Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உலகப் பெருங்கடலின் 21% பகுதி, அடர் நிறம் அடைந்திருந்தது

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,உலகப் பெருங்கடலின் 21% பகுதி, அடர் நிறம் அடைந்திருந்தது என்று 'குளோபல் சேஞ்ச் பயாலஜி' என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது

கட்டுரை தகவல்

  • எழுதியவர், எல்லியட் பால்

  • பதவி, பிபிசி நியூஸ்

  • 5 ஜூன் 2025, 03:00 GMT

    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

பிரிட்டனில் உள்ள பிளைமவுத் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வின் படி, கடந்த இருபது ஆண்டுகளில் உலகப் பெருங்கடலின் ஐந்தில் ஒரு பகுதி கருமையானதாக (darker) மாறியுள்ளது எனக் கண்டறியப்பட்டுள்ளது.

"கடல் அடர் நிறமடைதல்" என்று இந்தச் செயல்முறை அழைக்கப்படுகின்றது.

கடலின் மேல் அடுக்கில் ஏற்படும் மாற்றங்கள், நீருக்குள் ஒளி ஊடுருவுவதை கடினமாக்கும் போது இந்த நிலை உருவாகிறது.

இந்த மேல் பகுதி, 'ஃபோட்டிக் மண்டலம்' (photic zone) என்று அழைக்கப்படுகிறது. இந்த மண்டலத்தில் தான் கடல் உயிரினங்களில் 90% உயிர்கள் வசிக்கின்றன.

உலகளாவிய உயிர் வேதியியல் சுழற்சி ஆரோக்கியமாக இயங்குவதற்கும் இந்த மண்டலம் முக்கியப் பங்கு வகிக்கிறது.

2003 முதல் 2022க்கு இடைபட்ட காலத்தில், உலகப் பெருங்கடலின் 21% பகுதி, அடர் நிறம் அடைந்திருந்தது என்று 'குளோபல் சேஞ்ச் பயாலஜி' ஆய்விதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டது.

கடல்கள் கருமையானதாக மாறி வருவது ஏன்?

இந்த ஆய்வின் படி, பாசித் திரள் பரவலில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் கடல் மேற்பரப்பு வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்களே, கடல் கருமையானதாக மாறுவதற்கு முக்கிய காரணங்கள் என நம்பப்படுகிறது.

பெரும்பாலும், ஊட்டச்சத்து நிறைந்த நீர், கடலோரப் பகுதிகளின் மேற்பரப்புக்கு எழும்பும் இடங்களில், கடல் அடர் நிறமடையும் தன்மை காணப்படுகிறது.

மழைப் பொழிவு அதிகரிக்கும் போது, நிலத்திலிருந்து விவசாயக் கழிவுகள் மற்றும் மண்ணில் படிந்துள்ள அடர்த்தியான பகுதிகள் கடலுக்குள் செல்லும். இவை பிளாங்க்டன்களுக்கு உணவளிக்கிறது.

காலநிலை மாற்றத்தின் காரணமாக, உலகின் பல பகுதிகளில் மழைப்பொழிவு அதிகமாகவும், கடுமையாகவும் நிகழும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன.

திறந்த கடல் பரப்புகளில், கடல் மேற்பரப்பின் வெப்பநிலை அதிகரித்ததால், ஒளியைத் தடுக்கும் வகையில் பிளாங்க்டன்களின் அளவு அதிகரித்திருக்கலாம். இதுவும் கடல் கருமையடைய ஒரு காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

எந்தெந்த பகுதிகள் பாதிக்கப்படுகின்றன?

உலகளவில் கடலின் மேற்பரப்பு 2003 மற்றும் 2022ம் ஆண்டுகளுக்கு இடையில் எவ்வாறு மாறியுள்ளது என்பதை விளக்கும் படம். கடல் அடர் நிறமாவதை சிகப்பு நிறமும் அதன் பொலிவு குறைவதை நீல நிறமும் குறிக்கின்றன

பட மூலாதாரம்,UNIVERSITY OF PLYMOUTH

படக்குறிப்பு,உலகளவில் கடலின் மேற்பரப்பு 2003 மற்றும் 2022-ம் ஆண்டுகளுக்கு இடையில் எவ்வாறு மாறியுள்ளது என்பதை விளக்கும் படம். கடல் அடர் நிறமாவதை சிகப்பு நிறமும் அதன் சூரிய ஒளி அதிகரிப்பதை (lightening) நீல நிறமும் குறிக்கின்றன

