Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விபத்தில் கணவன், மனைவி பலி

பட மூலாதாரம்,VIGNESH

கட்டுரை தகவல்

  • எழுதியவர், சேவியர் செல்வகுமார்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 5 மே 2025

உரிய அறிவிப்புப் பலகை மற்றும் தடுப்புகள் வைக்காததால், தாராபுரம் அருகே பாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்டிருந்த 12 அடி குழியில், இரு சக்கர வாகனத்துடன் விழுந்த கணவன், மனைவி உயிரிழந்தனர். அவர்களின் 13 வயது மகள் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்தில் ஒரே இருசக்கர வாகனத்தில் மூவர் சென்றதும் குறிப்பிடத்தக்கது. இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் பயணிப்பது சட்ட விரோதமானதாகும், ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஏற்ப அதற்கு விதிக்கப்படும் அபராதம் மாறுபடுகிறது.

இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில், மாநில நெடுஞ்சாலைத்துறையின் உதவிப் பொறியாளர் குற்றம் சாட்டப்பட்ட முதல் நபராகவும், ஒப்பந்ததாரர் 4வது நபராகவும் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்து வழக்கில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவரை வழக்கில் சேர்த்திருப்பது இதுவே முதல் முறை என்பதோடு, 2 அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்திலிருந்து காங்கேயம் செல்லும் மாநில நெடுஞ்சாலைத்துறையில் குள்ளக்காய் பாளையம் என்ற இடத்தில், மாந்தோப்புக்கு அருகில் சாலை விரிவாக்கத்துடன் அங்குள்ள பாலத்தை அகலப்படுத்தும் பணியும் நடந்து கொண்டிருக்கிறது.

இதற்காக பாலத்தை ஒட்டி 12 அடி அளவுக்கு மிகப்பெரிய குழி தோண்டப்பட்டுள்ளது. இந்த குழியில் இரு சக்கர வாகனத்துடன் விழுந்ததில் தாராபுரம் அருகேயுள்ள சேர்வக்காரன்பாளையத்தைச் சேர்ந்த நாகராஜ் (42), அவருடைய மனைவி ஆனந்தி (38) ஆகியோர் அதே இடத்தில் உயிரிழந்துவிட்டனர். அவர்களின் மகள் தீக்சனா (13) பலத்த காயங்களுடன் கோவையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இரவெல்லாம் சத்தமிட்டும் உதவி கிடைக்காத சிறுமி

தாராபுரம் அருகேயுள்ள சேர்வக்காரன்பாளையத்தைச் சேர்ந்த நாகராஜ், திருப்பூர் பஞ்சம்பாளையம் டாஸ்மாக் மதுக்கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்துள்ளார். அவரும் அவருடைய மனைவியும், எட்டாம் வகுப்புப் படிக்கும் மகள் தீக்சனாவும் திருநள்ளாறு கோவிலுக்குச் சென்று விட்டு திரும்பும்போதுதான் இந்த விபத்து நடந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

மே 4 அன்று இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. மூவரும் திருநள்ளாறு சென்றுவிட்டு, பேருந்து நிலையத்திலிருந்து மீண்டும் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போதுதான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

ஆனந்தி

பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT

படக்குறிப்பு, ஆனந்தியும் அவருடைய நாகராஜும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்

விபத்து பற்றி நாகராஜின் சகோதரர் வேலுசாமி தான் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பேருந்து நிலையத்திலிருந்து வண்டியை எடுத்துக் கொண்டு வந்தபோது, அந்த இடத்தில் எதுவுமே தெரியவில்லை என்றும் பள்ளத்தில் வண்டி விழுந்ததும் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு பெற்றோர் இறந்து விட்டதாகவும் தீக்சனா தங்களிடம் தெரிவித்ததாக வேலுசாமி கூறியுள்ளார்.

