Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள்  விசாரணைகளில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அணுகுமுறை

July 16, 2025

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள்  விசாரணைகளில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அணுகுமுறை 

— வீரகத்தி தனபாலசிங்கம் — 

இலங்கை அரசாங்கங்கள் பொறுப்புக்கூறல் விடயத்தில் பாதிக்கப்பட்ட மக்களின்  நம்பிக்கையை வென்றெடுக்கக்கூடிய முறையில் இதுவரையில் செயற்பட்டதில்லை என்பதே உண்மை. உள்நாட்டுப்போரின் இறுதிக்கட்டங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களாக இருந்தாலென்ன, ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களாக இருந்தாலென்ன உண்மையைக் கண்டறிவதில் அரசாங்கங்களுக்கு அக்கறை இருப்பதாக நம்புவதற்கு காரணம் இல்லை.  இது விடயத்தில் முன்னைய அரசாங்கங்களுக்கும் ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கும் இடையில் பெரிதாக வேறுபாடு எதையும் காணவும் முடியவில்லை.

பொருளாதாரக் குற்றங்களுக்கு பொறுப்பானவர்களை சட்டத்தின் முன்னிறுத்துவதற்கு  அரச நிறுவனங்கள்  சுயாதீனமாகச் செயற்பட  அனுமதிக்கப்படுவதைப் போன்று பொருளாதாரத்துடன் சம்பந்தப்படாத குற்றங்கள் விடயத்தில் நம்பகத்தன்மையுடன் அரசாங்கம் செயற்படுவதாக தெரியவில்லை. இந்த விவகாரங்கள் தொடர்பில் சர்வதேச சமூகத்துடனான ஊடாட்டங்களைப் பொறுத்தவரையிலும் கூட  முன்னைய அரசாங்கங்கள் கடைப்பிடித்த அதே  அணுகுமுறைகளையே இன்றைய அரசாங்கமும் கடைப்பிடிக்கிறது. ஐக்கிய நாடுகளின் அமைப்புக்களுடன் ஒத்துழைத்துச் செயற்படுவதாக அவ்வப்போது உறுதியளிக்கின்ற அதேவேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களை அரசாங்கம் நிராகரிக்கிறது. 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வொல்கர் டேர்க் அண்மையில் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின்போது அவருக்கு சகல ஒத்துழைப்புகளையும் அரசாங்கம் வழங்கியது. அவரும் கூட பொறுப்புக்கூறல் விடயத்தில் புதிய அரசாங்கத்திடம் ஒப்பீட்டளவில்  நேர்மறையான அணுகுமுறையை அடையாளம் கண்டதைப் போன்று சில கருத்துக்களை வெளியிட்டார். 

தனது விஜயத்தின் இறுதியில் கொழும்பில் செய்தியாளர்கள் மகாநாட்டில் உரையாற்றிய வொல்கர் டேர்க்  இலங்கையின் பொறுப்புக்கூறல் விவகாரத்தைக் கையாளுவதற்கு சர்வதேச தராதரங்களுடன் கூடிய உள்நாட்டுப் பொறிமுறை ஒன்றே உகந்தது என்று கூறினார். அவரது இந்த கருத்து அரசாங்கத்துக்கு பெரும் திருப்தியைக்  கொடுத்திருக்கும் என்கின்ற அதேவேளை, உள்நாட்டுப் பொறிமுறைகள் தொடர்பில் இதுவரையில்  கசப்பான அனுபவங்களைக் கொண்ட பாதிக்கப்பட்ட மக்களுக்கு அது கடுமையான  ஏமாற்றமாகவே இருந்தது. 

மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்  இலங்கை விஜயத்தின்போது பெற்றுக்கொண்ட அனுபவங்கள்  எதிர்வரும் செப்டெம்பரில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத்தொடரில் அவர் சமர்ப்பிக்கவிருக்கும் அறிக்கையில் நிச்சயமாக பிரதிபலிக்கும். மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் பொறுப்புக்கூறல் விவகாரத்தைக் கையாளும் மைய நாடுகள் எத்தகைய புதிய தீர்மானத்தைக் கொண்டு வரப்போகின்றன என்பதே தற்போது சம்பந்தப்பட்ட சகல தரப்புகளினதும் எதிர்பார்ப்பாக இருக்கிறது. 

மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சான்றுகளைச் சேகரிப்பதற்கு மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் ஒரு  பொறிமுறையை அமைப்பதற்கு வழிவகுத்த (தற்போது நடைமுறையில் இருக்கும்) 51/1  தீர்மானத்தை மேலும் நீடிப்பதே பயனுடையதாக இருக்கும் என்று மனித உரிமைகள் ஆர்வலர்கள் பலர் கருதுகிறார்கள். புதியதொரு தீர்மானம் சிலவேளைகளில் சான்றுகளைச் சேகரிக்கும் பொறிமுறையை இல்லாமல் செய்துவிடவும் கூடும் என்ற நியாயமான அச்சம் அவர்களுக்கு இருக்கிறது..

யாழ்ப்பாணம் செம்மணியில் தற்போது தொடர்ச்சியாக தோண்டியெடுக்கப்பட்டுவரும் மனித எலும்புக் கூடுகள் தொடர்பில் சர்வதேச விசாரணையே முன்னெடுக்கப்பட வேண்டும் என்று வடக்கில் கோரிக்கைகள் தீவிரமடைந்திருக்கின்றன. சர்வதேச விசாரணைப் பொறிமுறையை வலியுறுத்தி எதிர்வரும் 26 ஆம் திகதி மக்கள் போராட்டத்துக்கு வடக்கு – கிழக்கு சமூக இயக்கம்  என்ற ஒரு அமைப்பு அழைப்பு விடுத்திருக்கிறது.  

புதைகுழிகளை தோண்டும் நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கிவருவது வரவேற்கத்தக்கது. தேசிய மக்கள் சக்தியை தவிர வேறு கட்சி ஆட்சியதிகாரத்தில் இருந்திருந்தால் இதேபோன்ற ஒத்துழைப்பு கிடைத்திருக்க வாய்ப்பு இருந்திருக்குமோ தெரியவில்லை. . ஆனால், கொழும்பில் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் செய்த அறிவிப்பை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது செம்மணி விவகாரத்தில் சர்வதேச ஈடுபாட்டுக்கான சாத்தியங்கள் குறித்து சந்தேகம் எழுகிறது.

ஆனால், இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானமும் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரனும் ஜனாதிபதி திசாநாயக்கவுக்கு கடந்த வெள்ளிக்கிழமை அனுப்பிய விரிவான கடிதம் ஒன்றில் செம்மணியிலும் வேறு பகுதிகளிலும் கண்டுபிடிக்கப்படும் மனிதப் புதைகுழிகள் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களையும் இன அழிப்பு நடவடிக்கைகளையும் வெளிக்காட்டுவதாக சுட்டிக்காட்டி,  அவை தொடர்பிலான விசாரணைகளுக்கு சர்வதேச ஒத்துழைப்பு அவசியம் என்று வலியுறுத்தியிருக்கின்றனர். 

அதேவேளை, செம்மணி புதைகுழி விவகாரத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நேர்மையுடன் நடந்து கொள்ளப் போவதில்லை என்று கடந்த வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறினார். அந்த புதைகுழிகளுக்கு பொறுப்புக்கூற வேண்டிய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தில் அவருடன் சேர்ந்து நின்ற ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) போரை முழுவீச்சில் முன்னெடுப்பதற்கு ஊக்கம் கொடுத்ததை அவர் காரணமாகவும் சுட்டிக்காட்டினார். 

செம்மணியில் தோண்டியெடுக்கப்படும் மனித எலும்புக்கூடுகள் இலங்கையின் போர்கால அட்டூழியங்கள்  தொடர்பில் மீண்டும் சர்வதேச மட்டத்தில் கூடுதல் கவனத்தை ஈர்க்கத்தொடங்கியிருக்கின்றன. ஆனால், அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது தடவையாக பதவிக்குவந்த பின்னரான சூழ்நிவையில்  சர்வதேச புவிசார் அரசியலிலும் உலகளாவிய  பாதுகாப்பு நிகழ்ச்சி நிரலிலும்  ஏற்பட்டிருக்கும் விபரீதமான மாற்றங்களுக்கு மத்தியில் இலங்கை பிரச்சினையில் சர்வதேச சமூகத்தின் முன்னணி வல்லாதிக்க நாடுகள் எந்தளவுக்கு அக்கறை காட்டும் என்ற கேள்வி எழுகிறது. 

