Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-397.jpg?resize=750%2C375&ssl

ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் செய்யாவிட்டால் குண்டு வீசுவோம் – ட்ரம்ப் ‍எச்சரிக்கை!

ஈரான் தனது அணுசக்தி திட்டம் தொடர்பாக வொஷிங்டனுடன் ஒரு உடன்பாட்டிற்கு வரவில்லை என்றால், குண்டுவீச்சு மற்றும் இரண்டாம் நிலை வரிகளை விதிக்க நேரிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை (30) ஈரானை அச்சுறுத்தினார்.

கடந்த வாரம் வொஷிங்டனுடனான நேரடி பேச்சுவார்த்தைகளை ஈரான் நிராகரித்ததிலிருந்து ட்ரம்ப் முதல் முறையாகப் பேசியபோது, அமெரிக்க மற்றும் ஈரானிய அதிகாரிகள் பேசி வருவதாக அவர் NBC செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

ஆனால் அது குறித்து விரிவாக எதுவும் கூறவில்லை.

புதிய அணுசக்தி ஒப்பந்தத்தை எட்டுமாறு தெஹ்ரானை வலியுறுத்தி ட்ரம்ப் எழுதிய கடிதத்திற்கு ஓமன் மூலம் ஈரான் பதில் அனுப்பியது.

அதிகபட்ச அழுத்தம் பிரச்சாரம் மற்றும் இராணுவ அச்சுறுத்தல்களின் கீழ் அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தைகளில் ஈடுபடக்கூடாது என்பதே அதன் கொள்கை என்று தெஹ்ரானின் வெளியுறவு அமைச்சர் வியாழக்கிழமை கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டது.

ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் ஞாயிற்றுக்கிழமை இந்தக் கொள்கையை மீண்டும் வலியுறுத்தினார்.

அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன, ஆனால் ஈரான் எப்போதும் மறைமுக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது, இப்போதும், மறைமுக பேச்சுவார்த்தைகள் இன்னும் தொடரலாம் என்று உச்ச தலைவர் வலியுறுத்தியுள்ளார்,” என்று அவர் ஆயத்துல்லா அலி கமேனியைக் குறிப்பிட்டு கூறினார்.

NBC நேர்காணலில், ரஷ்யா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளின் பொருட்களையும் வாங்குபவர்களைப் பாதிக்கும் இரண்டாம் நிலை வரிகள் என்று அழைக்கப்படுவதை ட்ரம்ப் அச்சுறுத்தினார்.

வெனிசுலா எண்ணெய் வாங்குபவர்கள் மீது அத்தகைய வரிகளை அங்கீகரிக்கும் நிர்வாக உத்தரவில் அவர் கடந்த வாரம் கையெழுத்திட்டார்.

ஞாயிற்றுக்கிழமை ஏர் ஃபோர்ஸ் ஒன்னில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப்,

தெஹ்ரான் ஒரு ஒப்பந்தம் செய்கிறதா என்பதைப் பொறுத்து இரண்டாம் நிலை வரிகள் குறித்து ஒரு முடிவை எடுக்கப் போவதாகக் கூறினார்.

நாங்கள் அதற்கு இரண்டு வாரங்கள் அவகாசம் கொடுப்போம், எந்த முன்னேற்றத்தையும் காணவில்லை என்றால், அவற்றை விதிப்போம், நாங்கள் இப்போது அவற்றை விதிக்கவில்லை என்றார்.

2017-21 ஆம் ஆண்டு தனது முதல் பதவிக்காலத்தில், ட்ரம்ப் அமெரிக்காவை ஈரானுக்கும் உலக வல்லரசுகளுக்கும் இடையிலான 2015 ஒப்பந்தத்திலிருந்து விலக்கிக் கொண்டார்.

அது பொருளாதாரத் தடைகள் நிவாரணத்திற்கு ஈடாக தெஹ்ரானின் சர்ச்சைக்குரிய அணுசக்தி நடவடிக்கைகளுக்கு கடுமையான வரம்புகளை விதித்தது.

