Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முருகன் வழிபாடு, தமிழ்நாடு அரசியல், பாஜக, திமுக, நாம் தமிழர், அதிமுக

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 15 நிமிடங்களுக்கு முன்னர்

மதுரையில் ஜூன் 22ஆம் தேதி மிகப்பெரிய முருகன் மாநாட்டை நடத்த இந்து முன்னணி திட்டமிட்டுள்ளது. இந்த மாநாட்டிற்கு, பா.ஜ.கவும் பிற இந்து அமைப்புகளும் ஆதரவளிக்கின்றன. மதுரையில் நிர்வாகிகள் மாநாட்டில் பேசிய அமித் ஷா முருகனை குறிவைத்து சில விஷயங்களையும் பேசியிருக்கிறார். முருகனை முன்வைத்து செய்யும் அரசியலுக்கு தமிழ்நாட்டில் பலன் இருக்குமா?

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமையன்று மதுரையில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்ட ஒரு கூட்டத்தில் பேசினார். அப்போது, திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என தி.மு.க. அழைப்பதாகவும் ஜூன் 22ஆம் தேதி மதுரையில் நடக்கும் முருகன் மாநாட்டில் அனைவரும் திரளாகக் கலந்துகொள்ள வேண்டுமென்றும் குறிப்பிட்டார்.

அமித் ஷா குறிப்பிடும் முருகன் மாநாட்டை, 'முருக பக்தர்கள் மாநாடு' என்ற பெயரில் இந்து முன்னணி ஜூன் 22ஆம் தேதி நடத்தவுள்ளது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு முழுவதும் இருந்து சுமார் 5 லட்சம் பேரை பங்கேற்க வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மதுரை பாண்டி கோவிலுக்கு அருகிலுள்ள அம்மா திடலில் இந்த மாநாட்டை நடத்த இந்து முன்னணி திட்டமிட்டிருக்கிறது.

இந்தத் திடலில் மாநாடு நடப்பதற்கு முன்பாகவே, அறுபடை வீடுகளின் மாதிரிகளை வைத்து பூஜைகளை நடத்தவும் பொது மக்களுக்குப் பிரசாதம் கொடுக்கவும் மாநாட்டு அமைப்பாளர்கள் திட்டமிட்டிருந்தனர். ஜூன் 10ஆம் தேதியில் இருந்து மாநாடு நடக்கும் ஜூன் 22ஆம் தேதிவரை இந்த நிகழ்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளனர். ஆனால், காவல் துறை இந்த நிகழ்வுகளுக்கு அனுமதி மறுத்துவிட்டது.

இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றக் கிளை, ஜூன் 12ஆம் தேதிக்குள் காவல்துறை முடிவெடுக்க வேண்டுமெனக் கூறியுள்ளது.

இந்த மாநாடு குறித்து தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், நாம் தமிழர், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

"மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு என்ற போர்வையில் இந்து சமய நம்பிக்கை உள்ள மக்களை பா.ஜ.க. தனது அரசியல் சுய லாபத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ளும் சதியில் ஈடுபட்டுள்ளது" என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது. தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓர் ஆண்டே இருக்கும் நிலையில், இந்த மாநாட்டை பா.ஜ.க. அரசியலுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் கருதப்படுகிறது.

தமிழ்நாடு அரசியலில் முருகன்

முருகன் வழிபாடு, தமிழ்நாடு அரசியல், பாஜக, திமுக, நாம் தமிழர், அதிமுக

பட மூலாதாரம்,L MURUGAN/X

படக்குறிப்பு,பா.ஜ.க 2020ஆம் ஆண்டில் இருந்து முருகனைப் பற்றிப் பேச ஆரம்பித்தது.

தமிழ்நாட்டில் முருகனை முன்வைத்து அரசியலை முன்னெடுப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு பல சந்தர்ப்பங்களில் இது நடந்துள்ளது.

சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி ஆரம்பத்தில் இருந்தே முருகனை முன்னிறுத்தி வருகிறது. 2015ஆம் ஆண்டு பிப்ரவரியில் முருகனை முன்னிறுத்தி வீரத்தமிழர் முன்னணி என்ற துணை அமைப்பை பழனியில் துவங்கினார் சீமான். இதற்கு அடுத்த மாதமே திருச்செந்தூர் முருகன் கோவிலில் தமிழில் வழிபாடு நடத்த வேண்டுமெனக் கோரி வீரத்தமிழர் முன்னணி பேரணி ஒன்றை நடத்தியது. 2016ஆம் ஆண்டில் இருந்து வேல் வழிபாடு என்ற பெயரில் தைப்பூச நாளில் விழா ஒன்றையும் அக்கட்சி நடத்தி வருகிறது.