இது இவ்வாறிருக்க, ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகள் குறித்து ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க கடந்த வாரம் தெரிவித்த ஒரு கருத்து கவனத்துக்குரியதாக இருக்கிறது.  

கொழும்பு பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகையின் குருத்துவ வாழ்வின் 50 வருட நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி திசாநாயக்க ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் உள்ள உண்மையைக் கண்டறிவதற்கு அரசாங்கம் தன்னைத் தானே விசாரணைக்கு உட்படுத்தவேண்டியிருக்கிறது என்றும் அது மிகவும் சவால்மிக்க பணி என்றும்  கூறினார். 

அந்த தாக்குதல்களுக்கு பின்னால் உள்ள உண்மை கண்டறியப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதிகிடைக்கச் செய்யப்படும் என்று அவர்  உறுதியளித்தார்.

“ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கச் செய்ய வேண்டும் என்று கார்டினல் ரஞ்சித் அடிக்கடி விடுகின்ற வேண்டுகோளை அரசாங்கம் அக்கறையுடன் கவனத்தில் எடுக்கும். பல சந்தர்ப்பங்களில் அமைதியான முறையில் அந்த வேண்டுகோளை விடுக்கும் கார்டினல் சில சந்தர்ப்பங்களில் குண்டுத் தாக்குதல்களைப் பேசும்போது உணர்ச்சி வசப்பட்டுவிடுகிறார். ஆனால் நாம் அவரின் வேண்டுகோளுக்கு மதிப்பளிப்போம். நீதியான சமுதாயம் ஒன்றைக் கட்டியெழுப்புவதற்கு குடிமக்களுக்கு முன்னுதாரணமாக விளங்கக்கூடிய தலைவர்களே இன்று இலங்கைக்கு தேவைப்படுகிறார்கள்” என்றும் ஜனாதிபதி தனதுரையில் மேலும் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் பேசிய கார்டினல் ரஞ்சித் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை ஒன்றை நடத்தி அவற்றின் பின்னணியில் இருந்த சதியைக் கண்டறியுமாறு ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தார். ஏற்கெனவே மூன்று அரசாங்கங்களிடம் இவ்வாறு வேண்டுகோள் விடுத்தபோதிலும், எந்த பயனும் இல்லாத நிலையில், சர்வதேச விசாரணையைக் கோரப்போவதாக கார்டினல் எச்சரிக்கை  விடுத்த பல சந்தர்ப்பங்கள் உண்டு.  

ஜெனீவாவுக்கு சென்று  முன்னாள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரிடமும் அவர் முறைப்பாடு செய்தார். அண்மையில் இலங்கை வந்திருந்த வொல்கர் டேர்க்கும் கார்டினலைச் சந்தித்துப்  பேசினார். இப்போது அவர் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உண்மையைக் கண்டறியும் என்று நம்புகிறாரோ இல்லையோ வேண்டுகோள் விடுப்பதை தவிர வேறு வழியில்லை. 

அரசாங்கம் தன்னைத்தானே விசாரணைக்கு உட்படுத்த வேண்டியிருக்கிறது என்று ஜனாதிபதி திசாநாயக்க கூறியது தொடர்பாக கடந்த வாரம் பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்களை நடத்திய கட்டமைப்பைச் சேர்ந்தோர் தற்போதைய அரசாங்கத்தின் கீழும் இயங்குகிறார்கள்  என்பதை ஜனாதிபதி தெரிந்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

அதேவேளை அரசாங்கம் தன்னைத்தானே விசாரணை செய்ய வேண்டியிருக்கிறது என்று ஜனாதிபதி குறிப்பிட்டதன் அர்த்தம் சவால்மிக்க நிலைவரத்துக்கு மத்தியிலும், உண்மை கண்டறியப்படும் என்பதேயாகும் என்று பொதுப்பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் கூறினார்.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரிகளை கண்டறிவதற்கான விசாரணைகள் ஏன் தொடர்ச்சியாக தடங்கலுக்கு உள்ளாகின்றன? உண்மையைக் கண்டறிவதில் முன்னைய அரசாங்கங்களுக்கு அக்கறை இல்லாமல் இருந்திருக்கலாம் என்பதுடன் எவரையாவது பாதுகாக்க வேண்டிய தேவையும் கூட இருந்திருக்கலாம் என்று வைத்துக் கொண்டாலும், தற்போதைய அரசாங்கத்துக்கு  என்ன பிரச்சினை இருக்கிறது? 

