Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

“ஏனடி இந்த வேதனை..?”

மாலைக் கதிரவன் பனை மரங்களுக்குப் பின்னால் தன் கதிர்களை இழுத்து மூடிக்கொண்டு, நீலக்கடலில் குளிக்கும் போது, யாழ்ப்பாணத்தில் உள்ள மகிழ்மதியின் வீட்டிலும் நீண்ட நிழல்களை வீசியது. மகிழ்மதி இடைகழியில் [முன்னறையில்] அப்பொழுது அமர்ந்திருந்தாள். அவளது மெல்லிய விரல்கள் தூசி நிறைந்த அறையின் தரையில் எதோ வடிவங்களைத் தேடிக்கொண்டிருந்தது. கண்ணீரால் கனத்த அவள் கண்கள், வெளியே உற்றுப் பார்த்தன. அங்கு அடிவானம், அடைய முடியாத வாக்குறுதிகளால், அவளைக் கேலி செய்வதாகத் அவளுக்குத் தோன்றியது.

அவளது குழந்தைப் பருவத்தோழிசங்கவி, அவ்வேளை அங்கே வந்தாள். மகிழ்மதியின் முகத்தில் படிந்திருந்த வாட்டத்தைக் கண்டு, அவளின் மகிழ்ச்சியான வருகை தடுமாறியது. மகிழ்மதியும் சங்கவியும் ஒன்றாகப் பாடசாலை முதல் பல்கலைக்கழகம் வரை பிரிக்க முடியாத நண்பர்களாக இருந்தனர். அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தாழ்வாரங்கள் வழியாக உலாவும்போது கனவுகளையும் மறைவடக்கங்ளையும் [இரகசியங்கள்] பகிர்ந்து கொண்டனர். ஆனால் வாழ்க்கை அவர்களை மிகவும் வேறுபட்ட பாதையில் அழைத்துச் சென்றது.

“ஏனடி இந்த வேதனை..?”

அவள் அருகில் அமர்ந்து தோளில் மெதுவாகக் கையை வைத்துக் கொண்டு கேட்டாள் சங்கவி.

மகிழ்மதி நடுங்கும் ஒரு பெருமூச்சு விட்டாள். "இது ஒரு வலி அல்ல, சங்கவி, என்னால் உனக்கு எளிதாக அதை விளக்க முடியும்," என்றாள்.

"ம்ம்," சங்கவி ஊக்கப்படுத்தினாள்.

பேசும்போது மகிழ்மதியின் குரல் கொஞ்சம் நடுங்கியது. “அகவழகனுடன் நான் திருமணமான போது, எவ்வளவு மகிழ்வாக இருந்தேன்னு ஞாபகம் இருக்கா? அவர், நான் கனவு கண்ட எல்லாமே கொண்டவர் - கனிவானவர் மற்றும் குறிக்கோள், நம்பிக்கை நிறைந்தவர். கனவுகள் மற்றும் வாக்குறுதிகள் நிறைந்த ஒரு வாழ்க்கையை நாங்கள் ஒன்றாகத் திட்டமிட்டோம். ஆனால் எங்கள் கடிமணத்திற்கு ஆறு மாதங்களுக்குப் பிறகு, அவர் எங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையைத் தேடுவதற்காகத் ஆஸ்திரேலியா சென்றார். அவர் அங்கு தன்னை உறுதிப்படுத்தியவுடன், என்னையும் விரைவில் பிறக்கவிருக்கும் எங்கள் மகளையும் அவருடன் ஒன்று சேர அழைப்பதாகக் கூறினார்.

சங்கவி தலையசைத்தாள், தோழிக்காக மனம் கனத்தது.

“அது மூணு ஆண்டுகளுக்கு முன்னாடி சங்கவி. மூன்று நீண்ட ஆண்டுகள். எங்கள் மகள் குயிலி இப்போது நடந்து ஓடி விளையாடுகிறாள். அவள் என்னை ‘அம்மா’ என்று அழைக்க ஆரம்பித்து இரண்டு ஆண்டுகள் தாண்டிவிட்டது. ஆனாலும், நாங்கள் இன்னும் என் பெற்றோர் வீட்டில்தான், அவர்களுக்குப் பாரமாக இருக்கின்றோம். கணவன் இல்லாத பெண்ணாக, திசை தெரியாத மகளாக உணர்கிறேன். இது என்ன கல்யாண வாழ்க்கை சங்கவி?”