பா.ஜ.கவை பொறுத்தவரை 2020ஆம் ஆண்டில் இருந்து முருகனைப் பற்றிப் பேச ஆரம்பித்தது. அந்த ஆண்டு ஜூலையில் கறுப்பர் கூட்டம் என்ற யுடியூப் சேனலில் முருகனைப் போற்றிப் பாடும் கந்த சஷ்டி கவசத்தை அவமதித்ததாக இந்து அமைப்புகளும் பா.ஜ.கவினரும் போராட்டம் நடத்தினர்.

இது தொடர்பானவர்களைக் கைது செய்ய வேண்டுமென சென்னை மாநகர காவல் ஆணையரிடம் பா.ஜ.க. புகார் அளித்தது. அந்த யுடியூப் சேனலை தடை செய்ய வேண்டுமெனக் கோரி போராட்டங்களையும் பா.ஜ.க. நடத்தியது. மேலும், அ.தி.மு.க., தி.மு.க. போன்ற கட்சிகள் இந்த விஷயத்தில் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டுமென்றும் அழுத்தம் கொடுத்தது. முடிவில் அந்த சேனலை சேர்ந்தவர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டனர். சிலர் குண்டர் சட்டத்தின் கீழும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கறுப்பர் கூட்டம் சர்ச்சையின் தொடர்ச்சியாக வேல் யாத்திரை ஒன்றை நடத்தப் போவதாக பா.ஜ.கவின் அப்போதைய மாநிலத் தலைவர் எல். முருகன் அறிவித்தார். நவம்பர் 6ஆம் தேதி திருத்தணியில் துவங்கி, டிசம்பர் 6ஆம் தேதி திருச்செந்தூரில் இந்த யாத்திரையை முடிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.

அந்தத் தருணத்தில் கொரோனா பரவல் இருந்ததால், அந்த யாத்திரைக்கு தமிழ்நாடு அரசு அனுமதி மறுத்தது. கூட்டணிக் கட்சியாக இருந்தும் வேல் யாத்திரைக்கு அ.தி.மு.க. அரசு அனுமதி மறுத்தது அந்தத் தருணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இருந்தபோதும் நவம்பர் 6ஆம் தேதி சென்னையில் இருந்து திருத்தணிக்குப் பெரும் ஊர்வலமாகப் புறப்பட்டார் எல். முருகன். இதை காவல்துறை தடுத்து நிறுத்தி, பிறகு சில வாகனங்களுடன் அனுமதித்தது.

பின்னர் திருத்தணியில் இருந்து தனது வேல் யாத்திரையைத் தொடங்கிய முருகனை காவல்துறை கைது செய்தது. இதுபோல, தினமும் வேல் யாத்திரை செய்ய முருகன் முயல்வதும், கைது செய்யப்படுவதும் தொடர்ந்து நடந்தது. முடிவில் டிசம்பர் 6ஆம் தேதி திருச்செந்தூரில் நிறைவு மாநாட்டை நடத்தினார். இதில் அப்போதைய மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

முருகன் வழிபாடு – ஆன்மீகமா? அரசியலா?

முருகன் வழிபாடு, தமிழ்நாடு அரசியல், பாஜக, திமுக, நாம் தமிழர், அதிமுக

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,திருப்பரங்குன்றம் மலையின் ஒருபுறம் முருகன் கோவில் உள்ளது, மறுபுறம் சிக்கந்தர் பாதுஷா தர்கா அமைந்துள்ளது.

"வீரத் தமிழர் முன்னணி மூலம் முதன்முதலில் முருகனை முன்னிறுத்தியது நாங்கள்தான். திருமுருகப் பெருவிழா என்ற விழாவை ஒவ்வோர் ஆண்டும் நடத்துகிறோம். முருகன் ஒரு கடவுள் என்பதற்காக அல்ல, அவன் எங்கள் முப்பாட்டன், எங்கள் முன்னோர் என்று கூறி இதை நடத்தி வருகிறோம். இதற்கும் தேர்தல் அரசியலுக்கும் சம்பந்தமில்லை" என்கிறார் நாம் தமிழர் கட்சியின் சர்வதேச செய்தித் தொடர்பாளரான சே. பாக்கியராசன்.

