Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திமுக, அமைச்சர்கள், தமிழ்நாடு, சட்டம், வழக்குகள்

பட மூலாதாரம்,DMK/WWW.DMK.IN

கட்டுரை தகவல்

  • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 27 ஏப்ரல் 2025, 10:07 GMT

'அமைச்சராக இல்லை என்பதால் தான் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. அவருக்கு ஜாமீன் வேண்டுமா... அமைச்சர் பதவி வேண்டுமா?' என, ஏப்ரல் 23 அன்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

செந்தில் பாலாஜியின் கருத்தை அறிவதற்கு ஏப்ரல் 28 வரை உச்ச நீதிமன்றம் அவகாசம் அளித்தது. இந்த சூழ்நிலையில் செந்தில் பாலாஜி தமது அமைச்சர் பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். இவருடன் சேர்த்து பொன்முடியும் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.

தி.மு.க அமைச்சர்களில் செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி போலவே, மேலும் 6 அமைச்சர்கள் மீதான வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர்கள் மீதான வழக்குகள் என்ன?

செந்தில் பாலாஜி மீதான வழக்கு என்ன?

திமுக, அமைச்சர்கள், தமிழ்நாடு, சட்டம், வழக்குகள்

பட மூலாதாரம்,V.SENTHILBALAJI/FACEBOOK

படக்குறிப்பு,2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் அடைத்தது.

தி.மு.க அரசில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜி, 2011-2015 அ.தி.மு.க ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்தார்.

அப்போது, போக்குவரத்துத்துறையில் இளநிலை உதவியாளர், ஓட்டுநர், நடத்துநர் ஆகிய பணியிடங்களில் செந்தில் பாலாஜி மற்றும் அதிகாரிகள் சிலர் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது.

இதனால் பாதிக்கப்பட்ட சிலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கில், செந்தில் பாலாஜி மீது லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

தொடர்ந்து, 2018 ஆம் ஆண்டு செந்தில் பாலாஜி மற்றும் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இதன் விசாரணைக்கு தடை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனுத்தாக்கல் செய்தார். இதையேற்று, 2021 ஆம் ஆண்டு செந்தில் பாலாஜி மீதான வழக்குகளை நிறுத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதே வழக்கில், சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடந்ததாகக் கூறி 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் அடைத்தது.

சிறையில் இருந்தபோதும் இலாகா இல்லாத அமைச்சராக நீடித்தார். இதன் காரணமாக ஜாமீன் வழங்குவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

2024 பிப்ரவரி மாதம் அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி ராஜினாமா செய்தார். அதே ஆண்டு செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்றார்.

அவருக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்யுமாறு வித்யா குமார் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'அரசியலமைப்புச் சட்டத்தின் 21வது பிரிவின்படி அடிப்படை உரிமை மீறப்பட்டதால் ஜாமீன் வழங்கினோம். 2 நாட்களுக்குள் அவர் அமைச்சர் ஆனதை ஏற்க முடியாது' எனக் கூறியது.

மேலும், 'ஜாமீன் வேண்டுமா.. அமைச்சராக நீடிக்க வேண்டுமா? என்பது குறித்து ஏப்ரல் 28 ஆம் தேதிக்குள் கருத்து தெரிவிக்குமாறு செந்தில் பாலாஜிக்கு உத்தரவிட்டது.

இதனால் பதவியை ராஜினாமா செய்வதைத் தவிர செந்தில் பாலாஜிக்கு வேறு வழியில்லை என்ற பேச்சு எழுந்துள்ளது. அதற்கேற்ப, தற்போது அவர் ராஜினாமா செய்துள்ளார்.

அமைச்சர் துரைமுருகன்:

திமுக, அமைச்சர்கள், தமிழ்நாடு, சட்டம், வழக்குகள்

பட மூலாதாரம்,@KATPADIDMK/X

படக்குறிப்பு,2006-2011 தி.மு.க ஆட்சிக்காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.40 கோடி சொத்து சேர்த்ததாக வழக்கு

தி.மு.க அமைச்சரவையில் நீர்ப்பாசனத் துறை அமைச்சராக இருக்கும் துரைமுருகன், 1996-2001 தி.மு.க ஆட்சியில் பொதுப்பணித் துறை அமைச்சராக பதவி வகித்தார்.