ட்ரம்ப் மீண்டும் அமெரிக்கத் தடைகளை விதித்தார். அப்போதிருந்து, இஸ்லாமிய குடியரசு அதன் யுரேனியம் செறிவூட்டல் திட்டத்தை விரிவுபடுத்துவதில் ஒப்புக் கொள்ளப்பட்ட வரம்புகளை மிக அதிகமாக மீறியுள்ளது.

ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் அல்லது இராணுவ விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும் என்ற ட்ரம்பின் எச்சரிக்கையை தெஹ்ரான் இதுவரை நிராகரித்துள்ளது.

சிவிலியன் அணுசக்தி திட்டத்திற்கு நியாயமானது என்று அவர்கள் கூறுவதை விட, அதிக அளவிலான பிளவு தூய்மைக்கு யுரேனியத்தை செறிவூட்டுவதன் மூலம் அணு ஆயுதத் திறனை வளர்ப்பதற்கான ஒரு ரகசிய நிகழ்ச்சி நிரலை ஈரான் கொண்டிருப்பதாக மேற்கத்திய சக்திகள் குற்றம் சாட்டுகின்றன.

தெஹ்ரான் அதன் அணுசக்தி திட்டம் முற்றிலும் சிவிலியன் எரிசக்தி நோக்கங்களுக்காக என்று கூறுகிறது.

https://athavannews.com/2025/1426869

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா முன்வைத்துள்ள அணுசக்தி உடன்படிக்கையை ஈரான் ஏற்காவிட்டால் குண்டுவீச்சு - டிரம்ப்

31 MAR, 2025 | 11:32 AM

image

அமெரிக்கா முன்வைத்துள்ள அணுசக்தி உடன்படிக்கையை ஈரான் ஏற்றுக்கொள்ளாவிட்டால் அந்த நாட்டின் மீது அமெரிக்கா குண்டுவீசலாம் என ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

ஈரானிற்கு எதிராக அமெரிக்கா வரிகளை விதிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

என்பிசி நியுசிற்கு வழங்கியுள்ள பேட்டியில் இதனை தெரிவித்துள்ள அவர் அணுசக்தி திட்டம் தொடர்பான அமெரிக்காவின் உடன்படிக்கையை ஈரான் ஏற்றுக்கொள்வதற்கு சில வார அவகாசத்தை  வழங்குவேன் பேச்சுவார்த்தைகள் எவ்வாறு இடம்பெறுகின்றன என்பதை அடிப்படையாக வைத்து கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

ஈரானிற்கு எதிராக எங்களிடம் இரண்டாம் நிலை வரிகள் உள்ளன என தெரிவித்துள்ள அவர்  நாங்கள் அவர்களிற்கு சிலவாரங்கள் அவகாசம் வழங்குவோம், முன்னேற்றம் எதுவும் ஏற்படாவிட்டால் நாங்கள் அவற்றை நடைமுறைப்படுத்தப்போகின்றோம் என தெரிவித்துள்ளதுடன் அணுசக்தி உடன்படிக்கையை அடிப்படையாக வைத்தே இதனை நாங்கள் தீர்மானிப்போம், அவர்கள் உடன்படிக்கைக்கு இணங்கினால் நாங்கள் அந்த வரிகளை நடைமுறைப்படுத்தமாட்டோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/210706

  • கருத்துக்கள உறவுகள்

இரான் மீது குண்டு வீசுவோம் என்று டிரம்ப் மிரட்டல் - இரான் பதில் என்ன?

அமெரிக்கா - இரான், டொனால்ட் டிரம்ப் மிரட்டல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

3 மணி நேரங்களுக்கு முன்னர்

இரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே எந்த ஒரு ராஜாங்க ரீதியான உறவுகளும் இல்லை. கடந்த சில நாட்களாக இரண்டு நாடுகளுக்கும் இடையே மறுபடியும் வார்த்தைப் போர் மூண்டு வருகிறது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இரான் மீது குண்டு வீசப் போவதாக மிரட்டி வருகிறார். இரானோ அமெரிக்காவோடு இனி எந்த நேரடிப் பேச்சுவார்த்தையும் இல்லை என்று கூறி இருக்கிறது.