இப்போது பா.ஜ.கவும் அதைத்தான் சொல்கிறது. "இதை நாங்கள் தேர்தல் அரசியலுக்காகச் செய்யவில்லை. காலங்காலமாக இந்து சமயத்தினர் நம்பும் ஒரு கோவிலில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் அசைவ உணவை அருந்தினார். அவர் மீது தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், அப்படிச் செய்யவில்லை.

தமிழ்நாட்டை ஆளும் கட்சி, இந்து சமயத்திற்கு எதிரான கட்சியாக இருக்கிறது. இதனால், இஸ்லாமியர்களின் வாக்கு மொத்தமாக தி.மு.க-வுக்கு விழுகிறது. இந்தச் சூழலில் சாதாரணமான எதிர்ப்புக்கெல்லாம், அரசு மசிவதாக இல்லை. ஆகவே, தமிழ்நாட்டில் அதிகமாக வழிபடக்கூடிய தெய்வமான முருகனை முன்வைத்து எதிர்ப்பு தெரிவிக்கிறோம்" என்று தெரிவித்தார் பா.ஜ.கவின் மாநிலப் பொறுப்பாளரான எஸ்.ஆர். சேகர்.

மேலும், "கோடிக்கணக்கான முருக பக்தர்கள் இருக்கிறார்கள். அந்த பக்தர்கள் மூலமாக எதிர்ப்பைக் காண்பிக்கலாம் எனக் கருதுகிறோம். இந்த எதிர்ப்பை பா.ஜ.கவும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் முன்னெடுத்துச் செய்வதால் அரசியலாகப் பார்க்கப்படுகிறது" என்று குறிப்பிட்டார்.

அதோடு, அரசியல் கட்சியான தாங்கள் இதைச் செய்ய வேண்டியிருப்பதற்குக் காரணமாக "இந்து சமயத்தில் இப்படி எதிர்ப்புகளை முன்னெடுத்துச் செல்ல ஆட்கள் இல்லை. தமிழ்நாட்டில் இருக்கும் மடாதிபதிகளையும் சங்கங்களையும் இதன் மூலம் ஒன்றிணைக்க நினைக்கிறோம். இந்த மாநாடு இந்த சமய அவமானத்தைத் துடைக்கும் மாநாடு. இந்த மாநாட்டின் மூலம் இந்துக்களை ஒருங்கிணைக்க முடியும் என நினைக்கிறோம்" என்றார் எஸ்.ஆர். சேகர்.

இந்த மாநாட்டின் மூலம் எவ்வித தேர்தல் லாபத்தையும் இலக்கு வைக்கவில்லை என்றும், இந்து உரிமைகளைப் பெறுவதுதான் நோக்கம் என்றும் கூறுகிறார் அவர். "ஆனால், இதன் விளைவு அரசியல் ரீதியாக பா.ஜ.கவுக்கு சாதகமாக இருக்கலாம்" எனத் தெரிவித்தார் எஸ்.ஆர். சேகர்.

ஆனால், இதற்கு முந்தைய இதுபோன்ற முயற்சிகளுக்கு அப்படி எந்தச் சாதகமான விளைவும் கிடைக்கவில்லை. 2021ஆம் ஆண்டின் சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பாக பா.ஜ.க. முருகனை முன்னிறுத்தி வேல் யாத்திரையை நடத்தியும்கூட, 2021ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அக்கட்சிக்குப் பெரிய வெற்றி கிடைக்கவில்லை. அ.தி.மு.கவின் கூட்டணியில் 20 இடங்களில் போட்டியிட்ட அக்கட்சியால் நான்கு இடங்களையும் 2.62 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது.

பாக்கியராசனும் இதையேதான் கூறுகிறார். "தமிழ்நாட்டு மக்கள் இது போன்ற விஷயங்களை தேர்தலோடு இணைத்துப் பார்ப்பதில்லை. அரசியல் வேறு, ஆன்மீகம் வேறு என்றுதான் இருக்கிறார்கள். மதம் சார்ந்த செயல்பாடுகள் ஒருபோதும் தேர்தலில் எதிரொலித்தது இல்லை. ஒரு சில தொகுதிகளில் மதம் சார்ந்த நிகழ்வுகள் தாக்கத்தை ஏற்படுத்தலாம். மாநிலம் தழுவிய அளவில் மதம் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை. மதத்தையும் அரசியலையும் இணைப்பதை தமிழ்நாடு மக்கள் ஒருபோதும் விரும்பியதில்லை" என்று கூறினார்.

முருகன் வழிபாடு பாஜகவுக்கு பலன் தருமா?

