Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதா, 27 கிலோ நகை, சொத்துக்குவிப்பு வழக்கு, தமிழ்நாடு அரசு

படக்குறிப்பு, தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும், அவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட நகைகளும்

கட்டுரை தகவல்

  • எழுதியவர், இம்ரான் குரேஷி

  • பதவி, பிபிசிக்காக

  • 15 பிப்ரவரி 2025

தமிழ்நாட்டின், மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகள், பணம் மற்றும் சொத்து ஆவணங்கள் மூன்று டிரங்க் பெட்டிகளில் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏகே-47 ஆயுதமேந்திய போலீசாரின் பாதுகாப்புடன், இன்று மாலை பெங்களூருவில் உள்ள நீதிமன்றத்தில் இருந்து சென்னைக்கு அவை கொண்டு வரப்பட்டன.

கடந்த 1996ஆம் ஆண்டில் ஜெயலலிதாவிடம் இருந்து இவை கையகப்படுத்தப்பட்டன. அவை, 36வது கூடுதல் சிவில் மற்றும் செஷன்ஸ் நிதிபதி ஹெச்.எஸ்.மோகன் உத்தரவின் கீழ், இப்போது தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

வைரக் கற்கள், மரகதங்கள், மாணிக்கங்கள் பதிக்கப்பட்ட நகைகள் உள்பட 27 கிலோகிராம் தங்க நகைகள், மூன்று வெள்ளிப் பொருட்கள் ஆகியவை கையகப்படுத்தப்பட்டவற்றில் அடக்கம்.

ரூ.59,870 மற்றும் ரூ.1,60,514 மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகள் (அப்போதைய ரூபாய் நோட்டுகள்), 10 கோடியே 18 லட்சத்து 75 ஆயிரத்து 591 ரூபாய் (ரூ.10,18,78,591.67) மதிப்பிலான நிரந்தர வைப்பு நிதி(2023இன்படி) ரசீதுகள் ஆகியவையும் தமிழ்நாடு காவல் துறை குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டன.

இவற்றை உள்துறை இணை செயலாளர் ஜே.ஆன் மேரி ஸ்வர்ணா தலைமையிலான தமிழக அதிகாரிகள், சிறப்புப் புலனாய்வுப் பிரிவு எஸ்.பி.விமலா, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் மற்றும் பிற அதிகாரிகளிடம் நீதிமன்றம் ஒப்படைத்தது.

ஒப்படைக்கப்பட்ட சொத்து ஆவணங்களில் சென்னை, காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருப்பத்தூர், தூத்துக்குடி ஆகிய இடங்களில் அமைந்துள்ள 6 நிறுவனங்களுக்குச் சொந்தமான 1,526 ஏக்கர் நிலத்தின் சொத்துகளின் ஆவணங்களும் அடக்கம்.

ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் இந்த உத்தரவு கடந்த 2014ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதியன்று பிறப்பிக்கப்பட்டது.

"பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளை என்ன செய்வது என்பதை முடிவு செய்வது தமிழக அரசின் பொறுப்பு என்று நீதிமன்றம் கூறியுள்ளது. அதாவது, சொத்துகளை மதிப்பிட்டு ஏலத்தில் விற்று பணத்தை மீட்டெடுக்கலாம் அல்லது கருவூலத்திற்கு அனுப்பலாம்," என்று சிறப்பு அரசு வழக்கறிஞர் கிரண் எஸ்.ஜவாலி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

"இந்த வழக்கில் மக்களின் உணர்ச்சிகள் பெருமளவு சம்பந்தப்பட்டு இருப்பதாலும், இந்தப் பொருட்கள் சட்டவிரோத சொத்துகள் என அறிவிக்கப்பட்டு, அதற்கேற்ப தமிழக அரசு பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டு இருப்பதாலும், கையகப்படுத்தப்பட்ட நிலங்களை என்ன செய்வது என்று தமிழக அரசே முடிவு செய்வது சரியாக இருக்கும்," என்று நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

அதோடு, அவற்றை என்ன செய்யலாம் என்பதற்குச் சில வழிகளையும் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. அதாவது, "இந்த நிலங்கள், பொது நோக்கங்களுக்காகவோ, வளர்ச்சிக்கான நிலங்களாகவோ அல்லது நிலமற்ற மக்களுக்கு வழங்கவோ பயன்படுத்தப்படலாம். இல்லையேல், அந்த நிலங்களை விற்று அரசு நிதி திரட்டவும் பயன்படுத்தலாம்," என்று உத்தரவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா, 27 கிலோ நகை, சொத்துக்குவிப்பு வழக்கு, தமிழ்நாடு அரசு

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில், நகைகள் மற்றும் நிலங்களை ஏலம் விடலாம் எனவும் அந்த வருமானத்தைப் பொது நோக்கத்திற்காகப் பயன்படுத்தலாம் எனவும் நீதிபதி மோகன் குறிப்பிட்டுள்ளார்.

