Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறுகதை - 183 / "கறுப்பு ஜூலை 1983, என்னை கருப்பாக்கியது" [ஒரு தேசத்தின் ஆன்மாவில் எரிந்த காதல் கதை]

அது ஜூலை 1983, இலங்கையின் தலைநகரம் கொழும்பு, ஈரப்பதமான, சாம்பல் நிறத்துடன் அதன் வழக்கமான பருவ மழையின் தாக்கத்தில் ஆழ்ந்து யோசனை செய்துக் கொண்டு இருந்தது. ஆனால் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிறப்பு மிக்க மாணவர்கள் கூடும் மண்டபங்களுக்குள், ஒரு அமையான, ஆனால் ஆவேசமான எதிர்ப்பு அங்கொன்று இங்கொன்றாக மின்னியது. அதன் குரல்கள், ஒரு மூலையில் குளிர்பானத்தை இரசித்து சுவைத்துக் கொண்டு இருந்த இரண்டு காதலர்கள் காதிலும் விழுந்தது. ஒருவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இறுதியாண்டு அரசியல் அறிவியல் மாணவன் பிரதீபன் மற்றவர் மட்டக்களப்பைச் சேர்ந்த உற்சாகமான தமிழ் இலக்கிய பட்டதாரி இரண்டாம் ஆண்டு மாணவி அருந்ததி.

அவர்களின் காதல் அமைதியாக அங்கே இரண்டு ஆண்டுகளாக பூத்து குலுங்கின. திருமண மேடையில் இன்னும் அருந்ததி பார்க்கவில்லை என்றாலும், தினம் அருந்ததியை பார்த்தவண்ணம் தான் பிரதீபன் இருந்தான். அவர்கள் பல்கலைக்கழக வாளாவிலும், பூந்தோட்டத்திலும் நூலகத்திலும், உணவகத்திலும் சந்திக்கத் தவறுவதில்லை. அவர்கள் இலக்கியம் பேசிக் கொண்டே காதல் வளர்த்தார்கள். பாவேந்தர் பாரதியையும் பாரதிதாசனையும் படித்து, அதில் அரசியல் காணும் பிரதீபனுக்கும், சங்க இலக்கியத்தை நயமாக வாசித்து அதில் காதல் சுவை காணும் அருந்ததிக்கும் இடையில் பசுமைக் காதல் வளர்ந்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை. அவன் நீதியைக் கனவு கண்டான். அவள் இன்பக் காதலைக் கனவு கண்டாள். என்றாலும் ஒன்றாக, அவர்கள் சமமான, ஒன்றுபட்ட மற்றும் அமைதியான எதிர்காலத்தைக் கனவு கண்டார்கள். ஆனால் வரலாற்றில் ஜூலை 23 இல், வேறு திட்டங்கள் இருந்தது அவர்கள் இருவருக்கும் தெரியாது!

ஜூலை 23 ஆம் தேதி, சில அரசுக்கு எதிரான தமிழ் இளைஞர்களால், 13 இலங்கை இராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட செய்தி இடி முழக்கம் போல வெடித்தது. அதைத் தொடர்ந்து வந்தது துக்கம் அல்ல - மாறாக அரசால் திட்டமிடப்பட்ட பழிவாங்கல்.

அருந்ததியும் பிரதீபனும் அமைதியான இரவு உணவிலிருந்து திரும்பி வந்தபோது, வீதிகள் போர்க்களங்களாக மாறின. வாக்காளர் பட்டியல்கள் மற்றும் தடிகளுடன், கையில் தீப்பிழம்புகளையும், கண்களில் வெறுப்பையும் ஏந்திய சிங்கள கும்பல்கள், கட்டவிழ்த்து விடப்பட்ட மிருகங்களைப் போல தமிழ் வீடுகளை வேட்டையாடினர். அவர்களின் தங்குமிடம், அவர்களின் புகலிடம் தீக்கிரையாக்கப்பட்டது. ஒரு சில மணித்தியாலத்துக்குள் 3,000 உயிர்கள். 18,000 வீடுகள். 5,000 வியாபாரங்கள். நெருப்பு மட்டுமல்ல, கலங்காத மௌனமும் எரிந்தது.

