Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல், பாஜக, அதிமுக, திமுக, எடப்பாடி பழனிச்சாமி

கட்டுரை தகவல்

  • எழுதியவர், சிராஜ்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 16 மார்ச் 2025

"எங்களுக்கு இருக்கும் ஒரே எதிரி திமுகதான். மற்ற கட்சிகள் எங்களுக்கு எதிரி கிடையாது. தேர்தலில் வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் இருக்க வேண்டும். அதிமுக கூட்டணி குறித்து தேர்தலுக்கு 6 மாதங்கள் இருக்கும்போது சொல்லப்படும்" என கடந்த மார்ச் 4ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசியபோது தெரிவித்திருந்தார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

அவரது இந்தக் கருத்து, தமிழக அரசியலில் கவனம் பெறக் காரணம், சில மாதங்களுக்கு முன்புவரை எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுக தலைவர்கள், 'பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை' என உறுதியாக கூறிவந்தனர்.

கடந்த ஆண்டு(2024) நவம்பரில், கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி "திமுக ஆட்சியை அகற்ற வேண்டும். அதேசமயம் பாஜக-வோடு கூட்டணி இல்லை என்பதே எங்களின் நிலைப்பாடு. அதில் எந்த மாற்றமும் இல்லை" என்றார்.

தவெக: விஜய் எதிர்பார்ப்பது என்ன? 2026 தேர்தலில் அதிமுக-வுக்கு ஆபத்தா?

செங்கோட்டையன் கலகக் குரலா? அடுத்த சட்டமன்ற தேர்தலுக்குள் அதிமுகவில் மாற்றம் நிகழுமா?

ஜெயலலிதாவின் 27 கிலோ நகை, 1,526 ஏக்கர் சொத்துகளை தமிழ்நாடு அரசு ஏலம் விடுமா?

தொகுதி மறுசீரமைப்பு: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 5 முக்கிய தீர்மானங்கள் என்ன?

இந்நிலையில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் வெள்ளிக்கிழமை (மார்ச் 14) திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த போது, "வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வரும். தமிழகத்தில் பாஜகவால் ஜெயலலிதாவின் ஆட்சியை நிச்சயம் தர முடியும். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுகவும் வர வேண்டும். அது பழனிசாமியுடனா, பழனிசாமி இல்லாமலா என்று தெரியாது." என்றார்.

கடந்த வாரம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, "பாஜக தீண்டத்தகாத கட்சி, நோட்டா கட்சி, கூட்டணியில் பாஜக இருந்ததால்தான் தோற்றோம் என்றெல்லாம் கூறியவர்கள் இன்று பாஜகவுடன் கூட்டணி வைக்க தவம் கிடக்கிறார்கள்." என கூறியிருந்தார், பிறகு "தான் அதிமுகவை குறிப்பிட்டுப் பேசவில்லை" என விளக்கமும் அளித்தார்.

அதேநேரத்தில், அண்மைக்காலமாக செங்கோட்டையனின் செயல்பாடும் அதிமுகவில் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாக, அதிமுக- பாஜக குறித்து வெளியாகும் இத்தகைய கருத்துகளும் அதிமுகவில் நடக்கும் நிகழ்வுகளும் '2026 தேர்தலுக்காக, அதிமுக- பாஜக கூட்டணி மீண்டும் அமையுமா?', 'அதிமுக மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறதா' போன்ற கேள்விகளை தமிழக அரசியல் களத்தில் எழுப்பியுள்ளன என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

அதிமுக- பாஜக கூட்டணியும் பிரிவும்

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல், பாஜக, அதிமுக, திமுக, எடப்பாடி பழனிச்சாமி

படக்குறிப்பு,தமிழ்நாட்டில் 2021 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுக - பாஜக இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டன

தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பிறகு, 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி அமைந்தது. 2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் நீடித்த இந்த கூட்டணியால் இரு தேர்தல்களிலும் வெற்றி பெற முடியவில்லை. இருப்பினும், 20 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குள் நுழையும் வாய்ப்பு பாஜகவுக்கு மீண்டும் கிடைத்தது. அக்கட்சிக்கு 4 சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைத்தனர்.

