Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இரான், அமெரிக்கா, இஸ்ரேல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், மட் மர்ஃபி, தாமஸ் ஸ்பென்சர் & அலெக்ஸ் முர்ரே

  • பதவி, பிபிசி வெரிஃபை

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

கடந்த 3 நாட்களில் அமெரிக்க தளங்களில் இருந்து குறைந்தது 30 அமெரிக்க ராணுவ விமானங்கள், ஐரோப்பாவுக்கு இட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, பிபிசி வெரிஃபையால் ஆராயப்பட்ட விமான கண்காணிப்பு தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்த விமானங்கள் அனைத்தும் போர் விமானங்கள் மற்றும் வானிலிருந்து குண்டுகளை வீச பயன்படுத்தப்படும் விமானங்களுக்கு (bombers) வானிலேயே எரிபொருளை நிரப்புவதற்கு பயன்படுத்தப்படும் டேங்கர் விமானங்களாகும். இவற்றில் கேசி-135 (KC-135) வகையை சேர்ந்த குறைந்தது 7 விமானங்கள், ஸ்பெயின், ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்து ஆகியவற்றில் உள்ள அமெரிக்க தளங்களில் சிறிது நேரம் நின்று சென்றன.

கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேல் இரான் மீது தாக்குதல் நடத்திய பிறகு, இரு நாடுகளும் பரஸ்பரம் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. இரானின் அணுசக்தி திட்டத்தை அழிப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இஸ்ரேல் கூறிவருகிறது. இந்த பின்னணியில் தான் அமெரிக்க போர் விமானங்களின் நகர்வு நடந்துள்ளது.

அமெரிக்க போர் விமானங்கள் இடம்பெயர்ந்துள்ளதற்கும் இந்த மோதலுக்கும் நேரடியாக தொடர்பு உள்ளதா என்பது தெளிவாக தெரியவில்லை. ஆனால், பிபிசி வெரிஃபையிடம் பேசிய நிபுணர் ஒருவர், டேங்கர் விமானங்களின் இடப்பெயர்வு "மிகவும் வழக்கத்துக்கு மாறானது" என்றார்.

எதற்காக இந்த நடவடிக்கை?

ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிட்யூட் (Rusi) எனும் சிந்தனை மையத்தை சேந்த மூத்த ஆய்வாளர் ஜஸ்டின் பிராங்க் கூறுகையில், அப்பிராந்தியத்தில் வரும் வாரங்களில் ஏற்படும் "தீவிரமான எதிர் நடவடிக்கைகளுக்கான" அவசரகால திட்டங்களை தயார் நிலையில் வைப்பதற்காக அமெரிக்கா இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கலாம் என தோன்றுவதாக தெரிவித்தார்.

பிபிசி வெரிஃபையால் கண்காணிக்கப்பட்ட 7 விமானங்களும் இடமாற்றம் செய்யப்பட்டதற்கு பின்னர், செவ்வாய்க்கிழமை பிற்பகல் நிலவரப்படி சிசிலிக்கு கிழக்கே பறந்ததை விமான கண்காணிப்பு தரவுகள் காட்டுகின்றன. அவற்றில், 6 விமானங்கள் எங்கு சென்றன என்பது தெரியவில்லை, ஒரு விமானம் கிரேக்கத் தீவான க்ரீட்டில் தரையிறங்கியது.

அயர்லாந்து பாதுகாப்புப் படைகளின் முன்னாள் தலைவர், வைஸ் அட்மிரல் மார்க் மெல்லெட் கூறுகையில், "இரானுடனான அணுசக்தி பேச்சுவார்த்தைகளில் தனக்கு அனுகூலத்தை ஏற்படுத்துவதற்கான வியூக ரீதியான விரிவான திட்டத்தின் ஒரு பகுதியாக அமெரிக்காவின் இந்த நடவடிக்கை இருக்கலாம்" என்றார்.

கடந்த வெள்ளிக்கிழமை, இரானிய அணுசக்தி கட்டமைப்பின் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது. அணுசக்தித் திட்டத்தை நிறுத்தி வைப்பதற்கான ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரானுக்கு வழங்கிய காலக்கெடுவுக்கு மறுநாள் இந்த தாக்குதல் தொடங்கியது.

இரான் - இஸ்ரேல் தாக்குதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மத்திய கிழக்கு நோக்கி இடம்பெயர்ந்த போர்க்கப்பல்

யுஎஸ்எஸ் நிமிட்ஸ் (USS Nimitz) எனப்படும் தன்னுடைய விமான தாங்கிக் போர்க்கப்பலை தென் சீனக் கடலில் இருந்து மத்திய கிழக்கு நோக்கி அமெரிக்கா இடம்பெயரச் செய்துள்ளதாக வெளியான தகவலையடுத்து, போர் விமானங்களின் இடம்பெயர்வு நிகழ்ந்துள்ளது.

இந்த விமான தாங்கிக் போர்க்கப்பல் சார்ந்து வியட்நாமில் திட்டமிடப்பட்ட நிகழ்வு ஒன்று ரத்து செய்யப்பட்டது, "அவசர நடவடிக்கை தேவைகளுக்காக" அந்நிகழ்வு ரத்து செய்யப்பட்டதாக ஹனோயில் உள்ள அமெரிக்க தூதரகம் கூறியதாக, ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

யுஎஸ்எஸ் நிமிட்ஸ் கடைசியாக, செவ்வாய்க்கிழமை அதிகாலையில் மலாக்கா நீரிணையில் சிங்கப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்ததை கப்பல் கண்காணிப்பு இணையதளமான மெரைன்டிராஃபிக் காட்டுகிறது. நிமிட்ஸ் கப்பலில் அதிநவீன போர் விமானங்கள் உள்ளன, ஏவுகணை தாக்குதல் நடத்துவற்கென வடிவமைக்கப்பட்ட போர்க் கப்பல்களும் அதன் பாதுகாப்புக்காக உடன் செல்கின்றன.

