Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"எங்களுக்கும் காலம் வரும்"

இன்றைக்கு குறைந்தது ஏழு, ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, இலங்கையின் வட மாகாணத்தில் இடைவிடாது பெய்து வருகின்ற கனமழை காரணமாக அனைத்து குளங்களும் நிறைந்து அதிகளவில் வான் பாய்கின்ற நிலைமை ஏற்பட்டது. அதன் காரணமாக பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது மாத்திரமல்லாமல் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்கின்ற நிலையும் உருவாகியது. அந்தவகையில், வவுனியா குளம், நொச்சிக்குளம், பத்தினியார் மகிழங்குளம், தாண்டிக்குளம், வைரவபுளியங்குளம், அரசமுறிப்புகுளம், பாவற்குளம், பேராறு நீர்த்தேக்கம் போன்ற பல்வேறு குளங்களை அண்டி வாழ்ந்த மக்கள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டனர்.

அவர்களில் ஒருத்திதான் கனகம்மா. அவள் கடந்த காலப் போரில், விசாரணைக்கு என்று அழைத்துப்போன கணவன் இற்றைவரை வீடுவாராமல், என்ன நடந்தது என்றும் அறியாமல் காணாமல் போக, தன் ஒரே மகளுடன் பண்ணையாரும் முதலாளியுமான வெங்கடேச பண்ணையார் வீட்டில் தொட்டாட்டு வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்தாள். அவளின் மகள் தான் சரளா, அழகு மட்டும் அல்ல, நல்ல ஒழுக்கமான குணமும் உடையவள். உயர் வகுப்பில் கலைப் பாடம் பயின்றுகொண்டு இருந்தாள். அவளது வகுப்பில் ஒரு கெட்டிக்கார மாணவியும் கூட.

சரளா தனது உயர் பாடசாலைக்கு வயல் வெளிக்கூடாக நடந்து போகையில், பாலர் பாடசாலை இளம் ஆசிரியர் சுரேஷை காண்பது ஒரு வழமையாகிவிட்டது. இருவரும் வெவ்வேறு திசையில் சென்றாலும், ஒருவரை ஒருவர் கடக்கும் பொழுது சிறு புன்முறுவலுடன் அந்த சந்திப்பு தொடங்கியது. போகப்போக 'ஹலோ , எப்படி இன்று?' என ஓர் இரு வார்த்தைகளாக அது விரிவடைந்தது.

அந்த காலகட்டத்தில் தான் வெள்ளத்தால் கனகம்மா குடும்பம் பாதிக்கப்பட்டது. அவர்களின் குடிசை வீடு தாழ்நிலப் பகுதிகளில் அமைந்து இருந்ததால், அங்கு அவர்களின் வீட்டுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்துவிட்டது. எனவே கனகம்மா வெங்கடேச பண்ணையாரிடம். அவர்களின் பின் வளவில் தேவையற்ற அல்லது பாவனையில் தற்சமயம் இல்லாத சாமான்கள் மற்றும் கருவிகள் வைக்க அமைக்கப்பட்டிருந்த சரக்கு அறை ஒன்றில் ஓர் சிலநாட்கள் தானும் மகளும் தங்க இடம் கேட்டார். கேட்டது தான் தாமதம், பண்னையார் 'உங்களுக்கு எல்லாம் வேலை தந்ததே பத்தாது, இப்ப ஒட்டகத்துக்கு இடம் கொடுத்த மாதிரி ... ' கனகம்மாவிடம் சீறி பாய்ந்தார். அவரிடம் எள்ளளவும் கருணை நெஞ்சில் இருக்கவில்லை. சக மனிதர்களை மதிக்கும் எந்த பண்பாடும் அங்கு வறண்டு போய், பணத்திமிர் மட்டுமே பெரிதாக தெரிந்தது. கனகம்மா ஒன்றும் பேசவில்லை. பண்ணையார் மிகுதி பேசி முடிக்கும் முன்பே, அங்கிருந்து புறப்பட்டு விட்டாள்.

'எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும்

வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே!

நெஞ்சில் ஒரு களங்கமில்லை சொல்லில் ஒரு பொய்யுமில்லை

வஞ்சமில்லா வாழ்க்கையிலே தோல்வியுமில்லை!'