"இந்த வழக்கின் உண்மைகளையும், நீதியையும் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு இந்த வருவாயை மாநிலம் முழுவதும் உள்ள குழந்தைகளின் ஆரம்பக் கல்விக்குத் தேவையான உள்கட்டமைப்புகளைக் கிராமப்புறங்களில் உருவாக்கப் பயன்படுத்தும்'' என்று தான் நம்புவதாகவும் அவர் கூறினார்.

"அரசியலமைப்புச் சட்டத்தைப் பின்பற்றி, மக்களின் நலனுக்காகத் தங்கள் கடமைகளை எச்சரிக்கையாகவும், கவனமாகவும் அதிகாரத்தில் இருப்பவர்கள் நிறைவேற்ற வேண்டும் என்ற செய்தியை இது தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு அனுப்பும்," என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

வி.கே.சசிகலா மற்றும் இளவரசியிடம் இருந்து வசூலிக்கப்பட்ட 20 கோடியே 20,000 ரூபாய் அபராதத் தொகையில், கர்நாடக அரசுக்கு ஐந்து கோடி ரூபாயும், விசாரணை நடத்துவதற்கும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கும் ஏற்பட்ட செலவுகளுக்காகக் கூடுதலாக எட்டு கோடி ரூபாயும் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

சொத்துக் குவிப்பு வழக்கில் தனது தண்டனையை உறுதி செய்த கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஜெயலலிதா மே 11, 2015 அன்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மேல்முறையீட்டு மனுவில் உச்சநீதிமன்றம் முடிவெடுப்பதற்கு முன்பாகவே, அவர் டிசம்பர் 6, 2016இல் காலமானார்.

அவரது சொத்துகளை ஏலம் விடவோ, விற்கவோ சிறப்பு பொது வழக்கறிஞரை நியமிக்கக் கோரி வழக்கறிஞர் டி நரசிம்மமூர்த்தி சிறப்பு நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து, சிறப்பு பொது வழக்கறிஞர் 2024இல் நியமிக்கப்பட்டு, இறுதி உத்தரவுகள் இன்று நிறைவேற்றப்பட்டன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்த 27 கிலோ நகை, 1,526 ஏக்கர் சொத்து

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதாவின் 27 கிலோ நகை, 1,526 ஏக்கர் சொத்துகளை தமிழ்நாடு அரசு ஏலம் விடுமா?

ஜெயலலிதா, சொத்து குவிப்பு வழக்கு, அதிமுக, திமுக

படக்குறிப்பு, தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகள்

கட்டுரை தகவல்

  • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 22 பிப்ரவரி 2025, 01:49 GMT

    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட தங்க, வைர நகைகள் மற்றும் சொத்து ஆவணங்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டன.

இவற்றை விரைவில் ஏலம் விடுவதற்கான வாய்ப்புள்ளதாக கருதப்படும் நிலையில், ஏல நடைமுறைகள் தொடங்கினால் அதை எதிர்த்து நீதிமன்றம் செல்ல உள்ளதாக கூறுகிறார், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா.

இந்த விஷயத்தில் அதிமுக தொடர்ந்து மௌனம் காக்கிறது. ஜெயலலிதாவின் உடைமைகளை ஏலம் விடும் முடிவை தமிழ்நாடு அரசு எடுக்குமா?

சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பில் கூறப்பட்டது என்ன?

1996 ஆம் ஆண்டு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வீட்டில் ஊழல் ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை சோதனை நடத்தியது.

இந்தச் சோதனையில் ஜெயலலிதாவின் வீட்டில் இருந்து நகைகள், நில ஆவணங்கள், வங்கி வைப்பு நிதி தொடர்பான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதில், 27 கிலோ தங்க, வைர நகைகளும் சென்னை, காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருப்பத்தூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் உள்ள 1526 ஏக்கர் நிலங்களும் அடங்கும் என கர்நாடக நீதிமன்றத்தில் நடந்த சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளன. இவை தவிர, 11,344 பட்டுப்புடவைகள், 750க்கும் மேற்பட்ட காலணிகள், 91 கைக்கடிகாரங்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த நகை மற்றும் சொத்து ஆவணங்களை என்ன செய்வது?' என 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதியன்று வெளியான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பில் சில வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன.