F-16, F-22 மற்றும் F-35 ஆகிய போர் விமானங்களையும் மத்திய கிழக்கில் உள்ள தளங்களுக்கு அமெரிக்கா அனுப்பியுள்ளதாக, பாதுகாப்பு அதிகாரிகள் 3 பேர் கூறியதாக, செவ்வாய்க்கிழமை ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்தது. ஐரோப்பாவுக்கு கடந்த சில தினங்களாக இட மாற்றம் செய்யப்பட்ட டேங்கர் விமானங்கள், இந்த போர் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்காக பயன்படுத்தப்படலாம்.

இஸ்ரேலுக்கு அதரவாக இந்த மோதலில் அமெரிக்கா தலையிடலாம் என, அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் செவ்வாய்கிழமை தெரிவித்தார். இரானின் அணுசக்தி திட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான "அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து டிரம்ப் முடிவு செய்யலாம்" என தன் சமூக ஊடக பக்கத்தில் வான்ஸ் தெரிவித்தார்.

பூமிக்கடியில் ஆழமாக சென்று தாக்கும் பங்கர் பஸ்டர் குண்டு

இரானில் யுரேனியத்தை செறிவூட்டுவதற்காக நிலத்தடியில் இரண்டு தளங்கள் இயங்குவதாக நம்பப்படுகிறது. இதில், நடான்ஸ் இஸ்ரேலால் ஏற்கெனவே தாக்கப்பட்டுள்ளது. கோம் (Qom) நகருக்கு அருகிலுள்ள ஒரு மலையில் அமைத்துள்ள ஃபோர்டோ தளம் பூமிக்கடியில் மிகவும் ஆழமாக அமைக்கப்பட்டுள்ளது.

ஃபோர்டோ கட்டமைப்பை ஊடுருவ GBU-57A/B எனப்படும் பெரியளவிலான குண்டை (Massive Ordnance Penetrator - MOP) அமெரிக்கா பயன்படுத்த வேண்டியிருக்கும் என்று மூத்த மேற்கத்திய ராணுவ அதிகாரிகள் இரண்டு பேர் பிபிசி வெரிஃபையிடம் தெரிவித்தனர். 13,600 கிலோ எடையுள்ள இந்த வெடிகுண்டு, நிலத்தடியில் உள்ள அணுசக்தி தளங்களை தாக்கக்கூடியது என்பதால் "பங்கர் பஸ்டர்ஸ்" என்றும் அழைக்கப்படுகிறது.

இரான் - இஸ்ரேல் தாக்குதல்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, இஸ்ரேல் மீது திங்கட்கிழமை இரான் நடத்திய தாக்குதலை காட்டும் படம்

இந்த குண்டு மட்டுமே 200 அடி (60 மீ) கான்கிரீட்டை கூட உடைக்கும் திறன் கொண்டதாக கருதப்படும் ஒரே ஆயுதமாகும். வழக்கமான ரேடார்களால் எளிதில் கண்டுபிடிக்க முடியாத பி-2 ஸ்டெல்த் போர் விமானங்களால் மட்டுமே இந்த குண்டை வீச முடியும்.

டியாகோ கார்சியா தீவில் உள்ள தன்னுடைய தளத்தில் அமெரிக்கா சமீபத்தில் பி-2 விமானங்களை நிறுத்தியது. இரானின் தெற்கு கடற்கரையிலிருந்து இந்த தீவு சுமார் 2,400 மைல் தொலைவில் இருந்தாலும், அந்த விமானங்கள் இருக்கும் இடமானது, இரானின் தாக்குதல் எல்லைக்குள் அவற்றை வைக்கக்கூடும்.

"[டியாகோ கார்சியாவிலிருந்து) ஒரு நிலையான நடவடிக்கையை மிகவும் திறமையாக இதன் மூலம் மேற்கொள்ள முடியும். அவற்றை எந்நேரமும் செயல்பாட்டில் வைத்திருக்க முடியும்." என, பிரிட்டனின் ராயல் விமானப்படையின் (RAF) முன்னாள் துணை தலைவரான (ஆபரேஷன்ஸ்) ஏர் மார்ஷல் கிரெக் பேக்வெல் பிபிசி வெரிஃபையிடம் தெரிவித்தார்.

மார்ச் மாத இறுதியில் டியாகோ கார்சியாவில் பி-2 விமானங்கள் நிறுத்தப்பட்டதை செயற்கைக்கோள் படங்கள் ஆரம்பத்தில் காட்டின. ஆனால், சமீபத்தில் வெளியான படங்களில் அந்த தீவில் பி-2 விமானங்கள் இல்லை.

வைஸ் அட்மிரல் மெல்லெட் கூறுகையில், இரானை இலக்கு வைத்து நடத்தப்படும் எவ்வித நடவடிக்கைக்கும் முன்னதாக, அந்த தீவில் பி-2 விமானங்களை பார்க்கலாம் என்று எதிர்பார்ப்பதாக கூறினார். தீவில் தற்போது அந்த விமானங்கள் இல்லாதது, குழப்பமாக உள்ளதாகவும் அவர் கூறினார்.

இதை ஏர் மார்ஷல் கிரேக் பேக்வெல்லும் ஒப்புக்கொள்கிறார். வெள்ளை மாளிகை தாக்குதலை தொடங்க முடிவெடுத்தால், அமெரிக்க கண்டத்திலிருந்தும் கூட பி2 விமானங்கள் செலுத்தப்படலாம் என்றும் அவர் கூறினார்.