ஆனால், தமிழ்நாட்டில் 2021 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுக - பாஜக இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டன. 2023 பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் முடிவுக்குப் பின், இந்த மோதல் தீவிரம் அடைந்தது.

2023, ஜூன் மாதம், ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அளித்தப் பேட்டியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சில கருத்துகளைக் கூறியிருந்தார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை தொடர்புப்படுத்தி அவர் கூறிய கருத்து, அதிமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அண்ணாமலைக்கு எதிராக மாநிலம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் போராட்டம் நடத்தினர்.

தொடர்ந்து அதிமுக மீதும் அக்கட்சியின் தலைவர்கள் மீதும் அண்ணாமலை விமர்சனங்களை முன்வைத்தார்.

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல், பாஜக, அதிமுக, திமுக, எடப்பாடி பழனிச்சாமி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை, அக்கட்சியுடனான உறவை முறித்துக்கொள்வதாக, 2023 செப்டம்பரில் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்

இதன் காரணமாக, 'அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை, அக்கட்சியுடனான உறவை முறித்துக்கொள்வதாக,' 2023 செப்டம்பரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

பிறகு, 2024 பிப்ரவரியில் நாளிதழ் ஒன்றுக்குப் பேட்டியளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியை விட்டு வெளியேறியது குறித்துக் கேட்டபோது, "கூட்டணிக்கான எல்லா கதவுகளும் திறந்தே இருக்கின்றன. இது குறித்து ஆலோசித்து வருகிறோம்" என்று பதிலளித்திருந்தார்.

ஆனாலும், பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்பதில் உறுதியாக இருந்தது அதிமுக.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக தலைமையில், தனித்தனி கூட்டணிகள் அமைந்தன. தேர்தல் முடிவில் ஒரு தொகுதியில்கூட இவ்விரு அணிகளால் வெற்றி பெற முடியவில்லை.

12 நாடாளுமன்றத் தொகுதிகளில் பாஜக கூட்டணி இரண்டாம் இடம் பிடித்திருந்தது. சில தொகுதிகளில், திமுக கூட்டணி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளை விட, அதிமுக மற்றும் பாஜக கூட்டணிகளின் வேட்பாளர்கள் தனித்தனியே பெற்றிருந்த வாக்குகளின் கூட்டுத்தொகை அதிகமாக இருந்தது.

உதாரணமாக, தருமபுரி தொகுதியில் பாஜக கூட்டணி சார்பாக களம் கண்ட பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி 4,11,367 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தார். அதே தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ரா. அசோகன் 2,93,629 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.

இங்கு பாமக மற்றும் அதிமுக பெற்ற மொத்த வாக்குகள் 7,04,996. இது, இங்கு போட்டியிட்டு வென்ற திமுக வேட்பாளர் மணி பெற்ற வாக்குகளை விட 2,72,329 வாக்குகள் அதிகம்.

'திமுக தான் ஒரே எதிரி'

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல், பாஜக, அதிமுக, திமுக, எடப்பாடி பழனிச்சாமி

பட மூலாதாரம்,@BABUMURUGAVEL

படக்குறிப்பு,திமுக தான் எங்கள் எதிரி என்ற கருத்தை நாங்கள் பல வருடங்களாகவே கூறி வருகிறோம் என்கிறார் அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் பாபு முருகவேல்

"எங்களுக்கு இருக்கும் ஒரே எதிரி திமுகதான். மற்ற கட்சிகள் எங்களுக்கு எதிரி கிடையாது. தேர்தலில் வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் இருக்க வேண்டும்." என்ற எடப்பாடி பழனிசாமியின் சமீபத்திய பேச்சு குறித்து, முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக செய்தித்தொடர்பாளருமான பாபு முருகவேலிடம் கேட்டோம்.

"திமுக தான் எங்கள் எதிரி என்ற கருத்தை நாங்கள் பல வருடங்களாகவே கூறி வருகிறோம். எடப்பாடி பழனிசாமி கூறியது போலவே, 2026 தேர்தலுக்கு சில மாதங்கள் முன்பு ஒரு வெற்றிக் கூட்டணி அமைக்கப்படும். திமுக-வுக்கு எதிரான கட்சிகள் எங்களுடன் சேரலாம்." என்று கூறினார்.