மகாவம்சத்தில் ஒரு கதை இருக்கிறது. 'கர்ப்ப பெண்ணான, ராணி விகாரமகாதேவிக்கு விசித்திரமான ஆசைகள் ஏற்பட்டன. தமிழ் மன்னன் எல்லாளனுடைய வீரர்களிலே முதல் வீரனுடைய கழுத்தை வெட்டிய கத்தியைக் கழுவ உதவிய நீரை, வெட்டுண்ட அந்த தலை மீது நின்று கொண்டு குடிக்க வேண்டும் அது என்கிறது' மகாவம்சம் அத்தியாயம் 22 - 44 & 45 . அந்தக் காடையர் கூட்டத்தை கண்ட இருவருக்கும், அவர்களின் 'கொடூர அவா' எப்படி இருக்கும் என்று ஊகிக்க முடிந்தது. உடனடியாக அவர்கள் அங்கிருந்து ஓட முயன்றனர்.

என்றாலும் அவர்களைச் சிக்கவைத்து விட்டன. பிரதீபனைத் துரத்தி, சாலையில் பாய்ந்து பிடித்து, சாலையின் நடுவில் இழுத்துச் செல்லப்பட்டு உயிருடன் எரிக்கப்பட்டான். அவன் மார்பில் ஒரு டயர் சுற்றிப் போட்டு, மண்ணெண்ணெய் நனைந்த துணியால் எரிக்கப்பட்டது. அவனுடைய அலறல் சத்தம் அவள் கதை அடைத்தது. அருந்ததி தானும் விழ முயன்றால். ஆனால், அவர்களில் இருவர் அவளை பிடித்து ஏதேதோ சொல்லிக் கொண்டு இருந்தார்கள். அவள் தவித்து கண்ணீர் சிந்தியபடி துடித்துக் கொண்டு நின்றாள். அவர்கள் சிரித்தார்கள்.

பத்தினி தெய்வம் என்று இன்னும் இலங்கையில், சிங்களவர் உட்பட, வழிபாடும் கண்ணகி போல் அவள் கண்கள் சிவந்து எரிந்து கொண்டு இருந்தன. அவர்களுக்கு அவளின் கண்ணைப்பற்றி, பெண்மை பற்றி பிரச்சனை இல்லை. அவளின் உடலுக்காக ஒன்றின்பின் ஒன்றாக மிருகங்களாக வரிசையில், பிரதீபனின் உடல் எரிந்து முடியுமட்டும் ஆனந்தமாக வேடிக்கை பார்த்தனர். “மலரினும் மெல்லிது காமம் சிலர் அதன் செவ்வி தலைப்படு வார்” என்றார் வள்ளுவர்' ஆனால் மிருகங்களுக்கு அது தெரியப்போவதில்லை. அவர்களின் காம அவசரத்தில், அவளின் ஆடைகளை கிழித்தனர், பலர் சேர்ந்து கற்பழித்தனர். அவளுடைய தந்தையாக இருக்கும் அளவுக்கு வயதானவர்களால் கூட பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாள். “காதலுக்கு நான்கு கண்கள், கள்வனுக்கு இரண்டு கண்கள், காமுகனின் உருவத்தில் கண்ணுமில்லை காதுமில்லை” அவளின் இலக்கிய வாய் முணுமுணுத்தது!

பின்னர் தெஹிவளை கடற்கரையின் மணல் திட்டுகளில், மயக்க நிலையில், அவள் இறந்து விட்டாள் என்று அவளின் உடலை தூக்கி எறிந்தனர். அங்கே வீதி ஓரத்தில் புத்தர் சிலையாக இருந்தார்! இத்தனைக்கும் இலங்கை அரசு எந்த ஊரடங்கு சட்டமோ அல்லது காவல் துறையினரையோ பயன்படுத்த வில்லை. தூண்டி விடப்பட்ட காடையர் கூட்டத்தின் விசித்திரமான ஆசைகள் நிறைவேறட்டும் என்று ஒரு சில நாள் காத்திருந்தது! அங்கு ஆர்ப்பரிக்கும் அலைகள் அவளுடைய முனங்குதலைக் கண்டு, தங்கள் கைகளால் அவளை ஆறுதல் படுத்தின. கதிரவன் தன் கரங்களைப் பரப்ப, காகங்கள் கூடிப் பறக்க அவள் சற்று கண்களைத் திறந்தாள். என்றாலும் அவள் உடம்பால் எழுந்திருக்க முடியவில்லை. மீண்டும் அங்கே கண்மூடிக் கிடந்தாள்!