"இரானின் தற்காப்புத் திறனை இஸ்ரேல் அழித்துவிட்டதால், எந்தவொரு ராணுவ அல்லது அணுசக்தி இலக்குகளும் கூட இஸ்ரேலின் விருப்பத்தின் பேரிலேயே விடப்படும்."

மெர்லின் தாமஸ் வழங்கிய கூடுதல் தகவல்களுடன்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c4g2d1lz6q0o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுரங்கங்களை தகர்க்கும் உலகின் ஒரே வெடிகுண்டு - இரானின் அணு ஆராய்ச்சி மையங்களுக்கு எதிராக அமெரிக்கா பயன்படுத்துமா?

US B-2 ஸ்பிரிட்

பட மூலாதாரம்,US AIR FORCE

படக்குறிப்பு, US B-2 ஸ்பிரிட் மட்டுமே GBU-57A/B Massive Ordnance Penetrator (MOP) வெடிகுண்டை ஏவும் வகையில் கட்டமைக்கப்பட்டு திட்டமிடப்பட்டுள்ளது.

கட்டுரை தகவல்

  • எழுதியவர், லூயிஸ் பார்ருச்சோ

  • பதவி, பிபிசி உலக சேவை

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இரானின் நிலத்தடி அணுசக்தி தளங்களைத் தாக்கும் திறன் கொண்ட ஆயுதங்களில் ஒன்று பயன்படுத்தப்படாமல் உள்ளது.

அந்த ஆயுதம் இஸ்ரேலின் கைகளிலும் தற்போது இல்லை.

GBU-57A/B Massive Ordnance Penetrator (MOP) எனப்படும் உலகின் மிகப்பெரிய அணுஆயுதம் அல்லாத "பங்கர் பஸ்டர்" ("bunker buster") வெடிகுண்டு தான் அந்த ஆயுதம். அது, அமெரிக்காவிற்கு மட்டுமே சொந்தமானதாக உள்ளது.

துல்லியமாக வழிகாட்டப்படும், 30,000 பவுண்ட் (13,600 கிலோ) எடையுள்ள இந்த வெடிகுண்டு, ஒரு மலைக்குள் ஆழமாக புதைக்கப்பட்டுள்ள இரானின் ஃபோர்டோ அணுசக்தி எரிபொருள் செறிவூட்டல் வளாகத்தை ஊடுருவும் திறன் கொண்டதாகக் கருதப்படுகிறது.

இதுவரை, எம்ஓபி வெடிகுண்டை உபயோகிப்பதற்கான அனுமதியை அமெரிக்கா இஸ்ரேலுக்கு வழங்கவில்லை.

GBU-57A/B Massive Ordnance Penetrator (MOP) எனப்படும் ஆயுதம் என்ன செய்யும்? அதன் சவால்கள் என்ன? அதை எவ்வாறு பயன்படுத்த முடியும்?

அமெரிக்க அரசாங்கத்தின் கூற்றுப்படி, GBU-57A/B என்பது, "ஆழமாக புதைக்கப்பட்ட மற்றும் உறுதியாக கட்டப்பட்ட பதுங்கு குழிகள் மற்றும் சுரங்கங்களைத் தாக்கும் திறன் கொண்ட ஒரு பெரிய ஊடுருவக்கூடிய ஆயுதம்"என அறியப்படுகின்றது.

இந்த வெடிகுண்டு சுமார் ஆறு மீட்டர் நீளமுடையது. இது வெடிக்கும் முன் சுமார் 200 அடி (61 மீட்டர்) ஆழத்தில் நிலத்தின் உள்ளே ஊடுருவக்கூடியது என நம்பப்படுகிறது. இதுபோன்ற வெடிகுண்டுகள் தொடர்ச்சியாக வீசப்பட்டால், ஒவ்வொரு வெடிப்பும், நிலத்தை ஆழமாக துளையிட்டு, இலக்கைச் சேதப்படுத்தும் திறனை அதிகரிக்கிறது.

போயிங்கால் தயாரிக்கப்பட்ட எம்ஓபி (MOP), இதுவரை போரில் ஒருபோதும் பயன்படுத்தப்படவில்லை. எனினும், இது அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாகாணத்தில் உள்ள ஒயிட் சாண்ட்ஸ் மிஸைல் ரேஞ்ச் (White Sands Missile Range) என்ற ராணுவ சோதனை மையத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

"அனைத்து வெடிகுண்டுகளின் தாய்" என அழைக்கப்படும் 21,600 பவுண்ட் (9,800 கிலோ) எடையுள்ள Massive Ordnance Air Blast (MOAB) வெடிகுண்டை விட இது அதிக சக்தி வாய்ந்தது. இந்த MOAB, 2017 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் போருக்காக பயன்படுத்தப்பட்டது.

"MOAB போலவே பெரிய அளவிலான ஆயுதங்களை உருவாக்க முயற்சித்த அமெரிக்க விமானப்படை, வெடி பொருளை மிகவும் வலிமையான உலோகப் பெட்டிக்குள் வைத்திருக்கும் வகையில் வடிவமைத்தது. அதன் விளைவாக உருவானது தான் GBU-57A/B மாசிவ் ஆர்ட்னன்ஸ் பெனட்ரேட்டர்" என்று கூறுகிறார் பிரிட்டனின் ப்ராட்ஃபோர்டு பல்கலைக்கழகத்திலுள்ள அமைதிக் கல்வித் துறையின் பேராசிரியரான பால் ரோஜர்ஸ்.

தற்போது , எம்ஓபி வெடிகுண்டை ஏவுவதற்காக கட்டமைக்கப்பட்டும், நிரலாக்கம் செய்யப்பட்டும் இருப்பது அமெரிக்காவின் B-2 ஸ்பிரிட் என்ற ஸ்டெல்த் பாம்பர் மட்டும் தான்.

