Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஏஐ, செயற்கை நுண்ணறிவு, மாணவர்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், மோகன்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

ஏ.ஐ. என்கிற வார்த்தையை கேள்விப்படாதவர்களே இருக்க முடியாது என்கிற அளவுக்கு அதன் வளர்ச்சி இன்று அனைத்து இடங்களிலும் வியாபித்திருக்கிறது. செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) என்பது தான் சுருக்கமாக ஏ.ஐ என அழைக்கப்படுகிறது.

நம்முடைய பொழுதுபோக்கு தொடங்கி கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்து துறைகளிலும் ஏஐ ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இன்றைய யுகத்தின் மந்திரச் சொல்லாக ஏஐ மாறியிருக்கிறது.

இந்த நிலையில் ஏஐ பற்றி கற்றுக் கொள்வதற்கான ஆர்வமும் ஈடுபாடும் மாணவர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

லின்கெட்இன் நிறுவனம் 2023 ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் உள்ள தரவுகளின்படி ஏஐ/மெஷின் லெர்னிங் அல்லது ஏஐ திறன்கள் தேவைப்படுகிற வேலைகள் பற்றி தேடுவது இந்தியாவில் அதற்கு முந்தைய ஆண்டைவிட 6 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதே சமயம் ஏஐ அல்லது ஏஐ சார்ந்த வேலைகளுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கையும் 5 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

- தற்போது வேலைக்கு எடுக்கப்படுவோரில் 10 சதவிகிதம் பேர் சேரும் பணி என்பது 2000-ஆம் ஆண்டில் அறியப்படக்கூட இல்லை.

- 2030ஆம் ஆண்டில் தற்போது வேலைக்குத் தேவைப்படுகிற 70% திறன்கள் ஏஐ-யால் மாறிவிடும்

- உலகம் முழுவதும் இந்தியா உள்ளிட்ட 15 நாடுகளில் வேகமாக வளர்ந்து வரும் வேலையாக செயற்கை நுண்ணறிவு பொறியாளர் பணி (Artificial Intelligence Engineer) உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏஐ படிக்க என்னென்ன வாய்ப்புகள் என்ன?

ஏஐ, செயற்கை நுண்ணறிவு, மாணவர்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஏஐ தொடர்பாக பல பட்டப்படிப்புகள் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன

தற்போது ஏஐ தொடர்பாக இணையத்தில் பல்வேறு நிறுவனங்களால் இலவச கோர்ஸ்கள் வழங்கப்படுகின்றன. அதே போல பல கல்லூரிகளும் ஏஐ தொடர்பான பி.இ, பி.டெக், எம்.இ, எம்.டெக் மற்றும் டிப்ளமோ கோர்ஸ்களை வழங்கி வருகின்றன. பல நிறுவனங்கள் ஏஐ தொடர்பான பயிற்சிகளையும் தனியாக வழங்கி வருகின்றன.

இந்த நிலையில் எந்த வகையான பட்டப்படிப்பு அல்லது பாடத்திட்டங்களைத் தேர்ந்தெடுக்கலாம் என்கிற கேள்வியும் மாணவர்கள் மத்தியில் நிலவுகின்றன.

தொழில்நுட்ப படிப்புகளுக்கு மட்டுமே ஏஐ பொருந்துமா?

ஏஐ என்பது பொறியியல் அல்லது சில தொழில்நுட்ப படிப்புகளில் மட்டுமே தாக்கம் செலுத்தும் எனப் பரவலாக நம்பப்படுகிறது, ஆனால் ஏஐ அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தப்போகிறது என்கிறார் கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி.

2023ஆம் ஆண்டு வெளியான லின்கெட் இன் அறிக்கையில் ஏஐ சார்ந்த பணிகள் தேவைப்படுகிற ஐந்து முக்கிய துறைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவை

  • தொழில்முறை சேவைகள்

  • தொழில்நுட்பம், தகவல் மற்றும் ஊடகம்

  • நிதி சேவைகள்

  • நிர்வாக சேவைகள்

  • உற்பத்தி

ஏஐ படிப்புகளுக்கான பாடத்திட்டம்

ஏஐ, செயற்கை நுண்ணறிவு, மாணவர்கள்

பட மூலாதாரம்,கல்வியாளர் நெடுஞ்செழியன்

படக்குறிப்பு,கல்வியாளர் நெடுஞ்செழியன்

ஏஐ பட்டப்படிப்புகள் மீது கவனம் தேவை என எச்சரிக்கிறார் கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி.

மேலும் பேசியவர், "பல கல்லூரிகளில் ஏஐ படிப்புகளுக்கு தேவையான கட்டமைப்போ போதிய திறன் பெற்ற பேராசிரியர்களோ இல்லை. கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்திட்டத்தை அப்படியே எடுத்து கூடுதலாக இரண்டு, மூன்று தலைப்புகளை மட்டும் சேர்ந்து ஏஐ படிப்புகள் என சில கல்லூரிகள் வழங்கி வருகின்றன.