கனகம்மா கொஞ்சம் சத்தமாகவே முணுமுணுத்தபடி, வேலையையும் இடையில் அந்தந்த படி விட்டுவிட்டு தன் குடிசை நோக்கி புறப்பட்டாள். அவளைப் பொறுத்தவரையில் இனி அங்கு வேலை செய்து பிழைப்பதை விட, பிச்சை கூட எடுக்கலாம் போல இருந்தது, எனினும் அவள் உழைத்து வாழ்வதையே விரும்புவாள். தாய் நேரத்துடன் வேலையில் இருந்து வருவதையும், தாயின் முணுமுணுப்பையும் கவனத்த சரளா, வீட்டுக்குள் வந்த வெள்ளத்தை, வெளியே தள்ளுவதை நிறுத்திவிட்டு, தாயின் முகத்தைப் பார்த்தாள். கண்ணீர் அவள் இரு கன்னத்தால் வடிந்து மார்பை நனைப்பதை பார்த்தாள்.

"கருங்கால் வெண்குருகு மேயும்

பெருங்குளம் ஆயிற்றென் இடைமுலை நிறைந்தே"

தாயின் கண்ணீர் நிறைந்து அவளது முலைகளின் இடைப்பகுதி நாரைகள் மேய்கின்ற குளம் போல் ஆகிவிட்டது. அவளுக்கு தாயின் நிலை புரிந்துவிட்டது. ' அம்மா, சுரேஷ் மாஸ்டரை நான் கேட்கப் போகிறேன். அழவேண்டாம். அவர் கட்டாயம் உதவிசெய்வார்' அவள் மனதில் தானாக ஒரு நம்பிக்கை வந்தது. சுரேஸுடன் இது வரை பெரிதாக கதைக்கவில்லை என்றாலும், இருவரின் உள்ளங்களும் பல கனவுகள் கண்டு தங்களுக்குள் தாங்களே பேசியதை யாரும் அறியார்கள்.

இதை தாயிடம் கூறிவிட்டு, சுரேஷின் வீட்டை நோக்கி புறப்படும் பொழுது, அவளது முகமும் முழுமதியாக ஒளிர்ந்தது. பிரமன் அளந்து தான் செதுக்கியிருக்க வேண்டும் அப்படி ஒரு அழகு அவளில் மின்னியது.

"நீள் மலைக் கலித்த பெருங் கோற் குறிஞ்சி

நாள்மலர் புரையும் மேனி, பெருஞ் சுனை

மலர் பிணைத்தன்ன மா இதழ் மழைக் கண்,

மயில் ஓரன்ன சாயல், செந் தார்க்

கிளி ஓரன்ன கிளவி, பணைத் தோள், 5

பாவை அன்ன வனப்பினள் இவள்'' என,

காமர் நெஞ்சமொடு பல பாராட்டி,

யாய் மறப்பு அறியா மடந்தை

தேம் மறப்பு அறியாக் கமழ் கூந்தலளே."

நீண்ட மலையிலே தழைந்த பெரிய தண்டினையுடைய குறிஞ்சியின் விடியலிலே விரிந்த மலர் போன்ற மேனியையும்; பெரிய சுனையிலுள்ள குவளைமலர் எதிர் எதிர் வைத்துப் பிணைத்தாற் போன்ற இமையையுடைய கரிய குளிர்ச்சி பொருந்திய கண்ணையும்; மயிலின் ஒரு தன்மை யொத்த சாயலையும்; கழுத்திலிட்ட சிவந்த வரையுடைய கிளியின் ஒரு தன்மை யொத்த சொல்லையும்; பருத்த தோளையும்; கொல்லிப் பாவை போன்ற அழகையுமுடைய...அகிலின் நெய் பூசி நீங்ககில்லாத மணம் வீசுகின்ற கூந்தலையுடைய தலைமகள் போல், என்றும் இல்லாதவாறு இன்று ஏனோ இப்படி அவள் அழகு தேவதையாக இந்த வெள்ளத்தின் நடுவிலும் இருந்தாள். ஆமாம் அவள் மனதில் காதல் வெள்ளம் நெருங்குகின்றது போல ஒரு உணர்வு போலும், யார் அறிவார் பராபரமே? அவள் யாரை நினைத்துக்கொண்டு இவ்வளவு காலமும் காத்திருந்தாளோ, அவனை சந்திக்கப்போகிறாள்.

