Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நொய்யல் ஆறு, கோவை, நொய்யல், நதி

படக்குறிப்பு, மசவரம்பு ஓடை

கட்டுரை தகவல்

  • எழுதியவர், சேவியர் செல்வகுமார்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

கோவை மாவட்டம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் பிறந்து கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்கள் என 180 கி.மீ தூரம் பயணித்து, கரூர் மாவட்டத்தில் நொய்யல் என்ற கிராமத்தில் காவிரி ஆற்றில் கலக்கிறது நொய்யல் நதி. இந்த பயண தூரத்தில் வன விலங்குகளுக்கு நீர் ஆதாரமாகவும், வேளாண் நிலங்களுக்கு உயிர்நாடியாகவும், மக்களுக்கு வாழ்வாதாரமாகவும் விலங்கும் நொய்யல் நதி சந்திக்கும் சவால்கள் ஏராளம்.

நொய்யலுக்கு ஆதாரமாக விளங்கும் நீர் வீழ்ச்சிகளில் முதன்மையானது கோவைக் குற்றாலம் நீர் வீழ்ச்சி. இது கோவை மாவட்டத்தின் முக்கியமான சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது.

நொய்யல் ஆறு, கோவை, நொய்யல், நதி

படக்குறிப்பு,நண்டங்கரை ஓடை

மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து புறப்பட்டு வரும் பல இயற்கை நீரோடைகள் இந்நதியின் முக்கியமான நீர் ஆதாரங்களாக உள்ளது. அத்தகைய ஓர் ஓடை தான் மசவரம்பு ஓடை.

நொய்யலின் மற்றுமொரு முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது நண்டங்கரை ஓடை. அதன் குறுக்கே ஒரு தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இதுவே நொய்யலின் ஆற்றில் அமைந்துள்ள முதல் நீர்த்தேக்கமாகும். காட்டுப்பகுதியிலுள்ள யானை, புலி, சிறுத்தைப்புலி உள்ளிட்ட பல்வேறு காட்டுயிர்களுக்கு தாகம் தணிக்கும் நீர்நிலையாகவும் உள்ளது.

இவ்வாறு நீர்வீழ்ச்சிகளாக, காட்டாறாக, சிற்றோடைகளாக பயணித்து, பரிணமித்து வரும் நொய்யல் நதியாக உருவெடுக்கும் இடம் இந்த கூடுதுறைதான். (நொய்யலுக்கு காஞ்சிமா நதி, பெரியாறு என்றும் பெயர்கள் இருப்பதாகச் சொல்கிறது பேரூர் புராணம்)

நொய்யல் ஆறு, கோவை, நொய்யல், நதி

படக்குறிப்பு,முன்னோர்களுக்கு மக்கள் பேரூர் படித்துறையில் தர்ப்பணம்

பெரு மழை காலங்களின்போது நொய்யலில் வழிந்தோடும் நீர் வெள்ளம் போல காட்சியளிக்கும். நொய்யல் வழித்தடத்தில் அமைந்துள்ள அடுத்த நீர்த்தேக்கமான சித்திரைச்சாவடி அணைக்கட்டைத் தாண்டிப் பெருவெள்ளம் நொய்யல் நதி பாய்ந்தோடும்.

நொய்யல் ஆறு, கோவை, நொய்யல், நதி, கோவை குற்றாலம்

படக்குறிப்பு,கோவைக் குற்றாலம் நீர்வீழ்ச்சி

வனப்பகுதி மற்றும் வனத்தை ஒட்டிய இடங்களில் பயணிக்கும் வரை தெளிந்த நீரோடையாக உள்ள நொய்யல் நதி கோவையின் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்தபின்பு தான் பிளாஸ்டிக் குப்பைகள் உள்ளிட்ட திடக்கழிவுகள் சுமந்து செல்லும் வடிகாலாக மாறுகிறது.

இங்கிருந்து சாய ஆலைகள், தங்க நகைப்பட்டறைகள் மற்றும் வீடுகளிலிருந்து வரும் கழிவுகள் அனைத்தும் கலக்கத்துவங்குகின்றன.