சமீபத்தில் இரானிய அரசாங்கத்தின் செய்தித் தொடர்பு நிறுவனமான ஐஆர்என்ஏ, ஓமன் நாட்டின் மூலமாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கடிதத்துக்கு பதில் அனுப்ப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளது. முன்னதாக புதிய அணு ஒப்பந்தத்திற்கு இரான் விரைவில் சம்மதிக்க வேண்டும் என்று டிரம்ப் கூறியிருந்தார்.

அமெரிக்கா தங்கள் மீது அதிகபட்ச அழுத்தம்' தரும் கொள்கையை கடைபிடிக்கும் வரை அதனுடன் பேச்சுவார்த்தை சாத்தியமில்லை என்று இரான் குறிப்பிட்டுள்ளது.

இரானுக்கு டிரம்ப் மிரட்டல்

மார்ச் மாதத் தொடக்கத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதிய அணு ஒப்பந்தம் தொடர்பாக இரானின் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயிக்கு ஒரு கடிதம் எழுதியதாகத் தெரிவித்தார்.

ஐஆர்என்ஏ-வின் கூற்றுப்படி இந்தக் கடிதம் மார்ச் 12-ஆம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்களின் தூதர் வழியாக இரானை வந்தடைந்தது.

இரான் பேச்சுவார்த்தையில் இடம்பெறாவிட்டால் அந்த நாடு அணுஆயுதங்கள் தயாரிப்பதை அமெரிக்கா எப்படியாவது தடுத்து நிறுத்தும் என்று டிரம்ப் கூறியுள்ளார்.

டிரம்பின் இந்த அறிவிப்பைப் பற்றி, ஜெட்டாவில் நடந்த இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பின் கூட்டத்தில் பங்கேற்கச் சென்றிருந்த இரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராச்சி பேசும் போது ''அமெரிக்கா தங்கள் மீது அதிக அழுத்தம் கொடுப்பதைக் கொள்கையாக கொண்டிருக்கும் வரை அதனோடு நாங்கள் எந்தப் பேச்சுவார்த்தையும் வைத்துக் கொள்ளப் போவதில்லை", என்றார்.

அமெரிக்கா - இரான், டொனால்ட் டிரம்ப் மிரட்டல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அணுஆயுத விவகாரத்தில் அமெரிக்காவுடன் விரைவாக ஒரு உடன்படிக்கையை எட்டவில்லை என்றால் இரான் மீது குண்டு வீசப் போவதாகவும் அதன் மீது அதிக வரிகள் விதிக்கப் போவதாகவும் ஞாயிற்றுக்கிழமை டிரம்ப் மிரட்டியுள்ளார்.

ஆனால் கடந்த வாரமே வாஷிங்கடனுடன் நேரடிப் பேச்சுவார்த்தை வைத்துக் கொள்ள இரான் மறுத்து விட்டது.

அமெரிக்க செய்தித் தொலைக்காட்சிகளுள் ஒன்றான என்பிசி நியூஸ் உடனான தொலைபேசி நேர்காணலில் இரானைப் பற்றி டிரம்ப் பேசியபோது, ''அவர்கள் ஒப்பந்தம் செய்யவில்லை என்றால் கண்டிப்பாக வெடிகுண்டு வீசப்படும். இதற்கு முன் அவர்கள் பார்த்திராத மாதிரியான தாக்குதலாக அது இருக்கும்".

அமெரிக்க மற்றும் இரானிய அதிகாரிகள் இடையே தற்போது பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.

அமெரிக்காவுடன் நேரடிப் பேச்சு இல்லை: இரான்

அமெரிக்காவுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்துவதைத் திட்டவட்டமாக மறுப்பதாக இரானிய அதிபர் மசூத் பெஷேஷ்கியன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

ஏபி செய்தி முகமையின் கூற்றுப்படி, இரானின் உச்சபட்ச தலைவருக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அனுப்பிய கடிதத்துக்கு டெஹ்ரானின் முதல் எதிர் நடவடிக்கை இதுதான்.

