'ரிலீஸ் அதிகம், வெற்றி குறைவு': 2025-ஆம் ஆண்டு தமிழ் சினிமா பற்றிய ஒரு மீள் பார்வை பட மூலாதாரம்,PradeepRanganathan/Facebook படக்குறிப்பு,டியூட் கட்டுரை தகவல் மீனாட்சி சுந்தரம் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 2025-ஆம் ஆண்டு தமிழில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 285 திரைப்படங்கள் வெளியாயின. பல ஆண்டுகள் தேங்கியிருந்த படங்களும் இந்த ஆண்டு வெளியாயின. சிறிய படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு, தயாரிப்பாளர்கள் காட்டிய ஆர்வம், சிறிய படங்களை ரிலீஸ் செய்ய திரையரங்குகள் கிடைத்தது என்பன போன்ற பலவும் இதற்கு காரணமாக அமைந்தது என்று திரைத்துறையினர் கூறினர். 2025-ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு எப்படி இருந்தது? வசூல் ரீதியில் வெற்றி பெற்ற படங்கள் தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள் பிபிசி தமிழிடம் பகிர்ந்த தகவல்களின்படி பின்வரும் திரைப்படங்கள் வெற்றிப் படங்களாக பார்க்கப்படுகின்றன. மதகஜராஜா கூலி டூரிஸ்ட் ஃபேமிலி குட் பேட் அக்லி ஆண்பாவம் பொல்லாதது பறந்துபோ டிராகன் டியூட் மாமன் குடும்பஸ்தன் தலைவன் தலைவி பைசன் மிடில்கிளாஸ் மர்மர் 3 பிஹெச்கே திரையரங்குகளில் சில படங்கள் மட்டுமே வெற்றிகரமாக ஓடின. பல படங்கள் ஓடிடி, மற்ற மொழிகள், சாட்டிலைட் உரிமம் போன்றவற்றால் தயாரிப்பாளர்களுக்கு லாபகரமான படங்களாக அமைந்தன. எதிர்பார்த்த வெற்றியை தராத படங்கள் இந்த ஆண்டு எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாதவை என்று திரைத்துறையினர் குறிப்பிட்ட திரைப்படங்கள். தக் லைஃப் வீரதீர சூரன் விடாமுயற்சி கிஸ் மாஸ்க் ரெட்ரோ குபேரா இட்லிக்கடை மதராசி காதலிக்க நேரமில்லை நேசிப்பாயா ஏஸ் அகஸ்தியா கேங்கர்ஸ் மாரீசன் படைத்தலைவன் கொம்புசீவி ஃபீனிக்ஸ் தேசிங்குராஜா 2 பிளாக்மெயில் பாம் டீசல் காந்தா கும்கி 2 பட மூலாதாரம்,@MadrasTalkies_ படக்குறிப்பு,தக்லைஃப் வரவேற்பு பெற்ற சிறிய பட்ஜெட் படங்கள் சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி, மணிகண்டனின் குடும்பஸ்தன், சூரியின் மாமன், சரத்குமார்-சித்தார்த் நடித்த 3 பிஹெச்கே, விஜய் ஆண்டனியின் சக்தித் திருமகன், ரியோவின் ஆண்பாவம் பொல்லாதது, விக்ரம் பிரபு நடித்த சிறை ஆகிய படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன. வணிக ரீதியாக ஹிட் ஆகாவிட்டாலும் லிஜோமோல் நடித்த காதல் என்பது பொதுவுடமை, புதுமுகங்களின் மாயகூத்து, டேனியல் பாலாஜியின் பிபி 180, காந்தி கண்ணாடி, அதர்ஸ், வெள்ளக்குதிர, ஒண்டிமுனியும் நல்லபாடனும், அங்கம்மாள், ஹவுஸ்மேட்ஸ், பாலாவின் வணங்கான், எமகாதகி, வேம்பு, லெவன், லவ் மேரேஜ், டிஎன்ஏ, மார்கன், கெவி, வானரன், பேட் கேர்ள், தண்டகாரண்யம், ஆரோமலே, மெட்ராஸ் மேட்னி, ஓஹோ எந்தன் பேபி, பெருசு, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், ஆர்யன், லவ் மேரேஜ் ஆகிய படங்கள் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டன. பட மூலாதாரம்,X/@MillionOffl படக்குறிப்பு,டூரிஸ்ட் ஃபேமிலி பிரதீப் ரங்கநாதன், சாய் அபயங்கர் 2025-ஆம் ஆண்டில் பிரதீப் ரங்கநாதன் டிராகன், டியூட் என 2 வெற்றி படங்களை கொடுத்தார். இசைத்துறையை பொறுத்தவரையில் சாய் அபயங்கர் வரவை திரைத்துறையினர் குறிப்பிட்டு சொல்கிறார்கள். அவரது இசையில் வெளியான டியூட் படத்தில் பாடல்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டன. இந்த ஆண்டின் புதுமுக இயக்குநர்களில் அபிஷன் ஜீவிந்த் (டூரிஸ்ட் ஃபேமிலி), ராஜேஸ்வர் காளிசாமி (குடும்பஸ்தன்), கீர்த்தீஸ்வரன் (டியூட்), கலையரசன் தங்கவேல் (ஆண்பாவம் பொல்லாதது), மிடில் கிளாஸ் (கிஷோர் முத்துராமலிங்கம்), சுரேஷ் ராஜகுமாரி (சிறை) ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள். பட மூலாதாரம்,AGS Productions படக்குறிப்பு,டிராகன் 'சினிமா வியாபாரமே மாறி விட்டது' 2025 தமிழ் சினிமா குறித்து பிபிசி தமிழிடம் பேசிய தயாரிப்பாளர் தனஞ்செயன், ''சினிமா வியாபாரமே இப்போது மாறி விட்டது. ஓடிடி மூலமாக 38 சதவிகித வருமானம், திரையரங்கம் மூலமாக 21 சதவிகித வருமானம், சாட்டிலைட் 12%, ஆடியோ 5% மற்றும் பிற வருமானம் என நிலைமை மாறியுள்ளது. சிறிய பட்ஜெட், நடுத்தர பட்ஜெட் படங்கள் இந்த ஆண்டு அதிகம் வெற்றி பெற்றுள்ளன. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பெரிய படங்கள் இந்த ஆண்டு ஓடாதது மைனஸ்." என்றார். டூரிஸ்ட் ஃபேமிலி, தலைவன் தலைவி, 3 பிஹெச்கே, மாமன், குடும்பஸ்தன் உள்ளிட்ட குடும்ப படங்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்றதாக அவர் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,@Manikabali87 படக்குறிப்பு,குடும்பஸ்தன் '1,163 தியேட்டர்கள் இருக்கிறது, ஆனாலும்' தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க செயலாளர் திருச்சி ஸ்ரீதர் பேசுகையில், ''2025-ஆம் ஆண்டு 285 படங்கள் வந்துள்ளதாக கணக்கு சொல்கிறார்கள். அதில், மதகஜராஜா, குடும்பஸ்தன், குட் பேட் அக்லி, மாமன், டியூட், டிராகன், பைசன், தலைவன் தலைவி, காந்தாரா சாப்டர் 1 போன்ற சில படங்களே திரையரங்க உரிமையாளர்களுக்கு சந்தோஷத்தைக் கொடுத்தன." என்றார். பெரிய நடிகர்கள் படங்களை விட, நல்ல கதைதான் ஜெயிக்கும் என்பதை 2025-ஆம் ஆண்டு நிரூபித்துள்ளது என்று அவர் தெரிவித்தார். "தமிழகத்தில் இப்போது 1,163 திரையரங்குகள் இருக்கின்றன. பழைய திரையரங்குகள் மூடப்படும் அதேநேரத்தில் புதுப்பொலிவுடன், நவீன தொழில்நுட்பத்துடன் பல திரையரங்குகள் திறக்கப்படுகின்றன. ஆனாலும், வெற்றி படங்களின் எண்ணிக்கை குறைவு" என்றார் அவர். இயக்குநர் பாண்டிராஜ் கருத்து பட மூலாதாரம்,Sathyajothi films இந்த ஆண்டின் வெற்றிப்படங்களில் ஒன்றாக கூறப்படும் 'தலைவன் தலைவி' படத்தின் இயக்குநரானபாண்டிராஜிடம் பிபிசி தமிழ் பேசியது. அவர் கூறுகையில் ''இந்த ஆண்டு வெற்றி படங்களின் பட்டியலில் தலைவன் தலைவி தவறாமல் இடம்பெறுகிறது. இந்த படத்தின் வெற்றிக்கு மக்கள் குடும்பத்துடன் திரையரங்கிற்கு வந்து படம் பார்த்ததுதான் காரணம்." என்றார். 'சத்தம் அதிகம்' என சில விமர்சனங்கள் வந்தாலும் கணவன், மனைவி, மாமனார், நாத்தனார், கொழுந்தன், அப்பா, அம்மா என திரைப்படத்தில் சித்தரிக்கப்பட்ட பல 'உறவுகளை' படம் பார்த்தவர்கள் தங்கள் வாழ்க்கையுடன் இணைத்து பார்த்தனர் என்றார் அவர். "எப்போதுமே உணர்வுப்பூர்வமாக, குடும்ப கதைகளை சொல்லும் படங்கள் தோற்பதில்லை. ஒரு படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர், டிரைலர் வரும்போதே இந்த படத்தை திரையரங்கில் பார்க்கலாம், இந்த படத்தை ஓடிடியில் பார்க்கலாம் என பார்வையாளர்கள் முடிவு செய்துவிடுகிறார்கள். திரையரங்க அனுபவத்தைப் பெறவே சில படங்களை மக்கள் திரையரங்குகளில் பார்க்கின்றனர். சில படங்கள் ஓடிடி-யில் பெரிய ஹிட் ஆகும். அதுவும் வெற்றி படம்தான். சினிமா இன்று மாறிவிட்டது.'' என்றார் இயக்குநர் பாண்டிராஜ். 'பல படங்களின் தலைப்பு கூட மனதில் பதியவில்லை' திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் பேசுகையில், ''இந்த ஆண்டு 25 படங்கள் மட்டுமே தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் என 3 தரப்புக்கும் லாபம் கொடுத்தன. 60 படங்கள் தப்பிவிட்டன. அதாவது, இந்த படங்கள் பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தவில்லை. மீதமுள்ள 200 படங்கள் ஏமாற்றம் தந்தவை. தக்லைஃப், இட்லி கடை, விடாமுயற்சி, ரெட்ரோ போன்ற பெரிய படங்கள் இழப்பை ஏற்படுத்தின. இந்த ஆண்டு வெளியான பல திரைப்படங்களின் தலைப்பு திரைத்துறையினர் மற்றும் ஊடகத்துறையினரின் மனதில் கூட பதியவில்லை" என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx232zp8pjvo
By
ஏராளன் · 19 minutes ago 19 min