அந்த தீர்ப்பில், பறிமுதல் செய்யப்பட்ட நிலங்களை பொதுநோக்கம் அல்லது வளர்ச்சிக்காக பயன்படுத்தலாம். நிலங்களை விற்று அரசு நிதி திரட்டலாம்' என்று கூறப்பட்டுள்ளது.

ஜெயலலிதா, சொத்து குவிப்பு வழக்கு, அதிமுக, திமுக

ஏலம் விடப்படுமா?

"பல ஆண்டுகள் கடந்தும் கர்நாடக அரசுக்கு வழக்குக்கான செலவுத் தொகை வழங்கப்படவில்லை" எனக் கூறி 2023 ஆம் ஆண்டு சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி வழக்கு தொடர்ந்தார்.

பெங்களூரூ குடிமையியல் நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில், கர்நாடக மாநில அரசின் கருவூலத்தில் உள்ள ஜெயலலிதாவின் நகை மற்றும் சொத்து ஆவணங்களை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதியன்று இவை தமிழ்நாடு அரசின் கருவூலத்துக்கு வந்துவிட்ட நிலையில், வருவாய்த்துறை மூலம் ஏலம் விடுவது தொடர்பாக உயர்மட்ட ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

ஆனால், "ஏலம் விடுவது தொடர்பாக இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை" என உயர் அதிகாரி ஒருவர் கூறியதாக டிடி நெக்ஸ்ட் ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறை செயலர் ராஜேஷ் லக்கானியின் கருத்தை அறிய பிபிசி தமிழ் முயன்றது. இந்த கட்டுரை வெளியாகும் வரையிலும், அவரிடம் இருந்து பதில் கிடைக்கவில்லை. அவர் பதிலளித்ததும் இந்த கட்டுரையில் சேர்க்கப்படும்.

'வருத்தத்தைக் கொடுக்கும் செயல்' - ஜெ.தீபா

ஜெயலலிதா, சொத்து குவிப்பு வழக்கு, அதிமுக, திமுக

பட மூலாதாரம்,FACEBOOK

படக்குறிப்பு,ஏல நடைமுறைகள் தொடங்கினால் அதை எதிர்த்து நீதிமன்றம் செல்ல உள்ளதாக கூறுகிறார், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா

"முன்னாள் முதலமைச்சரின் உடைமைகளை ஏலம் விடுவது என்பது வருத்தத்தைக் கொடுக்கும் ஒரு செயல்." என்றார் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "இவற்றை எங்களிடம் ஒப்படைக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். ஆனால், நான் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. தமிழ்நாடு அரசிடம் ஜெயலலிதாவின் நகை உள்பட அவரது பொருட்களை கர்நாடக அரசு ஒப்படைத்துவிட்டது. இவற்றை ஏலம் விடுவதற்கு சில மாதங்கள் ஆகும். இதில் அடுத்தகட்டமாக செய்ய வேண்டிய பணிகள் குறித்து வழக்கறிஞரிடம் ஆலோசிக்க உள்ளேன்" என்கிறார்.

இதுதொடர்பாக அ.தி.மு.க நிர்வாகிகள் மௌனம் காப்பது குறித்துப் பேசிய ஜெ.தீபா, "ஜெயலலிதா தொடர்புடைய எந்த வழக்காக இருந்தாலும் அதில் அ.தி.மு.க தலையிடுவது இல்லை. எந்தவித கருத்தையும் அவர்கள் இதுவரை தெரிவிக்கவில்லை" எனக் கூறுகிறார்.

'ஜெயலலிதாவின் தனிப்பட்ட வழக்கு'

"தவிர, புதிதாக அவர்கள் எதையும் செய்யவில்லை என நாங்கள் கேட்கவும் முடியாது. எதிர்பார்க்கவும் முடியாது. இது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீது சுமத்தப்பட்ட தனிப்பட்ட வழக்குகளாக கருதப்படுகிறது" எனவும் அவர் பிபிசி தமிழிடம் குறிப்பிட்டார்.

"ஜெயலலிதாவின் தனிப்பட்ட சொத்துகளாக இவற்றைப் பார்க்க வேண்டும்" எனக் கூறும் ஜெ.தீபா, "அவரது உடைமைகள் தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் நோட்டீஸ் கொடுக்கும் வரை நாங்களும் தலையிடவில்லை" எனக் கூறுகிறார்.

இந்த விவகாரத்தை சட்ட ரீதியாகவே தங்கள் குடும்பம் எதிர்கொள்ள உள்ளதாகவும் ஜெ.தீபா குறிப்பிட்டார்.

அ.தி.மு.க மௌனம் காப்பது ஏன்?