ஓமன் வழியாக மறைமுகப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வாய்ப்பை திறந்து வைத்துள்ளதாக அதிபர் மசூத் பெஷேஷ்கியன் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா - இரான், டொனால்ட் டிரம்ப் மிரட்டல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இரானுடனான 2015-ஆம் ஆண்டு அணுஆயுத ஒப்பந்தத்தை 2018-ஆம் ஆண்டில் தனது முதல் ஆட்சிக்காலத்தில் ரத்து செய்தார் டிரம்ப். பின்னர் இரான் மீது அதிக அழுத்தம் தரும் கொள்கையின் ஒரு பகுதியாக இரான் மீது அவர் மீண்டும் தடைகளை கொண்டு வந்தார்.

2015-ஆம் ஆண்டு ஒப்பந்தப்படி, தனது அணு ஆயுத நடவடிக்கைளைக் குறைத்துக் கொள்ளவும் சர்வதேச ஆய்வாளர்களை அனுமதிக்கவும் இரான் ஒப்புக் கொண்டிருந்தது. அதற்கு ஈடாக, இரான் மேல் விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட்டன.

இரானின் அணு ஆயுத் திட்டம் மற்றும் தொலைதூர ஏவுகணைத் திட்டங்களின் மீது காலவரையற்ற தடை விதிக்கும் புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த விரும்புவதாக 2015-ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை ரத்து செய்யும்போது டிரம்ப் கூறினார்.

இதன் பிறகு இரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான பேச்சுவார்த்தையில் எந்த குறிப்பிடத்தகுந்த முன்னேற்றமும் இல்லை. ஆனால் 2018-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது தற்போது நிலைமை நிறையவே மாறியுள்ளது.

காஸா தாக்குதலுக்குப் பிந்தைய நிலவரம்

காஸா மோதல் காலகட்டத்தில் இஸ்ரேலின் குறி, 'எதிர்ப்பின் அச்சு' என்று தன்னைக் குறிப்பிட்டுக் கொண்ட இரானாகவே இருந்தது.

இதே காலகட்டத்தில், இரான் உதவியுடன் செயல்படும் யேமனின் ஹாதி ஆயுதக்குழுவினர் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தி வந்தது. இதுதவிர இரானின் அணுஆயுத திட்டத்திற்கு எதிரான அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கை மிரட்டலும் தொடர்கிறது.

அமெரிக்கா - இரான், டொனால்ட் டிரம்ப் மிரட்டல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,காஸாவில் ஒரு மசூதியின் இடிபாடுகளுக்கு அருகே இப்படித்தான் ஈத் தொழுகை நடைபெற்றது.

''நாங்கள் பேச்சுவார்த்தையைத் தவிர்க்க விரும்பவில்லை. ஏற்கனவே அளிக்கப்பட்ட உறுதிமொழிகள் மீறப்பட்டதே இதுவரை பிரச்னைகளை ஏற்படுத்தியுள்ளது. நம்பிக்கையை ஏற்படுத்த முடியும் என்று அவர்கள்தான் (அமெரிக்கா) நிரூபிக்க வேண்டும்," என்று அதிபர் மசூத் பெஷேஷ்கியன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மறைமுகப் பேச்சுவார்த்தைகள் தொடரலாம் என்று தலைவர் அழுத்திச் சொன்னதாக ஆயதுல்லா அலி காமனெயி பற்றிக் குறிப்பிட்டு அவர் கூறியுள்ளார்.

ஏபி செய்தி நிறுவனத்தின்படி, பெஷேஷ்கியானின் அறிக்கைக்கு , 'இரான் அணுஆயுதங்களை தயாரிக்கும் ஆற்றலைப் பெறுவதை அமெரிக்கா ஏற்றுக் கொள்ளாது என்று அமெரிக்காவின் வெளியுறவுத்துறை பதிலளித்துள்ளது.

