Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கமல்ஹாசன், கர்நாடகா, தக் லைஃப் திரைப்படம், தமிழ்

பட மூலாதாரம்,@RKFI

படக்குறிப்பு, நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படத்தை மணிரத்னம் இயக்கியுள்ளார்

50 நிமிடங்களுக்கு முன்னர்

கன்னட மொழி குறித்த தனது கருத்துக்கு நடிகர் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க மறுத்ததை அடுத்து, கர்நாடகாவில் "தக் லைஃப்" திரைப்படத்தின் வெளியீடு ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

"தமிழில் இருந்து பிறந்தது கன்னடம்" என 'தக் லைஃப்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் பேசியதற்கு கர்நாடகாவில் பெரும் எதிர்ப்பு எழுந்தது.

வரும் ஜூன் 5ஆம் தேதி, தக் லைஃப் திரைப்படம் கர்நாடகாவிலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பாக இதுகுறித்து பேசிய கர்நாடகாவின் கன்னடம் மற்றும் கலாச்சார அமைச்சர், "கமல்ஹாசனின் கருத்தால் கன்னட மக்களின் மனம் புண்பட்டுள்ளது. இதற்காக அவர் மன்னிப்பு கேட்காவிட்டால் அவரின் படத்தைக் கர்நாடகாவில் தடை செய்வோம்" எனத் தெரிவித்தார்.

கர்நாடக முதல்வர் சித்தராமையா, பாஜக மாநில தலைவர் விஜயேந்திரா உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை (மே 30) அன்று, கமல்ஹாசன் மன்னிப்புக் கேட்காவிட்டால், ஜூன் 5-ம் தேதி வெளியாகவுள்ள கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தினை புறக்கணிப்போம் என்று கர்நாடக திரைப்பட வர்த்தக சபை அறிவித்தது.

அதற்கு பதிலளித்த நடிகர் கமல்ஹாசன், "இதற்கு முன்பும் மிரட்டப்பட்டிருக்கிறேன். நான் தவறு செய்திருந்தால், மன்னிப்பு கேட்பேன். இல்லையென்றால், நான் மன்னிப்பு கேட்க மாட்டேன். இது என்னுடைய வாழ்க்கை முறை, தயவுசெய்து இதில் தலையிடாதீர்கள்." என்று கூறியிருந்தார்.

கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு

கமல்ஹாசன், கர்நாடகா, தக் லைஃப் திரைப்படம், தமிழ்

பட மூலாதாரம்,@RKFI

படக்குறிப்பு, வரும் ஜூன் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் தக் லைஃப் திரைப்படம், கர்நாடக மாநிலத்தில் மட்டும் வெளியாகாது

இதையடுத்து 'தக் லைஃப்' படத்தின் தயாரிப்பு நிறுவனம் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், படத்தை கர்நாடகாவில் வெளியிடுவதற்கு போலீஸ் பாதுகாப்பு கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நேற்று (ஜூன் 2) மனு தாக்கல் செய்தது.

"கர்நாடகாவில் தக் லைஃப் படத்தைத் திரையிட தடை விதித்திருப்பது சட்டத்துக்கு எதிரானது. எனவே, தடையை நீக்கி, திரையிட அனுமதிக்க வேண்டும். திரையரங்கங்களுக்கு போதிய போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு கர்நாடக அரசுக்கும், போலீஸுக்கும் உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்" என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

லைவ் லா (Live Law) இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள தகவல்களின் படி, இந்த மனுவை இன்று காலை கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி எம். நாகபிரசன்னா விசாரித்தார். கமல்ஹாசன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் தியான் சின்னப்பா ஆஜரானார்.

அப்போது பேசிய நீதிபதி எம். நாகபிரசன்னா, "இந்த நாடு மொழியின் அடிப்படையில் பிரிக்கப்பட்டிருக்கிறது. பொது வெளியில் இருக்கும் ஒரு நபர் இவ்வாறு பேசக் கூடாது." எனக் கூறினார்.

மேலும், "கர்நாடகா மக்கள் மன்னிப்பை மட்டுமே கேட்கிறார்கள். தற்போது நீங்கள் பாதுகாப்புத் தேடி இங்கே வந்திருக்கிறீர்கள். தற்போதைய சூழ்நிலை கமல்ஹாசனால் உருவாக்கப்பட்டது. மேலும், அவர் மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறியுள்ளார்.