2019 ஏப்ரில் 21 ஆம் திகதி இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் கடந்த ஆறு வருட காலப்பகுதியில் இரு நீதிமன்ற வழக்குகள் உட்பட ஏழு உள்நாட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.  குண்டுத் தாக்குதல்கள் குறித்து விசாரணை நடத்திய ஆறு நாடுகளைச் சேர்ந்த புலனாய்வுத்துறை அதிகாரிகள் அறிக்கைகளை சமர்ப்பித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும்,  ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருந்தபோது நியமித்த இரு விசாரணைக் குழுக்களின் அறிக்கைகள் வெளிச்சத்துக்கு வரவில்லை.

குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்ற நாட்களில் ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேன  முதலில் 2019 ஏப்ரில் 22 ஆம் திகதி உயர்நீதிமன்ற நீதிபதி விஜித மலலகொட தலைமையில் விசாரணைக்குழு ஒன்றை நியமித்தார். அந்த குழு அதன் அறிக்கையை சிறிசேனவிடம் 2019 ஜூன் 10 ஆம் திகதி கையளித்தது. 

இரண்டாவதாக, குண்டுத் தாக்குதல்கள் நடைபெற்று ஒரு மாதத்துக்கு பிறகு 2019 மே 22 பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒன்றின் மூலமாக அன்றைய பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்று நியமிக்கப்பட்டது.

மூன்றாவதாக, ஜனாதிபதி சிறிசேன அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் மூலமாக 2019 செப்டெம்பர் 20 ஆம் திகதி உயர்நீதிமன்ற நீதிபதி ஜனக்க டி சில்வா தலைமையில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்றை நியமித்தார். அந்த ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் 2021 பெப்ரவரி முதலாம் திகதி நீதியரசர் சில்வாவினால் கையளிக்கப்பட்டது.

நான்காவதாக, மக்களின் பாதுகாப்புக்கு பொறுப்பானவர்களாக இருந்த ஜனாதிபதி சிறிசேன உட்பட பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு எதிராக 2019 ஆம் ஆண்டில் 12 அடிப்படை உரிமைமீறல் மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

ஜனாதிபதி சிறிசேன, முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர, முன்னாள் அரச புலனாய்வுச்சேவை தலைவர் நிலாந்த ஜெயவர்தன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் தேசிய புலனாய்வு தலைவர் சிசிர மெண்டிஸ்  ஆகியோர் குண்டுத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டை வழங்க வேண்டும் என்று 2023 ஜனவரி 13 ஆம் திகதி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஐந்தாவதாக, பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சி ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களின் பின்னணியில் அரச புலனாய்வு சேவை இருந்ததாக கூறும் வீடியோ ஒன்றை ஒளிபரப்பியது. அதையடுத்து கிளம்பிய சர்ச்சை காரணமாக அந்த வீடியோவில் வெளியான தகவல்களை ஆராய்வதற்கு  ஜனாதிபதி விக்கிரமசிங்க ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி எஸ். ஐ. இமாம் தலைமையில் மூவர் கொண்ட குழுவை நியமித்தார்.

ஆறாவதாக, பயங்கரவாத தாக்குதல்களுடன் தொடர்புடைய புலனாய்வு அம்சங்களை ஆராய்வதற்கு 2024 ஜூனில் ஜனாதிபதி விக்கிரசிங்க முன்னாள் மேல்நீதிமன்ற நீதிபதி ஏ.என்.ஜே.டி. அல்விஸ்  தலைமையில் குழுவொன்றை நியமித்தார். முன்னைய ஐந்து விசாரணைக் குழுக்களுமே புலனாய்வு அமைப்புக்களின் குறைபாடுகளையும் தவறுகளையும்  விசாரணை செய்ததுடன் புலனாய்வுத்துறைகளின் தலைவர்கள் இழப்பீட்டை வழங்கவேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் விக்கிரமசிங்க எதற்காக இன்னொரு விசாரணைக் குழுவை  நியமித்தார் என்று அந்த நேரத்தில் கேள்வி எழுந்தது.