தன் கதையைச் சொல்ல ஆரம்பித்ததும் மகிழ்மதியின் குரல் தணிந்தது. “எங்கள் திருமணத்திற்குப் பிறகு நாட்கள் அழகாக இருந்தன சங்கவி. அகவழகனும் நானும் இன்பம், அன்பு மற்றும் அமைதியான எதிர்கால நம்பிக்கைகள் ஆகியவற்றால் மிகவும் மகிழ்வாக இருந்தோம். அரசாங்கப் பொறியியலாளர் அகவழகனுக்கு ஒரு நிலையான வேலை இருந்தது, யாழ்ப்பாணத்தின் பனை மரங்களுக்கு நடுவே அமைந்திருந்த எங்களின் சுமாரான வீடு அரவணைப்பும் சிரிப்பும் நிறைந்த இடமாக இருந்தது."

"தினமும் காலையில் அகவழகன் சீக்கிரமாக எழுந்து தேநீர் போடுவார், இரண்டு சுவையான தேநீர் கோப்பைகளை முன்னறைக்கு கொண்டுவந்து, அங்கு எனக்கு பக்கத்தில் அமருவார். எனது புடவை காற்றில் மெதுவாக படபடக்கும் அழகை அனுபவித்தபடி ஏதேதோ பேசுவார். அன்றைய பொதுவான நிகழ்வுகள், எம் குடும்பத்தைத் தொடங்குவதற்கான கனவுகள் மற்றும் முற்றத்தில் ஒரு சிறிய தோட்டம் கட்டுவதற்கான திட்டங்கள், இப்படிப் பல பல."

சங்கவி தலையசைத்து, அவளைத் தொடர ஊக்கப்படுத்தினாள்.

"அந்த ஒரு இனிமையான இரவில்," மகிழ்மதி சொன்னாள், அவள் கண்கள் அப்பொழுது ஒளிர்ந்தன. "நாங்கள் கடற்கரைக்குச் சென்றோம். திங்கள் மிகவும் ஒளிமயமாக இருந்தது, அலைகள் மிகவும் அமைதியாக இருந்தன. அப்பொழுது, வாழ்க்கை எப்போதுமே இப்படி அழகாக இருக்குமா என்று நான் அவரிடம் கேட்டேன், அவர் எனக்கு உறுதியளித்தார். ‘உலகம் சிதைந்தாலும், உன்னைப் பாதுகாப்பாக வைத்திருக்க நான் எப்போதும் ஒரு வழியைக் கண்டுபிடிப்பேன்’ என்று. நான் அவரை நம்பினேன், சங்கவி. நான் உண்மையில் மகிழ்ந்தேன், ஆகாயத்தில் மிதந்தேன்! "

அவனுடைய அந்த வார்த்தைகள் அவள் இதயத்தில் ஒரு வாக்குறுதியாக அன்று மாறி இருந்தாலும் அவள் முகம் இன்று இருண்டு காணப்படுவதைக் சங்கவி கவனித்தாள்.

"ஆறு மாதங்களுக்குப் பிறகு, எல்லாம் மாறிவிட்டது, சங்கவி" அவள் தொடர்ந்து பேசும்போது மகிழ்மதியின் குரல் நடுங்கியது.

“யாழ்ப்பாணத்தில் இராணுவம் அடிக்கடி வரத் தொடங்கியது. அரசியல் அமைதியின்மை எங்கும் காணப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இராணுவத்தின் இருப்பு தீவிரமடைந்தது, மேலும் அகவழகன், ஒரு தமிழ் தொழில் வல்லுநராக இருந்ததாலும் இளமையாக இருந்ததாலும், இராணுவத்தின் ஒரு கண் அவர் மேலும் எப்பவும் இருந்தது. ஒரு நாள் மாலை, அவர் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தவர் மிகவும் வெளிரிய முகத்துடன் பதட்டமாக இருந்தார். நான் அவரை இதற்கு முன்பு அப்படி என்றும் பார்த்ததில்லை.”

"என்ன சொன்னான்?" சங்கவி மெதுவாகக் கேட்டாள்.