ஏஐ ஆராய்ச்சி மற்றும் முதலீட்டில் இந்தியா மற்ற நாடுகளைக் காட்டிலும் பின்தங்கியுள்ளது. பல கல்வி நிறுவனங்களும் செயற்கையான தேவையை உருவாக்கி ஏஐ பட்டப்படிப்புகளில் மாணவர்களைச் சேர்த்து வருகின்றன. இந்த பாடத்திட்டங்களில் தரம் என்ன, இதற்கு வேலைவாய்ப்பு எந்த அளவிற்கு உள்ளது என்பது பற்றி எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. கடந்த சில வருடங்களில் 2.5 லட்சம் மாணவர்கள் ஏஐ படிப்புகளில் சேர்ந்துள்ளனர்" என்றார்.

இந்தியாவில் ஏஐ மிகவும் மிகைப்படுத்தப்படுகிறது எனக் கூறுகிறார் கல்வியாளர் நெடுஞ்செழியன்.

மேலும் அவர், "பல முன்னணி கல்வி நிறுவனங்களுமே ஏஐ பட்டப்படிப்புகளை விற்பதற்கு விளம்பரங்கள் செய்து வருகின்றன. இவை ஏஐ கல்வி வணிகமயப்படுவதையே காட்டுகிறது. ஏஐ பற்றி ஆய்வு செய்ய போதுமான கட்டமைப்பு வசதிகள் பெரும்பாலான கல்வி நிறுவனங்களில் இருப்பதில்லை.

அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலும் ஏஐ பட்டப்படிப்புகளை கண்மூடித்தனமாக இல்லாமல் முறையாக ஆய்வு செய்து தான் அனுமதிக்க வேண்டும். ஏஐ பாடத்திட்டங்கள் வழங்குகின்ற கல்வி நிறுவனங்களில் அதற்கான போதிய கட்டமைப்பு இருக்கிறதா, திறன் பெற்ற பேராசிரியர்கள் இருக்கிறார்களா என்பதை உறுதி செய்த பிறகே அனுமதி வழங்க வேண்டும்" என்றார்.

ஏஐ-யின் அடுத்த கட்டம் என்ன?

ஏஐ, செயற்கை நுண்ணறிவு, மாணவர்கள்

பட மூலாதாரம்,செந்தில் நாயகம்

படக்குறிப்பு,செந்தில் நாயகம்

ஏஐ தொழில்நுட்பம் பல ஆண்டுகளாக இருந்தாலும் தற்போது தான் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளதாக தெரிவிக்கிறார் முவோனியம் ஏஐ ஸ்டுடியோஸின் தலைமைச் செயல் அதிகாரியான செந்தில் நாயகம்.

"கடந்த 20 ஆண்டுகளாக பெரு நிறுவனங்கள் ஏஐ தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வருகின்றன. கம்ப்யூட்டரை முதல் கட்ட வளர்ச்சி என்றும் இணையத்தை இரண்டாம் கட்ட வளர்ச்சி என்றும் நாம் வைத்துக் கொண்டால் ஏஐ என்பது மூன்றாம் கட்ட வளர்ச்சி.

இனிவரும் காலங்களில் ஏஐ மாடல்களை உருவாக்குதற்கான செலவு குறைந்து அதன் உற்பத்தி தரம் மேலும் அதிகரிக்கும். தற்போது ஏஐ மூலம் முழு நீள படங்கள் தயாரிப்பதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன.

நாம் ஏஐ-யை எதிர்காலம் என நினைக்கிறோம். ஏஐ என்பது நிகழ்காலம், கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் ஏஐ வந்துவிட்டது. இதன் அடுத்தக்கட்டம் என்பது Artificial General Intelligence (ஏஜிஐ) என அழைக்கப்படுகிறது. மனிதர்களுக்கு ஒப்ப அல்லது மனிதர்களைவிடவும் சிறப்பாக செயல்படக்கூடியதாக இந்த நுண்ணறிவு கருதப்படும். எனவே இனி வரும் காலங்களில் ஏஐ பயன்படுத்தாதவர்கள், வேலைவாய்ப்பு சந்தையில் போட்டியிடுவது சவாலாக இருக்கும்.

இப்போது அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனம் அங்கு ஒருவரை பணியமர்த்த ஒரு தொகை செலவு ஆகிறது என்றால், இந்தியாவில் அதில் பாதிக்கும் குறைவாக செலவு செய்தாலே அந்த வேலையை வாங்கிவிட முடியும் என்றால் இந்தியாவுக்கு வருவார்கள். ஆனால் ஏஐ உலகம் முழுவதும் ஒரே விலையில் கிடைக்கும் என வருகிறபோது அனுபவம் வாய்ந்தவர்கள் முதலில் வேலை இழப்பார்கள், புதிதாக வேலைக்கு வருபவர்களுக்கு வேலை கிடைப்பது கடினமாக இருக்கும்" என்றார்.