நீங்கள் கர்நாடக மக்களின் உணர்வுகளை குறைத்து மதிப்பிட்டுள்ளீர்கள். எந்த அடிப்படையில் இதைச் செய்தீர்கள்? நீங்கள் வரலாற்றாய்வாளரா அல்லது மொழியியல் அறிஞரா?" என்று கேள்வி எழுப்பிய நீதிபதி எம். நாகபிரசன்னா, 'கர்நாடக மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியதால், தன்னுடைய கருத்துக்களுக்கு கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கவேண்டுமென' அறிவுறுத்தினார்.

மீண்டும் மதிய வேளையில் நீதிமன்றம் கூடியபோது, நடிகர் கமல்ஹாசனின் வழக்கறிஞர் தியான் சின்னப்பா, கர்நாடகா திரைப்பட வர்த்தக சபைக்கு கமல்ஹாசன் அனுப்பிய கடிதத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

கடிதத்தில் கமல்ஹாசன் கூறியது என்ன?

கமல்ஹாசன், கர்நாடகா, தக் லைஃப் திரைப்படம், தமிழ்

படக்குறிப்பு, கர்நாடக திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் நரசிம்மலுவுக்கு நடிகர் கமல்ஹாசன் எழுதியுள்ள கடிதம்

கர்நாடக திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் நரசிம்மலுவுக்கு நடிகர் கமல்ஹாசன் இன்று (ஜூன் 3) எழுதியுள்ள கடிதத்தில், கன்னடம் குறித்த தனது கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அந்தக் கடிதத்தில், "புகழ்பெற்ற டாக்டர் ராஜ்குமாரின் குடும்பத்தினர், குறிப்பாக சிவ ராஜ்குமார் மீது உண்மையான பாசத்துடன் 'தக் லைஃப்' ஆடியோ வெளியீட்டு விழாவில் நான் கூறியது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது எனக்கு வேதனை அளிக்கிறது. நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதையும், கன்னடத்தை எந்த வகையிலும் குறைத்து மதிப்பிடுவது என் நோக்கம் அல்ல என்பதையும் தெரிவிப்பதுதான் நான் சொன்ன வார்த்தைகள்.

கன்னட மொழியின் வளமான பாரம்பரியத்தில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. தமிழைப் போலவே, கன்னடமும் நான் நீண்ட காலமாகப் போற்றும் பெருமைமிக்க இலக்கியம் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது." எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "தமிழ், கன்னடம், தெலுகு, மலையாளம் மற்றும் இந்த நாட்டின் அனைத்து மொழிகளுடனும் எனக்குள்ள பிணைப்பு நிலையானது மற்றும் இதயப்பூர்வமானது." என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள கமல்ஹாசன், "சினிமா என்பது மக்களுக்கு இடையே ஒரு பாலமாக இருக்க வேண்டும். ஒருபோதும் அவர்களைப் பிரிக்கும் சுவராக இருக்கக்கூடாது. இதுவே எனது இந்த அறிக்கையின் நோக்கம்." என்று தெரிவித்துள்ளார்.

"எனது வார்த்தைகள், அவற்றுக்கான உண்மையான நோக்கத்துடன் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும், கர்நாடகா, அதன் மக்கள் மற்றும் அவர்களின் மொழி மீதான எனது உண்மையான பாசம் அங்கீகரிக்கப்படும் என்றும் நான் மனதார நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.

ஜூன் 10ஆம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு

கமல்ஹாசன், கர்நாடகா, தக் லைஃப் திரைப்படம், தமிழ்

பட மூலாதாரம்,@RKFI

கர்நாடகா திரைப்பட வர்த்தக சபைக்கு கமல்ஹாசன் அனுப்பிய கடிதத்தை மேற்கோள் காட்டி பேசிய கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி எம். நாகபிரசன்னா, "இந்த கடிதத்தில் 'மன்னிப்பு' என்ற வார்த்தை காணப்படவில்லை" என்று கூறினார்.

அதற்கு பதிலளித்த வழக்கறிஞர் தியான் சின்னப்பா, "கட்டாயப்படுத்துவது என்பது இருக்கக்கூடாது" என்றார்.

"இது கட்டாயப்படுத்துவது அல்ல, அவருக்கு இருக்கவேண்டிய பண்பு. அவர் ஏன் சுற்றிவளைத்துப் பேசுகிறார்?" என்று கேள்வியெழுப்பினார் நீதிபதி.