B-2 என அழைக்கப்படும் இந்த போர் விமானம், நார்த்ரோப் க்ரம்மன் நிறுவனம் தயாரித்தது. அமெரிக்க விமானப்படையின் ஆயுதக் களஞ்சியத்தில் உள்ள மிகவும் மேம்பட்ட போர் விமானங்களில் ஒன்றாக இந்த விமானம் கருதப்படுகின்றது.

இந்த விமானத்தின் உற்பத்தியாளரான நார்த்ரோப் க்ரம்மனின் கூற்றுப்படி, B-2 விமானம் 40,000 பவுண்டு (18,000 கிலோ) வரை சுமக்கக்கூடியது. ஆனால், இரண்டு GBU-57A/B "பங்கர் பஸ்டர்" வெடிகுண்டுகளை சுமந்து செல்லும் B-2 விமானத்தை வெற்றிகரமாக சோதனை செய்ததாக அமெரிக்க விமானப்படை தெரிவித்துள்ளது. இதன் மொத்த எடை சுமார் 60,000 பவுண்டு (27,200 கிலோ).

குண்டுவீச்சுக்குப் பயன்படும் இந்த நீண்ட தூர கனரக விமானம், எரிபொருள் நிரப்பாமல் சுமார் 7,000 மைல்கள் (11,000 கிமீ) வரை பறக்கக்கூடியது. பறக்கும் நிலையில் ஒருமுறை எரிபொருள் நிரப்பினால், அதன் வரம்பு 11,500 மைல்கள் (18,500 கிமீ) ஆக அதிகரிக்கிறது. இதன் மூலம், உலகின் எந்தப் பகுதியையும் சில மணி நேரங்களில் இந்த விமானத்தால் அடைய முடியும் என நார்த்ரோப் க்ரம்மன் கூறுகிறது.

இரான் போன்ற நவீன வான் பாதுகாப்பு அமைப்புகளுடன் கூடிய நாட்டிற்கு எதிராக எம்ஓபி வெடிகுண்டு பயன்படுத்தப்பட்டால், B-2 குண்டுவீச்சு விமானங்களுடன் கூடுதல் விமானங்களும் அதில் பங்கேற்க நேரிடும். எடுத்துக்காட்டாக, எதிரியின் பாதுகாப்பு அமைப்புகளுக்கு எதிராக F-22 ஸ்டெல்த் ஸ்ட்ரைக் விமானங்கள் பயன்படுத்தப்படலாம். அதன் பிறகு, சேதத்தை மதிப்பீடு செய்யவும், அதற்குப் பிறகும் தாக்குதல்களைத் தொடரவேண்டுமா என்பதை தீர்மானிக்கவும் ட்ரோன்கள் பயன்படுத்தப்படலாம் என்று பேராசிரியர் ரோஜர்ஸ் கூறுகிறார்.

இந்த எம்ஓபி வெடிகுண்டுகள் அமெரிக்காவிடம் மிகக் குறைந்த அளவு இருப்பதாக அவர் மதிப்பிடுகிறார்.

"அவர்கள் சுமார் 10 அல்லது 20 எம்ஓபி வெடிகுண்டுகளை வைத்திருக்கக்கூடும்" என்கிறார் பேராசிரியர் ரோஜர்ஸ்.

எம்ஓபி - Massive Ordnance Penetrator

பட மூலாதாரம்,WHITEMAN AIR FORCE BASE

படக்குறிப்பு, எம்ஓபி வெடிப்பதற்கு முன் மேற்பரப்பில் இருந்து சுமார் 200 அடி (61 மீட்டர்) வரை ஊடுருவிச் செல்லும் திறன் கொண்டதாக நம்பப்படுகிறது.

இரானுக்கு எதிராக எம்ஓபி வெடிகுண்டு பயன்படுத்தப்படுமா?

ஃபோர்டோ என்பது இரானின் இரண்டாவது அணுசக்தி செறிவூட்டல் நிலையமாகும். நடான்ஸுக்கு பிறகு இதுவும் ஒரு முக்கிய மையமாகக் கருதப்படுகிறது.

டெஹ்ரானில் இருந்து தென்மேற்கே சுமார் 60 மைல் (95 கிலோமீட்டர்) தொலைவில் உள்ள கோம் நகருக்கு அருகில், ஒரு மலையின் ஓரத்தில் இந்த நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையத்திற்கான கட்டுமானம் 2006ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதாக நம்பப்படுகிறது. பின்னர், 2009ஆம் ஆண்டு இந்த நிலையம் செயல்பாட்டுக்கு வந்தது.

இந்த நிலையம் அங்கு செயல்படுவதை, இரான் அதே ஆண்டில் வெளிப்படையாக ஒப்புக்கொண்டது.

80 மீட்டர் (260 அடி) ஆழத்தில் பாறை மற்றும் மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருப்பதுடன், இரான் மற்றும் ரஷ்ய தயாரிப்புகளான தரையிலிருந்து வானில் தாக்கும் ஏவுகணை அமைப்புகளால், ஃபோர்டோ வளாகம் பாதுகாக்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.

2023ம் ஆண்டு மார்ச் மாதத்தில், சர்வதேச அணுசக்தி நிறுவனம் (IAEA), அந்த தளத்தில் ஆயுத தரத்திற்கு அருகிலுள்ள 83.7% தூய்மையுடைய யுரேனியம் துகள்களைக் கண்டறிந்தது.