"தீக்சனா இரவெல்லாம் கத்திக் கொண்டிருந்தாலும் யாருக்கும் கேட்கவில்லை. ஆனால், காலையில் அந்த வழியே சென்ற கல்லுாரி மாணவர்கள் பேருந்து ஒன்றிலிருந்து இந்த சத்தம் கேட்டு, பின்பு தகவல் தெரிவித்தனர். தீக்சனாவுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. நாங்கள்தான் அவளை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம்.'' என்றும் வேலுசாமி புகாரில் தெரிவித்துள்ளார்.

முறையான அறிவிப்புப் பலகை, தடுப்புகள் வைக்காததால்தான் தனது தம்பி குடும்பத்துக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டதாக வேலுசாமி தனது புகாரில் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் குண்டடம் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் முதல் குற்றவாளியாக மாநில நெடுஞ்சாலைத்துறையின் உதவிப் பொறியாளர் கணேஷ் சேர்க்கப்பட்டுள்ளார்.

பாலம் கட்டும் பணியை மேற்கொள்ளும் ஒப்பந்த நிறுவனத்தின் சைட் இன்ஜினியர் குணசேகரன், சைட் மேற்பார்வையாளர் கெளதம், ஒப்பந்ததாரர் சிவகுமார் ஆகியோரும் அடுத்தடுத்த குற்றம் சாட்டப்பட்ட நபர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது பிஎன்எஸ் 285 (அலட்சியத்தால் பொதுவழியில் ஆபத்தை ஏற்படுத்துதல்), பிஎன்எஸ் 125 (a) -(அவசரமாக அல்லது அலட்சியமாக செய்யும் காரியத்தால் மற்றவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவது) மற்றும் 106(1) (அலட்சியத்தால் ஒருவருக்கு மரணத்தை ஏற்படுத்துதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த பிரிவுகளின் கீழ், பத்தாண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புண்டு.

அமைச்சர் வருவதற்கு முன் அவசரமாக வைத்த தடுப்பு

விபத்து நடந்த இடத்தை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்து ராஜ் நேரில் ஆய்வு செய்து, ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் வழங்க உத்தரவிட்டுள்ளார். தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் தமிழக அமைச்சருமான கயல்விழி, விபத்து நடந்த இடத்தை நேரில் ஆய்வு செய்தார். அமைச்சர் ஆய்வுக்கு வருவதை முன்னிட்டு, அந்த இடத்தில் அவசர அவசரமாக தகரத்தாலான தடுப்புகள் வைத்து மறைக்கப்பட்டிருந்ததாக புகார் எழுந்தது.

அமைச்சர் வந்தபோது அங்கிருந்த ஆனந்தியின் தாயார், ''இத்தனை பேர் இருந்தும் இப்படி என் பிள்ளையை அநியாயமாக இறக்கவிட்டு விட்டீர்களே...இதையெல்லாம் முதலிலேயே செய்திருந்தால் இப்படி இரண்டு பேர் இறந்திருக்க மாட்டார்களே...நான் இருக்கும்போது என் பிள்ளை போய்விட்டதே.'' என்று கூறி கதறி அழுதார். அவரை அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

நாகராஜ், தீக்‌ஷனா

பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT

படக்குறிப்பு, தீக்சனா படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

இறந்து போன இருவருக்காகவும் தலா 3 லட்ச ரூபாய், சிகிச்சை பெறும் தீக்சனாவுக்கு ஒரு லட்ச ரூபாய் என மொத்தம் ஏழு லட்ச ரூபாய் நிவாரணமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால், அதிகாரிகளின் அலட்சியத்தால் போன உயிருக்கு இது எந்த வகையில் ஈடு செய்யும் என்று இறந்து போனவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். சாலைப் பணி செய்வோருக்கும் கிராமவாசிகளுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் நடந்து போலீசார் சமாதானம் செய்துள்ளனர்.