அதற்கு பதிலளித்த வழக்கறிஞர் "கன்னட மொழியின் மீது அவருக்கு மிகுந்த மரியாதை உண்டு என்பது தான் அவரது நிலைப்பாடு." என்று கூறினார்,

"அதைத் தெளிவுபடுத்த பல வழிகள் உள்ளன. மன்னிப்பு கேட்க ஒரே ஒரு வழிதான் உள்ளது. இங்குதான் நீங்கள் ஈகோவை பற்றிக்கொண்டிருக்கிறீர்கள். மாநில மக்களின் உணர்வுகள் தான் குறைமதிப்பிற்கு உள்படுத்தப்பட்டுள்ளன. பிரச்னையின் அளவை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அது வேறு எதற்கோ வழிவகுக்கும். மன்னிப்புக் கேட்டு இந்த விஷயத்தை முடித்து வைத்தால் என்ன?" என்று கூறினார் நீதிபதி.

"கமல் ஹாசன் சொல்ல வேண்டிய அனைத்தையும் தெரிவித்துவிட்டார். நிலைமை இப்படியே தொடர்ந்தால், அவர் கர்நாடகாவில் தனது படத்தை வெளியிட விரும்பவில்லை" என்று வழக்கறிஞர் தியான் வாதத்தை முடித்துக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, மனுதாரர் தனது படத்தை தற்போது கர்நாடகாவில் வெளியிட விரும்பவில்லை என்பதை பதிவு செய்து கொண்ட கர்நாடக உயர்நீதிமன்றம், அனைத்து தரப்பினருக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் வரை வழக்கை ஒத்திவைக்கவேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்டது. இந்த வழக்கின் அடுத்த விசாரணையை ஜூன் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

வரும் ஜூன் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் தக் லைஃப் திரைப்படம், கர்நாடகா மாநிலத்தில் மட்டும் வெளியாகாது என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cev4k22ngvko

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் கன்னட படங்கள் வெளியாகாது” - கமலின் ‘தக் லைஃப்’ விவகாரத்தில் வேல்முருகன் எச்சரிக்கை

04 JUN, 2025 | 10:01 AM

image

சென்னை: “கன்னட திரைப்படமான கேஜிஎப் 2 பாகங்கள் உள்ளிட்ட திரைப்படங்கள், தமிழ்நாட்டில் ரூ.100 கோடியை வசூலித்திருக்கிறது. இதனை கன்னட மொழி திரைப்படங்களாக பார்க்காமல், திரைப்படமாக மட்டுமே தமிழர்கள் பார்த்தனர். ஆனால், கமல்ஹாசன் பேசிய விவகாரத்தில் மொழி அரசியலாக பார்க்கப்பட்டிருக்கிறது. எனவே, கமல்ஹாசன் நடித்துள்ள ‘தக் லைஃப்’ திரைப்படம் கர்நாடகாவில் வெளியாக தடை இருக்கும் பட்சத்தில், இனி வரும் காலங்களில் தமிழ்நாட்டில் எந்தவொரு கன்னட திரைப்படமும் வெளியாகாது” என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாட்டின் மாபெரும் கலைஞன் கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ திரைப்படம் வரும் 5-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. சமீபத்தில் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், கன்னட நடிகர் சிவராஜ்குமாரை பார்த்து, ‘தமிழில் இருந்து பிறந்ததுதான் உங்கள் கன்னட மொழி’ என்று கமல்ஹாசன் கூறியிருந்தார். வரலாற்று ஆய்வாளர்களின் கூற்றுப்படி, கமல்ஹாசன் பேசியது சரியே.

ஆனால், கர்நாடகத்தில் உள்ள கன்னட அமைப்புகள் தமிழ், தமிழர்களுக்கு எதிரான இன வெறியைத் தூண்டும் நோக்கத்துடன் கமல்ஹாசன் உறவாகப் பேசிய செய்திகளை தவறாக சித்தரித்து கர்நாடகத்தில் ஒட்டப்பட்டிருந் ‘தக் லைஃப்’ திரைப்பட சுவரொட்டிகளையும், பேனர்களையும் கிழித்தெறிந்து போராட்டங்களைக் நடத்திக் கொண்டிருக்கிறது. கமல்ஹாசன் மன்னிப்பு கோராவிட்டால் படத்தை திரையிட விட மாட்டோம் என்று கன்னட அமைப்புகள் கூறி வருகின்றன. கன்னட சினிமா வர்த்தக சபையும் மன்னிப்பு கோராவிட்டால் படத்தை திரையிட அனுமதி கிடையாது எனக் கூறியுள்ளது.

