Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஹூகோ ஃபாரியஸ் நீலச்சட்டை அணிந்து  ஓடிக்கொண்டிருக்கிறார். அவரை மூன்று பேர் சைக்கிளில் தொடர்கின்றனர்.

பட மூலாதாரம்,DÓKIMOS PRODUÇÕES

படக்குறிப்பு, மனித உடல் தீவிர உடல் செயல்பாட்டிற்கு எவ்வாறு எதிர்வினையாற்றுகிறது என்பதைப் பார்க்க ஹூகோ ஃபாரியஸ் இந்த சவாலை ஏற்றுக்கொண்டார்

கட்டுரை தகவல்

  • ஜூலியா கிரான்சி

  • பிபிசி நியூஸ் பிரேசில்

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

கடந்த 2023இல் ஹுகோ ஃபாரியஸ் 366 மாரத்தான்களை அடுத்தடுத்து நிறைவு செய்து ஒரு உலக சாதனையைப் படைத்தார்.

அதாவது தொடர்ந்து ஓர் ஆண்டுக்கும் மேலாக மழையோ, வெயிலோ, உடல்நலக் குறைவோ, காயமோ எது வந்தபோதிலும், தினசரி 42 கிலோ மீட்டருக்கு மேல் ஓடியிருக்கிறார்.

இந்த அசாதரண சாதனையைச் செய்த 45 வயதான பிரேசில் தொழிலதிபர் ஹூகோ, 12 மாதங்களில் 15,000 கி.மீ ஓடும்போது அவரது இதயம், அதற்கு எவ்விதம் எதிர்வினையாற்றுகிறது என்பதை ஆய்வு செய்வதற்கான மருத்துவ ஆய்வில் பங்கேற்றார்.

"நான் பெரிய தடகள வீரர் அல்ல. அதற்கு முன்பு எனது வாழ்நாளில் நான் ஒரு மாரத்தான் மட்டுமே ஓடியிருந்தேன்," என்றார் அவர்.

"ஆனால் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்க, விளையாட்டு மூலம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற ஆர்வம் எனக்குள் வளர்ந்தது"

சிரித்த முகத்துடன் ஹூகோ ஃபாரிஸ்.

பட மூலாதாரம்,CLAYTON DAMASCENO

படக்குறிப்பு, தனது பயணம் பிறருக்கு உந்துசக்தியாக இருக்கும் என ஃபாரியஸ் நம்புகிறார்

தினசரி வாழ்க்கை மீது அதிகரித்த அதிருப்தியின் விளைவாக, தனது வேலையை விட்டுவிட்டு, விளையாட்டுத் துறை சார்ந்த ஒரு சவால் மீது கவனம் செலுத்த வேண்டுமென அவர் முடிவெடுத்தார்.

"வாழ்வில், செய்துகொண்டிருந்த அனைத்தையும் அப்படியே நிறுத்திவிட்டு, 'நான் இதற்காகத்தான் பிறந்திருக்கிறேனா? திரும்பத் திரும்ப 35 -40 வருடங்கள் இதையே செய்வதற்காகத்தான் நான் பிறந்தேனா?' என்று என்னைச் சிந்திக்க வைத்த ஒரு தருணம் வந்தது," என ஹுகோ பிபிசி நியூஸ் பிரேசிலிடம் கூறினார்.

ஹூகோ, "18 வயதாகும் முன்பே நமக்கான தொழிலைத் தேர்ந்தெடுக்க, நிலைத்தன்மையைத் தேட, ஒரு குடும்பத்தை உருவாக்க, ஓய்வு காலத்திற்குத் தயாராக வேண்டுமென்று மிக இளைய வயதில் இருந்தே நாம் கற்றுக்கொள்கிறோம்."

"இந்த நிலையில், மக்களை வித்தியாசமான முறையில் ஊக்குவிக்க வேண்டுமென்றும், அதற்கு என்னால் ஏதாவது செய்ய முடியும் என்றும் எண்ணத் தொடங்கினேன்."