“அன்று இராணுவம் தனது பணிமனைக்கு வந்ததாக அவர் என்னிடம் கூறினார். அவருடைய வேலை, அவரது அரசியல் நம்பிக்கைகள், அவருடைய குடும்பம் பற்றி அவரிடம் வினாவினார்கள். அது இனி பாதுகாப்பானது அல்ல என்றார். அன்று இரவே தான் ஆஸ்திரேலியா செல்லப் போவதாகவும், அங்கு தனக்கு வேலை தேட உதவக்கூடிய ஒரு நண்பர் இருப்பதாகவும், அவர் அங்கு தன்னை உறுதிப்படுத்தியதும், என்னையும் எங்களுக்கு பிறக்கப் போகும் குழந்தையையும் தன்னிடம் அழைப்பதாகவும் கூறினார்."

"அன்று இரவு முழுவதும் நான் விழித்திருந்தேன். என்னுடைய இதயம் பயத்தாலும் நிச்சயமற்ற தன்மையாலும் கனத்தது. அகவழகனின் அந்த முடிவு அன்பாலும், எங்களுக்கு ஒரு பாதுகாப்பான சூழல் அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தாலும் பிறந்தது என்பதை நான் அறிந்தாலும், அவரைப் பிரிந்து சில காலம் வாழவேண்டும் என்ற எண்ணம் தாங்க முடியாததாக எனக்கு இருந்தது."

சங்கவி ஆமோதித்தாள், மகிழ்மதியைத் தன்னுடன் அணைத்துக்கொண்டாள்.

"இரு வாரம் கடந்து அகவழகன் வெளியேறினார். நானும் எனது பெற்றோரின் வீட்டிற்கு திரும்பினேன். அங்கு நாட்கள் வாரங்களாகவும் பின்னர் மாதங்களாகவும் நீண்டன. நான் இணையத்தள கடிதங்களிலும் தொலைபேசி அழைப்புகளிலும் ஓரளவு ஆறுதல் கண்டாலும், அவை ஒவ்வொன்றும் என்னுடைய நம்பிக்கையை உயிர்ப்பிக்கும் உயிர்நாடியாக மட்டுமே இருந்தன. அவ்வளவுதான் சங்கவி!"

"என்றாலும் என் கருத்தரித்த வயிற்றில் குழந்தை சுமக்கும் நிலை, மகிழ்ச்சியின் ஆதாரமாகவும் என்னுடைய தனிமையைப் போக்குவதாகவும் ஓரளவு இருந்தது. பின் குயிலி பிறந்தாள். ஆனால் வேறு ஒன்றும் நிறைவேறவில்லை. ஆண்டுகள் தான் கடந்தது, சங்கவி"

"சங்கவி, என் நிலையைக் கேளடி? உனக்குத் தெரியுமா, நான் அடிக்கடி அடிவானத்தைப் பார்த்தது? - அகவழகனை திரும்பக் கொண்டுவரும் ஒரு விமானத்தின் பார்வைக்காக - நான் அவருடன் இணையப் போகும் விமானப் பார்வைக்காக, ஆனால் எல்லாம் மாயை தோற்றமாகி விட்டது"

மகிழ்மதி தனது நாட்குறிப்பை எடுத்து சங்கவிக்கு வாசிக்க கொடுத்தாள். அதில்:

"சிறகுகள் வெட்டப்பட்ட பறவையைப் போல,

நான் கூட்டில் அமர்ந்திருக்கிறேன்,

வானத்தைப் பார்த்து என்னால் எட்ட முடியவில்லை.

அவருக்கு வலி தெரியுமா?

ஒரு இதயம் மெல்லியதாக நீண்டுள்ளது

காதலுக்கும் காத்திருப்புக்கும் இடையில்?”

என்று எழுதியிருந்தது. சங்கவியும் கொஞ்சம் கலங்கினாள். சங்கவியின் புருவமும் சுருங்கியது. "ஆனால் நீங்கள் ஏன் அவருடன் முதலில் செல்லவில்லை?"

"இது சாத்தியம் என்று நாங்கள் அந்தநேரம் நினைக்கவில்லை," என்று மகிழ்மதி பதிலளித்தாள். "நிலைமை நிலையற்றது, நான் ஏற்கனவே கர்ப்பமாக இருந்தேன். அவர் எங்களை அழைக்கும் வரை நான் என் பெற்றோருடன் இருப்பது பாதுகாப்பானது என்று அவர் நினைத்தார்."

"பின்னர்?" சங்கவி அழுத்தினாள்.