கடந்த ஆண்டில் பொள்ளாச்சி அருகில் சாலையோரத்தில் தோண்டப்பட்டிருந்த குழியில் வாகனம் விழுந்ததில், அதில் இருந்த கான்கிரீட் கம்பிகளால் இருவர் உயிரிழந்தனர். கடந்த ஆண்டில் பெரியநாயக்கன்பாளையம் புதிய பாலத்தின் கீழே இருந்த நடுத்திட்டில் ஒளிர் விளக்கு இல்லாததால் பைக்கில் வேகமாக வந்த இளைஞர் நடுத்திட்டில் மோதி உயிரிழந்தார். சென்னையிலும் இதேபோன்று பல விபத்துக்களும், உயிரிழப்புகளும் நடந்துள்ளன. ஆனால் ஒப்பந்ததாரர், சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகள் யார் மீதும் பெரும்பாலும் வழக்குகள் பதிவு செய்யப்படுவதில்லை.

உரிய அடையாளங்கள் மற்றும் அறிவிப்புப் பலகைகள் வைக்காததால், சாலைப்பணிகளில் ஏற்படும் விபத்து உயிரிழப்புகளுக்கு சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரே குற்றவியல் அலட்சியத்துக்கு பொறுப்பாவார் என்று மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் கடந்த 2024 ஜூலையில் ஓர் உத்தரவை வழங்கியது. ஆனால், ஒப்பந்ததாரர்களை விட, சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மீது வழக்குகள் பதிவு செய்ய வேண்டுமென்ற கோரிக்கை, தமிழகத்தில் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது.

விபத்துகளை ஏற்படுத்தும் காரணிகள்

சாலைகளில் விபத்துகளில் சிக்குவோருக்கு தரப்படும் கோல்டன் ஹவர் (விபத்து நடந்த முதல் ஒரு மணிநேரத்திற்குள் வழங்கப்படும் அதிஅவசர நிலை சிகிச்சை) சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்க வேண்டுமென்று 'உயிர்' அமைப்பின் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க முக்கியக் காரணமாக இருந்த கோயம்புத்துார் கன்ஸ்யூமர் காஸ் செயலாளர் கதிர்மதியோன், இந்த கோரிக்கையையும் வலியுறுத்தியிருந்தார். அதன்படி, இந்திய மோட்டார் வாகனச் சட்டத்தில், விபத்துக்குக் காரணமாக இருந்த அதிகாரிக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கலாம் என்ற 198 ஏ என்ற பிரிவு அதன்பின்பே சேர்க்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

விபத்தில் கணவன், மனைவி பலி

பட மூலாதாரம்,VIGNESH

படக்குறிப்பு,தாராபுரம் அருகே பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது

''இந்த விபத்து தொடர்பாக, உதவிப் பொறியாளர் மீது வழக்குப்பதிவு செய்திருப்பதை ஒரு நல்ல துவக்கமாக கருதுகிறோம். பல ஆண்டுகளாக வலியுறுத்தியும் எந்த விபத்திலும் எந்த அதிகாரிகளையும் வழக்கில் சேர்ப்பதில்லை. இப்போது சேர்த்திருப்பதால், அரசுத்துறை அதிகாரிகள் தங்கள் பணியில் கூடுதல் கவனம் செலுத்தவும், இத்தகைய தவறுகளை களையவும் வாய்ப்பு ஏற்படும்.'' என்றார் கதிர்மதியோன்.

இந்தியாவில் நடக்கும் பெரும்பாலான விபத்துகளுக்கு இன்ஜினியரிங் தவறே காரணம் என்பதை மத்திய அமைச்சர் நிதின்கட்கரி இதுவரை 3 முறை ஒப்புக் கொண்டுள்ளதைச் சுட்டிக்காட்டும் கதிர்மதியோன், அதை ஒப்புக் கொள்வதால் மட்டும் விபத்துக்கள் குறைந்து விடாது என்கிறார். அதற்கேற்ப கடுமையான சட்டங்களை உருவாக்க வேண்டியது மத்திய அரசின் கடமை என்கிறார் அவர்.