அறிவியல்ரீதியான பங்களிப்பு

ஹூகோ மருத்துவ கருகவிகளுடன் இணைக்கப்பட்டு பரிசோதிக்கப்படும் காட்சி

பட மூலாதாரம்,HANDOUT

படக்குறிப்பு, சாவ் பாலோசாவ் பாலோ ஹார்ட் இன்ஸ்டிடியூட் இன்கோர் என்ற நிறுவனத்தைச் சேர்ந்த இதயவியல் நிபுணர்கள் ஹூகோ ஃபாரியஸின் இதய செயல்பாட்டைக் கண்காணித்தனர்

கடந்த 1984இல் தெற்கு அட்லான்டிக்கை படகில் கடந்த பிரேசில் படகோட்டி ஏமிர் கிளின்க் தனக்கு உத்வேகமாக இருந்ததாக ஹூகோ கூறுகிறார். "ஆனால் அவரைப் போல படகோட்டுவதற்குப் பதிலாக நான் ஓடுவேன்," என்று அவர் முடிவெடுத்தார்.

அவர் தனது முத்திரையைப் பதிக்க விரும்பினார், எனவே இதற்கு முன் செய்யப்படாத ஒரு சவாலை அவர் தேடினார். பெல்ஜிய தடகள வீரர் ஸ்டெஃபான் எங்கெல்ஸ் ஏற்கெனவே ஒரு வருடத்தில் 365 மாரத்தான்களை ஓடியிருக்கிறார் என்பதை அறிந்த அவர், அதைவிட ஒரு நாள் கூடுதலாக மாரத்தான் ஓடத் திட்டமிட்டார்.

பயணம், பயிற்சி மற்றும் பல தொழில்முறை வல்லுநர்களின் உதவியை உள்ளடக்கிய விரிவான செயல் திட்டத்தை ஹூகோ எட்டு மாதங்களில் வடிவமைத்தார்.

"என்னால் இதைத் தனியாகச் செய்ய முடியாது என்று தெரியும். மருத்துவர்கள், பயிற்சியாளர்கள், பிசியோதெரபிஸ்ட் உள்ளிட்ட தொழில்முறை வல்லுநர்கள், மற்றும் மனநல நிபுணர் உள்படப் பல்துறை நிபுணர்கள் கொண்ட ஒரு குழுவை உருவாக்கினேன்," என்கிறார் அவர்.

"நன்கு நிறுவப்பட்ட ஒரு தொழில் வாழ்க்கையை முற்றிலும் நிச்சயமற்ற ஒன்றுக்காக மாற்றிக்கொண்டேன். எனவே இது கவலை மற்றும் பாதுகாப்பின்மையை உருவாக்குகிறது. எனவே மனபாரத்தைக் குறைத்து குறிக்கோள் மீது கவனம் செலுத்த இந்தக் கோணத்தைப் பற்றிய புரிதல் கொண்ட ஒரு தொழில்முறை நிபுணர் இருப்பது அவசியம்.

தனது முயற்சியில் பங்கேற்க அவர் அழைப்பு விடுத்த தொழில்முறை அமைப்புகளில் ஒன்றுதான் சாவ் பாலோ ஹார்ட் இன்ஸ்டிடியூட் இன்கோர்.

"எனது இதயம் இந்த சவாலுக்கு எப்படி எதிர்வினையாற்றுகிறது - அளவில் பெரிதாகுமா அல்லது சிறியதாகுமா, அரித்மியா(சீரற்ற இதயத் துடிப்பு) ஏற்படுமா அல்லது வேறு ஏதேனும் மாற்றங்கள் ஏற்படுகிறதா - என்பதை ஆய்வு செய்ய என்னுடன் இணைந்து பணியாற்ற முடியுமா என்று அந்த நிறுவனத்தின் இதயவியல் நிபுணர்களிடம் கேட்டேன்."

"ஏனெனில், இதன்மூலம் நான் அறிவியலுக்கும் பங்களிப்பு செய்ய விரும்பினேன்."