பின்னர், விதி தலையிட்டது. அன்று காலை கடற்கரையில், தன் மனைவியுடன் நடந்து சென்ற கொண்டு இருந்த, நடுத்தர வயது சிங்கள மருத்துவர் டாக்டர் விஜேசிங்கே [විජේසිංහ], இரத்தக்கறை படிந்த, அரைகுறை கிழிந்த உடுப்புடன் ஒரு பெண்ணின் உருவத்தை அலைகளின் மோதலுக் கிடையில் கண்டார். அவரது மனசாட்சி அவரது பயத்தை விட வலிமையானது.

அவரும் அவரது இரக்கமுள்ள பள்ளி ஆசிரியரான மனைவி நேத்மியும் [නෙත්මි], அருந்ததியை தமது வீட்டிற்கு காவிச் சென்று, நடுங்கும் கைகளால் அவளது காயங்களைக் கழுவி, அதற்கு ஏற்ற, தன்னிடம் இருந்த முதல் உதவி மருந்துகள் மூலம் சிகிச்சை அளித்தார். அதன் பின் அவளுக்குக் கஞ்சி மற்றும் இளநீர் கொடுத்தார்கள். என்றாலும் அவள் பேசவே இல்லை. அவள் தான் யார் என்று, தனக்கு என்ன நடந்தது என்று மூச்சு விடவே இல்லை. அவர்களும் அதைக் கேட்கவில்லை. என்றாலும் அவள் ஒரு தமிழிச்சி என்று மட்டும், அன்று நிலவிய சூழலால் அவர்களுக்கு புரிந்தது. அவர்கள், அவளை ஒரு அப்பாவி இலங்கைப் பெண்ணாக மட்டுமே பார்த்தார்கள். அப்பத்தான் அவளுக்கு புத்தர் இன்னும் வாழ்கிறார் என்ற நம்பிக்கை பிறந்தது!

மூன்று நாட்கள், வீட்டிலேயே அவர்களால் முதலுதவி. உணவு, சுகாதாரம், பாதுகாப்பு என எல்லா வசதியும் இரகசியமாக செய்தனர். பிறகு இறுதியாக, அனைத்துலக கண்களை நிர்வகிக்க அல்லது சரிசெய்ய அரசு தயக்கத்துடன் ஊரடங்கு உத்தரவு கொண்டு வந்ததும், டாக்டர் விஜேசிங்கே தனது மருத்துவமனை சலுகைகளைப் பயன்படுத்தி, அவளை ஒரு தொலைதூர உறவினராகக் காட்டி, கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதித்தார். அங்கு, அருந்ததி மெதுவாக குணமடைந்தாள். ஆனால் ஞாபகங்கள் 'மனிதம்' எரிந்த அந்த நிலத்தில் தான் இருந்தன. பிரதீபனின் அழுகையும், தன்னைப்போல பரிதாபமடைந்த பெண்களின் ஓசையும், மனதில் ஒலித்துக் கொண்டிருந்தன. பல மாதங்களின் பின் அவளுடைய உடல் குணமடைந்தது - ஆனால் அவளுடைய ஆன்மா மட்டும் குணமடையவில்லை. அது இன்னும் எதையெதையோ தேடிக் கொண்டு இருந்தது.

பௌத்தத்தில் உள்ள ஐந்து கட்டளைகளில் (பஞ்ச - சீலம்) மூன்றாவது கட்டளை “Kāmesu micchācāra veramaṇī sikkhāpadaṃ samādiyāmi” என்கிறது, அதாவது, “பாலியல் துஷ்பிரயோகத்திலிருந்து விலகுவதற்கான பயிற்சி விதியை நான் ஏற்றுக்கொள்கிறேன்.” என்கிறது. ஆனால் அவள் அதை நம்பும் நிலையில் அன்று - பிரதீபனை எரித்து, தன்னை அனாதையாக்கி, தன் உடலை கெடுத்த அந்த மிருகங்களை பார்த்த பொழுது, கொடூரத்தை அனுபவித்த பொழுது இருக்கவில்லை. ஆனால் இன்று டாக்டர் குடும்பத்தை பார்த்த பொழுது கொஞ்சம் ஆறுதல் அடைந்தாள்.