இதே காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக 3.92 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக, அவர் மீது 2002 ஆம் ஆண்டில் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது.

2007 ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து வேலூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து 2013 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை மறு ஆய்வு மனு தாக்கல் செய்தது. இந்த மனு சுமார் 12 ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது.

கடந்த ஜனவரி மாதம் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மனு விசாரணைக்கு உகந்தது அல்ல எனக் கூறி தள்ளுபடி செய்யுமாறு துரைமுருகன் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

இந்த வழக்கில், ஏப்ரல் 23 ஆம் தேதியன்று உத்தரவு பிறப்பித்த சென்னை சென்னை உயர் நீதிமன்றம், வேலூர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தது.

மேலும், துரைமுருகன் மீதான விசாரணையை ஆறு மாதங்களுக்குள் முடிக்குமாறு எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.

இதுதவிர, 2006-2011 தி.மு.க ஆட்சிக்காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக 1.40 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக துரைமுருகன் மற்றும் அவரது மனைவி மீது ஊழல் ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் இருந்து துரைமுருகனும் அவரது மனைவியும் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர்.

ஏப்ரல் 24 ஆம் தேதியன்று இந்த உத்தரவையும் சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

அமைச்சர் பொன்முடி:

திமுக, அமைச்சர்கள், தமிழ்நாடு, சட்டம், வழக்குகள்

பட மூலாதாரம்,KPONMUDI/FACEBOOK

படக்குறிப்பு,பொன்முடி மீது 2002 ஆம் ஆண்டு வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது.

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 2021 ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சிப் பொறுப்பை ஏற்றதில் இருந்து, பொன்முடி மீதான சர்ச்சைகள் அணிவகுத்தன.

மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணத்தை விமர்சித்தது, அரசு நிகழ்ச்சிகளில் பொதுமக்களை விமர்சித்தது எனத் தொடர்ந்து பொன்முடியின் பேச்சு விமர்சனத்துக்குள்ளானது.

தி.மு.க பொதுக்குழு கூட்டத்திலேயே இதுதொடர்பாக தனது அதிருப்தியை முதலமைச்சர் ஸ்டாலின் வெளிக்காட்டினார். இந்தநிலையில், கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதியன்று பெரியார் திராவிடர் கழகம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் வனத்துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்றார்.

அப்போது, சைவம், வைணவம் ஆகிய மதங்களை பாலியல் தொழிலாளிகளுடன் ஒப்பிட்டு அவர் பேசினார்.

பொன்முடியின் பேச்சு இணையத்தில் பரவியது. இதையடுத்து, பொன்முடியை தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கி முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதியன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்டேஷ், "சைவ, வைணவ சமயங்கள் குறித்த பேச்சுக்கு அமைச்சர் பொன்முடி மீது வழக்குப் பதிவு செய்யாதது ஏன்?" எனக் கேள்வி எழுப்பினார்.

"இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்யவில்லை என்றால் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்கப்படும்" எனக் கூறி ஏப்ரல் 22 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.

மீண்டும் வழக்கு விசாரணையின்போது, 'கட்சியே நடவடிக்கை எடுததும்கூட காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை' எனக் கூறிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், "பொன்முடியின் பேச்சு வெறுப்பு வரம்புக்குள் வருகிறது" எனக் கூறினார்.

வழக்கை தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்வதற்காக பதிவுத் துறைக்கு தான் உத்தரவிடுவதாகவும் ஆனந்த் வெங்கடேஷ் கூறினார்.

இதுதவிர, 1996-2001 தி.மு.க ஆட்சியின்போது போக்குவரத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி மீது 2002 ஆம் ஆண்டு வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது.

அவர் 1.36 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக விழுப்புரம் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கு வேலூர் மாவட்டத்துக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட பொன்முடி, அவரின் மனைவி விசாலாட்சி ஆகியோரை வேலூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி விடுதலை செய்து தீர்ப்பு வழங்கினார்.

இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், 'ஒரு மாவட்டத்தில் உள்ள வழக்கை மாவட்டத்தின் நிர்வாக நீதிபதிகள் வேறு மாவட்டத்துக்கு மாற்ற முடியுமா?' எனக் கேள்வி எழுப்பி, இதற்கு அரசின் தலைமை வழக்கறிஞர் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டார்.

'பொன்முடி மீதான வழக்கை வேறு மாவட்டத்துக்கு மாற்ற முடியும் என்றால், தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கிலும் எந்த விசாரணையும் நடத்த முடியாது' எனக் கூறி இறுதி விசாரணையை ஒத்தி வைத்துள்ளார்.

இந்த சூழலில் செந்தில் பாலாஜியுடன் சேர்ந்து பொன்முடியும் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்:

திமுக, அமைச்சர்கள், தமிழ்நாடு, சட்டம், வழக்குகள்

பட மூலாதாரம்,FACEBOOK

படக்குறிப்பு,எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

தி.மு.க ஆட்சியில் வேளாண்மைத் துறை அமைச்சராக இருக்கும் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், 1996-2001 மற்றும் 2006-2011 தி.மு.க ஆட்சியிலும் அமைச்சராக பதவி வகித்தார்.

இந்தக் காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.3 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக பன்னீர்செல்வம், அவரது மனைவி மற்றும் மகன் மீது ஊழல் ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது.

வழக்கை விசாரித்த கடலூர் சிறப்பு நீதிமன்றம், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்பட மூன்று பேரையும் விடுவிதது உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஊழல் ஒழிப்புத் துறை சார்பில் மறு ஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அப்போது பன்னீர்செல்வம் தரப்பில் சில வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

அறக்கட்டளை சொத்துகளையும் குடும்ப சொத்துகளையும் வருமானத்துக்கு அதிகமான சொத்துகளாக ஊழல் ஒழிப்புத் துறை கணக்கிட்டுள்ளதாக வாதிடப்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமையன்று (ஏப்ரல் 25) இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி வேல்முருகன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அவரது மனைவி, மகன் ஆகியோரை விடுவித்து கடலுர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தார்.

எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணையை ஆறு மாதங்களுக்குள் கடலூர் நீதிமன்றம் முடிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

அமைச்சர் தங்கம் தென்னரசு:

திமுக, அமைச்சர்கள், தமிழ்நாடு, சட்டம், வழக்குகள்

பட மூலாதாரம்,FACEBOOK

படக்குறிப்பு,2012 ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்ட ஊழல் ஒழிப்புத்துறை அதிகாரிகள் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மீது வழக்குப் பதிவு செய்தனர்

2006-2011 தி.மு.க ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு, வருமானத்துக்கு அதிகமாக ரூ.76,40,433 அளவு சொத்து சேர்த்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டது.

2012 ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்ட ஊழல் ஒழிப்புத்துறை அதிகாரிகள் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து தன்னையும் தன் மனைவியையும் விடுவிக்குமாறு தங்கம் தென்னரசு மனுத்தாக்கல் செய்திருந்தார். இதையேற்று 2022 ஆம் ஆண்டு இருவரையும் விடுவித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதனை எதிர்த்து ஊழல் ஒழிப்புத்துறை மேல் முறையீடு செய்யவில்லை. ஆனால், வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தார்.

வழக்கை மறுவிசாரணை நடத்துமாறு உத்தரவிட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வதற்கு ஆரம்பகட்ட முகாந்திரம் உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் தென்னரசு மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மறு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்:

திமுக, அமைச்சர்கள், தமிழ்நாடு, சட்டம், வழக்குகள்

பட மூலாதாரம்,FACEBOOK

படக்குறிப்பு,கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி ஆதிலட்சுமி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.44,56,067 ரூபாய் சொத்து சேர்த்ததாக ஊழல் ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது

தி.மு.க ஆட்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சராக பதவி வகிக்கும் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், கடந்த 2006-2011 தி.மு.க அமைச்சரவையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.

அப்போது, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி ஆதிலட்சுமி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.44,56,067 ரூபாய் சொத்து சேர்த்ததாக ஊழல் ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது.