நீங்கள் 366 மாரத்தான்கள் ஓடினால் உங்கள் இதயம் என்ன ஆகும்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

இதயவியல் நிபுணர் மற்றும் ஆய்வாளரான மரியா ஜானியேர் ஆல்வ்ஸ் இந்த ஆய்வில் பங்கேற்றார்.

"இது இதற்கு முன் யாரும் செய்யாத ஒன்று. இதயத்தின் மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை இது ஏற்படுத்தக்கூடும்," என விளக்குகிறார் அவர்.

ஹூகோ "இதயநோய் அபாயம் இல்லாமல்" சவாலை முடிக்கும் வகையில் விஞ்ஞானிகள் "தீவிரமற்ற அளவுகளை முக்கியமாகக் கொண்டு" அவருக்கான வரம்புகளை நிர்ணயம் செய்தனர்.

ஹூகோ, மாதந்தோறும் எர்கோஸ்பைரோமெட்ரி (உடற்பயிற்சியின் போது ஒரு நபரின் சுவாசம் மற்றும் வளர்சிதை மாற்றச் செயல்பாடுகளை மதிப்பிடப் பயன்படுத்தப்படும் ஒரு முறை) மற்றும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஈ.சி.ஜி) சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார்.

"பெரிய அளவிலும், நுண்ணிய அளவிலும் இதயத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணிப்பது மற்றும் உடல் பயிற்சியால் ஏற்படும் ஒழுங்கின்மை, தகவமைப்பு அல்லது தவறான தகவமைப்பு ஆகியவற்றின் அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் அவற்றைக் கவனிப்பது இதன் நோக்கமாக இருந்தது," என்று மருத்துவர் ஆல்வ்ஸ் கூறினார்.

'பாதுகாப்பு மணடலம்'

தோட்டத்தில் புன்னகையுடன் அமர்ந்திருக்கும் ஹூகோ

பட மூலாதாரம்,DÓKIMOS PRODUÇÕES

படக்குறிப்பு, ஹூகோ ஃபாரியஸ் உடலின் மீதான அழுத்தத்தால் அவருக்கு காயங்கள் ஏற்படாமல் இல்லை

இந்த சவாலை ஹுகோ 2023, ஆகஸ்ட் 28ஆம் தேதி நிறைவு செய்தார். மொத்தமாக, 15,569 கி.மீ ஓடி முடிப்பதற்கு அவருக்கு சுமார் 1,590 மணிநேரம் எடுத்தது. இந்தச் சாதனை அவருக்கு ஒரு கின்னஸ் உலக சாதனையைப் பெற்றுத் தந்தது.

நாளின் எஞ்சிய பகுதியைத் தனது குடும்பத்துடன் நேரம் செலவிடவும், உடல் ஓட்டத்தால் ஏற்பட்ட அழுத்தத்தில் இருந்து மீள்வதற்கும், தசைகளை வலுப்படுத்துவதற்கான பயிற்சிகளைச் செய்வதிலும் கவனம் செலுத்த வசதியாக இரு குழந்தைகளின் தந்தையான இவர் எப்போதும் காலை நேரத்திலேயே ஒடினார்.

அதே போல் அவர் எப்போதும் சாவ் பாலோ மாகாணத்தில் உள்ள அமெரிக்கானா நகரில் கிட்டத்தட்ட ஒரே பாதையிலேயே ஓடினார்.

உடற்பயிற்சியின் கால இடைவேளை மற்றும் அளவு அதிகம் இருந்தபோது இதய தசை பாதிப்புக்கான எந்த அறிகுறியும் இல்லை என்று அறிவியல் இதழான அர்கிவோஸ் பிரேசிலிரோஸ் டி கார்டியோலோஜியாவில் (Arquivos Brasileiros de Cardiologia) வெளியிடப்பட்ட இந்த ஆய்வு முடிவு செய்தது.