நொய்யல் ஆறு, கோவை, நொய்யல், நதி, கோவை குற்றாலம்

படக்குறிப்பு,சித்திரைச்சாவடி அணைக்கட்டு

நதி என்பது மக்களின் வாழ்வில் பல வழிகளில் பின்னிப்பிணைந்திருக்கிறது. சாக்கடையும் குப்பையும் கலந்து கால்வாயாக ஓடிவரும் நொய்யல் ஆற்றில் தங்கள் முன்னோர்களுக்கு மக்கள் பேரூர் படித்துறையில் தர்ப்பணம் செய்வது வழக்கமாக உள்ளது.

கோவை நகருக்குள் அமைந்துள்ள நொய்யல் வழித்தடம் புதர் மண்டி, கழிவுநீர் கலந்து, ஆக்கிரமிப்புக் கட்டடங்களால் குறுத்து, கருத்து சாக்கடை நதியாக உருமாறுகிறது.

சாய ஆலை உள்ளிட்ட நிறுவனங்களின் ரசாயனக் கழிவுகளால் பெரும்பாலும் நொய்யல் ஆற்றில்தான் கலக்கின்றன. இதனால் ஆற்றின்போக்கில் அவ்வப்போது நுரை ஏற்பட்டு காணப்படும்.

நொய்யல் ஆறு, கோவை, நொய்யல், நதி, கோவை குற்றாலம்

படக்குறிப்பு,ஆற்றின்போக்கில் அவ்வப்போது நுரை ஏற்பட்டு காணப்படும்

கோவை நகரில் நொய்யல் பாயும் முக்கியக் குளமான குமாரசாமி குளத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் ஆக்கிரமிப்பு வீடுகள் இருந்தன. நொய்யல் நதியை மீட்பதற்காக கடந்த 2003 ஆம் ஆண்டில் 'சிறுதுளி' என்கிற அமைப்பு துவக்கப்பட்டது.

நொய்யலில் ஏற்பட்டு வரும் மாசுபாடு பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2005 ஆம் ஆண்டு, கோவையிலுள்ள ஏராளமான அமைப்புகள், பொது மக்கள் இணைந்து பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற மாபெரும் பேரணி ஒன்றும் நடந்தது.

நொய்யல் ஆறு, கோவை, நொய்யல், நதி, கோவை குற்றாலம்

படக்குறிப்பு,கோவை நகருக்குள் அமைந்துள்ள நொய்யல் வழித்தடம், புதர் மண்டி, கழிவுநீர் கலந்து, கருத்து சாக்கடை நதியாக உருமாறுகிறது

கோயம்புத்துார் கன்ஸ்யூமர் காஸ் அமைப்பு, நொய்யல் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவு காரணமாக, கடந்த 2015, 2016 ஆகிய ஆண்டுகளில், கோவை நகரிலுள்ள நொய்யல் குளங்களில் வாலாங்குளம், குமாரசாமி குளம் உள்ளிட்ட பல குளங்களில் இருந்த பல ஆயிரம் ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.

அங்கு வாழ்ந்தோர்க்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மற்றும் கோவை மாநகராட்சி சார்பில் மாற்று வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளன.

தமிழக அரசு மற்றும் சிறுதுளி இணைந்து மேற்கொண்ட முயற்சியால், கோவை நகரிலுள்ள அனைத்து நொய்யல் குளங்களும் துார் வாரப்பட்டன. பல வாரங்களாக ஞாயிறுதோறும் நடந்த இந்தப் பணியில் பல்லாயிரக்கணக்கான பொது மக்களும், தொழில் மற்றும் சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், மாநகர காவல்துறையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பங்கேற்றனர்.

நொய்யல் ஆறு, கோவை, நொய்யல், நதி, கோவை குற்றாலம்

பட மூலாதாரம்,SIRUTHULI

படக்குறிப்பு,முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நேரில் பார்வையிட்டிருந்தார்

ஊர் கூடி துார் வாரிய குளங்களை, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நேரில் பார்வையிட்டிருந்தார். அப்போது ஊரணியைக் காக்க ஓரணியில் மக்கள் திரள வேண்டுமென்று என்றும் கூறியிருந்தார் கலாம்.