இரானின் ஏவுகணை மற்றும் அணுசக்தி திட்டத்தை முற்றிலும் அழிப்பதே, இரான் மீது தாக்குதல் நடத்துவதன் நோக்கம் என இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியிருந்தார். அதனை, "இஸ்ரேலுக்கு ஒரு இருத்தலியல் (existential) அச்சுறுத்தல்" எனவும் அவர் விவரித்தார்.

அந்த நோக்கத்தை அடைய, ஃபோர்டோ வளாகமும் ஒரு முக்கியப் பகுதியாக இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

"இந்த முழு நடவடிக்கையும்… ஃபோர்டோவை முற்றிலும் நீக்குவதன் மூலம் முழுமை பெறும்" என்று அமெரிக்காவுக்கான இஸ்ரேல் தூதர் யெச்சியல் லீட்டர் வெள்ளிக்கிழமை ஃபாக்ஸ் நியூஸுக்கு தெரிவித்தார்.

ஆனால் எம்ஓபி வெடிகுண்டை தனியாக பயன்படுத்துவதற்கான திறன் இஸ்ரேலிடம் இல்லை. மேலும், அமெரிக்கா நேரடியாக ஈடுபடாமல் அதற்கு அனுமதி அளிக்காது என்று பேராசிரியர் ரோஜர்ஸ் குறிப்பிட்டார்.

"நிச்சயமாக, இஸ்ரேலியர்கள் தனியாக இதைச் செய்ய அமெரிக்கா அனுமதிக்காது. மேலும் இத்தனை பெரிய அளவில் ஊடுருவும் வெடிகுண்டுகளும் இஸ்ரேலிடம் இல்லை" என்று அவர் கூறினார்.

அமெரிக்கா இந்த வெடிகுண்டை பயன்படுத்துமா என்பது, குறிப்பாக அதிபர் டொனால்ட் டிரம்பின் தலைமையின் கீழ், அந்த நாடு தங்களது ஈடுபாட்டை அதிகரிக்க தயாரா என்ற விருப்பத்தைப் பொறுத்தது.

"இஸ்ரேலுக்கு முழுமையாக ஆதரவளிக்க டிரம்ப் தயாராக உள்ளாரா என்பதைப் பொறுத்தது" என்கிறார் பேராசிரியர் ரோஜர்ஸ்.

கனடாவில் நடைபெற்ற G7 மாநாட்டில், அமெரிக்கா ராணுவ நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு என்ன தேவைப்படும் என்று டிரம்பிடம் கேட்கப்பட்டது.

அதற்கு, "நான் அதைப் பற்றி பேச விரும்பவில்லை"என்று டிரம்ப் பதில் அளித்தார்.

ஏபிசி நியூஸுடன் நடைபெற்ற சமீபத்திய நேர்காணலில், ஃபோர்டோ மீதான தாக்குதலில் அமெரிக்கா ஈடுபடுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தூதர் லீட்டரிடம் கேட்கப்பட்டது. இஸ்ரேல், அமெரிக்காவிடம் தற்காப்பு உதவியை மட்டுமே கேட்டுள்ளது என்று அவர் பதில் கூறினார்.

"எங்களிடம் பல திட்டங்கள் உள்ளன. அவை ஃபோர்டோவை சமாளிக்க எங்களுக்கு உதவும்," என்று அவர் குறிப்பிட்டார்.

"எல்லா விஷயங்களும் வானத்தில் பறந்து தூரத்திலிருந்து குண்டு வீசுவது போன்றவை அல்ல," என்றும் அவர் கூறினார்.

எப்போதுமே தனது அணுசக்தித் திட்டம் முற்றிலும் அமைதியானது என்றும் அணு ஆயுதத்தை உருவாக்க அவர்கள் எப்போதும் முயற்சி செய்யவில்லை என்றும் இரான் கூறி வருகிறது.

ஆனால் கடந்த வாரம் சர்வதேச அணுசக்தி நிறுவனத்தின் 35 நாடுகளைக் கொண்ட நிர்வாக குழு, 20 ஆண்டுகளில் முதல் முறையாக இரான் தனது அணுசக்திப் பரவல் தடைகளை மீறியதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

அமெரிக்க அதிபர் டிரம்ப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இரானில் ராணுவ ரீதியாக தலையிட அமெரிக்காவிற்கு என்ன தேவை என்று கனடாவில் நடந்த G7 கூட்டத்தில் டிரம்பிடம் கேட்டபோது, 'நான் அதைப் பற்றி பேச விரும்பவில்லை' என்று அவர் கூறினார்.

'கேம் சேஞ்சர்'

சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு, "ஆழமாக புதைக்கப்பட்ட இரானின் அணுசக்தி நிலையங்களை சேதப்படுத்துவதில் இஸ்ரேல் எந்த வகையிலும் வெற்றி பெற்றிருக்க வாய்ப்பு குறைவு தான்" என்று பேராசிரியர் ரோஜர்ஸ் நம்புகிறார்.

"தங்களால் செய்ய முடியாத விஷயத்தைச் செய்ய, இஸ்ரேலுக்கு எம்ஓபி போன்ற சக்திவாய்ந்த ஒரு வெடிகுண்டு தேவைப்படும்," என்று அவர் கூறினார்.

"ஃபோர்டோ தளம் செயல்பாட்டில் இருக்கும் வரை, இரான் அணு ஆயுதம் தொடர்பான அபாயத்தை ஏற்படுத்தும் நிலைமையில் தான் இருக்கிறது. டெஹ்ரானுக்கு, அந்த தளத்தில் செறிவூட்டலை அதிகரிக்கவோ அல்லது யுரேனியத்தை வேறு இடத்துக்கு மாற்றவோ வாய்ப்பு இருக்கிறது" என்று அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ஆயுதக் கட்டுப்பாட்டு சங்கத்தின் அணுசக்தி பரவல் தடுப்பு கொள்கைக்கான இயக்குநர் கெல்சி டேவன்போர்ட் கூறுகிறார்.