எந்த இதய தசை மாற்றமும் பெரும்பாலும் இயற்கையான, ஆரோக்கியமான உடலியல் ரீதியானவையாக இருந்ததுடன் எந்த நோயின் அறிகுறியாகவும் இருக்கவில்லை.

"எல்லாவற்றுக்கும் மேலாக, விளையாட்டுப் பயிற்சியின் தீவிரம் மிதமாக இருக்கும் வரை அதிக அளவு விளையாட்டுப் பயிற்சிகளுக்கு ஏற்ப இதயம் தன்னைத் தகவமைத்துக் கொள்வது சாத்தியம் என்பதை இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது," என்கிறார் மருத்துவர் ஆல்வ்ஸ்.

"குறிப்பிட்ட வரம்புகள் இருந்தாலும், பயிற்சிகளுக்கு இடையில் உடல் சீராவதற்குப் போதிய அவகாசம் இருந்தால் பயிற்சி பெற்ற ஒரு வீரரின் இதயத்தால், மிகத் தீவிர அழுத்தத்தைப் பொறுத்துக் கொள்ள முடியும் என்ற கருத்தை இது வலுப்படுத்துகிறது" என இந்த ஆய்வுடன் தொடர்பில்லாத விளையாட்டு இதயவியல் நிபுணர் ஃபிலிப்போ சாவியோலி பிபிசியிடம் தெரிவித்தார்.

ஹூகோ ஓடிக்கொண்டிருக்கும் காட்சி

பட மூலாதாரம்,DÓKIMOS PRODUÇÕES

படக்குறிப்பு, ஃபாரியஸ் தனது இதயத்திற்கு எந்த பாதிப்பும் இல்லாமல் சவாலை நிறைவு செய்ததாக நிபுணர்கள் கூறுகின்றனர்

சராசரியாக 140 பிபிஎம் (ஒரு நிமிடத்திற்கான இதயத் துடிப்பு எண்ணிக்கை) என்ற இதயத் துடிப்புடன் ஹூகோ மிதமான தீவிரத்தில் ஓடினார். இது அவரது வயதிற்கு எதிர்பார்க்கப்படும் அதிகபட்ச இதயத் துடிப்பில் சுமார் 70-80% ஆகும் என்று ஃபிலிப்போ சாவியோலி கூறினார்.

"ஆக்ஸிஜன் பயன்பாட்டையும் ஆற்றல் உற்பத்தியையும் சமநிலையில் வைத்திருக்க வல்ல ஒரு பாதுகாப்பான வரம்புக்குள் இது அவரை வைத்திருந்தது," என்று அவர் விளக்கினார்.

மருத்துவர் சாவியோலியின் கூற்றுப்படி, "நீண்டநேர தினசரி உடற்பயிற்சியின் போதும்கூட இந்த வரம்புக்குள் ஓடுவது இதயத்திற்கு ஏற்படும் பாதிப்புகளான வீக்கம், வடு அல்லது அரித்மியா போன்றவை ஏற்படுவதற்கான ஆபத்தைக் குறைக்கிறது."

ஹூகோ இந்த சவாலை அதீத தீவிரத்தில் மேற்கொண்டிருந்தால், அதன் விளைவுகள் தீங்கு விளைவிக்கக் கூடியவையாக இருந்திருக்கும் என்று சுட்டிக்காட்டும் அவர், போதிய பயிற்சி அல்லது மருத்துவ கண்காணிப்பு இல்லாமல் இத்தகைய சவாலை மேற்கொள்வது ஆபத்தானது என்றும் எச்சரித்தார்.

"இதிலுள்ள அபாயம் கணிசமானது மற்றும் அறிவுறுத்தத்தக்கது அல்ல," என்றார் அவர்.

"உரிய தயாரிப்பு இல்லாமல் இதைச் செய்தால், அரித்மியா, வீக்கம் அல்லது திடீர் இறப்புகூட ஏற்பட வாய்ப்பு உள்ளது" என்றும் அவர் எச்சரித்தார்.