நொய்யல் வழித்தடங்கள் மீட்கப்பட்டு, குளங்கள் துார் வாரப்பட்டதால் நொய்யல் ஆற்றில் மழைக்காலங்களில் மீண்டும் வெள்ளம் பெருக்கெடுத்து குளங்களை நிரப்பியது. இதனால் 1990 களில் கோவை நகரில் அதல பாதாளத்தில் இருந்த நிலத்தடி நீர் மட்டம் மேலே உயர்ந்தது.

நொய்யல் ஆறு, கோவை, நொய்யல், நதி, கோவை குற்றாலம்

படக்குறிப்பு,அல்லி பூத்திருக்கும் கோளரம்பதி குளம் ஆகியவையே சாட்சி

ஆனால் நொய்யல் கோவை நகருக்குள் பாய்வதற்கு முன்பாகத்தான் அது பயன்பாட்டுக்கும் பாசனத்துக்கும் உரிய தண்ணீராக இருக்கிறது என்பதற்கு கோவை நகருக்கு வெளியே அமைந்துள்ள வேடபட்டி புதுக்குளம் மற்றும் அல்லி பூத்திருக்கும் கோளரம்பதி குளம் ஆகியவையே சாட்சி.

நகருக்கு வெளியிலுள்ள குளங்களில் செந்நீராக வேளாண் நிலத்தில் பாய்ந்து, அல்லியை பூக்க வைக்கும் நொய்யல் ஆற்றின் நீர்தான், கோவை நகருக்குள் முதலில் அமைந்துள்ள கிருஷ்ணாம்பதி மற்றும் குமாரசாமி குளங்களில் கருப்பு நீராக கண்களை அச்சுறுத்துகிறது. துர்நாற்றத்தால் மக்களைத் துரத்தியடிக்கிறது.

நொய்யல் ஆறு, கோவை, நொய்யல், நதி, கோவை குற்றாலம்

படக்குறிப்பு,கோவை நகருக்குள் கருப்பு நீராக உள்ள நீர்

கோவை நகரின் கழிவுநீரையும், குப்பைகளையும் சுமந்தபடி, பல்வேறு குளங்களைக் கடந்து, கூடுதலாக சாயக்கழிவு மற்றும் ரசாயனக் கழிவுகளையும் சேர்த்துக் கொண்டு திருப்பூர் நகரில் கருப்பு ஆறாக பாயும் நொய்யல் நதி.

கழிவு நீராக காட்சியளிக்கும் 9 குளங்களில்தான், மத்திய–மாநில அரசுகள் இணைந்து நிறைவேற்றும் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் ரூ.475 கோடி மதிப்பில் சாலையோரப் பூங்கா, படகுக் குழாம், நடைபாதை, ஜிப் லைன் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களை கோவை மாநகராட்சி நிர்வாகம் ஏற்படுத்தியுள்ளது.

நொய்யல் ஆறு, கோவை, நொய்யல், நதி, கோவை குற்றாலம், திருப்பூர்

படக்குறிப்பு,திருப்பூர் நகரில் கருப்பு ஆறாக பாயும் நொய்யல் நதி.

திருப்பூர் ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கான சாய ஆலைக் கழிவுகளால் முன்பு நொய்யல் பெருமளவில் பாழ்பட்டு வந்தது. தற்போது 18 பொது சுத்திகரிப்பு நிலையங்கள் (C.E.T.P.) வாயிலாக 340 சாய ஆலைகளின் கழிவுகளும், 100 சாயஆலைகளில் உள்ள தனிப்பட்ட சுத்திகரிப்பு நிலையங்களில் (I.E.T.P.) அந்த ஆலைகளின் கழிவுகளும் சுத்திகரிக்கப்பட்டு வருவதால் சாய ஆலைக் கழிவு கலப்பது குறைந்துவிட்டதாக திருப்பூர் தொழில் அமைப்புகள் கூறுகின்றன.

ஆனால் கோவை, திருப்பூர் உள்ளிட்ட நகரங்கள் மற்றும் வழியோர கிராமங்களில் வீடுகளிலிருந்து வரும் கழிவுநீர் மற்றும் அனுமதியற்ற சாயஆலைகள், தொழிற்சாலைகளின் கழிவுநீர் கலப்பதை யாரும் மறுப்பதற்கில்லை. இவையனைத்தும் சேர்ந்தே நொய்யலை சாக்கடை ஆறாக உருமாற்றியுள்ளன.

