Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

mobile-witness.png?resize=500%2C331&ssl=

கைபேசிச் சாட்சி – நிலாந்தன்!

முல்லைத்தீவு, சின்னசாளம்பன் கிராமத்தில் ஓர் ஆண் ஒரு பெண்ணைக் கதறக் கதற அடிக்கிறார்.அதை ஒருவர் கைபேசியில் படம் பிடிக்கிறார்.அக்காட்சி சமூகவலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டது.விளைவாக போலீசார் அந்த நபருக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்.சமூகவலைத்தளங்கள் எந்தளவுக்கு இது போன்ற விடயங்களில் வினைத்திறனோடு செயல்பட முடியும் என்பதற்குத் தமிழ்ச் சமூகத்தில் இது ஆகப் பிந்திய எடுத்துக்காட்டு.இதுபோன்று சிறுவர்களைத் தாக்கும் காட்சிகள்,முதியவர்களைத் தாக்கும் காட்சிகள் இடைக்கிடை சமூகவலைத்தளங்களில் யாராலாவது பகிரப்படும். பெரும்பாலும் அவற்றுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். இது ஒரு நல்ல போக்கு.அதே சமயம் இந்த போக்குக்கு பின்னால் உள்ள உளவியலையும் சற்று ஆழமாக ஆராய வேண்டும்.

பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிங்கள ஊடகவியலாளர் கொழும்பு டெலிகிராப் இணையதளத்தில் எழுதியிருந்தார் “மனிதன் இப்பொழுது நடமாடும் கமராவாக மாறிவிட்டான்” என்று.அது உண்மை. இதுபோன்ற அக்கிரமங்கள் நிகழும் போது மட்டுமல்ல ஒரு இனத்துக்கு எதிரான இன அழிப்புப் போரையும் கைபேசிக் கமராக்கள் வெளியே கொண்டு வருகின்றன.வேறு எங்குமல்ல. இலங்கையில்தான். முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில்,தமிழ்க் கமராக்கள் மிகச் சிலதான் இருந்தன. அவை படையினரின் பகுதிக்குள் போக முடியாத கமராக்கள். அவை தவிர செய்மதிக் கமராக்கள் இருந்தன. எனினும் சனல் நாலு போன்ற ஊடகங்களில் வெளிவந்த சான்றுகளில் பல தமிழ்க் கமராக்களால் பிடிக்கப்பட்டவை அல்ல. அவை அதிகமாக படைத்தரப்பினரின் கமராக்களால் கைப்பற்றப்பட்ட காட்சிகள்.வெற்றிக் களிப்பில் தன்னிலை பறந்து,தற்காப்பு உணர்வை இழந்து அந்த குற்றச்செயல்களை புரிந்த படைத்தரப்பே படம் பிடித்த காட்சிகள். அதனால் நாடு இப்பொழுது ஐநாவில் குற்றவாளிக் கூண்டில் நிற்கின்றது.அப்போரை வழிநடத்திய தளபதிகளுக்கு எதிராக இதுவரையிலும் மூன்று நாடுகள் தடைகளை அறிவித்துள்ளன. அண்மையில் பிரித்தானியா நான்கு பேருக்கு எதிராகத் தடைகளை அறிவித்தது.இப்படிப் பார்த்தால் தன் சொந்தக் கைபேசிகளால் காட்டிக் கொடுக்கப்பட்ட ஒரு நாடு இலங்கை எனலாம்.

அமெரிக்காவில் 2020இல் ஒரு கைபேசிக் கமராவில் படம் பிடிக்கப்பட்ட கொலைக் காட்சி கொல்லப்பட்ட கறுப்பினத்தவருக்கு நீதியைப் பெற்றுக் கொடுத்தது.ஒரு கறுப்பினத்தவரை அமெரிக்கப் போலீசார் நிலத்தில் குப்புறக் கிடத்தி கழுத்தில் முழங்காலை வைத்து நெரித்துக் கொல்லும் காட்சியை அந்த இடத்தில் நின்ற Darnella Frazier- டார்நெலா ஃப்ரேசியர் என்ற 17 வயதுடைய பெண் படம் பிடித்தார்.அந்தக் காணொளி அமெரிக்கா முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அந்தக் காணொளிக்காக டார்நெலா ஃப்ரேசியர் புலிஸ்டர் விருது பெற்றார்.