ஆனால், எந்தக் கட்சி சேர்ந்தாலும் கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை தாங்கும் என்று உறுதியாகக் கூறும் பாபு முருகவேல், "பாஜக குறித்து இப்போதே எதுவும் கூற முடியாது. ஆனால், போட்டி எப்போதும் போல, அதிமுக Vs திமுக தான். அதில் எந்தவித சந்தேகமுமில்லை" என்று தெரிவித்தார்.

பாஜகவுடன் கூட்டணி அமைக்க, அதிமுக அல்லது எடப்பாடி பழனிசாமிக்கு ஏதேனும் அழுத்தம் கொடுக்கப்படுகிறதா எனக் கேட்டபோது, "அதிமுக-வுக்கு அழுத்தம் கொடுக்குமளவுக்கு இங்கு எந்தக் கட்சியும் இல்லை, கொடுக்கவும் முடியாது. திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் தலைமையின் முடிவு இருக்குமே தவிர்த்து, வேறு எந்தக் காரணங்களுக்காகவும் எங்களது கட்சியை வளைக்க முடியாது" என்று கூறினார்.

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல், பாஜக, அதிமுக, திமுக, எடப்பாடி பழனிச்சாமி

பட மூலாதாரம்,FACEBOOK/SRSEKAR

படக்குறிப்பு,ஆனால், திமுகவை எதிரியாகக் கருதும் எந்தக் கட்சியாக இருந்தாலும் பாஜக கூட்டணியில் இணையலாம் என்கிறார் எஸ்.ஆர்.சேகர்

இதுகுறித்து பாஜகவின் மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் கேட்டபோது, "பாஜக- அதிமுக கூட்டணி அமைந்துவிடக் கூடாது என்பதில் திமுகவும், அதன் ஆதரவு ஊடகங்களும் தெளிவாக உள்ளன. அதனால், இரு கட்சிகளின்ன் தலைவர்களும் பேசுவதை பலவாறாக திரித்து செய்திகள் வெளியிடப்படுகின்றன.

இதையெல்லாம் கடந்து, 2026 சட்டமன்ற தேர்தலுக்கான ஒரு 'மெகா கூட்டணியை' பாரதிய ஜனதா கட்சி அமைக்கும். அதில் அதிமுக இருக்குமா என இப்போதே சொல்ல முடியாது. ஆனால், திமுகவை எதிரியாகக் கருதும் எந்தக் கட்சியாக இருந்தாலும் அதில் இணையலாம்." என்று கூறுகிறார்.

தமிழ்நாட்டின் சக்தி வாய்ந்த கட்சிகள் திமுகவுக்கு எதிராக ஓரணியில் சேரும் என்று கூறிய எஸ்.ஆர்.சேகர், "அதற்கான பணிகளை பாஜக முன்னெடுக்கும். அந்தக் கூட்டணியை பாஜக ஒன்றிணைக்கும்" என்கிறார்.

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல், பாஜக, அதிமுக, திமுக, எடப்பாடி பழனிச்சாமி

படக்குறிப்பு,கோப்புப் படம்

அதிமுகவில் செங்கோட்டையன் தனித்து செயல்படுகிறாரா?

கடந்த பிப்.9-ம் தேதி கோவையில் அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தை செயல்படுத்தியதற்காக விவசாய அமைப்புகள் சார்பில் பழனிசாமிக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. விழா அழைப்பிதழில், எம்ஜிஆர், ஜெயலலிதா புகைப்படங்கள் இடம் பெறாததால் அதில் பங்கேற்கவில்லை என அவர் காரணம் கூறியிருந்தார்.

நேற்று முன்தினம் தமிழக பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக, சட்டப்பேரவை வளாகத்தில் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. நேற்று வேளாண் பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக பேரவைத் தலைவர் அப்பாவுவை அவர் சந்தித்தார்.