ஆனால் இன்னும் அவள் சில நேரங்களில் தூக்கத்தில் கத்தினாள். அவள் சில நேரங்களில் கண்ணாடியில் பிரதீபனின் எரியும் கண்களைப் பார்ப்பாள். அவள் திருமணத்தை முற்றிலும் மறுத்தாள். அதுமட்டும் அல்ல, அவள் தன் மேல் இன்று காட்டும் அனுதாபத்தை மறுத்தாள். அவள் நினைவு முழுமையாகத் திரும்பிய போது, அவள் நீதியின் குரலாக எழுந்தாள்!

விஜேசிங்கே குடும்பத்தால் சகோதரியாக போற்றப் பட்ட அவள், இனப்படுகொலையில் இருந்து தப்பிய தமிழ்ப் பெண் அருந்ததி பிரதீபன் என்று தன் அடையாளத்தைத் தக்க வைத்துக் கொண்டதுடன், அவள் ஒரு மனித உரிமை வழக்கறிஞரானாள். அவளது தீ மெதுவாக ஆனால் வலுவாக எரியத் தொடங்கியது!

அவள் வெலிக்கடை முதல் செம்மணி வரை, கொக்கடிச்சோலை முதல் முள்ளிவாய்க்கால் வரை வழக்குகளை எதிர்த்துப் போராடினாள். கருப்பு ஜூலையையோ அல்லது அதைத் தொடர்ந்து வந்த இருண்ட மௌனத்தையோ அவள் ஒருபோதும் மறக்கவில்லை.

இன்று ஜூலை 23, 2025. கொழும்பு மீண்டும் வெட்கத்தின் கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. தற்போது 62 வயதான அருந்ததி, விஜேசிங்கே குடும்பத்துடன் நடந்து செல்கிறார் - ஒருபுறம் வயதான டாக்டர் விஜேசிங்கே, மற்றும் அவரது பேரன், சட்டக் கல்லூரி மாணவன், மறுபுறம் ஓய்வுபெற்ற ஆசிரியை நேத்மியும் மற்றும் அவரது பேத்தி பாடசாலை மாணவி. "நீதி தாமதமானது இனப்படுகொலை மறுக்கப்பட்டது" என்று எழுதப்பட்ட ஒரு பலகையை சிங்களத்திலும் தமிழிலும் ஏந்தி, அவர்கள் காலி முகத்திடலைக் கடந்து

ஜனாதிபதி செயலகத்தின் வாயில்களை நோக்கி நடக்கிறார்கள்! பிரதீபனின் புகைப்படத்தை டாக்டரின் பேத்தி தூக்கி பிடித்துக் கொண்டு இருந்தாள். பேரன் புத்தரின் பஞ்சசீலத்தை காட்சிப் படுத்திக் கொண்டு நடந்தான்.

கூட்டமும் மெல்ல மெல்ல இணைகிறது. சில சிங்களவர்கள். பல தமிழர்கள். அவள் மனுவைப் படிக்கிறாள். அவள் குரல் நடுங்குகிறது, ஆனால் பயத்துடன் அல்ல.

"நாம் எனக்காக மட்டும் நடக்கவில்லை, ஆனால் திரும்பி வராத அனைவருக்காகவும். காதலர்கள் எரிந்ததற்காக, சகோதரிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்காக, நமது அவமானத்தைத் தாங்கிய மண்ணுக்காக / I walk not for myself alone, But for all those who never returned. For the lovers burned, the sisters raped, For the sand that holds our shame" அவள் நடைபாதையில் ரோஜாக்களை தூவினாள். அவள் காற்றில் கிசுகிசுத்தாள்: "கருப்பு ஜூலை 1983 இல் முடிவடையவில்லை. ஆனால் நம்பிக்கையும் இன்னும் இல்லை / Black July didn’t end in ’83. But neither did hope.”

அங்கு கூடிய எல்லோரும் ஒன்றாக முழக்கமிடடனர்: .

"நியாயம் தாமதிக்கப்படும் போது, அது இன அழிப்பு என்றே கருதப்படும் / When justice is delayed, it is considered genocide"

நன்றி

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]


Edited by kandiah Thillaivinayagalingam

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.