எனவே தம் கண் முன்னே நிகழும் அநீதிகளை, அக்கிரமங்களை படம் பிடிக்கும் கமராக்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக் கொடுப்பவை என்ற பொருளில் போற்றுதலுக்குரியவை. அதேசமயம் அந்தக் கமராக்களுக்கு பின்னால் உள்ள உளவியல் தொடர்பில் வேறு ஒரு வாசிப்பும் வாதப்பிரதிவாதங்களும் உண்டு.உலகப் பரப்பில் முக்கியமாக இரண்டு சம்பவங்கள் தொடர்பாக அவ்வாறான வாதப்பிரதிவாதங்கள் அதிகம் நிகழ்ந்தன.

முதலாவது சம்பவம் வியட்நாமில்1972ல் இடம் பெற்றது.அங்கே அமெரிக்கக் குண்டு வீச்சு விமானங்கள் ஒரு கிராமத்தின் மீது தீக்குண்டுகளை வீசின. அக்குண்டுகளால் பற்றி எரிந்த கிராமத்திலிருந்து Phan Thi Kim Phuc -பான் தி கிம் என்ற சிறுமி நிர்வாணமாக ஓடி வருகிறார்.அதை அசோசியேட்டட் பிரஸ் நிறுவனத்தைச் சேர்ந்த Nick Ut – நிக் உட் படம் பிடிக்கிறார்.அந்தப் படம் உலகப் புகழ் பெற்றது. அது பின்னாளில் பல விருதுகளை வென்றது. வியட்நாமில் அமெரிக்கா நிகழ்த்திய ஆக்கிரமிப்புப் போருக்கு எதிராக ஒரு சான்றாக அது என்றென்றும் நிலைத்து நிற்கின்றது. அதே சமயம் அதில் சம்பந்தப்பட்ட சிறுமி பின்னாளில் ஐநாவின் சமாதானத்துக்கான தூதுவர்களில் ஒருவராக கௌரவிக்கப்பட்டார்.இது முதலாவது சம்பவம்.

இரண்டாவது சம்பவம் சோமாலியாவில் 1993இல் நிகழ்ந்தது.அங்கே பஞ்சத்தால் மெலிந்து எலும்புக்கூடாகிய ஒரு சிறுவன் ஐநாவின் நிவாரண மையம் ஒன்றை நோக்கி நடக்கச் சக்தி இல்லாமல் தவழ்ந்து போகிறான். அவன் எப்பொழுது இறப்பான், அந்த உடலை எப்பொழுது தூக்கிக்கொண்டு போகலாம் என்று ஆர்வத்தோடு அருகே ஒரு பிணந்தின்னிக் கழுகு காத்துக் கொண்டிருக்கிறது. இந்தக் காட்சியை. கெவின் கார்ட்டர் -kevin Carter என்ற ஒளிப்படக் கலைஞர் படம் எடுத்தார்.சோமாலியாவின் பஞ்சத்தை அந்தளவுக்கு வேறு யாரும் ஒளிப்படமாக வெளியே கொண்டு வரவில்லை. அந்தப் படத்துக்கும் புலிஸ்டர் விருது கிடைத்தது.

இந்த இரண்டு சம்பவங்களும் கைபேசி காலத்துக்கு முந்தியவை. அந்த இரண்டு சம்பவங்களின் மீதும் அறம் சார்ந்த ஒரு விவாதம் நடந்தது. என்னவெனில், வியட்நாமில் தீக்காயங்களோடு ஓடி வந்த அந்த சிறுமியை காப்பாற்றாமல் அந்த ஊடகவியலாளர் படம் எடுப்பதில் கவனமாக இருந்தது ஒரு மனிதாபிமானப் பிரச்சினையாக விவாதிக்கப்பட்டது.அதுபோலவே சோமாலியாவிலும் பிணந்தின்னிக் கழுகு ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டிருந்த அந்தச் சிறுவனின் பசிக்கு உணவைக் கொடுக்காமல், பிணந்தின்னிக் கழுகைத் துரத்தாமல், நிதானமாக அதைப் படம் எடுத்த அந்த ஒளிப்படக் கலைஞரின் மனிதாபிமானம் பற்றிய கேள்வி.

