான காலம் வரை இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டின் கீழ் 145 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையின் ஊடகப் பேச்சாளர், பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

அத்துடன், இந்த ஆண்டின் இதுவரையான காலம் வரை 19 இந்திய படகுகளை தமது பொறுப்பிற்கு எடுத்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவர்களின் உடமைகள், அரசுடமையாக்கப்படும் என்ற சட்டம் 2018ம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தினால் அமல்படுத்தப்பட்டது.

இந்த சட்டம் கொண்டு வரப்பட்ட 2018ம் ஆண்டு முதல் இதுவரையான காலம் வரை, இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட மீனவர்களின் படகுகள் அரசுடமையாக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி, இந்த சட்டம் கொண்டு வரப்பட்ட காலப் பகுதி முதல் இன்று வரையான காலம் வரை 150திற்கும் அதிகமான படகுகள் இலங்கை அரசாங்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில், நீரியல்வளம் மற்றும் கடல்வள அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை கடற்படையினால் கைப்பற்றப்பட்டட 124 படகுகள் அரசுடமையாக்கப்பபட்டுள்ளதுடன், 24 படகுகள் தொடர்பில் வழக்குகள் இடம்பெற்று வருவதாக கடற்றொழில், நீரியல்வள, கடல்வள அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன், பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

இலங்கை, மீனவர்கள்

படக்குறிப்பு,அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன்

இலங்கை மீனவர்கள் எதிர்ப்பு

தமிழர்கள் என்ற உணர்வு இல்லாத நிலையில், இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் வந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக யாழ் மாவட்ட கிராமிய அமைப்புக்களின் சம்மேளனத்தின் தலைவர் செல்லத்துரை நட்குணம் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

''ஏற்கனவே இருந்த நிலைமையை விடவும் அதிகளவில் இந்திய மீனவர்கள் வருகின்றார்கள். அரசாங்கம் தன்னுடைய செயலை செய்துக்கொண்டிருக்கின்றது. இந்திய மீனவர்களை கைது செய்துக்கொண்டிருக்கின்றார்கள். எங்களை பொறுத்தவரை அது தற்காலிக தீர்வாகவே இருக்கின்றது. எங்களுக்கு தேவை எங்களுடைய மீனவர்கள் சுதந்திரமாக எங்களுடைய பிரதேசத்தில் மீன்பிடிப்பதற்கான வசதிகளை எங்களுடைய அரசாங்கம் செய்து தர வேண்டும்"

தொடர்ந்து பேசிய செல்லத்துரை நட்குணம், "எங்களுடைய எல்லையை தாண்டி இந்திய இழுவை படகுகள் வராமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பது எங்களுடைய அரசாங்கத்தின் வேலை. அதனை நிச்சயமாக செய்ய வேண்டும். தொப்புள் கொடி உறவு என்று சொல்லி சொல்லி இந்த நிலையை செய்து கொண்டிருக்கின்றார்கள். எங்களுடைய மீனவர்கள் கடலில் போடும் வலைகளை இந்திய படகுகள் சுக்கு நூறாக இல்லாது செய்கின்றன.

கடன்களை வாங்கி தான் இந்த தொழிலை செய்கின்றார்கள். இந்திய மீனவர்களை கைது செய்ய வேண்டாம் என்று சொல்லி அங்கு போராட்டங்களை நடத்துகின்றனர். தமிழக மீனவர்கள், தமிழக மக்களுக்கு நாங்கள் ஆதரவு. எங்களுக்கு அவர்கள் மீது விருப்பம். இந்த செயலை பார்க்கும் போது அவர்கள் மீது வெறுப்பு வருகின்றது. தமிழன் என்ற உணர்வு இல்லாத நிலையில் அவர்கள் இந்த வேலையை செய்துக்கொண்டிருக்கின்றார்கள்'' என தெரிவிக்கின்றார்.

படக்குறிப்பு,பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

கச்சத்தீவை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்தியாவிற்கு விட்டு கொடுக்க போவதில்லை என யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்கள் கூட்டுறவு சம்மேளனத்தின் உபத் தலைவர் அந்தோனிபிள்ளை பிரான்ஸிஸ் ரத்னகுமார் தெரிவிக்கின்றார்.

''கச்சத்தீவு எங்களுடையது. நாங்கள் அதை சுற்றி மீன்பிடிக்கின்றோம். கச்சத்தீவு அந்தோனியார் கோவிலுக்கு இந்தியாவில் இருந்தும் வருவார்கள். இலங்கையில் இருந்தும் போவார்கள். முன்னாள் கடற்றொழில் அமைச்சர் இரண்டு கச்சத்தீவு உற்சவத்திற்கு அழைத்து சென்றார். அந்த மீனவர்களுடன் நீங்கள் பேச வேண்டும் என சொல்லி அழைத்து சென்றார். ஆனால் அது தோல்வி அடைந்தது. நாங்கள் இங்கு வருவது பிழை என்று சொல்லிவிட்டு, அடுத்த நாளே இங்கு வந்து விடுவார்கள். அதைபற்றி நாங்கள் நம்புவதற்கு தயார் இல்லை. அரசாங்கம் இந்திய இழுவை படகை நிறுத்த வேண்டும். இந்தியாவிற்கு எங்களுடைய கச்சத்தீவை நாங்கள் எந்த காரணத்திற்காகவும் விட்டு கொடுக்க மாட்டோம்.'' என அந்தோனிபிள்ளை பிரான்ஸிஸ் ரத்னகுமார் குறிப்பிட்டார்.