"உள்ளின் உள்ளம் வேமே உள்ளா

திருப்பினெம் அளவைத் தன்றே வருத்தி

வான்றோய் வற்றே காமம்

சான்றோர் அல்லர்யாம் மரீஇ யோரே !"

மாறனோ அம்புமேல் அம்புபொழிகிறான். காமமோ வானளாவப் பெருகிவிட்டது. அவனை நினையாதிருக்கவும் அவளால் முடியவில்லை. அப்படி நினைத்தாலும் அவள் மனம் வேதனை அடைகிறது, அதை தாங்கிக்கொள்ளவும் முடியவில்லை என்று இது வரை காலமும் இருந்தவளுக்கு இப்ப அவனை இன்னும் சிறிது நேரத்தில் சந்திக்கப் போகிறாள், உதவி ஒன்று கேட்கப் போகிறாள் என்றால் எப்படி இருக்கும்?.அந்த பூரிப்பில் அவள் அழகு மேலும் மேலும் மெருகேறியது .ரம்பை, ஊர்வசியை விட மிக சிறந்த மற்றொரு அழகியை பிரம்மா படைத்தார். அது தான் திலோத்துமை. அப்படித்தான் இவளும் இருந்தாள்.

"பணமிருக்கும் மனிதரிடம் மனமிருப்பதில்லை

மனமிருக்கும் மனிதரிடம் பணமிருப்பதில்லை"

என்ற பழைய வெள்ளித்திரை பாடல் வரிகள் நெஞ்சில் வந்து மோத, சரளா சுரேஷின் வீட்டு கதவை தட்டினாள். சுரேஷின் தாயும் தங்கையும் கதவை திறந்தார்கள். அவர்களுக்கு இவளை பெரிதாக தெரியா விட்டாலும், சுரேஷ் பட்டும் படாமல், இவளைப்பற்றி தங்கையிடம் முன்பு கூறியிருந்தால், அவளை உள்ளே வந்து அமரும் படி அழைத்து,

வந்த காரணம் என்ன வென வினவினார். அவள் மௌனமாக இருந்தாள். எனவே, சுரேஷ் வீட்டின் பின்பக்கம் உள்ள தனது மட்பாண்டம் செய்யும் குடிசைக்குள் இருப்பதாகவும், தான் போய் கூட்டி வருவதாகவும் தங்கை புறப்பட்டாள். சுரேஷ் ஓய்வு நேரத்தில் ஒரு சிறு தொழிலாக மட்பாண்டங்கள் செய்வது சரளாவுக்கு இதுவரை தெரியாது.

சுரேஷ் வந்ததும் சரளா தங்கள் குடும்பத்தின் நிலையை எடுத்து கூறினாள். சுரேஷ் பதில் சொல்ல முன்பே, அவனின் தாய், ' தாராளமாக இங்கு வந்து தங்கலாம், மற்றும் உங்க அம்மா, வேறு வேலையை தேடாமல், இங்கேயே சுரேஷின் இந்த வேலைக்கு உதவலாம். அதுவும் ஒரு முழுநேர வேலையாக மாறும் தானே?' என்று படபட என்று கூறி முடித்தாள்.

நாளடைவில், இரு குடும்பங்களின் பந்தம் அவர்களின் கிராமத்தைச் சூழ்ந்திருந்த பழமையான மரங்களின் வேர்களைப் போல வலுவாக மாறியது. அதேவேளை சரளா சுரேஷ் காதலும் தங்கு தடையின்றி நெருக்கமாக வளர்ந்தது. அவர்கள் இருவரும் சாதாரண பின்னணியை கொண்டு இருந்தாலும், இருவரும் பெரும் கனவுகளைக் தன்னகத்தே கொண்டிருந்தனர். அவர்கள் தங்கள் திறன்களில் அசைக்க முடியாத நம்பிக்கையும், ஒரு சிறந்த வாழ்க்கை பற்றிய பார்வையையும் கொண்டு இருந்தனர். ஒரு நன்னாளில், கிராமத்து மக்கள் புடைசூழ இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

அவர்கள் இருவரின் அசைக்க முடியாத நம்பிக்கையும் குடும்பங்கள் இரண்டினதும் அயராத முயற்சியும் பலனைத் தரத் தொடங்கியது, அவர்களின் வாழ்க்கை மெல்ல மெல்ல மாறத் தொடங்கியது. சரளாவின் கலைபடைப் பாற்றலும், சுரேஷின் சமயோசிதமும் ஒரு வினோதமான மட்பாண்டக் கடையை விரைவில் கிராமத்தின் மையமாக மாற்ற வழிவகுத்தது. அவர்களின் கைவினைப் படைப்புகள், அன்பு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றால் ஊடுருவி, தொலைதூர மக்களின் கண்களைக் கூட கவர்ந்தன. விரைவில் சுரேஷ் ஆசிரியர் பணியில் இருந்து ஒதுங்கி, முழுநேர சிறு தொழில் முதலாளியாக மாறினான்.