மகிழ்மதியின் குரல் கனத்தது. “அகவழகன் போன பிறகு வாழ்க்கை தனிமையும் காத்திருப்புமாக மாறியது. நான் என் பெற்றோரின் வீட்டில் இருந்தாலும், மனதளவில் தனிமையே என்னிடம் குடிகொண்டது. அவரின் பதில்கள் எப்போதும் ஒரே மாதிரியாக இருந்தன - 'விரைவில், மகிழ்மதி. விரைவில்.’’

அவள் கண்கள் கண்ணீரால் நிறைந்து, கூறுவதைக் கொஞ்சம் இடைநிறுத்தினாள்.

“குயிலி என் உலகமாக மாறினாள், என் மகிழ்ச்சியின் ஒரே ஆதாரம். ஆனால் இன்று, நாள் போகப் போக, நம்பிக்கை இழக்க ஆரம்பித்தேன். அக்கம்பக்கத்தினர் வெட்டிப் பேச்சு பேசினார்கள். உறவினர்கள் என்னைப் பரிதாபமாகப் பார்த்தார்கள். ‘இது என்ன திருமண வாழ்க்கை?’ என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன்."

மகிழ்மதி குரல் உடைந்தது:

"கன்றும் உண்ணாது கலத்தினும் படாது

நல் ஆன் தீம் பால் நிலத்து உக்கா அங்கு

எனக்கும் ஆகாது என்னைக்கும் உதவாது

பசலை உணீஇயர் வேண்டும்

திதலை அல்குல் என் மாமைக் கவினே"

"நல்ல பசுவின் காம்பிலிருந்து சுரக்கும் பாலானது, அதன் கன்றுக்கும் அளிக்கப்படாமல், பால் கறக்கும் பாத்திரத்திலும் நிரப்பப்படாமல், வெற்று நிலத்தில் வீணாக வடிந்து செல்வதைப் போல் – என் அழகிய கருமேனியானது வனப்புக் குறைந்து, இடையும் நிறம் வெளிறி, மேனி முழுவதும் மெல்ல மெல்ல பசலைப் படர்ந்து நிற்கிறது. இத்தகு என் அழகு எனக்கும், என் கணவருக்கும் பயன்படாமல் வீணாகிறது சங்கவி" என்றாள்.

சங்கவி ஒரு கணம் மௌனமாக இருந்தாள், மகிழ்மதியின் வார்த்தைகளின் ஆழம் அவளை வருத்தியது. அவள் தன் இரு கைகளையும் நீட்டி தன் தோழியின் கைகளைப் பற்றினாள்.

“மகிழ்மதி, உன் வலி நியாயமானது. ஆனால் அகவழகனின் பயணம் எளிதான ஒன்றல்ல. நீயும் குயிலியும் உள்ளடங்கிய எதிர்காலத்துக்காக அவனும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறான், யாரும் அறியாத ஒரு தேசத்தில்."

மகிழ்மதி பெருமூச்சு விட்டாள்.

"ஆனால் மகிழ்மதி, உன் தேவைகளையும் வலியையும் வெளிப்படுத்த உனக்கு உரிமை உண்டு. இந்தக் காத்திருப்பு எவ்வளவு நாளுக்கு என்று அகவழகனிடம் கேள்" என்றாள்.

"ஆனால் அவருக்குப் புரியவில்லை என்றால் என்ன செய்வது? நான் சுயநலவாதி என்று அவர் நினைத்தால் என்ன செய்வது?"

"அப்படியானால், அன்பு என்பது வாக்குறுதிகள் மட்டுமல்ல என்பதை அவருக்கு நினைவூட்ட வேண்டும். இது இருப்பைப் பற்றியது, பகிரப்பட்ட சுமைகளைப் பற்றியது. அவர் உங்களை உண்மையிலேயே நேசித்தால், உங்கள் இருவரையும் விரைவில் அவரிடம் கொண்டு வருவதற்கான வழியைக் கண்டுபிடிப்பார்."

சங்கவியின் வார்த்தைகள் மகிழ்மதியின் இதயத்தில் உறுதியை விதைத்தது. அன்று மாலை, தன் மனதைக் கொட்டிக் கொண்டே அகவழகனுக்கு ஒரு மின் கடிதம் எழுதினாள்.

