Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இனநெருக்கடியை இராணுவக் கண்ணோட்டத்தில் அணுகினால் எத்தரப்புமே இறுதிவெற்றி இலக்கை அடைய முடியாது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இனநெருக்கடியை இராணுவக் கண்ணோட்டத்தில் அணுகினால் எத்தரப்புமே இறுதிவெற்றி இலக்கை அடைய முடியாது

[27 - October - 2007]

காலகண்டன்

இன்றைய காலம் உலகமயமாதலின் காலமாகும். முதலாளித்துவத்தின் தொடர்ச்சியை சகல நிலைகளிலும் தூக்கி நிறுத்தி அதனைப் பலவழிகளிலும் பலமுடையதாக்கி முன்கொண்டு செல்வதற்கு ஏகாதிபத்தியத்தால் நடைமுறைப்படுத்தப்படும் நிகழ்ச்சி நிரலே உலகமயமாதலாகும். உலக நாடுகளின் பொருளாதார அரசியல் சமூகப் பண்பாட்டுத்துறைகள் அனைத்திலும் இந்த உலகமயமாதலின் நச்சுத்தனங்கள் மிக மிக நாசுக்காகவே ஊடுருவல் செய்து நிற்கின்றன. அவற்றின் நோக்கங்கள், தன்மைகள், செயற்பாடுகள், விளைவுகள் பற்றி பரந்துபட்ட மக்கள் எவ்வித கவனமும் கவலையும் கொள்ளாத வகையிலே தான் இவ் உலகமயமாதல் நிகழ்ச்சி நிரல் மூன்றாம் உலக நாடுகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இலங்கையிலும் இந்நிகழ்ச்சி நிரல் கடந்த மூன்று தசாப்தங்களாக தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. அதன் மூலமாக ஏற்பட்ட தாக்கங்கள், பலாபலன்கள், விளைவுகள் தான் ஒட்டு மொத்தமான இன்றைய சமூக அவலங்களாக தலைவிரித்தாடி நிற்கின்றன என்ற உண்மை எவராலும் மறுக்கப்பட முடியாத ஒன்றாகும். இதனால் பல தரப்பு மக்களிடையேயும் அதிருப்தி, வெறுப்பு, விரக்தி, இயலாமை என்பன காணப்படுகின்றன. ஆனால், சமூக நெருக்கடிகள், பொருளாதாரப் பிரச்சினைகள் யுத்தத்திற்கான அடிப்படைகள், ஏனைய சீரழிவுகள் போன்றவற்றுக்கான காரணங்களைக் கண்டறிய முடியாத சூழலிலேயே மக்கள் இருந்து வருகிறார்கள். இது மக்கள் மத்தியில் காணப்படும் குறைபாடு என்று கூறுவதை விட, உண்மையான காரணங்களைக் கண்டறியவிடாது கவனத்தை திசை திருப்பி ஏமாற்றி வைத்திருக்கும் ஆளும் வர்க்க சூழ்ச்சி என்றே கூறுதல் வேண்டும். இத்தகைய மேட்டுக்குடி வழி வந்த முதலாளித்துவ பேரினவாத ஆளும் வர்க்க சக்திகளை அரவணைத்துப் பாதுகாத்து வழிநடத்தி வந்ததில் ஏகாதிபத்திய சக்திகளின் பங்கும் பணியும் பாரியதாகும்.