அதற்கும் ஒருபடி மேலே சென்று, கன்னட இனவெறி அமைப்புகளை ஆதரிக்கும் வகையில், அம்மாநில காங்கிரஸ் கட்சியும், முதல்வருமான சித்தராமையா மற்றும் அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆகியோர், கமல்ஹாசனுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் திரைப்படத்தை வெளியிடும் திரையரங்குகளுக்கு காவல் துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனக் கோரி மனு தாக்கல் செய்திருந்தது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி நாகபிரசன்னா, கமல்ஹாசன் தரப்புக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். அதாவது, கமல்ஹாசன் என்ன வரலாற்று ஆய்வாளரா? மொழியியல் வல்லுநரா? தமிழில் இருந்து கன்னடம் வந்தது என எந்த அடிப்படையில் பேசினீர்கள்? கமல்ஹாசன் மன்னிப்பு கேட்டிருந்தால் இந்த பிரச்சினை முடிந்து இருக்கும். கமல்ஹாசனோ அல்லது வேறு யாராக இருந்தாலும் மக்களின் உணர்வுகளை புண்படுத்த கூடாது. கன்னடம் தமிழில் இருந்து வந்ததற்கான ஆதாரம் உள்ளதா என பல்வேறு கேள்விகளை நீதிபதி நாகபிரசன்னா எழுப்புகிறார்.

அதுமட்டுமின்றி, நானே இந்த திரைப்படத்தை பார்க்கலாம் என நினைத்தேன். ஆனால் இந்த விவகாரத்தால் பார்க்க முடியாது. கமல்ஹாசன் ஒரு மன்னிப்பு கேட்டிருந்தால் இந்த பிரச்சினை முடிவுக்கு வந்திருக்கும். பேசிய கருத்தை திரும்ப பெற முடியாது. மன்னிப்பு கேட்காவிடில் கர்நாடகாவில் படம் ஓட வேண்டும் என ஏன் நினைக்கிறீர்கள்? மன்னிப்பு ஒன்று தான் தீர்வு. இதுதான் நீதிபதி நாகபிரசன்னாவின் கேள்விகள். அவர் நீதிபதியாக இல்லாமல், ஒரு கன்னடராக இருந்து அக்கேள்விகளை எழுப்பியுள்ளார்.

கமல்ஹாசன் பேசிய விவகாரத்தில், தமிழர்களுக்கு எதிராக கலவரத்தை தூண்டும் வகையில் தான், கர்நாடகத்தில் முதல்வர் சித்தராமையாவும், பாஜக மாநிலத் தலைவரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக தான் நீதிபதி நாகபிரசன்னாவும் பேசியிருக்கிறார். இது தமிழர்களுக்கு எதிராக கலவரத்தை உருவாக்கி தமிழர் எதிர்ப்பை மேலும் மேலும் தூண்டி விடுகின்ற செயலாகும். நீதிபதியாக இருப்பவர்களுக்கு மொழி, இனம், மதம் வேறுபாடு கிடையாது என்பார்கள்.

ஆனால், நாகபிரசன்னா ஒரு கன்னடராக மட்டுமே இருந்து தீர்ப்பளித்துள்ளார். அவரது இனப்பற்றை போற்றுகிறோம். கர்நாடகாவில் இதுவரை தமிழர்களுக்கு நீர் தான் மறுக்கப்பட்டு வந்தது. இப்போது நீதியும் மறுக்கப்பட்டுள்ளது. ஆனால், நீதிபதி நாகபிரசன்னா கடந்த கால வரலாற்றை மறந்து விட்டு பேசியுள்ளார்.