2012 ஆம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கில் இருந்து ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவியை ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றம் கடந்த 2023 ஆம் ஆண்டு விடுவித்தது.

தங்கம் தென்னரசு வழக்குடன் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தார்.

சொத்துக்குவிப்பு வழக்கை மறுவிசாரணை செய்ய வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ராமச்சந்திரன் மேல்முறையீடு செய்தார். உச்ச நீதிமன்றமும் வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அமைச்சர் மா.சுப்ரமணியன்:

திமுக, அமைச்சர்கள், தமிழ்நாடு, சட்டம், வழக்குகள்

பட மூலாதாரம்,@SUBRAMANIAN_MA/X

படக்குறிப்பு,மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்

2006-2011 தி.மு.க ஆட்சியில் சென்னை மாநகராட்சி மேயராக இருந்த மா.சுப்ரமணியன், தற்போது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.

சென்னை கிண்டியில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மனையை போலி ஆவணங்கள் தயாரித்து அபகரித்துவிட்டதாக, குற்றம் சுமத்தப்பட்டது.

கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் இந்தப் புகார் தொடர்பாக மா.சுப்ரமணியன் மீது நில அபகரிப்பு வழக்கு பதிவானது. இந்த வழக்கு எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

தன் மீதான வழக்கை ரத்து செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் மா.சுப்ரமணியன் மனுத்தாக்கல் செய்திருந்தார். மனுவில், நிலத்தை 1998 ஆம் ஆண்டே தான் வாங்கிவிட்டதாகவும் சுமார் 20 ஆண்டுகள் கழித்து அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகவும் கூறியிருந்தார்.

நிலத்தை வாங்கியதன் மூலம் சிட்கோ மற்றும் அரசுக்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை எனவும் மோசடி நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கும் இடமில்லை என மா.சுப்ரமணியன் கூறியிருந்தார்.

வழக்கில் காவல்துறை மற்றும் புகார்தாரர் பார்த்திபன் ஆகியோரின் வாதங்கள் நிறைவடைந்த நிலையில், மா.சுப்ரமணியனின் மனுவை கடந்த மார்ச் 28 ஆம் தேதின்று தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டார்.

மா.சுப்ரமணியன் மீதான குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்து விசாரணையைத் தொடர வேண்டும் எனவும் சிறப்பு நீதிமன்றத்துக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

அமைச்சர் ஐ.பெரியசாமி:

திமுக, அமைச்சர்கள், தமிழ்நாடு, சட்டம், வழக்குகள்

பட மூலாதாரம்,FACEBOOK

படக்குறிப்பு,2012 ஆம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் ஐ.பெரியசாமி மீது ஊழல் ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது.

தி.மு.க அரசில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக உள்ள ஐ.பெரியசாமி, கடந்த 2006-2011 தி.மு.க ஆட்சியில் வீட்டு வசதித்துறை அமைச்சராக பதவி வகித்தார்.

வீட்டு வசதி வாரியத்தின் நிலத்தை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலருக்கு முறைகேடாக வழங்கியதாக, ஐ.பெரியசாமி மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

2012 ஆம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் ஐ.பெரியசாமி மீது ஊழல் ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு சென்னையில் உள்ள எம்.பி மற்றும் எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்த வழக்கில் இருந்து ஐ.பெரியசாமியை விடுவித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை மறு ஆய்வு செய்யும் வகையில் தாமாக முன்வந்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்,

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், ஐ.பெரியசாமியை விடுவித்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த நீதிபதி, ஜூலை மாதத்துக்குள் வழக்கின் விசாரணையை முடிக்குமாறு உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஐ.பெரியசாமி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதித்த உச்ச நீதிமன்றம், சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கும் தடை விதித்துள்ளது.

'தடை உத்தரவு தொடரும்' என கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cvgpzz9kzpvo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சரவை மாற்றம்: அரசியல் நெருக்கடியா? தேர்தல் வியூகமா?