இலங்கையில் இருந்து வந்த இன முரண்பாட்டை மோதலாக மாற்றி யுத்தமாக வளர்த்தெடுத்து வந்ததில் பேரினவாத முதலாளித்துவ ஆளும் வர்க்கமும் ஆந்நிய ஆதிக்க சக்திகளும் இணைந்தே வழி நடத்தி வந்திருக்கிறார்கள். கடந்த (1977 - 2007) மூன்று தசாப்தங்களைத் திரும்பிப் பார்த்து வரலாற்று நோக்கின் ஊடாக விடயங்களை அணுகி ஆராயும் எவரும் உண்மைகளைத் தவறவிடமாட்டார்கள். தேசிய இனங்களிடையேயான முரண்பாடுகளை அவற்றின் ஆரம்ப நிலைகளில் அடையாளம் கண்டு உரிய தீர்வுகளைக் கண்டிருந்தால் இன்றைய தீராப் பகை என்ற நிலைக்கு வளர்ந்திருக்க நியாயமில்லை. கடந்த மூன்று தசாப்தங்களில் மாறிமாறிப் பதவிக்கு வந்த ஆளும் வர்க்கத்தினர் பேரினவாத ஒடுக்குமுறையை நேரடியான இராணுவ ஒடுக்கு முறை யுத்தமாகவே வளர்த்து வந்திருக்கிறார்கள். பிரிவினை வாதத்தை ஒடுக்குவது, தீவிரவாதத்தை மடக்குவது, ஆயுதப் போராட்டத்தை நசுக்குவது, புலிகள் இயக்கத்தை அழிப்பது என்பதன் ஊடாக இன்று பயங்கரவாதத்தைப் பூண்டோடு ஒழித்துக் கட்டுவது என்ற முழக்கத்துடன் யுத்தப் பேரிகை முழங்கப்படுகின்றது.

வடக்கு, கிழக்கில் இருந்து வரும் பயங்கரவாதம் என்று கூறப்படுவதற்குப் பின்னால் உள்ள தமிழ்த் தேசிய இனத்தின் நியாயமான அரசியல் அபிலாஷைகளும் அதற்கான தீர்வுகளும் புறந்தள்ளப்பட்டவைகளாகவே இருந்து வருகின்றன. சுயநிர்ணய உரிமை அடிப்படையில் அதிகாரப் பகிர்வின் மூலமான சுயாட்சி என்ற அரசியல் தீர்வுக்கான தெரிவும் முன்மொழிதல்களும் ஆளும் வர்க்க திமிர்த்தனப் பேரினவாத சக்திகளால் இன்றுவரை ஏற்றுக் கொள்ளப்படாத நிலையே நீடிக்கிறது. அதற்குப் பதிலாக இராணுவ வழிகளிலான யுத்தத்தின், மூலம் தமிழ் மக்களின் அபிலாஷைகளை அழித்துவிடலாம் என்ற நம்பிக்கையே ஊட்டி வளர்க்கப்படுகிறது. இந்த நம்பிக்கை நிறுவன மயமாக்கப்பட்டே பேரினவாதத்தின் ஊடே நாளாந்தம் சிங்கள மக்களின் மூளைகளில் பதியச் செய்யப்பட்டு வருகின்றது.

பாரம்பரிய ஆளும் வர்க்கத் தலைமைகளினால் கடைப்பிடிக்கப்பட்டு வந்த பேரினவாதத்தை அரசியல் தளத்தில் மேலும் விரிவாக்கி உறுதிப்படுத்திக் கொண்டதில் ஜே.வி.பி.யும் ஜாதிக ஹெல உறுமயவும் பெரும் பங்கை வகித்து வருகின்றன. இவர்களது, ஆலோசனைகளும் வற்புறுத்தல்களும் தான் மகிந்த சிந்தனை மூலமான யுத்தத்திற்கு தூண்டுகோலாகின. உலக அரங்கிலும் உள்நாட்டு மேடைகளிலும் யுத்தச் சங்கு முழங்கப்பட்டன. அதன் அடிப்படையிலேயே கிழக்கின் மீட்புக்கும் கடலில் புலிகளின் கப்பல்கள் அழிப்பிற்கும் வெற்றி விழாக்கள் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டன.