அவைத் தலைவரை தனியே சந்தித்தது ஏன்? என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு, "சபாநாயகரை சட்டமன்ற உறுப்பினர் சந்திப்பது சாதாரணமானது. இன்று கூட ஏழு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரை சந்தித்துள்ளார்கள். சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவதற்காக சபாநாயகரை சந்தித்து கடிதம் கொடுத்துள்ளேன். சுற்றுச்சூழல் துறை அமைச்சரும் அங்கு வருகை தந்தார். அவரிடம் அந்த கடிதம் கொடுக்கப்பட்டது" என்று பதிலளித்தார்.

பட்ஜெட் தாக்கலுக்குப் பின்னர் செய்தியாளர்களை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் செங்கோட்டையன் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த பழனிசாமி, "அதை அவரிடம் கேளுங்கள். காரணம், அவரைக் கேட்டால்தானே தெரியும்?! என்னை சந்திப்பதை அவர் ஏன் தவிர்த்தார் என்பது குறித்து அவரிடம் சென்று கேளுங்கள். இதெல்லாம் இங்கே கேட்கவேண்டிய கேள்வி இல்லை. தனிப்பட்ட முறையில் இருக்கக் கூடிய பிரச்சினைகளை எல்லாம் இங்கே பேசாதீர்கள்." என்றார்.

அண்மைக்காலமாக செங்கோட்டையனின் செயல்பாடு அதிமுகவில் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

'அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமிக்கு கொடுக்கப்படும் அழுத்தம்'

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல், பாஜக, அதிமுக, திமுக, எடப்பாடி பழனிச்சாமி

படக்குறிப்பு,அதிமுக- பாஜக கூட்டணி ஏறக்குறைய உறுதியாகிவிட்டது என்கிறார் மூத்த பத்திரிக்கையாளர் பிரியன்.

இது தொடர்பாக பேசிய மூத்த பத்திரிகையாளர் பிரியன், "பாஜகவுடன் கூட்டணி சேர வேண்டும் என்ற அழுத்தம் அதிமுகவுக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் உள்ளது என்பது உண்மை. ஆனால், அதைத் தாண்டி தேர்தல் கணக்கு என்று பார்க்கையில் அதிமுக-பாஜக கூட்டணி அமைவதே இரு கட்சிகளுக்கும் சாதகமாக இருக்கும்" என்கிறார்.

கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் இரு கட்சிகளும், தனித்தனியாக பெற்ற வாக்குகளை சுட்டிக்காட்டும் பிரியன், "திமுக எதிர்ப்பு வாக்குகள் பிரிந்தால் என்னவாகும் என்பதை அவர்கள் மக்களவைத் தேர்தலில் பார்த்துவிட்டார்கள். குறிப்பாக கொங்கு மண்டலத்தின் தோல்வி, இதை உணர்த்தியிருக்கும். எனவே கூட்டணி அமைவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

செங்கோட்டையன் உள்பட அதிமுகவின் பெரும்பாலான முக்கிய தலைவர்களும் அதையே விரும்புகிறார்கள். அவர்களும் அழுத்தம் கொடுக்கிறார்கள், அதனால் தான் 'திமுக மட்டுமே எதிரி' என எடப்பாடி பழனிச்சாமி பேசுகிறார்." என்கிறார்.

நடிகர் விஜயின் 'தமிழக வெற்றிக் கழகம்' ஒருபுறம், சீமானின் 'நாம் தமிழர்' ஒருபுறம் என இருப்பதால், இவற்றைத் தவிர்த்து பாமக, தேமுதிக போன்ற கட்சிகளை சேர்த்துக்கொண்டு அதிமுக- பாஜக 2026 தேர்தல் கூட்டணி அமையலாம் என்று பிரியன் கூறுகிறார்.

"ஒருவேளை 2026இல் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாவிட்டாலும் கூட, மத்தியில் பாஜக 2029 வரை ஆட்சியில் இருக்கும் என்பதால் அவர்களை அதிமுக பகைத்துக் கொள்ள விரும்பாது. எனவே அதிமுக- பாஜக கூட்டணி அமைய வாய்ப்புகள் அதிகம்" என்கிறார் மூத்த பத்திரிகையாளர் பிரியன்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c9den22wl9yo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எடப்பாடி பழனிசாமியிடம் செங்கோட்டையன் சமாதானம் ஆனாரா? பின்னணியில் என்ன நடந்தது?