எம்ஓபி பயன்படுத்தப்பட்டாலும், இரானின் அணு ஆயுதத் தளங்கள் எவ்வளவு ஆழத்தில் இருக்கின்றன, எவ்வளவு பாதுகாப்பாக உள்ளன என்பது தெரியாததால், இந்த ஆயுதத்தைப் பயன்படுத்தினால் வெற்றி கிடைப்பதற்கும் உத்தரவாதம் இல்லை என்று பேராசிரியர் ரோஜர்ஸ் கூறுகிறார்.

"தற்போது உள்ள எந்த ஆயுதத்தையும் விட, இரானின் நிலத்தடியில் ஆழமாக உள்ள அணுசக்தி திறன்களை சேதப்படுத்துவதற்கான சிறந்த வாய்ப்பு இந்த ஆயுதத்திடமே உள்ளது. ஆனால் அதைச் செய்ய முடியுமா என்பது யாருக்குத் தெரியும்!" என்கிறார் பேராசிரியர் ரோஜர்ஸ்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cew0lwxwx02o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரான் விஷயத்தில் டிரம்ப் நிர்வாகத்தில் பிளவு - இராக் போரின் மோசமான நினைவுகளால் அச்சமா?

கப்பார்டுடன் டிரம்ப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,துளசி கப்பார்ட்டுடன் டிரம்ப்

கட்டுரை தகவல்

  • எழுதியவர், அந்தோணி ஸுர்ச்சர்

  • பதவி, பிபிசி

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கையில் இணைய வேண்டுமா வேண்டாமா என்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முடிவில், அணு ஆயுதத்தை உருவாக்கும் பணியில் இரான் எவ்வளவு தூரம் முன்னேறியுள்ளது என்பதுதான் மையக் கேள்வியாக உள்ளது.

இந்த பிரச்னை அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கின் நிலைத்தன்மைக்கு அச்சுறுத்தல்களை உருவாக்கலாம் என்பதால், டிரம்புக்கும் அவரது உயர் ஆலோசகர்களில் ஒருவருக்கும் இடையே ஒரு வெளிப்படையான பிளவை உருவாக்கியுள்ளது.

பல ஆண்டுகளுக்கு முன்பு மத்திய கிழக்கில் ஏற்பட்ட ஒரு நெருக்கடியின் போது, குடியரசுக் கட்சியைச் சார்ந்த மற்றொரு அதிபரின் நிர்வாகம் முன்வைத்த வாதங்களை இச்சூழல் நினைவூட்டுகிறது.

கனடாவில் நடைபெற்ற G7 மாநாட்டிலிருந்து ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் திரும்பும் போது, மார்ச் மாதத்தில் அமெரிக்க உளவுத்துறை இயக்குநர் துளசி கப்பார்ட் கூறிய, 'இரான் அணுகுண்டு உருவாக்கவில்லை' என்ற கருத்தை டிரம்ப் ஏற்கிறாரா என்று அவரிடம் கேட்கப்பட்டது.

"அவர் என்ன சொன்னாலும் எனக்கு கவலையில்லை," என்று அதற்கு பதிலளித்த டிரம்ப், இரான் அணுகுண்டு உருவாக்கத்துக்கு "மிக அருகில்" இருப்பதாக நம்புவதாகவும் கூறினார்.

2003ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டிருந்த இரானின் அணு ஆயுத திட்டத்தை அந்த நாடு மீண்டும் தொடங்கவில்லை என்று அமெரிக்க உளவுத்துறை உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால், அணு ஆயுத தயாரிப்புக்கான முக்கிய கூறான செறிவூட்டப்பட்ட யுரேனியம், இரானின் கையிருப்பில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாக உள்ளது என அமெரிக்க நாடாளுமன்றத்தில் கப்பார்ட் தெரிவித்தார்.

அமெரிக்க உளவுத்துறை குறித்து முன்பு வைத்த விமர்சனத்தாலும், பதவியில் இருந்து அகற்றப்பட்ட சிரியா அதிபர் பஷர் அல்-அசத் போன்ற அமெரிக்க எதிரிகளைச் சந்திக்க அவர் தயாராக இருந்ததாலும், வெளிநாட்டு விவகாரங்களில் அமெரிக்காவின் தலையீட்டை எதிர்த்து வெளிப்படையாக கருத்து தெரிவித்ததாலும் அமெரிக்க உளவுத்துறை இயக்குநர் பதவிக்கு துளசி கப்பார்ட் தேர்தேடுக்கப்பட்டபோது சர்ச்சை எழுந்தது.

ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் இருந்த துளசி கப்பார்ட், ஒரு காலத்தில் அமெரிக்க அதிபர் பதவிக்கான போட்டியில் செனட்டர் பெர்னி சாண்டர்ஸை ஆதரித்தார். பின்னர் 2022இல் ஜனநாயகக் கட்சியுடன் தொடர்பை முறித்துக் கொண்டு, கடந்த ஆண்டு டிரம்பை ஆதரிக்கத் தொடங்கினார்.

உளவுத்துறை இயக்குநராக அவர் நியமிக்கப்பட்டது, பிப்ரவரியில் 52-48 என்ற வாக்கு அடிப்படையில் செனட் சபையால் உறுதிப்படுத்தப்பட்டபோது, டிரம்ப் தனது நிர்வகத்தில் உலக பிரச்னைகளில் அமெரிக்கா தலையிடுவதை விரும்பாதவர்களுக்கு இடம் தருகிறார் என்பதற்கான சான்றாக கருதப்பட்டது.