இதன் மூலம் பாடசாலை மாணவர்கள் முதல் படிப்பறிவுள்ளவர்கள் மட்டுமன்றி பாமர சிங்கள மக்கள் மனங்களிலும் பேரினவாத யுத்த வெறி ஏற்றப்பட்டது. அதன் மூலம் தெற்கில் யுத்தத்தை எதிர்த்த சமாதானத்தை வற்புறுத்திய நியாயமான குரல்கள் மௌனிக்கச் செய்யப்பட்டது. அரசியல் தீர்வுக்கான முயற்சிகள் புறம்தள்ளப்பட்டு கிழக்கைத் தொடர்ந்து வடக்கையும் மீட்போம் என்ற வீர வசனங்கள் முழங்கப்பட்டன. எல்லாம் தயார் நிலையில் இருப்பதாகவும் மார் தட்டப்பட்டது. இதன் அடிப்படையிலேயே எதிர்வரும் வரவு - செலவுத்திட்டத்தில் அடுத்த ஆண்டிற்கான பாதுகாப்புப் படைகளுக்கான செலவீனமாக ரூபா 16 ஆயிரத்து 644 கோடி 70 இலட்சம் ஒதுக்கப்பட்டது. இத்தொகை கடந்த வருட பாதுகாப்புச் செலவீனத்தை விட 19 சத வீதத்தால் அதிகரிக்கப்பட்டது நோக்குதற்குரியதாகும். அதுமட்டுமன்றி 2006 - 07 ஆண்டுகளில் படைகளுக்கு மேலதிகமாகச் சேர்க்கப்பட்டோரின் எண்ணிக்கை 74 ஆயிரத்து 619 பேரினால் உயர்ந்துள்ளமையும் கவனத்திற்குரியதாகும்.

இவை அனைத்தும் சுட்டி நிற்கும் இலக்கு யாதெனில், முழுமையான யுத்தத்தின் மூலம் வடக்கு முழுவதையும் கைப்பற்றிக் கொள்வதேயாகும். ஆனால், யதார்த்த சூழலும் களநிலைமைகளும் அத்தகைய ஒரு யுத்தத்திற்கும் இராணுவ வெற்றிக்கும் உகந்ததாக இல்லை. ஏனெனில், யுத்தத்தில் ஈடுபட்டுள்ள புலிகள் தரப்பும் இராணுவ நிலைகளில் பலமுடையதாகவே இருந்து வருகின்றது. அதனால் கெரில்லாத் தாக்குதல்கள் முதல் நவீன சுடுகலன்கள், ஆயுத தளபாடங்கள் கொண்டு நேரடிச் சமரிலும் பங்குகொள்ளும் ஆற்றலுடன் இருப்பதை பல இராணுவ ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டி வருகிறார்கள். ஆதலினால்தான் கிழக்கின் பின்வாங்குதல் பின்னடைவிற்குப் பின்பும் புலிகள் இயக்கத்தால் தெற்கே அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் வட மத்திய மாவட்டம் அனுராதபுரத்திலும் தமது இராணுவத் தாக்குதல் நடவடிக்கைகளை வெற்றிகரமாக நடாத்த முடிந்துள்ளது.

வெற்றி - தோல்வி இரண்டும் எந்தத் தரப்பிலும் நிரந்தரமானதொன்றாக இருக்க முடியாது. இராணுவ ரீதியில் நோக்கும் போது அவை மாறி மாறி நிகழக்கூடியவையாகும். ஆனால், இறுதி வெற்றி என்பது நீதியானதும் நியாயமானதுமான மக்களின் அபிலாஷைகளை நேர்மையாகக் கொண்டிருப்பதிலேயே தங்கியுள்ளது. வெறும் இராணுவக் கண்ணோட்டத்தில் மட்டும் தங்கியிருப்பதால் எத்தரப்பாலும் இறுதி வெற்றி என்ற இலக்கை எட்ட முடியாது. வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வரவும் தரப்புகள் மாறி மாறி மகிழ்ச்சியும் கவலையும் கொள்ளும் நிகழ்வுகளே தொடரும்.