கன்னட திரைப்படமான கேஜிஎப் 2 பாகங்கள் உள்ளிட்ட திரைப்படங்கள், தமிழ்நாட்டில் ரூ.100 கோடியை வசூலித்திருக்கிறது. இதனை கன்னட மொழி திரைப்படங்களாக பார்க்காமல், திரைப்படமாக மட்டுமே தமிழர்கள் பார்த்தனர். ஆனால், கமல்ஹாசன் பேசிய விவகாரத்தில் மொழி அரசியலாக பார்க்கப்பட்டிருக்கிறது. எனவே, கமல்ஹாசன் நடித்துள்ள ‘தக் லைஃப்’ திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியாக தடை இருக்கும் பட்சத்தில், இனி வரும் காலங்களில் தமிழ்நாட்டில் எந்தவொரும் கன்னட திரைப்படமும் வெளியாகாது. அதே நேரத்தில், தமிழ் திரைப்படத்துறையில் உள்ள சங்கங்கள் முன்வந்து, கர்நாடகாவில் கமல்ஹாசன் நடித்துள்ள ‘தக் லைஃப்’ திரைப்படத்தை வெளியிடுவதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும்.

அப்படி இல்லையென்றால், தமிழ் திரைப்படங்களில் கன்னட நடிகர்களையோ, தொழில்நுட்ப கலைஞர்களையோ பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மாபெரும் நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும். இவ்விவகாரத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தங்களுக்கு உறுதுணையாக நிற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்விவகாரத்தை பயன்படுத்தி கர்நாடகாவில் உள்ள தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், கர்நாடக தமிழர்களின், தமிழ்நாட்டு தமிழர்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க, தமிழக வாழ்வுரிமைக் கட்சி எதிர்வினையாற்ற வேண்டிய நிலை ஏற்படும் என்பதை எச்சரிக்கையோடு கூறிக்கொள்கிறேன்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/216529

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கமல்ஹாசனை மன்னிப்பு கேட்க சொல்வதா? கர்நாடகா உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

17 Jun 2025, 12:55 PM

Thuglife Supreme Court

தக் லைஃப் திரைப்பட விவகாரத்தில் நடிகர் கமல்ஹாசன், மன்னிப்பு கேட்க வேண்டும் என உத்தரவிட்ட கர்நாடகா உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதேபோல இந்த வழக்கில் பதில் மனுத் தாக்கல் செய்யாத கர்நாடகா அரசையும் உச்சநீதிமன்றம் கடுமையாக சாடியது.

தக் லைஃப் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில், தமிழ் மொழியில் இருந்து கன்னட மொழி பிறந்தது என பேசினார் கமல்ஹாசன். இது கன்னட மொழியை சிறுமைப்படுத்துகிறது என கூறி கர்நாடகாவில் போராட்டங்கள் வெடித்தன. கர்நாடகா பிலிம் சேம்பரும் தக் லைஃப் திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடமாட்டோம் என அறிவித்தது.

இதனையடுத்து கர்நாடகாவில் தக் லைஃப் திரைப்படத்தை வெளியிட உரிய பாதுகாப்பு வழங்க கோரி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் கமல்ஹாசன் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி நாகபிரசன்னா, கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என காட்டமாக வலியுறுத்தி இருந்தார்.

இதனிடையே கர்நாடகாவில் தக் லைஃப் விவகாரத்தில் கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்துவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மகேஸ் ரெட்டி என்பவர் பொதுநலன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் கர்நாடகா மாநில அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் உஜ்ஜல் புயன், மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இவ்வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது.

உடனே பதில் மனு தாக்கல் செய்யனும்

இன்றைய விசாரணையின் போது, ” கர்நாடகா மாநில அரசு எப்போது பதில் மனுத் தாக்கல் செய்யப் போகிறது? குண்டர்களையும் சட்டத்தை கையில் எடுக்கும் கும்பல்களையும் சுதந்திரமாக நடமாட அனுமதிக்க முடியாது. சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்ய வேண்டும். கர்நாடகா அரசு உடனடியாக பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும். இந்த பதில் மனுவை நாளையே கர்நாடகா அரசு தாக்கல் செய்தாக வேண்டும்” என்றனர் நீதிபதிகள்.