'உங்கள் திறன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்'

ஹூகோவை பொறுத்தவரை ஆய்வின் முடிவு ஒரு வரவேற்கத்தக்க ஆச்சர்யமாக இருந்தது. "நான் என் வாழ்வில் அடைய முடியும் என கற்பனைகூடச் செய்திராத உடல் தகுதியை எட்டினேன். அதிலும், பின்விளைவுகள் ஏதும் இல்லை என்பதைக் கவனிக்க வேண்டியது மிகவும் முக்கியம்" என்றார்.

ஆனால் அந்த சவால் அபாயங்கள் இல்லாததாக இருக்கவில்லை. "குளிர், வெயில், மழை, போக்குவரத்து, காயம் என நான் அனைத்து விதமான ஆபத்துகளையும் எதிர்கொண்டேன்" என்கிறார் அவர்.

அவர் மூன்றுமுறை வயிற்றுப்போக்கை தாங்கிக்கொள்ள நேர்ந்தது. அதில் மிக மோசமான வயிற்றுப் போக்கு ஐந்து நாட்களுக்கு நீடித்தது.

"நான் 4 கிலோ எடை இழந்தேன், என் உணவு மற்றும் தண்ணீர் உட்கொள்ளும் முறையைச் சீரமைத்துக்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் நாங்கள் தொடர்ந்து கொண்டிருந்தோம்."

தனது 120வது மாரத்தானை ஓடிய நேரத்தில், நெடுந்தூர ஓட்டப் பந்தய வீரர்கள் மத்தியில் பொதுவாகக் காணப்படும் பிளான்டர் ஃபாஸியிடிஸ் (Plantar fasciitis) எனப்படும் கால் பாதத்தின் அடிப்பகுதியில் வலியை ஏற்படுத்தும் வீக்கத்தால் அவர் பாதிக்கப்பட்டார்.

பின்னர் தனது 140ஆவது மாரத்தானை ஒட்டிய கட்டத்தில் கீழ்வயிறு மற்றும் உள் தொடையில் உள்ள தசைநார்கள் மற்றும் தசைகளைப் பாதிக்கும் புபால்ஜியா (Pubalgia) அல்லது விளையாட்டால் ஏற்படும் ஹெர்னியா எனப்படும் இடுப்புக்குக் கீழ் பகுதியில் ஏற்படும் காயத்தால் பாதிக்கப்பட்டார்.

தனது குடும்பத்தினருடன் கைகோர்ந்து இறுதி கட்டத்தை நிறைவு செய்த ஹூகோ

பட மூலாதாரம்,DÓKIMOS PRODUÇÕES

படக்குறிப்பு, ஃபாரியஸ் தனது 366ஆவது மாரத்தானின் இறுதிக் கட்டத்தை தனது குடும்பதினருடன் சேர்ந்து கடந்தார்

அதன் பின்னர் ஹூகோ அந்த அனுபவம் குறித்து ஒரு புத்தகத்தை எழுதினார். அத்துடன் அவர் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறார்.

அவரது அடுத்த சவால், அமெரிக்க கண்டங்களின் முழு நீளத்தையும் - அலாஸ்காவில் உள்ள ப்ரூதோ பே (Prudhoe Bay) முதல் அர்ஜென்டினாவில் உள்ள உஷுவையா (Ushuaia) வரை - ஓடி முடிக்கும் முதல் மனிதராக வேண்டும் என்பதுதான்.

"உடல் உழைப்பின் நன்மைகள் குறித்தும் மனிதர்கள் அற்புதமான விஷயங்களைச் செய்யக் கூடியவர்கள் என்பது குறித்தும் உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கம்," என்று அவர் கூறினார்.

"யாரும் தினசரி மாரத்தான் ஓட வேண்டிய தேவை இல்லை. ஆனால் அனைவரும் தங்கள் திறன் மீது உண்மையாக நம்பிக்கை கொள்ள வேண்டும்" என்கிறார் ஹூகோ.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c8xv9n29gkro

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.