உதாரணத்திற்கு சமகாலத்தில் ஒன்றைக் காணமுடிந்தது. கிழக்கிலிருந்து புலிகள் இயக்கம் பின்வாங்கியதும் தமிழ்த் தேசியவாதப் பரப்பில் கடுமையான சோர்வும் கவலையும் காணப்பட்டது. அதேவேளை, கிழக்கின் வெற்றி என்றும் கப்பல்கள் மூழ்கடிப்பு என்றும் தெற்கில் பேரினவாதத் தரப்பில் மகிழ்ச்சியும் ஆரவாரமும் தெரிவிக்கப்பட்டது. வெற்றி விழாக் கொண்டாட்டங்கள் மூலம் பேரினவாத வெற்றி பெருமிதமாக்கப்பட்டது. சிங்கள மக்களும் நம்பிக்கை கொண்டனர்.

ஆனால், இப்பொழுது யால, அனுராதபுரத் தாக்குதல்களால் தமிழ்த் தேசியவாதப் பரப்பு உற்சாகம் கொண்டு நிற்கிறது. அதேவேளை, பேரினவாதத் தரப்பில் அதிர்ச்சியும் கவலையும் காணப்படுகிறது. வெற்றி நமதே விடாதைபிடி என வீரம் பேசியவர்கள் தாழ்ந்த குரலில் விடமாட்டோம் என்று முனகி வருகிறார்கள். ஆனால், இவ் இருதரப்பு வெற்றி அல்லது தோல்வி என்பவற்றின் ஊடாகப் பரந்துபட்ட சாதாரண உழைக்கும் மக்களே பலமுனைகளிலும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் என்பது கவனத்தில் கொள்ளப்படவில்லை. யுத்தம் ஏற்றும் சுமைகளைத் தாங்க முடியாது மக்கள் தத்தளித்து நிற்கிறார்கள். நேரடி யுத்தத்தின் பாதிப்புகளையும் ஏனைய பொருளாதார நெருக்கடிகளையும் அவர்களே துன்ப துயரங்களாக அனுபவித்து வருகிறார்கள்.

குறிப்பாக இந்த யுத்தத்தால் வடக்கு - கிழக்கு மக்கள் அனுபவித்து வந்த கொடுமைகள் விபரிக்க முடியாதவைகளாகும். இடப்பெயர்வு என்பது கொடுமையிலும் கொடுமையானதாகும். வடக்கிலே 1990 ஆம் ஆண்டில் பலாலி படைத்தளத்தையும் காங்கேசன்துறை துறைமுகத்தையும் உள்ளடக்கிய வலி வடக்கு பிரதேசத்தின் பெரும் பகுதியில் இருந்து இராணுவத்தால் ஒரு இலட்சம் மக்கள் வரை வெளியேற்றப்பட்டனர். இன்று வரை அம் மக்கள் மீளச் செல்லவே இல்லை. அவ்வாறே வடபுலத்திலிருந்து ஒரு இலட்சம் முஸ்லிம் மக்கள் புலிகள் இயக்கத்தால் வெளியேற்றப்பட்டனர். அவர்களும் இன்று வரை திரும்பவில்லை. கிழக்கிலே இடம்பெற்ற இராணுவ நடவடிக்கைகளால் இரண்டு இலட்சம் மக்கள் சொந்த இடங்களை விட்டு வெளியேறினர். அவர்களில் ஒரு பகுதியினர் மிகுந்த இராணுவக் கட்டுப்பாடுகளுடனும் மட்டுப்படுத்தப்பட்ட பிரதேசங்களிலும் மீளக்குடியமர்த்தப்பட்டு வருகின்றனர்.

ஏனையோர் தொடர்ந்தும் முகாம் வாழ்க்கையே வாழ்கின்றனர்.