எடப்பாடி பழனிசாமி, கே.ஏ.செங்கோட்டையன், அதிமுக, தமிழ்நாடு

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 18 மார்ச் 2025

"தனிப்பட்ட பிரச்னைகளைப் பற்றி பேச வேண்டாம். நான் யாரையும் எதிர்பார்த்தது இல்லை. கூட்டத்தை ஏன் தவிர்த்தார் என அவரிமே கேளுங்கள்."

செங்கோட்டையன் தொடர்பான கேள்விக்கு மார்ச் 15ஆம் தேதி அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டி இது.

அதுவே மார்ச் 17ஆம் தேதி அவர் அளித்த பேட்டியில் சற்று உற்சாகம் தென்பட்டது.

அப்போது, "எங்களை யாராலும் பிரிக்க முடியாது. நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம். நான் முதலமைச்சர் ஆன காலத்தில் இருந்தே இதே திட்டத்தைப் போட்டு வருகிறார்கள். அ.தி.மு.க-வை யாராலும் உடைக்க முடியாது; முடக்க முடியாது," எனக் கூறினார்.

இரண்டு நாள் இடைவெளியில் என்ன நடந்தது? எடப்பாடி பழனிசாமியிடம் கே.ஏ.செங்கோட்டையன் சமாதானம் ஆனாரா? செங்கோட்டையன் தரப்பு சொல்வது என்ன?

அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டத்தை புறக்கணித்த செங்கோட்டையன்

தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மார்ச் 14ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. முன்னதாக, பட்ஜெட் கூட்டத் தொடரை எதிர்கொள்வது தொடர்பான அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டியிருந்தார்.

இந்தக் கூட்டத்தை கோபிச்செட்டிபாளையம் தொகுதி எம்.எல்.ஏ-வும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் புறக்கணித்தார். மார்ச் 15ஆம் தேதியன்று வேளாண் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக, நடைபெற்ற அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்திலும் அவர் பங்கேற்கவில்லை.

அதேநேரம், சபாநாயகர் அப்பாவுவை தனது தொகுதிப் பிரச்னை தொடர்பாக செங்கோட்டையன் சந்தித்துப் பேசினார். இது விவாதத்தை ஏற்படுத்தியது.

அதைத் தொடர்ந்து சட்டமன்றக் கூட்டத் தொடரில் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு அ.தி.மு.க தீர்மானித்தது. இதுகுறித்து ஆலோசிக்க எடப்பாடி பழனிசாமி கூட்டிய கூட்டத்தில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை.

இதுதொடர்பாக கடந்த சனிக்கிழமையன்று (மார்ச் 15) செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, "அதைப் பற்றி அவரிடமே கேளுங்கள். அவருக்கு வேறு வேலைகள் இருக்கும். தனிப்பட்ட பிரச்னைகளைப் பற்றிப் பேச வேண்டாம். யாரையும் எதிர்பார்த்து நான் இல்லை" என்று எடப்பாடி பழனிசாமி கோபத்தை வெளிப்படுத்தினார்.

ஆனால், கடந்த ஒன்றரை மாதங்களாகவே எடப்பாடி பழனிசாமிக்கும் செங்கோட்டையனுக்கும் இடையில் மோதல் தொடங்கிவிட்டது. பிப்ரவரி 9ஆம் தேதியன்று அத்திக்கடவு-அவிநாசி திட்டம் தொடர்பாக விவசாய சங்கங்கள் சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. ஆனால் அதற்கான விழா அழைப்பிதழ்களில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா புகைப்படங்கள் இல்லை எனக் கூறி விழாவில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை.

அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் பிப்ரவரி 24ஆம் தேதியன்று நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழா, மகளிர் தின விழா ஆகியவற்றை செங்கோட்டையன் புறக்கணித்தார்.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் மகன் திருமணத்திலும் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னதாகவே அவர் பங்கேற்றார். இந்த நிகழ்வுகள் உள்கட்சி மோதலை வெளிப்படுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக் காட்டினர்.