முருகன் வழிபாடு, தமிழ்நாடு அரசியல், பாஜக, திமுக, நாம் தமிழர், அதிமுக

படக்குறிப்பு,மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்

திருப்பரங்குன்றம் விவகாரத்தை உள்ளூர்க்காரர்களே பெரிதாக விரும்பாத நிலையில், பா.ஜ.க. அதைக் கையில் எடுத்திருப்பதால் எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ப்ரியன்.

அதுகுறித்து விரிவாகப் பேசியபோது, "பா.ஜ.கவை பொறுத்தவரை பொதுவாக ராமரை முன்வைத்து அரசியல் செய்வதாகக் கருதப்பட்டாலும், ஒவ்வொரு மாநிலத்திலும் எந்தக் கடவுள் பிரபலமாக இருக்கிறாரோ, அந்தக் கடவுளை முன்னிறுத்தவும் பா.ஜ.க. முயல்வதுண்டு. ஒடிசாவுக்கு சென்றால் ஜெய் ஜெகன்னாத் என்பார்கள். கொல்கத்தாவுக்கு சென்றால் ஜெய் துர்கா என்பார்கள். தமிழ்நாட்டில் முருகனை தூக்கிப் பிடிப்பார்கள். ஆனால், இதற்கெல்லாம் பலன் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். ராமர் கோவிலைக் கட்டிய பிறகும் உத்தர பிரதேசத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. அதன் காரணமாகவே பெரும்பான்மை கிடைக்காமல் போய்விட்டது," என்று விளக்கினார்.

மேலும், தமிழ்நாட்டில், கறுப்பர் கூட்டம் வீடியோவை வைத்து வேல் யாத்திரையெல்லாம் சென்றும் 2021 தேர்தலில் எந்தப் பலனும் கிடைக்கவில்லை என்பதைக் குறிப்பிட்ட ப்ரியன், தற்போதும் திருப்பரங்குன்றத்தை முன்வைத்துச் செய்யும் அரசியலுக்கும் எந்தப் பலனும் கிடைக்காது என்கிறார்.

"அங்கே பெரிய கூட்டத்தைக் கூட்டலாம். அவர்கள் எல்லாம் ஏற்கெனவே பா.ஜ.கவில் இருப்பவர்கள்தான். முருகனைக் காப்பாற்றப் போகிறார்கள், திருப்பரங்குன்றம் மலையைக் காப்பாற்றப் போகிறார்கள் என யாரும் புதிதாக அந்தக் கூட்டத்தில் இணையப் போவதில்லை. உள்ளூர்வாசிகளே இதை ரசிக்க மாட்டார்கள்" என்கிறார் ப்ரியன்.

தமிழ்நாட்டில் தோன்றும் முருகனின் பிரமாண்ட சிலைகள்

முருகன் வழிபாடு, தமிழ்நாடு அரசியல், பாஜக, திமுக, நாம் தமிழர், அதிமுக

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,மலேசியாவில் உள்ள பிரமாண்ட முருகன் சிலை (கோப்புப் படம்)

இவையெல்லாம் ஒருபுறமிருக்க கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டில் முருகனுக்கு பிரம்மாண்டமான அளவில் சிலை வைக்கும் போக்கும் தொடங்கியுள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டில் சேலம்-உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலையில், வாழப்பாடிக்கு அருகிலுள்ள புத்திரகவுண்டன்பாளையத்தில் 146 அடி உயரத்தில் பிரமாண்டமான முருகன் சிலை நிறுவப்பட்டது.

சில நாட்களுக்கு முன்பாக, வேலூர் தீர்த்தகிரி வடிவேல் சுப்பிரமணியர் கோவிலில் 92 அடி உயரத்தில் முருகன் சிலை அமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதற்கிடையில் மருதமலை கோவிலில் 160 அடி உயரத்தில் கற்களால் ஆன முருகன் சிலையை பிரதிஷ்டை செய்வது குறித்து ஆய்வு நடந்து வருவதாகவும் அப்படி ஒரு சிலை அமையும்பட்சத்தில் அந்தச் சிலை ஆசியாவிலேயே மிக உயரமான முருகன் சிலையாக இருக்கும் எனவும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்திருக்கிறார்.

இதுபோல முருகனுக்கு ஒரு பிரமாண்டமான சிலையை வைப்பது மலேசியாவில்தான் நடந்தது என்கிறார் முருகன் வணக்கத்தின் மறுபக்கம் என்ற நூலின் ஆசிரியரான சிகரம் ச. செந்தில்நாதன்.