இதற்கு கர்நாடகா அரசு தரப்பில், தக் லைஃ படத்தின் தயாரிப்பாளர் உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

திரைப்படத்தை வெளியிட அனுமதிக்கனும்

இதை நிராகரித்த நீதிபதிகள், தக் லைஃப் படத் தயாரிப்பாளர் உயர்நீதிமன்றத்தை அணுகினால் உங்களுக்கு என்ன? உங்களின் இந்த போக்கை அனுமதிக்க முடியாது. சட்டத்தின் படி எந்த ஒரு நபரும் தமது திரைப்படத்தை வெளியிடுவதற்கு அனுமதிக்க வேண்டும். திரையரங்குகளை எரிப்போம் என்றெல்லாம் அச்சுறுத்தல் விடுக்கக் கூடாது. பொதுமக்கள் திரைப்படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என நாங்கள் சொல்லவில்லை; ஆனால் திரைப்படத்தை வெளியிட அனுமதிக்க வேண்டும் என்றும் அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டனர்.

அப்போதும் குறுக்கிட்ட கர்நாடகா அரசு தரப்பு வழக்கறிஞர், இந்த பிரச்சனை முடியும் வரை திரைப்படத்தை வெளியிடப் போவது இல்லை என தயாரிப்பாளர் அறிக்கையில் கூறியுள்ளதாக சுட்டிக் காட்டப்பட்டது.

இதனை கேட்ட நீதிபதிகள், அதனால் என்ன இருக்கிறது? ஒருவருக்கு மாற்றுக் கருத்து இருக்கிறது என்பதாலேயே ஒரு படத்தை தடை செய்துவிட முடியாது. தணிக்கை குழுவின் சான்றிதழ் பெற்ற எந்த ஒரு திரைப்படத்தையும் வெளியிட அனுமதிக்கத்தான் வேண்டும். நமது அமைப்பில் சில தவறுகள் இருக்கின்றன. ஒருவர் அறிக்கை வெளியிட்டாலே அதனை உண்மை என மக்கள் நம்புகின்றனர். கமல்ஹாசன் சொன்னதில் என்ன தவறு? என்ன முட்டாள்தனமாக சொல்லிவிட்டார்? என விவாதிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் காட்டமாக தெரிவித்தனர்.

கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் வேலை அல்ல

மேலும் நீதிபதி உஜ்ஜல் புயன் கூறுகையில், கமல்ஹாசனை மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறுவது எல்லாம் கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் வேலை அல்ல எனவும் கடும் கண்டனம் தெரிவித்தார்.

உச்சநீதிமன்றத்துக்கு மாற்றம்

பின்னர், கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள தக் லைஃப் தொடர்பான ரிட் மனுவை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றுகிறோம். கர்நாடகா அரசு பதில் மனுவை நாளை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கின் விசாரணை வரும் வியாழக்கிழமை நடைபெறும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

https://minnambalam.com/thug-life-sc-slams-karnataka-hc-over-suggestion-asking-kamal-haasan-to-apologize/

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் தமிழினத்தின் அறிவார்ந்த வளர்ச்சியுடன் தாங்களும் வளரவேண்டும் என்ற எண்ணமோ, முயற்சியோ இன்றி அங்குள்ள படித்த சிங்கள இனவாதிகளும் காழ்புணர்சியோடு தமிழினத்தின் வளர்ச்சியை நோக்குவது போல், இந்தியாவிலும் தமிழ் மாநிலத்தின் வளர்ச்சியை அதன் சில மாநிலங்களிலுள்ள இனவாதிகள் நோக்குவது தெரிகிறது. இது இந்தியாவின் அழிவுக்கான அறிகுறிகள் என்பதை இலங்கையைப் பார்த்து இந்தியா கற்றுக்கொள்ள வேண்டும்.🤔

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கமல்ஹாசனை மன்னிப்புக் கேட்க வேண்டுமெனக் கூறுவது கர்நாடக உயர் நீதிமன்றத்தின் வேலையல்ல - உச்ச நீதிமன்றம் காட்டம்

Published By: DIGITAL DESK 3

17 JUN, 2025 | 04:51 PM

image

நடிகர் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறுவது உயர்நீதிமன்றத்தின் வேலை அல்ல. உயர்நீதிமன்றம் எப்படி, அப்படிக் கூறலாம்? கர்நாடக உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் காட்டமான கேள்வி எழுப்பி உள்ளது.

தக் லைஃப் படத்திற்கு தடை கிடையாது.. "குண்டர்கள்" படத்தை தடுப்பதை அனுமதிக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முன்னதாக சரமாரி கேள்விகளை எழுப்பிய கர்நாடக உயர் நீதிமன்றம், கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தது. யாராக இருந்தாலும், கமல்ஹாசனாக இருந்தாலும் கூட, நீங்க கமலா இருங்க.. யாரா வேணா இருங்க... மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தக் கூடாது என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. நீங்கள் பெரிய நடிகராக இருந்து கொண்டு அப்படி பேசி இருக்க கூடாது.