ஈரோடு மாவட்டத்தில் செங்கோட்டையனுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணனுக்கு எடப்பாடி பழனிசாமி ஆதரவு அளிப்பதுதான் பிரச்னைக்குக் காரணம் என்றொரு கருத்தும் முன்வைக்கப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி, கே.ஏ.செங்கோட்டையன், அதிமுக, தமிழ்நாடு

பட மூலாதாரம்,@KASENKOTTAIYAN

முடிவுக்கு வந்த உட்கட்சி மோதல்

ஆனால், கடந்த திங்கள் கிழமையன்று (மார்ச் 17) உள்கட்சி மோதல்கள் முடிவை எட்டின.

சட்டமன்றத்தில் சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை அ.தி.மு.க கொண்டு வந்தது. சபாநாயகர் அப்பாவு ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாகவும் அவரைப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்பதையும் முன்வைத்து அ.தி.மு.க இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்தது.

தீர்மானத்தை அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் ஆர்.பி.உதயகுமார், கே.பி.முனுசாமி, செல்லூர் ராஜூ உள்பட 16 பேர் முன்மொழிந்தனர். இதை விவாதத்துக்கு எடுத்துக் கொள்வதாகக் கூறிவிட்டுத் தனது இருக்கையில் இருந்து அப்பாவு எழுந்து சென்றுவிட்டார்.

பின்னர் துணை சபநாயகர் பிச்சாண்டி சபையை நடத்தினார். அப்போது குரல் வாக்கெடுப்பு தொடர்பாக துணை சபாநாயகர் கூறிய அறிவிப்பு, அ.தி.மு.க சார்பில் தேர்வான புதிய உறுப்பினர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.

"ஆனால் இதுதான் நடைமுறை" என எடப்பாடி பழனிசாமியிடம் சென்று செங்கோட்டையன் கூறினார். "மூத்த உறுப்பினர் செங்கோட்டையன் சொல்வதுதான் சரியானது. அதன்படியே செயல்படுங்கள்" என அ.தி.மு.க உறுப்பினர்களை நோக்கி எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

இதன்மூலம் இருவருக்கும் இடையிலான மோதல் முடிவுக்கு வந்துவிட்டதாகப் பார்க்கப்பட்டது. இதை செய்தியாளர் சந்திப்பில் உறுதிப்படுத்திய எடப்பாடி பழனிசாமி, "எங்களுக்கு இடையே எந்த மோதலும் இல்லை" எனக் கூறினார்.

சமாதானம் பேசிய சீனியர்கள்

எடப்பாடி பழனிசாமி, கே.ஏ.செங்கோட்டையன், அதிமுக, தமிழ்நாடு

பட மூலாதாரம்,@BABUMURUGAVEL

படக்குறிப்பு,அ.தி.மு.க சட்டத்துறை இணைச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான பாபு முருகவேல்

இதுதொடர்பாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வனிடம் பிபிசி தமிழ் கேட்டபோது, "இதற்கான பின்னணிக் காரணம் என்னவென்று தெரியவில்லை" என்று மட்டும் பதில் அளித்தார்.

அ.தி.மு.க சட்டத்துறை இணைச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான பாபு முருகவேலிடம் பிபிசி தமிழ் பேசியது. அப்போது அவர், "இருவருக்கும் இடையில் எந்தப் பிரச்னையும் இல்லை. செய்தியாளர் சந்திப்பில் பொதுச்செயலாளர் பேசிய கருத்துதான் எங்களின் நிலைப்பாடு. ஒன்றும் இல்லாத பிரச்னையை ஊதிப் பெரிதாக்க வேண்டிய அவசியம் இல்லை" எனக் கூறினார்.