செந்தில் பாலாஜி, பொன்முடி

பட மூலாதாரம்,X

படக்குறிப்பு,செந்தில் பாலாஜி, மனோ தங்கராஜ், பொன்முடி

கட்டுரை தகவல்

  • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்

  • பதவி, பிபிசி தமிழ்

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோர் வெளியேற, மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சராக்கப்பட்டிருக்கிறார்.

வி. செந்தில் பாலாஜி, கே. பொன்முடி ஆகியோரின் வெளியேற்றத்தை அ.தி.மு.கவும் பா.ஜ.கவும் தங்களுக்கான வெற்றியாகச் சுட்டிக்காட்டிவருகின்றன.

ஒரு அமைச்சரவை மாற்றம், ஆளும் கட்சிக்கு இவ்வளவு நெருக்கடியான விவகாரமானது எப்படி?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

2022ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதியன்று ஞாயிற்றுக்கிழமை. சென்னை செயின்ட் ஜார்ஜ் பள்ளிக்கூட வளாகத்தில் தி.மு.க.வின் பொதுக் குழுக்கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் இறுதியாகப் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் முழுமையாக வெற்றிபெறுவது, பா.ஜ.க., அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை எதிர்கொள்வது" போன்ற பல விஷயங்களைப் பற்றி பேசினாலும், சொந்தக் கட்சிக்காரர்கள் குறித்தும் அமைச்சர்கள் குறித்தும் பேசிய பேச்சுகள்தான் தலைப்புச் செய்தியாயின.

"மழையே பெய்யவில்லை என்றாலும் என்னைத்தான் குறைசொல்வார்கள். அதிகமாக மழை பெய்துவிட்டாலும் என்னைத்தான் குறை சொல்வார்கள்.

பல்வேறு பக்கங்களில் இருந்துவரும் பன்முனைத் தாக்குதலுக்கும் பதில் சொல்லக் கடமைப்பட்டவன் நான்.

ஒரு பக்கம் தி.மு.கவின் தலைவர். மற்றொரு பக்கம் தமிழ்நாட்டின் முதலமைச்சர். மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி என்பதைப் போல இருக்கிறது என்னுடைய நிலைமை.

இத்தகைய சூழ்நிலையில் இருக்கும் என்னை மேலும் துன்பப்படுத்துவது போல தி.மு.க. நிர்வாகிகளோ, மூத்தவர்களோ, அமைச்சர்களோ நடந்துகொண்டால் நான் என்ன சொல்வது? யாரிடம் சொல்வது?

நாள்தோறும் காலையில் நம்மவர்கள் யாரும் எந்தப் புதுப் பிரச்னையையும் உருவாக்கி விடக்கூடாதே என்ற நினைப்போடுதான் நான் கண்விழிக்கிறேன்.

சில நேரங்களில் என்னை இது தூங்கவிடாமல்கூட ஆக்கிவிடுகிறது" என்றார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

பொன்முடி, செந்தில் பாலாஜி

பட மூலாதாரம்,@BJP4TAMILNADU

ஸ்டாலின் சொன்னது என்ன?

ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகளுக்குள்ளாகவே தி.மு.க.வைச் சேர்ந்த அமைச்சர்களும் எம்.ஏல்.ஏக்களும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய, செயல்பட்ட வீடியோக்கள் தொடர்ந்து வெளியான நிலையில் இப்படிப் பேசினார் மு.க. ஸ்டாலின்.

இது நடந்து இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இருந்தபோதிலும், இன்னமும் இந்தப் பேச்சுக்கு அர்த்தமிருப்பதைப்போல இருக்கிறது நிலைமை.

ஊழல் வழக்கில் சிக்கியிருக்கும் அமைச்சர்கள், பொதுவெளியில் பேசக்கூடாததைப் பேசும் அமைச்சர்கள் என நெருக்கடி தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.

இந்த நிலையில்தான் ஒரு அமைச்சரவை மாற்றத்தைச் செய்திருக்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். அதன்படி வி. செந்தில் பாலாஜியும் கே. பொன்முடியும் அமைச்சரவையிலிருந்து விடுவிக்கப்பட்டு, பத்மநாபபுரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான மனோ தங்கராஜ் அமைச்சரவையில் மீண்டும் இணைத்துக்கொள்ளப்பட்டிருக்கிறார்.