இரான் தாக்குதலில் சேதமடைந்த இஸ்ரேல் மருத்துவமனை

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, இரான் தாக்குதலில் சேதமடைந்த இஸ்ரேல் மருத்துவமனை

கெப்பார்ட் வேறுவிதமாக சொன்னாலும், டிரம்ப் உளவுத்துறை இயக்குநர் சொன்னதை ஏற்கவில்லை. இது, இரானுக்கு எதிராக கடுமையாக நடக்க விரும்பும் குழுவினர் வெள்ளைமாளிகையில் முக்கியத்துவம் பெறுகிறார்கள் என்பதைக் காட்டுகிறது

வெளிநாட்டு விவகாரங்களில் தலையிட விரும்பாத மற்றொருவரான துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், கப்பார்டை ஆதரித்துள்ளார். அதே நேரத்தில், இரான் தொடர்பாக டிரம்ப் எதைத் தேர்வு செய்தாலும், அதற்கு தானும் ஆதரவாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

"இந்த விவகாரத்தில் அதிபருக்கு ஓரளவு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்று நான் நினைக்கிறேன். அமெரிக்க மக்களின் இலக்குகளை நிறைவேற்றும் வகையில்தான், அவர் அமெரிக்க ராணுவத்தை பயன்படுத்த விரும்புகிறார் என்பதை நான் உங்களுக்கு உறுதியாகக் கூற முடியும்" என்று செவ்வாயன்று எக்ஸ் தளத்தில் வான்ஸ் பதிவிட்டார்.

இஸ்ரேல் - இரான் மோதலில் அமெரிக்கா நேரடியாக ஈடுபட வேண்டுமா என்பதைச் சுற்றி, டிரம்பின் ' America first (அமெரிக்கா முதலில்) ' இயக்கத்திற்குள் கடுமையான கருத்து வேறுபாடுகள் உருவாகி வருகின்றன.

இந்நிலையில், டிரம்ப் மற்றும் கப்பார்ட் ஆகியோருக்கு இடையே தோன்றிய கருத்து முரண்பாடும், அந்த இயக்கத்தின் உள்ளிருக்கும் இந்தக் குழப்பத்தில் ஒன்றாகவே காணப்படுகிறது.

இரான் அணு ஆயுத தயாரிப்பில் மிக நெருக்கத்தில் இருப்பதாக நம்பும் பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத், அமெரிக்க நாடாளுமன்றத்தில் இரானுக்கெதிராகப் பேசும் குழுவினர் மற்றும் இஸ்ரேலிய அரசாங்கம் உட்பட பலரும், கடந்த வாரம் சர்வதேச அணுசக்தி அமைப்பின் அறிவிப்பை சுட்டிக்காட்டுகிறார்கள்.

அதில், இரான் 20 ஆண்டுகளில் முதன்முறையாக அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தை மீறியது எனக் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்கா வெளியுறவு விவகாரங்களில் தலையிட வேண்டாம் எனக் கருதுபவர்கள், குறிப்பாக பழமைவாத ஊடகவியலாளர் டக்கர் கார்ல்சன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மார்ஜோரி டெய்லர் கிரீன் போன்றவர்கள், 'இரான் அணு ஆயுதங்களை உருவாக்குகிறது என்பதற்கான ஆதாரம் மிகைப்படுத்தப்படுவதாகக் கூறுகிறார்கள்.

இதனை அடிப்டையாகக் கொண்டு, இரானில் ஆட்சி மாற்றம் செய்யவும், ராணுவ நடவடிக்கைகளை நியாயப்படுத்தவும் முயற்சி நடக்கிறது என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

"இஸ்ரேலை ஆதரிப்பவர்களுக்கும், இரான் அல்லது பாலத்தீனியர்களை ஆதரிப்பவர்களுக்கும் இடையேதான் பிளவு இருக்கிறது என்று நினைக்கிறோம். ஆனால் உண்மையான பிளவு, வன்முறையை எளிதாக ஊக்குவிப்பவர்களுக்கும், அதைத் தடுக்க நினைப்பவர்களுக்கும் இடையேதான் உள்ளது" என கடந்த வாரம் கார்ல்சன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

2003ஆம் ஆண்டு அமெரிக்கா இராக் மீது நடத்திய படையெடுப்பை இப்போது அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள் . அதேபோல், மூன்று மடங்கு பரப்பளவும் இரு மடங்கு மக்கள்தொகையும் கொண்ட இரான் மீது தாக்குதல் நடத்தினால், இதுவும் அதே போல் பேரழிவு தரும் வெளியுறவுக் கொள்கை முடிவாக இருக்கும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

2003ஆம் ஆண்டு இராக் மீது நடத்திய அமெரிக்க படையெடுப்பை, பேரழிவு தரும் ஆயுதங்களால் அமெரிக்காவுக்கு கடும் ஆபத்து ஏற்படலாம் எனக் கூறி ஜார்ஜ் புஷ் நிர்வாகம் நியாயப்படுத்தியது.

ஆனால், அதற்கான ஆதாரங்கள் பின்னால் தவறானவை என நிரூபிக்கப்பட்டன.

"அமெரிக்காவிற்கு ஆபத்து ஏற்படக்கூடிய தெளிவான சான்றுகள் இருக்கின்றன. அதற்கான இறுதிச் சான்றாக, அணுகுண்டு வெடிக்கும் வரை காத்திருக்க முடியாது " என்று புஷ் 2002ம் ஆண்டு அக்டோபரில் தொலைக்காட்சியில் உரையாற்றினார்.