இந்த நாட்டின் பிரிவினை மொழிவாரி அடிப்படையில்தான் நடந்தது. ஒரு பொது நபர் இதுபோன்ற அறிக்கையை வெளியிட முடியாது. இதன் காரணமாக அமைதியின்மை, நல்லிணக்கமின்மை ஏற்பட்டுள்ளது. கர்நாடக மக்கள் மன்னிப்பு கேட்க மட்டுமே சொன்னார்கள். இப்போது நீங்கள் மன்னிப்பு கேட்காமல் இங்கு பாதுகாப்பு தேடி வருகிறீர்கள். நீங்கள் என்ன அடிப்படையில் அப்படி பேசினீர்கள், நீங்கள் ஒரு வரலாற்று ஆசிரியரா, மொழியியல் நிபுணரா? என்ன அடிப்படையில் பேசினீர்கள்?

நீங்கள் மன்னிப்பு கேட்டிருந்தால் போதுமானதாக இருந்திருக்கும். மணிரத்னம் படம் என்பதால் படத்தின் முக்கியத்துவம் உங்களுக்குத் தெரியும், ஆனால் நீங்கள் மன்னிப்பு அறிக்கை (மன்னிப்பு) வெளியிட முடியாது என்று கூறுகிறீர்கள்.

நீங்களே உருவாக்கிய பிரச்சனைக்கு அரசாங்கத்தின் ஆதரவை எப்படி கேட்கிறீர்கள். நீங்கள் பேசிவிட்டு அதற்கு அரசு பாதுகாப்பு தர வேண்டுமா? மொழி என்பது மக்களுடன் இணைந்த ஒரு உணர்வு. நீங்கள் ஒரு சாதாரண மனிதர் அல்ல, நீங்கள் ஒரு பொது நபர். சமூக ஊடகங்களில் எழுதுபவர்கள் கூட விசாரிக்கப்படுகிறார்கள். நீங்கள் பெரிய நபர்.

நீங்கள் பெரிய தவறுதலாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் இப்போது கர்நாடகாவில் படத்தை ஓட்ட வேண்டும் என்கிறீர்கள். பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் என்பது மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் அளவுக்கு இருக்கக் கூடாது. நீங்கள் மன்னிப்பு கேட்கலாம், மன்னிப்பு கேட்டால் இங்கே வரும் வசூல் மூலம் சம்பாதிக்கலாம். நீங்கள் பேசியதை, திரும்பப் பெறலாம். அந்த பேச்சில் இப்போதும் உறுதியாக நிற்கிறீர்களா? இது தமிழ் மற்றும் கன்னட அறிக்கை சண்டை கிடையாது. நீங்கள் பேசியதால் வந்த பிரச்சனை.

வாய் தவறி ஏதேனும் நடக்கலாம். ஆனால் தெரிந்த பேசிய விஷயங்கள் அப்படி இல்லை. நீங்கள் பேசிய வார்த்தையைத் திரும்பப் பெற முடியாது, ஆனால் மன்னிப்பு கேட்கலாம். உடைந்த முட்டையை மீண்டும் சேர்க்க முடியாது என்று நீதிபதிகள் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக கர்நாடக உயர் நீதிமன்ற வழக்கில் படத்திற்கு அனுமதி அளிக்கப்படாத நிலையில் அதற்கு எதிராக கமல்ஹாசன் மேல்முறையீடு செய்து இருந்தார். இதை எதிர்த்து கமல்ஹாசன் மேல்முறையீடு செய்திருந்த நிலையில்தான் கர்நாடகாவில் 'தக் லைஃப்' திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க முடியாது என்று 'தக் லைஃப்' வழக்கில் உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

நடிகர் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறுவது உயர்நீதிமன்றத்தின் வேலை அல்ல. உயர்நீதிமன்றம் எப்படி, அப்படிக் கூறலாம்? கர்நாடக உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் காட்டமான கேள்வி எழுப்பி உள்ளது.

தக் லைஃப் படத்திற்கு தடை கிடையாது.. "குண்டர்கள்" படத்தை தடுப்பதை அனுமதிக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/217732

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.