மலேசியாவில் உள்ள பட்டு மலையின் (Batu Caves) அடிவாரத்தில் 2006ஆம் ஆண்டில் 140 அடி உயரத்திற்கு ஒரு முருகன் சிலை அமைக்கப்பட்டது. இந்தச் சிலை அமைக்கப்பட்டபோது உலகிலேயே மிகப்பெரிய முருகன் சிலையாக இது அடையாளம் காணப்பட்டது.

இந்த நிலையில்தான் தற்போது தமிழ்நாட்டிலும் இதுபோல மிகப்பெரிய அளவில் முருகன் சிலைகளை வைக்கும் போக்கு துவங்கியிருக்கிறது. ஆனால், இது மரபு அல்ல என்கிறார் சிகரம் ச. செந்தில்நாதன்.

"தமிழ்நாட்டில் கோபுரங்களைத்தான் பெரிதாகக் கட்டுவார்கள். சிலைகளை இப்படிப் பெரிதாக வைக்கும் வழக்கம் கிடையாது. சிலைகளை இப்படிப் பெரிதாக வைத்தால், அவற்றுக்கு ஆராதனை செய்வது சிக்கலாகிவிடும். இவ்வளவு பெரிய சிலைகள் குறித்து எந்த ஆகமத்திலும் குறிப்பிடப்படவில்லை" என்கிறார் அவர்.

முருகன் வழிபாடு, தமிழ்நாடு அரசியல், பாஜக, திமுக, நாம் தமிழர், அதிமுக

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கோப்புப் படம்

ஆன்மீகப் பேச்சாளரான சுகி சிவமும் இந்தப் போக்கு சரியானதல்ல என்கிறார்.

"மரபுகளோ சிந்தனையோ இப்போது தேவையில்லை என்றாகிவிட்டது. ஆகம விதிகளின்படி, ஒரு சிலை எந்த அளவுக்கு இருக்கிறதோ அந்த அளவுக்கு நெய்வேத்தியம் செய்ய வேண்டும். இவ்வளவு பெரிய சிலைக்கு அப்படிச் செய்ய முடியுமா? ஆனால், அந்தக் கணக்கெல்லாம் இப்போது யாருக்கும் தேவையில்லை என்றாகிவிட்டது.

கூட்டமும் சுற்றுலா மூலம் கிடைக்கும் வருவாயும் போதுமென்று நினைக்கிறார்கள். மதம் இப்போது அரசியல்வாதிகளாலும் வியாபாரிகளாலும் கைப்பற்றப்பட்டுவிட்டது. இதெல்லாம் தவறு எனச் சொல்ல வேண்டியவர்கள்கூட இதனால் பேசாமல் இருக்கிறார்கள்" என்கிறார் சுகி சிவம்.

முருகனுக்கான முக்கியத்துவம் மீண்டும் அதிகரிக்கிறதா?

தமிழ்நாட்டில் மிக நீண்ட காலமாக முருகனை வழிபடும் மரபு இருக்கிறது. சங்க இலக்கிய நூல்களில் பிற்காலத்தைச் சேர்ந்த நூலான பரிபாடலில் திருப்பரங்குன்றத்தில் முருகனை வழிபடுவது குறித்த செய்திகள் இருப்பதை நா. வானமாமலை தனது 'பரிபாடலில் முருக வணக்கம்' நூலில் சுட்டிக்காட்டுகிறார். இதற்குப் பிறகு வட இந்திய வழிபாட்டு மரபுகளின் தாக்கம் ஏற்பட்டது என்கிறார் நா. வானமாமலை.

"ஆனால், அதற்குப் பிறகு தேவார காலத்தில் முருக வழிபாடு பின்னால் சென்றுவிட்டது. சோழர்கள் முழுக்க முழுக்க சிவன் வழிபாட்டைத்தான் முன்னெடுத்தார்கள். சிவனுடைய மகன் என்ற வகையில்தான் முருகன் வழிபடப்பட்டார். பிறகு நாயக்கர் காலத்தில் அருணகிரிநாதர்தான் மீண்டும் முருகன் வழிபாட்டிற்கு முக்கியத்துவம் அளித்தார்.

நாயக்கர் காலத்தில் சமஸ்கிருதம் மற்றும் தெலுங்கு மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டபோது, மீண்டும் முருகனுக்கு முக்கியத்துவம் அளித்தார் அவர். சிவன் கோவில்கள் பிராமணர்களின் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில், தமிழ்க் கடவுளாக முருகன் முன்னிறுத்தப்பட்டார்" என்கிறார் ச. செந்தில்நாதன்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cgq3d4lg755o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.