2026 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு சட்டமன்றத் தேர்தல்கள் வரவிருக்கும் நிலையில், நிகழ்ந்திருக்கும் இந்த அமைச்சரவை மாற்றம் கிட்டத்தட்ட ஒரு கட்டாயத்தின் காரணமாகவே நடந்திருப்பதாகச் சொல்லலாம்.

அமைச்சரவையிலிருந்து வெளியேறியிருக்கும் இரு அமைச்சர்களுமே பதவியில் நீடிப்பதில் கடும் நெருக்கடியில் இருந்தனர்.

வி. செந்தில் பாலாஜியைப் பொறுத்தவரை 2011- 2016 ஆம் ஆண்டில் அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, வேலை வாங்கித் தருவதாகக்கூறி ஏமாற்றியதாக பதிவுசெய்யப்பட்ட வழக்கை அடிப்படையாக வைத்து, அவர் மீது சட்டவிரோத பண பரிவர்த்தனைகளில் ஈடுபட்டதாக வழக்குப் பதிவுசெய்தது அமலாக்கத் துறை. இந்த வழக்கில் 2023 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி அவர் கைதுசெய்யப்பட்டார்.

செந்தில் பாலாஜியின் அமைச்சரவை பயணம்

செந்தில்பாலாஜி கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பிறகும் இலாகா இல்லாத அமைச்சராகவே தொடர்ந்தார். இவருக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும் சென்னை உயர் நீதிமன்றமும் ஜாமீன் வழங்க மறுப்புத் தெரிவித்தன.

2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்தான் அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதற்குப் பிறகு 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், 471 நாட்கள் சிறையில் இருந்த பிறகு அவருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

ஆனால், சிறையிலிருந்து வெளியில் வந்த மூன்று நாட்களிலேயே, அதாவது செப்டம்பர் 29 ஆம் தேதியே மீண்டும் அவர் அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.

இதனை எதிர்த்து வித்யா குமார் என்பவர் தாக்கல் செய்த வழக்கில், 'ஜாமீன் வேண்டுமா, அமைச்சராக நீடிக்க வேண்டுமா?' என்பதை ஏப்ரல் 28க்குள் முடிவுசெய்து தெரிவிக்கும்படி உச்ச நீதிமன்றம் கூறியது.

இந்த நிலையில்தான், உச்ச நீதிமன்றம் விதித்த காலக்கெடுவுக்கு ஒரு நாள் முன்னதாக தனது அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்தார்.

பொன்முடி, செந்தில் பாலாஜி

பட மூலாதாரம்,@KPONMUDIMLA

பொன்முடியின் அமைச்சரவை பயணம்

கே. பொன்முடியைப் பொறுத்தவரை, ஏப்ரல் ஆறாம் தேதியன்று பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டவர் சைவம் - வைணவத்தை பாலியல் நடவடிக்கைகளுடன் ஒப்பிட்டுப்பேசினார்.

இந்த வீடியோ வெளியாகி சர்ச்சையான நிலையில், தி.மு.கவில் அவரது துணைப் பொதுச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமையன்று அவர் தனது அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்ததாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கு முன்பாக, 2023ஆம் ஆண்டில் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டதால், ஏற்கனவே தனது பதவியை இழந்தார். ஆனால், உச்ச நீதிமன்றம் அவரது தண்டனையை நிறுத்தி வைத்ததால் மீண்டும் அவருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது.

"முதலமைச்சரைப் பொறுத்தவரை இந்த மாற்றத்தை அவர் சந்தோஷமாக செய்திருக்க மாட்டார். வேறு வழியில்லாமல்தான் இதனைச் செய்திருக்க வேண்டும். பொது இடங்களில் கவனமாக பேசுங்கள் என மூன்று, நான்கு ஆண்டுகளாக சொல்லிக்கொண்டேயிருக்கிறார்.

அமைச்சரவைக் கூட்டங்களிலும் சொன்னார், பொதுக்குழுவிலும் சொன்னார், வேறு கூட்டங்களிலும் சொன்னார். ஆனால், யாரும் காதுகொடுக்கவில்லை.