இலங்கை

படக்குறிப்பு,அந்தோனிபிள்ளை பிரான்ஸிஸ் ரத்னகுமார்

'கச்சத்தீவு உற்சவத்தை புறக்கணிக்கின்றோம்'

இந்திய மீனவர்களினால் தாம் எதிர்நோக்கும் அவல நிலைமையை அரசாங்கத்திற்கு தெரிவிப்பதற்காக இம்முறை கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த உற்சவத்தை தவிர்த்துக்கொள்வதாக யாழ் மாவட்ட கிராமிய அமைப்புக்களின் சம்மேளனத்தின் தலைவர் செல்லத்துரை நட்குணம் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

"இந்த பிரதேசத்தில் நாங்கள் சுதந்திரமாக தொழில் செய்ய வேண்டும் என்பதற்காகவும், நாங்கள் படுகின்ற அவல நிலைமையை தெரியப்படுத்துவதற்காக இந்த வருட புனித தலத்தின் விசேடத்தை யாழ் மாவட்ட கிராமிய அமைப்புக்களின் சம்மேளனம் தவிர்த்துக்கொள்கின்றது. அரசாங்கத்திற்கு இந்த நிலைமையை தெரியப்படுத்துவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. எங்களுக்கு தேவை ஒரு நிரந்தர தீர்வு", என்று செல்லத்துரை நட்குணம் குறிப்பிட்டார்.

சங்கம் என்ற வகையில் மாத்திரமே தாம் உற்சவத்தை புறக்கணிப்பதாக தெரிவித்த அவர், தனிப்பட்ட ரீதியில் பக்தர்களுக்கு செல்ல முடியும் எனவும் கூறினார்.

இலங்கை

படக்குறிப்பு,செல்லத்துரை நட்குணம்

கச்சத்தீவு உற்சவத்தை புறக்கணிக்கும் தீர்மானம் தொடர்பில் அரசாங்கத்தின் பதில்

கச்சத்தீவு பிரச்னை என்பது வேறு, மீனவப் பிரச்னை என்பது வேறு என்ற அடிப்படையில், கச்சத்தீவு உற்சவத்தை புறக்கணிக்க வேண்டாம் என கடற்றொழில், நீரியல்வளம், கடல் வளம் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன், மீனவ சங்கங்களிடம் கேட்டுக்கொண்டார்.

''எந்த சங்கங்கள் புறக்கணிக்கின்றார்கள் என்பது தொடர்பில் உண்மையில் எனக்கு தெரியாது. இருந்த போதிலும் நான் ஒரு விடயத்தை கூறுகின்றேன். இங்கிருக்கின்ற மீனவர்களுக்கும் சரி, இந்திய மீனவர்களுக்கும் சரி, இந்தியாவிலிருந்து வருகைத் தருகின்ற பக்தர்களும் சரி, இலங்கையிலுள்ள பக்தர்களும் சரி, இந்த கச்சத்தீவு பிரச்னையையும், இந்த மீன்பிடி பிரச்னையையும் ஒன்றாக இணைத்துக்கொள்ள வேண்டாம்.

அது வேறு இது வேறு. அந்த நிகழ்வுக்கு நானும் கூட போகலாம் என்று தீர்மானித்திருக்கின்றேன். அந்த ஆலயத்திற்கு சென்று ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ள வேண்டும்", என்று அமைச்சர் கூறினார்.

மேலும் பேசிய அவர், "அரசாங்கத்தோடு கொடுக்கல் வாங்கல் செய்ய வேண்டும் என்றால், நேரடியாக செய்யலாம். எங்களுடைய மீனவர்களுக்கு அன்பாக அழைக்கின்றோம். உங்களுக்கான கதவு 24 மணித்தியாலங்களும் திறந்தே வைக்கப்பட்டுள்ளது. எந்த பிரச்னையும் முன்னர் போன்று இல்லை. நேரடியாக வரலாம். பேசலாம். உரையாடலாம். இந்த பிரச்னை எங்களுக்குரிய பிரச்னை இல்லை. நமக்குள் பிரச்னை. நாங்கள் நீங்கள் என அனைவரும் சேர்ந்து தீர்க்கப்பட வேண்டிய பிரச்னை. அதனால் நீங்கள் வேறு அல்ல. நான் வேறு அல்ல. இந்த நாட்டில் புதிய அத்தியாயம் ஆரம்பமாகியுள்ளது, இதற்கான ஒத்துழைப்பை பெற்றுத்தர வேண்டும் என்று மக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்' என பிபிசி தமிழிடம் குறிப்பிட்டார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/cj67w925ndno

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20250315-WA0012.jpg?resize=750%2C375

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா நிறைவு.

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்றைய தினம் காலை திருப்பலியுடன் நிறைவடைந்தது.

நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் திருச்செபமாலை ஆரம்பமாகி, தொடர்ந்து திருச்சிலுவை பாதை, திருப்பலி, கருணை ஆராதனை மற்றும் புனித அந்தோனியாரின் திருச்சொரூப பவனி என்பன இடம்பெற்றது.

இன்றைய தினம் சனிக்கிழமை, காலை 6 மணிக்கு திருச்செபமாலை ஆரம்பமாகி, யாழ் மறைமாவட்ட ஆயர் தலைமையில் திருநாள் திருப்பலி இடம்பெற்று, திருவிழா இனிதே நிறைவடைந்தது.

https://athavannews.com/2025/1425253

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.