அதோடு கூடவே, ''இரானுடன் இந்த ஒப்பந்தம் பற்றிப் பேச அதிபர் டிரம்ப் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இரானிய அரசாங்கத்துக்கு இந்த ஒப்பந்தத்தில் விருப்பம் இல்லை என்றால் என்ன செய்வது என்பதில் அதிபர் தெளிவாக இருக்கிறார். அவர் வேறு விஷயங்களைத் தேர்ந்தெடுத்தால் அது இரானுக்கு நல்லதல்ல" என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

அமெரிக்கா - இரான், டொனால்ட் டிரம்ப் மிரட்டல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,அமெரிக்காவுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான டிரம்பின் முன்மொழிவை நிராகரித்தது இரான்

இரானுக்கு அழுத்தம் தரும் அமெரிக்காவின் கொள்கை

வெள்ளை மாளிகையில் இரண்டாம் முறை பதவியேற்று ஒரு மாத காலத்துக்கும் குறைவான காலகட்டத்தில் பிப்ரவரி 5-ஆம் தேதி, இரான் மீது 'அதிக அழுத்தம்' கொடுப்பதற்கான ஆணையில் கையெழுத்திட்டார் டிரம்ப்.

''அணுஆயுதப் பரவலைத் தடுக்கும் ஒரு ஒப்பந்தத்தை இரானுடன் செய்ய விரும்புகிறேன். அவர்கள் சாக விரும்பவில்லை. யாருமே சாக விரும்புவதில்லை… நாம் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டால் இஸ்ரேல் இரான் மீது குண்டு வீசாது." என்று நியூயார்க் டைம்ஸ் இதழிடம் டிரம்ப் தெரிவித்ததாக டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் கூறியுள்ளது.

ஆனால் கொமெரியும், இரானிய அதிபர் மசூத் பெஷேஷ்கியனும் அமெரிக்காவுடன் எந்தவிதமான ஒப்பந்தமும் செய்வதை மறுத்துள்ளனர்.

அமெரிக்க அரசாங்கத்துடனான எந்தப் பேச்சுவார்த்தையும் 'புத்திசாலித்தனமாகவோ, மரியாதைக்குரியதாகவோ' இல்லை என்று பிப்ரவரி 2025-இல் ஆயதுல்லா அலி காமனெயி குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலத்தில் டிரம்பின் மிரட்டலுக்கு பதிலாக இரானின் அணுஆயுதத் திட்டத்தை எந்த ராணுவத் தாக்குதலாலும் முறியடிக்க முடியாது என்று இரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராச்சி தெரிவித்திருந்தார்.

இரான் அரசாங்க செய்தி நிறுவனமான ஐஆர்என்ஏ-வில் வெளியான மார்ச் 8 அறிக்கையின்படி, ''இரானின் அணுஆயுதத் திட்டத்தை எந்த ராணுவத் தாக்குதலாலும் அழிக்க முடியாது. இந்தத் தொழில்நுட்பத்தை நாங்கள் பெற்றுவிட்டோம். எங்கள் மூளையில் உள்ள தொழில்நுட்பத்தை எந்த வெடிகுண்டாலும் அழிக்க முடியாது, '' என்று அப்பாஸ் அராச்சி தெரிவித்தார்.

இரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் அது ஒட்டுமொத்த மத்திய கிழக்கு முழுவதும் முரண்பாடுகளுக்கு வழிவகுக்கும் என்று அராச்சி எச்சரித்தார்.

அதிக அழுத்தம் தருவதென்பது சட்டத்தை மீறுவது மற்றும் மானுடத்திற்கு எதிரானது என்று பல சந்தர்ப்பங்களில் இரான் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா - இரான், டொனால்ட் டிரம்ப் மிரட்டல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,அதிபராக இருந்த போது ஆயதுல்லா அலி காமனெயிக்குப் பல கடிதங்கள் எழுதியுள்ளார் பராக் ஒபாமா.