சிலர் கற்பனை செய்து பார்ப்பது போன்று பௌத்த சிங்கள ஆட்சியின் கீழ் சிங்களவர்கள் எல்லாம் வசதிவாய்ப்புகளுடன் வாழுகிறார்கள் என்பது தவறான கண்ணோட்டமாகும். வடக்கு, கிழக்கின் எல்லைப் புறப் பிரதேசங்களைச் சேர்ந்த சாதாரண சிங்கள மக்கள் யுத்தத்தின் விளைவாகத் தமது கிராமங்களை விட்டு வெளியேறி அகதி முகாம்களிலேயே அவலங்களுடன் வாழ்ந்து வருகிறார்கள். கிழக்கில் மூதூர் கிழக்கு சம்பூரில் இருந்து வெளியேற்றப்பட்ட தமிழ், முஸ்லிம் மக்களும் சிங்கள மக்களும் கூட இன்றும் அகதி முகாம்களிலேயே வாழ்ந்து வருகிறார்கள். இவை மட்டுமன்றி மூன்றாண்டுகளுக்கு முன்பு பேரழிவை ஏற்படுத்திய கடல்கோள் வீடு, வாசல்கள் வாழ்வாதாரங்களை இழந்த தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் இன்று வரை முழுமையான புனரமைக்கும் புனர் வாழ்வுக்கும் மீட்கப்படவில்லை.

அரசாங்கத்தினதும் அரசசார்பற்ற நிறுவனங்களினதும் இலட்சணம் அதுவாக உள்ளது.

இவற்றுக்கும் மேலாக அனைத்து மக்களினதும் வாழ்க்கைத் தரம் நாளாந்தம் கீழிறங்கிச் செல்கிறது. பொருட்களின் விலை உயர்வுகளும் சேவைகளின் கட்டணங்களும் அதிகரித்துச் செல்கின்றன. இவற்றுக்கு மூல காரணமாக உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலும் யுத்தமும் அமைந்து காணப்படுகின்றன. இவை இரண்டினாலும் திட்டமிட்டு இலாபமீட்டுவோர் மென்மேலும் இலாபமடைந்து கொண்டே போகின்றனர். அதேவேளை, வாழ்க்கைச் சுமைகளையும் நெருக்கடிகளையும் மட்டுமன்றி உயிர் உடைமைகளையும் சாதாரண மக்கள் இழந்து வருகின்றனர். வறுமை , வேலை இன்மை , வீடின்மை, கல்வி பெறமுடியாமை, சுகாதாரச் சீர்கேடுகள் என்பன பல்கிப் பெருகி வருகின்றன. வடக்கு, கிழக்கில் உத்தியோக பூர்வமற்ற உத்தேச உயிர் இழப்புகள் கடந்த 30 வருடங்களில் ஒரு இலட்சத்தை அடைந்துள்ளதாகவே கூறப்படுகிறது.

இடப்பெயர்வும் புலம்பெயர்வும் பத்து இலட்சத்தைத் தாண்டியுள்ளது.

கடந்த மூன்று தசாப்த காலத்தை உற்று நோக்கின், உலகமயமாதல் என்பது பேரினவாத ஒடுக்குமுறை யுத்தத்திற்கு உதவியும் ஒத்துழைப்பும் வழங்கி வந்துள்ளது. அவ்வாறே யுத்தம் என்பது மக்களின் கவனங்கள் வேறு திசையில் செல்லாதவாறு உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலை அமைதியாக உள்வாங்க வைத்திருக்கிறது. இவ்வாறு இவை இரண்டும் ஒன்றுக்கொன்று உதவி வந்தமையால் சகல பிரச்சினைகளும் மறைக்கப்பட்டு மக்கள் தேசியங்களின் பெயரால் மோதல் மையங்களையும் யுத்த களவெற்றி , தோல்விகளையும் எதிர்பார்த்து நிற்கும் ஏமாற்றப்பட்ட மக்களாகியே நிற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதற்கொரு நியாயமான மாற்றுச் சூழல் வராதவரை இந்நிலையே நீடிக்கச் செய்யும்.

http://www.thinakkural.com/news/2007/10/27...s_page39064.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.