 உள்நாட்டு விசாரணைகள் சகலவற்றையும் தவிர,  ஜனாதிபதி விக்கிரமசிங்க பேர்லினில்  ஜேர்மன் தொலைக்காட்சி ஒன்றுக்கு 2023  அக்டோபரில் அளித்த நேர்காணலில்  ஆறு வெளிநாடுகளின் விசாரணையாளர்கள் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் குறித்து அறிக்கைகளை சமர்ப்பித்ததாகவும்  கூறினார்.

மேலும், குண்டுத் தாக்குதல்களின் பின்னணியில் பெரிய ஒரு சதித்திட்டம் இருந்தது என்று அன்றைய சட்டமா அதிபர் டப்புல டி.லிவேரா தெரிவித்த கருத்து தொடர்பாக ஆராய்வதற்கு குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி விக்கிரமசிங்க நடவடிக்கை எடுக்கவிருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால், அது நடைபெறவில்லை. 

இவ்வாறாக, ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுக்களுக்கு என்று  ஒரு நீண்ட வரலாறே இருக்கிறது. இவற்றில் ஜனாதிபதி சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையே மிகவும் முக்கியமானது. ஆனால்,  அதில்  கூறப்பட்டவற்றின் பிரகாரம் நடவடிக்கைகளை எடுப்பதற்கு எந்த அரசாங்கமும் முன்வரவில்லை.   தாக்குதல்களின் சூத்திரதாரிகளை இன்னமும் கண்டுபிடிக்க முடியாமல் இருக்கிறது. ஜனாதிபதி திசநாயக்கவின் அரசாங்கமும் விசாரணைகளை நடத்தப்போவதாக அறிவிக்கிறதே தவிர முன்னைய ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரகாரம் நடவடிக்கைகளை எடுக்கத்தயாராக இல்லை. 

  ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களின் ஆறாவது வருட நினைவுதினமான கடந்த ஏப்ரில் 21 ஆம் திகதியளவில்  தாக்குதல்களின் சூத்திரதாரிகள் குறித்து சில  முக்கியமான தகவல்களை  வெளியிடக்கூடியதாக இருக்கும் என்று  உள்ளூராட்சி தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் ஜனாதிபதி கூறினார். அவரது அறிவிப்பு நாட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், இறுதியில் எல்லாம் புஷ்வாணமாகவே போனது. முன்னர் மறைத்துவைக்கப்பட்ட ஆவணங்கள் உட்பட  முன்னைய  ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை  மேலதிக விசாரணைகளுக்காக  குற்றவியல் புலனாய்வு திணைக்களத்துக்கு அனுப்பிவைத்திருப்பதாக அன்றைய தினம் திசநாயக்க அறிவித்தார்.அந்தளவில் அந்த விவகாரம் தற்போது நிற்கிறது. 

இப்போது அவர் கார்டினல் மல்கம் ரஞ்சித் முன்னிலையில் அரசாங்கம் தன்னைத்தானே விசாரணைக்கு உட்படுத்த வேண்டியிருக்கிறது என்று ஜனாதிபதி திசாநாயக்க  கூறியிருக்கிறார். குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரிகள் இதுவரையில் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பதற்கு தனது அரசாங்கத்துக்கும் ஓரளவு பொறுப்பு இருக்கிறது என்பதா அவரது அந்தக் கூற்றின் அர்த்தம்? சூத்திரதாரிகள் என்றைக்காவது சட்டத்தின் முன்னால் நிறுத்தப்படக்கூடிய சூழ்நிலை தோன்றும் என்று நம்பவது (இதுகாலவரையான நிகழ்வுப் போக்குகளை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது )  கஷ்டமாக இருக்கிறது. 

(ஈழநாடு)

https://arangamnews.com/?p=12156

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.