அமெரிக்க அதிபர்கள் இதுவரை எத்தனை கடிதங்கள் எழுதியுள்ளனர்?

கடந்த காலத்தில் இரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே பல ரகசியப் பேச்சுவார்த்தைகள் மற்றும் மறைமுகக் கடிதப் போக்குவரத்துகள் நிகழ்ந்துள்ளன.

ஆனால் கடந்த பதினைந்து வருடங்களாக இரான் மற்று அமெரிக்கத் தலைவர்கள் இடையேயான தொடர்புகள் பகிரங்கமாகி இருக்கின்றன.

மே 2009-இல் பராக் ஒபாமா, ஆயதுல்லா காமனெயிக்கு முதல் கடிதம் எழுதினார். இதை 2009-ஆம் வருடம் ஜூன் மாதம் பத்தாம் தேதி வெள்ளிக்கிழமை தொழுகையின்போது காமனெயி குறிப்பிட்டதுடன், அதற்கு பதிலளிக்கவும் செய்தார்.

இதன் பிறகு செப்டம்பர் 2009-ல் காமனெயிக்கு இரண்டாம் கடிதம் பாரக் ஓபாமாவிடம் இருந்து வந்தது.

டபானக் வலைத்தளத்தின்படி அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டிருந்தவை பற்றி சரியான தகவல்கள் இல்லை. ஆனால் அதன் மூலமாக இரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வழியை அமெரிக்க அதிபர் நாடுவதாக அந்த வலைத்தளம் குறிப்பிட்டிருந்தது. வாஷிங்டன் டைம்ஸோ, இரண்டு நாடுகளுக்கும் இடையே 'சிறந்த ஒத்துழைப்பை' ஒபாமா நாடுவதாக எழுதி இருந்தது.

2011-இல் ஒபாமா மூன்றாவது கடிதத்தை எழுதினார். இரான் நாடாளுமன்றத்தில் பேசிய அலி மோட்டாஹரி இந்தக் கடிதத்தைப் பற்றிச் சொல்லும் போது அதன் முதல் பகுதி மிரட்டல் தொனியிலும், இரண்டாம் பகுதி நட்புறவு பற்றியும் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

மூன்று வருடங்கள் கழித்து அக்டோபர் 2014-ஆம் வருடம் ஒபாமா தனது நான்காவது கடிதத்தை எழுதினார். இரானுக்கும், அமெரிக்காவுக்குமான 'பொதுவான நலன்கள்' பற்றி ஒபாமா குறிப்பிட்டிருந்ததாகவும், இஸ்லாமிய அரசாகச் சொல்லிக் கொள்ளும் ஐஸ் மீதான அமெரிக்காவின் தாக்குதல் பற்றியும் கருத்து தெரிவித்திருந்தாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் குறிப்பிட்டிருந்தது.

2014 பிப்ரவரி தொடக்கத்தில் ஓபாமாவுக்கு ஆயதுல்லா அலி காமனெயி ஒரு கடிதம் எழுதினார், அதில் எந்த வாக்குறுதியும் அளிக்கப்படவில்லை.

2019-ஆம் வருடம் ஜூன் 13 அன்று காமனெயிக்கு டிரம்ப் ஒரு கடிதம் எழுதினார். முன்னாள் ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே, தானே சென்று இந்தக் கடிதத்தை இரானில் வழங்கினார். இந்த சந்திப்பின் போதும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இல்லை என்று காமனெயி குறிப்பிட்டிருந்தார்.

இஸ்ரேலும், அமெரிக்காவும் இரான் அணு ஆயுதம் தயாரிப்பதை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று எச்சரித்திருக்கும் அதே வேளையில், இந்த வருடம் 2025-ல் ட்ரம்பின் கடிதம் வந்திருக்கிறது. இது ஒரு ராணுவத் தாக்குதலுக்கான வாய்ப்பை அதிகரித்துள்ளது.