வேலைவாய்ப்பில் ஏஐ

ஏஐ, செயற்கை நுண்ணறிவு, மாணவர்கள்

படக்குறிப்பு,கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி

ஏஐ மாடல்களை உருவாக்குவதை விடவும் ஏற்கெனவே உள்ள ஏஐ மாடல்களை திறம்பட பயன்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார் ஜெயப்பிரகாஷ் காந்தி.

தொடர்ந்து பேசிய அவர், "ஏஐ என வருகிறபோது இரண்டு விதமான பணிகள் உள்ளன. ஒன்று ஏஐ மாடல்களை உருவாக்குவது, இரண்டாவது அத்தகைய ஏஐ மாடல்களைப் பயன்படுத்துவது. ஏஐ மாடலை முழுவதுமாக உருவாக்கும் பொறியாளர்கள் மிகவும் சொற்பம். விரல் விட்டு எண்ணினால் உலகம் முழுவதுமே சில ஆயிரம் பேர் தான் இருப்பார்கள்.

ஆனால் நாம் அனைவருமே ஏஐ மாடல்களைப் பயன்படுத்துவோம். சாட் ஜிபிடி, ஜெமினி போல பல ஏஐ மாடல்கள் தற்போது உள்ளன. இனிவரும் காலங்களில் இன்னும் அதிகமான, தற்போது இருப்பதைவிட மேம்பட்ட ஏஐ மாடல்கள் வெளிவரும்.

இந்தியாவைப் பொருத்தவரை தற்போது ஒரு முழுமையான ஏஐ மாடல்களை உருவாக்குவதற்கான வளமும், முதலீடும் குறைவாகவே உள்ளது. எனவே நாம் வழக்கத்தில் உள்ள ஏஐ மாடல்களை நம் பணி சார்ந்து எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம், அதற்கு தேவைப்படும் திறன்கள் என்னென்ன, அதை எவ்வாறு வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை நோக்கி நகர வேண்டும்.

ஏஐ-யினால் வேலைவாய்ப்புகள் பறிபோய்விடும் என்கிற அச்சம் இருக்கிறது. ஆனால் இனிவரும் காலங்களில் ஏஐ திறன்கள் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை கிடைக்கும் என்கிற நிலை உருவாகும். அரசும் ஏஐ-யை ஒழுங்குபடுத்துவது பற்றி யோசிக்க வேண்டும்" என்றார்.

ஏஐ கற்றுக் கொள்ள விரும்பும் மாணவர்கள் என்ன செய்ய வேண்டும்?

ஏஐ, செயற்கை நுண்ணறிவு, மாணவர்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஏஐ கற்றுக் கொள்ள விரும்பும் மாணவர்கள்

ஏஐ கற்றுக்கொள்ள தனி பட்டப்படிப்பு அவசியம் இல்லை என்கிறார் ஜெயப்பிரகாஷ் காந்தி. இதே கருத்தை செந்திலும் முன்வைக்கிறார்.

"பொறியியல் போன்ற தொழில்நுட்ப பாடங்களை படிக்க விரும்பும் மாணவர்கள் ஏற்கெனவே உள்ள பொறியியல் பட்டப்படிப்பை எடுத்துக் கொண்டே கூடுதலாக ஏஐ சார்ந்த திறன்களை வளர்த்துக் கொள்வதே தற்போதைக்கு சிறந்ததாக இருக்கும். அதற்கான பிரத்யேக வகுப்புகள் மற்றும் பயிற்சிகளை இணையத்தில் பல முன்னணி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் இலவசமாகவே வழங்குகின்றன" என்றார் ஜெயப்பிரகாஷ் காந்தி.

ஏஐ கற்றுக் கொள்ள சுய தேடலே முக்கியம் என்கிறார் செந்தில்.

மேலும் அவர், "ஒரு பட்டப்படிப்பில் சேர்ந்தாலே ஏஐ முழுவதுமாக கற்றுவிட முடியும் என்று கிடையாது. ஏஐ ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு விதத்தில் வேலை செய்யும். தகவல் தொழில்நுட்பம், ஊடகம், வங்கி, நிதி சேவைகள், மருத்துவம் என ஒருவர் தேர்ந்தெடுக்கிற துறை சார்ந்து என்ன மாதிரியான திறன்கள் தேவை என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். அவற்றைக் கற்றுக்கொள்ள பல்வேறு வாய்ப்புகள் இணையத்தில் இருக்கின்றன. சீனா தொடக்கப்பள்ளியில் இருந்து ஏஐ கல்வியை கட்டாயமாக்கியுள்ளது. இந்தியாவிலும் கல்லூரி அளவில் இல்லாமல் பள்ளிகளிலே ஏஐ அறிமுகப்படுத்தப்பட வேண்டும்" என்றார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c3e53273829o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.