இந்த இரண்டு கேள்விகளிலும் நியாயம் உண்டு.ஆனால் கமராவை ஃபோகஸ் செய்வது ஒரு தேர்ந்த கலைஞருக்கு பல நிமிட வேலை அல்ல. அவர் அதனை மிகக் குறுகிய காலத்துக்குள் செய்து விடுவார். எனவே ஒளிப்படம் எடுப்பதில் செலவழித்த நேரத்தில் அந்தச் சிறு பிள்ளைகளுக்கு நிவாரணம் வழங்கியிருக்கலாம் என்ற விவாதம் ஏற்புடையது அல்ல.அதைவிட முக்கியமான வாதம் என்னவென்றால், அந்தப் படங்கள்தான் அந்தப் பிள்ளைகளுக்கும் அவர்கள் சார்ந்த சமூகத்துக்கும் நீதியை, நிவாரணத்தைப் பெற்றுக் கொடுக்க உதவிய சான்றுகளாகும்.அந்த இடத்தில் ஒளிப்படக் கலைஞரின் தொழில் சார்ந்த தர்மம் என்று பார்க்கும்பொழுது அவர் அந்த படங்களை எடுத்தது சரி.அந்தப் படங்களை எடுத்த பின் அவர் அந்தச் சிறு பிள்ளைகளுக்கு உதவியிருக்கலாம். எனினும் இதில் இரண்டாவது சம்பவத்தில் சம்பந்தப்பட்ட ஒளிப்படக் கலைஞர் குற்ற உணர்ச்சியால் புலிஸ்டர் விருது கிடைத்த நான்கு மாதங்களில் தற்கொலை செய்து கொண்டதாக ஒரு தகவல் உண்டு.அவர் குற்ற உணர்ச்சியால் தற்கொலை செய்தாரா இல்லையா என்பதனை உறுதிப்படுத்த வேண்டும்.

மேற்கூறிய இரண்டு சம்பவங்களையும் இப்பொழுது இக்கட்டுரையில் தொடக்கத்தில் கூறப்பட்ட சம்பவங்களோடு பொருத்திப் பார்க்கலாம். மூர்க்கமாகத் தாக்கப்படும் ஒரு பெண்ணைக் காப்பாற்றாமல் அந்தக் காட்சியைப் படம்பிடித்துக் கொண்டிருந்தது சரியா என்ற கேள்வி சமூக வலைத்தளங்களில் எழுப்பப்படுகிறது. ஆனால் யாரோ ஒருவர் அதைப் படம் எடுத்ததால்தான் அந்தப் பெண்ணுக்கு நீதி கிடைத்திருக்கிறது.

படம் எடுப்பதும் அந்த அக்கிரமம் தொடர்பாக சமூகவலைத்தளங்களில் எழுதுவதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக் கொடுப்பதற்கு ஏதோ ஒரு விகிதமளவுக்கு உதவுகின்றன.அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.அதே சமயம் அது சமூக வலைத்தள உளவியலையும் பிரதிபலிக்கின்றது.படம் எடுப்பதோடும் அது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பகிர்வதோடும் தமது பொறுப்பு முடிந்து விட்டது என்று கருதும் ஒரு மனோநிலை.

ஆனால் எல்லாச் சமூகங்களிலும் ஒரு பகுதியினர் அப்படித்தான் இருப்பார்கள். அவர்களால் முடிந்த நற்செயல் அவ்வளவுதான்.அதைக் குறை சொல்லிக் கொண்டிருக்க முடியாது. ஒரு சமூகத்தில் இருக்கும் எல்லாருமே சிறுமை கண்டு பொங்கும் போராளிகளாக இருப்பதில்லை.அதிகமானவர்கள் வாயால் பொங்கும் போராளிகள்தான்.பொதுவாக மனிதர்கள் தியாகம் செய்யாமல் எப்படி மற்றவர்களுக்கு உதவலாம் என்றுதான் சிந்திப்பார்கள். இங்கு ஒரு கூர்மையான உதாரணத்தைச் சொல்லலாம்.மோட்டார் சைக்கிள் ஓடும் பொழுது கவலையீனமாக ஸ்டாண்டைத் தட்ட மறந்தால் எதிர்ப்படும் யாராவது ஒருவர் ஏதோ ஒரு சமிக்ஞையைக் காட்டி ஸ்டாண்ட் தட்டப்படவில்லை என்பதனை தமக்கு உணர்த்துவார்கள். அதில் ஒரு மனிதாபிமானம் உண்டு. அந்த உதவியைச் செய்வதனால் அவர்களுக்கு எந்த நட்டமும்,இழப்பும் கிடையாது. ஆனால் அந்த உதவியினால் ஒர் உயிர் பாதுகாக்கப்படும்.