அதிகாரிகளின் அலட்சியத்தால் நடக்கும் விபத்துக்களை அவர் பிபிசி தமிழிடம் பட்டியலிட்டார்.

* வேகத்தடை அமைத்துவிட்டு, அதற்கான அறிவிப்புப் பலகை வைக்காமலும், வேகத்தடை மீது பெயிண்ட் அடிக்காததாலும் விபத்துகள் நடக்கின்றன.

* இந்திய சாலைக்குழும விதிகளின்படி, பெரும்பாலான வேகத்தடைகளை அமைக்காமல் இஷ்டத்துக்கு அமைப்பதும் விபத்துகளை ஏற்படுத்துகின்றன.

* பல இடங்களில் வேகத்தடைக்கும், பாதசாரிகள் கடப்பதற்கும் ஒரே மாதிரியாக கோடுகள் அமைப்பதாலும் வாகன ஓட்டிகளுக்கு வித்தியாசம் தெரியாமலிருப்பதும் விபத்துக்குக் காரணமாகிறது.

விபத்தில் கணவன், மனைவி பலி

பட மூலாதாரம்,VIGNESH

படக்குறிப்பு, பாலம் கட்டும் பணிக்காக தோண்டப்பட்டிருந்த பள்ளம்

* ஒரே சாலையாக இருந்து அகலமான சாலையை இரு சாலையாகப் பிரிக்கும்போது, நடுத்திட்டில் ஒளிர் விளக்கு அமைக்காததால் வேகமாக வரும் வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகின்றன.

* சர்வீஸ் சாலைகளை ஒரே அளவில் அமைக்காமல் ஓரிடத்தில் அகலமாகவும், மற்றொரு இடத்தில் குறுகலாகவும் அல்லது வளைவாகவும் அமைப்பதும் விபத்துக்களுக்குக் காரணமாகிறது.

* சாலைகளில் உள்ள குழிகளை அவ்வப்போது மூடாமல் இருப்பதால், குழியில் விழாமலிருக்க வாகனங்கள் வலது அல்லது இடது புறமாகத் திடீரெனத் திரும்பும்போது, பின்னால் வரும் வாகனங்களில் விபத்துக்குள்ளாகின்றனர். இதுபோன்ற விபத்துக்களில் உயிரிழப்புகள் அதிகம் நடக்கின்றன.

இத்தகைய விபத்துகள் அனைத்துக்கும் அந்தப் பணியை சரியாகச் செய்யாத அல்லது கண்காணிக்காத நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் காரணமென்று குற்றம்சாட்டுகிறார் கதிர்மதியோன்.

'மண் சுவர் எழுப்பி கருப்பு வெள்ளை வர்ணமடிக்க வேண்டும்'

இதே கருத்தை வலியுறுத்தும் தமிழக நெடுஞ்சாலைத்துறையின் ஓய்வு பெற்ற சிறப்பு தலைமைப் பொறியாளர் (திட்டங்கள்) கிருஷ்ணகுமார், ''ஒவ்வொரு ஒப்பந்தப் பணிக்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகும்போது, அந்தப் பணியின்போது எச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன செய்ய வேண்டுமென்பது குறித்து தெளிவாக அதில் அறிவுறுத்தப்பட்டிருக்கும். அதை பெரும்பாலான ஒப்பந்ததாரர்கள் செய்யாமல் மிச்சம் பிடிப்பதே விபத்துக்கு வழிவகுக்கிறது.'' என்றார்.