கடலின் 9%க்கும் அதிகமான பகுதியில், அதாவது ஆப்பிரிக்கக் கண்டத்தின் பரப்பளவுக்குச் சமமான அளவில், 164 அடி (50 மீட்டர்) வரை ஒளி குறைந்திருப்பது குறித்து ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடலின் 2.6% பகுதியில், 328 அடி (100 மீ) வரை ஒளி குறைந்துள்ளது.

வளைகுடா நீரோடையின் மேற்பகுதியிலும், ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிக் ஆகிய மூன்று பகுதிகளிலும் ஃபோடிக் மண்டலத்தின் ஆழம் (கடலின் சூரிய ஒளி படரும் மேல் அடுக்கு) மாறிவிட்டது என்று அந்த ஆய்வு கூறுகிறது.

இந்த பகுதிகள் காலநிலை மாற்றத்தின் காரணமாக பெரியளவில் விளைவுகளை எதிர்கொள்கின்றன.

கரையோரப் பகுதிகள் மற்றும் பால்டிக் கடல் உட்பட சுற்றிலும் நிலப்பகுதிகளால் சூழப்பட்ட கடல்களிலும் கடல் அடர் நிறமடைந்துள்ளது.

ஆனால், கடலின் எல்லாப் பகுதிகளும் அடர் நிறமடையவில்லை என்று ஆய்வு கூறுகிறது.

அதே காலகட்டத்தில், சுமார் 10% கடல்பரப்பு அதிகமாக நிறம் மங்கியுள்ளது.

இந்த கலவையான சூழல், கடல் அமைப்புகளின் சிக்கலான தன்மையையும், நீரின் தெளிவை பாதிக்கும் பல காரணிகளையும் பிரதிபலிக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

துருக்கியின் இஸ்மிரில் பிளாங்க்டன் எனப்படும் தாவரங்களைப் போன்ற நுண்ணுயிர்கள் படர்ந்திருக்கும் காட்சி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,துருக்கியின் இஸ்மிரில் பிளாங்க்டன் எனப்படும் தாவரங்களைப் போன்ற நுண்ணுயிர்கள் படர்ந்திருக்கும் காட்சி

கடல் வாழ் உயிரினங்கள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன?

இந்த மாற்றங்கள் எதற்கு வழிவகுக்கின்றன என்பது குறித்து துல்லியமாக கூற முடியாத நிலையிலும், உலகின் பல கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் கடல்சார் சூழல்கள் பாதிக்கப்படக்கூடும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

"கடந்த 20 ஆண்டுகளில் கடலின் மேற்பரப்பு எவ்வாறு நிறம் மாறியுள்ளது என்பதைக் காட்டும் ஆராய்ச்சி உள்ளது. இது பிளாங்க்டன் மாற்றங்களின் விளைவாக இருக்கலாம்" என்று பல்கலைக்கழகத்தின் கடல் பாதுகாப்பு இணைப் பேராசிரியர் முனைவர் தாமஸ் டேவிஸ் தெரிவித்தார்.

"இதுபோன்ற மாற்றங்கள் பரவலான இருளை ஏற்படுத்துகின்றன என்பதற்கான ஆதாரங்களை எங்கள் முடிவுகள் வழங்குகின்றன. இதனால், சூரியன் மற்றும் சந்திரனைச் சார்ந்து உயிர்வாழ்ந்து, இனப்பெருக்கம் செய்யும் விலங்குகளுக்கு தேவைப்படும் கடலின் பரப்பளவு குறைகிறது".

நீரின் இந்த மேல் அடுக்கு பெரும்பாலான கடல்வாழ் உயிரினங்களின் வாழிடமாக இருக்கிறது.

இங்கு பைட்டோபிளாங்க்டன் எனப்படும் தாவரங்களைப் போன்ற நுண்ணுயிர்கள் ஒளிச்சேர்க்கை செய்கின்றன.