ஜெயலலிதா, சொத்து குவிப்பு வழக்கு, அதிமுக, திமுக

பட மூலாதாரம்,FACEBOOK

படக்குறிப்பு,பறிமுதல் செய்யப்பட்ட நகைகளுக்கு ஜெயலலிதாவே உரிமை கோரவில்லை எனக் கூறுகிறார் சி.பொன்னையன்

"ஏல விவகாரத்தில் அ.தி.மு.க மௌனமாக இருப்பது ஏன்?" என அக்கட்சியின் அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.பொன்னையனிடம் பிபிசி தமிழ் கேட்டது.

"முன்னாள் முதலமைச்சரின் உடைமைகளைப் பற்றிப் பேசுவது சரியாக இருக்காது. இது தனிப்பட்ட விவகாரம் என்பதால் கருத்து சொல்வதில் உடன்பாடு இல்லை" என்று மட்டும் அவர் பதில் அளித்தார்.

இதையே பிபிசி தமிழிடம் தெரிவித்த மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம், "பறிமுதல் செய்யப்பட்ட நகைகளுக்கு ஜெயலலிதாவே உரிமை கோரவில்லை. அதன்பிறகு அவர் நகைகளை அணிய மறுத்துவிட்டார். அவரே விரும்பாத ஒரு விஷயத்திற்குள் அ.தி.மு.க தலைமை செல்வதற்கு வாய்ப்பில்லை" எனக் கூறுகிறார்.

ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு மட்டுமே கடந்த அ.தி.மு.க அரசு முயற்சி எடுத்ததாக கூறும் ஷ்யாம், "அந்த வீடும் நீதிமன்ற தீர்ப்பின்படி ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகளுக்கு சென்றுவிட்டது" என்கிறார்.

'தாக்கத்தை ஏற்படுத்தாது' - மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம்

ஜெயலலிதா, சொத்து குவிப்பு வழக்கு, அதிமுக, திமுக

பட மூலாதாரம்,FACEBOOK

படக்குறிப்பு,ஏலம் விடுவது தொடர்பாக தமிழ்நாடு அரசு முடிவெடுக்கும்போது அரசியல்ரீதியாக பாதிப்பு வருமோ என்று தான் யோசிப்பார்கள் எனக் கூறுகிறார் ஷ்யாம்

"ஜெயலலிதாவின் உடைமைகளை ஏலம் விடுவது பொதுமக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்துமா?" எனக் கேட்டோம்.

"அதற்கான வாய்ப்புகள் இல்லை. 1996 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தோல்வி அடைந்தது. இதன்பிறகு நகை, புடவைகள் காட்சிப்படுத்தப்பட்டன. ஆனால், 1998 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 30 இடங்களில் அ.தி.மு.க வென்றது. மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை" என்கிறார்.

"தவிர, ஏலம் விடுவது தொடர்பாக தமிழ்நாடு அரசு முடிவெடுக்கும் போது அரசியல் ரீதியாக பாதிப்பு வருமோ என்று தான் யோசிப்பார்கள். அந்த வகையில் ஏலம் விடுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதே என்னுடைய கருத்தாக உள்ளது" எனக் கூறுகிறார் ஷ்யாம்.

தி.மு.க சொல்வது என்ன?

ஜெயலலிதா, சொத்து குவிப்பு வழக்கு, அதிமுக, திமுக

பட மூலாதாரம்,FACEBOOK

படக்குறிப்பு,ஏலம் விடுவதை மக்கள் வரவேற்கவே செய்வார்கள் எனக் கூறுகிறார் பேராசிரியர் கான்ஸ்டன்டைன்

ஆனால், இந்தக் கருத்தை தி.மு.க செய்தித் தொடர்பு செயலர் பேராசிரியர் கான்ஸ்டன்டைன் மறுக்கிறார்.

"ஏலம் விடுவதன் மூலம் என்ன நேரும் என்பதை நாங்கள் பார்க்கவில்லை. அது மக்கள் பணம். அதை மக்களிடம் சேர்க்கும் போது ஊழல் செய்வது குறித்து மற்றவர்கள் அச்சப்படும் சூழல் ஏற்படும்" என பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

"எந்த அரசாக இருந்தாலும் ஏலம் விட்டுத் தான் ஆக வேண்டும். இதில் அரசியல் ரீதியான லாப, நஷ்டத்தைவிட சமூகத்துக்கு என்ன பலன் என்று தான் பார்க்க வேண்டும்" எனவும் அவர் குறிப்பிட்டார்.

அந்த வகையில், ஏலம் விடுவதை மக்கள் வரவேற்கவே செய்வார்கள் எனக் கூறுகிறார் பேராசிரியர் கான்ஸ்டன்டைன்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cx2rywrrp4ko

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.