சாலை விரிவாக்கத்துக்காக தோண்டும் மண்ணை வைத்து, குழியை ஒட்டி தடுப்புச்சுவர் அமைத்து, அதில் கருப்பு வெள்ளை பெயிண்ட் அடிப்பதுடன், அதற்கு 100 மீட்டர் துாரத்துக்கு முன்பே, 'சாலைப்பணி நடக்கிறது, மெதுவாகச் செல்லவும்' என்றோ அல்லது மாற்றுப்பாதையில் செல்லவும் என்றோ அறிவிப்புப் பலகை வைக்க வேண்டும் என்கிறார் கிருஷ்ணகுமார். நீளமான இடங்களில் மாற்றுப்பாதை அமைப்பது மிக முக்கியம் என்று கூறும் அவர், தற்போது பல இடங்களில் இதை அமைப்பதில்லை என்கிறார்.

தற்போது விபத்து நடந்த இடத்தில் எந்தவித தடுப்புகளும், எச்சரிக்கை அறிவிப்புகளும் இல்லாமல் அங்கு பணி நடந்ததற்கு, அந்த இடத்தை எந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் கள ஆய்வு செய்யாததுதான் காரணம் என்று கூறும் கிருஷ்ணகுமார், இப்போதுள்ள பெரும்பாலான அதிகாரிகள் களப்பணி செய்யாமலிருப்பதுதான் இதுபோன்ற நிறைய தவறுகளுக்கும், விபத்துக்களுக்கும், உயிரிழப்புகளுக்கும் காரணமாகிறது என்கிறார் அவர்.

விபத்தில் கணவன், மனைவி பலி

பட மூலாதாரம்,VIGNESH

படக்குறிப்பு, பெரும்பாலான அதிகாரிகள் களப்பணி செய்யாமலிருப்பதுதான் இதுபோன்ற நிறைய தவறுகளுக்கும், விபத்துக்களுக்கும், உயிரிழப்புகளுக்கும் காரணமாகிறது என்கிறார் கிருஷ்ணகுமார்

இந்த குற்றச்சாட்டுகளை மறுக்கும் மாநில நெடுஞ்சாலைத்துறை திருப்பூர் கண்காணிப்புப் பொறியாளர் (கூடுதல் பொறுப்பு) ரமேஷ், ''அந்த இடத்தில் இரண்டு தடுப்புகளை வைத்திருந்துள்ளனர். இந்த விபத்து நடப்பதற்கு சற்று நேரத்துக்கு முன்பு, அவ்வழியே வேகமாக வந்த இளைஞரின் பைக் அந்தத் தடுப்புகள் மீது மோதியதில் வண்டியும் தடுப்புகளும் குழிக்குள் விழுந்துவிட்டன. ஆனால் அவர் மேலேயே சாலையில் விழுந்து விட்டார். அவரே எழுந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிவிட்டார்.'' என்றார்.

அந்தத் தடுப்புகள் இல்லாததால்தான், குழி இருப்பது தெரியாமல் நாகராஜ் வாகனத்துடன் உள்ளே விழுந்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார். இருப்பினும், இருவருடைய உயிரிழப்புகளுக்குக் காரணமாக ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் தரப்பட்டிருப்பதுடன், உதவி கோட்டப் பொறியாளர், உதவிப் பொறியாளர் ஆகியோர் மீது துறைரீதியான நடவடிக்கைக்கும் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.

''அமெரிக்காவில் சாலை பாதுகாப்பு வாரியம் (Road Safety Board) என்ற தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பு உள்ளது. அதற்கு தனித்துவமான அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று, காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் என எந்தத் துறையின் தலையீடும் இல்லாத சாலை பாதுகாப்பு ஆணையத்தை (Road Safety Authority) மத்திய அரசு உருவாக்கி, அதற்கு சகலவித அதிகாரங்களையும் அளிக்க வேண்டும். அதுவரை இந்தியாவில் விபத்துக்களை குறைக்கவே முடியாது.'' என்கிறார் கோவை மாவட்ட சாலை பாதுகாப்புக்குழு உறுப்பினராகவுள்ள கதிர்மதியோன்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c045wgg169lo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.