இவை உணவுச் சங்கிலியின் அடித்தளத்தை உருவாக்கும் முக்கிய உயிரினங்கள். ஒளிச்சேர்க்கைக்கு போதுமான சூரிய ஒளி தேவைப்படுவதால் அவை நீரின் மேற்பரப்புக்கு அருகில் காணப்படுகின்றன.

இதனால் பல கடல்வாழ் உயிரினங்கள் உணவு கிடைக்கும் ஒளி மண்டலங்களில் வேட்டையாடி இனப்பெருக்கம் செய்கின்றன.

வளிமண்டலத்தில் உள்ள ஆக்ஸிஜனின் பாதியை உருவாக்கும் பைட்டோபிளாங்க்டன்கள், கார்பன் சுழற்சி மற்றும் கடல் உயிர்வளத்துக்கும் அவசியமானவையாக உள்ளன.

'கவலைக்கு உண்மையான காரணம்'

ஜப்பானின் கனகாவா மாகாணத்தில் பசிபிக் பெருங்கடலில் பைட்டோபிளாங்க்டன் நிகழ்வு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஜப்பானின் கனகாவா மாகாணத்தில் பசிபிக் பெருங்கடலில் பைட்டோபிளாங்க்டன் நிகழ்வு

கடல் அடர் நிறமாவதால், மனிதர்கள் சுவாசிக்கும் காற்றுக்கும், அவர்கள் உண்ணும் மீனுக்கும், உலகின் காலநிலை மாற்றத்தை சரிசெய்யும் போராட்டத்துக்கும் பாதிப்பு உண்டாகும் என்று டேவிஸ் கூறுகிறார்.

"எங்கள் கண்டுபிடிப்புகள் கவலைக்கான உண்மையான காரணத்தைக் குறிக்கின்றன".

பிளைமவுத் மரைன் ஆய்வகத்தின் கடல் உயிரி வேதியியல் மற்றும் கண்காணிப்புகளுக்கான அறிவியல் தலைவரான பேராசிரியர் டிம் ஸ்மித் கூறுவதன் படி, அங்கு ஏற்படும் மாற்றங்களால் ஒளி தேவைப்படும் சில கடல் விலங்குகள் மேற்பரப்புக்கு நெருக்கமாக வரலாம். இதனால் உணவு மற்றும் பிற வளங்களுக்கான போட்டி அதிகரிக்கும்.

"இது முழு கடல் சுற்றுச்சூழல் அமைப்பில் அடிப்படையான மாற்றங்களை ஏற்படுத்தக் கூடும்" என்று பேராசிரியர் ஸ்மித் கூறினார்.

ஆய்வு எவ்வாறு மேற்கொள்ளப்பட்டது?

'Darkening of the global Ocean' என்ற ஆய்வுக்காக, ஆராய்ச்சியாளர்கள் மேம்பட்ட கடல் மாதிரியுடன் சேர்ந்து, சுமார் இருபது ஆண்டுகளுக்கான செயற்கைக்கோள் தரவுகளை ஆய்வு செய்தனர்.

நாசாவின் ஓஷன் கலர் வெப் தரவு, உலகப் பெருங்கடலை 9 கிலோமீட்டர் அளவுடைய பிக்சல்களாகப் பிரிக்கிறது. ஆராய்ச்சியாளர்கள் ஒவ்வொரு பிக்சலிலும் கடல் மேற்பரப்பில் நிகழும் மாற்றங்களை கண்காணிக்க, அந்தத் தரவு உதவியது.

அதே சமயம், கடல் நீரில் ஒளியை அளவிட உருவாக்கப்பட்ட அல்காரிதம் ஒவ்வொரு இடத்திலும் ஒளி மண்டலத்தின் ஆழத்தை கணக்கிட பயன்படுத்தப்பட்டது.

சூரிய மற்றும் சந்திர கதிர்வீச்சு மாதிரிகள் பகலிலும் இரவிலும் ஒளி நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் கடல் உயிரினங்களை எப்படி பாதிக்கக்கூடும் என்பதைக் கண்டறிய பயன்படுத்தப்பட்டன.

இரவு நேரத்தில் ஒளி அளவுகளில் ஏற்படும் மாற்றங்கள் பகல் நேரத்தை விட குறைவாக இருந்தன, ஆனால் அதுவும் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது என அந்த ஆய்வில் கண்டறியப்பட்டது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c5yx7d0yr10o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.