துடுக்குத்தனம் தொடர்ந்துகொண்டேயிருந்தது. இந்த மாற்றத்தின் மூலம் அமைச்சர்களின் அலட்சியம் கலந்த பேச்சுக்கு ஒரு முற்றுப்புள்ளி வருமென எதிர்பார்க்கிறேன்" என்கிறார் மூத்த பத்திரிகையாளரான எஸ்.பி. லக்ஷ்மணன்.

கே. பொன்முடியின் பதவி நீக்கத்திற்கான காரணத்தை சுட்டிக்காட்டியே இந்தக் கருத்தை முன்வைக்கிறார் எஸ்.பி. லக்ஷ்மணன்.

மனோ தங்கராஜ்

பட மூலாதாரம்,@MANOTHANGARAJ

அமைச்சர்களின் பேச்சுகள், நடவடிக்கைகள் காரணமாக அமைச்சரவை மாற்றம் இதற்கு முன்பும் நடந்திருக்கிறது. முதலமைச்சரின் குடும்பம் குறித்துப் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ ஒன்று வெளியானதையடுத்து நிதியமைச்சர் பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டார் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்.

பால்வளத் துறை அமைச்சராக இருந்த ஆவடி நாசர் பொதுவெளியில் மோசமாக நடந்துகொண்ட ஒரு நிகழ்வையடுத்து அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டார்.

"இவ்வளவு நடந்தும் சட்டப்பேரவையில் தனது துறைக்கு போதுமான நிதி ஒதுக்கப்படுவதில்லை என வெளிப்படையாக, ஆதங்கத்தோடு குறிப்பிடுகிறார் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன். இப்படிப் பேசுவது எல்லோருக்கும் தர்மசங்கடத்தை அளிக்காதா?

இதனால்தான் அடுத்த சில நாட்களிலேயே, அவரது இந்தப் பேச்சை சுட்டிக்காட்டி முதல்வர் பேச வேண்டியதாயிற்று. பொன்முடியைப் பொறுத்தவரை, அவரது பேச்சுக்காக வழக்குப் பதிவுசெய்ய வேண்டுமென நீதிமன்றம் கூறியதால் அவர் பதவி பறிக்கப்பட்டிருப்பதாக சிலர் கருதுகிறார்கள்.

ஆனால், அது காரணமல்ல. அவர் தொடர்ந்து இதுபோல பேசுவதை வாடிக்கையாக வைத்திருந்தார். இப்போதைய பேச்சுக்காக அவரது துணைப் பொதுச் செயலாளர் பதவியை பறித்ததே போதுமானதுதான்.

ஆனால், சட்டமன்றத் தேர்தலின்போது அவர் பேசிய வீடியோவை அ.தி.மு.கவும் பா.ஜ.கவும் சமூகவலைதளங்களில் சுற்றில்விட்டால், அது நெருக்கடியை ஏற்படுத்தும் என மு.க. ஸ்டாலின் கருதுகிறார். அதனால்தான் அவரது அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டிருக்கிறது" என்கிறார் எஸ்.பி. லக்ஷ்மணன்.

இதே கருத்தையே எதிரொலிக்கிறார் மூத்த பத்திரிகையாளரான ப்ரியன், "சட்டமன்றத் தேர்தலின்போது ஆ. ராசா பேசிய ஒரு பேச்சை வைத்து, மேற்கு மாவட்டங்களில் தி.மு.கவுக்கு எதிராக மிகத் தீவிரமான பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது.

இதனால், அந்தப் பகுதிகளில் பெரும் பின்னடைவைச் சந்தித்து தி.மு.க. ஆகவேதான் இந்த முறை முன்பே சுதாரித்துக்கொண்டார். ஆனால், ஆரம்பத்திலேயே அமைச்சர் பதவியிலிருந்தும் பொன்முடி நீக்கப்பட்டிருந்தால் இவ்வளவு விவாதமாகியிருக்காது" என்கிறார் ப்ரியன்.

தமிழ்நாடு அமைச்சரவை

பட மூலாதாரம்,TNDIPR

எதிர்பார்த்ததைப் போலவே இந்த அமைச்சரவை மாற்றத்தை தங்களது வெற்றியாகவே அ.தி.மு.கவும் பா.ஜ.கவும் சுட்டிக்காட்டியிருக்கின்றன.