ஒரு சில வாரங்கள் கழித்து பதில் வந்தது. ஆனால், இது ஒரு தெளிவற்ற வாக்குறுதி அல்ல, ஒரு தெளிவான திட்டம். அகவழகன் தான் எதிர்கொண்ட தடைகள் மற்றும் தனது குடும்பத்தை மீண்டும் இணைக்கும் புதிய உறுதியை விளக்கினார். இந்த முறை, மகிழ்மதி மற்றும் குயிலிக்கு ஆஸ்திரேலியாவில் அவருடன் இணைய விமான பற்றுச் சீட்டும் மற்றும் நுழைவுரிமைக்கான சான்றுப் பத்திரமும் இணைக்கப்பட்டிருந்தன.

ஒரு ஒளிமயமான காலை, மகிழ்மதி, குயிலியின் சிறிய கையைப் பிடித்து, ஆஸ்திரேலியாவுக்கு விமானத்தில் ஏறினாள். அங்கு விமான நிலையத்தில் அகவழகன் காத்திருந்தான். அவன் முகத்தில் நிம்மதியும் அன்பும் பொறிக்கப்பட்டிருந்தது. அவர் இருவரையும் அரவணைத்து, மன்னிப்பு மற்றும் சிறந்த எதிர்காலத்திற்கான உறுதிமொழிகளை வழங்கினார்.

மகிழ்மதியின் இதயம், குணமடையத் தொடங்கியது. வாழ்க்கையைப் போலவே, அன்பும் பெரும்பாலும் குழப்பமானதாகவும், பூரணமாகாததாகவும் சிலவேளை தோன்றும் என்பதை உணர்ந்தாள். அவள் கணவன் மற்றும் மகளுக்கு அருகில் நின்றபோது - சிந்திய பால் இன்னும் ஒரு புதிய தொடக்கத்தை வளர்க்கும் என்ற நம்பிக்கையின் ஒளியை உணர்ந்தாள்.

பின்னர் சங்கவியைத் தொடர்பு கொண்டு சொன்னாள்:

"விமானத்திலிருந்து இறங்கி அவர் கைகளில் நான் நின்றதும், அந்த பழைய ஆண்டுகளின் கனம் கரைந்தது போல் உணர்ந்தேன்," அவள் குரலில் உணர்ச்சிகள் நிறைந்திருந்தது. "நாங்கள் இப்போது எங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புகிறோம், சங்கவி. இது எளிதானது அல்ல, ஆனால் நாங்கள் ஒன்றாக இருக்கிறோம், அதுதான் முக்கியம்."

அவள் பின் மெதுவாகச் சொன்னாள்:

"வேரோடு பிடுங்கப்பட்ட ஒரு மரம்

புதிய மண்ணைத் தேடுகிறது,

அதன் வேர்கள் மீண்டும்

உயிர் பெறுகின்றன.

அதுபோலவே காதலும்

புயலால் அசைந்தாலும்

கதிரவனை நோக்கித் திரும்பும்."

சங்கவி சிரித்தாள், அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது. “மகிழ்மதி, உனக்குத் தெரிந்ததை விட நீ வலிமையானவள். அகவழகன் உன்னைப் பெற்றதற்கு நற்பேறு பெற்றவர்."

மகிழ்மதி தன் தோழியை நன்றியுடன் பார்த்தாள்.

சங்கவியும் ,

“ஏனடி இந்த [இன்ப] வேதனை..?”

என்ற ஒரு கேள்வியுடன் ஒரு குறும் கவிதை அனுப்பி மௌனமாக விடைபெற்றாள்.

"ஈரக் கண்ணை மூடிக்கொண்டு

வாடி நின்ற பெண் கொக்கே!

தூரம் இல்லை இனி உனக்கு

கோடி இன்பம் தழுவிப் பூக்குமே!"

"காலை முதல் காலை வரை

காதல் சொல்லும் ராகம் கேட்குமே!

சோலைக் கிளிகள் ஆடிப் பாட

உந்தன் சோக மனமும் தேறுமே!"

"தேகம் எங்கும் தேனைச் சிந்தும்

தோகை மயில் பெண்ணே!

தேசம் விட்டு தேசம் போயும்

பாசம் மறவா நட்புக் கண்ணே!"

"கண்ணுக்கு உள்ளே உன்னை வைத்து

காலம் எல்லாம் அருகில் இருப்பானே!

அகவழகன் அகமகிழ்ந்து உன்னை அணைத்து

கோலம் போடுவான் உந்தன் இதழிலே!"

நன்றி

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.