எனவே சமூகத்தில் பெரும்பாலானவர்கள் அவ்வாறான உதவிகளைச் செய்பவர்கள்தான்.அந்தப் பெண் தாக்கப்படுகையில் படம் எடுத்தவரையும் அப்படித்தான் பார்க்க வேண்டும்.இந்த இடத்தில் நீதியின் அளவுகோல்களையும் தர்மத்தின் அளவுகோல்களையும் வைத்துக்கொண்டு அந்த கைபேசிக்காரரை விமர்சிக்கத் தேவையில்லை.அந்தப் பெண்ணுக்கு நீதி கிடைப்பதற்கான தொடக்கமே அந்தக் காணொளிதான்.

மேலும் அந்த படம் எடுத்த நபர் மட்டுமல்ல அங்கு சூழ்ந்திருந்த அனேகமானவர்கள் அந்த அக்கிரமத்தைத் தடுக்க முயற்சிக்கவில்லை.எல்லாருமே பார்வையாளர்களாகத்தான் தோன்றுகிறார்கள்.

அவர்கள் ஏன் அந்த அக்கிரமத்தைத் தடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள்? ஒரு மகத்தான போராட்டத்தை நடத்திய மக்கள் மத்தியில் இப்படிப்பட்ட அக்கிரமம் ஒன்று நிகழும் பொழுது, அந்தச் சிறுமை கண்டு பொங்கி எழ ஒருவர் கூட இருக்கவில்லையா? இதுபோன்ற விடயங்களில் சிறுமை கண்டு பொங்க வேண்டிய ஒரு மக்கள் கூட்டம் பார்வையாளராக நிற்பது எதைக் காட்டுகிறது?

இப்படித்தான் சில மாதங்களுக்கு முன்பு கிளிநொச்சியில் ஊடகவியலாளரான தமிழ்ச்செல்வனை அவர் எழுதிய ஒரு செய்திக்காக சிலர் தாக்கினார்கள். கண்டி வீதியில் பலர் பார்த்திருக்க அவர் தாக்கப்பட்டார். தாக்கியவர்களை யாரும் தடுக்கவில்லை.தமிழ்ச்செல்வன் எழுதிய செய்தி யாருடைய பிள்ளைகளை போதைப் பொருட்களில் இருந்து பாதுகாக்கும் நோக்கத்தை கொண்டதோ அதே மக்கள் அவர் தாக்கப்படுகையில் கையாலாகாத பார்வையாளர்களாக பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

இந்தச் சுயநலம் அல்லது கோழைத்தனம் அல்லது பார்வையாளர் மனோநிலை என்பது பாரதூரமானது.வீரமும் தியாகமும் நிறைந்த மகத்தான ஒரு போராட்டத்தை நடத்திய மக்கள் பார்வையாளர்களாக மாறிக்கொண்டிருக்கிறார்களா?

மேலும்,தாக்கப்பட்ட பெண் வெடிப்பொருட்களை அகற்றும் நிறுவனத்தில் வேலை செய்கிறார்.அதாவது யுத்த களத்தோடு தொடர்புடைய ஒரு துறை.தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காக அவர் ஏன் திருப்பித் தாக்க முயற்சிக்கவில்லை? மன்றாடாமல் திருப்பித் தாக்குவதில்தான் முன் உதாரணம் உண்டு.இது எல்லாப் பெண்களுக்கும் பொருந்தும்.எறும்புகூட தன்னை மிதிப்பவர்களைக் கடிக்கின்றது.இதுபோன்ற சந்தர்ப்பங்களில் பெண்கள் ஏதோ ஒரு விதத்தில் தம்மை தற்காத்துக் கொள்ளும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.சிறுமை கண்டு பொங்காது பார்வையாளர்களாக நிற்பவர்களின் தொகை அதிகரித்துவரும் ஒரு சமூகத்தில் பெண்கள் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ள வேண்டும். தாக்குபவனைக் கும்பிடக்கூடாது.

https://athavannews.com/2025/1427623

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.