கே. பொன்முடிக்கு எதிராக பல இடங்களில் போராட்டங்களை நடத்திய அ.தி.மு.க., அவருடைய நீக்கம் தங்களுடைய போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி எனக் கூறியிருக்கிறது.

உச்ச நீதிமன்றம் தலையிட்டு கெடு விதித்த பிறகே, அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாகக் கூறியிருக்கும் இதற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் மன்னிப்புக்கோரவேண்டும் என்று கூறியிருக்கிறது.

ஆனால், இந்த அமைச்சரவை மாற்றத்தில் எதிர்க்கட்சிகளுக்கு எந்தப் பங்கும் இல்லை என்கிறார் தி.மு.கவின் செய்தித் தொடர்பாளரான கான்ஸ்டைன்டீன்.

"தி.மு.கவினரிடம் கட்சிப் பதவி வேண்டுமா, அரசுப் பதவி வேண்டுமா என்றால் கட்சிப் பதவியைத்தான் கேட்பார்கள். இந்த விவகாரம் வெளியானவுடனேயே கே. பொன்முடியின் துணைப் பொதுச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. அப்போதே அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டதைப்போலத்தான்.

அடுத்த சில நிமிடங்களிலேயே, மாற்றுத் திறனாளிகள் குறித்து மோசமான சொற்களில் குறிப்பிட்டதற்காக தானே முன்வந்து மன்னிப்புக் கோரினார் பொதுச் செயலாளர் துரைமுருகன். இதெல்லாம் இவர்கள் போராடித்தான் நடந்ததா?" என்கிறார் கான்ஸ்டைன்டீன்.

அமைச்சர்கள் தொடர்ந்து தங்கள் செயல்பாட்டின் மூலம் முதலமைச்சரை சிக்கலுக்கு உள்ளாக்குகிறார்களா? "தூத்துக்குடி துப்பாக்கிச் சூடுபோன்ற சம்பவங்கள் நடந்திருந்தால் அதனை வைத்து ஆட்சியை விமர்சிக்க முடியும். இப்போது அதுபோல ஏதுமில்லாததால் இதுபோன்ற விவகாரங்கள் விமர்சனத்திற்கு உள்ளாகின்றன.

பழைய காலத்தைப் போல இப்போதும் பேச முடியாது என்று பல முறை முதல்வர் சொல்லிவிட்டார். அது மீறப்படும்போது நடவடிக்கை எடுக்கிறார் முதல்வர். ஆனால், அ.தி.மு.கவிலும் பா.ஜ.கவிலும் எவ்வளவோ அநாகரீகமாக பேசுகிறார்கள். அது விவாதித்திற்கே உள்ளாவதில்லையே" என்கிறார் கான்ஸ்டைன்டீன்.

ஆனால், செந்தில் பாலாஜி விவகாரத்தை பொன்முடி விவகாரத்தோடு ஒப்பிட்டுப் பார்க்க முடியாது என்கிறார் எஸ்.பி. லக்ஷ்மணன்.

"ஒருவர் மீது வழக்கு இருக்கிறது என்பதற்காக அமைச்சராக முடியாது என்றால் யாருமே அமைச்சராக இருக்க முடியாது. செந்தில் பாலாஜின் ஜாமீன் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கு பல வருடங்கள் நடக்கும் அதுவரை அவர் சிறையில் இருக்க முடியுமா என நீதிமன்றம் கேள்வியெழுப்பியது. இப்போதும் அதேகேள்வி பொருந்துமே" என்கிறார் லக்ஷ்மணன்.

செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியிலிருந்து விலகிய நிலையில், அவரது ஜாமீனை ரத்துசெய்யக்கோரும் வழக்கை இந்திய உச்ச நீதிமன்றம் முடித்து வைத்திருக்கிறது.

இதனால், அவரது தலைமீது தொங்கிய கத்தியிலிருந்து அவருக்கு சற்றே ஆறுதல் கிடைத்திருக்கிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/cn9142gjey4o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.