-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c5y63147xy6o

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க தளங்கள் அழிக்கப்படும்; ட்ரம்புக்கு எச்சரிக்கை விடுத்த ஈரான்

ஈரான் மீது இராணுவ நடவடிக்கை என்ற எச்சரிக்கையை அமெரிக்கா பின்பற்றினால், ஈரான் அப்பகுதியில் உள்ள "அமெரிக்க தளங்களைத் தாக்கும்” என அந்த நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது கலிபாஃப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு பல்வேறு அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். இந்த நிலையில், அணு ஆயுத உற்பத்தியை ஈரான் அதிகரித்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து ஜனாதிபதி ட்ரம்ப், அவர்களுக்கு கடுமையான அழுத்தம் கொடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். அணு ஆயுத உற்பத்தி பற்றிய குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து மறுத்து வரும் ஈரான், ஒப்பந்தத்தை புதுப்பிக்க முயற்சிகள் எடுத்து வருவதாகக் கூறியிருந்தது.

இந்த நிலையில், ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிப்பதைத் தடுக்கும் விதமாக புதிய ஒப்பந்தத்தைக் கொண்டுவருவதற்கு பேச்சுவார்த்தை நடத்த டொனால்டு ட்ரம்ப் வலியுறுத்தி, ஈரானுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

ட்ரம்பின் இந்தக் கடிதத்திற்கு பதிலளித்திருந்த ஈரான் அரசு, “அமெரிக்கா உத்தரவுகளை வழங்குவதையும் அச்சுறுத்தல்களை விடுப்பதையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. நாங்கள் உங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம். நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்” என பதிலடி கொடுத்திருந்தார். இதன்மூலம் ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதில் உறுதியாக உள்ளது. அது மட்டுமின்றி, அணு ஆயுதம் தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இல்லை என்பதை தெளிவுப்படுத்தி உள்ளது. என்றாலும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இதுதொடர்பாக இரண்டு மாத கால அவகாசம் அளித்திருப்பதாகவும், பேச்சுவார்த்தையை மறுத்தால் கடுமையான தடைகள் மற்றும் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரித்திருந்தார்.

இதற்கிடையே, சமீபத்தில் பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய சுரங்கத்தில், நூற்றுக்கணக்கான நவீன ரக ஏவுகணைகளை, ராணுவம் சேமித்து வைத்துள்ள வீடியோவை ஈரான் அரசு வெளியிட்டிருந்தது. ‘ஏவுகணை நகரம்’ தொடர்பான 85 வினாடிகள் ஒளிபரப்பாகும் அந்த வீடியோவில், அந்நாட்டின் ராணுவ பலத்தைக் காட்டுவதாக அமைந்திருந்தது.

இந்த நிலையில், ”ஈரான் மீது இராணுவ நடவடிக்கை என்ற எச்சரிக்கையை அமெரிக்கா பின்பற்றினால், ஈரான் அப்பகுதியில் உள்ள அமெரிக்க தளங்களைத் தாக்கும்” என அந்த நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது கலிபாஃப் தெரிவித்துள்ளார். மேலும் அவர், “ஈரானின் புனிதத்தை அமெரிக்கா அழிக்க முயன்றால், பிராந்தியம் முழுவதும் வெடிமருந்துக் கிடங்கில் ஒரு தீப்பொறி போல வெடித்துச் சிதறும். அவர்களின் இராணுவ தளங்களும், அவர்களின் கூட்டாளிகளின் தளங்களும் பாதுகாப்பாக இருக்காது” என எச்சரித்துள்ளார்.

முன்னதாக வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்கி, ”அமெரிக்கா தனது அதிகபட்ச அழுத்தமளிப்பது என்ற கொள்கையை மாற்றாவிட்டால் பேச்சுவார்த்தை சாத்தியமல்ல. ட்ரம்பின் கடிதத்தை ஈரான் முழுமையாக ஆராய்ந்து, ஓமன் வழியாக பொருத்தமான பதிலை அனுப்பியுள்ளது” எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/316684

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.