விதி அவர்களைப் பார்த்து புன்னகைத்ததோ இல்லையோ, அவர்களின் வணிகம் செழித்தது, ஒரு காலத்தில் அவர்களின் அடக்கமான ஏழ்மை வாழ்க்கையை எள்ளிநகையாடியோர் அவர்களின் வளர்ச்சியைக் கண்டு கொஞ்சம் சஞ்சலம் அடைந்தார்கள். ஆனால் அவர்களோ தங்கள் வெற்றியின் மத்தியிலும், சரளாவும் சுரேஸும் பணிவுடன் வேரூன்றி இருந்தனர், அவர்கள் தங்கள் தாழ்மையான வாழ்வின் தொடக்கத்தை ஒருபோதும் மறக்கவில்லை.

அவர்களின் செல்வம் அவர்களின் இதயங்களை மாற்ற வில்லை; மாறாக, அது கருணைக்கான அவர்களின் திறனை விரிவுபடுத்தியது. அவர்களின் கடந்த கால போராட்டங்களை நினைவுகூர்ந்து, தேவைப் படுபவர்களுக்கு ஆதரவளிக்கும் கலங்கரை விளக்கங்களாக மாறினர். அவர்கள் போராடும் விவசாயிகளுக்கு உதவினார்கள், பின்தங்கிய குழந்தைகளுக்கான கல்விக்கு நிதியுதவி செய்தனர், மேலும் ஏழைகளுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கினர். அவர்களின் செயல்கள் அவர்களின் செல்வத்தை விட சத்தமாக எங்கும் எதிரொலித்தது, அவர்களின் தாராள மனப்பான்மையை மற்றவர்களை பின்பற்ற தூண்டியது. அவர்கள் பள்ளிகளைக் கட்டினார்கள், சமூகத் திட்டங்களுக்கு நிதியுதவி செய்தார்கள், மேலும் முழு கிராமத்திற்கும் நம்பிக்கையின் சின்னங்களாக மாறினர்.

அவர்களின் கதை வெகுதூரம் பரவியது மட்டும் அல்ல, அவர்களை இந்த நிலைக்கு தள்ளிய, தூண்டிய வெங்கடேச பண்ணையாரின் பெயரும், குறிப்பாக மற்றவர்களின் அவலத்தை அலட்சியப் படுத்தியதற்காக மக்களிடம் பரவலாக பரவத் தொடங்கியது. சரளா மற்றும் சுரேஷின் பரோபகாரத்தால் தீண்டப்பட்ட வெங்கடேச பண்ணையார், தன் குறையை உணர்ந்து தனக்கே உரித்தான ஒரு மாற்றத்தை தன்னில் ஏற்படுத்தினார். செல்வத்தின் உண்மையான சாரத்தை அவருக்குக் காட்டிய சரளா சுரேஷ் தம்பதியினரால் ஈர்க்கப்பட்டு, சமூகத்திற்குப் பயனளிக்கும் வகையில் அவர் தனது வளங்களைத் திருப்பி அமைக்க தொடங்கினார்.

"எங்களுக்கும் காலம் வரும்" என்று செய்து காட்டியது மட்டும் அல்ல, வறட்டு கௌரவத்துடன் பணப்பெட்டி தான் வாழ்வு என்று இருந்தோரையும் அவர்களின் கதை திருப்பி பார்க்க வைத்தது.

"எங்களுக்கும் காலம் வரும்,

அந்த நாள் இனிய வாழ்வாகும்!

உண்மையை மறக்காமல் முன்னுக்கு போவோம்

ஊருடன் சேர்ந்து சுமைகளை சுமப்போம்!"

நன்றி

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

409071630_10224749508027836_451370350675

409044233_10224749508147839_318216205517


Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.