"கே.பி.முனுசாமி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் சிலர் செங்கோட்டையனிடம் தனிப்பட்ட முறையில் பேசியதால் இருவருக்கும் இடையே மோதல் முடிவுக்கு வந்ததாகப் பேசப்படுகிறதே?" எனக் கேட்டபோது, "கட்சியின் பொதுச் செயலாளரும் செங்கோட்டையனும் இயல்பாக இருந்தாலும் பொதுவெளியில் அது செய்தியாக மாறுகிறது. அதைத் தவிர்க்கும் வகையில் செங்கோட்டையனிடம் பேசியுள்ளனர். அவரும் அதை ஏற்றுக் கொண்டார்," எனக் கூறினார்.

செங்கோட்டையனுக்கு நெருக்கடியா?

எடப்பாடி பழனிசாமி, கே.ஏ.செங்கோட்டையன், அதிமுக, தமிழ்நாடு

பட மூலாதாரம்,@KASENKOTTAIYAN

ஆனால், இந்த விவகாரத்தில் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாமின் கருத்து வேறாக இருக்கிறது. பிபிசி தமிழிடம் பேசிய அவர், "நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் அ.தி.மு.க கொறடா முடிவுக்கு மாறாக எதிர்த்து வாக்களித்து இருந்தால் செங்கோட்டையனின் பதவி பறிபோக வாய்ப்புகள் உள்ளன. ஆனால் தகுதி நீக்க முடிவை உடனே எடுத்துவிட முடியாது" எனக் கூறுகிறார்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "கோபிச்செட்டிபாளையம் தொகுதியைக் காலியானதாக அறிவித்து தேர்தலை நடத்துவது சாத்தியமல்ல. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலம் மட்டுமே இருக்கிறது," என்றார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க-வை சேர்ந்த 18 எம்.எல்.ஏ-க்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தார். "இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்துக்குச் சென்றது. 2017ஆம் ஆண்டு தகுதி நீக்கம் என அறிவித்தாலும் 2019ஆம் ஆண்டுதான் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது" எனக் கூறுகிறார் ஷ்யாம்.

அதேநேரம், தனியார் ஊடக நிறுவனம் நடத்திய விழாவில் செங்கோட்டையன் பேசியதைக் குறிப்பிடும் ஷ்யாம், "அவர் பிரதமர் மோதி, நிதி அமைச்சர் ஆகியோரைப் பாராட்டிப் பேசினார். தான் ஒரு இக்கட்டான நிலையில் உள்ளதாகக் குறிப்பிட்டார். ஆனால் அடுத்து வந்த நாள்களில் அவருக்கான சமிக்ஞை வராமல் போனதால் சமாதானம் ஏற்பட்டிருக்கலாம்," எனக் கூறுகிறார்.

தொடர்ந்து பேசிய ஷ்யாம், "எடப்பாடி பழனிசாமியை போல அதிரடி அரசியல் காட்டக்கூடிய நபர் செங்கோட்டையன் அல்ல. மேற்கு மண்டலத்தில் சமூகரீதியாக அவருக்கு நெருக்கடிகள் வந்திருக்கலாம்," எனவும் குறிப்பிட்டார்.

ஆனால் இதை மறுத்துப் பேசும் பாபு முருகவேல், "கட்சிதான் பெரிது. தனி நபர்கள் அல்ல. கட்சிக்கு விரோதமாகவோ பொதுச் செயலாளருக்கு எதிரான நிலைப்பாட்டையோ செங்கோட்டையன் எடுக்கவில்லை. அவ்வாறு எடுத்திருந்தால் பேசலாம்," என்கிறார்.

'சமாதானம் ஏற்பட்டுவிட்டது' - செங்கோட்டையன் தரப்பு

இதுதொடர்பாக, கே.ஏ.செங்கோட்டையனிடம் பேசுவதற்கு பிபிசி தமிழ் முயன்றது. அவர் சார்பாகப் பேசிய அவரது உதவியாளர் கதிர் முருகன், "இரு தரப்புக்கும் இடையே சமாதானம் ஆகிவிட்டது. இருவரும் நல்லபடியாகப் பேசி முடித்துவிட்டனர்" என்று மட்டும் பதில் அளித்தார்.

இதன் பின்னணி குறித்த மேலதிக கேள்விகளை எழுப்பியபோது, அவர் பதில் அளிக்கவில்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c5y0899ew0lo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.