நொய்யல் ஆறு, கோவை, நொய்யல், நதி, கோவை குற்றாலம், திருப்பூர்

படக்குறிப்பு,ஈரோடு மாவட்டம் ஒரத்துப்பாளையத்தில் நொய்யலின் குறுக்கே கட்டப்பட்ட அணை

இதுதான் ஈரோடு மாவட்டம் ஒரத்துப்பாளையத்தில் நொய்யலின் குறுக்கே கட்டப்பட்ட அணை. கடந்த 1992 ஆம் ஆண்டில் ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்தபோது இந்த அணை திறக்கப்பட்டது. அப்போது திருப்பூர் சாயஆலைக் கழிவு பிரச்னை உச்சத்தில் இருந்தது. அங்கிருந்து சாயஆலைக் கழிவுநீருடன் கலந்து வந்த நொய்யல் ஆற்று நீர், இந்த அணையில் தேக்கப்பட்டது.

மொத்தம் 10,375 ஆயிரம் ஏக்கர் பரப்பில் பாசனத்துக்குப் பயன் பெறும் என்று நம்பிக் கட்டப்பட்ட அணை, விவசாயிகளுக்கு அச்சுறுத்தலாக மாறியது. வழக்கமாக அணை நீரைத் திறக்கச்சொல்லி விவசாயிகள் போராடுவார்கள். ஆனால் முற்றிலும் முரணாக இந்த அணையைத் திறக்க வேண்டாம் என்று அணைக்குக் கீழேயுள்ள விவசாயிகள் போராடினர். அணையில் நீர் தேங்கியிருந்தால் தங்களுடைய பகுதியில் நிலத்தடி நீர் விஷமாகும் என்று மேலேயுள்ள விவசாயிகள், அணையைத் திறந்து விடச்சொல்லி போராடினார்கள். இறுதியில் அணையில் நீரைத் தேக்கக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

நொய்யல் ஆறு, கோவை, நொய்யல், நதி, கோவை குற்றாலம், ஈரோடு

படக்குறிப்பு,காவிரி ஆற்றுடன் நொய்யல் ஆறு கலக்கும் இடத்தில் ஒரு சாக்கடைக் கால்வாய் போலவே காட்சியளிக்கிறது.

தற்போது இந்த அணையில் உள்ள நீரின் மாசுத்தன்மை தினமும் அளவிடப்படுகிறது. அணையின் நீர் மட்டம், கொள்ளளவு, மழையளவு மற்றும் உப்புத்தன்மை (TDS‌ ) ஆகியவற்றை நீர்வள ஆதாரத்துறை தினமும் காலை 6 மணிக்கு வெளியிடுகிறது. ஜூன் 11 அன்று இத்துறை வெளியிட்ட தகவலின்படி, மொத்தம் 39.37 அடி உயரமுள்ள அணையில் 3.48 அடிக்கு மட்டுமே அதாவது 5.6 மில்லியன் கன அடி (மொத்த கொள்ளளவு 616 mcft) அளவுக்கு தண்ணீர் நிற்கிறது. நீரின் டிடிஎஸ் அளவு 1180 என்ற நிலையில் இருந்தது.

நொய்யல் ஆற்றின் 180 கி.மீ. துார பயணத்தின் இறுதி நிலை இதுதான். மேற்குத் தொடர்ச்சி மலையில் பிறந்த நொய்யல் நகரமயமாக்கலின் எல்லாத் தாக்குதல்களையும் தாங்கி, சாக்கடை நதியாகி, இங்கே ஒரு ஓடையாகக் குறுகிவிடுகிறது. கரூர் மாவட்டம் நொய்யல் என்ற கிராமத்தில் காவிரி ஆற்றுடன் நொய்யல் ஆறு கலக்கும் இந்த இடத்தில் ஒரு சாக்கடைக் கால்வாய் போலவே காட்சியளிக்கிறது நொய்யல்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c1dew712nlvo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.