அமெரிக்க நிர்வாகம் வெளியுறவுத்துறை செயலாளர் கொலின் பவலை ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பியது. அங்கு அவர் ஒரு சிறிய குப்பியை உயர்த்தி காட்டி, இது இராக்கிடம் உள்ள ஆயுதமாக பயன்படுத்தக்கூடிய ஆந்த்ராக்ஸ் பாக்டீரியாவின் சிறிய மாதிரியை மட்டுமே குறிக்கிறது என்று கூறினார்.

"இவை வெறும் ஊகங்கள் மட்டுமல்ல" என்று கூறிய பவல், "நாங்கள் உங்களுக்கு வழங்குவது, உறுதியான நுண்ணறிவு தகவல்களின் அடிப்படையில் எடுத்த முடிவுகளும் உண்மைகளும் "என்று தெரிவித்தார்.

உளவுத்துறையின் தகவல்கள் உண்மையானதா என்ற சந்தேகங்கள் மற்றும் பேரழிவு ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்கள் உள்ளதற்கான எந்த சான்றும் இல்லாத நிலையில், அதிகப் பொருட்செலவில், பல உயிரிழப்புகளை ஏற்படுத்தி அமெரிக்கா இராக்கில் படையெடுத்தது.

இது பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் ஜனநாயகக் கட்சிக்கு வெற்றியை ஏற்படுத்தியது மற்றும் குடியரசுக் கட்சிக்கு உள்ளே அதிருப்தியையும் அதிகரித்தது.

புஷ்ஷின் வெளியுறவுச் செயலாளராக இருந்த கொலின் பவல்,

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, புஷ்ஷின் வெளியுறவுச் செயலாளராக இருந்த கொலின் பவல், போருக்கான வாதத்தை முன்வைத்தார்.

2016 ஆம் ஆண்டு வாக்கில், குடியரசுக் கட்சியினர் தங்களது அரசியல் நிலைப்பாட்டை குறித்து அதிகமான அதிருப்தியை வெளிப்படுத்தத் தொடங்கினர்.

இந்த சூழ்நிலையே, இராக் போரை விமர்சித்து வந்த டிரம்ப், தனது கட்சியின் அதிபர் வேட்பாளராகத் தேர்வாகவும், பின்னர் வெள்ளை மாளிகையை கைப்பற்றவும் வழிவகுத்தது.

ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது அமெரிக்க உளவுத்துறை முடிவுகளைப் பொருட்படுத்தாமல், மத்திய கிழக்கில் ராணுவத் தலையீட்டைப் பற்றி டிரம்ப் யோசித்து வருகிறார்.

தென்கரலைனா செனட்டர் லிண்ட்சி கிராஹாம் போன்ற பழமைவாதிகள் இதுதான் ஆட்சி மாற்றத்துக்கான நேரம் என்று கூறினாலும், 2003ஆம் ஆண்டு இராக்கில் நடந்த படையெடுப்பும், அதன்பின் நாட்டைக் கட்டியெழுப்ப எடுக்கப்பட்ட முயற்சிகளையும் போன்ற ஒரு திட்டத்துக்கு வெள்ளை மாளிகையில் அதிக ஆதரவு இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

இருப்பினும், ராணுவ நடவடிக்கைகள் கணிக்க முடியாத வழிகளில் உருவாகக்கூடும்.

மேலும் டிரம்ப், தனது கட்சியின் முன்னாள் அதிபரைவிட வேறுபட்ட சூழ்நிலையிலும், வேறுபட்ட திட்டத்தையும் கருத்தில் கொண்டிருந்தாலும், தனது உளவுத்துறை ஆலோசகர்களின் தகவல்களை நம்பினாலும் நிராகரித்தாலும், அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறிப்பிடத்தக்கதாக இருக்க வாய்ப்புள்ளது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/czxwdg32x76o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈரான் மீதான தாக்குதலிற்கு டிரம்ப் அனுமதி வழங்கியுள்ளார் - வோல்ஸ்ரீட் ஜேர்னல்

19 JUN, 2025 | 02:13 PM

image

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரான் மீதான தாக்குதல் திட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளார் ஆனால் ஈரான் தனது அணுவாயுதிட்டத்தை கைவிடுமா என பார்ப்பதற்காக அதனை நடைமுறைப்படுத்துவதை தாமதிக்கின்றார் என அவரின் உதவியாளர்கள் தெரிவித்துள்ளனர் என வோல்ஸ்ரீட் ஜேர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து வோல்ஸ்ரீட் ஜேர்னல் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஈரான் மீதான தாக்குதல் திட்டங்களிற்கு அனுமதியளிப்பதாக செவ்வாய்கிழமை இரவு டிரம்ப் தனது சிரேஸ்ட உதவியாளர்களிடம் தெரிவித்தார்,ஆனால் தெஹ்ரான் தனது அணுசக்தி திட்டங்களை கைவிடுமா என பார்ப்பதற்காக பொறுத்திருக்கின்றார் என விடயங்களை நன்கறிந்தவர்கள் தெரிவித்தனர்.

ஈரானின் நன்கு பாதுகாக்கப்பட்ட போர்டே  அணுஉலை அமெரிக்காவின் இலக்காகயிருக்கலாம்,அது ஒரு மலைக்கு உள்ளே உருவாக்கப்பட்டுள்ளது,மிக வலுவான குண்டுகளால் மாத்திரமே அதனை அழிக்க முடியும் என இராணுவ ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ஈரானின் அணுசக்திநிலையங்கள் மீது தாக்குதலை மேற்கொள்வீர்களா என்ற கேள்விக்கு நான் அதனை செய்யலாம் செய்யாமல் விடலாம் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரான் நிபந்தனையற்ற விதத்தில் சரணடையவேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்தியுள்ள அவர் அடுத்தவாரம் மிகப்பெரியதாகயிருக்கும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/217906

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.